Home » Articles » நன்மை தராத செல்வம்

 
நன்மை தராத செல்வம்


சுவாமிநாதன்.தி
Author:

நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நாம் பிறருக்கு நல்லது செய்யும் போது நமக்கு பின்னாளில் நல்லது நடக்கிறது. எனக்கு பரிச்சயமான ஒரு பெரு வணிகர் இருந்தார். கடின உழைப்பால் பெரும் செல்வம் ஈட்டினார். பேர், புகழ், நன்மதிப்பு இருந்தது. தன்னிடம் பணியாற்றுபவர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்வார். பத்து நிமிடம் தாமதமாகப் பணிக்கு வந்தவர்களுக்கு அரை நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்வார். தம் வேலையாட்களை காலை ஒன்பது மணி முதல் இரவு பத்து மணி வரை நிற்க வைத்து வேலை வாங்குவார். சம்பள பிடித்தமின்றி  விடுப்பு தர மாட்டார். அற்ப விஷயங்களுக்கு கடுமையாய் ஏசுவார். வறுமை, இயலாமை காரணமாக வேலையாட்கள் பொறுத்துக் கொண்டார்கள். குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் வருமான வரி சோதனையில் பிடிபட்டார். தப்பி வந்தார். அவர் காலம் முடிந்தது. இன்று அவரது வாரிசுகள் பொறுப்பற்று ஊதாரித்தனமாக செலவு செய்து வியாபாரத்தில் நஷ்டமடைந்து செல்வம் இழந்து முகவரியற்று நிற்கிறார்கள்.

தர்ம குணம் இல்லாதவர்களை கருமி, கஞ்சன், உலோபி , உலுத்தன் என்றெல்லாம் சொல்வர். அவர் ஒரு பைசாக் கூடத் நன்கொடை தரமாட்டார். நண்பர்களுடன் வெளியே சென்றால் சிலர் பணத்தை வெளியே எடுக்கவே மாட்டார்கள். தயக்கம் காட்டுவர். யாருக்கும் ஒரு சல்லி காசு கொடுக்க மாட்டார்கள். நியாயமாக பிறருக்கு தர வேண்டிய தொகையைக்  கொடுக்காமல் பலநாள் அலைய வைப்பார்கள். எச்சில் கையால் காகத்தை விரட்ட மாட்டார்கள். தேநீரில் ஈ விழுந்தால் கூட அதைப் பிழிந்து விட்டுதான்  வெளியே எறிவார்கள். குளிர் காலத்தில் வெந்நீர் போட்டுக்கூட குளிக்க மாட்டார்கள். இவர்கள் யாருக்கும் எதுவும் கொடுக்க மனமில்லாதவர்கள்.

பொதுவாக ஒரு பொருளை உபயோகிக்காவிட்டால் அது இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். தன் தேவைகளுக்கு மட்டும் செலவிடுவதை சிக்கனம் எனலாம். தன் சுய தேவைக்குக் கூட செலவு செய்யாமல் இருப்பவர்களைத்தான்  கஞ்சன் என்கிறோம்.

பிறருக்கு பயன்படாத செல்வம் தன்னைக் கொல்லும். தனது வாழ்நாள் முழுவதும் பணம் சேர்ப்பதிலேயே கருமி தீவிரமாக இருப்பார். இதற்காக அவர் நன்றாக சாப்பிடாமல், நல்ல ஆடைகள் அணியாமல், எந்த இன்பத்தையும் அனுபவிக்காமல் கஞ்சத்தனமான இருப்பார்.

நன்மையை தராத செல்வம்;

பணத்தை அனுபவிக்காதவன் பிணம். ஒருவராலும் விரும்பப் படாதவன் கஞ்சன். கஞ்சனுக்கு எஞ்சி நிற்பது எதுவுமில்லை. தானும் அனுபவிக்க மாட்டார், தகுதியுடையவர்க்கும் ஈயவும் மாட்டார். துன்பப்படுபவர்களுக்கு  தப்பித் தவறியும் உதவ மாட்டார். அவ்வளவு கெட்டி. பகிர்வது என்ற குணமே கிடையாது. அறுபட்ட விரலுக்கு சுண்ணாம்பு தர மாட்டார். அழகிய செருப்பை காலில் அணிந்ததில்லை. முன்னோர் செய்த பொருட்களில் மாற்ற மேதும் செய்ததில்லை. பசியென்று  வந்தோர்க்கு பச்சை தண்ணீர் தந்ததில்லை சலவைக்கு துணிகளை ஒரு போதும் போட்டதில்லை. இரவல் என்று இதுவரை எவருக்கும் கொடுத்ததில்லை. எவருக்கும் உபயோகமில்லா இவ்வாழ்க்கைக்கும் அர்த்தமில்லை.

கஞ்சத்தனம் இறைவனை அந்நியப்படுத்துகிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம். ஊதாரி வருங்கால பிச்சைக்காரன். கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன். கொடுக்காத செல்வம் மணமாகாத கிழவி போன்றது. பிறரால் விரும்பப்படாதவன் பெற்ற செல்வம் நடு ஊரில் நச்சு மரம் பழுத்திருப்பது போன்றது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2018

போரிடாமல் ஜெயிப்பது எப்படி?
சத்துணவும் நீள் ஆயுளும்
மனம் கூறும் தன்னம்பிக்கை
வாங்களையோ வசவு…
முயற்சியே முன்னேற்றம்!
நேற்று போல் இன்று இல்லை
ஈர்ப்பும்… ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில்- 55
கபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?
நாளைய பாரதம் நம் கையில்
மகிழ்ச்சிக்கான வழி !
வாழ நினைத்தால் வாழலாம் – 18
மூலை முடக்குவாதம் (Cerebral Palsy)
நன்மை தராத செல்வம்
தனை மறந்ததேன்! தென்றலே!
நம்பிக்கையே வாழ்க்கை
தன்னம்பிக்கை மேடை
விழிப்போடு இரு விண்ணைத் தொடு…
உள்ளத்தோடு உள்ளம்