Home » 2018 » November (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  மண்ணின் மகத்துவம் மகாத்மா காந்தியடிகள்

  இப்புவியில் எண்ணற்ற மனிதர்கள் பிறக்கின்றனர். அவரவர்கள் அவர்கள் விருப்பப்பட்ட துறையில் தங்கள் வேலையோடு கலந்த சேவையைச் செய்து வருகின்றனர். அதில் ஒரு சிலருக்கு மட்டுமே வானத்து நட்சத்திரமாய் ஜொலிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இன்னும் சிலர், அதிலும் ஒரு படி உயர்ந்து வானத்து சூரியனாய் காட்சி தந்து வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றுகிறார்கள். இந்த வரிசையில் நம் பாரத நாட்டில் தோன்றிய நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியும் ஒருவர் ஆவார்.

  ராம் என்ற திருமந்திரத்தின் மகிமையும்  காந்தியடிகளும் :

  காந்தியடிகள் அவர் தம் சிறுவயதில் கூச்ச சுபாவம் உள்ளவராகவும், இருட்டு மற்றும் பேய் போன்றவற்றை பார்க்க  பயந்தவராகவும் இருந்தார். ஒரு நாள் தம் கையைக் கூட பார்க்க முடியாத அளவிற்கு கும்மிருட்டு, அவர் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் செல்ல வேண்டிய அவசியம். அவர் மிகவும் பயந்து நின்றிருந்தார். அப்போது அவருடைய வயதான ஆயா ரம்பா காந்தியடிகளைப் பார்த்து, ராம் ராம் என்ற சொற்களைக் கூறிய படியே செல் என்று கூறினார்.  அவ்வாறு சொல்வதால் ராமன்  உன் அருகிலேயே இருப்பார் என்றும் கூறினார். காந்தியும் அந்த முறையையேப் பின்பற்றியதால் அவர் ஒரு ஆன்மீகவாதியாக இருந்து ஆத்மபலம் பெற்றார். தீயவன் கோட்சே அவரைத் துப்பாகியால் சுட்ட போது கூட, தன் உயிர் பிரியும் நிலையிலும் எந்தவித பதட்டமும் இல்லாமல், ராம் ராம் என்று கூறியபடியே உயிரை விட்டார்.

  தன் வாழ்நாளில், எந்த ஒரு செயலையும் அவர் நினைத்தபடி செய்வார் என்று நாம் அறிந்து கொள்ள சில நிகழ்வுகள் பின்வருமாறு.

  தன் மகன் மணிலாலிடம் கண்டிப்புடன் நடந்த நிகழ்வு :

  காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பயிற்சி பெறும் காலத்தில் அவருடன் வழக்கறிஞராய் பயிற்சி பெற்று வரும் திரு. போலக் என்பவர், காந்தியடிகளின் மகன் மணிபாலிடம், அவர் தம் அலுவலகத்திற்குச் சென்று ஒரு புத்தகத்தை எடுத்துவரும்படி பணித்தார். ஆனால் மணிபால் தன் சொந்த வேலையில் கவனத்தில் அந்தப் பணியைச் செய்ய மறந்து விட்டார். பின் இரவில் அந்த விபரம் காந்தியடிகளின் கவனத்திற்கு வந்தது.  பதிமூன்றே வயதான தன் மகன் மணிபாலை காந்தியடிகள் அழைத்து, அந்த நேரம் நள்ளிரவு என்றும் பாராமல் அலுவலகத்திற்குச் சென்று அந்தப்புத்தகத்தை எடுத்து  வரும்படி ஆணையிட்டார்.

  வீட்டில் உள்ளவர்கள் சிறுவனை நள்ளிரவில் இப்படி அனுப்பி வைக்கின்றாரே என்று வருத்தப்பட்டனர். ஆனால் காந்தியடிகளிடம் அது பற்றிப் பேச யாருக்கும் தைரியமில்லை. அது சமயம் அங்கிருந்த காந்தியடிகளின் தனிப்பட்ட செயலர் கல்யாண் பாய் சரி மணிபால் போய் அந்தப்புத்தகத்தை எடுத்துவரட்டும். நான் மணிபாலுடன் செல்ல அனுமதி தாருங்கள் என்று கேட்டு மணிபாலுடன் சென்று அந்தப்புத்தகத்தை போலக் அவரிடம் சேர்த்துவிட்டு வீடுதிரும்பினார். ஒருவர் தனக்கு ஒரு பணியைக் கொடுத்துவிட்டால் அந்தப்பணியைத் தவறாமல் முடிக்க வேண்டும் என்ற உறுதியை இந்த நிகழ்வு நமக்கு எடுத்து எடுத்துரைக்கின்றது இந்த மாதிரியான விஷயங்களில் ஒரு பாறைபோல் காந்தியடிகள் கடுமையாக இருப்பார் என்பதை இந்த நிகழ்வு மேலும் வலியுறுத்துகின்றது.

  இரண்டு அங்குல பென்சிலுக்கு காந்தியடிகள் தந்த முக்கியத்துவம் :

  தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பிய பின் காந்தியடிகள் காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள பம்பாய் சென்றார். அப்பொழுது காந்தியடிகளுக்கு உதவியாக இருக்க காகா சாஹெப் கலேக்கரும் உடன் சென்றிருந்தார். ஒரு நாள் தன்னுடைய எழுதும் பலகையில் எழுதிக் கொண்டிருந்தவர் தவறி விழுந்த பென்சிலைத் தேடிக் கொண்டிருந்தார். காகா சாஹெப் என்ன தேடிக்கொண்டிருக்கிறார் என்று வினவினார்.  காந்தியடிகள் தன்னுடைய பென்சிலைத் தேடுவதாகப் பதில் அளித்தார். உடனே காகா, தன்னுடைய பென்சிலை வைத்து எழுதும் படி கூறினார். ஆனால் காந்தியடிகள் தன்னுடைய பென்சில் தான் வேண்டும் என்றார்.ஒரு பென்சிலிற்காக நேரத்தை வீணாக்குவது சரியா? என்று கேள்வியை எழுப்பினார். அதற்கு காந்தியடிகள்  நான்  மெட்ராஸ் சென்றிருந்த போது நடேசனின் மகன் சிறியவன் எனக்குப் பாசத்துடன் கொடுத்த பென்சில் அது. அன்போடு அந்தக்குழந்தை கொடுத்த பென்சிலை நான் இழக்க விரும்பவில்லை என்று அவர் கூறியதும் காகா அவருடன் சேர்ந்து தேடி பென்சிலை எடுத்துக் கொடுத்தார்.  அந்த இரண்டரை அங்குல பென்சிலைப் பார்த்தவுடன் காந்தியடிகளின் முகத்தில் பரவசம் ஏற்பட்டது.  அது சாதரணப் பென்சில் அல்ல. அது ஒரு குழந்தை எனக்களித்த அன்பு பரிசு என்று கூறி மகிழ்ந்தார்.

  காந்தியடிகளும் வல்லபாய் படேலும் அறிவுக் கூர்மையான கதைகள் மூலம் தங்கள் கருத்துக்களை சிறையில் பரிமாறிக் கொண்ட நிகழ்வு:

  யர்வாதா ஜெயிலில் காந்தியடிகளும் படேலும் சேர்ந்து இருந்த போது அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடுவது வழக்கம். ஒருநாள், காந்தியடிகள் செத்த பாம்பு கூட சில சமயம் பயன்படும் என்று கூறி அவருடைய கருத்தை வலுவேற்ற ஒரு சிறுகதையையும் படேலிடம் கூறினார். அதாவது ஒரு மூதாட்டியின் வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைந்து விட்டது. அவர் பயத்தில் கூச்சலிட்டவுடன் அவர் வீட்டின் அருகிருந்தவர்கள் வந்து பாம்பை அடித்துக்கொன்று விட்டனார். பின் அந்த செத்த பாம்பை அவர் ஒரு நீளமான கொம்பில் தொங்க விடச் சென்றார். பின் பருந்து ஒன்று தன்னுடைய அருகில் ஒரு விலையுயர்ந்த நகையைக் கவ்விக்கொண்டு வந்தது, பாம்பைப் பார்த்தவுடன் தன் அருகில் இருந்த நகையை கீழே போட்டுவிட்டு நல்ல உணவு கிடைத்தது என்று  செத்த பாம்பைக் கவ்விக் கொண்டு சென்றது.

  அந்த மூதாட்டி அந்தப் பளபளக்கும் பொருள் என்ன என்று பார்க்கும் போது விலையுயர்ந்த நகை அது என்று அறிந்து பயன்பெற்றாள். என்று சொல்லி முடித்தார். வல்லபாய் படேலும் தன் அறிவுக் கூர்மையை வெளிக்காட்டும் வகையில் மற்றொரு பாம்பு சம்பந்தப்பட்ட சிறுகதையைக் கூறி அவர் ஒரு கருத்தை வலியுறுத்தினார். ஒரு வணிகரின் வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைந்து விட்டது. அந்த வணிகர் எவ்வளவு சப்தம் போட்டும் யாரும் வரவில்லை.

  அவர் பாம்பையும் அடித்துக் கொல்ல விரும்பவில்லை.  அதனால் ஒரு பெரியபானையை எடுத்து பாம்பின் மேல்  தலைகீழாய் வைத்து மூடிவிட்டுத் தூங்கச் சென்றுவிட்டான். அந்த இரவில் திருடர்கள் சிலர், அந்த வீடு ஒரு வணிகன் வீடு என்று தெரிந்து விலையுயர்ந்த பொருட்கள் அங்கு நிச்சயமாக இருக்கும் என்று திருடுவதற்காக வீட்டிற்குள் வந்தனர். பானை நன்று கவிழ்ந்து இருப்பதைப் பார்த்து மிக விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் என்ற நினைப்பில் பானையைத் தூக்கினர். பாம்பு அவர்கள் மேல் சட் என்று அடித்தது உயிர் பிழைத்தால் போதும் என்று திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர். என்று கூறி முடித்தார். இரண்டு கதைகளும் பாம்பு பற்றிய கதைகள் என்றாலும் இரண்டும் வெவ்வேறு கருத்தைக்கொண்டவை.

  செத்த பாம்பு விலையுயர்ந்த நகையை வயதான பாட்டிக்குக் கிடைக்கச் செய்தது. உயிருள்ள பாம்பு, வணிகனின் விலையுயர்ந்த பொருட்கள் திருடர்கள் கைக்குப் போகாமல் காப்பாற்றியது.

  மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் ஒரு மனிதன் உருவாவதற்கான வலுவான வாழ்க்கைக்கான அடித்தளம். ஒரு வீட்டை கட்டுவதற்கு அடித்தளம் அமைக்க வலுவான கற்கள் தேவை. அது போன்றுதான் வாழ்க்கையின் நிகழ்வுகளும் காந்தியடிகளின் ஆன்மீக பலம், செய்யும் காரியங்களில் கவனம், பொறுப்பு, கண்டிப்பு, குழந்தைகளின் அன்பு மேல் நம்பிக்கை, புத்திகூர்மையான சிந்தனைகள் இவையாவும் அவரை உலகம் போற்றும் மகாத்மாவாக ஆக்கியதுடன் தன்னுடைய எடுத்த எந்த காரியத்தையும் முடிப்பதில் முழுகவனம் செலுத்துவார் என்பது அவருடைய சத்தியாகிரஹம் அஹிம்சை கொள்கையோ என்ற யுக்திகள் மூலம் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கவும் துணையாய் இருந்தது என்பதையும் இந்தக் கட்டுரையில் விவரித்து உள்ள நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. இவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்வதால் இளைய சமுதாயத்தில் சிறந்த தலைவர்கள் உருவாவர்குவர் என்ற நம்பிக்கையும் நம்மிடம் உருவாவது இயற்கையே.

  இந்த இதழை மேலும்

  எப்போதோ போட்ட விதை!

  இரத்தமும் வேர்வையும் சிந்தி உழைக்கும் ஒருவர்… தனக்கு அதற்கான பலன் கிடைக்கும்!  என்று எதிர்பார்க்கலாமா?  என்று ஒரு கேள்வி எழலாமா?  இப்படி இரண்டு கேள்விகளை கேட்டுவிட்டீர்களே? என்ற மூன்றாவது கேள்வியும் பிறந்துவிட்டது.  அ. முத்துலிங்கம் சாரை படிக்கத் தொடங்கிய பிறகு, அவரது… அங்கே இப்ப என்ன நேரம்? மற்றும் ஒன்றுக்கும் உதவாதவன் என்கின்ற இரண்டு புத்தகங்களில் உள்ள பல கட்டுரைகளை படிக்க ஆரம்பித்த பிறகு வாழ்வே வண்ணமயமாக மாறியது போல ஒரு உணர்வு என்றால் மிகையாகாது.  கொரிய திரைப்படங்கள், கார் விபத்துக்கள், கிரேக்க பண்பாடு, இரஷ்ய கூஸ்பெரிப்பழம், பழந்தமிழ் புறநானூறு என்று அவருடன் பயணப்பட்ட இலக்கியச் சோலையில் கிடைத்த கனிகள் தித்திக்கின்றன.  எதையாவது எழுத வராதா?  என்று ஏங்கிய காலங்கள்  போய்… பேனா மூடியை திறந்தால்… மடை திறந்தது போல வார்த்தைகள் கொட்டுகிற கலைநயம் சொட்டுகின்ற மனதை தந்திருக்கின்ற சொற்கள் அவருடையவை.  வாழ்க்கையை ஒரு புன்முறுவலுடன் பார்க்க பயிற்சி கொடுத்திருக்கின்றார்.  படைப்பாளிக்கென்று பிரத்யேகமாக சம்பவங்கள் நடப்பதில்லை… நடக்கின்ற தற்செயல் நிகழ்வுகளை தனித்தன்மையான கோணத்தில் பார்க்கும்பொழுதும் வாசகர்களின் மனசுக்குள் இருப்பதோடு அவரவர்கள் அதை தொடர்புபடுத்திப் பார்க்கும் வண்ணம் படைக்கும்பொழுதும், தானும் உணர்ச்சிவசப்பட்டு… படிப்பவர்களையும் உணர்ச்சிகளின் ஆழ்கடலுக்கு அழைத்துச்செல்ல எத்தனிக்கும் பொழுதும், தானாக நடக்கின்ற சம்பவங்கள் வரலாறாகின்றன.  அவை இலக்கியங்கள் ஆகின்றன.

  அப்படியொரு ஏதேச்சையான நிகழ்வுதான் நாடியாவை?  நாங்கள் கண்டது.  கோபிகாவும் தீபிகாவும் பதிமூன்று, பதினொன்றாம் வயதில்… கொஞ்சநாளாக விடுபட்டுப்போன நீச்சல் பயிற்சியை மீண்டும் தொடங்கிய தருணம்.  கடுமையான பயிற்சியின் மூலம்தான் வெற்றியை அடைய முடியும்… ஆனால் அத்தகைய வெற்றியையே எதிர்பார்த்து காரியங்களை செய்ய முடியுமா? அப்படியொரு வெற்றி கிடைக்காவிடில் என்ன ஆகும்?  தேர்வுகளுக்கு படிப்பதும் அப்படிப்பட்டதுதானா?  மணிக்கணக்கில் ஒரு நீச்சல் வீராங்கனை பயிற்சி செய்கிறாள்.  நேரங்காலம் இன்றி ஒரு ஓட்டப்பந்தய வீரன் ஓடிக்கொண்டே இருக்கிறான்… கால்பந்தாட்ட வீரர்கள்… களமே கதியென கிடக்கிறார்கள்… அதுபோலத்தான் போட்டித்தேர்வாளர்கள், ஒவ்வொரு நூலகமாக… தங்கள் பயிற்சியை மணிக்கணக்கில் படித்து மேற்கொள்கின்றனர்.  அவரவர்களுக்கு பிடித்த களத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் கருதலாம்.  அந்தப் பயிற்சியின் பலனை எதிர்நோக்கலாமா? என்பது தான்… முதல் வரியில் உள்ள கேள்விகளின்… பொருள்!

  பொருள் தேடுவதே இலக்காக கொண்டு… விளையாட்டு அல்லது கலை, கல்வி துறையில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களும் உண்டு. அவர்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது,  என்று ஆருடம் சொல்வதும் நமக்கு உதவும்.  ஜென் கதைகள் நிகழ்காலத்தை நேசி! என்று சொல்கின்றன.  நாடியா… தான் பயிற்சி செய்ததை… தான் நினைத்தவாறே…  பார்வையாளர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் நிறைந்த அரங்கிலும் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கொண்டு இருந்தாராம் இப்படி அடிக்கொருதரம் நாடியா… நாடியா… என்று அவரை நாடிச் செல்கின்றோமே!  அவர் யார்?  ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சிலர் கேட்கலாம்.

  கேட்கின்ற மதிப்பெண்கள் முழுமையாக… நூற்றுக்கு நூறு சதவிகிதம்… அனைவருக்கும் கிடைப்பதில்லை.  சில களங்களில் ஒருவருக்கும் கிடைப்பதில்லை.  உதாரணமாக முன்பெல்லாம் மொழிப்பாடங்களில் (தமிழ் – குறிப்பாக) முழு நூறு சதவிகித மதிப்பெண்கள் கொடுக்கப்படுவதில்லை.  அதைப்போன்ற ஒரு துறைதான்… ஜிம்னாஸ்டிக்ஸ். உடலை வளைத்துத் தாவி… அந்தரத்தில் பாய்ந்து ஓடி…  பறந்து சுழன்று கரணமடித்து… குதித்து… வேகத்தை கட்டுப்படுத்தி சட்டென நிறுத்தி… இப்படி எலும்பா இரப்பரா?… என்று சந்தேகம் வரும்வண்ணம் உடற்கட்டை பராமரிக்கிற விளையாட்டுத் துறை.  கடந்த 1976 ல் நடந்த கதை இது.  இதை எழுதிக்கொண்டிருக்கிற எனக்கு ஒரு வயதுதான் அப்போது இருந்திருக்கும்.  நாடியா… ஒலிம்பிக்கில் 14 வயது இளம் சிறுமியாக ஓடிக்குதித்து மேற்சொன்ன காரியங்களை எல்லாம் செய்யும்பொழுது… நான் தரையில் தவழ்ந்துகொண்டு இருந்திருக்கலாம்.  படித்துக்கொண்டிருக்கும் உங்களில் பலர் பல்வேறு சூழ்நிலைகளில் இருந்திருக்கலாம்.  பிறந்திருக்கலாம்… பல வருடங்கள் பிறப்பதற்காக காத்திருந்திருக்கலாம்… இப்படி கடிகாரத்தை… நாட்காட்டியை… சற்றே நின்று யோசிக்க வைத்த முக்கிய நிகழ்வு… அப்பழுக்கில்லாத… முழு பத்துக்கு பத்து மதிப்பெண்களை நாடியா… அந்த மான்ட்ரியல் ஒலிம்பிக் 1976 ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில்… தான் கலந்துகொண்ட ஏழு பிரிவுகளிலும் முழுமையாக ஏழு முறை பெற்றதே ஆகும்.

  நாடியா… ஒலிம்பிக் வரலாற்றில் ஓர் ஒப்பற்ற நட்சத்திரம்.  திருப்புமுனை… மின்னல்… அவருக்கு முன்பு முழு பத்துக்கு பத்து மதிப்பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸில் பெற்றவர் யாரும் இல்லை என்பது மட்டும் செய்தி அல்ல…  பெற முடியும்… முழு மதிப்பெண்களை எய்த முடியும் என்று எவரும் நினைத்தது கூட இல்லை.  இந்த எவருக்குள் யார் யார் அடக்கம்? போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், பார்வையாளர்கள் இவர்கள் மட்டும் அல்ல… போட்டி நடக்கும் பொழுது… அதில் பெற்ற மதிப்பெண்களை மின்னணுத் திரையில்… பளீரென மின்னச்செய்கின்ற கருவி வடிவமைப்பாளர்களும் கூடத்தான்.  அவர்களிடம் போட்டி அமைப்பாளர்கள் பேசிய பொழுது… ஒற்றை இலக்கத்தில்தான் பொதுவாக மதிப்பெண்கள் இருக்கும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருந்தனர்.  நாடியா… இப்படியான அனைவருடைய கணக்கீடுகளையும் பொய்யாக்கிவிட்டார்.

  அந்த அழகான சிறுமி தனது ஒயிலான, ஒய்யாரமிக்க… கலைநயமான அபிநயம் நிறைந்த வேகமும் விவேகமும் நிறைந்த படைப்பின் மூலம் ஒவ்வொன்றாக ஏழு முறை வெவ்வேறு (பச்சைக் குதிரை தாண்டுதல் போன்ற ஒரு விளையாட்டு, இணையான கம்பிகளில் தாவி (Parallel Bar) விதமான சுற்றுகளிலும்…  என்ன எதிர்பாக்கப்பட்டதோ? அதற்கு பொருத்தமாக… அல்லது என்ன? எதிர்பார்க்கப்பட வேண்டுமோ? அதற்கு இலக்கணமாக, ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு விதிகளை கொண்டு, நகமும் சதையும் அதற்குச் சேர்த்து, உயிரோட்டமான முன் மாதிரியாக, புதிய வரையரையாக நாடியா… படைத்துக்  காட்டினார்.  பத்து மதிப்பெண்களையும் முழுமையாக வாங்கினார்.  இந்த நிகழ்ச்சியை முழுமையாக நாம் ‘யூ ட்யூபில்’ பார்க்க முடிகின்றது.  அதற்காகவே… நாடியா இப்பொழுது ஐம்பத்தியாறு வயதில்… பேசியிருப்பது போல… வீடியோ எடுத்து இருக்கின்றார்கள்.  நாடியாவின் கணவரும் பேசியிருக்கின்றார்.

