Home » Articles » நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)

 
நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)


வித்யாசாகர்
Author:

எங்கேனும் வெளியே மகிழுந்தில் பயணிக்கையில், “இப்போ பார்றேன், இங்க எனக்கு கண்டிப்பா பார்க்கிங் கிடைக்கும் பார்றேன்என்பேன் மகனிடம். சொன்னால் நம்பமாட்டீர்கள், உண்மையிலேயே எனது கார் சென்று எங்கே நிற்கிறதோ அங்கே ஒரு பார்க்கிங் எனக்காக காத்துகிடக்கும் அல்லது இருக்கும் கார் ஒன்றை எவரேனும் ஒருவர்  அந்நேரம் பார்த்து அங்கிருந்து எடுப்பர், பார்க்கிங் கிடைத்ததும் மகன் உடனே அதிர்ச்சியாவான், உற்சாகமாக கத்துவான், எப்படிப்பா இதெல்லாம் என்பான்.

அதலாம் அப்டித்தான்டா, நீ கூட வேணும்னா எதையேனும் நினைத்துக்கொள், நினைத்தால் நடக்கும்என்பேன். ஆனால் நல்லதை நினை என்பேன். எது நல்லது என்பான், பிறருக்கும் உனக்கும் எது நன்மையை பயக்குமோ அது நல்லது தானே என்பேன். அப்போ எது நினைத்தாலும் நடக்குமா என்பான், எண்ணங்களே செயல் என்பேன். எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்பதை அடிக்கடி அவனிடம் சொல்வேன். உண்மையை சொன்னால் இப்போதெல்லாம் அவனுடைய அதிர்ச்சி எனக்கே வந்துவிடுகிறது, காரணம் எங்கு எப்போது நான் காரோட்டிச் சென்றாலும் அங்கு எனக்கான ஒரு பார்க்கிங் மிக இயல்பாகவே அமைந்துவிடுகிறது.

என்றாலும், இதுபோன்ற பல ஆச்சர்யங்கள் நடக்காமலில்லை நமது வாழ்விலென பல நிகழ்கால ஆச்சர்யங்களைப் பற்றி நண்பர் ஒருவரிடம் பகிர்ந்துக் கொண்டிருந்தேன். அவர் மிக ஆர்வமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அவ்வளவு பெரிதாக நம்பிக்கொள்ளாமலே விடைபெற்றார். பிறகொரு மாதம் சென்றதும் திடீரென ஒரு கைப்பேசி அழைப்பு அவரிடமிருந்து வந்தது. உடனே என்னை சந்திக்கவேண்டுமென்றும், ஏதோ ஒரு பெரிய ஆச்சர்யமும் மகிழ்வான கதையும் உண்டு என்றார். உடனேயே திட்டமிட்டு, அன்று மாலையிலேயே சந்தித்தோம்.

அவரிடம் அப்படி என்ன ஜிஎஸ்டி குறைந்துவிட்ட செய்தி இருந்துவிடப் போகிறதென  எனக்கும் மிக்க ஆவலிருந்தது அவரைக் காண,  மீண்டும் சந்திக்கையில் எப்படியேனும், இந்த மாதத்தில் நினைத்ததைப் பற்றியும் பல அவ்வாறே நடந்ததைப் பற்றியுமெல்லாம் கூறிவிடவேண்டும், மிகக் குறிப்பிட்டு; காரோட்டுகையில் யாரோ டம்மென்று பின்னே வந்து இடிப்பதாக அடிக்கடி நினைத்திருந்ததும், அவ்வாறே ஒருநாள் ஒரு ஆள் பெரிய கார் கொண்டு வந்து நேரே டம்மென சப்தத்தோடு எனது புதிதாக வாங்கிய கிய்யா ஆப்டிமா மீது இடித்ததும் வரை எல்லாவற்றையுமே அவரிடம் சொல்லிவிட மனதில் பல எண்ணங்கள் திரையோடிக் கொண்டிருந்தது.

