Home » Articles » வாழ நினைத்தால் வாழலாம்- 14

 
வாழ நினைத்தால் வாழலாம்- 14


மித்ரன் ஸ்ரீராம்
Author:

பூவையர்

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

தன்னம்பிக்கை வாசகர் ஒருவர் “நன்றி”யை பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையில் பெண்களைப்பற்றி ஒரு வார்த்தைகூட இல்லையே? என்று என்னிடம் கேட்டார்.  நான் சொன்னேன் “நன்றி” என்ற ஒரு வார்த்தைக்குள் அடைக்கப்படும் அணுவல்ல பெண்.  அதிகாரத்துக்கும் அபரிமிதமான அதிகாரம்.  அகராதிக்கும் அப்பாற்பட்ட அகராதி.  அவர்களை பற்றி எழுத முற்பட்டால் பக்கங்கள் பத்தாது – இருந்தும் முயல்கிறேன்” என்று முடித்தேன்.

“பெண்கள் நாட்டின் கண்கள்” எனும் பெருமை வாசகம், “பாரத மாதா” என்று தாய்க்கும் மேலான கவுரவம், நதிகளுக்கு பெண்களின் பெயரை சூட்டி பெருமிதம், “சக்தி இல்லையேல் சிவம் இல்லை” என்று பிரபஞ்ச சக்திக்கே பெருமை சேர்க்கும் பண்பு – இப்படி சில வரிகளில் சிக்கனமாக முடிக்கப்பட்ட பெண்களின் பங்களிப்பு, அவர்களின்மீது முழுமையான வெளிச்சத்தை இன்னும் வீசவில்லை என்பதே எதார்த்த உண்மை.

“படைத்தலுக்கும், அழித்தலுக்கும் விதைப்புள்ளியாய் இருப்பவள்” – என்று பக்திக்காவியங்கள் பறைசாற்றுவது பெண்களைத்தான்.

ஆனைமுகனின் அவதாரமாகட்டும், அழகு கந்தனின் வெற்றிகளாகட்டும் – பின்புலமாய் இருந்து இயக்கியது பார்வதிதேவி என்று புராணம் சொல்கிறது.

கொடுமைகளையும், கொடியவர்களையும் அழிக்க புறப்பட்ட ஆதிசக்தி – பராசக்தி என்று ஆன்மீக உலகம் அடிக்கோடிட்டு காட்டுகின்றது.

அக்கினியை மட்டுமல்ல, அன்பையும் வர்ஷிக்கும் நெஞ்சம் என்று சொல்லி – “அமாவாசை அன்று முழுநிலவை முன் நிறுத்துவாள், தன் பக்தனின் பரவசமான பக்திக்கு பலனாக – என்று அவள் பாசத்தின் பக்கங்களை படிக்க சொல்கிறது அனுபவங்கள்.

நம்ப மறுக்கும் நாத்திகவாதிகளின் சிந்தையில் நங்கூரம் போடும் விதமாக – வள்ளுவனின் குரலுக்கு வாசுகி ஓடிவந்த போது தண்ணீர் குடம் அந்தரத்தில் நின்றது, என்று வாசுகியின் கற்ப்புக்கு கவுரவம் கொடுத்தது ஒரு வரலாற்று பதிவு.

ஆம்.  வள்ளுவனின் “குரலுக்கு” மட்டுமல்ல அவன் “குறளுக்கும்” பெருமை சேர்த்தது வாசுகி எனும் பெண் என்பதை மடையறும் மறுக்கமாட்டார்கள்.

பெண் இந்த பிரபஞ்சத்தின் பெருங்கொடை.

சிவாஜியை “வீர சிவாஜி” என்று உலகம் பாராட்டும்படி உருவாக்கிய பெருமை – அவனை பெற்ற அன்னைக்கு உண்டு.

