– 2018 – November | தன்னம்பிக்கை

Home » 2018 » November (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    அலங்கரித்துக் கொள்…

    சரித்திர நாயகனே

    அங்கே பார் உன் அரியாசனம்

    அலங்கரிக்கப்பட்ட சரியாசனம்…

    தொலைவில் இருக்கிறது என்று தொய்ந்து விடாதே…

    எட்டமுடியவில்லை என்று ஏமாந்து விடாதே…

    தானாக கிடைத்துவிடும் என்று தள்ளியும் நிற்காதே

    இது போட்டி நிறைந்த உலகம்…

    உன்னைப் போலவே இக்களத்தில் எத்தனையோ கால்கள்

    கண்ணில் இலட்சிய கனவுகளுடன்

    கனலாய் அனலாய் புறப்படத் தயராக இருக்கிறார்கள்

    நீயும் புறப்படு..இயல்பாக இல்லாமல் இடியாகப் புறப்படு

    இக்களம் எப்படியாகவும் இருக்கலாம்

    கத்தியடி படலாம்…கல்லடிப் படலாம்

    உணவின்றி தாகம் தணிய தண்ணீர் இன்றி

    அல்லல் படலாம் அவஸ்தைப் படலாம்…

    எதையும் வெல்ல முடியும் என்று

    வீரமுழக்கம் உங்களுக்குள் இட்டுக் கொள்ளுங்கள்…

    சாதிக்கப் புறப்பட்டுவிட்டு

    சகுணம் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்

    உன் எல்லை என்ன? உன் எதிர்பார்ப்பு என்ன?

    என்று தீர்மானித்து விட்டால்

    மழைக்கு காத்திருக்கும் விவசாயி போல

    இலை இழந்த மரம் பருவத்திற்கு காத்திருப்பது போல

    உன்னுள் ஓரு நம்பிக்கை அணையா விளக்காய்

    சுடரொளி விட்டு எரிந்து கொண்டிருக்க வேண்டும்….

    இந்த இதழை மேலும்

    துணிந்தவருக்கில்லை துயர்-நீங்கள் துணிச்சல் மிக்கவரா?

    துணிச்சல் என்பது எந்தச் சூழ்நிலையிலும் அச்சமோ, பயமோ இல்லாமல் மனிதன் தைரியமாக செயல்படுவதை குறிக்கிறது. உனக்கு துணிச்சல் இருந்தால் என்னோடு மோதிப்பார் என்பர். அவர் துணிச்சல் நிறைந்த புதுமைப்பெண் என்பர்.

    பொதுவாக, நேர்மையாக இருந்தால் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. நேர்மையானவர்களுக்கு துணிச்சல் சற்று அதிகம்தான். திமிரானவர்களிடம் சுயநலம் சற்று குறைவுதான். துணிச்சல் என்பது முன்னேறிப் போகும் பலமல்ல. பலம் இல்லாத போதும் முன்னேறும் மனஉறுதி. தவறானவர்களின் செயல்பாட்டை தட்டிக் கேட்பதற்கு தைரியம் துணிச்சல் தேவை. நாம் சரியானவர்களாக இருந்தால்தான் தவறானவர்களை தட்டிக் கேட்க முடியும். நேர்மையற்றவர்களால் துணிச்சலாக இருக்க முடிவதில்லை.

    பலம் வாய்ந்தவரை விமர்சிக்க துணிச்சல் தேவை. வலிமையானவர்கள் கொடுக்கும் சங்கடங்களைக் கண்டு அஞ்சாமல், நியாயம் என்று மனதில்படுவதை தயக்கம் இன்றி வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்க குணம் உடையவர்கள்தான்  தலைவர்களாகிறார்கள்.

    துணிச்சல் என்பது பயத்தை துறப்பது அல்ல. அது பயத்தைத் தாண்டிய பார்வை.

    நேர்மையான மனிதனின் ஆழமான புரிதல் துணிச்சலைத் தருகிறது. துணிச்சல்மிக்கவர்களை அடிமையாக்க முடியாது. ஆடும், சிங்கமும் கடவுளால் படைக்கப்பட்ட உயிர்கள்தான். ஆட்டை வெட்டி சாப்பிடுகிறார்கள். சிங்கத்தை வெட்டி சாப்பிடுவதில்லை. விரல் நகமாய் இருந்தால் வெட்டிவிடுவார்கள். விரலாய் இருந்தால்,  மோதிரம் அணிவிப்பார்கள். இதுதான் உலகம்.

    சார்பு காரணமாக மனைவி கணவனுக்கு பயந்து அடங்கிப் போகிறார். (சில குடும்பங்களில்). அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது துணிச்சல் மனிதனுக்கு தானாகவே வரும். துன்பத்திலும், சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல் இருக்க துணிச்சல் தேவை. இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் மனிதனுக்கு துணிச்சல் அதிகமாகிறது. இதுதான் சாதனையாளர்களின் பின்புலம். எல்லாவற்றையும் இழந்தபின் வரும் துணிச்சல் அதீத பலம் வாய்ந்தது.

    எதிர்பாராத இக்கட்டான சூழலில், செய்வதறியாமால் திகைக்காமல், திருடனை எதிர்த்து போராடுவது, நீரில் விழுந்து விட்டவர்களைக் காப்பாற்றுவது, தீயில் சிக்கிக் கொள்பவர்களை பத்திரமாக மீட்பது போன்றவை துணிவான செயல்களே.

    உண்மையைச் சொல்ல பயப்படத் தேவையில்லை. விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ, துணிச்சலோ, இல்லாதவர்கள் சரித்திரத்திலும் நினைவிலும் நிலைக்க வாய்ப்பில்லை. முற்போக்குவாதியாக இருப்பதற்கு ஏராளமான துணிச்சல் தேவை. நம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு நாம் யார் என்று காட்ட வேண்டிய நிலை வாழ்வில் வரத்தான் செய்கிறது. விண்வெளிப் பயணத்திற்கு ஆயத்தமாகிறவர்கள் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு விண்வெளிக்குப் பறக்கத் தயாராகிறார்கள். செவ்வாய்கிரகத்திற்குச் செல்வதற்கு துணிச்சல் வேண்டுமல்லவா?. மனிதனுக்கு சிக்கல் அதிகமாகும் போது எல்லோரும் அவமானப்படுத்துவார்கள். ஒரு கட்டத்தில் துணிச்சல் வந்து விடும்.

    துணிவு மிகுந்தவர்களால்தான் லஞ்சம் வாங்குபவர்களை வலை விரித்துப் பிடிக்க அரசுக்கு உதவ முடிகிறது. சிறையில் லஞ்சம் கொடுத்து  குற்றவாளிகள் சொகுசாக இருந்ததைக் கண்டு பிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த துணிச்சல் மிக்க பெண் உயர் அதிகாரிக்கு பாராட்டு குவிந்த செய்திகளை படித்து இருப்பீர்கள்.

    துணிவே துணையான காவலர்கள் ரவுடிகளை கூட்டமாக கைது செய்கிறார்கள். தனி ஆளாக வாழ்வில் சில சிக்கல்களை சந்திக்க துணிச்சல் வேண்டும். அநீதியை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெறுபவர்கள் உள்ளனர். கைப்பையை பறித்துச் சென்ற திருடனை பெண் ஒருவர் தனியாளாக துரத்திச் சென்று பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பத்திரிக்கை செய்தி வியப்பை அளித்தது.

