அறுசுவை வள்ளல் திரு. P. ரஞ்சித்’ஸ்

ரஞ்சித்’ஸ் பிளசிங் கேட்டரிங் ,

சமூக சேவகர் மற்றும் மனித நேய மாமணி,

கோவை.

மனித வாழ்க்கையில் அனைவருக்கும் இன்பமான வாழ்வு அமைவதில்லை. சிலர் அதை அடையமுடியவில்லை என்று ஆத்திரம் கொள்வர்கள் உண்டு, வருத்தம் கொள்பவர்களும் உண்டு இவர்கள் எல்லாம் வாழக்கையில் போராட முன் வராதவர்கள் என்றேசொல்லலாம். எவர் ஒருவர் துன்பத்தை ஏணிப்படிகளாக நினைத்து ஏற்றம் கொள்கிறார்களோ அவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் இவர் சற்றும் சளைத்தவர் அல்ல.

முயற்சி தோற்கலாம் முயற்சிகள் எப்போதும் தோற்கக்கூடாது என்பது தான் இவரது வேதவாக்கு, எப்போதும் சாதிக்க வேண்டும், தன் சாதிப்பால் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு இருப்பவர்.

சிந்தித்து பேசினால் சிறப்பாய் இருப்பாய்

பொறுமையாய் பேசினால் அருமையாய் இருப்பாய்

உண்மையாய் பேசினால் உயர்வாய் இருப்பாய்

நன்மையாய் பேசினால் நலமாக இருப்பாய்

அன்பாய் பேசினால் ஆனந்தமாய் இருப்பாய்

ஆராய்ந்து பேசினால் அறிஞராய் இருப்பாய்

இஃது இவரின் மிகச்சிறந்த பொன்மொழிகள். எப்போதும்  எதுமை மோனையோடும் நகைச்சுவை கலந்தும் வெகுவாக அனைவரையும் கவரும் பேச்சாற்றல் மிக்கவர்.

எளிமை தான் இவரின் சிறந்த அடையாளம். மற்றவருக்கு உதவுதல்  என்பது இவரின் தனித்தன்மை படித்தது குறைவு என்றாலும் இன்று பார் போற்றும் அளவுக்கு உயர்ந்திருக் கிறார் என்றால் அவரின் விடாமுயற்சியும் கடின உழைப்பும் தான் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

மனித நேயமிக்கவர், வரியவருக்கு வாரியளிப்பவர், இறைப்பற்று மிக்கவர், சிறந்த நிர்வாகி, மற்றும் மனித நேய மாமணி அறுசுவை வள்ளல் ரஞ்சித்’ஸ் பிளசிங் கேட்டரிங் திரு. ட. ரஞ்சித் அவர்களின் நேர்முகத்தோடு இனி பயணிப்போம்.

கே: உங்களின் இளமைகாலம் பற்றிச் சொல்லுங்கள்?

எனது தந்தையின் ஊர் திருச்சி மாவட்டம் வேலைத் தேடி இலங்கையில் குடிப் பெயர்ந்தார்கள். அங்கு தான் நான் பிறந்தேன். பெற்றோர் பழனிசாமி மாரியம்மாள் இவரும் இலங்கையில் உள்ள அட்டன் என்னும் பகுதியில் டீ எஸ்டேட் தொழில் செய்து வந்தார்கள். அங்குள்ள அரசுப்பள்ளில் இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். என்னுடைய தந்தையின் வருமானம் உண்பதற்கும் மட்டுமே போதுமானதாக இருந்தது. வறுமை எல்லாத் தருணத்திலும் எங்களோடு உறவு கொண்டேயிருந்தது. இதனால் என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. பெற்றோர்களையும் கஷ்டபட வைக்க மனம் வரவில்லை. இதனால் அவர்களோடு நானும் இணைந்து அவர்கள் செய்யும் வேலையை நானும் செய்தேன். என்னுடைய 17 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். நான் வெளியேறியது என்னுடைய குடும்பத்திற்கு அப்போது தெரியாது. எப்படியும் முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்கை மட்டும் என்னிடம் இருந்தது.