என்றாலும், அவரைக் கண்டதும், பேசுவதற்கு ஒன்றுமில்லாதவனைப் போல, என்ன என்ன மன்னரே ஏன் இத்தனைப் பரவசம் என்றேன், இல்லை நீங்கள் சொன்னது உண்மை, எனக்கொரு சம்பவம் நடந்தது என்றார். சம்பவமா? என்ன, யாரை? எப்போ? நான் தவிப்பதற்குள் அவரே சுதாரித்துக்கொண்டு, அப்படிப்பட்ட சம்பவமெல்லாமில்ல ஒரு நல்லது நடந்தது என்று சொல்லி சிரித்தார்.

பொறுமை தாங்கமாட்டாமல் நான்என்ன நடந்தது ஒய் அதை முதலில் சொல்லும் என்றேன்.  அவருடைய நண்பர் அவரை அழைத்தாராம், வேலையே கிடைக்கவில்லை, ஊர் திரும்பி போகிறேன் என்றாராம், இரண்டு லட்சம் பணம் கட்டி வந்ததெல்லாம் வீணாகப் போனதென்று புலம்பினாராம். என்றாலும், இன்னும் ஒரு வாய்ப்பு உண்டு, நாளைக்கு கடைசி திகதி, அதுவும் போனால் இனி ஊர்போய் இட்டிலியோ தோசையோ சுடவேண்டியது தான், எனவே எப்படியேனும் நாளைக்கு எனக்கு வேலை கிடைத்தேயாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வாயா என்று புலம்பி தீர்த்தாராம்.

அவரும் மனதிற்குள்கடவுளே எப்படியாயினும் மோசசுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று ஆழ்மனதில் மிக அழுத்தமாக எண்ணிக்கொண்டு அப்படியே உறங்கியும்போனாராம். மறுநாள் அதுபற்றி அத்தனை நினைவின்றி அவரும் சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விட்டிருக்கிறார். திடீரென அந்த மோசசிடமிருந்து எனது நண்பருக்கு கைப்பேசியில் ஒரு அழைப்பு வந்திருக்கிறது. எடுத்துப் பேசினால், இத்தனை நாள் அழைக்காத நிறுவனம் இன்று என்னவோ அதிசயமாய் அவரையழைத்து, கிடைக்காது என்றிருந்த வேலையை உடனே கிடைத்துவிட்டதாக சொல்லி, உடனே வந்து சேர்ந்துக்கொள்ளச் சொல்லி ஆபர் லெட்டரும் அனுப்பிவிட்டதாய் சொன்னதாம். அது தவிர, அதிக சம்பளமும், நல்ல வேலையும் கூட என்பதால் மோசஸ் கட்டிப்பிடித்து எனது நண்பருக்கு முத்தமிட்டேமகிழ்ந்தாராம். நண்பருக்கு ஒரே கொண்டாட்டமும் சந்தோஷமும் தாளமுடியாமல் ஓடோடி நேரே என்னிடமே வந்து விட்டார்.

எனக்கு மனசெல்லாம் சில்லென்று இனித்தது. இது ஒரு வித்தையைப் போலத்தான். இறை விளையாட்டு போல. எண்ணங்களால் உலகைக் கட்டிப்போடும் உயரிய பயிற்சி இது. நல்லது செய்து நல்லது செய்து தன்னோட உள்ளவங்க எல்லோருக்கும் நல்லது மட்டுமே நடக்கவேண்டும் இறைவான்னு எண்ணி எண்ணி இவ்வுலக உயிர்கள் அனைத்திற்கும் வேண்டுகையில் தனக்கும் தானே சேர்த்து வேண்டுதலை வைத்துவிடும் அழகிய பயிற்சி இது. ஆனால் அந்த நண்பருக்கு ஒரு கேள்வி வந்தது பாருங்க, அது தான் சிந்தனையின் உச்சம். அது ஏன், எனக்கு நடந்தது? அவருக்கு ஏன் நடக்கவில்லை? என்கிறார் குபுக்கென. ஏன் நான் நினைத்து அவருக்கு நடக்கவேண்டும்? அவரே நினைத்து அவருக்கே அது நடந்திருக்கக்கூடாதா? என்றார்.

