(5-ல் வளையாதது 15-ல் வளையும்)
Dr.Z.R. ஆனந்
நிறுவனர், i2C foundation
கோவை.
நம்பிக்கை எனும் நார் மட்டும்
நம் கையில் இருந்துவிட்டால்
உதிர்ந்த பூக்களெல்லாம்
ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக் கொள்ளும்
கழுத்து மாலையாகவும்
தன்னைத் தானே கட்டிக் கொள்ளும்….
என்பார் சிந்தனைக் கவிஞர். அவரின் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் விதமாக கல்வித்துறையில் தடம் பதித்து வரும் தன்னம்பிக்கையாளர்.
கனவு காணுங்கள் எனும் கலாம் வழியில் மாணவர்களுக்கு உபதேசம் சொல்லி அந்தக் கனவை நனவாக்க எவ்வாறு நடை போட வேண்டும், அந்த நடைக்கு தடையாக உள்ளவற்றை எவ்வாறு தவிர்த்தல் வேண்டும் ஆகியவற்றை தனது அனுபவத்தின் மூலம் போதித்து வரும் போதனையாளர்.
உன் இலட்சியம் ஒன்றாக இருக்க வேண்டும், அதுவும் நன்றாக இருக்க வேண்டும். நேரத்திற்கு ஏற்றார் போல் இலட்சியத்தை மாற்றினால் அது உன் வெற்றிப் படிக்கட்டுகளை எட்ட விடாது என்பதே இவரின் தாரக மந்திரம்.
உலக நாடுகளில் உள்ள யோக நெறிகள், ஆன்மீக நெறிகளைக் கற்று, தன் சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் எப்போதும் சிந்தித்து வரும் சிந்தனையாளர்.
தாழ்வு மனப்பான்மையில் வாழும் இளைஞர்களுக்கும், சோதனையில் தவிப்போருக்கும் தனது மூன்றாவது கையான தன்னம்பிக்கை தான் பெரிய ஆயுதம் என்று தனது ஞானத்தால் அறிவுறுத்தி வரும் ஆசிரியர், ஆளுமை, ஆனந்தம், ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தன்னையறிதல், தைரியம், புத்துணர்வு போன்ற அத்துனை துறைகளின் பயிற்சியாளருமான I2C FOUNDATION நிறுவனர் DR.Z.R. ஆனந் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…
கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில். பத்தாம் வகுப்பு வரை பிரஸ் காலனியில் உள்ள தம்பு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அதன் பிறகு பனிரெண்டாம் வகுப்பு வரை சிவானந்தா பள்ளியில் படித்தேன். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் வித்யாலாயம் கல்லூரியில் இளங்கலை கணிதத்துறைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். இந்தக் கல்லூரி தான் என்னை அடுத்தப் படிநிலைக்குக் கொண்டு சென்றது. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம் என பல பரிமாணங்களைக் கொண்ட கல்லூரி அது. கல்லூரியை முடித்தவுடன் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட் 1992 ஆம் ஆண்டு சேர்ந்தேன். பின்னர் 1996 ஆம் ஆண்டு எனக்கு ஆசிரியராகப் பணி கிடைத்தது. அன்று முதல் 2019 ஆம் ஆண்டு வரை என்னுடைய ஆசிரியர் பணி சிறப்பாகச் சென்றது. பின்னர் தற்போது விருப்பு ஓய்வுப் பெற்றுவிட்டேன். . அப்பா ரத்தினம் ஆசிரியார். மேட்டுப்பாளையம் பகுதியில் அவர் மிகவும் பிரபலமான ஆசிரியர். அம்மா, அண்ணன் அக்காள், தங்கை அனைவருமே ஆசிரியர்கள், மனைவி வக்கீல்,ஒரு மகன் இருக்கிறார்.
கே: நீங்கள் டாக்டர் பட்டம் பெற்றது பற்றி?