அன்பை போதித்த வள்ளலார், வீரத்தையும், பெண் விடுதலையையும் போதித்த பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி, ஓங்காரத்தில் இருக்குது ரீங்காரம் என்று ஓங்கி ஒலித்த ஓஷோ – இவர்களின் புகழ் பூக்களில் மகிழ்ச்சி மணமாக இருப்பது அவர்களின் தாயின் ஆனந்தக்கண்ணீர் தான்.

“Behind Every Successful Man – there is a Women”  – என்பதை உலகமே ஒப்புக்கொள்ள காரணம், எல்லா நாட்டிலும், வெற்றியாளனையும், சாதனையாளனையும் உருவாகியது ஒரு பெண் தான்.

தாயாக, தாரமாக, சகோதரியாக, மூதாட்டியாக – அரிதாரம் பூசாத அவதாரமாக பலரின் வாழ்விலும்.

அவளின் பரிணாமம் பலவிதம்.

வீர சிவாஜியின் அன்னையாய் – வீரத்தை போதித்தாள்

தெரசாவின் உருவில் – அன்பை போதித்தாள்

பத்து மாதம் கரு சுமந்து – தாய்மையை போதித்தாள்

தன் பிள்ளை மகிழ்ந்து வாழ – பாசத்தை போதித்தாள்

குடும்ப தலைவியாய் தலை குனிந்து – பொறுமையை போதித்தாள்

கண்ணிலே நீர் கொண்டு – இரக்கத்தை போதித்தாள்

“எமனிடமிருந்து போராடி தன் கணவனை மீட்டாள் சாவித்திரி” – சத்தியவான் சாவித்திரி என்று தமிழ் ஆசிரியர்கள் சொல்லும்போது, இன்றைய காலகட்டத்தில் அப்படி ஒரு சாவித்திரியை தேடத்துடிக்குது நம் கண்கள்.

ஒரு நாள், சுவாமி விவேகானந்தரின் வகுப்பாசிரியர் “நரேந்திரா! நீ பெரியவனானதும் என்னவாக ஆக விரும்புகிறாய்? என்று கேட்ட போது “குதிரை வண்டிக்காரனாக” விழைகிறேன் என்று விடையளித்தார்.  ஆதங்கம் கொண்ட ஆசிரியர் நரேந்திரனின் அன்னையிடம் வந்து வருத்தப்பட்டார்.  நரேந்திரனை அடுத்த அறைக்கு அழைத்துச்சென்று கீதோபதேச கண்ணன், தேரில் அமர்ந்து இருக்கும் படத்தை காட்டி – “குதிரை வண்டிக்காரன் என்றால் இந்தமாதிரி ஆகவேண்டும்.  மற்றவருக்கு அறிவுரை கூறும் அறிவும், உதவி செய்யும் கனிவும், வெற்றியை ஈட்டும் வீரமும், சந்தர்பங்களை உருவாக்கி அதை சமாளிக்கும் சாதுரியமும், ஆசீர்வாதம் அளிக்கும் ஞானமும் கொண்ட ஒரு குதிரை வண்டிக்காரன் தான் அவன்.  அவனைபோல்தான் ஆகவேண்டும் என்பது தான் சரியான லட்சியம்” – என்று நரேந்திரனின் நெஞ்சில் நங்கூரமிட்டாள் அன்னை.

விதைக்கப்பட்ட விதை விசுவரூபமிட்டு வளர்ந்து – “வீரத்துறவி விவேகானந்தர்”  என்ற விசேஷ பூவை உலகம் முழுவதும் மணம் வீச செய்தது வரலாறு.

My Dear Brothers & Sisters என்று சக மனிதர்களை சகோதர பாவத்துடன் அழைக்கும் மன அழகை அவருக்குள் விதைத்தது.

அயல்நாட்டு பெண்மணி ஒருத்தி – உங்களைபோன்ற அறிவு கொண்ட ஒரு மகன் எனக்கு வேண்டும், என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டபோது “இதற்க்கு எதற்கு திருமணம்.  இப்போதே என்னை உங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அன்னையே” என்று சொல்லி அவள் மனசுக்குள் மழை தூவிய மகான் தான் விவேகானந்தர்.  பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் கொண்ட ஒரு மகன் தான் – மகான் தான் சுவாமி விவேகானந்தர்.