  பேசும்பொழுதும், அதைப் பார்க்கும் பொழுதும்… நாடியா சாதித்தது… ஏதோ அந்த ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டிற்கு மட்டுமே பொருந்திய ஒன்று என்று தோன்றவில்லை.  அவர் ருமேனியா தேசத்திலிருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த பொழுது பன்னாட்டு அரசியல் சலசலப்புகள் ஏற்பட்டதும் நிஜம்.  அவற்றையெல்லாம் தாண்டி இந்தக்கட்டுரையில்… உழைப்பு… அர்ப்பணிப்புத் தன்மை வாய்ந்த உழைப்பு… எதிர்பார்ப்புக்களை பொய்யாக்கும்… அதாவது… எதிர்பாராத அளவு… அதிக நன்மையும் தரும் என்பதையே முதன்மைப் படுத்த விழைகின்றோம்.

  நாடியாவைப் பற்றி… அவரது ‘கோச்’ சொல்கின்றார்.  எப்படி மாணவர்கள் பயிற்சியாளர்களுக்கு பெருமை சேர்க்கின்றார்கள் என்பதற்கு அது உதாரணம், நாடியா வென்றதில், கோச், பெருமை கொண்டதில் ஐயமில்லை.  ஆனால் அவள் பிஞ்சுக் குழந்தையாக வந்து பயிற்சியாளர், பத்து… முறை கைகளை மடக்கி… தரையில் உந்தி எழு… (புஷ் – அப்ஸ் Push – Ups) என்று சொன்னவுடன் பதினைந்து முறை செய்தார்களாம்.  இன்றைக்கு தலையெல்லாம் நரைத்துப்போன வயதிலும்… அன்றைக்கு… கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் முன்பு… “எள் என்றதும் எண்ணெயாக நின்ற” நாடியாவின் துறுதுறுப்பு… அந்த பயிற்சியாளருக்கு கொடுத்த பரவசத்தை நம்மால்… அவரது கண்களில் பார்க்க முடிகிறது.  எள் என்றால் ‘லொள்ளு’ பண்ணுகின்ற குழந்தைகள்… உண்டு… அவர்கள் தனி இரகம்.

  இந்த இதழை மேலும்

  முயன்றேன் வென்றேன்…

  ப. சரவணன்

  தலைமையாசிரியர்

  பாளேத்தோட்டம், கிருஷ்ணகிரி

  கிருஷ்ணகிரி மாவட்டம் பாளேத்தோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிப்புரியும் திரு. சரவணன் அவர்களின் அனுபவ பகிர்வு நம்மோடு…

  தருமபுரி மாவட்டம் ஊத்தக்கரை வட்டம் சூளகரை அரசு தொடக்கப்பள்ளியில் தொடக்க கல்வி பயின்று அவரது ஊருக்கு நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளியில்  ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து பள்ளிப் படிப்பை முடித்தேன்.

  பிறகு பி. ஏ தமிழ்ப் பட்டப்படிப்பை கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் 1985- 1988 ல் படித்து தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றேன். அதைத் தொடர்ந்து முதுகலைப்படிப்பை  சென்னையில் பல அறிஞர்களையும், அரசியல் தலைவர்களையும் உருவாக்கிய பச்சையப்பன் கல்லூரியில் எம். ஏ. முதுகலைப் பட்டப்படிப்பை 1988-90 ல் படித்து பட்டம் பெற்றேன். அதைத் தொடர்ந்து 1992 ல் சென்னை பல்கலைக்கழகத்தில் பி. எட்  பட்டயப்படிப்பை முடித்தேன்.

  ஆசிரியர் ஆக வேண்டும், என்னால்  இந்த மாணவ சமுதாயத்திற்கு ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற தீராத காதல் இருந்தது. இதனால் 1992 செம்டம்பர் 1 ஆம் தேதி ஊத்தக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் தற்காலிக ஆசிரிராக நியமனம் செய்ப்பட்டு தனது கனவான ஆசிரியர் பணியை தொழிலாகக் கருதாமல் வாழ்வின் நெறியாக நினைத்து பணியில் சேர்ந்தேன்.

  1922 முதல் 28.11.1996 வரை இப்பணியை செவ்வனே செய்து வந்தார். 1996 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட நேர்முக தேர்வில் கலந்து கொண்டு தேர்வு  செய்யப்பட்டு 29.11.1996 ல் நிரந்தர ஆசிரியராக தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரிராகப் பணியில் நேர்ந்தேன். பணியேற்ற நாள் முதல் இப்பணிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு  பணியைத் தொடங்கினேன்.

  29.11.1996 முதல் 07. 08. 1997 வரை மேற்கண்ட பள்ளியில் பணிபுரிந்து வந்த இவர் பணிமாறுதல் பெற்று தருமபுரி மாவட்டம் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 08.08.1997 முதல் தனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்தேன். இப்பள்ளியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றினேன்.

   இப்பள்ளியிலிருந்து மாறுதல் பெற்று உதவி ஆசிரியராகப் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாளேத்தோட்டம் இப்பள்ளியில் பணியேற்று பணிபுரிந்து வந்தார்.

  மீண்டும் 01.11.2011 தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று இப்பள்ளியிலே பணிபுரிந்து வருகிறேன். ஆசிரிராகப் பணியேற்றிய நாள் முதல் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டினேன். இன்றைக்கு இப்பள்ளிக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து ஒரு தனியார் பள்ளிக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை இப்பள்ளிக்கு பெற்றுக் கொடுத்துள்ளேன்.

  இத்துனை சிறப்பான வெற்றிக்கு என்னோட தோலோடு தோல் கொடுக்கும் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினுடைய ஒத்துழைப்பே என்று சென்னால் அது மிகையாகாது.

  இந்த இதழை மேலும்

  தன்னம்பிக்கை மேடை

  நேயர் கேள்வி…?

  புதியதேர் உலகம் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?   

  முனைவர் கதிர்வேல்,

  ஆசிரியர், கோவை. 

  நாம் காணும் உலகம், அதாவது இந்த பூமிதோன்றி 460 கோடி ஆண்டுகள், அதில் உயிரினங்கள் தோன்றி 360 கோடி ஆண்டுகள், என்றாலும் அதில் மனிதர்கள் (Homo Sapiens) தோன்றி வெறும் 70,000 ஆண்டுகள்தான் ஆகிறது. பூமியில் தோன்றிய 99 சதம் உயிரினங்கள் அழிந்துவிட்டன, அவற்றின் எலும்புக்கூடுகள் சில நமக்கு கிடைத்துள்ளன. அதில் ‘டைனோசர்’என்ற மிகப்பெரிய உயிரினமும் அடங்கும். பூமியின் உயிரியல் வரலாற்றில் மனிதர்களைப் போன்ற Homo erectus என்ற ஒரு உயிரினம், 20 லட்சம் ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறது, பின்னர் அழிந்து போனது. மனித இனம், நீங்களும் நானும், நமது சந்ததியினரும் அவ்வளவு நீண்டகாலம் வாழ்வார்களா? என்ற அச்சம் உயிரியல் அறிஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அது நியாயமானதே. ஒவ்வொரு நாளும் செடி, பூச்சி, பறவை, மீன்கள், பாலூட்டிகள் என்று  150 முதல் 200 வரையிலான உயிரினங்கள் அழிந்து போகின்றன. இயற்கையை மனிதர்கள் அழிக்கும் இன்றைய உலகம் சரியில்லை, புதியதோர் உலகம் வேண்டும் என்ற உங்கள் ஆசையில் பொருள் இருக்கத்தான் செய்கிறது.

  மக்கள் பெருக்கம் :

  பூமியில் மக்கள் தொகை இன்று சுமார் 770 கோடி. இதில் சீனாவில் 137 கோடி, இந்தியாவில் 129 கோடி, அமெரிக்காவில் 33 கோடி மக்கள் வாழ்கின்றனர். சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டினர் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி விட்டனர், ஆனால் ஆப்பிரிக்கா, அரேபியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இந்தியா ஆகிய நாடுகளில் மக்கள் தொகை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் பெருக்கம் உலக நிலப்பரப்பில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அரேபிய நாடுகளிலிருந்து அகதிகள் ஐரோப்ப நாடுகளுக்கு கடல் வழி குடியேற முயற்சி செய்வதையும், அவர்களை அந்நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதையும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஆஸ்திரேலியா நாட்டினர் பிற நாட்டவரை அகதிகளாகக் கூட அனுமதிப்பதில்லை.

  அந்தநாட்டு கடல் படையின் முக்கிய வேலை அகதிகளைத் திருப்பி அனுப்புவது தான். இருந்தாலும் பல ஆயிரம் மைல் கடல் கடந்து அகதிகள் அங்கு சென்ற வண்ணம் உள்ளனர். ரோகிந்திய அகதிகள் பர்மாவிலிருந்து இந்தியா வந்ததைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் நாட்டிற்குக் கூட அகதிகள் வருவதற்கு காரணம் அவர்கள் நிலை அதை விடமோசமானது என்பதுதான். இதற்கு முன்னதாக பல கோடி பங்களாதேச மக்கள் இந்தியாவில் குடியேறி விட்டனர். இவர்களின் வருகையால் வடகிழக்கு பகுதியில் மக்கள் பெருக்கம் ஏற்பட்டு பல பிரச்சனைகள் வெடித்து விட்டன.

  நாமிருவர் நமக்கொருவர் :

  கி.பி 1500 ஆம் ஆண்டு இந்த பூமியில் 50 கோடி மக்கள் மட்டுமே வாழ்ந்தனர். வேளாண்மை புரட்சி, தொழில் புரட்சி, அறிவியல் புரட்சி, மருத்துவ புரட்சி என்று ஏற்பட்டு, உலக மக்கள் தொகை ஏறிவிட்டது. அதுவும் நமது நாட்டில் 129 கோடி மக்கள் வசதியாக வாழ இடமும் இல்லை, அதற்கான வாழ் வாதாரங்களும் இல்லை. எனவேதான் பசி,  பட்டிணி, குழந்தை மரணம், வேலையில்லாத் திண்டாட்டம், போராட்டங்கள்,  குற்றங்கள் பெருக்கம் என்று பலபிரச்சனைகள் இருந்து வருகின்றது. புதியதோர் உலகத்தில், 50 கோடி மக்கள், இந்தியாவில் 5 கோடி மக்கள் வாழ்வார்கள். அவர்கள் உணவிற்கும், இருப்பிடத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் மற்றவர்களோடு போட்டியிடமாட்டார்கள். கள்ளம், கபடம், கொலை, கொள்ளை, லஞ்சம், லாவண்யம் என்று ஏதும் இருக்காது.

  அரசியல் – சமூகம்:

  இன்றைய உலகில், அதுவும் நமது நாட்டில் மக்கள் பல மதங்களாகவும், சாதிகளாகவும், மாநிலங்களாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். அவரவர் மதம், சாதி, கலாச்சாரம் மொழி மேலானது என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கூட சாதி பெயர்களைச் சூட்டி பெருமையுடன் நடமாடுகிறவர்களும் இருக்கிறார்கள். சாதி, மதமோதல்களை அடக்க இராணுவமே வரவழைக்கப்படுகிறது. ஜாதி திருவிழாவிற்கும், மதத்திருவிழாவிற்கும் பாதுகாப்பு அழிப்பது தான் காவல் துறையின் முதல் வேலையாக இருக்கிறது. ஏழை மக்களின் நேரமும், வரிப்பணம் கூட இது போன்ற பிரச்சனைகளுக்காக செலவிடப்படுகிறது. அனைவரும் சமம் என்பது நமது அரசியல் அமைப்பு சட்டம், இருந்த போதும் மனதளவில் அந்த ஏற்றத்தாழ்வுகள் இன்னும் இருந்து வருகிறது. புதியதோர் உலகில் மனிதர்களுக்கு சாதி, மத, இன, மொழி உணர்வுகள் இருக்காது. மனிதன் என்ற உணர்வு மட்டும் இருக்கும்.

  அறிவியல்

  பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் ஒரு தாயின் வழி வந்தவர்கள் என்ற உண்மையை பரிணாம உயிரியலில் நமக்கு குறியிட்டு காட்டியும், அது மக்களிடம் போய் சேரவில்லை, அல்லது அதை நம்பும் அளவிற்கு அவர்கள் இன்னும் அறிவியல் சிந்தனையாளர்கள் ஆகிவிடவில்லை. பெரும்பான்மையான மக்கள் பழைய நம்பிக்கை முறைகளையே கடைபிடிக்க விரும்புகிறார்கள். ஆனால் புதியதோர் உலகத்தில் மக்கள் அறிவியல் கற்கவும், தொழில் நுட்ப பயிற்சி பெறவும் ஆர்வம் காட்டுவார்கள். எல்லோருக்கும் கல்வி, தொழில் நுட்ப அறிவு, வேலை என்று அனைவரும் தனித்திறனுடனும், சம்பாதிக்கும் திறனுடனும் விளங்குவார்கள். உலக பிரச்சனைகளை அறிவியல் கண்ணாடி வழியாகப் பார்ப்பார்கள். இதனால், மக்கள் பணக்கஷ்டம் இல்லாமல் சுதந்திரமாக வாழ்வார்கள், பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் குழந்தைகளுக்கு போதுமான மரியாதை கிடைக்கும்.

  தேசபற்று:

  இன்றைய உலகத்தில் ஒருநாட்டவருக்கு அண்டை நாட்டவருடன் சுமூக உறவு இல்லை. ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில அணு ஆயுதங்களை குவித்துவைத்துள்ளனர். அதுவும் அந்த ஆயுதங்களை அவர்களாகத் தயாரிக்கவில்லை, வளர்ந்த நாடுகளிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்கள் கொடுத்து வாங்கியுள்ளனர். இது எல்லாம் ஏழை மக்களின் வரிப்பணம்.

  இதோடு ஒரு நாட்டில் மற்ற  நாட்டைப் பற்றி அவதூறு பரப்புவதும் வெறுப்பு பேசுவதும் வாழக்கையாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் அரசியலே இதை வெறுப்பை நம்பித்தான் இருக்கிறது. மற்ற நாட்டை வெறுப்பது தான் நாட்டுப்பற்று என்றும் ஆகிவிட்டது. புதியதோர் உலகில் அணு ஆயுதங்கள் இருக்காது, இராணுவங்கள் எல்லைகளில் குவிக்கப்படமாட்டாது. அண்டை நாட்டவர் நேசக்கரம் நீட்டி சகோதரர்கள் போல் நடந்து கொள்வார்கள். இன்னொரு நாட்டிற்குச் செல்ல‘விசா’,‘பாஸ்போர்ட்’போன்றவை தேவைப்படாது.

  உலககுடிமகன்:

  அறிவியல் கற்றவர்களும், அறிவிலை நேசிப்பவர்களும் புதியதோர் உலகில் பெருமளவு இருப்பதால் அவர்கள் தேசத்தின் எல்லைகளையும் மறந்து உலக குடிமக்களாக மாறுவார்கள். உலகம்தான் அவர்களின் தேசம் என்றாகிவிடும். உலகம்தான் மனித இனத்தின் நாடு என்ற உணர்வுடன் மக்கள் வாழும் போது தேசபக்தி மறையும், பூமிபக்திதோன்றும். பூமியைக் காக்க மனிதன் புறப்படுவான்…ஆற்றில் சுத்தத்தண்ணீர் ஓடும், கடல்நீர் மாசுபடுவது தடைசெய்யப்படும், கடலில் மீன்பிடிப்பு கட்டுப்படுத்தப்படும், காடுகளை விட்டு மனிதன் வெளியேறி விலங்குள் அங்கு பாதுகாப்பாக வாழவழிவிடுவான்.

  புதியதோர் உலகில் மனிதன் விளை நிலங்களை அழிக்கமாட்டான், காடுகளை அபகரிக்கமாட்டான், வன விலங்குகளை வேட்டையாடமாட்டான், நிலக்கரி, மணல், கருங்கல் போன்றவற்றை சூறையாடமாட்டான். மோட்டார் வாகனங்கள் பயன்படுத்துவதை விட்டு சைக்கிள், குதிரை வண்டிகள் பயன்படுத்துவான்.

  யெற்கைவிவசாயம் :

  புதியதோர் உலகில் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படமாட்டது. அவை மோசமான பூச்சிகளை கொன்று விடுவதோடு அனைத்து புழு பூச்சிகளையும் கொன்று விடும், தேனீக்கூட்டம் கொத்துக்கொத்தாக செத்து மடியும். உலகில் உள்ள அனைத்து பூச்சிகளையும் (insects) இன்று கொன்று குவித்துவிட்டால், 50 ஆண்டுகள் கழித்து பூமியில் ஒரு மனிதன் கூடவாழமாட்டான்; ஆனால் இன்று மனிதர்கள் முற்றிலும் அழிந்தால் 50 ஆண்டுகள் கழித்து பூமியில் அனைத்து உயிரினங்களும் புத்துயிர்பெற்று, பூமியே பூத்து குலுங்கும், என்றார்‘ போலியோ’நோய்க்கு மருந்து கண்டுபிடித்த ஜோனல் சாலக் என்ற அமெரிக்க நாட்டு மருத்துவஅறிவியல் அறிஞன்.

  புதியதோர் உலகில் வசதிபடைத்தவர்கள் இன்று போல அதிகஉணவு உண்டுஅது செரிமானம் அடைய அவதிப்படமாட்டார்கள். மனிதர்கள்  மிருகத்தின் மாமிசத்தை உண்பதை குறைத்து பழங்களையும், காய்கறிகளையும், பயறுவகைகளையும் அதிகம் உண்பார்கள்.

  எனவே, புதியதோர் உலகில் அனைத்து உயிரினங்களும் வாழும், அதில் மனிதர்களும் இருப்பார்கள். மதங்கள் இருக்காது, எனக்கு எல்லாம் தெரியும் என்று பேசி, அறிவியலை குறை கூறும் மகான்களும் இருக்கமாட்டார்கள். இதில் ஏழைகள் என்று எவரும் இருக்க மாட்டார்கள். அனைவரும் அறிவியல் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இந்த நாட்டவர், இனத்தவர், மொழியினர் என்ற பாகுபாடு இல்லாமல் ‘மனிதர்கள்’என்ற உணர்வுடன் அவர்கள் கவலையின்றி இருப்பார்கள். “வாழ்;வாழவிடு” என்பதுதான் இயற்கையுடன் ஒன்றி வாழும் புதியதோர் உலக மனிதனின் கோட்பாடாக இருக்கும்.

  இந்த இதழை மேலும்

  மற்றவர்களை வசீகரிப்பது எப்படி?

  There should be a Positive record of giving regard to all.

  Contentment and bliss go hand in hand. These qualities create great fascination for you among others.

  மற்றவர்களை கவர்வது என்பது ஒரு தனிக் கலை,   அந்தக் கலை கை வர வேண்டுமென்றால்    ஒருவர்  சூழ்நிலைக்கேற்ப  தன்   குணாதிசயங்களை  மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டு, தன்னிடம் இல்லாத  குணாதிசியங்களை   அவர் கற்றுக் கொள்ள வேண்டும்,  அதைத்  தவறாது பின்பற்றவும்  வேண்டும், தன்னிடமுள்ள குறைகளை விட்டுவிடவும் வேண்டும், குறைகளில்லாத நிறைவான மனிதர்கள் சில சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டிருப்பார்கள்,   சிலருக்கு அந்த அம்சங்கள் இயற்கையாகவே அமைந்திருக்கும், ஒரு சிலர் தன் முயற்சியால் அந்த அம்சங்களை பெற்றுக் கொள்வார்கள்.

  ஒருவர் மற்றவர்களை வசீகரிக்க வேண்டுமானால் கீழ்க்காணும் அடிப்படை அம்சங்களை பெற்றுள்ளவராக இருத்தல் வேண்டும்.

  1.நடை, உடை பாவணைகள்:

  ஒருவருடைய கம்பீரமான நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், கண்களிலே ஒரு காந்த சக்தியும், அழகான உடையலங்காரமும், மற்றவர்கள் சற்றுத் திரும்பிப் பார்க்கிற உடல் அமைப்பும், அழகான உடல் அசைவுகளும் ஒருவருடைய கவரும் தன்மையை    அதிகப்படுத்துக்கின்றன, கனிவான கண்பார்வை இருக்க வேண்டும், மற்றவர்களை வசீகரிப்பதில் கண்பேசும் வார்த்தைக்கு முக்கியத்துவம்  உண்டு.

  2.பேசும் வார்த்தைகளில் இனிமை:

  நல்ல இனிமையான, பண்பட்ட, தேர்ந்த, சுவையான, வார்த்தைகளைப் பேசும்போது கூடியிருக்கிற கூட்டம் சற்று உங்களை உற்றுப்பார்க்கும் ,  வசந்தமான வார்த்தைகளை,  மென்மையான குரலிலே உச்சரிக்கிற போது, அந்த உச்சரிப்புக்கள் காந்தத்தைப் போல மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும், நல்ல நடையும், உயர்ந்த உடைகளும், சிறந்த பாவனைகளும் இருந்தாலும் கூட, மோசமான, கீழான,  இனிமையில்லாத,  பயனில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தினால் உங்களைச் சுற்றியிருக்கிற கூட்டம்  உங்களைசற்று ஒதுங்கிப்போகும், நடை என்பது உங்களின் நடத்தையும் குறிக்கும், நல்ல குணமுள்ளவராக, நல்ல பண்புகளின் ஒட்டு மொத்த சாரமாக,   நல்ல நடத்தையுள்ளவராகவும் (Conduct and character) இருத்தல் வேண்டும்.