கே: வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அடுத்து உங்கள் வாழ்வில் நடந்தது பற்றி?

வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பே தமிழ்நாட்டில் எங்கு செல்லலாம் என்றும் முடிவெடுத்தேன். எனக்கு இங்கு எல்லா இடமும் புதியது தான் என்பதால் ஊட்டியை நான் தேர்ந்தெடுத்தேன். காரணம் இலங்கையில் செய்த டீ எஸ்டேட் பணி ஊட்டியில் இருக்கிறது என்பதை அறிந்து அங்கு சென்றேன்.

பல இடங்களில் வேலைத் தேடி அலைந்தேன். நான் எண்ணியது எதுவும் நடக்கவில்லை. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் அப்போது தான் புரிந்து கொண்டேன். இரவு பகல் பாராமல் வேலைத் தேடி அலைந்து கொண்டேயிருந்தேன். இறுதியாக ஓரு ஹோட்டலில் மேசை கிளின் செய்யும் வேலை கிடைத்தது. சில மாதங்கள் செய்தேன். ஆனால் சம்பளம் முறையாக கிடைக்காததால் அங்கியிருந்து ஈரோடிற்கு சென்றேன். அங்கும் ஒரு ஹோட்டலில் கிளீனர் வேலையே செய்தேன். புஞ்சை புளியம்பட்டியில் வேலை செய்யும் போது ஹோட்டல் சார்ந்த அத்துனை நுணுக்கமான வேலையையும் கற்றுக் கொண்டேன். அப்போது எனக்குத் தெரியவில்லை நாம் ஹோட்டல் தொழிலில் இந்த அளவிற்கு சாதிப்போம் என்று.

தமிழ்நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் வேலைத் தேடி சென்றியிருக்கிறேன். இறுதியாக கோவை பகுதிக்கு வந்தேன். இப்படி சக்கரம் போல் ஓடிய வேலை செய்த போது என்னை நோய் படுக்கைக்கு கொண்டு போனது. அது தான் ப.ஆ நோய். இது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

இதனால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ஆனால் மருத்துவமனையில் ஒருவரை அட்மீட் செய்ய வேண்டுமென்றால் உறவினர்கள் யாராவது இருக்க வேண்டும் என்பது நியதி. அப்படியிருக்கும் பொழுது என்னை அரவணைக்கவோ, அன்பு செலுத்தவோ யாருமில்லை என்று சொல்லிவிட்டேன் இதனால் எனக்கு ஆதரவற்றோர் பெயர் பட்டியிலில் சேர்க்கப்பட்டு ஈழ். மோசஸ் அவர்கள் பரிவோடு சிகிச்சை அளித்தார்.

கே: சொந்தமாக எப்போது தொழில் தொடங்குனீர்கள்?

சிகிச்சை முடிந்தது. ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. எலும்பு மேல் போர்த்திய தோல் போல என் உடல் இருந்தது. இதனால்  வேலை கேட்ட இடத்தில் எல்லாம் என்னை நிராகரித்தார்கள். இனி எங்கேயும் வேலை கிடைக்காது என்றநிலைக்கு தள்ளப்பட்டேன். அப்போது இத்தனை வருடங்கள் என்னுடைய ஹோட்டலில் வேலை பார்த்த அனுபவம் எனக்கு கைக்கொடுக்கும் என்றநம்பிக்கையில் இப்பகுதியிலேயே ஒரு சிறியதாக டீ கடை ஒன்றைஆரம்பித்தேன். நன்றாக போனாது, ஆனாலும் டீ கடையும் பார்த்துக் கொண்டு வீட்டுவீட்டுக்குச் சென்று மசாலாப்  பொருட்களை டோர்டெலிவரி செய்தேன். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தால் இரவு தூங்க 12 மணி ஆகிவிடும் எப்போதும் எதையாவது செய்ய வேண்டும் என்பதை மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பேன். ஆனால் தொடங்கிய வேலைகள் அனைத்தும் தோல்விகளிலே முடிந்தது. ஆனாலும்  நான் ஒரு போதும் இதை நினைத்து துவண்டதும் இல்லை துயரம் கொண்டதும் இல்லை.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி என்னிடம் இருக்கிறது என்று எப்போதும் நினைத்துக் கொண்டேயிருப் பேன்.

