Home » Articles » பாயும் ஆறு

 
பாயும் ஆறு


அனந்தகுமார் இரா
Author:

தொடர்ச்சி

‘லா-பெட்ரோஸா’ என்றால் தெரியாதவர்களுக்கு தமிழ்நாட்டு பட்டிதொட்டியெல்லாம் கூட சினிமா கதாநாயகர்களுக்கு இணையாக டீ சர்ட்டில் (T-Shirt) இடம்பிடித்த “சே-குவேராவை” தெரிந்து இருக்கும்.  எர்னெஸ்டோ     செ-குவேரா… ஆரம்ப காலங்களில் தென் அமெரிக்கா கண்டத்தில் தெற்கு வடக்காக அர்ஜெண்டினா, பெரு, சிலி வழியாக இருசக்கர வாகனத்தில் (நோர்ட்டன்) Norten-make பயணித்த நினைவுகளை அவர் தனது தானியங்கி இருசக்கர வண்டி நாட்குறிப்புகள் (Motor Cycle – Diaries) என்று எழுதி உள்ளார்.  அவரது அந்த இருசக்கர வாகனத்துக்கு அவரே வைத்திருந்த செல்லப் பெயர்தான் “லா-பெட்ரோஸா” (La Poderosa -“The Mighty One“) என்பது  சக்திவாய்ந்த – The Powerful என்பதாகும்.    யமஹா – தல – 100  வாகனம்… இதை காண்கையில் எல்லாம் கல்லூரியில் நண்பன் கணா என்கின்ற கணபதியின் வாகனத்தை ஓஸி-வாங்கி ஓட்ட எத்தனித்த (ஓட்டினோம் என்று சொல்லிவிட மனம்வரவில்லை – ஆனால் காயமின்றி தப்பினோம் – என்று காலரை தூக்கிவிட்டு சொல்லலாம்)  நாட்கள் ஞாபகம் வருகின்றன.  பொதுவாக வாகனங்களை நாம் பக்குவமாக பயன்படுத்த உறுதி எடுத்துக்கொள்வோம் ஆகுக.

ஆறுமட்டுமா அழகு:-

காவிரியாறு தன்னுடைய தாகத்தை தீர்த்த மகிழ்ச்சியில் தளும்புவதாக தோன்றியது.  ஆங்காங்கே சிறுசிறு பாறைகளில் குதித்துத் துள்ளிய நீரில் இருந்து துடித்துத் துள்ளிய மீன்களை சில சிறுவர்கள் ‘லபக்’ என்று பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.  அப்படியொரு காட்சிப் பின்புலத்தில் வானம்பார்த்தவாறு ஒரு வாகான பாறையில் சாய்ந்து புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்தபொழுது நண்பர்கள் நிறையபேர்… மகிழ்ச்சியாக பின்னூட்டம் (Feedback) கொடுத்திருந்தனர்.  வால்டன் ஏரி அருகே தோரோ (Thoreau) சென்று வாழ்ந்த காலக்கட்டத்தின் பதிவுகளை அந்தக் காட்சிப்பதிவு அசைபோட வைத்தது காவிரி சிறு சிறு கற்குவியல்களில் பட்டு நெளிவதைப்போல நம் கட்டுரையும் நுரைத்துக்கொண்டு ஓடுவதே அழகுதான்.

