Home » Articles » என்று மடியும் பெண்ணடிமை?

 
என்று மடியும் பெண்ணடிமை?


மோனிகா கே. எம்.
Author:

இறைவனின் அற்புதப் படைப்பு ஆணும் பெண்ணும்,  இருவருமே சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.  இதைத்தான், ‘சிவம் பாதி, சக்தி பாதி’ என்று புராணங்கள் கூறுகின்றன.  பெண்களைப் போற்றுவதும், மதிப்பதும் பாரதத்தின் பண்பாடு. கல்விக்கு ‘கலைமகள்’, செல்வத்திற்கு ‘இலட்சுமி’, வீரத்திற்கு ‘மலைமகள்’ என்று அனைத்துச் செல்வங்களுக்கும் பெண்பாற் கடவுளர்களையே அதிபதிகளாகச் சித்தரித்துள்ளனர்.  நதிகளுக்கும் ‘கங்கை’, ‘யமுனை’,‘காவேரி’ என்ற பெண்பாற் பெயர்களையே சூட்டியுள்ளனர்.

அரசியல் உரிமைக்காகக் களம் இறங்கிய ஜான்சி ராணி, லட்சுமிபாய், கல்வி உரிமைக்காகப் போராடிய முத்துலட்சுமி ரெட்டி, அண்ணல் காந்தியோடு அரும்பணியாற்றிய தில்லையாடி வள்ளியம்மை, இலக்கியத் தளத்தில் சாதனை படைத்த சரோஜினி நாயுடு, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னிபெசன்ட், புற்றுநோய்க்குத் தீர்வு கண்டு நோபல் பரிசு பெற்ற கியூரி போன்றோர் வரலாறு படைத்தவர்கள்.

கருணையுள்ளம் கொண்ட அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா, இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, உலக அளவிலான புக்கர் பரிசைப் பெற்ற அருந்ததி ராய், விண்வெளியில் பறந்து தீபமாய் ஓளிவிடும் கல்பனா சாவ்லா, திகார் சிறையில் சாதனைகள் பல புரிந்த கிரண் பேடி, இசைத்துறையில் பிரகாசிக்கும் லதா மங்கேஷ்கர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா போன்றோர் சாதனை படைத்த, படைத்துக் கொண்டிருக்கும் மங்கையர்களே.

நாட்டின் குடியரசுத் தலைவராக, பிரதமராக, முதல்வராக, கட்சிகளின் தலைவர்களாக, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களாக, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, விஞ்ஞானிகளாக, உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் இயக்குனர்களாகப் பல்வேறு துறைகளிலும் உயர் பதவிகளை வகித்து சாதனை புரிந்து வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டிலும் சாதனை படைத்த பெண்கள் பலர், ‘லட்சுமி எனும் பயணி’ என்ற தன் முதல் நூலுக்கே ‘ஸ்பாரோ’ விருதைப் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மா. நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்.  இந்திய விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) 104 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் செலுத்த எட்டு பெண் விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.  திருநங்கைகளின் உரிமைக்காகப் போராடி வரும் திருநங்கை அகாய் பத்மாஷலி இந்தியாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.  பேட்மிண்டன்  விளையாட்டு என்றாலே பி.வி.சிந்து என்கிற அளவுக்கு அவர் சாதனை படைத்து உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்,  உலக அழகியாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர்  ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தகைய சாதனைகளுக்குப் பல சோதனைகளும் போராட்டங்களும் மறைந்துள்ளன.

உலக மகளிர் தினம்

வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த பெண் சமுதாயம் வெளி உலகில் சுதந்திரமாக வலம் வருவதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றித் தினமே உலக மகளிர் தினமாகும். பெண்களின் பிரச்சனைகள் குறித்து, முதன்முதலில் கோரிக்கைச் சாசனம் ஒன்று 1866இல் உலகத் தொழிலாளர்கள் சங்கத்தில் முன்மொழியப்பட்டது,  1870ம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதியன்று நியூயார்க் நகரில், பஞ்சாலைகளில் 16 மணி நேரம், உழைத்து வந்த ஆயிரக்கணக்கான பெண்கள், வீதியிலிறங்கி 8 மணிநேர வேலை கோரி, வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தினர்.  அந்த தினத்தைச் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக அனுசரிக்க 1910-ல் கோபன் ஹேகனில் நடைபெற்ற சோஷலிஸ்ட் பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில், தலைசிறந்த போராளியான கிளாரா ஜெட்கின் தீர்மானத்தை முன்மொழிந்தார். 1911இல் இந்த தினம் முதன்முறையாக வியன்னாவில்  கொண்டாடப்பட்டது,  எட்டு மணி நேர வேலை என்ற பொருளாதாரக் கோரிக்கையையும் ஓட்டுரிமை என்ற அரசியல் கோரிக்கையையும் முன்வைத்து உருவான உழைக்கும் பெண்கள் தினம்தான், காலப்போக்கில் உருமாறி இன்று சர்வதேச மகளிர் தினமாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ஆம், தேதி கொண்டாடப்படுகிறது.

உலக அன்னையர் தினம்

அக்காலத்தில் யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர்,  அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சிதறிப்போயின.  அப்படிப் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர  அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சமாதானத்திற்கும் அயராது பாடுபட்டவர் சமூக சேவக “ஜார்விஸ்”. வாழ்நாள் முழுக்க சமூக சேவகியாகவே வாழ்ந்த அவர் 1904ல் மறைந்தார்.

அவருடைய மறைவுக்குப் பின் தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் அனா ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார்.  தன்னுடைய தாயார் ஜார்விஸ் நினைவாகத் தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்கள் கