Home » Articles » தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?

 
தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?


ராமசாமி R.K
Author:

“சிலருக்கு  அவர்களுடைய  திறமையாலும்  தகுதியாலும் தலைமைப் பதவி கிடைக்கிறது, சிலருக்கு அதிர்ஷ்டத்தால் தலைமை பதவி கிடைக்கிறது, சிலர் மீது தலைமைப்  பதவி திணிக்கப்படுகிறது”  என்பது ஆங்கில பழமொழி , சிலர் தலைவர் பதவியைத் தேடிப் போவார்கள், சிலருக்குத் தலைவர் பதவி தேடி வரும்.

தலைவருக்கே உரித்தான  பல   பண்புகள் இருக்கின்றன, சிறந்த  தலைவான எனப்  பெயர் பெறுவது  என்பது ,  எத்தனை  தலைமைப் பண்புகள் அவருக்கு இருக்கின்றன  என்ற எண்ணிக்கையைப்  பொறுத்து  அமையாது, அந்தப் பண்புகளை  அவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து   அமையும்,அறிவாளிகள் எல்லோரும் தலைவராக முடிவதில்லை, தலைவர்கள் எல்லோரும் தலைசிறந்த அறிவாளிகள் என்று சொல்ல முடியாது.

1) தலைமை ஏற்பவருக்குத் தேவையான  ஆளுமைத்திறன் வேண்டும்,

இந்த ஆளுமைத்திறன்  2  வகைப்படும்,

1)  சிந்தனை ஆளுமை

2) செயல் ஆளுமை , ஒருவருக்கு சிந்தனை ஆளுமை நன்றாக  இருக்கும், செயல் ஆளுமை  சற்று குறைவாக இருக்கும், ஒரு சிலருக்கு செயல் ஆளுமை அதிகமாக இருக்கும், சிந்தனை  ஆளுமை  குறைந்து இருக்கும், இரண்டு ஆளுமைகளும் ஒருவருக்கு சேர்ந்து இருப்பது அபூர்வம், சிந்தனை  ஆளுமையும், செயல் ஆளுமையும்   ஒருவரிடம் சரிவிகிதத்தில்  கலந்து இருந்தால் அவர்  சிறந்த தலைவர்  எனப் பெயர் பெற   முடியும்.

2)  நிர்வாகத் திறமை வேண்டும்.

ஒருவரிடம் நிர்வாகத் திறமை அமைந்திருந்தால்தான்  அவர் தலைமைப் பதவிக்கு  தகுல்தயானவர்  எனக்   கருதப்படுவார்,  சிலர் எல்லா தகுதியும் பெற்று இருப்பார்கள், ஆனால் நிர்வாகத் திறன் குறைவாக இருக்கும், அவர்களால்  நிர்வாகத்தை சரியாக  நடத்த  இயலாது,  இந்தத் திறன் இருந்தால்தான் தலைமைப் பதவியை அலங்கரிக்க முடியும், ஜெயிக்கவும் முடியும்,

நிர்வாகத் திறன் உள்ள   தலைவர்களால்  தான்  ஒரு நிறுவனம்  பெருமையும், கௌரவம் பெற முடியும்,

3) தெளிவான முடிவுகளும் , முடிவிலே உறுதியான நிலைப்பாடும்  வேண்டும்,

தெளிவான முடிவு எடுக்கக்கூடிய சாமார்த்தியமும், அந்த முடிவிலே உறுதியாக நிற்கும் சாதூர்யமும்   இருக்க வேண்டும்,  அப்போது தான் நிர்வாகம் மேம்பாடு அடையும் , குழப்பமான முடிவுகளும், உறுதியில்லாத தன்மையும் இருந்தால்  நிர்வாகம்  சீர்கேடு அடையும்.

4) தொலை நோக்குப் பார்வையும், சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் தன்மையும் வேண்டும்.

