Home » Articles » சிந்திக்க வைக்கும் சீனா – 5

 
சிந்திக்க வைக்கும் சீனா – 5


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

மறுநாள் காலை தயாராகி, அறையைக் காலி செய்து பெட்டிகளை வேனில் ஏற்றினோம். 6.30 மணிக்கு காலை உணவு சாப்பிட்டு, 7.15-க்கு ஏறி புல்லட் ரயில் நிலையம் சென்றோம்.

இது விமான நிலையம் போல் உள்ளது. தரையில் தண்ட வாளங்கள், பிளாட் பாரங்கள் முதல் தளத்தில் கடுமையான சோதனைக்குப்பின் உள்ளே சென்றோம்.

மதிய உணவாக புளிசாதம், தயிர் சாதம் கொடுத்தனர். டிக்கெட் பரிசீலித்து, லிப்ட் எஸ்கலேட்டர் வழி கீழே பிளாட்பாரம் சென்று புல்லட் ரயிலில் ஏறினோம்.

காலை 9.48க்கு புறப்பட்டது. பஸ் போல 3 2 என்ற இருக்கைகள், பெட்டியின் இறுதியில் இரு கழிப்பறைகள், தனியே வாஷ்பேஷின், பெட்டிகள் வைக்க ஷெல்ப். சீட்டுக்கு மேலும் லக்கேஜ் கேரியரில் சிறு பெட்டிகளை வைத்துக் கொள்ளலாம். பெட்டிகள் மிக சுத்தமாய் இருந்தன.

மணிக்கு 300 கி.மீ வேகம். வழயில் ஒரு ரயில்நிலையத்தில் நின்று புறப்பட்டது. கேட் திறப்பது கிடையாது. நம்மூர் போல இறங்கி ஏற இயலாது. கட்டாயம் புகை பிடிக்கக் கூடாது. புகைபிடித்தால் கைது செய்யப்படுவர் என அறிவிப்பு செய்துள்ளனர். பயணதூரம் 1216 கி.மீ இந்த புல்லட் ரயில் 14 ஜோடிகள் ஷியான் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து பீஜிங் மேற்கு ரயில் நிலையம் வரை இயக்கப் படுகின்றன. தின் பண்டங்கள் சிறு வண்டியில் வைத்து தள்ளி வந்து விற்றனர். டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டைப் பரிசீலித்துச் சென்றார்.

சரியாக மதியம் 1.50 மணிக்கு சீனாவின் தலைநகரம் பீஜிங் சென்றோம். மழை பெய்தது. கைடு சரியில்லை. தான் திட்டமிட்டவாறு தான் பயணம் என்றார். கலந்து பேசி இந்த கைடு நாளை வேண்டாம் என்று கூறியதால், மறு நாள் புது கைடு வந்தார்.

பட்டுத் துணி விற்பனை நிலையம் சென்று பார்த்தோம். பின் ஒரு மால் சென்று ஒருமணி நேரம் சுற்றினோம். பவர்பேங், மைக் வாங்கினேன். உடன் வந்தோர் செல்போன்கள் பேக், துணிகள் வாங்கினர்.

பின் (Ganges Restaurant) கங்கை உணவகம் சென்று, நம் சமையல் கலைஞர்கள் சமைத்த வெஜ்புலவ், பாயசம், தயிர் சாதம் சாப்பிட்டோம்.

ஓட்டல் நான்கு ஸ்டார் ஹீவான் சென்று, தங்கினோம். 18 மாடி கட்டடம். 15-ம் மாடியில் 10-ம் எண் அறையில் தங்கினேன். லிப்டில் அறை சாவி (கார்டு) காண்பித்தால், எத்தனாவது மாடியோ அந்த மாடிக்கு மட்டுமே போகும். இது புதுமையாக இருந்தது.

மறுநாள் தயாராகி 7 மணிக்கு காலை உணவு முடித்து 8.15க்கு பஸ் ஏறி, 8.45க்கு புறப்பட்டோம். பெரிய உணவுக் கூடம். பல வகையான உணவுகள் இருந்தன. இங்கு சீனமக்கள் இருகுச்சியால் எந்த விதமான உணவையும் மிக வேகமாக, லாவகமாக எடுத்துச் சாப்பிட்டனர். அதேபோல் சாப்பிட்டு போட்டோவும் எடுத்துக் கொண்டேன்.

புது கைடு “மே” (MOIE) வந்தார். கனிவாக விபரங்கள் கூறினார். பீஜிங் நகரின் நடுவிலும் நதி ஓடுகிறது. சுத்தமாயுள்ளது. இது உலகின் 10-வது பெரிய நகரமாம்.

முதலில் தியானன் மென் (TIANANMEN SQUARE) சதுக்கம் சென்றோம். இந்த இடத்தை 3 மணி நேரம் சுற்றிப் பார்த்தோம். சீனாவின் வளர்ச்சியில் இந்த இடத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

தெய்வீக அமைதிக்கான வாயில் (GATE OF HEAVENLY PEACE) என்பது தான் தியானன் மென் என்பதன் அர்த்தமாகும். பீஜிங் நகரின் மையத்தில் உள்ளது. 100 ஏக்கர் பரப்புள்ளது.

1415 ல் கட்டப்பட்டது. 17-ம் நூற்றாண்டில் சேதமானது. மீண்டும் சரி செய்யப்பட்டு 1950 ல் 4 மடங்காக விஸ்தரிக்கப்பட்டது. இங்குள்ள திறந்த வெளி அரங்கில் 6 லட்சம் பேர் அமரலாம். மக்களுக்காகச் சேவை செய்தோருக்கான நினைவுச் சின்னமாகும்.

சீனாவின் தேசிய மியூசியம் உள்ளது. மாசேதுங்கின் கல்லறை (MAUSOLEUM) உள்ளது. இவர் 1.10.1949 ல் மக்களின் சீனக் குடியரசை அமைத்தார். (கம்யூனிஸ்ட் கட்சி)

இதன் ஒரு பகுதியில் தினமும் அணி வகுப்பு நடை பெறுகிறது. நம் நாட்டு டில்லியில் உள்ள செங்கோட்டை போன்றது.

இதன் தொடர்ச்சியாக (FORBIDDEN CITY) தடை செய்யப்பட்ட நகர் உள்ளது. 1420 முதல் 1912 வரை சீனாவை ஆட்சி செய்த அரசர்களது மாட மாளிகைகள், அரண்மனைகள் கலைக் கூடங்கள் என மொத்தம் 980 கட்டடங்கள் உள்ளதாம். 180 ஏக்கர் பரப்பாம். வருடம் ஒன்றுக்கு சுமார் 1.30 கோடி மக்கள் வந்து பார்க்கிறார்கள். சில இடங்களில் தரை தங்கச் செங்கல்களால் கட்டப்பட்டதாம். சில பகுதிகள் மட்டும் பார்த்தோம்.

மதிய உணவுக்குப்பின் (TORRIS) டோரிஸ் என்ற ஷாப்பிங் மால் சென்று சுமார் 4 மணி நேரம் 5 மாடிகளிலும் உள்ள கடைகளைப் பார்த்தோம். பலரும் பொருடகள் வாங்கினர்.

இரவு பூரி மசால், மெதுவடை, தயிர் சாதம் சாப்பிட்டு 8 மணிக்கு அறைக்குத் திரும்பினோம். ஓட்டலில் வை-பை வசதி இருந்தாலும் வாட்ஸ் அப் தடை செய்யப் பட்டுள்ளதால், படங்களை அனுப்ப இயலவில்லை. இரவு மழை பெய்தது.

மறுநாள் காலை (சுற்றுலாவின் இறுதிநாள்) தயாராகி, 7 மணிக்கு காலை உணவு முடித்தோம். தினமும் குளியல் அறையில் சீப்பு, ஷேவிங் செட், டூத்பேஸ்ட், பிரஷ், துணி காலணி வைக்கின்றனர்.

8.30 க்கு அறைகளைக் காலி செய்து பெட்டிகளை பஸ்ஸில் ஏற்றினோம். 9.30  க்கு புறப்பட்டு ஹைவே வழியே சென்று ஒரு ஜேடு பாக்டரியைப் பார்த்தோம். இந்த சுற்றுலா நிறுவனம் இதுபோல் சில தயாரிப்பு மற்றும் விற்பனை அங்காடிகளுக்கு அழைத்துச் சென்றது வித்தியாசமாயிருந்தது. நம்மூரைவிட இங்கு விலை அதிகம்.

பின் உலக அதிசயங்களுள் ஒன்றான நிலவிலிருந்து பார்த்தாலும் தெரியும் சீனப்பெரும் சுவரைக் காணச் சென்றோம்.

6280 கி.மீ நீளமுள்ளது இச்சுவர். மூன்று கணவாய்கள் உள்ளன. அவை ஜியாயு குவான் ஷாங்கை குவான் மற்றும் ஜீயோங் குவான். நாங்கள் சென்றது பீஜிங்கிலிருந்து சுமார் 130 கி.மீ தூரத்திலுள்ள ஜீயோங் குவான் கணவாய் பகுதி.

கி.மு 770 கட்ட ஆரம்பித்து கி.மு 440 முடிய பல அரசர்களால் கட்டப்பட்டது.

சுவற்றில் அகலம் 54 அடி முதல் 4 அடி வரை இடத்துக்கேற்றாற்போல் அமைந்துள்ளது. உயரமான படிகள். ஆங்காங்கே காவல் கோபுரங்கள், ஏப்ரல் மாதம் மலை முழுதும் மலர்களாகத் தெரியும் என்றனர். ஆனால் பசுமையான மலைப் பகுதியைத்தான் பார்த்தோம்.

ஆசைக்கு 100 படிகள் ஏறி, இறங்கி போட்டோ எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். எக்ஸ்பிரஸ் பாதையில் 4 வாகனப்பாதை உள்ளது. இரு புறமும் சர்வீஸ் பாதை உள்ளது. அதில் வரும் வாகனங்கள் எக்ஸ்பிரஸ் பாதையில் நுழைய தனி ஷெட் போட்டு வழி ஏற்படுத்தி உள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து போல, இப்பாதையில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் மால்போல் அமைத்து சிரமபரிகாரம் (REST ROOM) செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

பகல் 2.30க்கு உணவகம் சென்று சாதம், கேசரி, பகோடா என்று நம்மூர் உணவு சாப்பிட்டோம். புறப்பட்டு மூங்கில் மார்க்கெட் சென்று பார்த்தோம்.

மூங்கிலில் இருந்து நூல் (லினன்) தயாரித்தல், அதிலிருந்து துணி உற்பத்தி செய்தல் ஆகியவற்றை விரிவாய் கூறினர். ஏராளமான சுற்றுலா பஸ்கள் வந்து செல்கின்றன. கழிப்பிடப் பராமரிப்பு சரியில்லை. முகம் துடைக்கும் சிறு துண்டு ரூ.200-க்கு வாங்கினேன்.

பின் சம்மர் பேலஸ் பகுதிக்குச் சென்றோம். குன்மிங் என்ற பெரிய ஏரி. சுற்றிலும் பசுமையான மலைகள். மலையில் பெரிய வீடு தொலைவில் தெரிந்தது. ஏரிக்கரையிலிருந்து பார்த்தோம். இங்கு முந்தைய மன்னர்கள் வெயில் காலத்தில் ஓய்வு எடுத்தனராம்.

இந்தப் பகுதி முழுவதும் 2.9 சதுர கி.மீ இதில் ஏரி மட்டும் 2.2 சதுர கி.மீ அதாவது சுமார் 540 ஏக்கர் என்றனர். ஸ்டோன் போட் என்ற பெயரில் நீளமான படகில் பயணிகளை ஏற்றி ஏரியை வலம் வந்தனர். வெயில் காலத்தில் வெப்ப நிலை சுமார் 40 க்கு மேலிருக்குமாம்.

இந்தப் பகுதியில் தமிழ் முகங்களைப் பார்த்து, மகிழ்ந்து விசாரித்தோம். மதுரை, சென்னை அன்பர்கள் முருகன் டிராவல்ஸ் மூலம் வந்துள்ளதாயும், உணவு இந்திய உணவங்களில் ஏற்பாடு அதுவும் சுமார் தான் என்றனர்.

அதன் பின் உணவகம் சென்று நாண், குருமா, சேமியா, கிச்சடி, தயிர் சாதம் சாப்பிட்டோம். ஊர் திரும்பும் பயணத்துக்குத் தயாராகி 7.30க்கு புறப்பட்டு, இரவு 8.30க்கு பீஜிங் விமான நிலையம் சென்றோம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2018

சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!
விளையாட்டில் சாதிக்கும் பள்ளி
சாந்தியோடு பிரயாணம்
வாழ நினைத்தால் வாழலாம் – 23
தன்னம்பிக்கை மேடை
எப்போதோ போட்ட விதை!
தொலைக்காட்சி மற்றும் அதன் பாதிப்பு
நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?
உதவிக்கு கரம் நீட்டுங்கள்
மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி?
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3
தன்னம்பிக்கை விதைகள்
சிந்திக்க வைக்கும் சீனா – 5
நினைப்பதே நடக்கும் – 1
வெற்றி உங்கள் கையில் – 60
உள்ளத்தோடு உள்ளம்