Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி…?

புதியதேர் உலகம் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?   

முனைவர் கதிர்வேல்,

ஆசிரியர், கோவை. 

நாம் காணும் உலகம், அதாவது இந்த பூமிதோன்றி 460 கோடி ஆண்டுகள், அதில் உயிரினங்கள் தோன்றி 360 கோடி ஆண்டுகள், என்றாலும் அதில் மனிதர்கள் (Homo Sapiens) தோன்றி வெறும் 70,000 ஆண்டுகள்தான் ஆகிறது. பூமியில் தோன்றிய 99 சதம் உயிரினங்கள் அழிந்துவிட்டன, அவற்றின் எலும்புக்கூடுகள் சில நமக்கு கிடைத்துள்ளன. அதில் ‘டைனோசர்’என்ற மிகப்பெரிய உயிரினமும் அடங்கும். பூமியின் உயிரியல் வரலாற்றில் மனிதர்களைப் போன்ற Homo erectus என்ற ஒரு உயிரினம், 20 லட்சம் ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறது, பின்னர் அழிந்து போனது. மனித இனம், நீங்களும் நானும், நமது சந்ததியினரும் அவ்வளவு நீண்டகாலம் வாழ்வார்களா? என்ற அச்சம் உயிரியல் அறிஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அது நியாயமானதே. ஒவ்வொரு நாளும் செடி, பூச்சி, பறவை, மீன்கள், பாலூட்டிகள் என்று  150 முதல் 200 வரையிலான உயிரினங்கள் அழிந்து போகின்றன. இயற்கையை மனிதர்கள் அழிக்கும் இன்றைய உலகம் சரியில்லை, புதியதோர் உலகம் வேண்டும் என்ற உங்கள் ஆசையில் பொருள் இருக்கத்தான் செய்கிறது.

மக்கள் பெருக்கம் :

பூமியில் மக்கள் தொகை இன்று சுமார் 770 கோடி. இதில் சீனாவில் 137 கோடி, இந்தியாவில் 129 கோடி, அமெரிக்காவில் 33 கோடி மக்கள் வாழ்கின்றனர். சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டினர் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி விட்டனர், ஆனால் ஆப்பிரிக்கா, அரேபியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இந்தியா ஆகிய நாடுகளில் மக்கள் தொகை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் பெருக்கம் உலக நிலப்பரப்பில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அரேபிய நாடுகளிலிருந்து அகதிகள் ஐரோப்ப நாடுகளுக்கு கடல் வழி குடியேற முயற்சி செய்வதையும், அவர்களை அந்நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதையும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஆஸ்திரேலியா நாட்டினர் பிற நாட்டவரை அகதிகளாகக் கூட அனுமதிப்பதில்லை.

அந்தநாட்டு கடல் படையின் முக்கிய வேலை அகதிகளைத் திருப்பி அனுப்புவது தான். இருந்தாலும் பல ஆயிரம் மைல் கடல் கடந்து அகதிகள் அங்கு சென்ற வண்ணம் உள்ளனர். ரோகிந்திய அகதிகள் பர்மாவிலிருந்து இந்தியா வந்ததைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் நாட்டிற்குக் கூட அகதிகள் வருவதற்கு காரணம் அவர்கள் நிலை அதை விடமோசமானது என்பதுதான். இதற்கு முன்னதாக பல கோடி பங்களாதேச மக்கள் இந்தியாவில் குடியேறி விட்டனர். இவர்களின் வருகையால் வடகிழக்கு பகுதியில் மக்கள் பெருக்கம் ஏற்பட்டு பல பிரச்சனைகள் வெடித்து விட்டன.

நாமிருவர் நமக்கொருவர் :

கி.பி 1500 ஆம் ஆண்டு இந்த பூமியில் 50 கோடி மக்கள் மட்டுமே வாழ்ந்தனர். வேளாண்மை புரட்சி, தொழில் புரட்சி, அறிவியல் புரட்சி, மருத்துவ புரட்சி என்று ஏற்பட்டு, உலக மக்கள் தொகை ஏறிவிட்டது. அதுவும் நமது நாட்டில் 129 கோடி மக்கள் வசதியாக வாழ இடமும் இல்லை, அதற்கான வாழ் வாதாரங்களும் இல்லை. எனவேதான் பசி,  பட்டிணி, குழந்தை மரணம், வேலையில்லாத் திண்டாட்டம், போராட்டங்கள்,  குற்றங்கள் பெருக்கம் என்று பலபிரச்சனைகள் இருந்து வருகின்றது. புதியதோர் உலகத்தில், 50 கோடி மக்கள், இந்தியாவில் 5 கோடி மக்கள் வாழ்வார்கள். அவர்கள் உணவிற்கும், இருப்பிடத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் மற்றவர்களோடு போட்டியிடமாட்டார்கள். கள்ளம், கபடம், கொலை, கொள்ளை, லஞ்சம், லாவண்யம் என்று ஏதும் இருக்காது.