நான் செய்யும் வேலையை விரிவுப்படுத்த கோவை கனரா வங்கியில் கடன் வாங்கினேன். அப்போது தான் கேண்டீன் தொழிலைத் தொடங்கினேன். இது தான் என்னுடைய முதல் தொழில். எப்படி தான் என்னுடைய தொழிலின் வளர்ச்சியும் விரிவும்.

கே: கேண்டீன் தொழில் வழிநடத்துவதில் சவால்கள் பற்றி?

மனிதவாழ்க்கையில் எல்லாமே  சவால்கள் நிறைந்தது தான். இந்த சவாலை சங்கடமாக நினைத்தால் சரித்திரத்தில் இடம்பிடிக்க முடியாது. வளர்ச்சியின் அடிநாதமாக நினைத்தால் வளர்ச்சியின் வாசலை எட்டிப்பிடிக்க முடியும் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

இந்த கேண்டீன் தொழில் என்பது நம்பிக்கை சம்பந்தமானது என்பதால் மற்றதொழிலை விட கூடுதல் அக்கரை தேவைப்படுகிறது. ஒரு திருமண விழா என்றால் வரும் அனைவரும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் சுவைகள் வேறுபாடு மாறுபாடு இருக்கும். அவர்கள் அனைவருக்கும் பிடித்தார் போல் உணவுகளை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொல்கிறேன். ஒரு திருமணத்திற்கு சமைக்க வேண்டும் என்று ஆர்டர் வந்தது. நாங்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு அனைத்து வகையான உணவுகள் தயார் படுத்தி வைத்துவிட்டோம். ஆனால் மண்டபத்தில் எங்களைத்தவிர மாப்பிள்ளை வீட்டாரே பெண் வீட்டாரே என்று யாருமே இல்லை. எங்களுக்கே சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. நேரம் நெருங்க நெருங்க ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தார்கள், ஆனாலும் பெண் மாப்பிள்ளை வரவில்லை. நானும் என்னுடைய நண்பரும் வரவேற்பு இடத்தில் நின்று அனைவரையும் வரவேற்றோம், ஏன் பெண்ணையும் மாப்பிள்ளையும் நாங்கள் தான் வரவேற்றோம். எப்படி நிறைய நிகழ்வுகளை பார்க்கலாம்.

கே: வங்கியில் தள்ளுபடி செய்த கடனை நீங்கள் தானே சென்று கட்டியது பற்றி சொல்லுங்கள்?

நான் கஷ்டப்பட்ட காலத்திலும் தொழிலை மேம்படுத்திலும் வங்கியில் வாங்கிய கடன் பெரிதும் என்னுடைய வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிந்தது. நான் இப்பொழுது ஒரு பெரிய இடத்திற்கு வந்து விட்டேன்  என்றாலும் கூட என்னால் அந்த கடன் திருப்பி செலுத்த வேண்டும் என்று மட்டுமே மனதில் தோன்றி கொண்டேயிருந்தது.

அப்போது ஒரு நாள் நான் கடன் பெற்றகனரா வங்கிக்கு சென்று 27 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு தொகையை கடன் வாங்கினேன் என்று என்னுடைய விவரத்தை வங்கி மேலாளரிடம் சொன்னேன். என்னுடைய பெயரையில் தொகையைப் பார்த்த போது உங்களுடைய  அத்துனை தொகையும்  தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று மேலாளர் சொன்னார்கள். ஆனாலும் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை நான் வாங்கிய தொகையை நிச்சயம் செலுத்தி தான் ஆக வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன்.

வங்கி மேலாளரும் என்னுடைய இந்தப் போக்கை பார்த்து பணத்தை வாங்கி வேறு ஒரு நலத்திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்வதாகச் சொல்லி விட்டு என்னை அனுப்பி வைத்தார்.