    காண்டாலிஸா ரைஸ் அமெரிக்க நாட்டின் செயலராக இருந்த போது துணிச்சல்மிகு பெண்களை உலகறியச் செய்ய வேண்டும் என ஒரு விருதை ஏற்படுத்தினார். இவ்விருதுக்காக ஒவ்வொரு வருடமும் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு இன்னல்களுக்கும் இடையே பலருக்காகத் துணிச்சலாகப் பணிபுரியும் பெண்களை அமெரிக்க அரசு தெரிவு செய்கிறது.[hide]

    கோலாலம்பூரைச் சேர்ந்தவர் இந்திராகாந்தி. தனது பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்டதை எதிர்த்து துணிகரமாக, நீண்ட நாள் சட்டப்போராட்டம் நடத்தினார். பாலர்பள்ளி ஆசிரியையான இந்திரா காந்தி “அனைத்துலக துணிச்சல்மிகு பெண்” என்ற அமெரிக்காவின் விருதுக்கு தேர்வானார். அமெரிக்கத் தூதர் மாளிகையில் ஆசிரியை இந்திரா காந்திக்கு விருது அளித்து கௌரவித்தனர்.

    தனது மூன்று பிள்ளைகளும், தன்முன்பாக தனது முன்னால் கணவரால் மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து 8 ஆண்டுக்காலம் சட்டப் போராட்டம் நடத்திய இந்திரா காந்தி, கடந்த ஜனவரியில் நீதி மன்றத்தில் வெற்றி பெற்றார்.முஸ்லீம் அல்லாத பிள்ளைகள்இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்வதற்கு பெற்றோர்களின் இணக்கம் கண்டிப்பாக பெறப்பட வேண்டும் என்று இவருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை அண்ணா நகரில் பெண் டாக்டர் ஒருவரிடம் நோயாளி போல வந்த திருடன் அவரின் தங்கச் செயினை பறித்து விட்டுத் தப்பினான். டாக்டரின் அலறல் சத்தம் கேட்டு, திருடனை தனியொருவனாக விரட்டிச் சென்று, அண்ணா நகரைச் சேர்ந்த சிறுவன் சூர்யா மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தான். இந்த தகவலை அறிந்த போலீஸ் கமிஷனர் சூர்யாவை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது சூர்யாவிற்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண் டாக்டரும் சிறுவன் சூர்யாவை பாராட்டியதோடு வெகுமதியும் கொடுத்தார். நிரந்தர வேலை எதுவும் இல்லாமல் சிரமப்பட்ட சூர்யாவுக்கு சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஏ.சி மெக்கானிக் வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரோட்டரி கிளப் மற்றும் தனியார் கல்விக்குழுமம் சார்பில் சாசோலை வழங்கப்பட்டது.

    முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்திக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கை. ஆனாலும் துணிச்சல் இவரது பிறவிக்குணம். இதுதான் அரசியலில் அவர் அபரிதமான வெற்றியை பெற்றதற்க்கும் தோல்வியின் அதலபாதாளத்தில் இருந்து மீண்டதற்கும் காரணம். எமர்ஜென்சி என்ற பெயரில் அவர் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னமும் அடங்கவில்லை. அதன் எதிரொலியாக இனிமேல் மீளவே முடியாது என்று எதிரிகள் அடித்துச் சொன்ன போது “முடியும்” என்று சொல்லி  ஜெயித்துக் காட்டியவர் திருமதி இந்திரா காந்தி. நம்ப முடியாத வெற்றிகள். நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்கள். காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்தோடும் துணிவு மிகுந்த வாழ்க்கை அவருடையது.

    ஒரு சிப்பாயின் மகனான  சத்ரபதி சிவாஜி தனது சர்வ வல்லமையால் மகாராஷ்டிரத்தில் மாமன்னராக உருவெடுத்தார். வீரதீரத்தோடு மகாராஷ்டிரத்தையே ஒரு இந்து சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டினார். தன்னை எதிர்த்து வந்தவரையெல்லாம் புறமுதுகிட்டு ஓடச் செய்தார். தான் வாழ்ந்த காலத்தில் தன்னைவிட படையிலும் வீரத்திலும் பலம் மிகுந்த பேரரசர் ஔரங்கசீப்பையே எதிர்த்த துணிச்சல்காரர் மாமன்னர் சத்ரபதி சிவாஜி.

    மாணவர் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் அவர்களை  குடியரசுத்தலைவர் அளவுக்கு உயர்த்தியது அவரது துணிச்சல் குணம்தான். வழக்கறிஞர் வேலைக்குப் போகாவிட்டால் குடும்பத்துக்குச் சிரமம் என்று தெரிந்தும், தைரியமாக  சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நொடிக்கொரு போராட்டம். நிமிடத்திற்கு ஒரு ஆர்ப்பாட்டம். இளமை முழுக்க  கோஷமிட்டே கழிந்தது. பூகம்பம் என்றாலும் சரி. போராட்டம் என்றாலும் சரி. களத்திற்கு வா -என்றால்  அடுத்த கணம் களப்பணியில் இருப்பார். அந்தத் துணிச்சல் மிகுந்த ஆற்றல்தான் காந்திஜியை கவர்ந்தது. அதுதான் அவருடைய தளபதியாகவும் உருமாற்றியது. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். தேர்ந்த ஆளுமை, துணிச்சல், தன்னம்பிக்கை, முக்கியமாக நேர்மை இந்த குணங்களே திரு.ராஜேந்திர பிரசாத்தின் அடையாளங்கள்.

    பசிபிக் பெருங்கடலில் துணிச்சல் மிகுந்த ஆய்வுப்பணி மேற்கொண்டதால்தான்  கேப்டன் ஜேம்ஸ் குக் உலக வரலாற்றில் இடம் பிடித்தார்.

    தனியே உலகைச் சுற்றும் துணிச்சல்காரப் பெண்கள் உள்ளனர். மும்பை கல்லூரி ஒன்றில் கணினியில் முதுநிலை கற்கும் 22 வயது மாணவி பிரிசில்லா மதன் என்பவர் எந்த வழிமுறைக் குறிப்புகளும் இல்லாமலே, மும்பையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பன்வெலில்  என்ற இடத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணித்தார். தூரத்தைப் பற்றியும், சாலையின் சரிவுகளைப் பற்றியும், வழியில் தனக்கு உதவும் மனிதர்களைப் பற்றியும் மட்டுமே தான் நினைத்துக் கொண்டே இருந்ததாக சொல்கிறார். தனது 1800 கி.மீ பயணத்தின் போது இரவுகளில் ஹோட்டல்களில் தங்காமல், தான் முதன் முறையாக சந்தித்த மக்களின் வீடுகளில் தங்கியிருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தனிமையான பகுதிகளை கடக்க நேர்ந்த போதும் எந்த விதமான அச்சுறுத்தலுக்கும் ஆளானதில்லை என்கிறார்.

    எதையும் நேராக கேட்கும் துணிச்சல் பலருக்கு இருப்பதில்லை. கார் ஓட்ட முறையான பயிற்சி பெற வேண்டும். பயிற்சியின்றி கார் ஓட்ட இறங்கினால் அது துணிச்சல் இல்லை, அசட்டுத்தனம், முட்டாள்தனம், மூடத்தனம்.

    அசட்டுத்துணிச்சல் என்பது விஷயங்களைப் பற்றிய அறிவு இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல், திட்டமிடாமல்,  இறங்குவது. அது நமக்கு பல சமயங்களில் பண நஷ்டங்களையும் தோல்வியையும் ஏற்படுத்துவதோடு,  உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விட வாய்ப்புள்ளது. அசட்டுத் துணிச்சலை கைவிடுவோம். வன்முறைத் துணிச்சல் தவறானது. பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையால் பிடிப்பவர்கள் உள்ளனர். பாம்புகளை துணிச்சலாக கையில் பிடிப்பவர்களை பார்க்கிறோம்.

    தொடர்ச்சியான தோல்விகள், நிரந்தரமான நிராகரிப்புகள், நம்பிக்கையற்ற உறவுகளென எவர் சூழ்ந்து நின்றாலும், உனக்கான உன்னை மட்டும் நம்பிக் கொண்டேயிரு. வீரனுக்குத் தேவை நம்பிக்கையை விடவும் துணிச்சல்தான். ஒருவனின் உண்மையான நண்பன் துணிச்சல்தான். அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவர்களால் ஒரு குட்டையை கூட தாண்ட முடியாது. என்னால் சாதிக்க முடியும், என்னால் வேலை பெற முடியும் என்று சொல்லக்கூடிய துணிச்சல் வேண்டும்.

    தோல்வியின் அடையாளம் தயக்கம். வெற்றியின் அடையாளம் துணிச்சல். துணிந்தவர் தோற்றதில்லை. தயங்கியவர் வென்றதில்லை. தன் மீது குற்றம் சாட்டுபவர்களை துணிவிருந்தால் நேருக்குநேர் வாருங்கள் என சவால் விடுப்பவர்கள் நேர்மையானவர்கள்.

    மாற்றங்களைக் கொண்டு வர துணிச்சல் தேவை. வாழ்நாள் முழுவதும் ஆடாக இருப்பதைக் காட்டிலும், வாழ்வு ஒரு நாளே என்றாலும் சிங்கமாக இருப்பதே மேலானது.

    நம் கனவுகளை நனவாக்கும் மந்திரம்தான் துணிச்சல். பல நேரங்களில் கொத்தில் உள்ள பல சாவிகளில் கடைசி சாவிதான் எப்போதுமே பூட்டைத் திறக்கிறது. கூட்டத்தில் ஒருவராக நிற்பது எளிது. தனியாக நிற்பதற்குத்தான் துணிச்சல் தேவை. சிங்கங்களின் கூட்டத்திற்கு  ஆடு ஒரு போதும் தலைமை தாங்க முடியாது.

    ஒருவரின் துணிச்சலின் அளவைப் பொறுத்துத்தான் அவரது வாழ்வு விரிவடைவதும், சுருங்குவதும் அடங்கியுள்ளது. கடற்கரைக் காட்சிகளை இழக்கத் துணிவிருந்தால்தான் சமுத்திரத்தைக் கடக்க முடியும். துணிவே துணை. துணிவை இழந்து விடாதீர்கள்.[/hide]

    இந்த இதழை மேலும்

    பயணங்கள் வெறுப்பதில்லை

    நாம் ஊர்ப் பயணம் மேற்கொள்ளும் போது அனேகமாக நாம் இரண்டு விஷயங்களுக்குத்தான் சங்கடப்படுகிறோம். ஒன்று, பயணத்தின் போது செலவாகும் பணத்திற்கு. மற்றொன்று பயணத்தால் கெடுத்துக்கொண்ட உடல் ஆரோக்கியம். இந்த இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே. பயணங்களில் ஆரோக்கியமாக இருக்கத் தெரிந்துகொண்டால் நாம் அதற்காக அதிகப்படியான செலவைச் செய்ய வேண்டியதில்லை. அதேபோல், பயணங்களில் அனாவசியமாக மனதையும் உடலையும் கெடுக்கும் செலவுகளைச் செய்யாதிருந்தால் நம் ஆரோக்கியம் நிலைக்கும். ஆனந்தமான பயணத்திற்கு அடித்தளமாக விளங்கும் ஆரோக்கியத்தை எப்படி பயணத்தின்போது பார்த்துக்கொள்வது என்று தெரிந்து கொண்டால் பயணங்கள் வெறுப்பதில்லை. ஆகவே அது பற்றி விரிவாக இப்புத்தகத்தில் பார்ப்போம்.

    நாம் மேற்கொள்ளும் பயணங்கள் சுமையாக அல்லாமல், சுகமாக அமைய நாம் எவற்றிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்றும் தெரிந்துகொள்வது நல்லது. ஆக, அதற்கு பயண கால சங்கடங்களை நாம் இனங்காண வேண்டும். அவை முறையே

    1. பயணக் களைப்பு: பயணத்தின் போது ஏற்படும் களைப்பால் பயணங்களை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போகிறது. பயணம் முடித்த பின்பும் ஏற்படும் களைப்பால் நம் வேலை நேரம் கெடுகிறது.
    2. உணவுப் பிரச்சனைகள்: நம் வீட்டுச் சாப்பாடு போல் பயணச் சாப்பாடு இருக்காதுதான். ஆனால், அதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுவது நல்லதல்லதானே?
    3. தண்ணீர் ஒவ்வாமை: புதிய இடத்து தண்ணீர் ஏற்படுத்தும் உடல் ஒவ்வாமை பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி? குடிப்பதற்கு மினரல் வாட்டர் பயன்படுத்தலாம், ஆனால், குளிப்பதற்கு?
    4. கிருமித் தொற்று பயம்: நீண்ட தூரப் பயணங்களில் நாம் கண்டிப்பாக வழியில் உடற்கழிவை வெளியேற்றியாக வேண்டும். அசுத்தமான சூழலின் கிருமித்தொற்று அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
    5. பயணகால உடைத் தெரிவு: பயணகாலத்தில் எவ்விதமான உடைகளைத் தெரிவு செய்வது?
    6. மலச்சிக்கல் பிரச்சனைகள்: பயணத்தில் ஏற்படும் காய்ச்ச லான மற்றும் வெப்பமான தன்மையால் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைகளை தவிர்ப்பது எப்படி?
    7. தூக்கமின்மை: புதிய இடத்தில் புதிய சூழலில் நாம் எப்படி நிம்மதியாகத் தூங்குவது?
    8. அவசரநிலைச் சமாளிப்பு: எதிர்பாராத அவசரச் சூழலில் நம் ஆரோக்கியத்தை காப்பது எப்படி?
    9. சத்து பற்றாக்குறைகள்: ஹோட்டல் சாப்பாட்டின் சத்து பற்றாக்குறைகளை ஈடு செய்வது எப்படி?
    10. சக்தி பற்றாக்குறைகள்: பயண கால உடல் செயலாக்கத்தால் ஏற்படும் சக்தி பற்றாக்குறைகளை எப்படி ஈடு செய்வது?[hide]

    அன்புத் தோழ தோழியர்களே! மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயண கால பிரச்சனைகளுக்கு சாத்தியமாகக்கூடிய தீர்வுகள் உங்களுக்கு கிடைத்தால் மிகவும் சந்தோஷம்தானே? அது பற்றிய விரிவான புரிதலும், வழிகாட்டுதலும் அளிக்கவே யான் இப்புத்தகத்தை எழுதுகிறேன். அன்புத் தோழ தோழியர்களே நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும்  வழிகாட்டுதல் எல்லாம்  என் பயணங்களில் நான்  அனுபவபூர்வமாக  கைக்கொண்டு பலன்  கண்டவைதான். ஆகவே, அவை எல்லாம் உங்கள் பயணங்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் என்று நான் உத்தரவாதம் தருகிறேன். உங்கள் பயணங்களில் பயன்படுத்தி அற்புதமான ஆரோக்கியமான பயணத்தை அனுபவியுங்கள். அன்பு நண்பர்களே! அதற்கான இரகசியங்களை அறிய என்னோடு இந்தப் புத்தகங்களின் பக்கங்களில் பயணிக்க வாருங்கள். பிரிதொரு தருணத்தில் நம் இருவரின் பயணப் பாதைகள் குறுக்கிடும்போது நேரில் சந்திப்போம். தங்கள் வாழ்க்கைப் பயணம் சிறக்க எல்லாம் வல்ல இறையாற்றல்  துணையாக இருக்கட்டும்.

    நம் பயணங்கள் ஆனந்தமாக இருக்கவேபுறப்படுகிறோம். ஆனால், நம் பயணப் பிரச்சனைகள் தீராமையால் அல்லல்படுகிறோம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    சிந்திக்க வைக்கும் சீனா- 4

    ஷியான் பழமையான நகரம். முந்தைய சீனாவின்  தலைநகரம். இந்நகரில் ஷியான் கோட்டை நகரச் சுவர் உள்ளது. ஒரு கோடி மக்கள் இந்நகரில் வசிக்கின்றனர்.

    இருசக்கர வாகனங்கள் செல்ல தனிப்பாதை உள்ளது. ஆனால் குறைவான 2 சக்கர வாகனங்களே உள்ளன. இந்நகரின் சுற்றுச்சுவர் செவ்வக வடிவில் உள்ளது. 13 கி.மீ நீளமுள்ளது. இந்நகரில் சுமார் 30 இலட்சம் கார்கள் உள்ளனவாம். 14 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுவர் இது.

    ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து, பஸ் இருக்கும் பகுதிக்குச் சென்றோம். வெயிலால் பலர் குடை பிடித்துச் சென்றனர். பெட்டிகளை வேனில் ஏற்றிக் கொண்டு ஓட்டலுக்குச் சென்றனர். எங்கள் பசிக்கு சப்வே வெஜ் சாண்ட்விச், நீர், டப்பா கோக்பானம் கொடுத்தனர்.

    சுவைத்துச் சாப்பிட்டோம். பஸ் நேரே ஷியான் சுவர் சென்றது. நுழைவு டிக்கெட் எடுத்துக் கொடுத்து மேலே அனுப்பினர்.

    இந்தச் சுவற்றில் 120 மீட்டர் நீளத்துக்கு ஒரு காவல் கோபுரம் கட்டியுள்ளனர். வேகமாக இழுத்து விடும் அம்பு சுமார் 60 மீட்டர் தூரம் போகுமாம். அதனால் இந்த தூரம் என்றனர்.

    கிழக்கு வாயில் வழியாக 70 படிகள் ஏறி கோட்டைக்குச் சென்றோம். ஒரு மணி நேரம்  சுற்றிப் பார்த்தோம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஜி ஜின் பிங் தான் சீனாவின் ஜனாதிபதியாம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மக்கள் BMW ஐ பயன்படுத்துங்கள் என்று சொன்னாராம்.

    பொதுவாக BMW என்பது ஒரு வகையான கார். ஆனால் அவர் சொன்னது B- BUS; M- METRO (RAIL) W- WALK அரசு வாகனங்களான பஸ், ரயில் மற்றும் நடந்து சென்றால் சுற்றுச்சூழல் மாசடையாது. பொருளும் சேமிக்கலாம்; உடலும் நலமாக இருக்கும்.

    பகல் 12.15 க்கு பஸ் ஏறி ரெட் போர்ட் என்ற இந்திய  உணவகம் சென்றோம். நம் சமையல் கலைஞர்கள் மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, அப்பளம், பொரியல் வழங்கினர். சுவைத்து சாப்பிட்டு டைடான் ஜின் செங் ஆர்ட் ஓட்டல்  சென்று அறைகளில் தங்கினோம்.[hide]

    குளித்து, சிறிது நேரம் ஓய்வுக்குப்பின் மாலை 4 மணிக்கு பஸ் ஏறி 30 நிமிட பயணத்தில் முஸ்ஸிம் தெரு சென்றோம். தெருவின் இருபுறமும் சைவ, அசைவ உணவகங்கள், பொருட்கள் விற்பனைக் கடைகள், பார்வையாளர்களை ஈர்க்க வித்தியாசமான உடையணிந்து சுத்தியலால் இரும்பை அடித்தனர்.

    200 மீட்டர் நீளமுள்ள தெருவில் கூட்டமோ கூட்டம், இந்த இடம் உணவுப் பிரியர்களின் சொர்க்கம் என்றனர்.

    அரபு, பெர்சிய நாட்டு வணிகர்களான முஸ்ஸீம்கள் வணிகம் செய்ய இங்கு வந்து, தங்கி இங்கு வசித்த பெண்களை மணந்து கொண்டு வசிப்பதாய் கூறினர். பெரும்பாலான கார்கள் பேட்டரியில் ஓடுவதால், சாலைகளில் புகை இல்லை.

    எங்களுடன் வந்தவர்களுள் ஒருவர் மட்டும் வரவில்லை. சுமார் 1 மணி நேரம் காத்திருந்தோம். 2 பேர் இறங்கி அவரை அழைத்து வருவதாய் கூற, மற்றவர்கள் பஸ் ஏறி ரெட் போர்ட் உணவகத்தில் நம் சமையல் சப்பாத்தி, மசால் பக்கோடா, பாயாசம், தயிர்சாதம் சாப்பிட்டு அறைக்குத் திரும்பினோம்.

    அசதியில் நேரத்தில் தூங்கினேன். என்னுடன் அறையில் நெல்லை வேலாயுதம் என்பவர் தங்கினார். பிஎஸ்என்எல் அலுவலராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டாராம்.

    பேசுவதில் அளவு கடந்த ஆர்வம். குழுவாக வந்த 10 பேர் நேரம் காலம்  தெரியாமல் பானம் அருத்தி சூழ்நிலையைக் கெடுத்தனர். அதற்காகவே சுற்றுலா வந்தவர்களாம். காணாமல் போனவரையும் அழைத்து வந்துவிட்டனர்.

    மறுநாள் காலை தயராகி, காலை உணவாக கஞ்சி, பழம், காய், கேக், ஜூஸ் சாப்பிட்டேன். 8.15 க்கு ஏறி புறப்பட்டோம். கைடு ஜெஸிகா உயரம் குறைந்த மாது. 10 வயதில் மகன் இருப்பதாயும், பெற்றோருடன் ஓரே வீட்டில் வசிப்பதாயும் சொன்னார்.

    மண்ணிலிருந்து( சிற்பங்கள்) பொம் மைகள் செய்யும் பேக்டரி சென்று பார்த்தோம் 10.45 க்கு டெர கோட்டா சிப்பாய் மியூசியம் சென்றோம். வழியில் கோதுமை வயல்கள் உள்ளன.

    முகப்பில் இறங்கி 15 நிமிட நடையில் கல்லறைக் கட்டடம் ( தாஜ் மஹால் போன்றது) சென்றோம். சிலர் கட்டணம் செலுத்தி பேட்டரி வாகனத்தில் வந்தனர். இக்கட்டடங்கள் பூமிக்கு கிழே உள்ளன.

    5 இடங்களில் பூமிக்கு கிழே தோண்டி எடுத்த சிப்பாய்  சிற்பங்களை காட்சிப் பொருளாக அடுக்கி வைத்துள்ளனர்.

    கி. மு. 3 ம் நூற்றாண்டில் அரசாண்ட சக்கரவர்த்தி ஹூவாங் என்பவர் தன் இறப்புக்குப் பின் பாதுகாப்புக்காக இதை 7.20 இலட்சம் பணியாட்களை வைத்து 40 ஆண்டுகள் கட்டினராம். அவர் கி. மு 210 ல் இறந்து விட்டாராம்.

    தனக்குச் சொந்தமான அந்த இடத்தில் 1974 ம் ஆண்டு ஒரு விவசாயி கிணறு தோண்டும் போது, இச்சிற்பங்களைக் கண்டுபிடித்தாராம்.

    அரசுக்குத் தெரிவித்த பின், அரசாங்கம் தம் பொறுப்பில் எடுத்துக் கொண்டு 1979 முதல் பொது மக்கள் பார்வைக்கு விடுகிறதாம்.

    இதைக் கண்டு பிடித்த விவசாயியை கவுரவிக்க அவருக்கு ஓர் அறை வழங்கியுள்ளது. அவர் எழுதிய புத்தகங்கள் வாங்குவோர் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாம்.

    பூமிக்குள் 3.30 மீட்டர் உயர சுவர் எழுப்பி அதற்குள் சீனாவின் முதல் சக்கரவர்த்தி தன் மரணத்துக்குப்பின் தனக்குப் பாதுகாவலாக சிப்பாய்கள்,  குதிரைகள், ரதங்களை எனச் செய்ய வைத்தார்.

    இதுவரை 3 குழிகளுள் சுமார் 8000 வீரர்கள், 130ரதங்கள், 520 குதிரைகள் ஆகிய  உருவங்கள் சக்கரவர்த்தியின் சவக்குழிக்கு அருகில் கண்டுபிடித்துள்ளனர். களிமண் போன்ற பிரவுன்- ஆரஞ்ச் கலர் மண்ணில் இச்சிற்பங்களை உருவாக்கினர்.

    ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணியர் பார்ப்பதாய் கூறினார். இதை 8 வது உலக .அதிசியம் என்றும் கூறுகின்றனர்.

    பின் பஸ் ஏறி 2.15 மணிக்கு ரெட்போர்ட் உணவகம் சென்று மதியம் வழக்கம் போல் சாப்பாடு, வடை, பாயாசத்துடன் சாப்பிட்டு மழைத்துறலின் ஊடே வைல்டு கூஸ் பகோடா என்ற புத்த மத நினைவுக் கட்டடம் பார்த்தோம்.

    கி.பி. 652 ல் கட்டப்பட்டு பின் 704 ல் சரி செய்யப்பட்டு 54 மீட்டர் உயரத்திலிருந்த இக்கட்டடம் நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டது. இப்போது 210 அடி உயரத்துடன் உள்ளது. பல புத்தர் சிலைகளைப் பார்த்தோம்.

    மக்கள் வழிபாடு, தியானம், செய்தனர். பின் பஸ் ஏறி ஷான்ஸி, சன்சைன்லிடோ கிராண்ட் தியேட்டர் சென்றோம்.

    மாலை 6.20 மணி முதல் 7.30 வரை டேங்க் டைனஸ்டி கலாச்சாரப் பிரதிபலிப்பு இசை நாட்டியம் பார்த்தோம். மிக விரைவாக காட்சிகள் கையாளப் பட்டன. மொத்தம் 11 விதமான நடனம். ராயல் டான்ஸ், ஸ்பிரிங் நிலா, ஷாப்ட் டான்ஸ், கார்டன், புத்திசம், நீள ஸ்லீவ் டான்ஸ், இறகு நடனம், ஆட்டம், அரசர் பெருமை போன்றவை.

    மிக அற்புதமாயிருந்தது. ஒவ்வொரு நிகழ்வுக்கு முன்னும் சிறு அறிவிப்பு. மிகக்குறுகிய நேரத்தில் காட்சி அமைப்பு (சீன் செட்டிங்) மாற்றப்பட்டு, கலைஞர்களும் மிகச் சிறப்பாக  ஆடினர். கட்டாயம் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி.

    இரவு ரெட்போர்ட் உணவகம் சென்று இட்லி, சட்னி, தயிர்சாதம் சாப்பிட்டு அறைக்குத் திரும்பி உறங்கினோம்.

    உடன் வந்து அன்பர் ஒருவருக்கு பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி  கொண்டாடினர்.

    தொடரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…

    திரு. S.M. உதயகுமார்

    இயக்குநர், SPIRO ACADEMY பயிற்சி நிறுவனம்

    சென்னை மற்றும் நாமக்கல்

    சென்றதினி மீளாது மூடரே நீர்

    எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

    கொன்றழிக்கும் கவலையென்னும் குழியில் வீழ்ந்து

    குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

    இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர்

    எண்ணமதை திண்ணமுற இசைத்துக் கொண்டு

    தின்று விளையாடியின் புற்றிருந்து வாழ்வீர்

    தீமையெல்லாம் அழிந்து போகும், திரும்பி வாரா…

    இவ்வரிகள் மகாகவி பாரதியின் தன்னம்பிக்கை உணர்த்தும் தத்துவ வரிகளாகும். இவ்வரியை தனது வாழ்க்கை நெறியாக கடைபிடித்து வாழ்ந்து வரும் தன்னம்பிக்கையாளர்.

    வெற்றி என்பது அரிதல்ல… எளிது… ஆனால் அதற்கு நம்பிக்கை என்னும்  போராட்ட குணமும், முயற்சி என்னும் தன்னம்பிக்கை குணமும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்ற தத்துவத்தை தனது மாணவர்களுக்குப் போதித்து வரும் நல்லாசான்.

    கனவு காணுங்கள் என்று சொன்னார் கலாம் அவர்கள்.. அந்தக் கனவை நனவாக்க என்னிடம் வாருங்கள், உங்களின் வாழ்க்கையை வசந்தமாக்கிக் காட்டுகிறேன் என்று நாளும் நம்பிக்கை விதையை மாணவர்கள் மனதில் விதைத்து வரும் SPIRO ACADEMY பயிற்சி நிறுவனத்தின் இயங்குநர் திரு. S.M. உதயகுமார் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…

    கே : உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

    நாமக்கல் மாவட்டத்திலிருந்து பத்து கல் தொலைவிற்கு அப்பால் உள்ள புதன் சந்தைக்கு அருகில் S. உடுப்பம் என்னும் சிறிய கிராமத்தில் தான் பிறந்தேன். இவ்வூருக்கு அருகிலுள்ள அரசுப் பள்ளியில்  தான் என்னுடைய தொடக்கக்கல்வி முதல் உயர்நிலை கல்வி வரைப் படித்தேன். நன்றாகப் படித்ததால் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சிப் பெற்றேன். இதனால் சென்னையிலுள்ள எஸ்.ஆர்.எம் பொறியியில் கல்லூரியில் பி. இ. கம்யூட்டர் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.

    கே: படித்து முடித்தவுடன் உங்களின் முதல் வேலை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

    எனது பெற்றோர் விவசாயம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு என்னையும் படிக்க வைத்தார்கள். கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் இனியும் பெற்றோர்களிடம் பணம் வாங்கி படிக்க எனக்கு விருப்பம் இல்லை. எனவே 2005 ஆம் ஆண்டு கல்லூரியை முடித்தவுடன் ஓரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணியாளராக வேலையில் சேர்ந்தேன். நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் என்னுள் எடுத்துக் கொண்ட தீர்மானம்  என்னவென்றால் நாம் செய்யும் எந்தப் பணியும் இழிவானது அல்ல, செய்யும் எல்லா வேலையும் தெய்வமாக நினைத்துப் போற்ற வேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் எனக்குள் சின்ன வயதிலிருந்தே சம்பளம் வாங்கும் இடத்தில் இருப்பதை விட கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அந்த வகையில் அந்த தனியார் நிறுவனத்தில் ஒரு நாற்பத்தி ஐந்து நாட்கள் வேலையில் இருந்தவிட்டு பிறகு சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்க முனைந்தேன்.

    கே: நீங்கள் படித்தது பொறியியல் ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்ததோ பயிற்சி நிறுவனம் அதைப் பற்றிச் சொல்லுங்கள்?

    நான் படிக்கின்ற காலத்தில் இது போன்ற பயிற்சி நிறுவனங்களோ, ஆலோசனை மையங்களோ இல்லை. இதனால் நான் படிக்கின்ற காலத்தில் என்னைப் போல எத்தனையோ மாணவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. நினைத்த வேலை ஓன்று செய்யும் வேலை வேறாக இருந்தது. இது தான் என்னை ஒரு பயிற்சி நிறுவனம் தொடங்கும் நிலைக்கு உந்தியது.