நான் படிக்கின்ற காலத்திலிருந்து இன்று வரை சுமார் 600 ஆதரவற்றோர் சடங்களுக்கு மேல் என்னுடைய சொந்த செலவில் அடக்கம் செய்திருக்கிறேன். இதற்காக எனக்கு நல்லடக்கச் சேவை விருதும் டாக்டர் பட்டமும் கிடைத்தது. நாம் நம் தந்தை காணாமல் போனால் எப்படிப் பதறுவோம். அந்த நிலையில் ரோட்டோரத்தில் மோசமான நிலையில் தந்தை இருந்தால் நம்மால் அவரை ஒதுக்க முடியுமா? நாம் அவரை கட்டி அணைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்வோம் தானே. அந்த நிலை யாராக இருந்தாலும் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உந்துதலின் பேரில் இந்தச் சேவையை செய்து வருகிறேன்.
கே: ஆசிரியர் பணியிலிருந்து விருப்பு ஓய்வு பெற்ற உங்களின் அடுத்தப் பணி என்ன?
ஆசிரியப் பணி என்பது மிகவும் புனிதமான பணி. எதிர்கால சமுதாயத்தை ஒரு ஏற்றமிகு சமுதாயமாக மாற்ற அவர்கள் தூணாக இருந்து செயல்படுகிறார்கள. என்னுடைய 20 ஆண்டுகால ஆசிரியர் பணியில் பல மாணவர்களை சீர்ப்படுத்தி செம்மைப்படுத்திருக்கிறேன் என்பது என் மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது.
எனக்கு எப்போதும் மாணவர்களிடம் நல்லதொரு புரிதல் இருப்பதால் அவர்களுக்கு ஒரு ஆசிரியராய் இருந்து வழிக்காட்டுவதை விட ஒரு சிந்தனையாளராய் இருந்து வழிகாட்ட வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம்.
இன்றைய சூழ்நிலையில் சமூகம் மாணவர்களுக்கு பல விதமான விஷயங்களை சிறிய வயதிலேயே கற்றுத் தருகிறது. மாணவர்களின் மதிப்பு மிக்க நேரம் வலைதளங்களிலேயே செலவாகின்றது. மாணவர்கள் இதைத் தேடிச் செல்வதில்லை.சூழ்நிலைகள் தான் அவர்களை இதற்குள் வளைக்கின்றது. பல நேரங்களில் மாணவர்களால் நல்ல விஷயங்களையும், கெட்ட விஷயங்களையும் எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் போகிறது. மாணவர்களுக்க 13 முதல் 18 வயது வரை உள்ள வயது மிக முக்கியமானது. இந்தக் காலங்களில் தான் அவர்கள் உடல் அளவிலும், மன அளவிலும் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள்.
எனவே, இந்த வயதில் அவர்களின் நேர்மறை ஆற்றலைத் தூண்டி மற்றும் எதிர்மறை எண்ணங்களை நீக்குவதன் மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை மற்றும் சமூகத்தை எதிர்கொள்வது எளிதாகிறது. இதை எப்படி பக்குவமாக அவர்களுக்கு எளிதாகவும், விருப்பம் உள்ளதாகவும் புரிய வைப்பது என்பதில் தான் இந்த பவுண்டேசன் பெரிய பங்கு வகிக்கிறது.
கே: PET பயிற்சி முறையைப் பற்றிச் சொல்லுங்கள்?
PET (Personal Improvement Transformation) பயிற்சி 12 வயது முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். இந்தப் பயிற்சியை அறிமுகம் செய்தது நான் தான். இது மூன்று படிநிலைகளைக் கொண்டிருக்கிறது. PET 1, உடல் மாற்றம், கோபம், பயம், போன்ற எதிர்மறை சிந்தனைகள் அனைத்தையும் நேர் மறையாக மாற்றி விடுவோம். PET 2, தலையின் பினயல் சுரப்பிப் பகுதியை திறக்கும் மூச்சுப் பயிற்சி. இதை மூன்றாவது கண் என்பார்கள், குழந்தைகள் தங்களின் இலக்கை நிர்ணயித்தல், அந்த இலக்கை அவர்கள் அடைய என்ன செய்ய வேண்டும் என்பதான வழிகாட்டுதல் பயிற்சியாகும். இது தங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும். PET 3, மனம் சார்ந்த பயிற்சியாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்தப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிகளுக்கெல்லாம் 10 முதல் 15 நாட்கள் போதுமானது.
