Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி? 

தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லையே அதற்கான காரணங்கள் பற்றிச் சொல்லுங்கள்?   

ஷாலினிபிரியா.கோ

கணிதவியல் துறைஆய்வாளர்

சேலம்மாவட்டம், மூக்கனூர்.

கண்டுபிடிப்புகள் மகத்தானவை, கண்டுபிடிப்புகள் மூலம் இன்று உலகம் வாழத் தகுந்த இடமாக மாறியிருக்கிறது. நம்மைச் சுற்றி இருப்பவை அனைத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றாலும் அறிவியலைப் பற்றிய ஆர்வமும் ஞானமும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் அறிவியல் பற்றியும், கண்டுபிடிப்புகள் பற்றியும் கேள்வி எழுப்பியமைக்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

காரைக்குடியில் மின்வேதியியல் ஆராய்ச்சி மையம், காவலூரில் விண்வெளி ஆய்வு மையம் என பல ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இவைகளில் கண்டுபிடிப்புகள் விவரம் என்னிடம் இல்லை, ஆனால் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களில் அரிசி, கரும்பு, காய்கறி, பழங்கள் என அதிக விளைச்சல் தரும் ரகங்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சென்ற ஆண்டு மட்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எட்டு வீரிய ரகங்களும் மூன்று பண்ணைக் கருவிகளும் வெளியிட்டிருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த ரகங்களை நாம் தினமும் உணவாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஏழுகோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 2250 பள்ளிக்கூடங்களும் 552 பொறியியல் கல்லூரிகளும், 1150 அறிவியல் கலைக்கல்லூரிகளும், 53 பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. இந்தக் கல்விச்சாலைகளில் படிக்கும் மாணவர்களும் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறார்கள். அவற்றை அறிவியல் கண்காட்சிகளில் அறிமுகப்படுத்துகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் கரூர், வெள்ளியணை அரசுப்பள்ளியில் படித்த ஹரிகரன் என்ற மாணவன் உலர் கழிப்பறை ஒன்றைத் தயாரித்தார். அவனுக்கு உதவியாய் இருந்தவர் ஆசிரியர் தனபால். இருவரையும் அழைத்துப் பாராட்டினேன். அந்த மாணவனை ஜப்பானிற்கு அனுப்பி வைத்தது அரசு. அவருக்கு ஒரு பள்ளிக்கூட தாளாளரிடம் உதவி பெற்று, அவரைத் தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்தேன்.

ஹரிகரனைப் போல மாணவர்களும், தனபால் போன்ற ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களைக் கண்டு ஆச்சரியப்படவும், பாராட்டவும், அறிவுரை கூறவும், அக்கறைகாட்டவும், பரிசளிக்கவும் பொதுமக்கள் இங்கு இல்லை. அவர்களுக்கு வெற்றியின் மீது எல்லாம் அக்கறை இல்லை. ஏதாவது ஒரு ஊருக்குப் போய் சில சம்பிரதாயங்களைச் செய்தால் அவர்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நம்பி அங்கு சென்று, இருக்கும் பணத்தை செலவு செய்து வீட்டிற்குத் திரும்பி வரும் போது குளிர் அல்லது ஜுரம் என்று நோயையும் வாங்கி வந்து விடுவார்கள். இதில் ஒரு வார காலத்தையும், ஒரு ஆண்டு சம்பாதித்த பணத்தையும் தொலைத்துவிட்டு, தொடர்ந்து அதேநிலையில் வாழ்கிறார்கள். ஆக, அறிவியல் சிந்தனை இல்லாததும், அறிவியலை புரியும் நிலையில் இல்லாத மக்கள் இருப்பதால் இது போன்ற மாணவர்கள் கண்டுபிடிப்புகளுக்கு மரியாதை இல்லாமலும், அங்கீகாரம் இல்லாமலும், ஆதரவு இல்லாமலும் போய்விட்டன. மக்களுக்கு அக்கறை இல்லாமல் இருப்பதால், ஊடகங்களும் இவற்றைக் கண்டு கொள்வதில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது.

அதேவேளையில் மாணவர்கள் பருவக்கோளாறு காரணமாக ஒரு சிறிய தவறு செய்துவிட்டால், அதை பெரிய உலக நிகழ்ச்சியைப் போல் சித்தரித்து ஊடகங்கள் விவாதம் நடத்தி, அந்தப் பிள்ளைகளை அவமானப்படுத்தி, பெற்றோரை வில்லன்களாக மாற்றி, ‘கலாச்சாரம் கெட்டுப் போய்விட்டது’என்று கூச்சலிட்டு, அந்த வளர் இளம் பருவ குழந்தைகளைப் பள்ளியிலிருந்தே வெளியேற்றி விடுவார்கள். குழந்தைகள் மீது விஷத்தைக் கக்கும் அறம் போதிக்கும் பெரிய மனிதர்கள் பள்ளிகளில் ‘கலாச்சாரம் கெட்டுப் போய்விட்டது’, ‘படிப்புதான் பண்பாட்டைக் கெடுத்தது’என்று கூச்சலிடுவார்கள். தவறு செய்த  சிறுவனை அல்லது சிறுமியை அழைத்து, அறிவுரை கூறி, மன்னித்து, மீண்டும் இந்தச் செயலை செய்யாமல் பார்ப்பதுதான் அறிவார்ந்த நடவடிக்கையே தவிர, அவர்களை அவமானப்படுத்துவது அல்ல. ஏனென்றால் ஒரு தவறான செயலைச் செய்த மாணவன், அவனாகவே திருந்திவிடுவான். அவன் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்த்தும் ஆற்றல் படைத்தவன். அந்தப் படைப்பாளிக்கு நாம் மரியாதை செலுத்தினால், அவன் ஊக்குவிக்கப்படுகிறான்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் போது ஒரு உண்மையைப் பகிர வேண்டும். மின்சாரம், ஆகாய விமானம், தொலைபேசி, கணினி, இணையதளம் போன்ற உயர்ந்த கண்டுபிடிப்புகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டால் அதற்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் நிச்சயமாக உலக அளவில் கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் உண்டு. நோபல் பரிசு கமிட்டியும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட வியக்கத்தக்க அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் கண்டுபிடிக்கவில்லை என்பதோடு அப்படி கண்டுபிடிக்கும் அளவுக்கு அறிவியல் அறிவும், ஆராய்ச்சித்திறனும், அறிவியல் கட்டமைப்பும், ஊக்குவிப்பும், நிதி வசதியும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை.