நீல நிற உடையில் போடப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்திற்கு ஆற்றங்கரையில் நினைவோடை – ஓடுமிடம் கொடுமுடி அருகே என்று எழுதி ஆங்கில தலைப்பிட்டு இருந்தோம் அறு நூற்றை தாண்டிய நண்பர்கள் விரும்பிய (Like) புகைப்படம் நாம் செய்கின்ற இடத்தில் எல்லாம் அதை ஏற்கனவே பார்த்திருந்த நண்பர்கள் அதுகுறித்து விசாரித்த வண்ணம் முக மலர்ச்சியுடன் பேச வைத்தது.  அதில் ஒரு நண்பர் “ஆறு மட்டுமா அழகு?” என்று ஒரு இருபொருள்படும் கேள்வி ஒன்றை பதிவிட்டு இருந்தார்.  இது பலபேரால் பார்க்கப்படும் பொழுது பல பொருள்களில் புரிந்துகொள்ளப்படும்.  ஒரு சில அர்த்தங்களில் நாமும் அழகு ‘வெட்கம்’ வரும் வகையில் கூட புரிந்துகொள்ளலாம்.  ஆனால், அவர் அதை சொல்லவில்லையே.  அழகு… என்பதே… சொல்லாமல் விடுகின்ற சொற்களில்தானே இருக்கின்றது? ஆங்கில கவிஞன் வோட்ஸ்வொத்தும், கீட்ஸூம், மனதில் வார்த்தை ஆறுகளை ஓடவிட்டனர்.  இதற்கு பதில் தரும்பொழுது அனைவரும் மேலும் ‘முகம் சிவக்கும்’ வண்ணமும், மேலும் முகம் மலரும் வண்ணமும், உடனே பதில் கூறும் வேகத்திலும் பதில் பதிவிட வேண்டும் என்று சற்றே மூளையை கசக்கி ஒரு பதிவிட்டோம், அது மிகவும் நன்றாக வந்திருந்தது.  முகநூலை கண்டவர் சிலரே!  இக்கட்டுரையை படித்துக்கொண்டு இருப்பவர்களோ பலர்… எனவே அந்த முகநூல் பதிவை எழுத்துப் பதிவாக்கும் எண்ணம் தோன்றியது.

சொற்கள் மிகுந்த கவனத்துடன் கையாளப்படவேண்டிய

வாழ்க்கைக் கட்டிடத்தைக் கட்டப் பயன்படும் கற்கள்

என்று சிந்தனை ஓடுகிறது.

“சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”

என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.  அவ்வாறு, ஒரு பதிலை எழுதலாம் என்கின்ற நம் முயற்சியில் இதைப்படிக்கின்ற உங்கள் மனதில் ஆற்றின் மடியில் ஒய்யாரமாய் தலைவைத்து விண்ணைத் தாண்டி விழிகளை வானெங்கும் பரப்பி சாய்ந்திருக்கும் படத்திற்கு, “ஆறு மட்டுமா அழகு” என்று ஒரு பதிவிட்டால்… அதைப் பதிவிட்டவருக்கும் புல்லரிக்கும் வண்ணம், என்ன பதில் எழுதலாம் என்று யோசனை செய்து சொல்லுங்கள்.

கற்பனையே ஆறுதல், கற்பனையே மாறுதல்:-

அதற்குள் நாம், “மூளைப்புற்று நோய்” என்று, நவீன மருத்துவ ஆராய்ச்சி முறைகள் வரப்பிரசாதமாக நம் கரங்களில் தவழ விட்டுள்ள ஊடுருவிப் பார்த்து கண்டறியும் தொழில்நுட்பம் மூலம்… பேரதிர்ச்சியை நமக்குக் கொடுத்த சூழ்நிலையை திரும்ப சென்று கண்டு வருவோம்.  அதில் மனதிற்கு அமைதியும் முடிந்தால் நிறைவும் அளிக்கும் மாற்றமோ செய்தியோ?  வந்துவிடாதா?… உதாரணத்திற்கு, ஒரு கற்பனையாக… கீழ்காணும், பத்தியில் ஒரு கனவில் காணும் சம்பவத்தை பார்ப்போம்.

“இந்த சி.டி ஸ்கேன் (CT Scan) எடுக்கப்பட்டபொழுது மருத்துவக் கல்லூரி பாடபுத்தகத்தில் மூளைப்புற்று தோடர்பான மற்றொரு படக்காட்சி, தவறுதலாக உங்களுடைய உறவினரின் படக்காட்சியாக வந்துவிட்டது.  அதனால் மீண்டும் சரிபார்த்து நோயில்லாத படமாக இருக்கும் இந்தப்படந்தான் தங்களுடையது, தங்களுக்குரியது… இதை நீங்கள் மீண்டும் சரிபார்த்துக்கொள்ளலாம்,” என்று கூறினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று தோன்றியது.  அப்படி நடந்தால், மருத்துவமனை நிர்வாகத்தின்மீது, ஏன் முதலிலேயே சரியாக பார்த்து கூறவில்லை, என்கிற மனஸ்தாபம் கூட வரலாம். ஆனாலும் மிகவும் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்த மிரட்சியும் கவலையும் லேசாகி மறையக் காணலாம்.  இப்படியொரு கற்பனையும் நமக்குத் தோன்றியது.  ஆற்றின் ஓட்டத்தில் காணும் சுழல்களைப் போல சில காட்சிகள் இதுபோன்ற செய்திகளால் வருவதே வாழ்வின் இயல்பு.