    ஆரம்பத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பிராஜெக்ட் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினேன். எதிர்பார்த்து காத்திருந்த எத்தனையோ மாணவர்கள் தொடங்கிய ஆண்டே எங்கள் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார்கள். நான் எப்போதும் தொடங்குவதற்கு முன் பலமுறை யோசித்துவிடுவேன். தொடங்கிவிட்டால் என்னுடைய யோசனை எல்லாம் அதன் வளர்ச்சி சார்ந்ததாக மட்டும் தான் இருக்கும்.

    முதலில் சென்னையிலுள்ள அமிஞ்சகரையில் தான் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினோம். அதன்பிறகு ஆண்டிற்கு ஒரு இடத்தில் என்று நிறுவனத்தின் வளர்ச்சி பெருகி கொண்டே போனது. அதன்பிறகு SPIRO ACADEMY நிறுவனம் என்னும் பெயரில் தொடங்கி மாணவர்களுக்கு JEE, NEET, IIT போன்ற போட்டித் தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தோம். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பலவகையில் பயன் பெற்றனர். எங்கள் நிறுவனம் தொடங்கியதன் முதன்மை நோக்கமே JEE, NEET போன்ற போட்டித் தேர்வுகளை மற்ற மாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் தான் அதிக அளவில் தேர்வு பெற்று வந்தார்கள், அவர்களை போல தமிழ்நாட்டிலும் அதிக மாணவர்கள் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற ஒரே உயரிய நோக்கம் தான்.

    கே: SPIRO ACADEMY  பெயர் காரணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

    இதற்கு மூன்று பொருள் இருக்கின்றன. ஒன்று சூரியன் உதயமாதல், சுவாசம், இரண்டு அணுக்கதிர்கள் போதும் ஒன்றை ஒன்று மோதும் பொழுது உருவாகும் ஒரு சக்தி தான் SPIRO என்பது.

    படிக்கும் மாணவனுக்கு தன்னிடம் இருக்கும் உந்து சக்தியை மேம்படுத்தி அவன் சந்திக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று ஊக்கப்படுத்துவதால் தான் இப்பெயர் வைக்கப்பட்டது.

    இந்தியாவில் சென்ற ஆண்டு மட்டும் நீட் தேர்விற்கு 1,175,000 பேர் எழுதினார்கள். இந்தியா முழுவதும் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இதை இரண்டிலும் சேர்ந்து 65,000 சீட் தான் இருக்கிறது. அத்துனை பேர் எழுதும் தேர்வுக்கு வெறும் இவ்வளவு சீட் தான் இருக்கிறது. அதே போல் தமிழ்நாட்டில் 1 இலட்சம் பேர் எழுதினார்கள் ஆனால் இங்கு சீட் என்று பார்த்தால் வெறும் 2 ஆயிரம் தான். இதைப் பார்க்கும் போது மாணவர்கள் மனதில் ஒருவித பயத்தைக் கொடுத்து விடும்.

    இதனால் ஒரு தேர்வு சார்ந்த பயத்தை மாணவர்களிடம் நீக்குதல் வேண்டும். அதே சமயத்தில் தேர்வு சார்ந்த ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். அவனுக்கே தெரியாமல் மனதளவில் அவனை தயார் படுத்தி அவன் மனதில் இருக்கின்ற சக்தியை வெளிகொணர்வது இந்நிறுவனத்தின் நோக்கம். இதன் அடிப்படையில் தான் இந்நிறுவனத்திற்குப் இந்தப் பெயரை வைத்தோம்.

    கே: மாணவர்களின் சேர்க்கையையும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும் எப்படி பூர்த்தி செய்தீர்கள்?

    இது ஒரு போட்டி நிறைந்த உலகம். எல்லோரும் ஒரு எல்லையை அடைய ஓடியும் தேடியும் கொண்டியிருக்கிறார்கள். இங்கு எத்தனையோ விதமான போட்டித் தேர்வுகள் இருக்கிறது. நமக்கு மாணவர்களின் எண்ணிக்கை ஒன்றும் பெரிதல்ல, தன்னிடம் வரும் ஒவ்வொரு மாணவர்களையும் எப்படியும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நினைத்து அவர்களை தயார்படுத்தி சாதிக்க வைத்திடுவோம்.

    இச்சாதனையை படிப்பவர்களும் பார்ப்பவர்களும்  எங்கள் நிறுவனத்தை நாடி வருகிறார்கள். நீட் தேர்வு வருவதற்கு முன்பே எங்களிடம்  200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு இடங்களில் மருத்துவம் படித்து வருகிறார்கள்.

    இந்தியாவில் இருக்கின்ற எல்லா மருத்துவக் கல்லூரியும் நீட் க்கு கீழே வந்து விடும். ஏஎம்எஸ் மருத்துவக்கல்லூரி ஜீப்மர்ஸ் இரண்டு மருத்துவக் கல்லூரியும் இந்தியாவின் அதி முக்கிய  மருத்துவக் கல்வி நிறுவனம் என்பதால் இந்த இரண்டிற்கும் சில விலக்குகள் இருக்கிறது. ஏம்எம்எஸ் தன்னாட்சி பெற்ற நிறுவனம். இந்த இரண்டு கல்வி நிலையங்களிலும் 200 சீட் இருக்கிறது. இதில் எங்கள் SPIRO ACADEMY லிருந்து 40 மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். ஜீப்மர்ஸ்ல்  30 மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். இந்த இடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அதில் குறிப்பிட்ட பேர் எங்கள் நிறுவனத்திலிருந்து தேர்ச்சி பெற்று செல்வதால் இதைப்பார்க்கும் மாணவர்களும் பெற்றோர்களும் எங்களை நாடி வருகிறார்கள்.

    2005 ஆம் ஆண்டிற்கு முன்னர் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நுழைவுத் தேர்வு இருந்தது. ஆனால் அதன் பிறகு அரசு இத்தேர்வை நீக்கிவிட்டது. ஆனாலும் எங்கள் நிறுவனம் ஆகில இந்திய நுழைவுத் தேர்வான ஏஎம்எஸ், ஜீப்மர்ஸ், ஜெஇஇ போன்ற தேர்வுகளில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வந்தோம். தற்போது நீட் தேர்வு வந்தவுடன் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இத்தேர்வு குறித்தான விழிப்புணர்வு அதிகம் வர ஆரம்பித்துவிட்டது. இதனால் எங்கள் நிறுவனத்தை நாடி வருகிறார்கள்.

    இங்கு அறிவு குறைந்த மாணவர்கள் என்று யாரும் இல்லை. மாணவர்களில் இரண்டு படிநிலைகளில் இருக்கிறார்கள். ஒன்று சட்டென்று புரிந்து கொள்பவர்கள் மற்றொருவர் சற்று தாமதமாகப் புரிந்து கொள்வர்கள். இவர்களை சரியாக கையாண்டால் வெற்றி பெற்றுவிடுவார்கள்.

    கே: கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக்கு நீங்கள் அளிக்கப்படும் பயிற்சிப் பற்றிச் சொல்லுங்கள்?

    நகர்ப்புற மாணவர்களைவிட, கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். காரணம் அவர்களில் ஒரு சிலர் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களாக இருப்பார்கள். இதை அவர்கள் பெரிய குறைகளாகக் கருதுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை கிராமப்புற மாணவர்களே சிறந்தவர்கள் என்று சொல்வேன். காரணம் அவர்களுக்குள் அதிகபடியான கனவுகள் இருக்கும். உழைக்கும் மனப்பான்மை அதிகம் இருக்கும்.