ஒரு சிறந்த தவைருக்குத் தொலைநோக்குப்  பார்வை இருக்க வேண்டும்,  எதிர்வரும் ஆண்டுகளில் தான் சார்ந்துள்ள நிறுவனம் எந்த இலக்கை அடைய வேண்டும், அதை எப்படி அடைய வேண்டும் என்ற பார்வை அவருக்கு இருக்க வேண்டும்,  பத்து ஆண்டுகள் கழித்து அந்த நிறுவனத்திற்குத் தேவையான   மூலப்பொருட்கள்  பற்றாக்குறை ஏற்படலாம், உற்பத்தி பாதிக்கப்படலாம்,   நிறுவனம்  சரிவை சந்திக்கக் கூடிய சூழல் ஏற்படலாம்,  எப்போது சரிவு வரும், எந்த அளவு  பாதிப்பு  ஏற்படும் அதை எப்படி சரிக்கட்டுவது, அதற்குரிய மாற்றுவழி என்ன ?  என்பதை முன்கூட்டியே கணிக்க வேண்டும் . அதற்குரிய ஆய்வுகளையும்  மேற்கொள்ள வேண்டும்,  பாதிப்பை  தவிர்க்கும்  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  காலத்திற்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும்  வளைந்து கொடுக்கும் தன்மையும் புதிய  யுக்திகளை  பின்பற்றும் திறமையும்  வேண்டும்.

5) போட்டி மனப்பான்மையும், போராடி ஜெயிக்க வேண்டும் என்ற குணமும் இருக்க வேண்டும்

வணிக நோக்கில்  நிறுவனத்திற்கு நிறுவனம் போட்டிகள் வரவாய்ப்புண்டு, போட்டிகளை சந்திக்கும்   துணிவும், முயற்சித்து போராடி ஜெயிக்கும்  குணமும் இருத்தல் வேண்டும். எந்த நேரத்திலும் தன்னுடைய நிறுவனம் இரண்டாமிடத்திற்குச் செல்ல இடம் தரல் கூடாது,

6) முன்னேற வேண்டும் முதன்மையாய் இருக்க வேண்டும் என்ற முயற்சியும் துடிப்பும்  வேண்டும்

உங்கள் தலைமையேற்றுள்ள நிறுவனம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையிலும் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே  இருக்க வேண்டும் , முன்னேறுவது மட்டுமல்லாமல் முதன்மையாய் இருக்க வேண்டும் என்ற முயற்சியும், துடிப்பும்  இருக்க வேண்டும், தன்னலமற்ற உழைப்பும், ஆர்வமும் ஈடுபாடும்,  இது  நம் சொந்த நிறுவனம்  என்ற எண்ணமும்  இதற்கு  துணையாய்  அமையும்.

7) தான்  சார்ந்துள்ள துறையில்  ஆழந்த  அறிவும், சட்ட நுணுக்கங்களையும்  அறிந்திருத்தல் வேண்டும்.

எந்தத் துறையில் தலைவர் பொறுப்பில் இருக்கிறோமோ அந்தத் துறையில் ஆழமான அறிவை பெற்று இருக்கவேண்டும், அது பற்றிய சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்,எடுத்துக்காட்டாக எனது  மனதிற்கினிய  நெருங்கிய நண்பர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த   அரிமா ,  அ. லோகநாதன் அவர்களை குறிப்பிட வேண்டும்,   நல்ல பண்பாளர், இனிமையான  நல்ல குணத்திற்குச் சொந்தக்காரர், அதிர்ந்து பேசாத ஒரு அற்புதமான மனிதர் எந்த இடத்திலும், எந்த நிலையிலும் கோபப்படாத  ஒரு உயர்ந்த குணம் உண்டு , எல்லோரையும் நண்பராக்கிக் கொள்கிற இனிய சுபாவம் இவருக்குண்டு ,  என்னுடைய   நன்மை  தீமை  இரண்டிலும்   எல்லா நேரங்களிலும் எனக்கு துணையாய்  இருப்பவர்.