அங்கு தான் நம்மை நாம் சற்று ஆழமாக திரும்பிப் பார்க்கவேண்டியுள்ளது. ஒருவருக்கு ஒருவர் நம்மில் அறிவிலோ பலத்திலோ தக்க வேறுபாடு உண்டு இல்லையா? ஒரு பொருளை சுமப்பதில், தூங்குவதில் சாப்பிடுவதில் கூட நமக்குள் வேறுபாடு உண்டில்லையா? கத்துவதில், உரக்கப் பேசுவதில், அழகில், தோற்றத்திலென பல வேறுபாடுகள் நமக்குள் இருக்கத்தானே செய்கிறது? அப்படித்தான் இந்த எண்ணுவதிலும், நினைப்பதிலும், நம்புவதிலும், மிக உறுதியாக உண்மையை உண்மையாக உள்ளவாறு ஏற்பதிலும் ஆளுக்கு ஆள் வேற்றுமை உண்டு. பழுத்த பலாப்பழம் மணப்பதும், பழுக்காதது மணக்க இருப்பதுமாய் வெவ்வேறுபட்ட வேறுபாடுகள் நமக்குள் நம்முடைய வாழ்வுநிலை பொறுத்து இருக்கத்தான் செய்கிறது. சிந்தித்துப் பாருங்கள், எல்லோராலும், எல்லாமே நடந்துவிடுமாயின் யாருக்கும் எதன்பொருட்டும் எதன் மீதும் அக்கறையோ எதுகுறித்தும் அவசியமோ ஆசையோ எதுபற்றிய ஆழமான கேள்விகளோ இவரின் முக்கியத்துவமோ வாழ்வின் அதிசயதின் ஆர்பாட்டமோ இல்லாமலே போய்விடும் இல்லையா?

காரணம், ஒரு பொருள் கிடைக்காத பட்சத்தில் தான் அதன் மீதான ஈர்ப்பும் காதலும் ஆசையும் எதிர்பார்ப்புகளும் இரட்டிப்பாகி விடுகிறது. அன்று எனக்கும் அப்படித்தான் ஆனது. ஒரு மருத்துவமனையைக் கங்கையில் அது எனக்கு வணங்கத்தக்கவொரு கோயிலுக்கு நிகராக கண்ணில் பட்டது. காரணம் இரண்டாம் மகள் சுகமின்றி மருத்துவமனையில் இருந்தாள். அலுவல் போய் சாய்விருக்கையில் அமர, இரண்டே வினாடிக்குள் வீட்டிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. எழிலி ஆபத்தில் இருக்கிறாள் உடனே புறப்பட்டு வாங்கயென்று.

வேறென்ன செய்ய, உடனே வீட்டிற்கு ஓடி, அவளை தூக்கிக் கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி ஏறி இறங்கினோம். கருணை கொண்ட யாருமே மகளைக் கண்டு அஞ்சினர். நட்பு கொண்ட நண்பர்கள் கூட கைகழுவிக்கொண்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு போ என்றனர். எழிலி எப்படியோ உடைந்த ஒரு ஆப்பிள் துண்டை எடுத்து மூக்கிற்குள் நுழைத்துக்கொண்டாள். மனைவி பதறிப்போய் அழைக்க, மகள் என்றதும் நன்றாக சிரித்துக்கொண்டு இயங்கிய இதயம் ஒருநொடி எனக்கு அதிர்ச்சியில் நின்றேபோனது. அதிலும், விரைந்து சென்று உள்ளே புகும் ஒவ்வொரு மருத்துவமனையும் உடனே எங்களை வெளியில் அனுப்பி வேறு இடம் பாரென்று சொல்ல சொல்ல மகள் பற்றிய பயம் பலமடங்கு ஏறிக்கொண்டே போனது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2019

சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!
உண்மை உன்னை உயர்த்தும்
நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?
பசுமை பென்சில்
வெற்றி உங்கள் கையில்- 61
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4
நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)
மந்திரப் புன்னகை!
தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை
தன்னம்பிக்கை மேடை
தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?
சமயோசித புத்தி
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி
நாளும் விதையுங்கள் நம்பிக்கையை
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத்தொழிலாளர்கள்
சிந்திக்க வைக்கும் சீனா – 6
வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை
“வாழ நினைத்தால் வாழலாம்” – 24
பேச்சும் மூச்சும்
உள்ளத்தோடு உள்ளம்