இந்த செய்தி அப்பகுதியில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரும்வாரியான பத்திரிக்கைகளிலும், செய்தித்தாளிலும் வெளியிடப்பட் டது. அப்போது இதைப்பாராட்டி சில அமைப்புகள் 105 விருதுகள் மற்றும் நினைவு பரிசுகளோடு பாராட்டுகளையும் வழங்கி கௌரவித்தார்கள்.

கே: ஒரு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் எவற்றைஎல்லாம் முறையாகக் கடைபிடிக்க வேண்டும்?

தலைமைப் பண்பு என்பது அனைருக்கும் கிடைத்துவிடாது. மற்றவர்களை விட ஏதேனும் ஒரு மாறுதல் பண்பு இருக்கிறது என்றால் நீயும் தலைமை பண்பை அடைத்துவிட்டாய் என்று நினைத்தல் வேண்டும்.

தன்னிடம் பணியாற்றுபவர்களை சில தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார். இதை தான் சிலர் தலைமைப் பண்பு என்று நினைத்துக்  கொண்டுயிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

தலைமைப் பண்பில் உள்ளவர்கள் மற்றவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். தவறு நடந்தாலும் அடுத்த முறைஇத்தவறு நடக்காமல் பார்த்துக் கொள் என்று சொன்னால் அவர் வேலையை கூடுதல் அக்கரை செலுத்துவார்கள். இப்படித்தான் மெருகேற்றவேண்டும்.

சிலருக்கு வேண்டுமென்றால் தலைமைப் பண்பு தானாக வந்திருக்கும், ஆனால் என்னைப் போன்றஒரு சிலருக்கு இதன் மகத்துவம் நன்கே புரியும்.

நான் உயர்ந்தவன் என்று நினைக்காமல் நாம் அனைவரும் ஒற்றுமையாளர்கள் என்று நினைத்தாலே அவர் தான் சிறந்த தலைமை நிர்வாகி என்பதில் மாற்றமே இல்லை.

கே: உங்கள் கேண்டீன் தொழிலின் சிறப்பம்சத்தைப் பற்றிக் கூறுங்கள்?

தற்போது உணவு தான் மனித வாழ்விற்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருக்கிறது. காரணம் தினம் தினம் ஏதேனும் புதிய பெயரில் உணவுகள் வந்து கொண்டுயிருக்கிறது. அதன் தீமையை அறியாமல் நம்முடைய நாக்கு ருசிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் மாற்றிக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் நூறு ஆண்டுகள் வரை வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் மனிதனின் சராசரி வயது 90 க்கும் மேல் ஆனால் நாளடைவில் வயது சுருங்கி தற்போது 55 வயது வாழ்ந்தலே போதும் என்றமனநிலை வந்து விட்டது. அந்தளவிற்கு நோய்களும், வியாதிகளும் வயது வித்தியாசமின்றி வருகிறது. இதற்கெல்லாமே நம்  உணவில் ஏற்பட்ட மாற்றம்  தான் காரணம்.

இதனால் எங்கள் கேண்டீன் மூலம் செய்யபடும் உணவுகளை அதிக அக்கரைக் கொண்டு செய்யப்படுகிறோம்.

தினம் தினமும் எண்ணெய் மாற்றம், கொழுப்பு அதிகம் சேராது எண்ணெய் பொருள், அறுசுவையிலும் அளவு போன்றபொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்.[hide]

ஆர்டர் கொடுத்து விட்டால் சொன்ன நேரத்திற்கு முன்னால் கொண்டு சேர்ப்பதில் மட்டுமே கவனமாக இருப்போம். தினமும் இயற்கையாக கிடைக்கும் காய்கறிகளை அருகிலுள்ள சந்தைக்கு சென்று மொத்தமாக வாங்கி வருவோம்.

அனைத்து வயதினரும் உண்ணக்கூடிய வகையில் தயாரிக்கப்படும். அத்துனை வேலைக்கும் தனித்தனி வேலையாட்களை நியமித்து வைத்திருக்கிறோம்.

