Home » Articles » வாழ்க்கையை வாழ்ந்து காட்டு

 
வாழ்க்கையை வாழ்ந்து காட்டு


மணிமேகலை ப
Author:

நான் மிகப்பெரிய அளவில் நாடு போற்றும் நற்சாதனைகளைச் செய்யப் போகிறேன். என்னை தூற்றியவர்களையும், அவமதித்தவர்களையும் பழிவாங்கப் போகிறேன். எப்படி இது சாத்தியம்…?

வாழ்ந்து காட்ட வேண்டும். அவர்களின் முன் மகிழ்ச்சியாகவும், எப்பொழுதும் போல் இயல்பாகவும், மேலும் மேலும் நம்மை காயப்படுத்தினாலும் சிரித்துக் கொண்டே சிகரத்தை தொட முயற்சிகளை மேற்கொள்ளவுமான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஊற்றுபோல் பெருக்கிக் கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும்.

நல்ல நண்பர்கள் எப்போதும் நம் வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளுக்குத் தோள் தருவார்கள். நமது எதிரிகளே நம்மை மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல காரணமானவர்கள் ஆவார்கள். எனவே நண்பர்களை விடவும் எதிரிகளின் மீது நமக்கு மரியாதை கூடுதலாகத்தானே இருக்க வேண்டும்.

வாழ்க்கையை அனுபவிக்க அனுபவம் அவசியம் தான். ஆனால் ஒவ்வொரு விசயத்திலும் அனுபவத்தை எதிர்பார்ப்பது ஆபத்தானதே. மற்றவர்களின் அனுபவத்தைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம். அவன் அனுபவப்பட்டால் தான் அவனுக்கு புத்திவரும் என்று மற்றவர் சொல்லிக் காண்பிக்கும் அளவிற்கு நடந்து கொள்ளுதல் கூடாது.

வாழ்வை ரசித்து, ருசித்து ஒவ்வொரு நிமிடமும் இது என்னுடைய வாழ்க்கை என்று வாழும் வாழ்க்கையில் கசப்பான அனுபவம் வாய்க்கப் பெறினும் அதுவும் ஒரு சுவை தானே. அந்தச் சுவையை அனுபவிக்கும் பொழுது தானே மகிழ்வால் கிடைக்கப்பெறும் இனிப்பு எவ்வளவு இனிமையானது என்பது புரியும்.

கடந்த கால அனுபவங்களை நினைத்துக் கொண்டே இருந்தாலும், எதிர்காலத்தைப் பற்றிய கனவுலகில் எதிர்பார்த்து காத்திருந்தாலும் நிகழ்காலத்தை யார் வாழ்வது? இருக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் என்னுடையது; யாருக்காகவும், எதற்காகவும் என்னுடைய நிகழ்காலங்களை விட்டுக்கொடுக்க முடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டால், நமது மகிழ்ச்சியின் கதவுகளை அடுத்தவர் வந்துதான் திறக்கவேண்டும் என்ற அவசியம் இருக்காது. வாழ்வை அழுத்துக் கொண்டாலும் அதை நாம் தானே வாழ்ந்தாக வேண்டும். மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருப்போருக்கு ஏமாற்றங்களையும் ஏமாந்து போகச் செய்யும் மனம் கிடைக்கப் பெறுவது உறுதி.

ஒரு நல்ல மனித நேயத்திற்கு வேண்டிய ஒரு சிறிய நடைமுறையில் நடந்த எதார்த்த கதை: ஒரு உயர்தர வகுப்பைச் சேர்ந்த செல்வச்சீமாட்டிப் பெண் அரசுப் பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. அப்போது அவளருகில் வயதான கிராமத்து பாட்டி வந்து நின்றார். அந்தப் பெண் பாட்டியை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு நாகரிகம் என்ற பெயரில் சற்று முன்னோக்கி பாட்டியைத் தொடதவாறு உட்கார்ந்திருந்தாள். இதைக் கவனித்த அவளருகில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, “ஏன் சவுகரியம் பார்த்தவில்லையா உன் இருக்கையில்?” என்று கேட்க, அதற்கு ஆம் என்பது போல் சொன்ன அவளிடம், “அப்படியானால், சரி, உனக்கு சவுகரியப்படும்படி நின்று கொள், பாட்டிக்கு இடம் கொடு” என்றாள் அந்தப் பெண்மணி. “அப்படியெல்லாம் இடம் கொடுக்க முடியாது… நீங்கள் யார் அதைச் சொல்ல” என்று எதிர்கேள்வி கேட்டாள் அவள். உடனடியாக எழுந்த அந்த நடுத்தர வயதுப்பெண், தன் இருக்கையை அந்தப்பாட்டிக்குக் கொடுத்தாள். வேறு வழியே இல்லாமல், பாட்டியின் அருகில் உட்கார்ந்தாக வேண்டும் அந்தப் பெண், இல்லாமல் எழுந்திருந்தால் அவளது கர்வத்திற்கு இழுக்கு என்ற நிலையில் பயணம் செய்தாள் அவள். நிற்க முடியாமல் வந்த அந்த பாட்டிக்கு எழுந்து நின்று இடம் தந்தவள் என்றும் மனதில் நின்றவளாக இருப்பாள்.

இந்த நவீன நாகரிக காலத்தில் மனிதாபிமானங்களையும், மனித நேயங்களையும் வருகின்ற தலைமுறைகளுக்கு சொல்லித்தராமல் விடுவது பரிதாபம். பின்னாளில் தனக்கும், தன் சந்ததியினருக்கும் ஏற்பட இருக்கும் பரிதாப நிலையும் தான் அது என்பதை உணர மறந்துவிடுகின்றனர்.

மனித காடுகளுக்குள் வாழ்ந்து வரும் நாம், பல விதமான குணாதிசயங்களைக் கொண்ட மனங்களுடையவர்களுடன் வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

மற்ற உயிரினங்களுக்கு எப்போதுமே அதனதன் குணாதிசயங்கள் மட்டுமே இருக்கும். பாம்பென்றால் சீறும். தேள் என்றால் கொட்டும். புலி என்றும் புல்லைத் திண்ணாது. பேய் என்றாலும், பிசாசு என்றாலும் கூட அதனதன் குணத்தில் தான் அதுவதுவாக வாழ்ந்து வரும்.

இப்படி… இப்படி… ஆனால் மனித மனங்கள் மட்டுமே எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தனக்கென்று குணாதிசயங்களைக் கொண்டாலும் இடத்திற்கு தகுந்த மாதிரியான முகமூடிகளை மாற்றிக் கொண்டு இனிக்க இனிக்க பேசும் வார்த்தைகளில் இனிப்பும், மனதினில் நஞ்சும் கலந்த மனிதர்களுடன் நகர்த்தும் காலம் அமையப் பெற்றால் என்ன செய்வது??

நல்லதென பேசும் மனிதருக்குள்ளும் நஞ்சென்ற ஒன்று ஒலிந்திருக்கும். தீயதென நினைக்கும் மனிதருக்குள்ளும் நறுமணம் கொண்ட மனம் இருக்கும்.

நமக்கெதற்கு என்று ஒதுங்குபவர் சிலர், வேண்டாத விரும்பாததானாலும் கடமைக்கு செய்பவர் சிலர், விரும்பியதை அடையாத விரக்தியில் பழி சொல்லித் திரிவர் சிலர், அப்படியும் சிலர், இப்படியும் சிலர் என்று எங்கும் எங்கும் நம்மைச் சுற்றி நிறைந்திருக்கும் மனிதம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment