Home » Articles » நினைப்பதே நடக்கும் – 1

 
நினைப்பதே நடக்கும் – 1


வித்யாசாகர்
Author:

ஒருமுறை குவைத்திலுள்ள “அதான்” எனும் ஒரு பிரபல அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். பொதுவாக மருத்துவமனைக்கு போனாலே மனசெல்லாம் ஒரு வலி வருகிறது இல்லையா? மருத்துவமனை என்றாலே, அண்ணனுக்கு அடிப்பட்டதும், அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லாம இருந்ததும், அப்பா வலியில் துடித்ததுமே எல்லோருக்கும் நினைவில் வரும். உடனிருப்பவர்கள் ஒவ்வொருவராய் இறந்துகொண்டே வருகையில் இருப்பதுகூட பயமாகித்தான் விடுகிறது. நான் சரியாக இருக்கிறேன் என்பதையே பிறரின் தவறுகளைக் காண்கையில்தானே அறிகிறோம்? பிறருக்கு வலிக்கும்போதுதான் நான் பாக்கியசாலியென எண்ணம் வருகிறது. சில யோசனைகளோடு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவின் வாசலோரம் நிற்கிறேன்.

ஒருவருக்கு கார் விபத்தில் அடி பட்டு கால் நசுங்கி ஒரு ஸ்டெக்சரில் இழுத்துவருகிறார்கள். உள்ளே வந்ததும் அவரை வேறொரு ஸ்டெக்சரில் மாற்றி ஏதோ ஒரு பொருள்போல தூக்கிப்போட்டுக்கொண்டு எல்லோரும் வண்டியை தள்üயவாறு உள்ளே ஓடுகிறார்கள், ரத்தம் பொலபொலவென கால்வழியே ஊற்றுகிறது. பார்க்க கண் கீறி வலிக்கிறது. இரத்தத்தை கண்கொண்டு பார்க்கமுடிவதில்லை. எப்படி கழுத்தை அருக்கிறார்களோ தெரியவில்லை. கொலைபாதகர்கள். துடிக்கத்துடிக்க மனைவியின் கழுத்தை கணவன் வெட்டியதாக செய்தியில் படிக்கிறோம், உள்ளம் நடுங்கிப்போகிறது அதை நினைத்தாலே. மனைவியென்பவள் எத்தனை அன்பானவள், இன்னொரு தாயில்லையா ? அவளை அடிக்க முதலில் மனம் வரலாமா? அவளை திட்டினால் வலிக்கிறதே, அவள் அழுதாள் வலிக்கிறதே, எப்படி கழுத்தை வெட்டுவானவன் படுபாவி. இரக்கமற்றவர்களும் கூடும் இடமது நாடு இல்லையா?

சடாரென இன்னொருவன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பதறியபடியே காரிலிருந்து இறங்குகிறான், பின்னே ஓடிவந்தபடி மனைவி கதறுகிறாள், குடும்பமே ஓடி வருகிறது, அந்த குழந்தை ஏனோ இழுத்து இழுத்து மூச்சை வலியோடு விடுகிறது. தூக்கிக்கொண்டு உள்ளே ஓடுகிறார்கள். அவசர சிகிச்சைப் பிரிவின் எல்லா அறைகளும் ஆங்காங்கே சரசரவென திறக்கிறது. ஆபரேசன் தியேட்டர் ஓடு ஓடு என்கிறார்கள் சிலர். மருத்துவர்களும் செவிலியத் தாய்களுமாய் பின்னே துரிதமாக ஓடி எல்லோருமந்த அறைக்குள் நுழைகிறார்கள். கதவு படாரென சாற்றப்படுகிறது. மனதுள் ஒரே பயமெனக்கு. கடவுளே என் புள்ளை, எனது பிள்ளையைக் காப்பாற்று. என் பிள்ளைகளுக்கு எதனா இப்படி ஆனா(?) அச்சோ ச்ச பாழும் மனமே, பாவம் இந்த குழந்தையைப் பாரு, கடவுளே முதலில் இந்தக் குழந்தையைக் காப்பாற்று, எனது பிள்ளைகளுக்கு ஒன்னும் ஆகாது, இந்தப் பிள்ளையை காப்பாற்று இறைவா.., மனதுள் வேண்டிக்கொள்கிறேன்.

ஒரு ஓரத்தில் நின்றிருக்கையில், வேறொரு அரபி எனை எட்டிப்பார்த்து ஏய் என்ன என்கிறார். குவைத் தேசத்தின் விசால மருத்துவமனை இது. பின்புறமுள்ள நுழைவாயிலின் முகப்பில் நிற்கிறேன் நான். ஏய்.. போ போ.. அங்கே போ இங்க நிற்காதே என்கிறார் அவர் மீண்டும். அவரிடம் போய் எனக்கொரு டோக்கன் வேண்டும் காய்ச்சல் அடிக்கிறது என்றேன், மருத்துவம் பார்க்க வேண்டுமென்றேன். அவர் என்னவோ எனது நாய்க்குட்டிக்கு காய்ச்சல் என்றதைப்போல எனைப் பார்த்துவிட்டு போ போ இந்த டோக்கனை பெற்றுக்கொண்டு போய் அங்கே வரிசையில் நில் என்றார். அவர் ஏய் ஏய் என்றதை எனது தன்மானம் துüயும் ஏற்கவில்லை. எனினும் ரத்தம் கொதிக்க நகர்ந்து அங்கே போனேன். “ஏன் எனது தேசத்தை சுதந்திர தேசமேன்கிறோம்” எனும் கேள்விக்கான பதில் இப்படி சரியை சரியாக சொல்லவோ, நீதியை அதன்படி உள்ளவாறு கேட்கவோ, குறைந்தபட்சம் இது நடந்ததென எடுத்துக்கூறவோ கூட அவகாசமில்லாதுபோகையில், இம்மண்ணிற்காக தலைமுறை தலைமுறையாய் உழைத்துக் கொண்டிருக்கிறோமே என்றெண்ணுகையில் தோன்றுகிறது ஏன் ஓணானை உள்ளூரில் பிடிக்கவேண்டுமென்று.

எப்படியோ ஸ்டாம்ப் ஒட்டி மருத்துவரை அணுக விவரப்படிவம் பெற்றுக்கொண்டு போய் வேறொரு வரிசையில் எனது டோக்கன் எண் வருவதற்காக நின்றுகொண்டேன். சற்று தூரத்தில் இன்னொரு குவைத்தியர் படுஜோராக நின்றிருந்தார். தனது சட்டைப்பையில் கைவிட்டு குவைத்தின் பணக்கட்டுக்களை எடுத்து திருப்பி திருப்பிப் பார்க்கிறார். குரங்கிடம் ஒரு சட்டியில் சில காய்களைப் போட்டு கொடுத்துவிட்டால் அது எப்படி துழாவி துழாவி ஒன்றை விட்டுவிட்டு ஒன்றை எடுக்குமோ தேடுமோ அப்படி அவரும் ஒரு பணக் கட்டை எடுத்து வெüயே வைத்துக்கொண்டு மீண்டும் வேறெதையோ சட்டைபையில் கைவிட்டவாறு தேடிக்கொண்டிருந்தார். கொஞ்சம் இங்கும் அங்குமாக நடந்தார். சிலரின் முகங்களை ஏற இறங்கப் பார்த்தார். மெல்ல நகர்ந்து அங்கிருந்த ஒவ்வொருவரையாய் ஏதோ கேட்டுவிட்டு மீண்டும் தனது பழைய இடத்திற்கே திரும்பிவந்தார். சிலவேளை நாம்கூட அப்படித்தான் கொடீஸ்வரன் ஒருவர் பேருந்தில் ஏறிவிட்டால் ஒரு ரூபாய் டிக்கெட்டெடுக்க பத்துகோடி பணம் வங்கியில் இருப்பதாகச் சொல்வாரே அதுபோல மருத்துவமனை, தபால் நிலையம், பயணச்சீட்டு வாங்க மற்றும் பிற பொது இடங்களுக்குச் செல்கையில் நிறையப்பேர் இப்படி சரியானா சில்லறைகளை கொண்டுவராமல் தெருநெடுக்க கடைகüல் ஏறி இறங்கி நடப்பதை அறிகிறோம், இந்த குவைத் நாட்டில் பல பெரிய மருத்துவமனைகüல் “அதான்” என்பதும் ஒன்று. இங்கே சிகிச்சை பெற அப்போது இரண்டு தினார் ஸ்டாம்ப் ஒட்டி தரவேண்டும். ஸ்டாம்ப் இங்கே பொதுவாக தானியங்கி எந்திரங்கüலிருந்து கிடைக்கும். அந்த குவைத்தியருக்கும் இன்று அப்படித்தான் இரண்டு தினார் ஸ்டாம்ப் எடுக்க வேண்டுமாயிருந்தது. ஏனோ அவர் ஒரேயொரு குவைத்தி தினாரை கையில் வைத்துக்கொண்டு இன்னொரு குவைத்தி தினார் வேண்டி இத்தனை பாடு பட்டுக்கொண்டிருந்தார்.

கலியாணத்திற்கு மொய்ய்யெழுதக் கேட்டால் நம்மாள் உடனே எடுத்து நீட்டுவான், அரசு அலுவல்ல லஞ்சம் தரணும்னு கேளு தோ இருக்கு சார் குடு சார்னுவான், அதே ஒரு பத்துருபா சில்லறை குடேன் உயிர் போகுதுன்னு கேட்டுப்பாறேன், உயிரா ? யார் உயிருன்னு பார்க்குறாமாதிரியே எட்டி நிப்பான். இங்கே நமது அரபிகள் மட்டும் சளைத்தவர்களா என்ன? யாரும் அவருக்கு ஒரு குவைத் தினாரையோ அல்லது சில்லரையினையோ தரவில்லை. பெரும்பாலும் சில்லறையாக எல்லோரும் இருபது குவைத்தி தினாருக்கெல்லாம் இங்கே வைத்திருப்பதில்லை.

தூர நின்று இதைக் கண்ட நான் வேகமாக அவரிடம் சென்று, அய்யா அய்யா, உங்களுக்கு ஒரு தினார் தானே வேண்டும் இருங்க நான் தறேன் என்றேன், அவர் சடாரென சட்டைப் பைக்குள் கைவிட்டு ஒரு கற்றை பண நோட்டுகளை எடுத்து அதிலொன்றை நீட்டினார். ஐயோ இருபது தினார் நோட்டு அது. எனக்கு உடம்பெல்லாம் ஆனந்தக் கூத்தாடும் ஐயனார் போல முடிகள் நட்டுக்கொண்டு நின்றது, அடப்பாவி மனுசா ஒரு தினாருக்கு இருபது தினார் தாறானேன்னு நினைத்து ஆன்னு பார்த்துட்டிருந்தா, அந்த நேரம் பார்த்து நம்ம அறம் சும்மா விடுமா, அது ஏதோ உள்ளே மனதையரிக்க, சரி விடு, அதலாம் பரவாயில்லை ஐயா எனக்கு இருபது தினாரெல்லாம் வேண்டாம் என்றேன்.

உடனே அவர் அரபியில் “சுனு……?” என்று வினவியவாறு பார்த்தார், என்ன… என்றுக் கொவம்போல குறுகுறுவென நோக்கினார், இல்லை ஐயா, ஒரு தினாருக்கு நீங்க இருபது தினாரை தறீங்களே என்றேன், அவர் உடனே பைத்தியமா? நானென்ன சில்லறைக்கு தானே கொடுத்தேன் உனக்கு மொத்தமாவா தர்றேன்னாரே பார்க்கணும் எனக்கு உணர்வெல்லாம் உள்ளே சொய்யேன வாலாட்டி படுத்துக்கொண்ட நாயை போல சோர்ந்துக்கொண்டது.

சில்லறை என்னிடம் இல்லையே, உங்களுக்கு ஒரு தினார்தானே வேண்டும், இதோ இதை வைத்துக்கொள்ளுங்களென கொடுத்தேன், அவர் அதற்கு அதலாம் செல்லாது செல்லாது, அதும் நான்போய் ஒரு இந்தியிடமிருந்து (பொதுவாக அரேபியர்கள் அதிகபட்சம் நமை இந்தி என்றுதான் அழைப்பதுண்டு) ஒரு இந்தியிடமிருந்து போய் கேவலம் ஒரு தினாரை வாங்கிக்கொள்வதா என்றெண்ணி மீண்டும் எல்லோரிடமும் கையேந்த துவங்கினார், சுற்றி சுற்றி வருகிறார் யாருமே தரவில்லை, அவருக்கு சீ போ என்றானது.

நான் மெல்ல நகர்ந்து அவரிடம் போய் ஐயா இங்க வாங்களேன் என்றேன் வந்தார். அருகில் சென்று மெல்ல அவரிடம் சொன்னேன் நீங்கள் இப்படி எல்லோரிடமும் கேட்டு நடப்பதால் தானே அதை தவிர்க்கவேண்டி நான் ஒரு தினார் தருகிறேன் என்றேன், அதையும் வாங்கிக்கொண்டு பிறகும் நீங்கüப்படி எல்லோரிடமும் சுற்றினால் என்ன கதை என்றேன். இல்லையில்லை உன்னிடம் நானெப்படி வாங்குவது அது சரியில்லை, இது உன் பணம், உனக்கு மீண்டும் தரவேண்டுமில்லையா என்றார், மிகச் சரி, ஆனால் இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள் ஒருவருக்கு ஒருவர் சட்டென உதவும் அவசரத்திற்கு தான் இந்த பணம் பொருள் இன்னபிற எல்லாமே, பரவாயில்லை வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். அதற்கவர் இல்லையில்லை என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது ஒரு தினார் இல்லையே என்று மீண்டும் கவலைப்பட்டார்.

அவரை புரிந்துக் கொண்ட நான் சொன்னேன், சரி உங்களுக்கு என்ன பிரச்சனை இப்பணத்தை எனக்கு மீண்டும் எப்படி திருப்பி தருவது என்று தானே? ஆமாம் ஆமாம் என்றார். நல்லா தலையை இதுக்கு மட்டும் ஆட்டு, ஏன் அவ்வளோ பணத்துல இருந்து ஒரு இருபது தினாரை மட்டும் கொடுத்தாதான் என்ன என்று நினைத்துக்கொண்டு சிரித்தவாறே “ஐயா ஒன்று செய்யுங்களேன், இந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு இப்போதைக்கு நீங்கள் ஸ்டாம்ப் எடுங்கள், பிறகு இவ்வழியே வருகையிலோ அல்லது எங்கோ வேறு யாரையோ நீங்கள் வருத்தப்படும்போது கண்டாலோ அல்லது யாரேனும் ஒரு ஏழை மனிதரோ அல்லது ஒரு முதியவரையோ எங்கேனும் கண்டாலோ இந்த என்னிடம் பெற்ற ஒரு தினாரை அவரிடம் கொடுத்துவிடுங்கள், அது பிறகு தானே எனக்கு கிடைத்துவிடும் என்றேன்.

அவர் ஒரு நொடி ஆடிப்போய் விட்டார். இது என்னய்யா இது, நான் உன்னிடமிருந்து பணம் பெறுகிறேன், அதை நீ பிறகு யாரோ ஒரு ஏழைக்கு கொடு அல்லது இயலாதோருக்கு கொடு பிறகு அது எனக்கு வேறெங்கோ கிடைத்துவிடும் என்கிறானே இவனென பலத்த யோசனையோடு எனைப் பார்த்தார். நான் மீண்டும் சொன்னேன். எனக்கு ஒன்றாக இல்லை ஐயா இரண்டாகவே கிடைத்துவிடும் நீங்க போங்களென கூறிவிட்டு நான் அங்கிருந்து நடந்துவிட்டேன். அவர் கையி|ருந்த கற்றைப் பணமும் அவருடைய சட்டைப் பைக்குள் பல ஏழைகüன் கேள்விக்குறிகளை கிண்டலடித்துக்கொண்டிருந்தது.

பொதுவாக நல்லதை இப்படி யாருக்கேனும் சொல்கையிலோ செய்கையிலோதான் நான் உயிர்வாழ்வதாக ஒரு எண்ணமே எனக்கு வருவதுண்டு. வாழ்வதன் அர்த்தமே நன்மைக்கென எண்ணிக்கொண்டால், நன்மையின் சாட்சியாகவே நாமும் அமைந்துவிடுவதை வாழ்பனுபவமாக கண்டுவருகிறேன். அது சரி “நினைப்பது நடக்கும்” என்று தலைப்பை கொடுத்துவிட்டு அதென்ன இவர் ஏதேதோ வேறு சொந்தக் கதைகளை சொல்கிறாரே என்று எண்ணுகிறீர்களா? அந்தப் பணம் உண்மையிலேயே அதே நாüல் எனக்கு இரட்டிப்பாய் கிடைத்தது என்பதும் உண்மை. ஆனால் எப்படி கிடைத்ததென அடுத்த தொடரில் சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள்.

எண்ணங்களை விதைத்திருங்கள் அது விளையும், நல்லதையே நினைத்திருங்கள் அது நிச்சயம் நடக்கும்..

தொடரும்..

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2018

சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!
விளையாட்டில் சாதிக்கும் பள்ளி
சாந்தியோடு பிரயாணம்
வாழ நினைத்தால் வாழலாம் – 23
தன்னம்பிக்கை மேடை
எப்போதோ போட்ட விதை!
தொலைக்காட்சி மற்றும் அதன் பாதிப்பு
நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?
உதவிக்கு கரம் நீட்டுங்கள்
மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி?
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3
தன்னம்பிக்கை விதைகள்
சிந்திக்க வைக்கும் சீனா – 5
நினைப்பதே நடக்கும் – 1
வெற்றி உங்கள் கையில் – 60
உள்ளத்தோடு உள்ளம்