Home » Articles » வாழ நினைத்தால் வாழலாம் – 22

 
வாழ நினைத்தால் வாழலாம் – 22


மித்ரன் ஸ்ரீராம்
Author:

நல்லவர்கள்

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே! கோவையின் பிரபலமான கல்லூரிகளில் அதுவும் ஒன்று.  2 நாள் பயிலரங்க வகுப்பில் மாணவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன திறமைகளை அறிந்துகொண்டு, வளர்த்துக்கொண்டு வந்தால் சிறக்க முடியும் என்ற கண்ணோட்டத்தில் சென்று கொண்டிருந்தது.  பயிற்சியின் ஒரு பகுதியாக நல்லவர்களை இனம் காண்பது எப்படி? – என்ற கேள்வி.

புத்தகங்கள் வாசிப்பது என்பது அறிதாகிவிட்ட நிலையில், தொலைக்காட்சிகளும், திரைப்படங்களும் மாணவர்களை – குறிப்பாக ஆசிரியர்களுடனான நட்புறவில் எப்படி இருக்கிறார்கள் என்று காட்சிப்படுத்தும் விதம் கவலை அளிப்பதாகவே இருக்கின்றது.

நகைச்சுவை எனும் போர்வையில் ஆசிரியர்களை அவமானப்படுத்துவது – மாணவனின் முதல் பணி என்று போதிக்கப் படுகின்றது.  கல்லூரிக்கு வரும்போது ஆயுதங்களை ஏந்தி வருவதுதான் வீரத்தின் வெளிப்பாடு என்பது போன்ற ஒரு Projection – பல மாணவர்கள் இப்போது கல்லூரிக்கு கையில் கத்தியுடன்.  Bus Day எனும் பெயரில் சக பயணிகளை சங்கடத்தில் ஆழ்த்தும் சம்பவங்கள்.  போதைப்பொருள்களின் பொக்கிஷ கிடங்காக பல மாணவர்களின் புத்தகப் பையும், மனமும் குப்பைகளாக.

கண்டிக்க வேண்டிய பெற்றோர் – கண் இருந்தும் குருடர்களாக.  தண்டிக்க துணியும் ஆசிரியர்கள் – தண்டனைக்கு சிக்கும் தடத்தில் தனியனாய்.

மாணவன் கொடுக்கும் Fees முக்கியமா?, நல்லதை போதிக்கும் ஆசிரியன் முக்கியமா? அல்லது மாணவனை “மாண்புமிகு” ஆக்க விழையும் “மாண்பு (மிகு) முக்கியமா?- என்ற குழப்பத்தில் நிராதரவான நிலையில் நிர்வாகம். அங்கங்கே சில குரல்கள் ஆசிரியர்களின் தரத்தை (கல்வியில், தனிப்பட்ட முறையில்) சீர்தூக்கிப் பார்க்கச் சொல்லும் சிந்தனைகள் – சிதறல்களாக.  இப்படி மொத்தக்கடலும் சேறாக கலங்கி இருக்கும் நிலையில் – முத்தெடுப்பது இருக்கட்டும், நல்ல மீன்களை (மாணவர்களை) இந்த சமூகம் எப்படி பெறப்போகின்றது?

“இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களின் கையில்” என்று மேடைப் பிரசங்கங்கள்.  “மாணவர்களின் கையில் என்ன”? என்ற எதார்த்தத்துக்கு விடை தெரிந்தவன் சொல்லும் விளக்கங்கள் கூட இன்று விமர்சனத்துக்கு ஆளாகும் விதண்டாவாதம்.

சரியான பாதையில் தான் இந்த சமூகம் போய்க் கொண்டிருக்கின்றதா?

“உன் நண்பனை காட்டு – நீ யார் என்று சொல்கின்றேன்” – என்ற கூற்றுக்கு எத்தனை மாணவர்களால் தன் நட்பு வட்டத்தை பட்டியலிட முடியும்?

