Home » Articles » பழிக்குப்பழி பயனற்றது

 
பழிக்குப்பழி பயனற்றது


சுவாமிநாதன்.தி
Author:

ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது வாழ்வில் ஏதோ சில, மிக சிறப்பான, அற்புதமான விஷயங்கள் தானாகவே தேடி வந்திருக்கும். அவர்கள்தான் அதை நினைத்து பார்ப்பதில்லை. பொருட்படுத்துவதில்லை. அதன் மகத்துவம் அறிவதில்லை.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ, எதன் மீதோ, மிகத்தீவிர அதீதமான ஆசை இருக்கவே செய்கிறது. பணம், பதவி, அதிகாரம் என  பெரிய அளவில்  ஆசைப்பட்டவர்கள் பெரிய அளவில் முன்னேறுகிறார்கள்.  சிறிய ஆசைகளே குறிக்கோள்களே வாழ்வில் நம் சிறகுகளை முடக்கி விடுகிறது. சிறிய ஆசை, சிறிய இலக்குகள் மிகச்சிறிய வாழ்வைத்தான் அமைத்துத் தருகிறது.

சூரியனை சுற்றி பூமி வலம் வருவது போலவே, மனிதனுக்கு எதன் மீது அதிக ஆசையோ, அதைச் சுற்றியே தன்னை அறியாமல் வாழ்நாள் முழுவதும் வலம் வருகிறான் என்பது உண்மை.

நம் நிறம் வாழ்நாள் முழுதும் நம்மால் மாற்றிக் கொள்ள முடியாதது. ஆனால், தீயப் பழக்கங்களை தவிர்த்து உடற்பயிற்சியின் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அது நம் கையில்தான் உள்ளது.

நேர்மறையான நல்ல, எளிமையான விஷயங்களுக்கு உலகில் அதிக கவர்ச்சி ஈர்ப்பு இருப்பதில்லை. எதிர்மறையான தீய விஷயங்களுக்கு வரவேற்பு ஏராளமாய் அபரிதமாய் இருக்கிறது. ஊடகங்களும் அதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

நூறு சதவிதத்திற்கு இலக்கு வைத்தால் தான் நாற்பது சதவீதமாவது அடைய முடிகிறது. அந்த நாற்பது சதவீதத்தை எட்டுவதற்கே நூறு சதவீதத்திற்கு இலக்கை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. மலையளவு முயற்சி செய்தால் தான் துளியளவாவது முன்னேற முடிகிறது. துளியளவு முன்னேறவே மலையளவு முயற்சிக்க வேண்டியுள்ளது.

பட்டம், பதவி, பணம், திருமணம், குழந்தை, சொந்த வீடு, அதிகாரம் என்று நாம் விரும்பிய ஆசைப்பட்ட ஏதேதோ கிடைத்துவிட்டால் மட்டும் சந்தோஷமாக இருக்கிறோமா என்றால் அதுதான் இலலை. புதிய இலக்குகளுடன் ஏக்கங்களுடன் ஏதோ முடிவில்லாத போராட்டத்துடன் வாழ்வு நகர்கிறது.

இன்றைய நவீன உலகில், பைக், கம்ப்யூட்டர், வண்ண தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை நாம் மிகச்சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். நம் முன்னோர்கள் காலத்தில் இத்தகைய நவீன வசதிகள் இல்லவே இல்லை.

மனிதன் தான்; விரும்பியதை, ஆசைப்பட்டதை அடைய முழுமூச்சுடன் செயலாற்றும் போது அது கஷ்டமாக தெரிவதில்லை. வெற்றி பெற்றபின் சிலர் பாராட்டு மழையில் நனைக்கும் போது, தன்னை மறந்து, கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறான். நம்மைவிட வலியவர்கள் நம்மை குட்டும்போதுதான் நம் நிலை நமக்குப் புரிகிறது. வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் போராட்டங்கள், பிரச்சினைகள், நெருக்கடிகள் நம்மை வலிமை பெற வழிச் செய்கின்றன. எதிரிதான் நம் நரம்பை முறுக்கேற்றுகிறான். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நமது எதிர்ப்பார்ப்பை நிராகரிக்கும் போது அதைவிட பல மடங்கு உயரத்தை இலக்கை அடைவதற்கு மறைமுகமாக உதவுகிறார்கள். புதிய தடம் அமைத்துத் தருகிறார்கள். புதிய சிந்தனைக்கு முயற்சிக்கு வழிவகை செய்கிறார்கள்.

பணி இழப்பு, திடிர் நோய்த்தாக்குதல், தொழிலில் நஷ்டம் என எவ்வளவோ சிக்கல்கள் நம்மை முடக்கி போடுகிறது. இது தவிர, நாம் நம்மை அறியாமலேயே நம்மை சுற்றி இருப்பவர்களிடம் வரம்பு மீறி நடக்க நேரிடும் போதுதான் மோதல்கள் உருவாகிறது.

நம் வாழ்வு ஒரு நாள் முடியப் போகிறது. நாம் உயர்நிலை அடையவே ஆசைப்படுகிறோம். உயர்நிலை அடைந்து விட்டாலும் அதை தக்க வைத்துக் கொள்ளவும் திறமை வேண்டும். நாம் வீழ்த்தப்படாமல் இருப்பதற்கு நமக்கு கீழ் உள்ளவர்களின் அங்கீகாரமும் வேண்டியுள்ளது.

ஜாதகப் பொருத்தம் பார்த்து செய்யப்பட்ட திருமணங்கள் சில விவாகரத்தில் முடிவதில்லையா? நியூமராலஜிபடி பெயரில் எழுத்துக்களை மாற்றிக்கொண்டு விட்டால் மட்டும் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதில்லையா? ராசியான எண் என்று வாங்கிய வாகனம் விபத்துக்குள்ளாவதில்லையா? ஜாதகம், ஜோசியம், நியூமராலாஜி, ராசியான எண், ராசியான கற்கள் நம் வாழ்வை எப்படி மாற்றியமைத்து விட முடியும்?  ஆனாலும் மனித நம்பிக்கை தொடர்கிறது.

வாழ்க்கை என்கிற விளையாட்டில் எதிர் அணியை சந்திக்க வேண்டியுள்ளது. வெற்றி பெற்றால்தான் வாழ்வு. அரசியலில் எதிர்க்கட்சியை சந்திக்க வேண்டியுள்ளது. தொழிலில், வாழ்வில் நமக்கு எதிராக ஒரு அணி இருக்கவே செய்கிறது. நம் பணியை தரமாகச் செய்தால் பலன் நிச்சயமாக உண்டு. நம் அணி உறுதியாக வெற்றி பெறும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2019

பயணமும் உடையும்
டெக் குவாண்டோ
மழையில் மூழ்கிய மாநகரம்..
ஆசையும் இயக்கமும்
பழிக்குப்பழி பயனற்றது
அதிவிரைவு செயல்திறன் குறைபாடு
தடம் பதித்த மாமனிதர்கள்
நில்! கவனி !! புறப்படு !!! – 6
அறிஞர்களின் அறிவுரைகள்
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 11
பாலியல் வன்கொடுமை… போராடாமல் விடிவில்லை…
மாமரத்தில் கொய்யாப்பழம் – 7
தூண்டுகோள்
ஷூ மந்திரகாளி
வெற்றி உங்கள் கையில்-68
அனைத்தும் ஆனந்தமாகட்டும் அகிலமெங்கும் உன் பெயர் சிறக்கட்டும்…!
சின்னஞ்சிறு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்