– 2019 – January | தன்னம்பிக்கை

Home » 2019 » January (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    பேச்சும் மூச்சும்

    அதிகம் பேசுபவர்களை கவனித்தால், இரண்டு விஷயங்களில் குறைவாக இருப்பர். ஒன்று செயல் குறைவு, மற்றொன்று ஆரோக்கிய குறைவு. சதா லொட லொட வென்று பேசுபவர்கள் தன்னுள் சேமிக்க வேண்டிய உயிர்ச் சக்தியை செலவு செய்து ஆயுளைக் குறைத்துக்கொள்வர். அப்படிப்பட்டவர்களிடம் நாம் அப்படிச் சொன்னால், உடனே அவர்கள்குறைந்தால் குறைந்து போகட்டும், அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை” என்று அதைப் பற்றியே அரை மணி நேரம் பேசுவார். சாமானியர்கள் தாங்கள் பேசுவதைக் காது கொடுத்து கேட்கச் சொல்வர். ஞானிகளோ பேச்சைக் குறைத்து மூச்சை கவனிக்கச் சொல்வர். நாம் பேச்சைக் குறைத்து நம் மூச்சை கவனித்தால் ஆயுள் நீட்டிப்பு நிச்சயம். ஆனால் வெறும் பேச்சு  வேலைக்கு ஆகாது. எது வேண்டும் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஆக, தேவையில்லாமல் வழ வழ பேச்சு நம் உயிராற்றலைக் குறைத்து நம் ஆரோக்கியத்தை பதம் பார்க்கும். பயணங்களில் நமக்கு அதிகமான சக்தி தேவைப்படும் நிலைமையில் நாம் அதிகம் பேசிக்கொண்டிருந்தால் நமக்கு சக்தியிழப்பு நிகழும். அதற்கு பதிலாக நம் வாழ்க்கைக்கு மிக மிகப் பயனுள்ள  சில அற்புதமான விஷயங்களைச் செய்ய முடியும். அது பற்றி இனிப் பார்ப்போம்.

    1. மௌனம் அனுஷ்டித்தல்: நாம் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் நிலையில் பிரயாணம் செய்யும் போதாவது நாம் மௌனம் அனுஷ்டிக்க நேரமும் வாய்ப்பும் கிடைத்ததே என்று நினைத்து, கிடைக்கும் ஒவ்வொரு பயண வாய்ப்பிலும் மௌனத்தை அனுஷ்டித்து ஆழ்மன அபரித சக்தியை பயணத்திற்கு பயன்படுத்தலாம். இந்த மௌன நேரத்திலும் நாம் சாந்தி தியான நிலையில் இருந்தால் இன்னும் அதிகமான சக்தி கிடைக்கப் பெறுவோம்.

    2. நம் கனவுகளைக் காட்சிப்படுத்தல்: பிரயாணத்தில் கிடைக்கும் நேர வாய்ப்பில் நம் கனவுகளை எண்ணி அவை நிறைவேறிவிட்டதாக காட்சிப்படுத்தலாம். இப்படி நாம்  ஒவ்வொரு முறையும் காட்சிப்படுத்துவதால் அவை சாத்தியமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

    3. திட்டமிட அரிய வாய்ப்பு: நம் கனவுகளுக்கு உருவம் கொடுக்க பிரயாண நேரங்களில் திட்டமிடலாம். அதேபோல், பல நாட்களாக தொங்கலில் இருக்கும் பிரச்சனைக்கு நாம் மௌனத்தில் ஆழ்மனச் சிந்தனை செய்யும்போது அதற்கான ஆச்சரியப்படத் தக்க தீர்வு நமக்குக் கிடைக்கலாம்.