இந்த உன்னதமான குணத்தை அவருக்குள் உற்பத்தி செய்தது “பெண்” எனும் பதுமைதான்.

பூவையர் – வியக்க வைக்கும் விண் மீன்களை போன்ற அழகு

பூவையர் – குழம்பிய குட்டையாம் மனித வாழ்வில் தெளிந்த நீர்.

பூவையர் – இறைவனின் உற்பத்தி இரகசியத்தின் அற்புத இரகசியம்.

பூவையர் – அறிஞனாலும் அறிய முடியாத அற்புத கிரந்தம்.

பெண்களுக்கு ஆண்களைக்காட்டிலும் உடல் வலு குறைவு என்று கூறுவது மருத்துவம்.

பெண்களுக்கு ஆண்களைக்காட்டிலும் மன வலிமை அதிகம் என்று கூறுவது மகத்துவம்.

உடற்கூறு – மருத்துவத்தை ஏற்றாலும், மகத்துவம் என்றுமே மகத்துவமானது.  அந்த சிறப்புக்கு அருகில் செல்லக்கூட ஆண்களுக்கு அனுமதியும் இல்லை, அருகதையும் இல்லை.

இத்தனையும், இதற்கு மேலும் சிறப்புக்கள் உடைய “பூவையர்” – இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் எப்படி இருக்கிறார்கள்?

நாகரிகம் வளர்ந்தபோதும் எப்படி நடத்தப்படுகிறார்கள்?

அவர்களது மகிமைகள் மறைக்கப்படுவதை, மறக்கப்படுவதை உலகம் எப்போது உணரத்துவங்கும்?

“எங்கெங்கு காணினும் சக்தியடா” – என்று சொன்னதுதான் பெண்ணின் பெருமை பேசும் கடைசி வாசகமா?

“கணிவின்பால்” பார்க்கவேண்டிய பெண் சிசுக்களுக்கு இன்னும் “கள்ளிப்பால்” தானே காத்துக்கொண்டிருக்கிறது.

“கல்வியின்பால்” கவனம் செலுத்தவிடாமல், கல்வி மறுத்து உழைக்கும் எந்திரமாக்கி “களைப்பால்” கருக வைக்கும் கயமை என்று தீரும்?

இந்த சமூக அவலங்களில் சிக்கியும், கல்விக்கிளைளை பிடித்து மேலே வந்து, சேற்றில் மலரும் செந்தாமரை போல கல்வியில் சிறந்து விளங்கியும் – மருத்துவர் ஆகும் கனவு மட்டுமல்ல, படிக்கும் ஆசையே அறுந்துபோகும் வண்ணம் அணை கட்டி அழிக்கும் தன்மை என்று தீரும்?

அனிதாவுக்கு அடுத்து எந்த பெயரையும் நாம் எழுத வேண்டாம் என்று இந்த சமூகம் சத்தியம் செய்யும் நாள் வருமா?

“நிமிர்ந்த நெஞ்சும் நேர் கொண்ட பார்வையும்” என்று பெருமை பேசிய நாட்கள் போய் “நிர்பயா” என்ற பெயரை நம் கண்களில் நீர் பெருக படிக்கவைத்த கயவர்கள் இல்லாத நாடாக மாறும் நாள் வருமா?

இதுபோன்ற குற்றங்களுக்கு தீர்ப்பு “குறைந்தபட்ச தண்டனை குற்றங்களை நீக்குமா, அல்லது அதிகபட்ச தண்டனை அவலங்கள் போக்குமா”?