தற்செயல்:-

தற்செயலாக மருத்துவ நண்பர் அறிவுச்செல்வன் நம்மை அலுவலகத்தில் சந்தித்திராவிட்டால் மூளைப்புற்றுநோய் குறித்த நியூரோசர்ஜிகல் அதிநுண்சிகிச்சை துறைகுறித்த இவ்வளவு ஆழமான சிந்தனை வந்திருக்காது.  வயதான பெரியவர் சொற்கோ, என்கின்ற உருவகத்திற்கு பதில் மூளைப் புற்று நோயாளி சொற்கோ என்கின்ற புதுக் கோணத்தில் மதிப்பிற்குரிய நண்பரின் தந்தையை பார்க்கும் கோணம் வந்திருக்காது.  அந்த மருத்துவ மனையில் இருந்து பிரிந்து கிளம்பும்பொழுது, அந்தப்பெரியவருக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பதும், அவருக்கு மிகவும் தேவைப்படுவதுமான, “அறுவைச் சிகிச்சை செய்யமாட்டோம்”, – என்கின்ற ஆசுவாசத்தை நம்மால் கொடுக்க முடிந்திருக்குமா? என்கின்ற சிந்தனையோடே நாகர்கோவில், கோதையாறு, தோவாளை, திருநெல்வேலி என அலுவலக பணி நிமித்தம் பயணித்த பொழுதும்… ஒரு வாழ்ந்து பழுத்த முதியவருக்கு… அவர் நினைக்கின்ற “அக்கறையை” “கவனிப்பை” “தெம்பை”, “பாசத்தை”, ‘அரவணைப்பை’ அளிப்பதற்கு பதிலாக, சிகிச்சையை மட்டுமே  அளிக்க நாமும் மௌன ஒப்புதல் அளித்ததாக தோன்றும் மனநிலையுடனே இருந்திருக்க மாட்டோம்.  இந்த பாராகிராஃபின் முதல் சொல்லை பாருங்கள், அது ‘தற்செயலாக’ என்றே தொடங்குகிறது.  அதற்கான சந்திப்புத்திட்டமிடல் எங்களுக்குள் நிகழவில்லை.  இதைப்படிக்கும், திட்டமிடல் உங்களிடம் நிகழவில்லை.  எதேச்சையாக இந்த புத்தகத்தை நீங்கள் படித்து நம் சொற்களை, சிந்தனையை பகிர்ந்துகொண்டிருக்கக்கூடும்… அனைத்துமே தற்செயலாகவே நிகழ்கின்றன.  இது குறித்த அற்புதமான விளக்கங்களை, இதே வினாடி, அதே வினாடி மற்றும் அடுத்த வினாடி என்கின்ற புத்தகங்களில் நாகூர் ரூமி சார் அருமையாக எழுதியிருக்கின்றார்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2018

உயர்வுக்கு மூலதனம் தன்னம்பிக்கை…
வரலாற்றில் ஓளிவீசும் தைரியத் திலகங்கள்
மனிதர் புனிதர்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 11)
ஆயுளைக் கூட்டும் உணவுகள்
உள்ளத்திலே உள்ளது உலகம்
முயன்றேன் வென்றேன்
முயற்சியே முன்னேற்றம்
கரியடுப்பிலிருந்து கணினி வரை
இளைஞனால் முடியாதது உண்டா? மனிதனால் முடியாதது உண்டா?
தீக்காயம்
விடியலை நோக்கும் மண்ணின் விதைகள்
வாழ நினைத்தால் வாழலாம்- 14
வெற்றி உங்கள் கையில்
பாயும் ஆறு
பெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்
என்று மடியும் பெண்ணடிமை?
தன்னம்பிக்கை மேடை
மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!
உள்ளத்தோடு உள்ளம்