Home » Uncategorized » '' தாழ்வு மனப்பான்மை ''

 
'' தாழ்வு மனப்பான்மை ''


முகில் தினகரன்
Author:

முகில் தினகரன்

இன்றைய சமுதாயத்தில் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், பெரிதாக வளர்ந்து நின்று, அவர்களது முன்னேற்றத்திற்கும், முன்னேற்றச் செயல்பாட்டிற்கும், முட்டுக் கட்டை போடுவது, அவர்கள் மனதில் அடிவரை சென்று ஒட்டிக் கொண்டுள்ள தாழ்வு மனப்பான்மையென்னும் தடைக்கல்லே.

தன் உணர்வுகளுக்கு தானே அரணிட்டுக் கொண்டு, தன் திறமையையும், அறிவாற்றலையும் தானே குறைத்துக் கணித்துக் கொண்டு, தனக்குத் தானே தடையாக, முன்னேற்ற எண்ணங்களை மூலையில் வீசிவிட்டு, சராசரி வாழ்க்கைக்கும் கீழான வாழ்க்கையை சத்தேயில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றது இன்றைய இளைய சமுதாயம்.

தாழ்வு மனப்பான்மைக்கு காரணங்கள் :

ஒரு மனதில் தாழ்வு மனப்பான்மையென்னும் மாயப் பிசாசு குடி கொள்வதற்கு பல்வேறு காரணங்களுண்டு, அவற்றை அழிக்கவும் பல்வேறு அணுகு முறைகள் உண்டு.

முதலாவதாக, மூத்தோர்களைக் காரணமாகக் குறிப்பிடலாம். தங்கள் முன்னோர்களையும், தங்களையும் மட்டுமே மனத்தில் கொண்டு, அடுத்தடுத்து வரும் சந்ததியினரின் அறிவையும், திறமையையும் குறைத்து மதிப்பிட்டு, போதிய கல்வியறிவையும், பொது அறிவையும் வளர்க்கத் தவறுவதால் தங்கள் வாரிசுகள் மனத்தில் தாழ்வு மனப்பான்மை விஷம் தாராளமாகப் பரவுவதற்கு அவர்களே காரணமாகின்றனர்.

இரண்டாவதாக, பொருளாதாரச் சூழ்நிலை பொதுவாகவே, அவமானத்திலும், ஏளனத்திலும் வளரும் குழந்தைகளுக்கு குற்ற உணர்வும், தாழ்வுணர்ச்சியும் இயற்கையாகவே வந்து விடுகின்றது. பொருளாதார ஏற்ற தாழ்வானது மேல் மட்டத்திலிருப்பவனை, கீழ் மட்டத்திலிருப்பவனிடம் சற்று ஆக்கரமிப்புடனும், அவமானப்படுத்தும் நோக்கத்துடனுமே இருக்கச் செய்கின்றது. அங்ஙனம், அக்கிரமிப்பும், அதிகாரத் தோரணையும் பாயும் போது கீழ் மட்டத்திலிருப்பவன் அவமானத்தையும் உணர்கின்றான் அச்சூழ்நிலையில் தன்னைப் பற்றி தாழ்வு எண்ணங்களே அவனுக்குள் விரிகின்றன். அதன் உடனடி விளைவு தாழ்வு மனப்பான்மையின் பிறப்பாகும்.

மூன்றாவதாக, சுய மனத்தடைகள் ” நம்மால் முடிந்தது இவ்வளவுதான், இதற்கும் மேல்நமக்கு வேண்டாம்” ” நம் தலையெழுத்து இதுதான் ”. ” வேறு வழியில்லை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்.” போன்ற சுய மனத்தடைகள் இடப்படும் உரங்களாகும்.

நான்காவதாக, முந்தைய தவறுகளின் தாக்கம், தவறுகள், என்பது தனக்கு மட்டுமே சொந்தமானது, தன்னைத் தவிர யாருமே தவறு செய்வதில்லை தான் எது செய்தாலும் தவறாகவே முடிகின்றது என்று நினைத்துக் கொண்டு, அந்தத் தவறுகளின் தாக்கத்தினால் அடுத்த அடி எடுத்து வைப்பதில் ஏற்படும் சஞ்சலங்களும், தயக்கங்களும் தாழ்வுமனப்பான்மை குணம் பிறக்க வழி வகுக்கின்றன.

ஐந்தாவதாக, கல்வியறிவு பற்றிய கவலை ‘ மற்றவர்களைவிட நாம் குறைந்த அளவே படித்திருக்கின்றோம். அதனால் நம் கருத்துக்களும், செயல்பாடுகளும் நிச்சயம் சிறப்பு வாய்ந்தவைகளாக இருக்காது ‘ என்ற எண்ணம் தாழ்வு மனப்பான்மையின் சின்னம். அனுபவ அறிவிலும் கூட அவ்வாறே. அனுபவசாலிகள் முன்பு தான் கூறும் எந்தக் கருத்தும் நிறைவானதாக இருக்காது என்ற தவறான எண்ணம் சிறந்த செழுமையான எண்ணங்களின் உற்பத்தியையே முடக்கி வைக்கிற்து.

