C.பிரதீப்
நிர்வாக இயக்குநர், ஜெயச்சந்திரன் குரூப் ஆப் கம்பனிஸ்
நிர்வாக அறங்காவலர்,லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன்,
கோவை
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற பொன் மொழிக்கு ஏற்றவாறு முதல் தலைமுறையினரின் வழிகாட்டுதலால் இரண்டாம் தலைமுறையினரான இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையைôய் வாழ்ந்து பல சாதனைகளைப் புரிந்து வருபவர்களில் இவரும் ஒருவர்.
நம்பிக்கையோடு நடைபோடு நாளைய உலகம் உன் கையில் என்ற தாரக மந்திரத்தை நாளெல்லம் நினைத்து, அதன் வழி உழைத்து, இன்று உயர்ந்த சாதனையாளர்களில் இவரும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையல்ல.
தோல்வி வரும் போது அதைப் படிக்கற்கலாக மாற்றுங்கள், அதுவே வெற்றி பெரும் பொழுது அதை ஊக்கப்படுத்தும் கருவியாகக் கொண்டு மேலும் வளருங்கள் என்னும் தன்னம்பிக்கை வரிகளுக்குச் சொந்தகாரர்.
உன்னதமான பல சேவைகளை செய்து, கூட்டாக, குழுக்களாக ஒன்றிணைந்து இயற்கையோடு இணைந்து வாழ மரங்கள் நட்டும், பல மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் சுய வேலை வாய்ப்பு கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளி விளக்கை ஏற்றி வைத்திருக்கும் சாதனையாளர்.
இவரின் மிகப்பெரிய பலம் சகோதரத்துவம் சார்ந்த ஒற்றுமை, முதல் தலை முறையினரின் வழிகாட்டுதலை பேணுதல், சிறந்த மேலாண்மைத்துவம் மிக்கவர், அனைவரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடியவர், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மிக்கவர் இப்படி பன்முகம் திறமைக் கொண்ட ஜெயச்சந்திரன் குரூப் ஆப் கம்பனிஸ் நிர்வாக இயக்குநர், லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன் அறங்காவலர் C.பிரதீப் அவர்களின் நேர்முகத்திலிருந்து இனி பயணிப்போம்.
கே : உங்களின்கூட்டுக் குடும்பத்தைப் பற்றச் சொல்லுங்கள்?
எங்களுடைய பூர்வீகம் என்று பார்த்தால் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். இங்குதான் என் தந்தைப் பிறந்தார். என் தந்தையின் பெயர் திரு. பி. சந்திரசேகர், தயார் திருமதி. ஜெயலட்சுமி, பெரியப்பா பி. அன்பழகன், சித்தப்பா பி. ராமலிங்கம், மற்றும் பி. ஆறுமுகம். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். இப்பகுதியில் என்னுடைய தாத்தா வெங்காய வியபாரம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இவ்வியபாரம் எப்பொழுதும் ஒரே விலை நிலையாக இருக்காது. இதனால் இத்தொழில் தொய்வு அடைந்தது.
சில ஆண்டுகளிலேயே என்னுடைய தாத்தா மரணம் அடைந்து விட்டார். இதனால் என் தந்தைக்கும் அவர் உடன்பிறந்தவர்களுக்கும் குடும்பத்தின் மீது பொறுப்பு கூடியது. இதனால் அவர்கள் வேலைக்குச் செல்ல முனைந்தார்கள். அப்போது அவர்களுக்கு சம்பளம் என்று பார்த்தால் இரண்டு ரூபாய் தான். என்னுடைய தந்தை சொல்வார் நான் திருமணத்தின் போது தான் கால்சட்டையே(பேண்ட்) அணிந்தேன் என்று, அந்தளவிற்கு அப்போது வறுமையின் பிடியில் இருந்தார்கள். அதன் பின்னர் ஒரு ஸ்கிராப் வியபாரிடம் வேலை செய்து வந்தார்கள் சிறிது காலத்தில் அவர்கள் ஸ்கிராப் பொருளை வாங்கி விற்பனை செய்தார்கள். அதன் பிறகு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இப்படி பல சின்னவடிவில் கடைகளைத்திறந்தார்கள். பல சிக்கல்களுக்கும், துன்பத்திற்கு நடுவிலும் எப்போதும் எல்லோர் இடத்திலும் அன்பை மட்டுமே போதித்துக் கொண்டோம். எங்களுக்குள் அவ்வபோது கூச்சல் குழப்பம் இருந்தாலும், அன்பும் அரவணைப்பும், எங்களை ஒற்றுமையாகவே வைத்திருந்தது. இன்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்றளவும் நாங்கள் கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வருகிறோம். அந்தக்குடும்பத்தில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
கே : நீங்கள் படித்தது பயின்றது பற்றிச்சொல்லுங்கள்?