  3.புன்சிரிப்பு:

  நாம் அடுத்தவருக்கு எதைத் தருகிறோமோ, அது நமக்கே  திரும்பி வந்து சேர்கிறது. பல மடங்காகவும் வரலாம் ,  வரமாகவும் வரலா, சாபமாகவும் வரலாம், நாம் எதைத் தருகிறோம், எப்படித் தருகிறோம், என்பதைப் பொறுத்து அது அமையும், நாம் மலர்களை தந்தால் அது மாலையாக திரும்பி வரும், விதைகளைத் தந்தால் அது விருட்சமாக திரும்பி வரும், நாம் புன்னகைத்தால் எதிரே வருபவர்கள் புன்னகைத்து தான் தீரவேண்டும்.

  ஒரே ஒரு புன்னகை மற்றவர்களுக்கு இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியை   தரும், உங்கள் மேல் இருக்கிற அபிமானம் அவருக்கு கூடும்,  அவர்கள் மனதிலே அன்புப் பூவும், ஆனந்தப் பூவும்  மலரும்,  உங்களுடன் நட்பு  கொள்ள  வேண்டும் என விரும்புவார்கள், அடுத்த முறை அவர்கள்  உங்களை பார்க்கும்;   போது  முதலிலேயே புன்னகைப்பார்கள்,  நட்பு துளிர்விடும், சந்திப்புகள் தொடரும், பழக்கம்  நெருக்கமாகும், உங்களுடைய நட்பு வட்டம் அதிகமாகும், அவருடைய நண்பர்களும் உங்களுக்கு நண்பர்களாவார்கள், புன்சிரிப்புதான் இதற்கு  முதல்  வித்து.

  4.மனப்பூர்வமான அன்பையும், விருப்பத்தையும், நேசத்தையும் காட்டவேண்டும்:

  நீங்கள் மற்றவர்கள் மேல் காட்டுகிற அன்பு உளப்பூர்வமாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும், மேலெழுந்து வாரியாக பழகாமல், எதிர்பார்புகளுடன் கூடிய நேசமாக இல்லாமல் இருக்க வேண்டும்,அவர்கள் உள்ளத்தைக் கவரும் வகையில் அவர்களுடைய நலம் விரும்பிகளாக  இருக்க வேண்டும், அவர்கள் தேடி வந்து அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சொல்லி  ஆலோசனைகள் பெறும் அளவு உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும், நடிப்புக்கும், பாசாங்கிற்கும் இங்கு இடமில்லை.

  5.மற்றவர்களுடைய பெயர்களைச் சொல்லி அழைக்க வேண்டும்.

  எந்தக் கூட்டமாக இருந்தாலும் ஒருவருடைய பெயரைச் சொல்லி அழைக்கிற போது அங்கே அவருக்கு ஒரு முக்கியத்துவம் உண்டாகிறது, தனது பெயர் உச்சரிக்கப்படும் போது அவர் மனதிலே ஒரு மகிழ்ச்சி மத்தாப்பூள வெடிக்கும், உங்கள் மேல் ஒரு அளவு கடந்த பிரியம் அவருக்கு உண்டாகும்.

  முத்தமிழறிஞர் கலைஞரைப்பற்றி  குறிப்பிடுவார்கள்,   எந்த  ஊர்  சென்றாலும்  அங்குள்ளவர்களில் தொண்டர்களின் பெயரைபெயர்   சொல்லி  கூப்பிடும் அளவு நினைவாற்றல் இருந்தது எனவும் அந்தக் காரணத்திற்காகவே உயிரை கொடுக்கும் தொண்டர்கள் இருந்தார்கள் என்பதும் அறியப்பட்ட உண்மை.

  எனது மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய நெருங்கிய நண்பர்  திரு. K.G.ராமகிருஷ்ணனமூர்த்தி  அவர்கள் அரிமாசங்கத்தின் மாவட்ட ஆளுநராக இருந்தவர், கூட்டு மாவட்டத் தலைவராக இருந்தார்,  இந்திய துணைக் கண்டத்தில்  அரிமா இயக்கத்தில் அவர் ஒரு VIP. தெற்காசிய நாடுகளினுடைய அமைப்பின் முதன்மைப் பிரதிநிதியாக இருந்தார்.  பன்னாட்டு அரிமாசங்கத்தில் இயக்குநராக தேர்ந்தெடுக்கப்ட்டவர், பன்னாட்டு அரிமா சங்கத்தின்  அகில உலகத் தலைவராகும் தகுதி பெற்றவர், மிகச்சிறந்த பேச்சாளர், பழகுவதற்கு இனியவர்,  மிகவும் அன்பானவர்,  மென்மையானவர் , K.G.R என்ற மூன்றெழுத்துக்கு சொந்தக்காரர்  , எல்லா நண்பர்களும் உறவு முறை சொல்லியே அழைக்கும்  உன்னத குணம் அவருக்குண்டு, மற்றவர்கள் எல்லாம்  வியக்கும் அளவுக்கு ஒரு நினைவாற்றல்   கொண்டவர்.

  அவர் மாவட்ட ஆளுநர் பொறுப்பு ஏற்கும் போது சுமார் 300 பேர் கொண்ட அமைச்சரவை உறுப்பினர்களை ஒரு குறிப்பும் கையில் இல்லாமல், வரிசையாக   ஒவ்வொருவர்  பெயரையும்  சொல்லி அழைத்து, எல்லோரையும் அதிசயக்க வைத்து  நட்பின் உச்சத்தைத் தொட்டார்,  இவர்களைப் போன்ற நண்பர்களைப் பெறுவது ஒரு பாக்கியமாகும், அவருக்கு இந்திய அளவில் இருக்கும் நட்பின் விரிவாக்கம் வேறு யாருக்கும் இருக்க   வாய்ப்பில்லை.

  6.மற்றவர்கள் சொல்வதை கேட்கிற பழக்கம் இருக்க வேண்டும்,

  மற்றவர்கள்  என்ன    சொல்கிறார்கள் என்பதை  நிதானமாக காது கொடுத்து கேட்க வேண்டும்,  மறுத்துப் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்,  விவாதம் செய்வதை அறவே விட்டு விட வேண்டும், அவர்களைப் பற்றி  அவர்களே  பெருமையாக   பேசுவதை ஊக்குவிக்க வேண்டும், நாம் சொன்னால் அவர் காது கொடுத்து கேட்பார், நம்மை உற்சாகப்படுத்துவார் என்ற எண்ணம்  அவர்களுக்கு வரவேண்டும்,  அப்பொழுதுதான் உங்கள் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படும்.

  7.மற்றவர்களின் விருப்பு வெறுப்பு அறிந்து பேச வேண்டும்,

  ஒருவருக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு அதைப்பற்றி அவர்களிடம் பேச வேண்டும், அவர்களுக்கு பிடிக்காததை அவர்களிடம் அழுத்தமாகப் பேசி வெறுப்பை சம்பாதிக்க கூடாது, அவர்கள் எந்த அலை  வரிசையில் இருக்கிறார்களோ  அந்த அலை   வரிசைக்கேற்ப  நமது பேச்சை திசை திருப்பிக் கொள்ள வேண்டும்.

  8.மற்றவர்கள் தன்னை முக்கியமானவர்கள் என்று உணரும்படி நமது செயல்கள் இருக்க வேண்டும்.

  ஒருவர் தமக்கென்று  VIP Treatment      இவர் கொடுக்கிறார் என்று அவர்கள் நினைக்கும்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த இடத்திலும் சின்ன  அவமரியாதை கூட அவர்களுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அவர்கள் மீது  அக்கறை செலுத்த வேண்டும், தனி அக்கறை செலுத்தும் போது ஒருவருக்கு  VIP Treatment      தரும் போது,   உங்கள் மேல்அவருக்கு  அளவிடமுடியாத அன்பும், பாசமும், மரியாதையும் ஏற்படும்,  “ இவரைப் போல வேறு ஒருவர் இல்லை  ”  என்று சொல்கிற அளவு அவர் மனம் குதுட்கலம் அடையும்.

  9.எல்லோரையும் அரவணைத்து அன்பு காட்ட வேண்டும்,

  யாராக இருந்தாலும் ஒரு அரவணைப்புடன் கூடிய அன்பு காட்டும் போது ஒரு கசப்பான சூழல் கூட இனிப்பாக மாறும், கஷ்டத்தில் இருக்கும் போது உதவியும், துக்கத்தில் இருக்கிற போது ஆறுதலும், தோல்வி வரும் போதுதன்னம்பிக்கை   தருவதும், வெற்றி பெறும் போது பாராட்டி உற்சாகத்தை ஊட்டுவதும், ஒரு நெருங்கிய பந்தத்தை உருவாக்கும், சொந்தங்கள் செய்யாத பணியை இந்த அன்பான அரவணைப்பு செய்து காட்டும்,உங்கள் மேலுள்ள விருப்பத்தின் விகிதாச்சாரம் கூடும்,  நேசம் வலுப்படும்,.

  10.பழக்கத்தில் மென்மையாக இருக்க வேண்டும்

  பூவுக்கு வலிக்காமல் தேனீக்கள் தேன் எடுப்பதைப் போல, பூமிக்கு நோகாமல் விதைகள் வேர்விடுவதைப் போல மென்மையாக இருக்க வேண்டும், சருகு போல மென்மையாக இருப்பவர்கள்தான் நதியோடு பயணிக்க முடியும், மென்மையாக இருப்பது என்பது உயிர்த்திருப்பது, ஜுவித்து இருப்பது, மென்மையாய் இருப்பவர்கள் துடிப்போடும், துள்ளலோடும், மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும், வாழ்வை இனிமையாக நுகர்வார்கள்,  மனிதர்கள் மென்மையாக இருக்கும் போது மலராக இருக்கிறார்கள், தென்றலாக இருக்கிறார்கள், நிலவாக இருக்கிறார்கள்,  நீங்கள் தனித்து  இருந்தால் உங்களுக்கு சமூகத்தில் மதிப்பு இல்லை, ஆனால் நீங்கள் நேசிப்பவராக,  இனிமையானவராக ,  மென்மையானவராக, ஒத்துப் போகும்  பண்புடையவராக இருந்தால், நீங்கள் அதே சமூகத்தில் விலைமதிப்பு   உள்ளவராக  கருதப்படுவீர்கள்.