கே: உங்கள் வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

எனக்கு திருமணம் நடந்தது சம்பவம் ஒரு பெரிய மறக்க முடியாத சம்பவம் தான்.  அது என்னவென்றால் வாழ்க்கையில் நான் போராடிக்  கொண்டிருந்த தருணம். ஒரு வேலை சாப்பாட்டிற்கே கஷ்டபட்டியிருந்த நேரம்.  நமக்கே நிரந்தரம் இல்லாத பணியில் இருக்கும் போது நம்மை நம்பி ஒரு பெண் வருகிறார் என்று என்னுள் சற்று சங்கடமான சூழல் ஏற்பட்டது.

எனக்கும் என்னுடைய மனைவிக்கும் திருமணத்திற்கு கூட புதிய ஆடை வாங்க முடியாத நிலை. அப்போது அருகில் துணிக்கடை வைத்திருத்தவர் எங்களுக்கு இன்சால்மென்டில் ஆடைகளை கொடுத்து உதவினார். நாளை திருமணம் ஆனால் நான் மதுரையில் வேலைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.

இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்களை மட்டுமே வரவழைத்து திருமணம் நடத்தப்பட்டது. திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உணவுக்கூட வழங்கப்பட முடியாத சூழலில் வெறும் காரம், இனிப்பு, தேனீர் மட்டும் தான் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கொடுத்து விருந்தினை முடிந்து கொண்டோம்.

இப்படி என்னுடைய திருமண நிகழ்வை எப்போது நினைத்தாலும்  ஒரு மறக்க முடியாத நிகழ்வாகத் தெரியும்.

கே: மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உங்களுக்குள் எப்படி வந்தது?

கஷ்டப்பட்டு முன்னேறியவனுக்கு தான் அடுத்தவர்களின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.

நான் ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு ஹோட்டலில் கிளீனராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ஹோட்டலுக்கும் நான் தங்கியிருந்த அறைக்கும் 2 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும் தினமும் வேலை முடித்து இரவு 12 மணிக்கு தான் செல்வேன் மிதிவண்டியில் பயணம் செய்யும் பொழுது யாரெனும் நடந்து சென்றால் அவர்களை அழைந்து கொண்டு தான் போவான் அப்போது தொடங்கியது தான் மற்றவர்களுக்கு உதவுதல் குணம்.

அதை தான் இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன். இப்போதும் கூட நான் காரில் பயணம் செய்யும் பொழுது காருக்குள்ளே குப்பைத் தொட்டி ஒன்றைவைத்திருக்கிறேன். நான் எந்த ஒரு தேவையில்லாத பொருளையும் வீதியில் வீசி எறிய மாட்டேன். அதே போல் காரில் சில ஆடைகளை வைத்திருப்பேன் யாரேனும் ஆடையில்லாமல் சாலையில் பார்த்தால் அவர்களுக்கு அந்த ஆடையைக் கொடுத்துவிடுவேன்.

தண்ணீர் வீணாகாமல் இருக்க  குழாய்களை அடைக்க தண்ணீர் குழாய் அடைப்புகளையும் வைத்திருக்கிறேன்.

அதே போல் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் எப்போதும் பெட்ரோல் அதிகமாக தான் வைத்திருப்பேன். யாரேனும் சாலையில் பெட்ரோல் இல்லாமல் வாகனத்தை தள்ளிச் சென்றால் உடனே அவர்களுக்கு என்னுடைய வண்டியிலிருந்து பெட்ரோல் கொடுத்து உதவுவேன்.

நான் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. ஆனால் எனக்கு பாராட்டுகள் வரும் பொழுது நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பெரிதான நம்மை கிடைக்கும்.

இந்த பெட்ரோல் கொடுக்கும் சேவையைப் பாராட்டி அன்றைதினம் தமிழ் நாளிதழ் மட்டுமின்றி மலையாள நாளிதழ்களிலும் செய்தி வெளியிட்டது என்னைப் பெரிதும் கௌரவித்து என்றேசொல்லலாம்.

