Home » Articles » சிந்திக்க வைக்கும் சீனா

 
சிந்திக்க வைக்கும் சீனா


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

ஷாங்காயில் A.P. மால் என்ற பெரிய கடைத் தொகுதி சென்று, பொருட்கள் வாங்க ஒரு மணி நேரம் சுற்றினோம். பலர் சூட்கேஸ், பேக் வாங்கினர். நான் மேக்னெட் சாவனிர் வாங்கினேன்.

அதன் பிறகு ஹூவாங்பு நதியில் படகுப் பயணம் சென்றோம். இந்த இடத்தில் நதி 400 மீட்டர் அகலமும் 9 மீட்டர் ஆழமும் உள்ளதாம். இந்நதி நகரை இரண்டாகப் பிரிக்கிறது.

2 மாடியுள்ள சிறு கப்பலில் (CRUISE) 50 நிமிடப் பயணமாக இரவு 7.20 முதல் 8.10 முடிய நதியில் சென்று திரும்பினோம். கரையில் கட்டடங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. நதியில் பல கப்பல்கள் வண்ண விளக்குகளுடன் கடந்து சென்றது கண் கொள்ளாக்காட்சியாகும்.

பின் பஸ் ஏறி ஓட்டல் திரும்பி இரவு உணவாக கொத்து பரோட்டா, மெதுவடை, சாம்பார், தயிர்சாதம் சாப்பிட்டு 9.30 க்கு அறைக்குச் சென்றோம்.

சீனா முழுதும் வாட்ஸ் அப், கூகுள், பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. போட்டோக்களை அங்கிருந்து அனுப்ப இயலவில்லை.

நான் சீனா சிம் ஒன்று ரூ 2200 க்கு வாங்கி, இந்தியாவிலிருந்த குடும்பத்தாருடன் பேசினேன். 180 நிமிடம் பேசலாம் என்றனர். இதை விட இங்கிருந்தே சிம் கார்டில் பேசும் வசதியுடன் செல்வது சிறந்தது.

மறுநாள் 6 மணிக்கு எழுந்து தயாரானோம். 7.30 மணிக்கு வழக்கம் போல் காலை உணவு முடித்து 8.30 க்கு பஸ்ஸில் சுற்றிப் பார்க்க புறப்பட்டோம்.

10 மணிக்கு லோங்கியாங் என்ற ரயில் நிலையம் சென்றோம். இங்கிருந்து புடாங் விமான நிலையத்துக்கு தூரம் 30 கி.மீ. இத்தூரத்தை மேக்னெட் ரயில் 7 நிமிடங்களில் கடக்கிறது.

போக வர டிக்கெட் 80 யுவான் தான். ஆனால் கைடு முதல் நாளே 100 யுவான் என வசூலித்து விட்டார். கேட்டதற்கு பதிலே சொல்லவில்லை. 33 பேருக்கு 660 யுவான் சுமார் 7000 அவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்.

டிரைவர் இல்லாத ரயில். புறப்பட்டு வேகம் கூடிக் கொண்டே 430 கி.மீ சென்று சிறிது நேரம் ஓடி, பின் குறைந்து கொண்டே வந்தது. விமான நிலைய ரயில் நிலையத்தில் இறங்கி, அதே ரயிலில் ஏறித்திரும்பினோம்.

விமான நிலையம் போல் பாதுகாப்புச் சோதனை கடுமை. சிகரெட் லைட்டர் பிடுங்கி குவித்து வைத்துள்ளனர். வெளியே வரும் போது எடுத்துக் கொள்ளலாம்.

ரயிலிலிருந்து வெளியே பார்த்தால், சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து வருவது போல் தெரிந்தன.

பின் பஸ் ஏறி 50 கி.மீ பயணித்து ஜூஜியாவோ என்ற தண்ணீர் கிராமத்துக்குச் (WATER VILLEGE) சென்றோம். 1700 வருட பழமையான ஊர்; 47 சதுர கி.மீ பரப்புடையது என்றனர்.

நடுவில் ஒரு வாய்க்கால் ஓடுகிறது. கடந்து செல்ல ஆங்காங்கே 36 பாலங்கள் உள்ளன. துடுப்பு படகுகள் பல உள்ளன. பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணித்தனர். 70 மீ. நீளமும் 6 மீ. அகலமும் உள்ள பெரிய பாலம் ஏறி இறங்கத் தக்க வடிவில் அமைத்துள்ளனர். வாகனங்கள் செல்கின்றன. இதன் பெயர் பேங்செங் ஆகும்.

இந்தப்பகுதியில் ஸ்ட்ராபெரி விளைவிக்கின்றனர். அசைவ உணவு விடுதிகள் ஏராளம். நண்டு, மீன்களை உயிருடன் குவியலாக வைத்து விற்கின்றனர். பொரியால் முறுக்கு போன்றும் தட்டு வடை போன்றும் இனிப்பு சேர்த்து தயாரித்து தருகின்றனர். ருசித்துப் பார்க்க சிறு துண்டுகள் கொடுத்தனர்.  நன்றாகத்தான் இருந்தது.