சுதந்திரத்திற்கு முன்பு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், மருத்துவமனைகளும் ஆராய்ச்சியின் பிறப்பிடங்களாகத் திகழ்ந்தன. அறிவியலுக்கு நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் என்பவர். மாநில கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் படித்தவர். இதே பல்கலைக்கழகத்தில் படித்தவர் தான் உலகத்தர பொறியாளர், பாரதரத்னா விஸ்வேஸ்வரய்யா. தமிழ்நாட்டில் பணியாற்றிய ஆங்கில மருத்துவர் ரொனால்ட் ரோஸ் என்பவர் மலேரியா நோய் பற்றிய ஆராய்ச்சி செய்து, நோயை பரப்புவது பெண் அனாபிலஸ் கொசு என்று அடையாளம் கண்டு அந்தக் கொசுவை ஊட்டிக்கு அருகிலுள்ள குன்னூரில் பிடித்து, ஆய்வு செய்துநோய் தடுக்கும் விதத்தை கண்டுபிடித்தார். அதற்காக இவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரும் நம்மூரில்தான் மருத்துவப் பணியாற்றினார்.

ஆனால் இது போன்ற தரமான ஆராய்ச்சிகள் இன்று நடை பெறுகின்றனவா? என்று தெரியவில்லை. உலகம் திரும்பிப்பார்க்கும் ஆராய்ச்சியும், கண்டுபிடிப்பும்; இங்கு நடப்பதாகக் கேள்விப்படவில்லை. நமது பல்கலைக்கழகங்களின் தரம் எப்படி இருக்கிறது அல்லது இறங்கி இருக்கிறது என்பதைப் பார்த்தால் உண்மை நிலை புரியும். உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் (QS world university ranking) நாம் உயர்வாகக் கருதும் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தில் இல்லை, அது 650வது இடத்தில் இருக்கிறது.

இப்படியாக கல்வியிலும் ஆராய்ச்சியிலும் பின்தங்கி போனதற்கு அறிவியல் மீது அக்கறை இல்லாமல் போனதும், அறிவியலை ஊக்குவிக்காததும் காரணமாக இருக்கிறது. அறிவியல் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா 36 லட்சம் கோடி ரூபாயும், சைனா 32 லட்சம் கோடி ரூபாயும், ஜப்பான் 12 லட்சம் கோடி ரூபாயும் செலவு செய்யும் போது இந்தியா 4.6 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்கிறது. தென்கொரியா நாடு, வருமானத்தில் 4.3 சதம் செலவிடும்போது, நம் நாட்டில் நமது வருமானத்தில் ஒரு சதமானத்திற்கும் குறைவாகவே ஆராய்ச்சிக்கு செலவிடுகிறோம். அரசியலுக்கும், மதத்திற்கும், கிரிக்கெட்டிற்கும், சினிமாவிற்கும் எத்தனை தொலைக்காட்சி சேனல்கள் என்று பாருங்கள், ஆனால் எல்லாவற்றையும் விட மேலான அறிவியலை விவாதிக்க தமிழ்நாட்டில் ஒரு தொலைக்காட்சி சேனலாவது உண்டா என்றும் பாருங்கள்.

முடிவுரை: நமது மாணவர்களும், ஆசிரியர்களும் சில கண்டுபிடிப்புகளைள உருவாக்கியிருக்கிறார்கள். அவை வியக்கத்தக்க, வேறு எங்கும் உருவாக்காத கண்டுபிடிப்புகள் அல்ல, என்றாலும் அவற்றை நம் மக்கள் கண்டு கொள்வது இல்லை. போலி அறிவியல், மூட நம்பிக்கை, பொழுது போக்கு என்ற மனப்பான்மையில் மக்கள் மூழ்கிக்கிடப்பது அறிவியல் கண்டுபிடிப்புகள் தோன்றாததற்கு காரணமாக இருக்கிறது. உலகம் அங்கீகரிக்கும் கண்டுபிடிப்புகள் ஏற்பட வேண்டும். அதற்கு அறிவியல் ஆர்வத்தை பிள்ளைகள் மனதில் உரமிட்டு வளர்க்க வேண்டும். அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. அறிவியல் ஆர்வம் மிக்க மாணவர்களையும், ஆசிரியர்களையும் நான் பெரிதும் மதிக்கிறேன்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2018

புதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு
வெற்றி உங்கள் கையில் – 58
வாசியுங்கள்! வாகை சூடலாம்
உன்னால் முடியும் போராடு உலகை வென்று பூச்சூடு….
பெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
வீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை?
தன்னம்பிக்கை மேடை
காய்ச்சல்
மற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்
உடம்பும் – இலக்கும்
சிந்திக்க வைக்கும் சீனா
வீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை
தலைவலி
“வாழ நினைத்தால் வாழலாம்” – 21
முதுமையா? முதிர்ச்சியா?
உள்ளத்தோடு உள்ளம்