ஆறாவதாக, ஊக்க வார்த்தைகளின் தட்டுபாடு, சுற்றியுள்ளவர்களின் பேச்சும், செயல்பாடுகளும் ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்திருப்பின் ஒருவன் செயல் வெற்றியை எளிதில் அடைந்து விடுகின்றது. அதை விடுத்து, அவன் ஒய்ந்து சாயும் தருணம் பார்த்து, அதைச் சாதகமாக்கிக் கொள்ள முனையும் சிலரிடமிருந்து வெளிப்படும் எதிர்வினை ஊக்குவிப்புகள் தாழ்வு மனப்பான்மை விதையை விதைத்து தோல்விப் பயிரை அறுவடை செய்கின்றது.

தாழ்வு மனப்பான்மையைத் தகர்க்கும் வழிகள் :

பெற்றோர்களின் வார்த்தைகளில் நேர்வினை ஊக்குவிப்பு மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். அது பிள்ளைகளை நேர்வழிப் படுத்தி, நிமிர, வைக்கிறது. தங்களுக்குக் கிடைக்காத பல அரிய சந்தர்ப்பங்களைத் தம் சந்ததியினருக்கு ஏற்படுத்தித் தருவதன் மூலம் அவர்கள் தம் எதிர்கால சந்ததியினரை இமயத்தின் உயரத்திற்கு ஏற்றி வைக்கின்றனர்.

அடுத்து, பொருளாதார நிலமைகளைப் பொருட்படுத்தாது உயரிய எண்ணங்களையும், செயல்களையும் அதன் போக்கில் செல்ல வழி விடும்போது தாழ்வு மனப்பான்மையானது தவிடுபொடியாகிறது.

எல்லாச் சூழ்நிலைகளிலும், நாம் செய்கின்ற காரியங்களும் சரி, செய்யப் போகின்ற காரியங்களும் சரி, நமது திறமைக்கும், அறிவுக்கும் மிகச் சாதாரணமானவை, என்ற எண்ணம் அவ்வேலையைச் சுலபமாக்கி விடுவதோடு தாழ்வு மன்ப்பான்மையையும் குழிதோண்டிப் புகைத்து விடுகின்றது.

தவறு என்பது பொதுவான ஒன்று. அது எல்லோருக்கும் இயல்பாக ஏற்படுகின்ற ஒன்று, என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். ஒரு தவறானது அடுத்து வரவிருக்கும் வெற்றிக்கு வழிவகுக்கிறது என எண்ணினால் தவறுகளின் தாக்கத்தினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மைதாக்கப்பட்டு விடும்.

கல்வியறிவும், அனுபவ அறிவும், நமது எண்ணங்களையும் செயல்பாட்டையும் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக இருப்பது தவறாகும். கல்வியறிவு மட்டுமே சீரிய சிந்தனைகளைத் தரும், அனுபவ அறிவு மட்டுமே அறிவார்ந்த செயல்களைத் திட்டமிடும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத கூற்று. எல்லா மனத்திலிருந்தும் ஏற்றச் சிந்தனைகள் உரிய காலத்தில் தாமாக வெளிப்படும்.

மற்றவர்களின் வார்த்தைகள் நமது செயல்பாட்டை எதிர்வினையாகப் பாதிக்கா வண்ணம் சாமர்த்தியமாகத் தவிர்ப்பது தாழ்வு மனப்பான்மையைத் தாக்கி, வெற்றித் திலகத்தை நெற்றியில் சூட்டும்.

மொத்தத்தில் இளைய சமுதாயத்தினரின் போக்கையும், வெற்றியும் தீர்மானிப்பதில் தாழ்வு மனப்பான்மை எண்ணங்களே முதலிடம் பெறுவதால் அவற்றை மேற்கூடிய வழிகளில் முறியடித்து ஜெயக்கொடியை சிகரத்தின் உச்சியில் ஏற்ற முனைந்தால், நமக்கு அடுத்து வரும் சந்ததியினர் சிகரத்தின் மேல் சிம்மாசனம் இடுவர் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1998

கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?
அவர்களும் நீயும்
மனிதனின் துயரங்களும் வாழ்வின் அர்த்தமும்
பத்து ஆண்டுகளில் 1,00,00,000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?. . .
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
உணர்ச்சிவசப்படுவதுதான் மனித நேயம் மறையக் காரணம்
வாசகர் கடிதம்
முன்னேற்றப்பாதை – தொடர்
சிந்தனைத்துளிகள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை