Home » Articles » வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3

 
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3


ஞானசேகரன் தே
Author:

இந்த நூலின் ஆசிரியர் கில் எட்வர்ட்ஸ் (Gill Edwards) ஆவார். (தமிழில் PSV குமாரசாமி மொழிபெயர்த்துள்ளார். மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளல்யிட்டுள்ளது.) அன்பால் மட்டுமே இந்த உலகில் நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது. அன்பு இருக்கும் இடத்தில் பயம் இருப்பதில்லை. இந்நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களில் பல நம்மை நாமே அலசிப் பார்க்க உதவுபவை. இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து முடிக்கும்போது மகிழ்ச்சி, உள்ளார்ந்த அமைதி, மன நிறைவு ஆகியவற்றை உருவாக்குவதற்கான வழிமுறைகளை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அதோடு உங்கள் அனைத்துக் கனவுகளையும் நனவாக்குவதற்கான தெளிவையும் நீங்கள் பெற்றிருப்பீர்கள். இதிலுள்ள அத்தியாயங்கள் கீழ்க்கண்டவற்றை உங்களுக்கு தெரிவிக்கும்.

 • வாழ்க்கையை ஒரு வேலை என்றோ, ஒரு விபத்து என்றோ அல்லது ஓர் இலட்சியப் பயணம் என்றோ கருதாமல் அதை ஒரு பரிசாக எப்படிப் பார்ப்பது.
 • பயத்திற்குச் செவிசாய்ப்பதற்குப் பதிலாக அன்பின் உட்குரலை எப்படிக் கவனமாகக் கேட்பது.
 • உலகில் ஒரு நேர்மறையான தாக்கத்தை எப்படி ஏற்படுத்துவது.
 • உங்கள் எண்ணங்களை லேசர் ஓளிக்கற்றைகளைப் போல எப்படி ஒருமுகப்படுத்துவது.
 • வாழ்க்கையோடு மல்லுக்கு நிற்பது என்பது ஏன் நேர விரயம் என்பதைப் புரிந்துகொள்வது.
 • நாளைய தினத்தைப் பற்றிக் கனவு கண்டவாறே எப்படி இன்றைய தினத்தை நிறைவாக வாழ்வது.
 • வாழ்க்கை பற்றிய மூன்று நம்பிக்கைகள்: நம் புலனுக்கு அப்பாற்பட்ட பிரபஞ்சத்தின் ஓட்டத்தோடு நம்மை எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பதை இப்புத்தகம் நமக்குக் காட்டுகிறது. முதல் அத்தியாயம் ஆபிரகாம் லிங்கனின் “சுதந்திரம்தான் வாழ்வின் அடிப்படை, மகிழ்ச்சிதான் வாழ்வின் குறிக்கோள், வளர்ச்சிதான் வாழ்வின் விளைவு” என்ற மேற்கோளோடு தொடங்குகிறது. வாழ்க்கை பற்றிய மூன்று நம்பிக்கைகள் உள்ளன என்றும் அவற்றில் முதலாம் நம்பிக்கை – வாழ்க்கை ஒரு சோதனை என்று நம்புவது, இரண்டாம் நம்பிக்கை – வாழ்க்கை ஒரு விபத்து என்று நம்புவது, மூன்றாம் நம்பிக்கை – வாழ்க்கை ஒரு பரிசு என்று நம்புவது என்று சொல்லும் கில் எட்வர்ட்ஸ் மூன்றையும் வருமாறு சுருக்கமாக விளக்குவார்.
 • நல்லவர்களாக இருங்கள் (வாழ்க்கை ஒரு சோதனை)
 • பாதுகாப்பாக இருங்கள் (வாழ்க்கை ஒரு விபத்து)
 • மகிழ்ச்சியாக இருங்கள் (வாழ்க்கை ஒரு பரிசு)

இதில் வாழ்க்கையை ஒரு சோதனை என்று கருதுவது மன அமைதியையும், மகிழ்ச்சியையும் இல்லாமல் செய்துவிடுகிறது. அதேபோல வாழ்க்கை என்பது ஒரு விபத்து என்று பார்க்கும் பார்வையிலும் மகிழ்ச்சியோ, சந்தோஷமோ இருக்க வாய்ப்பில்லை. அதேநேரத்தில் வாழ்க்கையை ஒரு பரிசாக நீங்கள் பார்க்கும்போது நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். நீங்கள் இங்கு இருப்பது வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதற்குத்தான். அன்பு செலுத்துவதற்கும், சிரித்து மகிழ்வதற்கும், மற்றவர்களுடன் ஆழமாக இணைந்திருப்பதற்கும்தான் நீங்கள் இங்கு பிறந்திருக்கிறீர்கள். அன்பு நம்மை ஒன்றிணைக்கிறது, முழுமையாக்குகிறது. நாம் அன்பால் ஓர் அமைதியான, அன்பான உலகத்தை உருவாக்கலாம். மகிழ்ச்சி என்பது நமது இயல்புநிலை, அது நம்மோடு கூடவே பிறந்த ஒன்று. இந்தப் பிரபஞ்சம் நாம் கேட்கும் அனைத்தையும் பரிசாகக் கொடுக்கக் காத்திருக்கிறது. உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதையும் பிரபஞ்சம் அறியும் என்று நம்புங்கள். உங்கள் பரிசுகளை உங்களிடம் அனுப்ப ஓராயிரம் வழிகள் அதற்குத் தெரியும் என்றும் நம்புங்கள். நீங்கள் எப்போதும் ஆனந்த மழையில் நனைந்துகொண்டு இருக்க வேண்டும் என்று பிரபஞ்சம் விரும்புகிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் எவை என்பதை இந்நூல் முழுமையிலும் ஆசிரியர் தனது அனுபவத்திலிருந்து சொல்லிச் செல்கிறார். அவை.

 • அடுத்தவரிடம் சிறந்தவற்றையே எதிர்பாருங்கள், அவர்களும் அதையே வெளிப்படுத்துவர்.
 • பிறர் எவருடைய மகிழ்ச்சிக்கும் நீங்கள் பொறுப்பேற்காதீர்கள்.
 • எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
 • நீங்கள் எதையும் உருவாக்க வேண்டாம் உருவாவதற்கு அனுமதித்தால் போதும்.
 • தற்போதையச் சூழல் தற்காலிகமானதுதான், விரைவில் அது கடந்துவிடும்.
 • நெருக்கடி என்பது எப்போதுமே வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்புதான்.
 • புற உலகில் குறைகளைக் கண்டுபிடிப்பது உங்கள் அக அமைதியை அழித்துவிடும்.
 • உங்களது பிறவி நோக்கத்தைக் கண்டுபிடியுங்கள்.
 • நீங்கள் விரும்புபவற்றின் மீது கவனத்தைக் குவியுங்கள். உங்களை நன்றாக உணரச் செய்பவற்றின் மீது கவனம் செலுத்துங்கள்.
 • நீங்கள் மாறாதவரை எதுவும் மாறாது.
 • தங்களின் கனவுகளின் அழகில் நம்பிக்கை வைத்து இருப்பவர்களுக்கே வருங்காலம் சொந்தம்.
 • இருப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
 • உங்களுக்குப் பேரானந்தம் கொடுப்பதைப் பின்பற்றுங்கள்.
 • அனைவரையும், அனைத்தையும் பாராட்டுங்கள்.
 • வாழ்க்கையை ஒரு பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
 • உங்களுக்கு ஆதரவு நல்குபவர்களை மட்டுமே உங்களைச் சுற்றிலும் வைத்துக் கொள்ளுங்கள்.
 • நீங்கள் நினைத்த காரியம் நடக்கப் போகிறது என்பது போல நடந்து கொள்ளுங்கள்.
 • புதிய சிந்தனைகளைத் தேர்ந்தெடுங்கள்.
 • நன்றியுணர்வையும், பாராட்டையும் வெளிப்படுத்துங்கள்.
 • இங்கு சொல்லப்பட்ட அனைத்துமே நேர்மறையான மனோபாவத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்வது எப்படி? என்பதற்கான சிந்தனைகளாகவே அமைகின்றன.