“இனம் இனத்தோடு – பணம் பணத்தோடு” என்பதுபோல் – “நம் இன்றைய நிலை, நாம் தற்போது கொண்டிருக்கும் நண்பர்களின் பிரதிபலிப்பு.  “நாளைய நம் வாழ்வு, இனி நாம் கொள்ளப்போகும் நண்பர்களின் பிரதிபலிப்பு”

நம் நண்பர்கள் நல்லவர்களா என்பது இருக்கட்டும்.  முதலில், நாம் நல்லவர்களா என்ற தற்சோதனையை ஒவ்வொரு மனிதனும் எடுக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை தான் இப்போது.  மகாபாரதத்தில் நல்லவர்கள் பக்கம் நான் இருப்பேன் என்றான் கண்ணன்.  இப்போதோ கண்ணனையும் காணோம், நல்லவனையும் காணோம் – என்பது போன்ற ஒரு தோற்றம்.

“நல்லவர்கள்” – உங்கள் நல்வாழ்வுக்கு வழி சொல்லும் வழி காட்டிகள்.

“நல்லவர்கள்” – துவண்டு விழும்போது தோள் கொடுப்பவர்கள்

“நல்லவர்கள்” – அக்கறையை வெளிப்படுத்தும் அகல் விளக்குகள்

“நல்லவர்கள்” – ஆலோசனை வேண்டின் கலப்படமில்லா கருத்து சொல்பவர்கள்

“நல்லவர்கள்” – கோபத்தை நெஞ்சில் வைக்காமல் வார்த்தைகளால் மட்டுமே வடித்து சொல்பவர்கள்.

நல்லவர்களை அடையாளம் கண்டாக வேண்டிய கட்டத்தில் தான் நம் கால்கள்!  எப்படி?

உங்கள் வாழ்வில் நீங்கள் “நல்லவர்கள்” என்று அடியாளம் கண்டவர்கள் யார்?

  1. இந்த சமுதாயத்துக்கு தொண்டு செய்பவரா?– அல்லது தொண்டு, சேவை என்ற போர்வையில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் சொத்து, பணம், புகழ், செல்வாக்கு சேகரிப்பவரா?
  2. எல்லாவற்றுக்கும் உங்களை எதிர்பார்ப்பவர்களா? – அலைகடலென ஆர்பரித்து வா! அறிவாயுதம் ஏந்தி வா! – என்று அவர்கள் நடத்தும் விழாக்களுக்கும், போராட்டங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்புபவர்களா? அல்லது, உங்கள் விழி சிந்தும் கண்ணீரை துடைக்க தன் விரல்களை தருபவரா?
  3. உங்கள் சிக்கலான நேரத்திலும் நீங்கள் முழுதும் நம்புபவர்களா? உங்கள் மனச்சுமையை இறக்கி வைக்கும் இடமாக தன் இதயத்தை தருபவரா? – இல்லை நீங்கள் இறங்கியபின் “நான் கயிறு இல்லை பாம்பு” – என்று பாதாளத்தில் தள்ளுபவரா?  “ஆற்றில் இறங்கிய பிறகுதான் இவன் மண்குதிரை என்று என் மண்டைக்கு உரைத்தது” – என்று உங்களை உரைக்க வைப்பவரா?
  4. எப்போதும் நகைச்சுவையாக இருப்பவர்களா? – சோகத்தோடு போகும் உங்களை நிமிடத்தில் மாற்றி, மனம் முழுதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி – நான் இருக்கின்றேன், சேர்ந்து ஜெயிப்போம் என்று நம்பிக்கை ஊட்டுபவரா?
  5. உங்களால் எளிதில் தொடர்பு கொள்ள முடிபவர்களா? – கவலையோடு இருக்கும் உங்களுக்கு, இவரை காண முடியவில்லையே என்ற இன்னொரு கவலையும் ஏற்றி விடாமல், “காலத்தில் செய்த உதவி பெரிது” என்ற வள்ளுவரின் வாக்கைப்போல் – உங்களுக்காக உங்கள் வாசலில் நிர்ப்பவரா?