கடுமையான உழைப்பினாலே உயர்ந்த நிலையினை அடைந்தவர், பத்திரப் பதிவு ஆலோசகராகவும், ரியல் எஸ்டேட் தொழிலிலும்  கொடி கட்டி பறப்பவர், அவர் தந்தையாரிடம்  சீடராக இருந்து பணியைக் கற்றவர்  ,  பத்திர பதிவு துறையில் எல்லா சட்ட நுணுக்கங்களையும் தெளிவாக அறிந்தவர், பத்திரப் பதிவு  அதிகாரிகளுக்கு  வரும் துறை சார்ந்த சந்தேகங்களைக் கூட  தீர்த்து வைக்கிற  திறமை படைத்தவர்,  பதிவுத் துறையில் பல சிக்கலான சட்டப் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு கண்டு பெயர் பெற்றவர், மிகப் பெரிய வழக்கறிஞர்களுக்கு கூட ஆலோசனைகள் கூறும் அளவு அறிவும் அனுபவமும் பெற்றவர் ,   துறை சார்ந்த ஆழமான அறிவு ஒருவரை உயர்த்தும் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு.

8) அனுபவசாலிகளிடமிருந்து  அனுபவத்தைப் பகிர்தல் மற்றும் செயல் படுத்துதல் வேண்டும்.

தலைமைப் பதவியில் இருப்பவர்கள் சில சமயங்களில் கடைநிலை ஊழியன் தருகிற அனுபவத் தீர்வுகளை எற்றுக் கொள்கிற மனப்பக்குவம் வேண்டும்,  அதைச் செயல்படுத்தவும் வேண்டும், அனுபவ அறிவு  உயர்வைத்  தருளம்/  உச்சத்தைத்   தொடும்.

9) தோல்வியில் துவண்டு விடாத மனப் பக்குவம் வேண்டும்.

வாழ்வில் தோல்விகள்  ஏற்படுவது இயல்பு, தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது, தோல்விகள் தான் வெற்றிகளின் முதல் படிக்கட்டு,  தோல்விகளிலிருந்து பெறும் அனுபவங்கள்தான் வெற்றிக்கு வழி காட்டுதல்கள் என்று உணரவேண்டும்,  மிகப்பெரிய அறிவியல் வல்லுநர்களெல்லாம தங்கள் ஆராய்ச்சிகளின் போது பெற்ற தோல்விகளினால் தான், எதைச் செய்ய வேண்டும் ?  எதைச் செய்யக கூடாது ?என்ற அனுபவத்தைப் பெற்றார்கள்.

10) மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருத்தல் வேண்டும்.

தலைமைப் பதவியில் இருக்கும் மற்றவர்கள், இவரைப் போல நிர்வாகம் தரவேண்டுமென்று உங்களை உதாரணமாக  எடுத்துக் கொள்ளும் அளவிற்கு உங்கள் குணங்களில்,    நடத்தையில்,  நிர்வாகத்தில் முன்மாதிரியை உருவாக்க வேண்டும்,   நேரம் தவறாமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

11) நிறுவனத்தை வளர்க்க வேண்டுமென்ற ஒற்றைக் குறிக்கோளுடன்  வெற்றிபெறத் தகுந்த தந்திரங்களையும் பின்பற்ற வேண்டும்.

நிறுவனத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோள்   மட்டுமே தாரக மந்திரமாக இருத்தல் வேண்டும், தன்னலமில்லாத பார்வை இதற்கு அடித்தளமாக அமையும், “புறாவைப் போல  கள்ளம் கபடம் இல்லாத மனதும், பாம்பைப் போல தந்திரமும்  ஒருவருக்கு இருக்க வேண்டும்” என்று  பைபிளில்  ஒரு வாசகம் வருகிறது.

எப்போது புறாவாக இருப்பது?  எப்போது தந்திரமான பாம்பாக மாறுவது? என்பது உங்களது சூழ்நிலைகள் முடிவு செய்யும், பணியாளர்களிடம் அன்பும் , அனுசரணையும்  அதே நேரத்தில் கண்டிப்பும் காட்ட வேண்டும்,  நிர்வாகத்தில்  சொந்த விருப்பு வெறுப்புக்கள் இன்றியும், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாரபட்சமில்லாத பார்வை கொண்டவராக இருத்தல்  வேண்டும்,  சில நேரங்களில் தயவு தாட்சண்யம் இல்லாமலும்  இருத்தல்  வேண்டும்.

12) நேர்மையான நிதி, நிர்வாகம் வேண்டும்.

