Home » Articles » நாளும் விதையுங்கள் நம்பிக்கையை

 
நாளும் விதையுங்கள் நம்பிக்கையை


இலக்குமணசுவாமி சு
Author:

ஓ! இளைஞர்களே, நீங்கள் தன்னம்பிக்கையை நாளும் விதையுங்கள். அந்தத் தன்னம்பிக்கை உங்கள் வாழ்வில் புதுமையை மட்டுமல்ல, பசுமையான வாழ்க்கையை நல்கும்; ஒளிந்துகொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை, விழித்துக் கொண்டு வெல்வதே வாழ்க்கை.

இளைஞர்களே, நீங்கள் ஒன்று நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை என்பது உங்களிடம் வளர்ந்துள்ள களைகளைப் பிடுங்கி, தூக்கி எறியப்பட்டுவிடும்.

அந்தக் களைகள் தான் இல்லாமை, இயலாமை, வெல்லாமை என்னும் ஆமைகள் மனந்தளராமையிடம் தோற்றுவிடுகின்றன.

நல்வாய்ப்புகளைத் தவற விடுபவன் தன் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாதவன். உன்னைத் தேடி வருகிற நல்வாய்ப்பை நாளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கையே வாழ்வின் வழி. அவநம்பிக்கையே வாழ்வின் வலி! என்பதை அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

இளைஞனே, மனம் ஆர்ப்பரித்தால், நிம்மதியைத் தொலைத்துவிடும். அமைதியான மனமே சாதிக்கும். இதனை என்றுமே நீ மறந்துவிடக் கூடாது.

வரும் நல்ல வாய்ப்புக்களை வரவேற்கத் தெரியாதவன், தன் வாழ்க்கையில் தோல்விகளோடே தேங்கிப் போகிறான். இதற்கொரு நல்ல பழமொழி ஒன்று உண்டு. அதுதான்,

“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்”

என்பதாகும்.

உங்களின் கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும். எப்போது தெரியுமா?

கனவுகள் கருகிவிடாது

நம் நம்பிக்கைகள்

நொறுங்கிடாத வரையில்…!

நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் தான் வாழ்வில் ஏணிகள். அதுவே வாழ்க்கையின் தோணிகள் ஆகும்.

வெற்றிக்கான காலத்தை யாராலும் எளிதில் முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் வெற்றியின் வடிவங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. இந்த நேரத்தில் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது.

“முழு ஈடுபாட்டோடு கூடிய முயற்சியே வாழ்வின் புதிய விடியலுக்கான துவக்கம்” என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மைப்பற்றி நாமே தாழ்வாக எண்ணிக்கொண்டால், நமது வாழ்க்கையின் வளர்ச்சியும், வளமும் குன்றும்.

லட்சியத் தீப்பந்தம் கைக்கொண்டு ஓடுபவர்கள், பிரச்சனை சூறாவளிகளைக் கடந்த பின்னரே, வெற்றி எனும் ஒளிவிளக்கை ஏற்ற முடிகிறது.

உங்கள் வாழ்க்கையில் தோன்றும் சறுக்கல், தோல்விகள், சோதனைகள் உங்களின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வெற்றிக்கும், குறிக்கோளுக்கும் உள்ள இடைவெளியை உழைப்பால் நிரப்ப, நாம் பழகிக் கொள்வோம்.

வாழ்க்கையில், ஒவ்வொரு வெற்றியும், தோல்விகளைப் பின் தொடர்ந்து வந்தே, உழைப்பின் விலாசத்தைக் கண்டு கொள்கின்றன.

எந்தவொரு பணியைச் செய்தாலும் ஆர்வத்தைக் காட்டி, ஆர்வத்தோடு அதை அரவணைத்திட வேண்டும்.

ஆர்வம் வளர்ச்சியைத் தரும்

கர்வம் வீழ்ச்சியைத் தரும்

எனும் வைர வரிகளை மறந்துவிடக் கூடாது.

உழைப்பால் உயர்ந்து செல்வம், பதவி இவைகள் தேடி வருகிறபோது, கர்வம் கொள்ளக் கூடாது. அது உடனே வீழ்ச்சியைத் தந்துவிடும். அதனால் இத்தனை நாள் ஈட்டிவைத்த நல்லவைகள் அத்தனையும் விரயமாகி, வீணாகிவிடும்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடும் உழைப்பு இவைகளை எல்லாம் துடுப்பாக்கிக் கொண்டால், நம் வாழ்க்கை என்றென்றும் வசந்தம் தானே!

இளைஞர்களே, நீங்கள் என்றுமே…

“நிமிர்ந்து நில்லுங்கள்

நிலவே உங்கள்

நெற்றிப் பொட்டாகும்”

கடந்த காலச் செருப்புகளைக் கழற்றி எரிந்துவிட்டு, எதிர்காலத்திற்கான இறகுகளைச் சேகரியுங்கள். உங்களின் வெற்றி உலாவிற்கென வானங்களின் விதானங்களே விரிவு அடையும்.

நடந்தவற்றையும், கடந்தவற்றையும் கட்டி மூட்டைகளாகப் போட்டுவிட்டு உங்கள் முகவரியை உலகிற்கு அறிவிக்கும் வழியினைத் தேடுங்கள்.

ஒவ்வொருவருடைய வெற்றிக்கும் அடிப்படையானது அர்ப்பணிப்பு மற்றும் தன்னம்பிக்கை மட்டுமே.

உண்மையாய் உழைப்போம்

உழைத்து உயர்வோம்

உயர்ந்து உயர்விப்போம்!

இன்பமும், துன்பமும் தொடர்கதை. அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் என்றுமே தோல்வி கிடையாது.

தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கற்கள் பட்டுத் தெளிந்து, அறிந்து, புரிந்து, பலப்படிகள் கடந்து, பயனுள்ளவர்களாக வாழ்ந்து, வளர்ந்து, வழிகாட்டியாய் இருந்து வெற்றி வாகை சூடுங்கள் இளைஞர்களே…

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2019

சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!
உண்மை உன்னை உயர்த்தும்
நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?
பசுமை பென்சில்
வெற்றி உங்கள் கையில்- 61
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4
நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)
மந்திரப் புன்னகை!
தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை
தன்னம்பிக்கை மேடை
தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?
சமயோசித புத்தி
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி
நாளும் விதையுங்கள் நம்பிக்கையை
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத்தொழிலாளர்கள்
சிந்திக்க வைக்கும் சீனா – 6
வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை
“வாழ நினைத்தால் வாழலாம்” – 24
பேச்சும் மூச்சும்
உள்ளத்தோடு உள்ளம்