அரசியல் – சமூகம்:

இன்றைய உலகில், அதுவும் நமது நாட்டில் மக்கள் பல மதங்களாகவும், சாதிகளாகவும், மாநிலங்களாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். அவரவர் மதம், சாதி, கலாச்சாரம் மொழி மேலானது என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கூட சாதி பெயர்களைச் சூட்டி பெருமையுடன் நடமாடுகிறவர்களும் இருக்கிறார்கள். சாதி, மதமோதல்களை அடக்க இராணுவமே வரவழைக்கப்படுகிறது. ஜாதி திருவிழாவிற்கும், மதத்திருவிழாவிற்கும் பாதுகாப்பு அழிப்பது தான் காவல் துறையின் முதல் வேலையாக இருக்கிறது. ஏழை மக்களின் நேரமும், வரிப்பணம் கூட இது போன்ற பிரச்சனைகளுக்காக செலவிடப்படுகிறது. அனைவரும் சமம் என்பது நமது அரசியல் அமைப்பு சட்டம், இருந்த போதும் மனதளவில் அந்த ஏற்றத்தாழ்வுகள் இன்னும் இருந்து வருகிறது. புதியதோர் உலகில் மனிதர்களுக்கு சாதி, மத, இன, மொழி உணர்வுகள் இருக்காது. மனிதன் என்ற உணர்வு மட்டும் இருக்கும்.

அறிவியல்

பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் ஒரு தாயின் வழி வந்தவர்கள் என்ற உண்மையை பரிணாம உயிரியலில் நமக்கு குறியிட்டு காட்டியும், அது மக்களிடம் போய் சேரவில்லை, அல்லது அதை நம்பும் அளவிற்கு அவர்கள் இன்னும் அறிவியல் சிந்தனையாளர்கள் ஆகிவிடவில்லை. பெரும்பான்மையான மக்கள் பழைய நம்பிக்கை முறைகளையே கடைபிடிக்க விரும்புகிறார்கள். ஆனால் புதியதோர் உலகத்தில் மக்கள் அறிவியல் கற்கவும், தொழில் நுட்ப பயிற்சி பெறவும் ஆர்வம் காட்டுவார்கள். எல்லோருக்கும் கல்வி, தொழில் நுட்ப அறிவு, வேலை என்று அனைவரும் தனித்திறனுடனும், சம்பாதிக்கும் திறனுடனும் விளங்குவார்கள். உலக பிரச்சனைகளை அறிவியல் கண்ணாடி வழியாகப் பார்ப்பார்கள். இதனால், மக்கள் பணக்கஷ்டம் இல்லாமல் சுதந்திரமாக வாழ்வார்கள், பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் குழந்தைகளுக்கு போதுமான மரியாதை கிடைக்கும்.

தேசபற்று:

இன்றைய உலகத்தில் ஒருநாட்டவருக்கு அண்டை நாட்டவருடன் சுமூக உறவு இல்லை. ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில அணு ஆயுதங்களை குவித்துவைத்துள்ளனர். அதுவும் அந்த ஆயுதங்களை அவர்களாகத் தயாரிக்கவில்லை, வளர்ந்த நாடுகளிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்கள் கொடுத்து வாங்கியுள்ளனர். இது எல்லாம் ஏழை மக்களின் வரிப்பணம்.

இதோடு ஒரு நாட்டில் மற்ற  நாட்டைப் பற்றி அவதூறு பரப்புவதும் வெறுப்பு பேசுவதும் வாழக்கையாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் அரசியலே இதை வெறுப்பை நம்பித்தான் இருக்கிறது. மற்ற நாட்டை வெறுப்பது தான் நாட்டுப்பற்று என்றும் ஆகிவிட்டது. புதியதோர் உலகில் அணு ஆயுதங்கள் இருக்காது, இராணுவங்கள் எல்லைகளில் குவிக்கப்படமாட்டாது. அண்டை நாட்டவர் நேசக்கரம் நீட்டி சகோதரர்கள் போல் நடந்து கொள்வார்கள். இன்னொரு நாட்டிற்குச் செல்ல‘விசா’,‘பாஸ்போர்ட்’போன்றவை தேவைப்படாது.