எங்களுடைய பெற்றோர் பட்ட கஷ்டங்களை நாங்கள் படக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். எங்களின் வாழ்க்கையில் மிகுந்த அக்கரை எடுத்துக் கொண்டார்கள். நாங்கள் தான் படிப்பதற்கு வசதியில்லாமல் படிக்கமுடியவில்லை. நம்முடைய பிள்ளைகள் நன்றாகப்படிக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைத்தார்கள். இதனால் கோவையிலுள்ள லெசியு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பி. எஸ். ஜி. டெக் கல்லூரியில் பேசன்ஸ் டிசைன்ஸ் படிப்பையும் படித்தேன்.
ஆரம்பத்தில் நான் சராசரிக்கும் கீழ் படிக்கும் மாணவன் தான். ஏழாம் வகுப்பு படிக்கும் போது பல தேர்வுகளில் தோல்வி அடைந்தேன். இதனால் என்னை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கினார்கள், அந்தப் பார்வை தான் என்னை சிந்திக்க வைத்தது. நாமும் நன்றாகப் படித்து சாதிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஆர்வமும் எனக்குள் வந்தது. பிறகு தான் பாடத்திட்டத்தை விட எனக்கு என் குடும்பத்திலும் ஆசிரியர் இடத்திலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து என் மனதிற்குள் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் பின்னர் தான் சுயமாய் முடிவெடுக்க ஆரம்பித்தேன். பாடத்திட்டத்தை விட எனக்கு கிடைத்த அனுபவம், சூழ்நிலைகள் போன்றவை தான் என்னை இந்தளவிற்கு உயர்த்தியது. இதற்கு என்பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் என் சுற்றத்தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே : பேசன்ஸ் டிசைன் முடித்த நீங்கள் தொழிலில் ஆர்வம் வந்தது பற்றி?
நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் முன்னாள் மாணவர்களுக்கு விடை நல்கு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். இதனால் என்னுடன் பயிலும் சக மாணவர்களிடம் பணம் வசூலித்து அவர்களுக்கு விழா எடுக்க திட்டம் வைத்திருந்தோம். அதன் படி அனைவரும் பணம் கொடுத்தார்கள். அந்தப் பணத்தில் அவர்களுக்கு உணவு பரிமாறினோம். மீதம் பணம் மிஞ்சியது. அந்தப்பணத்தை என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது தான் தையல் மிஷின் வாங்கி வடவள்ளியில் உள்ள உதவும் கரங்களுக்குக் கொடுத்தோம். அப்போது என் மனதில் ஒரு புத்துணர்ச்சித் தோன்றியது.
அதன் படி பழைய இரண்டு மிஷன்களை வாங்கி அவற்றை சில வேலைபாடுகள் செய்து, தேவையான இருவர்களுக்கு கொடுத்தோம். ஆனால் வாங்கிய விலை குறைவு அவற்றை வேலைகள் செய்து கொடுக்கும் போது அந்த மிஷனில் இலாபம் கிடைப்பதை உணர முடிந்தது. ஒரு மிஷினுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை இலாபம் பார்த்தேன். மார்க்கெட்டில் அதிக இலாபம் கிடைத்ததை என்னால் உணர முடிந்தது. இப்படித்தான் தொழிலில் வர முனைந்தேன்.
கே: குடும்பத் தொழிலில் இணைந்தது பற்றிச் சொல்லுங்கள்?
நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தேர்வு விடுமுறை எனக்குக் கிடைத்தது, இதனால் இவ்விடுமுறையை சிறந்த முறையிலும், தேவையான வழியில் செலவிட வேண்டும் என்று நினைத்து முதன் முதலில் குடும்பத் தொழிலுக்கு வந்தேன். தினந்தினமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொண்டே இருந்தேன். அடுத்த நாள் அடுத்த நாள் ஆர்வம் பெருகிக்கொண்டே போனது. சென்ற சில நாட்களிலேயே எனக்கு மிகப் பெரிய பொறுப்பை நம்பிக்கொடுத்தார்கள் அதையும் சிறப்பாக கையாண்டேன். எங்கள் குடும்பத்தைப் பொறுத்த வரை எல்லா இடத்திலும் எல்லாப் பணியிலும் பொறுப்புடன் கூடிய சுதந்திரம் கொடுத்தார்கள். இந்த சுதந்திரத்தை நான் முறையாகப் பயன்படுத்திக் கொண்டேன். மூன்று ஆண்டு கல்லூரிப்படிப்பையும், எம். பி. ஏ பட்டப்படிப்பையும் படித்துக் கொண்டு தொழிலையும் பார்த்து வந்தேன்.[hide]
கம்பெனி பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டேன். அப்போது கம்பெனி பெரிதும் கடனில் இருந்தது. சில முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஆனது. இதை என்னால் உணர முடிந்தது. அவர்களும் எங்களின் வருகையை எதிர்ப்பார்ப்பதை உணர முடிந்தது. இதனால் தான் இந்நிறுவனத்தில் நான் இணைந்தேன். சிறப்புடன் செய்ய முனைந்தேன்.
கே: நீங்கள் இணைந்த பின் இந்நிறுவனத்தின் வளர்ச்சியின் பாதைக்கு எப்படி கொண்டு சென்றீர்கள்?
நான் இந்நிறுவனத்தில் இணைந்ததே இதை ஒரு வளர்ச்சிப் பாதையை நோக்கி எப்படியும் கொண்டு சொல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில் மட்டுமே தான். இந்த நிறுவனம் ஒரு தனிமனிதனைச் சார்ந்தோ, அல்லது குடும்பம் சார்ந்தோ இல்லாமல் இதில் பணியாற்றும் அத்தனை பேருக்கும் சமூகம் சார்ந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
வெளிநாட்டில் படித்து முடித்த என்னுடைய சகோதரர்கள் ஐவரும் எங்களோடு எங்கள் நிறுவனத்திலேயே இணைந்து விட்டார்கள். இவர்கள் இணைந்தது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறியது.
எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை எப்போதும் எங்களை கட்டுப்படுத்தியதே இல்லை. நாங்கள் எது செய்தாலும் சிறப்பாகத்தான் இருக்கும் என்று நம்பினார்கள். இதனால் நாங்கள் வளர்ச்சி மற்றும் புதிய முயற்சி சார்ந்த செயல்களை செய்வதற்கு ஒரு தடையில்லாமல் இருந்தது.
புதிய தொழிலும், இருக்கின்ற தொழிலையும் விரிவுப்படுத்தினோம். இதில் பேட்டரி தயாரித்தல், பிளாஸ்டிக் பொருட்கள் மீட்டுருவாக்கம் செய்தல், மெட்டல் அலாய், மெட்டல் மறுசுழற்சி செய்தல், இ வேஸ்ட் போன்ற தொழில்களை செய்தோம்.
2006 ஆம் ஆண்டு எங்களுடன் சேர்ந்து 100 பேர் பணியாற்றினார்கள், ஆனால் இப்போது 1000 பேர் எங்களிடம் பணியாற்றி வருகிறார்கள். அதற்கு எல்லாம் காரணம் எங்கள் குடும்பத்தின் ஒற்றுûயும் பல மனிதர்களின் உழைப்பும் எங்களுக்கு கிடைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
வளர்ச்சி என்பது எப்படியிருக்க வேண்டும் என்றால் தானும் உயர்ந்து தன் குடும்பமும் உயர்ந்து, தன்னை சார்ந்தவர்களும் உயர்ந்து இந்த சமூகமும் உயர வேண்டும் அது தான் சிறந்த வளர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
கே: ஒரு பொருளை சொந்தமாகத் தயாரித்து அதை சந்தைப்படுத்துவதிலுள்ள சவால்கள் என்னென்ன?
ஒரு பொருளைத் தயாரித்து அதை விற்பனை செய்வது என்பது என்னைப் பொறுத்த வரை சரியான முடிவல்ல. நுகர்வோரின் தேவையை அறித்து அவற்றை நாம் கொடுக்க வேண்டும், அப்போது தான் நம்மால் வெற்றி பெற முடியும்.