    4. சுய பரிசோதனைக்கு அரிய வாய்ப்பு:  நம் குணம் மேம்பாடடைய நம்மைப் பற்றிய சுய மதிப்பீடு மற்றும் சுய பரிசோதனைச் செய்ய பிரயாண நேரம் நல்ல வாய்ப்பாக அமையும். மற்ற நேரங்களில் நாம் வெளியே உள்ளவற்றோடு அதிகம் பதிலளிப்பதில் நாம் கவனம் செலுத்தியிருப்போம். ஆனால், பிரயாண நேரத்தில் நாம் நம் உள்ளே பார்க்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும். நம்மைப் பற்றிய புதிய புரிதலும் புதிய சிந்தனையும் கிடைக்கப் பெறுவோம்.

    5. வாழ்த்துதல்: நமக்கு வேண்டியவர்கள் மற்றும் நமக்குப் பிரச்சினை செய்பவர்களை வாழ்த்துவதற்கு பிரயாண நேரம் வசதியாக இருக்கும். சரி, வாழ்த்திடலாம். ஆனால், நான் வேண்டியவர்கள் மற்றும் பிரச்சனை செய்பவர்கள் என்று கூறியிருப்பது உங்களுக்கு நெருடலாக இருக்கலாம்.

    ஆனால், உண்மை என்னவென்றால், நாம் நமக்கு வேண்டாதவர்களை மனதார வாழ்த்தினால், அவர்களுக்குள்ளும் நல்ல சக்தி மாற்றம் நிகழ்ந்து, நமக்குப் பிரச்சினை செய்வதிலிருந்து மாறுவார்கள். என்ன கதை விடுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த ஞானத்தை நான் சொல்லவில்லை அருட்தந்தை வேதாத்திரி அவர்கள் கூறியுள்ளார்கள். நம்பிக்கையோடு செய்துதான் பாருங்களேன்.

    பலன் கிடைத்தால் எனக்கு எதுவும் தரவேண்டாம். ஆனால், பலன் எதுவும் கிடைக்காவிட்டால் நஷ்டம் ஏதுமில்லை. நான் சொல்வது முடியைக் கொண்டு மலையைப் புரட்டலாம் என்று கூறுவதுபோல் இருக்கலாம். அப்படியே இருந்தாலும் வெற்றி கிடைத்தால் நம் வசம் மலை. அப்படியில்லா விட்டால், முடிதானே போகும்.

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    எழுந்திருங்கள்! விழித்துக் கொள்ளுங்கள்! இனியும் தூங்க வேண்டாம்! எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருக்குள்ளேயும் இருக்கிறது என்பார் சுவாமி விவேகானந்தர்.

    மகிழ்ச்சியான மனநிறைவான எத்தனையோ நினைவுகளை நம்மிடையே விட்டு விடை பெற்றுவிட்டது 2018.

    நாம் தற்போது புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். சென்ற ஆண்டில் சில சபதங்கள் எடுத்திருப்போம். சிலர் அதை நிறைவேற்றியிருப்பார்கள். ஒரு சிலர் அதை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம்.. அதை தற்போது எண்ணிப் பாருங்கள். அப்போது தான் புதிய ஆண்டில் திட்டம் தீட்டுவதற்குச் சரியாக இருக்கும்.

    புத்தாண்டு மட்டும் புதிதான நாள் அல்ல. சாதிக்கப் பிறந்த நமக்கு ஒவ்வொரு நாளும் புதிது தான். தோல்வியே வரினும் அந்த நாளை நீங்கள் கொண்டாடிக் கொண்டே இருங்கள். வெற்றிக்கு கொடுக்கும் அதே மகிழ்ச்சியைத் தோல்விக்கும் கொடுங்கள்… எதையும் தாங்கும் மணவலிமையை உங்களுக்குள் புகுத்திக் கொள்ளுங்கள் ஒவ்வொரு நாளும் தித்திப்பாகும்.

    சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள், கட்டுரையாளர்கள், நூலகத்தார்கள், கடை உரிமையாளர்கள், வாசிப்பாளர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    எதிர்காலத்திற்கான திட்டங்களைத் தீட்டுதல், கடந்த காலத் தவறுகளைக் களைதல் எல்லாம் தேவை தான் என்றாலும் ஒவ்வொவரும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற உறுதியான தீர்மானத்தோடு 2019 புத்தாண்டை வரவேற்போம்…

    அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!