Home » Articles » வெற்றி உங்கள் கையில்

 
வெற்றி உங்கள் கையில்


கவிநேசன் நெல்லை
Author:

பலமா? பலவீனமா?

நான் ஒன்றுக்கும் உதவாதவன். 

என்னால் எப்போதுமே வெற்றி பெற முடியாது.

என் உடலில் பல குறைகள் இருக்கின்றன.

உடல் ஊனமுற்ற என்னால் எப்படி சாதிக்க முடியும்?

– இவ்வாறு  பல்வேறு “பலம்” (Strength) இழந்த கூக்குரல்களை நாம் கேட்கலாம்.

“என்னால் முடியாது” என்று முழுவதுமாக செயலைச் செய்ய மறுப்பவர்களும் உண்டு.

உடலில் ஊனம். அப்பா இல்லை. அம்மா இறந்துவிட்டாள். உழைக்க வழியில்லை. இந்தச் சூழலில் கூட உயிர்வாழ விரும்பி பிழைக்க வழிதேடி ‘அநாதை’ முத்திரையோடு அலைபவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள்.

ஆனால், அதேவேளையில் கை, கால்கள் திடமாக இருக்கிறது. கண், காது, மூக்கு, வாய் – என்ற முக்கிய உறுப்புகளும் நலமாக இருக்கிறது. உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அன்பான அப்பா. ஆதரவுதந்து அரவணைக்கும் அம்மா. உரிமையோடு அன்புகாட்டும் அக்கா, தங்கை. உண்மையான உறவை வெளிப்படுத்தும் பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, அத்தை, மாமா – என நெருங்கிய உறவுகள், உதவும் ஊர்க்காரர்கள். இப்படி எத்தனையோ உறவுகள் இருந்தும், ‘தற்கொலை’ செய்து வாழ்வை முடித்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்த உலகில் இனிமையாக வாழ்வதற்குக் கிடைத்த அற்புதமான வரத்தை சாபமாக மாற்றி, உயிரைத் தானாகவே மாய்த்துக்கொள்வது வேதனையை விளைவிக்கும் செயல் அல்லவா?

தன்னிடமுள்ள பலங்களை அறியாதவர்கள்தான், தங்கள் பலவீனங்களை நாள்தோறும் நினைத்து வருந்தி சோகக்குழிக்குள் புதைந்துபோகிறார்கள்.

ஜப்பான் நாட்டில் நடந்ந ஒரு உண்மைச் சம்பவம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

அவன் ஒரு ஊனமுற்ற சிறுவன். சுமார் 10 வயது நிரம்பியவன். இடது கை அவனுக்குக் கிடையாது.

இளம்வயதிலேயே அவனுக்கு ஒரு விசித்திரமான ஆசை இருந்தது.

“எப்படியாவது நான் ஒரு ஜூடோ சாம்பியனாக மாற வேண்டும்” – என நினைத்தான்..

தனது எண்ணத்தை சிலரிடம் சொன்னான்.

“ஒரு கை இல்லாத சிறுவனால் எப்படி ஜூடோவில் சிறந்து விளங்க முடியும்?” – என அவர்கள் சிரித்தார்கள்.

சில ஜூடோ மாஸ்டர்களை நேரில் சந்தித்து அவன் தனது விருப்பத்தைச் சொன்னான். “உனக்கே கை இல்லை. ஜூடோவுக்கு முக்கியமே கைதான். இடது கை இல்லாத உன்னால் எப்படி வெற்றி பெற முடியும்?” என்றுசொல்லி அவர்களும் அவனை மேலும் பலவீனப்படுத்தினார்கள்.

சிறுவன் அவனது தன்னம்பிக்கையை தளரவிடவில்லை. மீண்டும் சில ஜூடோ மாஸ்டர்களிடம் நேரில் சென்று தனது எதிர்காலக் குறிக்கோளைத் தெரிவித்தான்.

ஜூடோ மாஸ்டர்களில் சிலர் கோபப்பட்டார்கள். எரிச்சல்பட்டார்கள். முடிவில், ஒரு ஜூடோ மாஸ்டர் அவனுக்கு உதவினார்.

ஜூடோ பயிற்சி ஆரம்பமானது. தினந்தோறும் அவனுக்கு பயிற்சி வழங்கினார் ஜூடோ மாஸ்டர்.

வாரங்கள், மாதங்களாகி ஆண்டாக மாறியது. ஆனால், ஓராண்டு முடிந்தபின்பும் ஒரே ஒரு தாக்குதல் பயிற்சியை மட்டுமே சிறுவனுக்கு கற்றுத் தந்திருந்தார் மாஸ்டர். வேறு எந்தவித யுக்தியையும் அவனுக்கு மாஸ்டர் கற்றுத்தரவில்லை.

சிறுவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

“ஒரு வருடமாக பயிற்சி செய்தபின்பும், எனக்கு ஒரே ஒரு தாக்குதல் முறையை மட்டும் மாஸ்டர் கற்றுத் தந்திருக்கிறார். இந்தத் தாக்குதல் முறையை மட்டும் தெரிந்துகொண்டு, என்னால் எப்படி வெற்றி பெற முடியும்?” – என சோர்வடைந்தான்.

தனது எண்ணத்தை வார்த்தைகளாக்கி ஜூடோ மாஸ்டரான குருவிடம் நேரடியாகவே கேட்டான்.

“குருவே… எனக்கு ஒரே ஒரு தாக்குதல் பயிற்சி மட்டும் கற்றுத் தந்திருக்கிறீர்கள். இது மட்டும் எனக்குப் போதுமா? வேறு தாக்குதல் பயிற்சி வேண்டுமல்லவா?” – என வினா எழுப்பினான்.