முதலில் என்ன தேவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தத் தேவைக்கு ஏற்றார் போல் கடினமான உழைப்ûப் போட்டு, அவர் எவ்வாறு எண்ணினாரோ அப்படி ஒரு பொருளைத் தயாரித்து அவர் கையில் கொடுக்கும் பொழுது அவருக்கும் மனநிம்மதி தயாரித்து கொடுத்த நமக்கும் சந்தோஷம் ஏற்படும். இப்படி தான் தயாரித்த பொருளை சந்தைப் படுத்த வேண்டும்.
சரியான பொருளை, சரியான இடத்தில், சரியான நேரத்தில் எவர் ஒருவர் முறையாக வாடிக்கையாளர்களிடம் சந்தைப்படுத்துகிறார்களோ அவர்களே தொழிலில் வெற்றி பெற்றவர்களாக மாறுகிறார்கள்.
கே: ஒரு நிர்வாகத்தின் மேலாண்மைப் பொறுப்பில் உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்?
நிறுவனம் மட்டுமல்ல எந்த ஒரு இடத்திலும் சரியாகவும், முறையாகவும் ஒரு செயல் நடக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு மேலாண்மை மிக்க தலைவர் என்பவர் மிகவும் முக்கியம்.
ஒரு நிறுவனம் வளர்ச்சியான பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அங்கு நல்ல முதலாளி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஆனால் ஒரு நல்ல தலைவன் இருக்க வேண்டும்.
நிறுவனத்தை வழிநடத்த பணம், பொருள், இயந்திரம், தொழிற்நுட்ப கருவிகள் தான் மூலக்கூறு என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவற்றை அனைத்தையும் இயக்குவது மனிதர்கள் தான் என்பதை ஒரு நிறுவனத்தின் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் ஒரு நல்ல திறமைமிக்க பணியாளர்கள் கொண்ட குழுக்களை உருவாக்க வேண்டும். அந்தக்குழுக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும். நிறுவனத்தின் இலக்கு என்ன, அந்த இலக்கை அடைய நாம் எவ்வாறு தயார் படுத்த வேண்டும் போன்ற நன்னெறிகளை ஆரோக்கியம் சார்ந்த கலாச்சாரத்தைப் புரிய வைக்க வேண்டும்.
பணம் இருக்கும் அனைவரிடத்திலும் மகிழ்ச்சி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் மகிழ்ச்சியும், அன்பும் இருக்கும் இடத்தில் செல்வம் தானாக வந்து சேரும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நிறுவனம் சார்ந்த ஒவ்வொருவரும் வளர வேண்டும், அந்த வளர்ச்சி தான் நிர்வாகத்தை உயர்த்தும், வாங்குபவர், விற்பவர், இவருக்கும் மனமகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்க வேண்டும் என்பதை புரிந்து செயல் பட வேண்டும்.
கே : லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன் தொடங்கியது பற்றி?
அன்பை வாரி வாரிப் பொழியும் நமது அன்னையைப் போல, இயற்கை அன்னை நமக்கு வாரி வழங்கிய இயற்கை வளங்கள் இம்மண்ணில் ஏராளம். அன்பு மயமான இவ்வுலகிற்கு உள்ளேயும் வெளியேயும் நாம் நன்றியுணர்வோடு இருப்போம். இந்த புரிதலுக்காக தான் மார்ச் 11 ஆம் நாள் 2017 ஆண்டு லெட்ஸ் தேங்ஸ் பவுண்டேசன் துவங்கப்பட்டது.
நம் வாழ்க்கை எண்ணம், சொல், செயல்கள் போன்றவற்றால் ஆனது. நம் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ஏதேனும் ஒரு விதத்தில் நன்றிகளை நம் மனதில் ஊன்றி, அதை பிறர் மனதில் மலர செய்ய வேண்டும்.
நோக்கம் சரியாக இருந்தால் இலக்கு எளிதாக இருக்கும், நம்மால் முடிந்த அளவிற்கு இயற்கையைப் பேணிகாத்து, எதிர்கால நம் சந்ததியர்களுக்கு ஒரு நல்ல இயற்கை வளம் மிக்க சமுதாயமாகக் கொடுத்து விட்டு செல்ல வேண்டும். என்ற உயரிய நோக்கத்தால் தொடங்கியது தான் இந்த அமைப்பு.
கே : மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்புத்திட்டம் ஏற்படுத்தியது பற்றி?
உலகத்தில் மானிடராய் பிறக்கும் அனைவருமே ஏதேனும் ஒரு விதத்தில் திறமையானவர்கள். அவர்கள் திறமை அங்கீகாரிக்கப்படாமல் இருக்கலாம், இல்லை என்றால் அவர்களே தங்களின் திறமையை வெளிப்படுத்தாமல் இருக்கலாமேதவிர திறமையற்றவர்கள் என்று இங்கு யாரும் இல்லை.
சராசரியாக உள்ள மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு வேலை கிடைத்துவிடும். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு அப்படி உடனே வேலை கிடைத்துவிடுவது இல்லை. ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்த்து பரிதாபம் பட வேண்டுமென்றால் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆக்கப்பூர்வமாக உதவி செய்ய முன்வருவதில்லை .
நிறைய வீட்டில் மாற்றுத்திறனாளிகளை ஒதுக்கி வைக்கும் நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு வேலை வாங்கித்தருவதை விட சொந்தமாக சுயத் தொழிலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினோம்.
மொத்தம் 60 வகையான சுய வேலைகள் இருக்கிறது. பெட்டிக்டை வைத்துக்கொடுப்பது, தையல் இயந்திரம் வாங்கிக் கொடுப்பது, ஆடு மாடு வாங்கிக் கொடுப்பது, நாட்டு மாட்டில் பால் வியபாரம் செய்ய வைப்பது, ஜெராக்ஸ் கடை, சுயத்தொழில் புரிவது இப்படி நிறைய சுய வேலைவாய்ப்புகள் செய்திருக்கிறோம் இதுவரை 530 பேர் இதன் மூலம் பயன் அடைந்திருக்கிறார்கள். இதில் 93% பேர் மாதம் 8ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள்.
நாங்கள் ஒரு மாற்றுத்திறனாளிகளைப் பார்த்தவுடன் உணர்ச்சி வசப்பட்டோ, பரிதாபப்பட்டோ அவர்களுக்கு தொழிலைக் கொடுப்பதில்லை, அவர்களைப் பற்றி விபரம் அறிந்து, நேர்முகம் எடுத்து பிறகு தான் அவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.
இவரால் இது செய்ய முடியுமா? உறவினர்கள் உதவி இருக்கிறதா என்று எல்லாம் பார்த்த பின்னரே அவர்களுக்குத் தொழிலை ஏற்படுத்தி இருக்கிறோம். கொடுக்கும் வேலையை சென்மையாக செய்யும் பொழுது தான் நமக்கு ஆனந்தமாக இருக்கும்.
இவர்களுக்கு மூன்று வேலை உணவு கிடைத்தால் மட்டும் அவர்கள் வாழ்ந்திட முடியாது, அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை அறிந்து அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிவைப்பதே எங்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.
கே: மரம் நடுவதற்கான காரணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் எப்போதும் சாலை ஓரத்தில் இருக்கும் டீ கடையில் டீ குடிப்பது வழக்கம். அப்போது அருகில் இருக்கும் மரத்தில் பறவைகள் வந்து தங்கும். அதைப்பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக இருக்கும். யாரோ ஒருவர் வைத்த மரம் இன்று இத்தனை பறவைகளுக்கு வீடாக இருக்கிறதே என்று தோன்றியது. அதுமட்டுமின்றி மரத்தின் அடியில் நிறைய பேர் அமர்ந்து ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். மரம் என்பது ஐம்பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இதனால் நாமும் நிறைய மரம் நடவேண்டும் என்ற எண்ணமும் விழிப்புணர்வும் தோன்றியது. இயற்கை வளங்கள் அனைத்துமே கொடுக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொரு பொருளும் தொடர் சங்கிலியாகக் கொடுத்துக் கொண்டே இருக்கும். இயற்கையே போல் மனிதர்கள் வாழ்ந்தால் மட்டும் அவர் முழுமைத்தன்மை பெறுகிறார்.
தற்போது கோவை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் மரத்தை நட்டுக் கொடுத்திருக்கிறோம். இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளிலும் அவ்வாறான மரத்தை நடத்திட்டம் வகுத்துள்ளோம். இதுவரை 25,000 த்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
நீங்கள் எந்த வேலை செய்தாலும் அது பலரால் பார்க்கப்படுகிறது, ஈர்க்கப்படுகிறது, இதனால் எதையும் மனமுவந்து செய்தல் வேண்டும்.