நேர்மையான நிதி; நிர்வாகமும், வார்த்தை  தவறாத குணமும் இரு கண்களைப் போல இருக்க வேண்டும்,  எத்தனை கோடி கொடுத்தாலும், இந்த குணத்தை விட்டுத்தரல் கூடாது, உங்கள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டாவதற்கு மாறாத நாணயமும்,  தவறாத சொல்லும்  மட்டுமே  காரணமாக அமையும்.

13) இரண்டாம் தலைமுறையை வளர்க்க வேண்டும்.

உங்களுடைய நிர்வாகத் திறமையையும், அனுபவத்தையும், அதன்  சூட்சமத்தையும், நுணுக்கங்களையும், தந்திரங்களையும்,  நுட்பமான செயல் திறனையும், முடிவு எடுக்கும் ஆற்றலையும் உங்களது அடுத்த நிலையில்  உள்ளவர்களுக்கு அல்லது உங்களால் தேர்வு  செய்யப்பட்டவர்களுக்கு சொல்லித் தரல் வேண்டும்,   விலங்குகள் தன் குட்டிகளுக்கு பயிற்சிகள் தருவதைப் போல அவர்களுக்கு பயிற்சிகள் தர வேண்டும்,  அனுபவமும், திறமையும் அடுத்த தலைமுறையினருக்கு பயன்படல் வேண்டும்.

14) தன்னம்பிக்கை கலந்த துணிவு வேண்டும்.

எது  நன்மை தரும், எது தீமை தரும், எது உசிதமானது,  எது ஆபத்தானது,  எது வளர்ச்சியைத் தரும்,  எது இழப்பைத் தரும் என்று யோசித்து சரி என்று படுவதை தன்னம்பிக்கையோடும், தளராத துணிவோடும்  நடைமுறைப்படுத்த வேண்டும்,  கடுமையான முயற்சியும்,  ஓய்வில்லாத உழைப்பும், விடா முயற்சியும், உற்சாகமும்  உங்களுக்கு ஊக்கத்தையும், வெற்றியையும் தரும் என்பதில் எள் முனை  அளவு கூட சந்தேகம் இல்லை.

15) பணியை நேசிக்க  வேண்டும்

மேலாண்மைப் பயிற்சிலே ஒரு கதை உண்டு,

ஒரு கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கிற 3 பேரிடம்  “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”என்ற கேள்வி கேட்கப்பட்டது.

முதலாமவன்  “நான் வயித்தைக் கழுவதற்காக வேலை செய்கிறேன்”  என்றார்,

இரண்டாமவன் “இஞ்ஜினியர் என்ன சொன்னாரோ அதைச் செய்து கொண்டிருக்கிறேன்” என்றான்.

மூன்றாமவன்  “நான் குழந்தைகள்  படிப்பிற்கான,  எதிர்கால விஞ்ஞானிகளும், மேதைகளும் உருவாகும் இடமான பள்ளிக்கூடம் கட்டிக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

மூவரும் ஒரே வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்,ஆனால்  ஒருவர் மட்டும் உயர்ந்த நோக்கத்திற்காக தான் நேசித்து இந்தப் பணியைச் செய்கிறேன் என்றார்,

ஓய்வில்லா உழைப்பும்

பணியிலே  நேசமும்  இருந்தால்

இமயமும்  கடுகாய் தெரியும்

இரும்பும் பஞ்சாய்  தெரியும்

சுமையும்  சுகமாய்  மாறும் —    இதனால்

எல்லாமும்  ஜெயமாய் முடியும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2019

சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!
உண்மை உன்னை உயர்த்தும்
நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?
பசுமை பென்சில்
வெற்றி உங்கள் கையில்- 61
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4
நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)
மந்திரப் புன்னகை!
தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை
தன்னம்பிக்கை மேடை
தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?
சமயோசித புத்தி
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி
நாளும் விதையுங்கள் நம்பிக்கையை
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத்தொழிலாளர்கள்
சிந்திக்க வைக்கும் சீனா – 6
வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை
“வாழ நினைத்தால் வாழலாம்” – 24
பேச்சும் மூச்சும்
உள்ளத்தோடு உள்ளம்