எதையும் ஆனந்தமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்த வேண்டும், அவ்வாறு செயல்படுத்தினால் அனைத்தும் உன்னைத் தேடி வரும். தன்னைப் பற்றி அறிதல், தான் யார் என்று தெரிதல். மனதை மூன்று நிலைகளில் பிரிக்கலாம் மேல்மனம், நடுமனம், ஆழ்மனம் ஆகியவையாகும். அன்பை யார் வேண்டுமானலும் கொடுக்கலாம், ஆனந்தத்தை உங்களால் மட்டுமே கொடுக்க முடியும் போன்றவற்றை விளக்குவது தான் இந்தப் பயிற்சி முறைகளாகும். 48 நாட்கள் தொடர்ந்து செய்யும் எந்த வேலையும் நம் மனதை விட்டு நீங்காது.
கே: இந்தப் பயிற்சிகளை நீங்கள் எவ்வாறு கற்றுக் கொண்டீர்கள்?
எனக்கு சிறிய வயதிலிருந்தே யோக நெறிகள் மீது அளவு கடந்த பற்றுதல் இருந்தது. இதனால் யோகா, ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களைத் தேடித் தேடி படிப்பதுண்டு. ஓசோ, ஈஷா, மகரிஷி, போன்ற மனவளக்கலை மன்றங்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இதற்காகவே 12 ஆண்டுகள் என்னை அர்பணித்துக் கொண்டேன். இதில் எல்லாவற்றிலும் சொல்லும் ஒரே கருத்து நீ நீயாக இரு, உன்னை பற்றி நீ முதலில் உணர வேண்டும் என்பதாகவே இருந்தது. இது போன்ற பயிற்சிகளை நான் கற்றுக் கொண்டேன்.
கே: கருவறை தியானம் (Womb meditasion) என்ற புதிய தியான முறையை நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் அது பற்றி?
கருவறை தியானம் எல்லா வயதினருக்கும் சொல்லிக் கொடுக்கும் ஒரு பொதுவான தியானம். ஒரு தாய் பிரசிவித்த காலம் முதல் குழந்தைப் பிறக்கும் நாள் வரை கருவறையில் உள்ள குழந்தையின் நலனில் எவ்வாறு அக்கறை கொண்டு செயல்படு கிறார்களோ, அதன் படி தான் செய்யப்படுகிறது இந்த முறை.
இஸ்ரேல், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகளின் அறிவு மிக அதிகமாக இருக்கின்றது. இதற்கு காரணம் அவர்களின் தாயார்கள் அவர்களின் கருவறையில் இருக்கும் குழந்தைகளின் நலனுக்காக நிறைய பயிற்சிகள் செய்து வருகிறார்கள். அதனால் தான் அங்கு பிறக்கும் குழந்தைகள் அறிவாற்றலில் தலை சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.
இந்தக் கருவறை தியானம் தினமும் 10 நிமிடங்கள் செய்தால் போதும். 3 வது மாதம், 6 வது மாதம், 9 வது மாதம் குழந்தை சுமக்கும் பெண்ணின் நிலை எப்படியிருக்குமோ, அது போன்ற உணர்வு ஏற்படும்.இதை தொடர்ச்சியாக செய்பவர்களின் வாழ்க்கையில் தோல்வி என்பதே இல்லை. இதை செய்யும் பொழுது அனைவருக்கும் தாயின் கருவறையில் இருப்பது போல் எண்ணம் தோன்றும்.இந்த தியானம் வேறு எங்கும் சொல்லிக் கொடுப்பதில்லை. இதை யார் செய்தாலும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி தான்.[hide]
கே: I2C பெயர் காரணம் பற்றிச் சொல்லுங்கள்?