சிறுவனது ஆர்வத்தை அறிந்த ஜூடோ மாஸ்டர், “நீ கவலைப்படாதே. நீ திறமையானவன். நீ கற்றுக்கொண்ட ஒரே ஒரு தாக்குதல் வித்தை மட்டுமே உனது வெற்றியை உனக்குப் பெற்றுத்தரும்” என்றார்.

குருவின் வாக்கை வேதவாக்காக எண்ணி, தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டான் சிறுவன்.

ஒருநாள் – சாம்பியன்கள் பங்குபெறும் போட்டி தொடங்கியது.

முதல் போட்டி – ஜூடோ கலையில் வல்லவரான ஒருவரோடு போட்டியிட்டு, வெற்றி பெற வேண்டும். சிறுவன் களத்தில் இறங்கினான். நன்றாக எதிர் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றான்.

இரண்டாவது போட்டியில் – சிறந்த ‘சாம்பியன்’ போட்டிக்கு வந்தார். அந்தப் போட்டியிலும் வெற்றிபெற்று, தொடர்ந்து முன்னேறினான்.

இறுதிப்போட்டியில் – புகழ்பெற்ற மிகச்சிறந்த சம்பியன் போட்டிக்கு வந்தார்.

இடது கை இல்லாத சிறுவனின் தோற்றம் அந்த சாம்பியனுக்கு சிரிப்பைத் தந்தது. முதல் சுற்றுப் போட்டியில் ஓங்கி அடித்து சிறுவனை சாம்பியன் தாக்கினார்.

“சிறுவன் நிச்சயம் தோற்றுவிடுவான்” என்ற முடிவுக்கு வந்த சாம்பியன், தனது பாதுகாப்பு கவசத்தைக் கழற்றிவிட்டு, சிறுவனை பலம்கொண்ட மட்டும் தாக்கினார். ஆனால், சிறுவன் தனக்குத் தெரிந்த ஒரே ஒரு தாக்குதல் முறையை மட்டுமே கையாண்டான்.

ஆனால், முடிவில் சிறுவனின் திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த சாம்பியன் வீழ்ந்தார். சிறுவனுக்கு “சாம்பியன் பட்டம்” கிடைத்தது.

சிறுவனின் வெற்றியை யாரும் நம்பவில்லை. ஆச்சரியத்தோடு சிறுவனையும், ஜூடோ மாஸ்டரையும் பார்வையாளர்கள் நெருங்கி வந்து பாராட்டினார்கள்.

மகிழ்ச்சியில் ஜூடோ மாஸ்டரின் கால்களில் விழுந்து வணங்கினான் சிறுவன்.

“ஒரே ஒரு தாக்குதல் முறையை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு என்னால் எப்படி வெற்றி பெற முடிந்தது?” – என ஆச்சரியத்தில் திகைத்துக் கேட்டான் சிறுவன்.

“உனது வெற்றிக்குக் காரணம் உனது உடல் ஊனம்தான். நீ எது உனக்குப் பலவீனம் என்று நினைத்தாயோ, அதுவே உனது பலமாக மாறிவிட்டது. ஜூடோ பயிற்சியிலுள்ள மிகக் கடுமையான தாக்குதல் முறையை உனக்கு நான் கற்றுத் தந்தேன். இந்த தாக்குதல் முறையில் உனது திடீர் தாக்குதலை சந்திக்க வேண்டுமென்றால், உனது இடது கையைப் பிடித்துத்தான் எதிராளி உன்னை தாக்க வேண்டும். ஆனால், உனக்கு இடது கை கிடையாது அல்லவா? இதுதான் உனது வெற்றியின் ரகசியம்” என்றார் ஜூடோ மாஸ்டர்.

ஜூடோ மாஸ்டரின் விளக்கத்தில் அதிர்ந்து நின்றான் சிறுவன். சிறுவனின் பலவீனம்தான், சிறந்த வெற்றியைத்தரும் பலமாக மாற்றப்பட்டிருப்பது முறையான பயிற்சிக்குக் கிடைத்த பரிசு அல்லவா?

சிலர் தனது பலவீனங்களை எண்ணி வருந்தி சோர்ந்துவிடுகிறார்கள்.

தனது பலவீனங்களைநீக்க முறையான பயிற்சி செய்தவர்கள் அவற்றை வெற்றிக்கு அடிப்படையான பலங்களாக மாற்றி வெற்றிக் காண்கிறார்கள் என்பது உண்மைத்தானே?.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2018

உயர்வுக்கு மூலதனம் தன்னம்பிக்கை…
வரலாற்றில் ஓளிவீசும் தைரியத் திலகங்கள்
மனிதர் புனிதர்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 11)
ஆயுளைக் கூட்டும் உணவுகள்
உள்ளத்திலே உள்ளது உலகம்
முயன்றேன் வென்றேன்
முயற்சியே முன்னேற்றம்
கரியடுப்பிலிருந்து கணினி வரை
இளைஞனால் முடியாதது உண்டா? மனிதனால் முடியாதது உண்டா?
தீக்காயம்
விடியலை நோக்கும் மண்ணின் விதைகள்
வாழ நினைத்தால் வாழலாம்- 14
வெற்றி உங்கள் கையில்
பாயும் ஆறு
பெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்
என்று மடியும் பெண்ணடிமை?
தன்னம்பிக்கை மேடை
மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!
உள்ளத்தோடு உள்ளம்