நிறைய பதவிகள் என்னைத் தேடி வருகிறது. ஆனாலும் பணி நிமிர்த்தம் காரணமாக அத்துனை பதவிகளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கே: நீங்கள் பெற்ற பட்டங்கள் விருதுகள் குறித்து சொல்லுங்கள்?

வெறும் இரண்டாம் வரை தான் படித்த நான் இன்று பல விருதுகளும் பட்டங்களும், பாராட்டுகளும் கிடைக்கின்றது என்றால் அது அத்துனைக்கும் காரணம் என்னுடைய கடினமான உழைப்பு மட்டும் தான்.

நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் வாங்கி என்னுடைய அலுவலகத்தை அலங்கலரித்து வரும் இந்த நினைவுச்சின்னங்களைப் பார்க்கும் போது நான் பட்ட எண்ணற்ற கஷ்டங்கள் தான் கண்ணிற்குத் தெரிகிறது.

அறுசுவை வள்ளல், மனித நேய மாமணி, சமூக சேவகர் இன்னும் பல நிறுவனங்களிலிருந்து பல விருதுகள் வாங்கியிருக்கிறேன்.

கே: உங்களின் எதிர்காலத்திட்டம் பற்றி?

எதிர்காலத்தை மட்டுமே தான் சிந்தித்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போது நம்மால் வளர்ச்சி பெறமுடியும்.

நான்  செய்யும் இந்தத் தொழிலை மேலும் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

மக்களிடையே சுத்தம் தூய்மை சார்ந்த விழிப்புணர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

நிறைய உதவிகள் இல்லாதவர்களுக்கு செய்ய வேண்டும்.

என்னுடைய உணவகத்தில் சிறப்பு வாய்ந்த ஃபுல்லி பிரியாணியின் மூலம் வருகின்றவருமானத்தை சமூக அறப் பணிக்காக வழங்கிவருகிறேன்.

கே: குடும்பம் பற்றி?

என்னுடைய தாய், தந்தை இடத்தில் இருந்து எஸ்.பி. அச்சனும், அச்சமாளும் எல்லா விதத்திலும் உறுதுனையாக இருந்தார். சொந்த வீடு வாங்குவதற்கும் கூட பெறும் உதவி நல்கினர்.    மனைவி திருமதி ஃபியூலா அவர்கள். நான் ஒரு வேலை உணவிற்கு கஷ்டப்பட்டியிருந்த காலத்திலிருந்து என்னுடன் நகமும் சதையுமாக இருப்பவர். நிச்சயமாக இவர் எனக்கு மனைவியாய் அமைந்தது கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். மிகச்சிறந்த நிர்வாகி, குடும்பப் பொறுப்பையும் பார்த்துக் கொண்டு தற்போது அலுவலகப் பொறுப்பையும் பார்த்து வருகிறார். மகன் ஜான்பிரபு அமெரிக்காவில் கேட்ரிங் முடித்துவிட்டு இப்போது எங்கள் நிறுவனத்திலேயே பணியாற்றி வருகிறார். மகள் ஜெனிட்டா தற்போது பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது?

குறிக்கோள் இல்லாமல் போகும் பாதை நிச்சயம் நீங்கள் செல்லும் இடத்திற்கு கொண்டு போகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்குள்ளே ஒரு எல்லையை அமைத்துக் கொள்ளுங்கள், அதை நோக்கி மட்டுமே ஓடினாலும் நடந்தாலும் தவழ்ந்தாலும் பயணம் இருக்க வேண்டும்.

தேவையில்லாத வேலையை செய்து நேரத்தை வீணாக்காதீர்கள். காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது என்று நினைக்க வேண்டும்.

முடிந்தளவிற்கு தன்னால் சமூக சேவையை செய்ய முற்படுங்கள். நீங்களும் நன்றாக வாழுங்கள் மற்றவர்களையும் வாழ வழிவகைச் செய்யுங்கள்.

வாழ்க்கை அர்த்தப்பட வேண்டும் என்றால்  அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும்.[/hide]

இந்த இதழை மேலும்