ஜவ்மிட்டாய் இழுத்து இழுத்து தயாரிப்பது, சிப்பியிலிருந்து முத்து எடுப்பது அரிதான காட்சியாகக் கண்டோம். 1.15 மணி நேரம் சுற்றிப் பார்த்து, பஸ் ஏறி மதிய உணவுக்கு ஓட்டலுக்குத் திரும்பினோம். வழியில் டோல்கேட் உள்ளது. சாலையின் இருபுறமும் பசுமை தான்.

3.15 க்கு சாதம், வத்தக்குழம்பு, ரசம், பால்பாயசம், மெதுவடை, கூட்டு, பொரியல் வடகம் சாப்பிட்டோம். இரவு ரயிலில் சாப்பிட 4 இட்லி, பொடி மற்றும் தயிர்சாதம் கொடுத்தனர்.

நகரின் மிகப் பெரிய மால் உள்ள ரோட்டின் வழியாக பஸ் சென்றாலும், நிறுத்தி இறங்க இடமில்லாததால் நேரே 5.30 மணிக்கு ஷாங்காய் ரயில் நிலையம் சென்றோம்.

டிக்கெட் உடன் அடையாள அட்டை (பாஸ்போர்ட்) சரிபார்த்து விமான நிலையம் போல் உள்ளே அனுமதிக்கின்றனர். பெட்டிகளை ஸ்கேன் செய்து 1500 கி.மீ தூரத்திலுள்ள ஷியான் என்ற நகருக்கு Z 92 என்ற தூங்கும் வசதியுள்ள ரயிலில் மாலை 6.15 க்குப் புறப்பட்டோம். எங்கள் பெட்டி ஷாப்ட் என்பதால் கட்டணம் ரூ.880 இதுபோல் 20 ரயில்கள், ஓடிக் கொண்டுள்ளன. ரயில் மிக சுத்தமாயிருந்தது. அகல ரயில்பாதை தான். மீட்டர் கேஜ் ரயில் போல 4 படுக்கைகள் (2/2) ஒருபுறம் கதவுடன்- ஒரு பகுதி நடைபாதை என்றிருந்தது.

அடிக்கடி வந்து சுத்தம் செய்கின்றனர்.டிக்கெட் பரிசோதகர் (பெண்) வந்து டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, பிளாஸ்டிக் அட்டை ஒன்று கொடுத்தார். இறங்குமிடத்துக்கு முன் அட்டையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு டிக்கெட்டைக் கொடுத்தார்.

ஆங்கிலம் பேசினாலும் சிலருக்கு மட்டுமே புரிகிறது. சிறு வண்டிகளில் உணவுப் பொருட்கள், விளையாட்டு சாமான்கள் தள்ளிக் கொண்டு வந்து விற்கின்றனர்.

அதிவேக ரயிலின் (புல்லட்) பயண நேரம் சுமார் 7 மணி, வேகம் மணிக்கு 300 கி.மீ. தூங்கும் வசதி ரயிலின் வேகம் 120 கி.மீ மறுநாள் காலை 9.30 க்கு ஷியான் நகர் சென்றோம். 15 மணி நேர பயணம் அலுப்பே இல்லை.

சாலையில் இருபுறமும் பசுமையான கிராமங்கள் பார்த்தோம். அங்கும் பலமாடிக் கட்டடங்கள் உள்ளன. இரவுப் பயணம் சுகமாகவே இருந்தது.

நான் இரவு 2 இட்லி, தயிர்சாதம் சாப்பிட்டு மீதி 2 இட்லியைக் காலையில் சாப்பிட்டேன். ரயிலில் 3 வாஷ்பேஷினுக்கு தனி அறை என ஒதுக்கியுள்ளனர்.

ரயிலில் அணிந்து கொள்ள துணி கேன்வாஷ் செப்பல் கொடுத்தனர். காலை அவைகளைக் குப்பையாகச் சேகரித்தனர். ரயில் நிலையத்தில் அந்த ஊர் கைடு சகோதரி ஜெஸிகா வரவேற்று பஸ்ஸீக்கு அழைத்துச் சென்றார்.

காத்திருப்போம்-

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2018

புதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு
வெற்றி உங்கள் கையில் – 58
வாசியுங்கள்! வாகை சூடலாம்
உன்னால் முடியும் போராடு உலகை வென்று பூச்சூடு….
பெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
வீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை?
தன்னம்பிக்கை மேடை
காய்ச்சல்
மற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்
உடம்பும் – இலக்கும்
சிந்திக்க வைக்கும் சீனா
வீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை
தலைவலி
“வாழ நினைத்தால் வாழலாம்” – 21
முதுமையா? முதிர்ச்சியா?
உள்ளத்தோடு உள்ளம்