இந்தப் பெயருக்குப்பின் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. I2C என்றால் inner interface course என்பதாகும். இதன் பொருள் என்னவென்றால் தன்னை தனக்குள் போய் தேடுதல் வேண்டும். உன்னை நீ அறிதல் வேண்டும் என்பது தான். மற்றொன்று உன்னுடைய மூன்றாவது கண்ணான மனசாட்சிக்கு பயந்து வாழ்தல் வேண்டும். நீ செய்யும் தவறுகள் நன்மைகள் , தீமைகள் போன்றவற்றை அவர்கள் திறனாய்வு செய்து கொள்ளுதல் வேண்டும். என்பது போன்ற காரணத்திற்காக இப்பெயர் வந்தது.
கே: ஒரு மாணவனின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிபவர்கள் யார்?
இங்கு எல்லாப்படிநிலைகளும் ஒரு முக்கோண அமைப்பு உடையதாக இருக்கிறது. அதன் ஒரு மாணவனின் எதிர்கால வாழ்விற்கு பெரிதும் துணைப்புரிபவர்கள் என்றால் குடும்பம், ஆசிரியர், சமுதாயம் ஆகிய மூன்றும் அவனை உயர்த்தும் ஏணிப்படிகளாகும்.
ஒரு மாணவனின் முதல் ஆசான் பெற்றோர்கள் தான். அவர்கள் அவனின் நிறைகுறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றார் போல் அவனை வழிநடத்த வேண்டும்.
பெற்றோர்கள், செய்ய தவறுவதை ஆசிரியர்கள் செய்தல் வேண்டும். அதனால் தான் அடங்காத பிள்ளைகளைக் கூட ஆசிரியர்களிடம் விட்டுவிடுகிறார்கள். என் வாழ்க்கையில் முறைத் தவறிப் போன எத்தனையோ மாணவர்களுக்கு நல்லதொரு முகவரி கொடுத்திருக்கிறேன். பிள்ளைகள் நிச்சயம் ஆசிரியர்கள் பேச்சைக் கேட்பார்கள். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குருவாகிய ஆசிரியர்கள் தான் நல்லதொரு வாழ்க்கையை அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இங்கு ஒவ்வொருவரையும் சமுதாயம் பார்த்து வருகிறது. தவறு என்று தெரிந்தால் அதைக் கண்டு தள்ளிப் போவது நல்ல சமுதாயம் அல்ல. அதை அங்கேயே திருத்தி விட்டுப் போக வேண்டும். அவ்வாறு நீங்கள் கண்டும் காணாமலும் போனால் இங்கு எதுவும் செய்யலாம் என்ற நிலை உருவாகி விடும். இதை இந்த சமுதாயம் திருத்துதல் வேண்டும். இவர்கள் மூவரும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து மாற்றினால் நிச்சயம் அவர்களால் சாதிக்க முடியும்.
கே: உங்களை நாடி வருபவர்கள் எந்த நோக்கத்தோடு வருகிறார்கள்?
மனித வாழ்க்கையில் எல்லோருக்குமே இன்பமாக அமைவதில்லை. இன்பம், துன்பம் கலந்த வாழ்க்கையில் சிலருக்கு இன்பத்தை விட துன்பமே பெரிதாகத் தெரிகிறது. அத்துன்பத்தை அவர்களால் வெல்ல முடியிவில்லை. அப்படிபட்டவர்கள் இன்பத்தை எதிர்பார்த்து எங்களிடம் வருகிறார்கள்.
அவர்களுக்கு எவ்வித பிரச்சனைகள் என்றாலும் எங்களிடம் ஒரு முறை வந்து விட்டால் அதை முழுவதுமாக அவர்களுக்கு தீர்வு கண்டு அவர்களின் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலத்தை தராமல் நாங்கள் விட்டதில்லை.
அது போல் வருமுன் காப்பது சிறந்தது என்ற முறையில் பிரச்சனைகள், கஷ்டங்கள், துன்பங்கள் போன்றவை வராததற்கு முன்பே அவர்கள் எதை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் போன்ற பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.