இப்படியான மனநிலையை அடைவதென்பது சாதாரணமான காரியமல்ல. ஆனால் நாம் நினைத்தால் வாழ்க்கையை பயநிலையிலிருந்து அன்பு நிலைக்கு மாற்றிக் கொள்ளமுடியும். அன்புதான் மனித சமூகத்தின் இயல்பான குணம் என்பதை நாம் அறிய நேர்கையில் வாழ்க்கை மகிழ்வளிக்கிறது. அன்பிற்கு அடைக்கும் தாழ் கிடையாது, எப்போதும் அது நம்மை விடுவிக்கும். பிரபஞ்சக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்த நிபந்தனையற்ற அன்பைப் பொருத்தவரை, தவறான தேர்வு என்ற ஒன்றே கிடையாது. அன்பே வடிவான பிரபஞ்சத்தில் எதுவும் தவறாகப் போவதற்கு வாய்ப்பே இல்லை. வாழ்க்கையோடு தலைகால் புரியாமல் காதலில் விழுங்கள். ஒருவர் தன்மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைதான் வாழ்க்கை. அதனால் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். சிறகுகளை விரியுங்கள். வாழ்க்கை ஒரு பரிசு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். பிரபஞ்சப் பிரவாகத்தோடு இணைந்து கொள்ளுங்கள். சிறப்பான உணர்வுடன் எப்போதும் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று இந்நூல் முழுமையும் வாழ்க்கையை நேர்மறை மனோபாவத்தோடு எதிர்கொள்ளலே மகிழ்ச்சிக்கான வழி என்று பேசுகிறார் கில் எட்வர்ட்ஸ்.

பிரபஞ்ச இரகசியங்கள்

உங்களுக்கு ஏதாவது ஒரு கனவு இருந்தால், அதை நனவாக்க உங்களால் முடியும். நீங்கள் துவங்கப் போகும் இடம் எதுவாக இருந்தாலும், உங்களால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தைப் படைக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் கவனத்தைக் குவிப்பதும், பின் நீங்களே அதற்குத் தடையாக இல்லாமல் விலகிக் கொள்வதும்தான். நீங்கள் என்ன கேட்டாலும் உடனே சரியென்று சொல்லப் பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய பரிசுகளை உங்களுக்குக் கொடுக்க அது விரும்புகிறது. அதனால் உங்கள் பயணத்தின் ஒவ்வோர் அடியிலும் அது உங்களுக்கு வழிகாட்டுகிறது. இப்புத்தகத்தில் கில் எட்வர்ட்ஸ் உங்களுடைய கனவு வாழ்க்கைக்கான இந்த நான்கு பிரபஞ்ச இரகசியங்களை வெளல்ப்படுத்துகிறார்.

 • வாழ்க்கையை ஒரு பரிசாகப் பார்த்தல்
 • ஈர்ப்புவிதியைப் புரிந்து கொள்ளுதல்
 • பிரபஞ்சப் பிரவாகத்தில் உங்களை உணர்தல்
 • நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தப் பயிற்சி செய்தல்

இந்த இரகசியங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்களது ஒவ்வொரு கனவையும் நனவாக்கலாம். அது அதிக வெற்றி, அதிக செல்வம், நல்ல ஆரோக்கியம், அன்பான உறவுகள், கச்சிதமான வேலை, பிடித்த வீடு, ஆத்ம ஜோடி போன்றவற்றைப் பெறுவதாக இருக்கலாம். அல்லது இவ்வுலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த நீங்கள் விரும்பலாம். அல்லது அக அமைதியையும், ஆனந்தத்தையும் கண்டுபிடிக்க நீங்கள் விரும்பலாம். இந்த நூலை வாசிப்பதனால் நம்மிடையே குடிகொண்டிருக்கின்ற பயமிக்க வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கையாக மலரத் தொடங்குமென்று நான் உறுதியான சான்று தருகின்றேன்.

– வாசிப்பு தொடரும்…

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2018

சிற்பமே சிம்மாசனம்…! சிகரமே உன் அரியாசனம்…!
விளையாட்டில் சாதிக்கும் பள்ளி
சாந்தியோடு பிரயாணம்
வாழ நினைத்தால் வாழலாம் – 23
தன்னம்பிக்கை மேடை
எப்போதோ போட்ட விதை!
தொலைக்காட்சி மற்றும் அதன் பாதிப்பு
நீங்கள் உண்மைக்கு கீழ்படிபவரா?
உதவிக்கு கரம் நீட்டுங்கள்
மற்றவர்களை தன் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்றுவது எப்படி?
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 3
தன்னம்பிக்கை விதைகள்
சிந்திக்க வைக்கும் சீனா – 5
நினைப்பதே நடக்கும் – 1
வெற்றி உங்கள் கையில் – 60
உள்ளத்தோடு உள்ளம்