    ஆரம்பத்தில் சற்று தயக்கம் இருந்தாலும், கற்றுக் கொண்ட பின்னர் அவர்களின் கற்றல் போக்கு மிகவும் தெளிவாக இருக்கும். நகர்ப்புறத்தில் படிக்கும் மாணவர்களை சிறுவயதிலிருந்தே பெற்றோர்களும் சரி, கல்வி நிறுவனங்களும் சரி அவர்களை நன்றாகத் தயார் படுத்தி விடுகிறது. இதனால் அவர்கள் எதையும் எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.

    சென்ற ஆண்டுகள் 465 பேர் மெடிக்கல் கல்லூரிக்குத் தேர்வாகி சென்றார்கள். அதில் 40 பேர் கிராமப்பின்னணியில் தமிழ்வழிக் கல்விப் படித்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகக் கருதுகிறேன்.

    கே: உங்கள் நிறுவனத்தின் தனித்தன்மைகள் பற்றிச் சொல்லுங்கள்?

    மனிதனின் வளர்ச்சி படிநிலைகளில் எல்லா காலத்திலும் ஒவ்வொரு தேர்வை எதிர் கொண்டு தான் இருக்க வேண்டும். அதிலும் போட்டித் தேர்வு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வளர்ச்சியைக் கொடுக்கும் தேர்வாகும். இவ்வாறு இருக்கும் போட்டித் தேர்வில் இத்தனை வினாவிற்கு இவ்வளவு மதிப்பெண் என்று முடிவு செய்து விடுவார்கள். உதாரணமாக நீட் தேர்வில்  மொத்தம்180 வினாக்கள், 180 நிமிடங்கள் ஒரு வினாவிற்கு ஒரு நிமிடம் தான். இரண்டு ஆண்டுகள் அவர்கள் தினமும் இரவு பகல்  பார்க்காமல் படித்ததை இந்த மூன்று மணிநேரம் தான் தீர்மானிக்கிறது. ஒரு வினாவை சரியாக எழுதினால் 4 மதிப்பெண், ஆனால் தவறாக எழுதினால் மதிப்பெண் இல்லை மைனஸ் 1 மதிப்பெண். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை ஒரு மாணவன் எவ்வாறு தீர்மானிக்கிறான், கால மேலாண்மையை எப்படி சமாளிக்கிறான் போன்றவற்றை கற்றுக் கொடுத்து வருகிறோம்.

    ஒவ்வொரு மாணவர்கும் நீட் தேர்வை மூன்று முறை எழுதலாம் எஸ். சி. எஸ்.டி பிரிவினர் ஐந்து முறை எழுதுலாம். நீட் தேர்வு ஒரு ஆண்டு  பயிற்சி வகுப்பாக நடைபெற்று வருகிறது. மருத்துவர் கனவோடு தற்போது 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். எந்த வெற்றியும் எளிதாக கிடைத்து விடாது. சற்று கடினமான சூழலை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

    நாங்கள் காலை 5 மணிக்கெல்லாம் மாணவர்களைத் தயார் படுத்தி விடுவோம். 6 மணிக்கு வகுப்புகள் தொடங்கி விடும். 6 மணியிலிருந்து 1.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் 1.30 மணியிலிருந்து  2 மணி வரை உணவு இடைவேளை, 2 மணியிலிருந்து 3 மணி வரை அவர்களுக்கு ஓய்வு அவர்கள் உறங்கிக் கொள்ளலாம். 3 முதல் 5 வரை ஆசிரியரின் மேற்பார்வையில் அவர்கள் படிக்க வேண்டும். 5 முதல் 6 வரை விளையாட வேண்டும். 6 மணியிலிருந்து 8 வரை படிக்க வேண்டும். இரவு உணவு அருந்திய பின்னர் அன்று நடத்திய பாடத்தை படிக்க வேண்டும் இப்படியே தொடர் சங்கிலியாக அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பொழுது அவர்களும் சோர்வடையவோ, மன அழுத்தம் ஏற்படா வண்ணம் அவர்களை அவர்களே தயார்படுத்திக் கொள்வார்கள்.

    பொதுவாக நீட் எழுதும் மாணவர்க்கு இயற்பியல், வேதியியல் பாடம் சற்று கடினமான இருக்கும் என்று நினைப்பது இயல்பு தான். ஆனால் எங்கள் அகாடெமியில் படிக்கும் எந்த மாணவனும் அந்தப் பாடத்தை படிக்கச் சொல்ல மாட்டார்கள். காரணம் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் மாணவர்களிடையே எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு எப்போதும் இருக்கும்.

    கே:  இந்த நிறுவனத்தின் ஆசிரியர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

    எங்களிடம்  பணியாற்றும் அத்துனை ஆசிரியர்களும், ஏதேனும் ஒரு நுழைவுத் தேர்வில் வெற்றிப்  பெற்றவர்களாகவும், 15 வருடத்திற்கும் மேலாக அனுபவம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து பல இடத்திலிருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சாதித்த வல்லுநர்களை மட்டுமே நாங்கள் ஆசிரியர்களாக நியாமித்து வருகிறோம். [hide]

    கே: ஒரு கல்வி நிலையம் நடத்துவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

    தன் மகன் மருத்துவராகவோ, அல்லது பொறியாளராகவோ ஆக வேண்டும் என்ற ஒரு இலட்சிய கனவோடு தான் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் எங்களிடம் வந்து சேர்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிச்சயம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதற்கு எங்களை நாங்கள் பல வழிகளில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

    எங்களிடம் 800 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் அவர்களை அத்துனை பேரையும் மருத்துவர்களாக்கி பார்க்க வேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கமாக இருக்கும். நான் மட்டுமல்ல என்னை தொடங்கி எங்கள் ஆசிரியர்கள், மேலாண்மைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஆசிரியர் அல்லாதோர், கேண்டீனில் வேலை செய்பவர்கள் என இவர்கள் அனைவரும் மாணர்வர்கள் அனைவரும் மருத்துராகி விட வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

    மாணவர்களை தன் நோக்கம் பிறழாதவாறு அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். 100 க்கு 10 சதவீதம் மாணவர்கள் ஆசிரியர்கள் என்னதான் போராடிப் பாடத்தை நடத்தினாலும் அதற்கு அவனின் ஒத்துழைப்பு இருக்காது. இதனால் அவனால் தேர்ச்சிப் பெற முடியாமல் கூட சில வேளைகளில் போய் விடும். இப்படிப் பட்ட மாணவர்களை சீர்படுத்துவதில் தான் சற்று சவால்கள் இருக்கிறது.

    கே: கடந்த வந்த பாதையில் நீங்கள் சந்தித்த ஏதேனும் நெகிழ்ச்சியான நினைவுகள் பற்றி?

    நிறைய  நெகிழ்ச்சியான நிகழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன். பெற்றோர்கள் மிகவும் வறுமை நிலையிலிருந்து தனது மாணவனை எங்களிடம் அழைத்து வருவார்கள். கட்டணம் செலுத்த கூட அவர்களிடம் பொருளாதாரம் இருக்காது. அப்படிப்பட்டச் சூழலில் அம்மாணவன் நன்றாகப் படித்து நல்ல ஒரு அரசு வேலையில் பணியில் சேர்ந்திருப்பான். அவர் தனது பெற்றோரை அழைத்து வந்து என்னிடம் நன்றியைச் சொல்வார்கள். அத்தருணம் எப்போதும் எனக்கு நெகிழ்ச்சியைத் தரும்.

    நாங்கள் நிறைய மாணவர்களுக்கே தெரியாமல் உதவித்தொகைக்  கொடுத்து படித்துவைத்திருக்கிறோம். விடுதிக்கட்டணம் செலுத்த முடியாமல் தினமும் பல மைல் தூரம் பயணம் செய்து வரும் மாணவர்களுக்கு விடுதியில் இலவசமாக அனுமதி கொடுத்திருக்கிறோம்.