கே: நீங்கள் பயணப்பட்ட காலத்தில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வுகள் பற்றி?
நான் ஆசிரியராய் இருந்த போதும், தற்போதும் நிறைய பேருக்கு பல பயிற்சிகள் கொடுத்து அவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒரு அச்சாணியாக இருந்து செயல்பட்டிருக்கிறேன். அவர்களும் என்னுடைய பேச்சைக் கேட்டு, என் சொல் படி நடந்து அவர்களின் இலக்குகளை வெற்றிகரமாக முடித்து இருக்கிறார்கள்.
அவ்வாறு சாதித்தவர்கள் என்னிடம் வந்து என்னுடைய நல்வாழ்க்கைக்கு நீங்கள் கொடுத்த ஊக்கமும் பயிற்சியும் தான் காரணம் என்று சொல்லி நன்றிப்பெருக்கோடு தங்களின் அன்பினை பகிர்ந்து கொள்வார்கள். அத்தருணம் என் வாழ்வில் ஒரு பெரிய மனநிறைவை ஏற்படுத்தும்.
இது போன்ற எத்தனையோ பேர் என்னிடம் சொல்லி என்னை நெகிழ்வித்த தருணங்களே என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.
கே: உங்களின் 24 மணி நேரம் பற்றி?
சரியான நேரத்தில் உறங்கி சரியான நேரத்தில் விழிப்பவர்கள் தான் சாதனையாளராய் உருவாகிறார்கள். சாதனை மனிதர்களின் சரித்திரப் பக்கங்களை திருப்பிப் பார்க்கும் அவர்கள் அதிகாலையில் விழிப்பவர்களாக இருப்பார்கள்.
நானும் அவர்களைப் போல தான் 4 மணிக்கு எழுந்துவிடுவேன். எழுந்து யோக முத்திரைகள் செய்வேன். 4 மணிக்குத் தொடங்கும் யோகா 7 மணி வரை தொடரும். இதை ஒருநாளும் செய்யாமல் விட்டதில்லை.
காலை உணவைத் தவிர்க்க மாட்டேன். குடும்பத்தினரிடம் பொன்னான நேரத்தை செலவிடுவேன். இறை வணக்கம்,பெரியோரை வணங்குதல் போன்றவை செய்வேன்.
அதன் பிறகு 8 மணிக்கு புறப்பட்டு அலுவலகம் வந்து விடுவேன். அதன் பிறகு பயிற்சிகளுக்கு வந்தவர்களுக்கு நான் கற்றதையும் பெற்றதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பேன்.
அவர்களின் எதிர்ப்பார்வை 100 சதவீதம் தீர்த்து வைப்பேன். என்னுடைய மகிழ்ச்சி, சந்தோஷம் எல்லாமே இவர்கள் தான்.
கே: மனதை எவ்வாறு ஒருமுகப்படுத்த வேண்டும்?
மனித மனம் என்பது மாறும் குணமுடையது. மனம் நீரைப் போல் ஓடும், காற்று போல் பறக்கும் தன்மையுடையது. மனம் போன போக்கில் விட்டுவிட்டால் அதை மீண்டும் காட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிது அல்ல.
மனதை கலங்காத நீர் போல் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு கலங்கியவர்கள் எங்களிடம் வந்தால் அவர்களுக்கு அதிலிருந்து எவ்வாறு விடபட வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.
ஆனந்தத்தை பணத்தாலும் குணத்தாலும் வாங்க முடியாது. அது நல்ல மனத்தால் மட்டுமே வாங்க முடியும். மனதை அழுக்காக்கினால் தீங்கு வரும், அதை சரிசெய்து விட்டால் நன்மை வரும்.
கே: i2c யின் தனித்தன்மைகள் பற்றி?