“நகைகள் பல அணிந்து நள்ளிரவில் என்றைக்கு பெண்கள் தைரியமாக, சுதந்திரமாக, பாதுகாப்பாக நடந்து வருகிறார்களோ, அன்றுதான் நாடு சுதந்திரம் அடைந்ததற்கான அடையாளம்” – என்று ஒருவர் சொல்லி சென்றதை படித்ததாக ஞாபகம்.  அந்த அடையாளமும் அடையவில்லை, குற்றம் செய்பவர்களின் அடையாளமும் அறியவில்லை என்று பரபரப்பான செய்திகளை பத்திரிகைகள் பக்கத்துக்கு பக்கம் பிரசுரிக்கும்போது, ஆகஸ்ட் 15  என்பது இந்த வருட நாட்காட்டியில் வரும் இன்னொரு தேதி மட்டுமே என்பது இதயத்தை கனக்க செய்கின்றது.

வயிற்றுக்கும், வாழ்வுக்கும், போராடும் நிலையில் அயல்நாட்டு நிறுவனங்களுக்காக இங்கே அர்த்த ராத்திரியில் உழைக்கும் பெண்கள் அலுவலகத்துக்கு பாதுகாப்பாக போய்வர Car களை நம்புவதும் கவலைக்குரியதே என்று ஒலாவும், ஊபரும் உரைப்பதை – உலகம் உணரவில்லையா? இல்லை நம் உள்ளம் உணரவில்லையா?

தொட்டில் குழந்தை திட்டத்தின் தொட்டில்களில் அதிகம் விழுவது பெண் குழந்தைகள் தான் – என்பது அரசாங்கத்தின் புள்ளி விவரம்.

பல முதியோர் இல்லங்களில் துணி துவைக்கும் போது தெரிந்து விடும் அங்கு அதிகம் வெளுப்பது சேலைகளையா? இல்லை வேட்டிகளையா? என்று.

அதுசரி.  இவர்களை அங்கே விட்டுச்சென்ற படித்த மடையர்களின் சாயம் எப்போது வெளுக்கும்?

காதல் என்ற போர்வையில் – கிடைக்கும் வரை யோகப்போருளாகவும் கிடைத்தபின் போகப்பொருளாகவும் பயன்படுத்தப்படும், வக்கிரபுத்தி காரர்களிடம் இருந்து பெண்ணினம் விடுபடுவது என்று?

Casting Couch எனும் சூழலில் அதிகம் சிக்குவது பெண்கள் தான் என்று திரையுலகில் பல பிரபலங்களே புலம்பும் நிலை தான் இன்று.  கைகொட்டி  சிரிக்கும் இந்த நிகழ்வில் சின்னத்திரையும் சேர்ந்திருக்கிறது என்பது தான் உறுத்தும் உண்மை.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” – என்று சொன்ன காலங்கள் போய், இப்போது “மாதரையே கொளுத்துவோம்” என்றாகி விட்டது விஞ்ஞானமே வெட்கப்படவேண்டிய வேதனை.

“ஜாதிகள் இல்லையடி பாப்பா” – என்று பாப்பாகவாக இருந்தபோதே படித்ததாலோ என்னவோ, கல்யாணத்தின்போது மாற்று ஜாதியாரை மணமுடித்து – இறுதியில் பார்த்தால் அந்த பெண்தான் விதவை ஆக்கப்பட்டு வீதியில் நிறுத்தப்படுகிறாள்.  குற்றவாளியை கேள்வி கேட்பின் “கவுரவக்கொலை” என்று காரணம் சொல்கிறார்.  இது மாறுமா?

பெண்களுக்கு எதிராக இங்கே நடந்துவரும் அணைத்து கொடுமைகளும் அந்த இனத்தை, இந்த சமூகத்தை அழிவுப்பாதைக்குத்தான் அங்குலம் அங்குலமாக நகர்த்திக்கொண்டு வருகின்றது.

திருமண பொருத்தம் பார்த்து கல்யாணம் நடத்தும் ஒருவர் புலம்பினார்.  என் தொழில் இப்போது நிறைய நொடித்து விட்டது.  பல பெண்கள் திருமணத்தை விரும்பவில்லை.  அல்லது பலர் இப்போது வேண்டாம் என்று தள்ளி போடுகிறார்கள்.  இப்படியே போனால், இன்னும் சில வருடங்களில் பெண்களின் சதவீதம் பெருமளவில் குறைந்துவிடும்.  அடுத்த தலைமுறையை அதிகம் பாதிக்கும்” என்றார்.  யோசித்து பார்க்கும்போது உண்மை என்று உணர முடிந்தது.