  ஒரு இலையும், கல்லும், நதிக்கரையில் கிடந்தன, இலையைப் பார்த்து கல்  சொன்னது, “ நண்பா  எனக்கு ஒரு ஆசை ,  இந்த நதி கடலில் போய் சேரும் வரை அதில் நான் பயணிக்க  வேண்டும், அதன் இரு கரைகளையும் பார்த்து ரசித்துச் செல்ல வேண்டும் “  என்று சொன்னது,  இலை சொன்னது  “ அது உன்னால் முடியாது, விழுந்த மாத்திரத்தில் நீ மூழ்கிப் போவாய்”,   ஏன் ? என்று கேட்டது கல்,    “ நீ   அடர்த்தியாய் , கனமாய்  இருக்கிறாய்  அதனால் நீ மூழ்கிப் போவாய்” ,  கல் போன்று கனமாக இருப்பவர்கள் வாழக்கை நதியில்;  மூழ்கிப் போவார்கள், இலை போன்று மென்மையாய் இருப்பவர்கள் வாழ்க்கை நதியில் மூழ்காமல் பயணம் தொடர்ந்து வெற்றி இலக்கை தொடுவார்கள்,  இலையைப் போல,  சருகையைப் போல மென்மையாய் இருப்பவர்கள் காற்றிலும் பறக்கலாம், ஆற்றிலும் மிதக்கலாம், அன்பினிலும்  குளிரலாம்,

  ஆதலின் நீங்கள் கல் போன்று கனமாய் இல்லாமல், இலையைப் போல, சருகைப் போல  மென்மையாய் இருந்தால் வாழ்வின் வசந்தத்தை ருசிக்கலாம்,  எங்கும், எப்போதும்  ஜெயிக்கலாம், இத்தனை குணங்களும் மொத்தமாக உங்களிடம் இருந்தால்   எல்லோரையும் வசீகரிக்கலாம்,   உங்களுடன் எப்போதும் ஒரு கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கும், எதையும் வெல்லும் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

  இந்த இதழை மேலும்

  அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா?

  வீரா வீறுகொண்டு எழுந்து நில் எழுச்சி கொள்

  விதிக்குப் பயந்தவனாலும்

  சதிக்குப் பயந்தவனாலும்

  ஒன்றும் செய்துவிட முடியாது.

  இளமைத் தடுமாற்றம் என்பது அனைவரது வாழ்விலும் நிகழக்கூடிய ஒரு நிகழ்வாகும்.

  காதலும் காமமும் எழும்பொழுது அவ்வுணர்வுகளுக்கு சற்று நேரம்  வரும் மயக்கமும் புத்துணர்ச்சியும், பூரிப்பும்தான் அத்தடுமாற்றமாகும்.

  அந்நேரத்தில் சுய கட்டுப்பாடுடனும், ஆளுமையுடனும் தடுமாற்றத்தையும் கவனக் குறைவையும் தடுப்பது இளமைக்காலம் வீண் போவதைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிகளாகும்.

  உடல் உறுப்புகளை இயக்க சுய கட்டுபாடு என்பது மிகமிக அவசியம்.

  கை, கால், கண் போன்றவற்றை வெளிக்கட்டுப்பாடு உறுப்புகள் எனவும்; நாக்கு, இதயம், உணர்வுகள் போன்றவற்றை உள் கட்டுப்பாடு உறுப்புகள் எனவும் கட்டுப்பாடுறுப்புகளை இருவகையாகப் பிரிக்கலாம்.

  சுய கட்டுப்பாடு இரு உறுப்புகளுக்குமே முக்கியமெனக் கருதலாம். இக்கட்டுப்பாடே ஒருவன் தவறான திசையில், பிழையான வழியில் செல்வதைத் தடுத்து நிறுத்தி அழிவிலிருந்து காக்கும்.

  எனக்கு கட்டுப்பாடு இருக்கிறதா, இல்லையா என்பதை சோதிக்க ஒரு வழி சொல்லுங்கள் என்று ஒரு கேள்வியை முன் வைக்கலாம்.

  இன்று நீ அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்.

  அதிகாலை 5 மணிக்கு கடிகார அலாரம் உன்னை எழுப்பினால் நீ உன் சுய கட்டுபாட்டுக்குள் இல்லை என்று அர்த்தம்.

  அதே அதிகாலை 5 மணிக்கு அலாரம் கடிகாரத்தை நீ எழுப்பினால் நீ உன் சுய கட்டுப்பாட்டுக்குள்ளும் சுய ஆளுமைக்குள்ளும் இருக்கின்றாய் என்று அர்த்தம்.

  அழிவுப்பாதையில் தீய வழியில் செல்வதைத் தடுக்கவும், தவிர்க்கவும் இக்கட்டுப்பாடு மனிதனுக்கு பெரிதும் பயன்படுகிறது.

  ஆளுகையை உள்புறம், வெளிப்புறம் என இரண்டாகப் பிரித்தாலும், சிந்தனை, செயல், எண்ணம், மனம் போன்ற உள் ஆளுகையை கட்டுப்பாட்டுடன் மிகவும் சரியாக மேற்கொண்டாலே போதும்; வெளிப்புற உறுப்புகளின் கட்டுப்பாட்டை முழுவதும் தடுத்து நிறுத்தி சுய ஆளுகையில் வெற்றியடைந்து விடலாம்.

  உள்புற கட்டுப்பாடில்லாததனால் வெளிப்புறம் தீய செயல்களில் ஈடுபடுகிறது. உள்புற ஆளுகை இல்லை என்றால் இரண்டிலும் தவறுகள் நடக்கும், என்றும் நடந்து கொண்டேதானிருக்கும்.

  மனித மனம் நன்மை, தீமை என இரண்டு வழிகளிலும் செல்லும்.

  அதில் நல்ல வழியில் மட்டுமே செல்ல மனதைப் பழக்கிக் கொள்ள வேண்டும்.

  உடலில் இருக்கின்ற இயந்திரங்களில் மனம்தான் பெரியது என்றாலும் .அந்த மனம் மனிதனுக்குக் கட்டுப்படக்கூடிய பணிவைப் பெற்றிருக்கிறது.

  பலர் சில அற்ப சுகங்கள் தான் வாழ்க்கை என்று நினைத்து அதில் மூழ்கி கட்டுப்பாடிழந்து முடிவில் அதிலேயே மூழ்கியும் விடுகின்றனர்.

  அற்ப சுகங்களுக்காக வாழ்க்கையை மலிவு விலைக்கு விற்கக்கூடாது. விற்றவர்களுக்கு இந்த மனித வாழ்க்கை வீண் போய்விடுகிறது.

  தற்காலிக சுகத்திற்காக அடிமையானவர்கள் பிற்காலத்தில் நிரந்தர சுகத்தை அனுபவிக்க முடியாமல் தற்காலிக இன்பத்தைத்தான் அனுபபிப்பார்கள்.

  இவர்கள் பிற்கால துன்பத்திற்கும் அடிமையாக வேண்டி வரும். அடிமையாவார்கள்.

  சிலர் அற்ப சுகங்களுக்காக தன்னையிழந்து அடிமையாகி விடுகின்றனர்.

  இது அவர்களுக்கும் நல்லதல்ல நாட்டிற்கும் நல்லதல்ல.

  காமத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் வேலி வேண்டும்.

  இல்லையேல் வேலியே பயிரை மேய்ந்த கதையாக கருத்தாக நீயே உன்னை அழித்துக் கொள்வாய், மேய்ந்து கொள்வாய்.

  அது அழிந்த பின் கடைசியில் தான் தெரியும்.

  அப்பொழுதுதான் உனக்கு வாழ்க்கை என்பது என்னவென்று முழுவதுமாகத் புரியும்.

  அப்பொழுது எது தற்காலிக, நிரந்தர சுகம் என்பதும் உனக்குத் தெரியும்.

  இக்கட்டுப்பாட்டில் சிறந்து விளங்குபவனிடம் தனிமனித ஒழுக்கம் அதிகமாகக் காணப்படும்.

  சுய ஆளுகை, சுய கட்டுப்பாட்டைத் தரும்.

  சுய கட்டுப்பாடு ஒழுக்கத்தைத் தரும்.

  ஒழுக்கம் உயர்வைத் தரும்.

  இதுவே ஒருவனுக்குப் பெருமையைத் தரும்.

  சில சமயம் மலிவு விலை மதுதான் உன் அழிவுக்குக் காரணமாயிருக்கும்.

  இந்த இதழை மேலும்

  காய்ச்சலால் வரும் வலிப்பு (Febrile Fits)

  காய்ச்சலால் வரும் வலிப்பு என்பது 6 மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும். இது 100 குழந்தைகளில் ஐந்து பேரில் காணப்படலாம். உடலின் வெப்பநிலை உயரும் போது, அதாவது காய்ச்சல் வரும்பொழுது வலிப்பு வர வாய்ப்புகள் உண்டு.

  பெற்றோர் இருவரும் தங்களின் சிறுவயதில் இந்நோயால் பாதிக்கப் பட்டிருந்தால், அவர்களின் குழந்தைக்கு 10% முதல் 20% வரை காய்ச்சலால் வரும் வலிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மேலும் பெற்றோர் இருவரும் மற்றும் முதல் குழந்தையும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இரண்டாவது குழந்தைக்கு 20% முதல் 30% வரை ஏற்பட வாய்ப்புண்டு.

  அறிகுறிகள்

  • இவை ஏற்படும்போது குழந்தை சில நிமிடங்களுக்கு நினைவிழக்கலாம். தொடர்ந்து கை மற்றும் கால்களில் விறைப்புத்தன்மை ஏற்படலாம்.
  • தலை பின்னோக்கி தள்ளப்பட்டு, கை, கால்களில் வலிப்பு ஏற்படலாம்.
  • தோல் வெளிர் நிறமாகவோ அல்லது நீல நிறமாகவோ மாறலாம்.
  • ஒரு சில நிமிடங்களுக்குள் வலிப்பு நின்றுவிடும். அதன்பிறகு குழந்தை சிறிது நேரத்திற்கு நினைவின்றி இருக்கும். பிறகு மெதுவாக சுயநினைவு திரும்பும்.

  என்ன செய்ய வேண்டும்

  குழந்தைக்கு வலிப்பு ஏற்படும்போது நிதானம் காப்பதே மிக அவசியம். குழந்தையின் தலையை ஒருபக்கமாகத் திருப்பிப் புரையேறுவதைத் தடுக்க வேண்டும். குழந்தையின் வாயில் எந்தவொரு பொருளையும் வைக்கக்கூடாது. கைகளில் இரும்புச் சாமான்களை கண்டிப்பாகக் கொடுக்கக்கூடாது. வலிப்பு நின்றவுடன் குழந்தையை ஒருபக்கமாக படுக்க வைக்க வேண்டும் (Recovery Position). ஒருவேளை வலிப்பு நீடிக்குமானால் அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும்.

  சிகிச்சை வலிப்பு நீண்ட நேரம் நீடிக்கும் சமயங்களில் மிடிசோலம், லோரசிபம், ளடியசிபம் போன்ற மருந்துகள் ஊசி மூலமாகவே அல்லது ஆசனவாய் வழியாகவோ கொடுக்க வேண்டும்.