தன்னைப் பற்றி தானே உணர்வது தான் இதன் தனித்தன்மை. நமக்கு அடையாளம் கொடுத்தவர்கள் பெற்றோர்கள். படிப்பு சொல்லிக் கொடுத்தவர்கள் ஆசிரியர்கள். இப்படி ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர்களின் வளர்ச்சிக்கு பலர் துணையாக இருப்பார்கள். இதை மட்டுமே நம் மனம் கருத்தில் கொள்ளும், அவ்வாறு கொள்ளும் பொழுது நீங்கள் யார் நீங்கள் உணர தவறுகிறீர்கள். இதை தான் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம்.
நிறைய பெற்றோர்கள் பயிற்சி முடிந்த பின்னர் என்னுடைய குழந்தை மற்ற பிள்ளைகளிடம் பேசவோ, விளையாடவோ மாட்டேன். எங்களுக்கு இது மிகப்பெரிய கவலையாக இருந்தது. எங்களிடம் வந்த பிறகு அந்த கூச்சம் அகன்று இன்று எல்லோரிடத்திலும் சகஜமாகப் பழகி வருகிறான் என்பதை பெருமையாகக் கூறுகிறார்கள். இது எங்களின் வெற்றியாகக் கருதுகிறேன்.
ஒவ்வொரு நாளும் புதிய புதிய பயிற்சிகள் கொடுக்க முற்படுகிறோம். மற்ற எங்கும் கிடைக்காத பயிற்சிகள் எல்லாம் எங்கள் இடத்தில் கிடைக்கிறது. அதற்கு காரணம் எங்களை நாங்கள் எப்போதும் தயார்படுத்திக் கொள்கிறோம்.
கே: அந்த அமைப்பில் ஆசிரியர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்?
தற்போது எங்களிடம் ஏழு ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் அனுபவம் பெற்றவர்கள்.
இவர்கள் முதலில் அன்பானவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் இதில் அவர்களால் இயங்க முடியும்.
கற்றுத்தருபவர்கள் கலகலப்பாக இருந்தால் தான் கற்பவர்களுக்கு கலகலப்பைக் கொடுக்க முடியும் என்பதால், ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் பெரிதும் கவனம் செலுத்துகிறேன்.
யோக நெறிக் கற்றவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி இது வெறும் பாடம் போதிக்கும் கல்வி அல்ல. ஆரோக்கியம், ஆனந்தம் சார்ந்த கல்வி அதை அவர்கள் கருத்தில் கொண்டு அவர்களுக்குப் போதிக்க வேண்டும்.
நானும் என்னிடம் பணியாற்றும் அத்துனை ஆசிரியர்களும் பயிற்சிக்கு வரும் மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் பாவித்து அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொடுத்து வருகிறார்கள்.
கே: உங்களின் தாரக மந்திரம்?
5 ல் வளையாதது 15 ல் வளையும் என்பது தான் என்னுடைய தாரக மந்திரம். எங்களிடம் வருபவர்கள் எல்லா வயதிலிருந்தும் வருகிறார்கள். வயதிற்கு ஏற்றார் போல் எங்களின் அணுமுறை கொடுத்து வருகிறோம். சிரிக்காத குழந்தை, சிந்திக்காத குழந்தை, மனதை கட்டுபடுத்த முடியாத குழந்தை, மற்றவர்களிடம் பழகாத குழந்தை என பல நிலைகளில் வருவார்கள். அவர்களுக்கு தொடர்ந்து 12 நாட்கள் பயிற்சி கொடுப்போம் 12 நாட்கள் முடித்த பிறகு அவர்களே ஆச்சரியம் படும் அளவிற்கு அவர்களை மாற்றி விடுவோம். அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அத்தனை கலைகளும் எங்களிடம் இருக்கிறது. இது போல தான் பெரியவர்களுக்கு ஏற்படும் மனபிறழ்தல், மன அழுத்தம், துன்பங்கள் போன்றவை எங்களால் தீர்வு காண முடிகிறது.
கே: இந்தப் பயிற்சியின் பலன்கள் பற்றி சொல்லுங்கள்?
