Home » Articles » மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…

 
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…


தாராபுரம் சுருணிமகன்
Author:

மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்களையும், தங்கள் கண்டுபிடிப்புகளின் மூலம் இந்த உலகுக்குப் புதிய படைப்புகளைச் சமர்ப்பித்த விஞ்ஞானிகளையும், எந்தச் செயலிலும் வெற்றி ஒன்றையே காணும் மனோதிடமுள்ள – தன்னம்பிக்கையுள்ள மனிதர்களையும் நினைத்துப் பாருங்கள்! இவர்கள் இந்தச் சாதனைகளைச் செய்வதற்குப் பக்கபலமாக இருந்தது எது? தங்களிடத்திலுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். எவரையும் ஏறெடுத்துப் பார்க்காமல், தங்கள் செயலில்  முழு மூச்சாக ஈடுபட்டதுதான் இவர்களுடைய வெற்றிக்குக் காரணமாகும். சேணம் பூட்டப்பட்ட குதிரை, இடதுபக்கம், வலது பக்கம் திரும்பாமல் நேரான வழியிலேயே சென்று கொண்டிருக்கும். அதைப் போல இவர்கள் மற்றவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தங்கள் லட்சியத்தில் உறுதியாக இருந்தார்கள். இதனால் இவர்கள் எந்தச் செயல் செய்தாலும் அதில் வெற்றி பெற்றார்கள்.

“நான் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னையும், என்னுடைய செயல்களையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!” என்று விஞ்ஞானி நினைத்தால், அவரால் தான் செய்யும் ஆராய்ச்சியில் வெற்றிபெற முடியுமா? நிச்சயம் முடியாது.

ஆய்வு நோக்கத்திலிருந்து அவர் தடம் புரண்டு வந்து விட்டால், அவரால் எந்த ஆய்வையும் சரிவரச் செய்ய முடியாது.

ஒரு சாதனையைச் செய்ய நினைக்கும் வீரர், அதன் மேலே கண்ணாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்கள் தன்னைக் கேலி பேசுவார்களோ, விமர்சனம் செய்வார்களோ என்ற ஆராய்ச்சியில் இறங்கினால் அந்த வீரரால் எந்தச் சாதனையையும் செய்ய முடியாது.

அவரவர் செயலைச் செய்யும் பழக்கம்  மேலை நாடுகளில் அதிகம். அவர்கள் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் நம் நாட்டில் இது தலைகீழாக இருக்கிறது. ஒருவர் ஒரு செயலைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்றால், அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டும், பல விமர்சனங்கள் செய்து பேசிக் கொண்டும், அவரைப் பற்றிய  கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்து விட்டும் நேரத்தைப் போக்குகின்றவர்களே, இங்கு அதிகம்! தேவையில்லாமல் வேண்டுமென்றே ‘தொண தொண’ என்று பேசிக் கொண்டு, செயலில் மூழ்கியிருக்கும் உங்களைக் கெடுக்க நினைப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

அடுத்தவர் செயலைக் கூர்ந்து பார்க்கின்ற ‘பண்பு’, படித்தவரிடத்திலும் இருக்கிறது, படிக்காதவரிடத்திலும் இருக்கிறது. ஆராய்ச்சியில் மூழ்கிக் கொண்டு தங்களையே மறந்து விடும் அறிஞர்களுக்கு உறுதுணையாக யாரேனும் செல்வாரேயானால், அது மிகப் பெரிய உதவியாக இருக்கும். அவ்வாறு செய்யாமல், அவரையே பார்த்துக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும், தங்களுடைய நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் ‘உத்தமர்களை’ எப்படிப் பாராட்டுவது?.

ஒரு ஆய்வில் தன்னையே ஈடுபடுத்திக் கொண்டு, அதில் மூழ்கி இருக்கும் போது புதிய சிந்தனைகளும், கண்டுபிடிப்பும், ஒரு விஞ்ஞானிக்குத் திடீரென்று உதயமானது. குளியலறையிலிருந்த அவர் தன்னையும் மறந்து ‘யுரேகா! யுரேகா!’ என்று கூவிய படியே வீதிகளில் ஓடினார். மற்றவர்களைப் பற்றி அவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் ஒரு மாபெரும் உண்மையை அவரால் கண்டுபிடித்திருக்க முடியாது. உலகப் புகழ் பெற்ற அந்த விஞ்ஞானி யார் தெரியுமா? ஆர்க்கிமிடீஸ் தான்! (யுரேகா என்றால் கண்டுபிடித்து விட்டேன், என்று பொருள் படும்.)

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2018

நிதானமும் நீள் ஆயுளும்
“வாழ நினைத்தால் வாழலாம்” -20
வாழ்வை அமைக்கும் நேயம்
திருக்குறள் விழிப்புணர்வு முகாம்
சிந்திக்க வைக்கும் சீனா
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்
பக்கவாதம்
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஈர்ப்பும் ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில் -57
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
தமிழ் ஒரு பக்தி மொழி
தன்னம்பிக்கை மேடை
ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!
உள்ளத்தோடு உள்ளம்