  முதல்முறை காய்ச்சலினால் ஜன்னி ஏற்படும்போது, மருத்துவரை நாட வேண்டும். ஏனென்றால் வலிப்பு சாதாரண காய்ச்சலில் இருந்து மூளை காய்ச்சலில் கூட ஏற்படலாம். எனவே மருத்துவரை அணுகுவதே சாலச் சிறந்தது.

  இவ்வகையான காய்ச்சலினால் ஏற்படும் வலிப்பு, காண்போர்க்கு வலிப்பு நோய் போல தென்பட்டாலும், இதனால் பிற்காலத்தில் வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு (2-7%). பெற்றோர்கள் இவற்றைப் பற்றி சரியாக தெரிந்து கொண்டால், பதட்ட மடையாமல் சரியான அணுகுமுறையோடு கையாளலாம்.

  இந்த இதழை மேலும்

  வாழ நினைத்தால் வாழலாம் – 22

  நல்லவர்கள்

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே! கோவையின் பிரபலமான கல்லூரிகளில் அதுவும் ஒன்று.  2 நாள் பயிலரங்க வகுப்பில் மாணவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன திறமைகளை அறிந்துகொண்டு, வளர்த்துக்கொண்டு வந்தால் சிறக்க முடியும் என்ற கண்ணோட்டத்தில் சென்று கொண்டிருந்தது.  பயிற்சியின் ஒரு பகுதியாக நல்லவர்களை இனம் காண்பது எப்படி? – என்ற கேள்வி.

  புத்தகங்கள் வாசிப்பது என்பது அறிதாகிவிட்ட நிலையில், தொலைக்காட்சிகளும், திரைப்படங்களும் மாணவர்களை – குறிப்பாக ஆசிரியர்களுடனான நட்புறவில் எப்படி இருக்கிறார்கள் என்று காட்சிப்படுத்தும் விதம் கவலை அளிப்பதாகவே இருக்கின்றது.

  நகைச்சுவை எனும் போர்வையில் ஆசிரியர்களை அவமானப்படுத்துவது – மாணவனின் முதல் பணி என்று போதிக்கப் படுகின்றது.  கல்லூரிக்கு வரும்போது ஆயுதங்களை ஏந்தி வருவதுதான் வீரத்தின் வெளிப்பாடு என்பது போன்ற ஒரு Projection – பல மாணவர்கள் இப்போது கல்லூரிக்கு கையில் கத்தியுடன்.  Bus Day எனும் பெயரில் சக பயணிகளை சங்கடத்தில் ஆழ்த்தும் சம்பவங்கள்.  போதைப்பொருள்களின் பொக்கிஷ கிடங்காக பல மாணவர்களின் புத்தகப் பையும், மனமும் குப்பைகளாக.

  கண்டிக்க வேண்டிய பெற்றோர் – கண் இருந்தும் குருடர்களாக.  தண்டிக்க துணியும் ஆசிரியர்கள் – தண்டனைக்கு சிக்கும் தடத்தில் தனியனாய்.

  மாணவன் கொடுக்கும் Fees முக்கியமா?, நல்லதை போதிக்கும் ஆசிரியன் முக்கியமா? அல்லது மாணவனை “மாண்புமிகு” ஆக்க விழையும் “மாண்பு (மிகு) முக்கியமா?- என்ற குழப்பத்தில் நிராதரவான நிலையில் நிர்வாகம். அங்கங்கே சில குரல்கள் ஆசிரியர்களின் தரத்தை (கல்வியில், தனிப்பட்ட முறையில்) சீர்தூக்கிப் பார்க்கச் சொல்லும் சிந்தனைகள் – சிதறல்களாக.  இப்படி மொத்தக்கடலும் சேறாக கலங்கி இருக்கும் நிலையில் – முத்தெடுப்பது இருக்கட்டும், நல்ல மீன்களை (மாணவர்களை) இந்த சமூகம் எப்படி பெறப்போகின்றது?

  “இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களின் கையில்” என்று மேடைப் பிரசங்கங்கள்.  “மாணவர்களின் கையில் என்ன”? என்ற எதார்த்தத்துக்கு விடை தெரிந்தவன் சொல்லும் விளக்கங்கள் கூட இன்று விமர்சனத்துக்கு ஆளாகும் விதண்டாவாதம்.

  சரியான பாதையில் தான் இந்த சமூகம் போய்க் கொண்டிருக்கின்றதா?

  “உன் நண்பனை காட்டு – நீ யார் என்று சொல்கின்றேன்” – என்ற கூற்றுக்கு எத்தனை மாணவர்களால் தன் நட்பு வட்டத்தை பட்டியலிட முடியும்?

  “இனம் இனத்தோடு – பணம் பணத்தோடு” என்பதுபோல் – “நம் இன்றைய நிலை, நாம் தற்போது கொண்டிருக்கும் நண்பர்களின் பிரதிபலிப்பு.  “நாளைய நம் வாழ்வு, இனி நாம் கொள்ளப்போகும் நண்பர்களின் பிரதிபலிப்பு”

  நம் நண்பர்கள் நல்லவர்களா என்பது இருக்கட்டும்.  முதலில், நாம் நல்லவர்களா என்ற தற்சோதனையை ஒவ்வொரு மனிதனும் எடுக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை தான் இப்போது.  மகாபாரதத்தில் நல்லவர்கள் பக்கம் நான் இருப்பேன் என்றான் கண்ணன்.  இப்போதோ கண்ணனையும் காணோம், நல்லவனையும் காணோம் – என்பது போன்ற ஒரு தோற்றம்.

  “நல்லவர்கள்” – உங்கள் நல்வாழ்வுக்கு வழி சொல்லும் வழி காட்டிகள்.

  “நல்லவர்கள்” – துவண்டு விழும்போது தோள் கொடுப்பவர்கள்

  “நல்லவர்கள்” – அக்கறையை வெளிப்படுத்தும் அகல் விளக்குகள்

  “நல்லவர்கள்” – ஆலோசனை வேண்டின் கலப்படமில்லா கருத்து சொல்பவர்கள்

  “நல்லவர்கள்” – கோபத்தை நெஞ்சில் வைக்காமல் வார்த்தைகளால் மட்டுமே வடித்து சொல்பவர்கள்.

  நல்லவர்களை அடையாளம் கண்டாக வேண்டிய கட்டத்தில் தான் நம் கால்கள்!  எப்படி?

  உங்கள் வாழ்வில் நீங்கள் “நல்லவர்கள்” என்று அடியாளம் கண்டவர்கள் யார்?

  1. இந்த சமுதாயத்துக்கு தொண்டு செய்பவரா?– அல்லது தொண்டு, சேவை என்ற போர்வையில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் சொத்து, பணம், புகழ், செல்வாக்கு சேகரிப்பவரா?
  2. எல்லாவற்றுக்கும் உங்களை எதிர்பார்ப்பவர்களா? – அலைகடலென ஆர்பரித்து வா! அறிவாயுதம் ஏந்தி வா! – என்று அவர்கள் நடத்தும் விழாக்களுக்கும், போராட்டங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்புபவர்களா? அல்லது, உங்கள் விழி சிந்தும் கண்ணீரை துடைக்க தன் விரல்களை தருபவரா?
  3. உங்கள் சிக்கலான நேரத்திலும் நீங்கள் முழுதும் நம்புபவர்களா? உங்கள் மனச்சுமையை இறக்கி வைக்கும் இடமாக தன் இதயத்தை தருபவரா? – இல்லை நீங்கள் இறங்கியபின் “நான் கயிறு இல்லை பாம்பு” – என்று பாதாளத்தில் தள்ளுபவரா?  “ஆற்றில் இறங்கிய பிறகுதான் இவன் மண்குதிரை என்று என் மண்டைக்கு உரைத்தது” – என்று உங்களை உரைக்க வைப்பவரா?
  4. எப்போதும் நகைச்சுவையாக இருப்பவர்களா? – சோகத்தோடு போகும் உங்களை நிமிடத்தில் மாற்றி, மனம் முழுதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி – நான் இருக்கின்றேன், சேர்ந்து ஜெயிப்போம் என்று நம்பிக்கை ஊட்டுபவரா?
  5. உங்களால் எளிதில் தொடர்பு கொள்ள முடிபவர்களா? – கவலையோடு இருக்கும் உங்களுக்கு, இவரை காண முடியவில்லையே என்ற இன்னொரு கவலையும் ஏற்றி விடாமல், “காலத்தில் செய்த உதவி பெரிது” என்ற வள்ளுவரின் வாக்கைப்போல் – உங்களுக்காக உங்கள் வாசலில் நிர்ப்பவரா?

  இந்த 5 கேள்விகளுக்கு விடை தேட முயலுங்கள்.  அரிதாரத்துக்கு பின்னால் இருக்கும் அடையாளம் உங்களுக்கு புலப்படும்.

  சரி!  நல்லவனுக்கான அடையாளம் என்ன?

  ஒரு மனிதனின் செயல்களே அவனின் மொத்த அடையாளம்.  ஆம்!  They do Physically, Verbally, Mentally Only Good Actions. எண்ணம், சொல், செயல் அனைத்திலும் நல்லவைகளை மட்டுமே செய்பவர்கள்.

  Good Action Mentally  நல்ல எண்ணம்: மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்பட மாட்டார்கள்.  (துரோகம் செய்யாத வட்டம் உங்களுக்கு இருக்கும்) கோபப்படாமல் இருப்பார்கள். (உங்கள் நட்பு மேலும் மேலும் வேர் விட்டு வளரும்.  மனத்தாங்கல் வராது) சரியாக சிந்திப்பவர்கள்.  (உங்களுக்கு சரியான ஆலோசனைகளை உண்மையாக கொடுப்பார்கள்.  இவர்களின் துணைகொண்டு நீங்கள் எத்தனை இலட்சியங்களையும் எளிதில் அடையலாம்)

  Good Action Verbally சொல்: பொய் சொல்ல மாட்டார்கள்.  (நேர்மையாக இருப்பார்கள்.  பொய் சொல்லி உங்களிடம் கடன் வாங்க மாட்டார்கள்) வதந்தி பரப்ப மாட்டார்கள்.  (உங்களை மாய வலையில் விழ வைக்க மாட்டார்கள்.  தவறான விஷயங்களை நன்மை என்றும் சரி என்றும் உங்களை நம்ப வைக்க மாட்டார்கள்) கோள் சொல்லி பிரிக்க மாட்டார்கள்.  (உங்கள் நட்பு வட்டம், உறவினர் வட்டம், தொழில் வட்டம் எல்லாம் எப்போதும் நல்ல சிந்தனை வட்டமாகவே ஆரோக்கியமாக இருக்கும்.  இவர்களால் அது மேலும் பலப்படும்.  நீங்கள் மேலும் உயர்வீர்கள்)

  Good Action Physically செயல்: அன்பாக இருப்பார்கள்.  (முரட்டுத்தனமாக, மூர்க்கத்தனமாக இருக்க மாட்டார்கள்.  இறக்க குணத்தோடு இருப்பார்கள்) சட்டத்துக்கு உட்பட்டு இருப்பார்கள்.  (கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று குற்றங்கள் செய்ய மாட்டார்கள்.  இவர்களது நட்பு உங்களுக்கு ஒரு கவுரவத்தையே ஏற்படுத்திக் கொடுக்கும்) உதவிகரமாக இருப்பார்கள்.  (தரம் தாழ்ந்த, அருவருக்கத்தக்க பேச்சு, செய்கைகள் ஏதும் இல்லாமல், உதவும் தூய மனதோடு இருப்பதால் – உங்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில், தயங்காமல் உதவுவார்கள்)

  என் நண்பனாக இருக்க குறைந்தபட்சம் இந்த தகுதிகள் இருந்தே ஆக வேண்டும்.  அப்படி இருந்தால்தான் அவர்களை என் நண்பனாக ஏற்க முடியும். அவர்கள் என் வாழ்வில் ஒரு மாற்றத்தை, ஏற்றதை ஏற்படுத்த வேண்டும்– என்பதே உங்கள் தீர்மானமாக இருக்கட்டும்.