எந்த வேலைகளையும் யார் செய்தார்கள் என்று பார்ப்பதை விட எப்படி செய்தார்கள் என்று தான் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் இதனால் எது செய்ய வேண்டும் என்றாலும் அதில் மிகவும் அக்கரையோடும் முனைப்போடும் செய்தோம்.
கே : வளரும் தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது?
உடலுக்கும், மனதுக்கும், உணர்வுக்கும், ஆத்மாவுக்கும் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். தன்னை நன்றாகப் பார்ப்பவர்கள் தான் தன் குடும்பத்தையும், சுற்றத்தையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.
எந்த ஒரு சூழ்நிலையையும் முழுமையாக ஏற்று எவர் ஒருவர் வாழ்வில் எதிர்நீச்சல் போடுகிறார்களோ, அவர்களே வாழ்க்கையில் வெற்றியாளராகவும், தலைவராகவும் வருவார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலை, முழுமையாக உங்களுக்கு பிடித்த துறையாக இருத்திட வேண்டும்.
புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் துறையில் உங்களை முழுமையாகப் பிடித்த துறையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தனது பெற்றோர்கள், சுற்றத்தார்கள், குடும்பம், குழந்தைகள், நண்பர்கள் இவர்களிடம் முழுமகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட வேண்டும்.
கே : நன்றியுணர்வு (லெட்ஸ் தேங்ஸ்) என்று பெயரிட காரணம்?
உணர்வுகளின் சிறந்த உணர்வு தான் அன்பு. அந்த அன்பின் உன்னத தன்மை தான் நன்றியுணர்வு. இந்த நன்றியுணர்வு முழுமைப் பெற்றாலே கொடுக்கும்தன்மை தானாக வந்து விடும். ஆதலால் ஒவ்வொருவருக்குள் நன்றியுணர்வு இருத்தல் வேண்டும்.
நமக்கு மனநிறைவும், நிம்மதியும் வேண்டுமெனில். நம்முடைய மனிதில் நன்றியுணர்வை அதிகரிக்க வேண்டும். இந்த நன்றியுணர்வு நம்மையும் நமது சமுதாயத்தையும் நல்வழிப்படுத்தும்.
நன்றி எனும் ஒரு வார்த்தை நம் வாழ்வையும் இவ்வுலகத்தையும் அர்த்தமுடையதாக்கும் நாம் பருகும் ஒரு குவளை நீரில் ஒட்டுமொத்த இயற்கையின் பங்களிப்பு இருப்பதை நம்மால் மறுக்க முடியுமா? நாம் உண்ண, உடுத்த, உறங்க நல்ல சௌரியங்களுடன் வாழ நம்மை சுற்றி பல பேரும், இயற்கையும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இயற்கை உணவாக நீராக, நெருப்பாக, திடமாக நாம் வாழ்வதற்கான காரணிகளை சரிவிகித்தில் வழங்கி நம்மையெல்லாம் அரவணைத்துக் கொண்டிருக்கிறது. ஈடுசெய்ய முடியாத இவற்றிக்கெல்லாம் நம் மறுபதிலிடுதல் என்ன? என்றால் அவற்றிக்கு நாம் நன்றியுணர்வோடு இருப்பது சிறந்தது.
கே: எதிர்காலத்திட்டம் பற்றி?
உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உறுதியாய் நிற்க வேண்டும். நாங்கள் இப்போதும் செய்யும் தொழிலை மேலும் உயர்வடைய வைக்க வேண்டும். நிறைய பேருக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்வில் வசந்தத்தைக் கொடுக்க வேண்டும்.
இந்த பவுண்டேசன் மூலம் நிறை நன்மைகள் செய்ய வேண்டும். ஊனமுற்றோர்களை முடித்த அளவிற்கு அவர்களின் சொந்த உழைப்பில் வாழ வழிவகைச் செய்ய வேண்டும்.
இயற்கையைப் பாதுகாக்க நம்மால் முடிந்த திட்டங்களை நடைமுறை படுத்த வேண்டும், நிறைய மரங்களை நடுதல் வேண்டும். நாட்டை பசுமையாகப் பாதுகாக்க வேண்டும்.
ஒருவரின் எண்ணமே சொல்லாகும், சொல்லே செயலாகும், செயலே வாழ்க்கையாகும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டு வாழ வேண்டும்.[/hide]
இந்த இதழை மேலும்