    35 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகைப் பெற்று படித்து வருகிறார்கள்.  இப்படிப்பட்ட மாணவர்கள் நல்ல உயர் பதவியை அடையும் பொழுது மாணவனும் அவனின் பெற்றோரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவிப்பது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது.

    கே: நீட் தேர்வால் சமீப காலத்தில் இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டார்கள், அது பற்றி?

    அது மிகவும் துயரமான சம்பவம் தான். அதை நினைத்து நான் பல நேரங்களில் வருத்தம் கொண்டதுண்டு. நிச்சயம் அந்த பெண்களுக்கு எங்கள் நிறுவனத்தைப் பற்றி தெரிந்து எங்களிடம் வந்திருந்தால் அவர்களின் நிலை வேறு விதமாகக் கூட மாறியிருக்கலாம்.

    போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எப்போதும் தாழ்வு மனப்பான்மை மட்டும் இருந்திடுதல் கூடாது. எதையும் எதிர் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இல்லாத போது தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

    இப்படிப்பட்ட மாணவர்கள் எங்களை அணுகினால் நாங்கள் இலவசமாகப் பயிற்சி கொடுக்கக் கூட தயாராக தான் இருக்கிறோம். தற்போது அரசும் இதற்கான பயிற்சிகளைக் கொடுத்துக்  கொண்டு தான் இருக்கிறது.

    தற்கொலை ஒரு போதும் எதற்கும் தீர்வு அல்ல…முடிவு என்று இங்கு எதுவும் இல்லை. இங்கு சாதிக்க பல வழிகள் இருக்கிறது. அதில் எதையேனும் முறையாக கடைபிடித்து சாதியுங்கள்.

    கே: தொலைதூர கல்வி முறையை கொண்டு வருவதற்கான காரணம்?

    எந்த ஒரு தனியார் பயிற்சி நிறுவனமும் கொண்டு வராத திட்டத்தை நாங்கள்  கொண்டு வந்தோம். நீட் பயிற்சி வகுப்பை தொலை தூர கல்வியின் மூலம் படிக்கலாம் என்பது தான்.

    தற்போது படித்து வரும் மாணவர்கள் அவர்களால் தினமும் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல் தான். அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    எங்களின் நிறுவனம் சென்னை மற்றும் நாமக்கல் ஆகிய இரு இடங்களில் மட்டுமே தான் இருக்கிறது. எங்கள் நிறுவனத்தில் மட்டுமே படிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தூரத்தின் காரணமாக வர முடியாத சூழல் ஏற்டலாம். இது அவர்களுக்கு ஒரு வரபிரசாதம்.

    மேலும் எல்லா விதமான தகுதித் தேர்வுக்கு படிக்கும் வகையில் புத்தகங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதை அவர்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    தேர்வு தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளோம். எங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்த படியே இதில் தேர்வு எழுதிக் கொள்ளலாம். அவர்களின் வீட்டின் முகவரிக்கு மூன்று கொரியர் அனுப்பி விடுவோம். அதில் ஒன்றில் வினாத்தாள் இருக்கும். மற்றொன்றில் அந்த வினாவிற்கான விடை இருக்கும், இன்னொன்றில் ஏதேனும் தவறாக விடை எழுதியிருந்தால் அதற்கான தீர்வு கொடுக்கப்பட்டிருக்கும்.  இப்படி அவர்கள் வீட்டியிலிருந்தே அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம்.

    இந்தியாவில் எந்த பகுதியில் படிக்கும் மாணவர்களும் எங்களின் தலைசிறந்த ஆசிரியர்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தகவல்கள், வினாக்கள் போன்றவை கேட்டுக் கொள்ளலாம்.

    தற்போது இதில் 1000 த்திற்கும் மேற்பட்டோர்கள் படித்து பயன் பெற்று வருகிறார்கள்.

    கே: உங்களுக்குப் பிடித்த மனிதர் பிடித்த புத்தகம்?

    பிடித்த மனிதர் முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். தனது வாழ்நாள் முழுவதும் மாணவர்களின் நலனே தன் நலனாக வாழ்ந்தவர். அவர் எழுதிய புத்தகம் அக்னி சிறகுகள் எனக்கு மிகவும் பிடித்தது.

    கே: எதிர்கால திட்டம்?

    தற்போது சென்னை மற்றும் நாமக்கல்லில் இருக்கும் இந்நிறுவனம் அடுத்தடுத்த ஆண்டில் கோவை, திருச்சி, மதுரை, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் கொண்டு வர வேண்டும்.

    அதே போல் தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களை ஒரு தலைசிறந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும்.

    மருத்துவர் பிரிவில் 3000 சீட்டில் ஒரு 800 சீட் பெற வேண்டும். அகில இந்திய ரேங் பட்டியியலில் 10 இடத்திற்குள் தமிழ்நாட்டு மாணவர்கள் யாரும் இடம் பெறவில்லை அவர்களை அந்த இடத்திற்கு அழைத்து வர வேண்டும்.

    எல்லா போட்டித் தேர்வு சார்ந்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

    கே: வளரும் இளம் தலைமுறையினருக்கு நீங்கள் கூறுவது?

    வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு சின்ன வித்தியாசம் தான். வெற்றி உன்னை நாடறிய செய்யும் தோல்வி உன்னை அறிய செய்யும். இதைப்புரிந்து கொள்ள வேண்டும்.

    உன் இலக்கை தேடி அழைந்து கொண்டேயிருக்க வேண்டும். சிற்றின்ப ஆசையில் உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். அது அப்போது தோன்றும் ஒரு சிறிய மகிழ்ச்சி தான். ஆனால் நீங்கள் போராடி வெற்றி பெற்று பாருங்கள் காலம் முழுவதும் மகிழ்ச்சியாகவே இருக்கலாம். இதை நீங்கள் புரிந்து கொண்டு செயலாற்றினீர்கள் என்றால் நாளை உலகம் உன் பெயரைச் சொல்லும்.[/hide]

    நேர்காணல் : விக்ரன் ஜெயராமன்

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம் லிங்கன். அடக்கத்துக்கும், உபசரிப்புக்கும் பெயர் பெற்றவர். மக்களிடையே எப்போதும் உயர்வு தாழ்வு பாராட்டாதவர்.

    ஒருமுறை அவர் தனது அலுவலக அதிகாரியுடன் உலாச் சென்ற போது, வழியில் ஒரு கறுப்பின பிச்சைக்காரனைப் பார்த்தார். அந்தப் பிச்சைக்காரன் அவருக்கு மிகுந்த மரியாளதையுடன் அவருக்கு வணக்கம் சொன்னார்.

    மகிழச்சி அடைந்த அதிபர் தன் தலையில் வைத்திருந்த தொப்பியை கழற்றி அவருக்குப் பரிசாகக் கொடுத்தார். இதைப் பார்த்தவுடன் உடன் வந்த அதிகாரி திடுக்கிட்டார்.

    நீங்கள் ஏன் அந்தப் பிச்சைக்காரனுக்கு உங்கள் தொப்பியைப் பரிசாகக் கொடுத்தீர்கள் என்று கேட்டார்.

    அதற்கு அதிபர் சிரித்துக் கொண்டே இந்த உலகத்தில் என்னை விடவும் பணியுள்ளவர்களாக வேறு யாரும் இருப்பதை நான் விரும்பவில்லை என்று சொன்னார்.

    பணிவு இருக்குமிடத்தில் தான் அடக்கும் இருக்கும். அடக்கும் அனைவர் மனதையும் வென்று விடும். பணிவு தான் பெரிய பெரிய அறிஞர்களின் முக்கிய அடையாளம். நமது அன்றாட வாழ்க்கையில் அடக்கம் என்னும் இந்த மதிப்பீட்டை பழகிக் கொண்டு வாழ வேண்டும். அப்போதும் தான் வாழ்க்கை சீராக அமையும்.