  உங்கள் அணைத்து “நண்பர்களையும்” – இந்த கேள்வி சல்லடைகளைக் கொண்டு வடிகட்டுங்கள்.  “நல்லவர்கள்” மட்டுமே மேலே இருப்பார்கள் (நல்லவர்கள் எப்போதுமே மேலே தான் இருப்பார்கள்) – ஆனால், துரதிர்ஷ்ட வசமாக அது மிக மிக குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கும்.  பலருக்கும் அந்த எண்ணிக்கை பூஜியமாகக்கூட இருக்கலாம்.

  நல்லவர்களை அறிய “வடிகட்டியை” நாடுவதுபோல் – உங்களை நல்லவனாக மாற்றிக்கொள்ள “முகம் பார்க்கும் கண்ணாடியை” நாடுங்கள்.

  கண்ணாடியிடம் இந்த 3 பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.

  1. நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கரையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்த கரையை கண்ணாடி கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை.  உள்ளதை உள்ளபடியே காட்டுகின்றது அல்லவா? – அதேபோல, உங்கள் சகோதரனிடம், நண்பரிடம், மனைவியிடம், கணவனிடம் எந்த அளவுக்கு குறை இருக்கின்றதோ அந்த அளவுக்குத்தான் அதை சுட்டிக்காட்ட வேண்டும்.  எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக்கூடாது.  துரும்பை தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
  2. கண்ணாடி முன்னால் நீங்கள் நிற்கும்போது தான் அது உங்கள் குறையை காட்டுகின்றது. நீங்கள் அகன்றுவிட்டால் – கண்ணாடி மௌனமாகி விடுகிறது அல்லவா? – அதேபோல, மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர்கள் இல்லாதபோது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது.
  3. ஒருவருடைய முகக்கரையை கன்னாடி காட்டியதால் – அவர் அந்த கண்ணாடிமீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே!  அதேபோல, உங்களிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் அவர்மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.  அந்தக் குறைகள் உங்களிடம் இருக்குமானால் திருத்திக்கொள்ள வேண்டும்.

  உங்களுக்குள் இந்த தன் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.  இனி, எப்பொழுதெல்லாம் நீங்கள் கண்ணாடி முன்னால் நிற்கும்போதும் – இந்த அறிவுரை உங்கள் நினைவுக்கு வரட்டும்.

  நல்லவர்களை அடையாளம் காண்பது எவ்வளவு முக்கியமோ – அதே அளவு நாமும் நல்லவர்களாக இருப்பது முக்கியம்.

  “உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது” – இருத்தல் சிறப்பு.

  “அடிப்பது போல கோபம் வரும் அதில் ஆபத்து இருக்காது – நீ அழுதால் நானும் அழுவேன் அதற்கும் காரணம் புரியாது” – என்பது தூய மனம்.

  “நன்றியை மறந்தால் மன்னிக்கமாட்டேன் பார்வையில் நெருப்பாவேன் நல்லவர் வீட்டில் நாய்போல் உழைப்பேன் காலுக்கு செருப்பாவேன்” – என்பது தெய்வ குணம்.

  இப்படி தூய மனமும், தெய்வ குணமும் கொண்டு வாழுங்கள்.  உங்கள் வாழ்க்கை சிறக்கும்.

  அதுமட்டுமல்ல,

  “வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

  “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”

  இந்த இதழை மேலும்

  வின்னர்ஸ் அகாடமியின்

  அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் மற்றும் இளைஞர்கள் எழுச்சி தினம்

  இரண்டாம் ஆண்டு கொண்டாட்டம் அக்டோம்பர் – 18

  கடந்த 13-10-2018 மற்றும் 14-10-2018 ஆகிய இரு நாட்கள் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா இளைஞர்களின் எழுச்சி தினமாக வின்னர்ஸ் அகாடமியின் சார்பில் அறிவியல் விழாவாக இரண்டாவது ஆண்டாக வின்னர்ஸ் அகடாமி (வின்னர்ஸ் டியூசன் மற்றும் டுட்டோரியல் சென்டர் – பா. நா. புதூர் மற்றும் நாவாவூர் பிரிவு) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு இடையே ஆன ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் நாடகப் போட்டி என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது. இதில் கோவைமாவட்டத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ / மாணவியர்கள் கலந்து கொண்டு அவரவர் திறமையை வெளிக்காட்டினர்.

  அதனைத் தொடர்ந்து 14-10-2018 அன்று காலை 10 மணி அளவில் வின்னர்ஸ் குழுமத்தின் சார்பில் கலை மற்றும் இலக்கிய விழாக்களும், சமூக விழிப்புணர்வு தொடர்புடைய குறுநாடகங்கள் மற்றும் இந்தியா 2020 என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கு இடையே ஆன பட்டிமன்றமும் நடைபெற்றது. இதில் மாணவர்கள் சிறப்பாக கலந்து கொண்டு கண்ணுக்கு விருந்தளித்தனர் மற்றும் அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

  இவ்விழாவில் வின்னர்ஸ் அகாடமியின் இயக்குநர் திரு. ஏ. பிரசாத் அவர்களும், அகம் அறக்கட்டளையின் செயலாளர் சசிகுமார் மற்றும் வடிவேல் அவர்களும் கலந்து கொண்டனர்.

  இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அரைஸ் கட்டளையின் தலைவர் திரு. வின்ஸ் அவர்களும், டாக்டர். அப்துல் கலாமிடம் பயின்ற மாணவர் அரைஸ் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் திரு. கணேஷ் அவர்களும் மற்றும் தமிழ்நாடு பெயிண்டிங் கான்டிராக்டர்ஸ் அசோசியேசன் தலைவர் திரு. ஜி. பன்னீர் செல்வம் அவர்களும், மற்றும் யாழ் தொலைக் காட்சி முதன்மை செயலாளர் திருமதி. தீபா அவர்களும் கலந்து கொண்டனர்.

  மாணவர்களுக்கு சிறப்புரை வழங்குவதற்காக சக்சஸ் IAS அகாடமியின் முதல்வர் திரு. நாகேந்திரன் அவர்களும், ரங்கநாதன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் செல்வி. B. அருணா அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை அளித்தனர்.

  இவ்விழாவில் பல்வேறு பள்ளியின் மாணவ / மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும், தொலைக்காட்சி நண்பர்களும் மற்றும் வின்னர்ஸ் அகாடமியின் நிர்வாகிகளும், மாணவ / மாணவியர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

  பரிசு பெற்ற மாணவிகளின் கருத்து:

  நான் ஸ்வேதா சின்மையா வித்யாலயாவில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் வின்னர்ஸ் அகாடமி நடத்திய மாவட்ட அளவில் நடந்த பேச்சு போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றேன்.

  மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருந்த விழாவில் எனக்கு வாய்பளித்த வின்னர்ஸ் அகாடமிக்கு என் நன்றிகள்.

  நான் ரா. அபிராமி பிஷப் உபகாரம் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் வின்னர்ஸ் அகாடமி நடத்திய பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றேன். அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. வின்னர்ஸ் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  WINNERS ACADEMY

  WINNERS TUITION AND TUTORIAL CENTER

  VI to XII / State Board / Metric / CBSE / Home Tuition / ENGG / Diploma / Spoken English & Hindi

  ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனிக்கவனம் செலுத்தப்படும்.

  ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்கள்.

  10,11,12 மாணவர்களுக்கு Unit Test, Week Test போன்றவை நடத்தப்படும்.

  Branch 1: P.N. Pudur,

  Marudamalai Main Road

  Coimbatore – 41

  Cell: 80127-81630.

  Branch 2: 7, Suganya Complex

  Navavoor Pirivu

  Coimbatore – 46

  Cell: 88701-54560.

  இந்த இதழை மேலும்

  அலங்கரித்துக் கொள்…

  சரித்திர நாயகனே

  அங்கே பார் உன் அரியாசனம்

  அலங்கரிக்கப்பட்ட சரியாசனம்…

  தொலைவில் இருக்கிறது என்று தொய்ந்து விடாதே…

  எட்டமுடியவில்லை என்று ஏமாந்து விடாதே…

  தானாக கிடைத்துவிடும் என்று தள்ளியும் நிற்காதே

  இது போட்டி நிறைந்த உலகம்…

  உன்னைப் போலவே இக்களத்தில் எத்தனையோ கால்கள்

  கண்ணில் இலட்சிய கனவுகளுடன்

  கனலாய் அனலாய் புறப்படத் தயராக இருக்கிறார்கள்

  நீயும் புறப்படு..இயல்பாக இல்லாமல் இடியாகப் புறப்படு

  இக்களம் எப்படியாகவும் இருக்கலாம்

  கத்தியடி படலாம்…கல்லடிப் படலாம்

  உணவின்றி தாகம் தணிய தண்ணீர் இன்றி

  அல்லல் படலாம் அவஸ்தைப் படலாம்…

  எதையும் வெல்ல முடியும் என்று

  வீரமுழக்கம் உங்களுக்குள் இட்டுக் கொள்ளுங்கள்…

  சாதிக்கப் புறப்பட்டுவிட்டு

  சகுணம் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்

  உன் எல்லை என்ன? உன் எதிர்பார்ப்பு என்ன?

  என்று தீர்மானித்து விட்டால்

  மழைக்கு காத்திருக்கும் விவசாயி போல

  இலை இழந்த மரம் பருவத்திற்கு காத்திருப்பது போல

  உன்னுள் ஓரு நம்பிக்கை அணையா விளக்காய்

  சுடரொளி விட்டு எரிந்து கொண்டிருக்க வேண்டும்….

  இந்த இதழை மேலும்