உலககுடிமகன்:

அறிவியல் கற்றவர்களும், அறிவிலை நேசிப்பவர்களும் புதியதோர் உலகில் பெருமளவு இருப்பதால் அவர்கள் தேசத்தின் எல்லைகளையும் மறந்து உலக குடிமக்களாக மாறுவார்கள். உலகம்தான் அவர்களின் தேசம் என்றாகிவிடும். உலகம்தான் மனித இனத்தின் நாடு என்ற உணர்வுடன் மக்கள் வாழும் போது தேசபக்தி மறையும், பூமிபக்திதோன்றும். பூமியைக் காக்க மனிதன் புறப்படுவான்…ஆற்றில் சுத்தத்தண்ணீர் ஓடும், கடல்நீர் மாசுபடுவது தடைசெய்யப்படும், கடலில் மீன்பிடிப்பு கட்டுப்படுத்தப்படும், காடுகளை விட்டு மனிதன் வெளியேறி விலங்குள் அங்கு பாதுகாப்பாக வாழவழிவிடுவான்.

புதியதோர் உலகில் மனிதன் விளை நிலங்களை அழிக்கமாட்டான், காடுகளை அபகரிக்கமாட்டான், வன விலங்குகளை வேட்டையாடமாட்டான், நிலக்கரி, மணல், கருங்கல் போன்றவற்றை சூறையாடமாட்டான். மோட்டார் வாகனங்கள் பயன்படுத்துவதை விட்டு சைக்கிள், குதிரை வண்டிகள் பயன்படுத்துவான்.

யெற்கைவிவசாயம் :

புதியதோர் உலகில் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படமாட்டது. அவை மோசமான பூச்சிகளை கொன்று விடுவதோடு அனைத்து புழு பூச்சிகளையும் கொன்று விடும், தேனீக்கூட்டம் கொத்துக்கொத்தாக செத்து மடியும். உலகில் உள்ள அனைத்து பூச்சிகளையும் (insects) இன்று கொன்று குவித்துவிட்டால், 50 ஆண்டுகள் கழித்து பூமியில் ஒரு மனிதன் கூடவாழமாட்டான்; ஆனால் இன்று மனிதர்கள் முற்றிலும் அழிந்தால் 50 ஆண்டுகள் கழித்து பூமியில் அனைத்து உயிரினங்களும் புத்துயிர்பெற்று, பூமியே பூத்து குலுங்கும், என்றார்‘ போலியோ’நோய்க்கு மருந்து கண்டுபிடித்த ஜோனல் சாலக் என்ற அமெரிக்க நாட்டு மருத்துவஅறிவியல் அறிஞன்.

புதியதோர் உலகில் வசதிபடைத்தவர்கள் இன்று போல அதிகஉணவு உண்டுஅது செரிமானம் அடைய அவதிப்படமாட்டார்கள். மனிதர்கள்  மிருகத்தின் மாமிசத்தை உண்பதை குறைத்து பழங்களையும், காய்கறிகளையும், பயறுவகைகளையும் அதிகம் உண்பார்கள்.

எனவே, புதியதோர் உலகில் அனைத்து உயிரினங்களும் வாழும், அதில் மனிதர்களும் இருப்பார்கள். மதங்கள் இருக்காது, எனக்கு எல்லாம் தெரியும் என்று பேசி, அறிவியலை குறை கூறும் மகான்களும் இருக்கமாட்டார்கள். இதில் ஏழைகள் என்று எவரும் இருக்க மாட்டார்கள். அனைவரும் அறிவியல் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இந்த நாட்டவர், இனத்தவர், மொழியினர் என்ற பாகுபாடு இல்லாமல் ‘மனிதர்கள்’என்ற உணர்வுடன் அவர்கள் கவலையின்றி இருப்பார்கள். “வாழ்;வாழவிடு” என்பதுதான் இயற்கையுடன் ஒன்றி வாழும் புதியதோர் உலக மனிதனின் கோட்பாடாக இருக்கும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2018

நோபல்பரிசு – 2018
சின்ன சின்ன மாற்றங்கள் பெரிய மாறுதல்கள்
வெற்றி உங்கள் கையில்-59
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 2
இலட்சியத்தை நோக்கி
மண்ணின் மகத்துவம் மகாத்மா காந்தியடிகள்
எப்போதோ போட்ட விதை!
முயன்றேன் வென்றேன்…
தன்னம்பிக்கை மேடை
மற்றவர்களை வசீகரிப்பது எப்படி?
அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா?
காய்ச்சலால் வரும் வலிப்பு (Febrile Fits)
வாழ நினைத்தால் வாழலாம் – 22
வின்னர்ஸ் அகாடமியின்
அலங்கரித்துக் கொள்…
துணிந்தவருக்கில்லை துயர்-நீங்கள் துணிச்சல் மிக்கவரா?
பயணங்கள் வெறுப்பதில்லை
சிந்திக்க வைக்கும் சீனா- 4
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…
உள்ளத்தோடு உள்ளம்