இந்த 5 கேள்விகளுக்கு விடை தேட முயலுங்கள்.  அரிதாரத்துக்கு பின்னால் இருக்கும் அடையாளம் உங்களுக்கு புலப்படும்.

சரி!  நல்லவனுக்கான அடையாளம் என்ன?

ஒரு மனிதனின் செயல்களே அவனின் மொத்த அடையாளம்.  ஆம்!  They do Physically, Verbally, Mentally Only Good Actions. எண்ணம், சொல், செயல் அனைத்திலும் நல்லவைகளை மட்டுமே செய்பவர்கள்.

Good Action Mentally  நல்ல எண்ணம்: மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்பட மாட்டார்கள்.  (துரோகம் செய்யாத வட்டம் உங்களுக்கு இருக்கும்) கோபப்படாமல் இருப்பார்கள். (உங்கள் நட்பு மேலும் மேலும் வேர் விட்டு வளரும்.  மனத்தாங்கல் வராது) சரியாக சிந்திப்பவர்கள்.  (உங்களுக்கு சரியான ஆலோசனைகளை உண்மையாக கொடுப்பார்கள்.  இவர்களின் துணைகொண்டு நீங்கள் எத்தனை இலட்சியங்களையும் எளிதில் அடையலாம்)

Good Action Verbally சொல்: பொய் சொல்ல மாட்டார்கள்.  (நேர்மையாக இருப்பார்கள்.  பொய் சொல்லி உங்களிடம் கடன் வாங்க மாட்டார்கள்) வதந்தி பரப்ப மாட்டார்கள்.  (உங்களை மாய வலையில் விழ வைக்க மாட்டார்கள்.  தவறான விஷயங்களை நன்மை என்றும் சரி என்றும் உங்களை நம்ப வைக்க மாட்டார்கள்) கோள் சொல்லி பிரிக்க மாட்டார்கள்.  (உங்கள் நட்பு வட்டம், உறவினர் வட்டம், தொழில் வட்டம் எல்லாம் எப்போதும் நல்ல சிந்தனை வட்டமாகவே ஆரோக்கியமாக இருக்கும்.  இவர்களால் அது மேலும் பலப்படும்.  நீங்கள் மேலும் உயர்வீர்கள்)

Good Action Physically செயல்: அன்பாக இருப்பார்கள்.  (முரட்டுத்தனமாக, மூர்க்கத்தனமாக இருக்க மாட்டார்கள்.  இறக்க குணத்தோடு இருப்பார்கள்) சட்டத்துக்கு உட்பட்டு இருப்பார்கள்.  (கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று குற்றங்கள் செய்ய மாட்டார்கள்.  இவர்களது நட்பு உங்களுக்கு ஒரு கவுரவத்தையே ஏற்படுத்திக் கொடுக்கும்) உதவிகரமாக இருப்பார்கள்.  (தரம் தாழ்ந்த, அருவருக்கத்தக்க பேச்சு, செய்கைகள் ஏதும் இல்லாமல், உதவும் தூய மனதோடு இருப்பதால் – உங்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில், தயங்காமல் உதவுவார்கள்)

என் நண்பனாக இருக்க குறைந்தபட்சம் இந்த தகுதிகள் இருந்தே ஆக வேண்டும்.  அப்படி இருந்தால்தான் அவர்களை என் நண்பனாக ஏற்க முடியும். அவர்கள் என் வாழ்வில் ஒரு மாற்றத்தை, ஏற்றதை ஏற்படுத்த வேண்டும்– என்பதே உங்கள் தீர்மானமாக இருக்கட்டும்.

உங்கள் அணைத்து “நண்பர்களையும்” – இந்த கேள்வி சல்லடைகளைக் கொண்டு வடிகட்டுங்கள்.  “நல்லவர்கள்” மட்டுமே மேலே இருப்பார்கள் (நல்லவர்கள் எப்போதுமே மேலே தான் இருப்பார்கள்) – ஆனால், துரதிர்ஷ்ட வசமாக அது மிக மிக குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கும்.  பலருக்கும் அந்த எண்ணிக்கை பூஜியமாகக்கூட இருக்கலாம்.

நல்லவர்களை அறிய “வடிகட்டியை” நாடுவதுபோல் – உங்களை நல்லவனாக மாற்றிக்கொள்ள “முகம் பார்க்கும் கண்ணாடியை” நாடுங்கள்.

கண்ணாடியிடம் இந்த 3 பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.

  1. நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கரையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்த கரையை கண்ணாடி கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை.  உள்ளதை உள்ளபடியே காட்டுகின்றது அல்லவா? – அதேபோல, உங்கள் சகோதரனிடம், நண்பரிடம், மனைவியிடம், கணவனிடம் எந்த அளவுக்கு குறை இருக்கின்றதோ அந்த அளவுக்குத்தான் அதை சுட்டிக்காட்ட வேண்டும்.  எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக்கூடாது.  துரும்பை தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
  2. கண்ணாடி முன்னால் நீங்கள் நிற்கும்போது தான் அது உங்கள் குறையை காட்டுகின்றது. நீங்கள் அகன்றுவிட்டால் – கண்ணாடி மௌனமாகி விடுகிறது அல்லவா? – அதேபோல, மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர்கள் இல்லாதபோது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது.
  3. ஒருவருடைய முகக்கரையை கன்னாடி காட்டியதால் – அவர் அந்த கண்ணாடிமீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே!  அதேபோல, உங்களிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் அவர்மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.  அந்தக் குறைகள் உங்களிடம் இருக்குமானால் திருத்திக்கொள்ள வேண்டும்.

உங்களுக்குள் இந்த தன் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.  இனி, எப்பொழுதெல்லாம் நீங்கள் கண்ணாடி முன்னால் நிற்கும்போதும் – இந்த அறிவுரை உங்கள் நினைவுக்கு வரட்டும்.

நல்லவர்களை அடையாளம் காண்பது எவ்வளவு முக்கியமோ – அதே அளவு நாமும் நல்லவர்களாக இருப்பது முக்கியம்.

“உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது” – இருத்தல் சிறப்பு.

“அடிப்பது போல கோபம் வரும் அதில் ஆபத்து இருக்காது – நீ அழுதால் நானும் அழுவேன் அதற்கும் காரணம் புரியாது” – என்பது தூய மனம்.

“நன்றியை மறந்தால் மன்னிக்கமாட்டேன் பார்வையில் நெருப்பாவேன் நல்லவர் வீட்டில் நாய்போல் உழைப்பேன் காலுக்கு செருப்பாவேன்” – என்பது தெய்வ குணம்.

இப்படி தூய மனமும், தெய்வ குணமும் கொண்டு வாழுங்கள்.  உங்கள் வாழ்க்கை சிறக்கும்.

அதுமட்டுமல்ல,

“வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2018

நோபல்பரிசு – 2018
சின்ன சின்ன மாற்றங்கள் பெரிய மாறுதல்கள்
வெற்றி உங்கள் கையில்-59
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 2
இலட்சியத்தை நோக்கி
மண்ணின் மகத்துவம் மகாத்மா காந்தியடிகள்
எப்போதோ போட்ட விதை!
முயன்றேன் வென்றேன்…
தன்னம்பிக்கை மேடை
மற்றவர்களை வசீகரிப்பது எப்படி?
அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா?
காய்ச்சலால் வரும் வலிப்பு (Febrile Fits)
வாழ நினைத்தால் வாழலாம் – 22
வின்னர்ஸ் அகாடமியின்
அலங்கரித்துக் கொள்…
துணிந்தவருக்கில்லை துயர்-நீங்கள் துணிச்சல் மிக்கவரா?
பயணங்கள் வெறுப்பதில்லை
சிந்திக்க வைக்கும் சீனா- 4
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…
உள்ளத்தோடு உள்ளம்