கள்ளிச்செடிகளுக்கு மத்தியிலும் பெண் எனும் முல்லைக்கொடி முளைத்து, பரவி, வசந்தம் வீச விரும்புகின்றது.  அந்த வாசம் சிறிது சிறிதாக சிதைந்து கொண்டிருக்கும் இந்த சமூகத்திற்கு அத்தியாவசியமான ஆக்ஸிஜென் என்று ஆக்கிக்கொண்டு இருக்கின்றது.  அது படர்வதற்கு ஆதரவுத்தூண் தரவேண்டிய கட்டாயத்தில் தான் இப்போதைய ஆண்கள் சமூகம் உள்ளது.

பெண் இனத்தின் பெருமையை, மேன்மையை, மதிப்பை உணர வேண்டிய தருணம் இது.  33 என்பது ஒரு கணக்காக மட்டும் இருக்கட்டும்.  “ஆணுக்குப்பெண் சரிநிகர் சமானம்” – என்பது காலத்தின் கட்டாயம் என்பது விளங்கட்டும்.

கல்வியிலும், விஞ்ஞானதிலும், பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்பிலும், சமூக அக்கரையிலும் தான் “எள் மூக்கத்தனையும் குறைந்தவள் இல்லை” என்று இன்றைய இளைய தலைமுறை பெண்கள் இயம்புவது – நாம் செவி மடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

பெண்மை குறித்த, பூவையர் குறித்த நம் கண்ணோட்டம் மாற வேண்டும்.

“உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” – என்ற அக்கறை அவசியம் தேவை.  “என் தேவையை யார் அறிவார் உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்” – என்று தெய்வத்திற்கு நிகராக உங்கள் இல்லது ராணியை இன்றே உயர்த்துங்கள்.

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், நாளோடும் பொழுதோடும் உறவாடவேண்டும்” என்ற புரிதல் ஒவ்வொரு கணவனுக்கும் தேவை.

மலையையே தகர்க்கும் ஆற்றலை மனதுக்குள் கொண்டாலும், மௌனத்தை மொழியாக கொண்ட “பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி” என்றுணர்ந்து அவளிடம் பாடங்கள் பயில முயல்வோம்.

இன்று புதிதாய் பிறந்தோம், இந்த நொடி இனிய நொடி என்று இயம்புங்கள்.

“அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே” எனும் வரிகளை இசையின் அழகுக்கும் மீறி, நடிகரின் நடிப்புக்கும் மீறி, குரலின் இனிமைக்கும் மீறி – நெஞ்சில் குடியேற்றுங்கள்.

பெண்மையை வாழ்த்துங்கள்!  பூவையரை போற்றுங்கள்!

போற்றினால், உங்கள் வாழ்வு இனிக்கும், இந்த சமூகம் சிறக்கும்.  அனைத்துக்கும் மேலே ,

“வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2018

உயர்வுக்கு மூலதனம் தன்னம்பிக்கை…
வரலாற்றில் ஓளிவீசும் தைரியத் திலகங்கள்
மனிதர் புனிதர்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 11)
ஆயுளைக் கூட்டும் உணவுகள்
உள்ளத்திலே உள்ளது உலகம்
முயன்றேன் வென்றேன்
முயற்சியே முன்னேற்றம்
கரியடுப்பிலிருந்து கணினி வரை
இளைஞனால் முடியாதது உண்டா? மனிதனால் முடியாதது உண்டா?
தீக்காயம்
விடியலை நோக்கும் மண்ணின் விதைகள்
வாழ நினைத்தால் வாழலாம்- 14
வெற்றி உங்கள் கையில்
பாயும் ஆறு
பெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்
என்று மடியும் பெண்ணடிமை?
தன்னம்பிக்கை மேடை
மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!
உள்ளத்தோடு உள்ளம்