Home » Articles » இலட்சியத்தை நோக்கி

 
இலட்சியத்தை நோக்கி


தனலட்சுமி ப
Author:

எண்ணங்களே எல்லாம்

மனித வாழ்க்கை என்பது  நமக்குக் கிடைத்த பரிசு. நமது வாழ்நாளை வரலாறாக்கும் விதத்தில் நாம் ஒவ்வொரு நொடியும் முயற்சிக்க வேண்டும். வாழ்க்கை  என்பது எண்ணங்களின் பிரதிபலிப்பு. எண்ணங்கள் தெளிவானால் செயல்கள் உறுதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கரை காணா கல்வி:

நமது சிந்தனையைச் செம்மைப்படுத்துவது கல்வி. அத்தகு நற்கல்வியைக் கற்று, அதன்படி வாழ்ந்து, மற்றவர்க்கும் கற்பிக்கும் போது உள்ளம் அளப்பரிய ஆனந்தமும் நிறைவும் பெறுகிறது. வாழ்வும் முழுமையடைகின்றது. நிகழ்காலத்தில் நின்று எதிர்காலத்தை எட்டிப்பார்த்து, அதனை எதிர்கொள்ளும் வல்லமையை வழங்குவதே கல்வியாகும். எனவே ஆயுள் முழுதும் அறிவு நதியில் நீந்திக் கொண்டிருக்க வேண்டும். அவ்வறிவில்லாமல் கரையில் ஒதுங்கினால் காலம் நம்மை ஒதுக்கி விடும்.

அறிவுப்பயணம் :

கல்வி கரையில, கற்பவர் நாள்சில…

தீண்டத் தீண்ட இன்பம் பயக்கும் கல்வி, பள்ளி, கல்லூரிகளில் கற்றுவிடுவதால் நின்று விடுவதில்லை. வாழ்வில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டுமானால் கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும்.

புதிய தளிர்கள் மரத்தை உயிருடன் வைப்பதோடு, அதைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வருகிறது. அதுபோல புதிய கற்றலும் அறிவுத்தேடலும் இல்லையெனில் வாழ்க்கைப் பயணம் பாதியிலேயே நின்று விடுகிறது.

சிந்தனை அருவி :

சிந்தனை அருவி மனதில் ஊற்றெடுக்க வேண்டும். ஏனென்றால் ஒருவரது சிந்தனைகள்தான் செயல்களாகக் கருத்தரிக்கின்றன. அவையே அவரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்கின்றன. நல்ல எண்ணங்கள் மலர்வதற்கு ஏற்ற வகையில் மனதைப் பக்குவப்படுத்தும் கருவியே கல்வி. மனம் தெளிவாகவும் அமைதியாகவும் இருந்தால் அதில் இலட்சியக் கனவுகள் கண் விழிக்கின்றன. இந்த இலட்சியக் கனவுகள் செயல்வடிவம் பெறும் பொழுது தான் சாதாரண மனிதனும் சாதனை மனிதனாக வடிவம் பெறுகிறான்.

சுய ஊக்குவிப்பு :

வெற்றியின் விழுதுகளில் ஊஞ்சலாடுவதற்கு வியர்வை நதியில் நீந்த வேண்டும். சோர்வடையும் நேரத்தில் தம்மைத் தாமே தைரியப்படுத்தி ஊக்குவித்துக் கொள்ளும் வல்லமை படைத்தவர்களாகவும் திகழ வேண்டும்.

எறும்புகளின் பயணம்

தடைபடும் நேரத்திலும்

தடுமாறும் சூழலிலும்

தளரா முயற்சியுடன்

இலக்கினை நோக்கி..

மனிதர்களாகிய நாம், தமது திறமைகளைப் பற்றி உயர்வாக நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டு, பெரியவன், சிறந்தவன், திறமையானவன் என்ற செருக்கும் அகந்தையும் கொண்டிருத்தல் கூடாது.

நாளை நமதே :

நேற்றைய எண்ணம் இன்றைய செயல் ; இன்றைய சிந்தனை நாளைய செயல். ஆகவே இன்றைய காரியங்களைத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுடன், நாளைய தேவைகளுக்கும் நேரத்தை ஒதுக்குதல் அவசியமாகிறது. கடந்தகால இழப்பைக்கண்டு வருந்தாது, வருங்கால வளர்ச்சியை நோக்கி பயணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எதிர்ப்பு  ஓர் ஏணி :

ஓடும் நீர்தான் மீன்களுக்கு எதிர்ப்பாற்றலைக் கற்றுத்தருகிறது. எதிர்த்து நீந்த முடியாத மீன்களைத் தண்ணீர் அடித்துச் செல்கிறது.  இதனை உணர்ந்ததால் தான் போராடும் குணத்தைக் குட்டியிலேயே கற்றுக் கொள்கிறது.

அதுபோல எதிர்த்து வீசும் காற்றுதான் காற்றாடியை உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. கையில் இருக்கும் நூல் தான் காற்றாடிக்கு உந்து சக்தியாக அமைகிறது. எனவே, எதிர்ப்பும் கட்டுப்பாடும் வாழ்வின் ஏற்றத்திற்கான உந்துசக்திகள் என்பதைப் புரிந்து கொண்டால்,நம் மீது வீசப்படும் எதிர்க்கணைகளை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு செயலாற்ற இயலும்.

விசாலப் பார்வை :

தினசரி குறைந்தது ஒரு மணி நேரமாவது படிக்க வேண்டும். கிடைத்ததை எல்லாம் படிக்காமல் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். படிக்கப்படிக்கத்தான் அறிவுப்பசி அதிகரிக்கும். புதிய கருத்துக்கள் மனதிற்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் தரவல்லன. மேலும், அறிவு மனம் விரிய விரிய தன்னம்பிக்கை வேர்கள் மனதில் ஆழமாகப் பதிகின்றன.

தன்னம்பிக்கையும் தெளிவும் தரும் கருத்துக்கள் தான் வாழ்வின் வளமிக்க வழிகாட்டிகள்.

காரணங்கள் சொல்பவர்கள்

காரியங்கள் செய்வதில்லை

காரியங்கள் செய்பவர்கள்

காரணங்கள் சொல்வதில்லை.

தோல்வி தரும் பாடம் :

வெற்றி ஒருவரை வெளி உலகிற்கு அடையாளம் காட்டுகின்றது. ஆனால் தோல்விதான் அவரை அவருக்கே அறிமுகம் செய்து வைக்கின்றது. தோல்வி அடையும்பொழுது துவண்டு விடாமல் நிறைகுறைகளை அலசி ஆராயக் கற்றுக் கொண்டால், வெற்றிப் பாதையில் உள்ள தடைகளை எளிதில் அகற்ற முடியும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2018

நோபல்பரிசு – 2018
சின்ன சின்ன மாற்றங்கள் பெரிய மாறுதல்கள்
வெற்றி உங்கள் கையில்-59
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 2
இலட்சியத்தை நோக்கி
மண்ணின் மகத்துவம் மகாத்மா காந்தியடிகள்
எப்போதோ போட்ட விதை!
முயன்றேன் வென்றேன்…
தன்னம்பிக்கை மேடை
மற்றவர்களை வசீகரிப்பது எப்படி?
அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா?
காய்ச்சலால் வரும் வலிப்பு (Febrile Fits)
வாழ நினைத்தால் வாழலாம் – 22
வின்னர்ஸ் அகாடமியின்
அலங்கரித்துக் கொள்…
துணிந்தவருக்கில்லை துயர்-நீங்கள் துணிச்சல் மிக்கவரா?
பயணங்கள் வெறுப்பதில்லை
சிந்திக்க வைக்கும் சீனா- 4
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…
உள்ளத்தோடு உள்ளம்