இந்தப் பயிற்சிகள் பன்முகத்திறமை கொண்டது. ஆனந்தம், ஆரோக்கியம், ஆளுமைப்பண்பு வளர்த்தல், தன்னம்பிக்கையை உணர்தல், தன்னைப் பற்றி அறிதல், தைரியம் வரவழைத்தல், புத்துணர்ச்சியுடன் மனமகிழ்ச்சியைத் தரல், தனிமனித மாற்றம், சிக்கல்களின் தீர்வுகள் போன்றவை இதன் தலையாயப் பணிகளாகும்.
மன உலைச்சல், அலைச்சல் அகன்று முகமலர்ச்சியைக் கொடுத்தல். எல்லா நிலைகளிலும் அவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுத்தல்.
தீர்வு காண முடியாத பிரச்சனை என்று வருபவர்களுக்கு கூட, அந்தப் பிரச்சனை இனி அவர்களின் வாழ்க்கையில் ஏற்படா வண்ணம் அவர்களுக்கு ஊக்கம் அளித்தல்.
18 வயது முதல் 60 வயது வரை கவலையின்றி வாழ்க்கையை ஆனந்தமாய், அற்புமாய் மாற்றம் கொடுக்கக்கூடிய வகையில் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.
கே: மன அழுத்தம் ஏற்பட காரணம் அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்?
ஒரு நிகழ்வை ஒருவர் தவறாகச் செய்து விடுகிறார். அந்தத் தவறை ஏன் செய்தோம், எதற்காக செய்தோம், எப்படி செய்தோம் என்று யோசித்து அந்தத் தவறைத் திருத்திக் கொண்டால் நன்மை பயக்கும். ஆனால் அதை விட்டுவிட்டு எப்படித் தவறாக நடந்து விட்டதே இனி வாழ்க்கையே பறிபோய் விட்டது என்று அதை மறக்காமல் நினைத்துக் கொண்டே இருந்தால் மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனைத் தீர்க்க வேண்டும் என்றால் அதிலிருந்து வெளி வர வேண்டும். அவ்வாறு வெளி வந்தாலே பாதி பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடலாம்.
மன அழுத்தம் தான் நிறைய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நீ நீயாக இரு.. வில்லென்றால் அம்பாக இருக்க வேண்டும், துப்பாக்கி என்றால் குண்டாக இருக்க வேண்டும். அது தான் உன்னுடைய சாதிப்பின் வழித்தடமாகும்.
கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
நான் எப்போதும் எல்லோரிடமும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பேன். அது தான் தன்னம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தை. எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் கை விட்டுவிடாதீர்கள். உங்களின் வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டுமா? தன்னம்பிக்கையை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
தோல்வி உன்னைத் துரத்தும், வறுமை உன்னை வாட்டும், ஏழ்மை உன்னை வீழ்த்தும், சங்கடம் உன்னை சாய்க்கும், தவறுகள் உன்னை தத்தளிக்க வைக்கும் எல்லாவற்றிலுருந்தும் உன்னை மீட்டெக்கும் ஒரே ஆயுதம் தன்னம்பிக்கை மட்டுமே.
கே: எதிர்கால இலக்கு பற்றி?
எண்ணம் நன்றாக இருந்தால் இலக்குகள் பெரிதாக இருக்கும். அது போல தான் என்னுடைய இலக்கும் மிகப் பெரியது. வசதியில்லாத மாணவர்களுக்கு நுண்சார் அறிவுத்திறன் மிகவும் அதிகமாக இருக்கும், அவன் படிப்பிலும் விளையாட்டிலும் மிக பெரிய அளவில் திறன் மிக்கவனாக இருப்பான். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு என்று ஒரு பள்ளிக்கூடம் தொடக்க வேண்டும். அதுவும் அவனுக்கு இலவசமாகக் கல்விக் கொடுக்க வேண்டும். படிப்பு விளையாட்டு என எல்லாத்துறையும் இப்பள்ளியில் கொடுக்க வேண்டும். இது என்னுடைய ஆசை, கனவு, இலட்சியம், இலக்கு, நோக்கம் எல்லாம் இது தான்.[/hide]
இந்த இதழை மேலும்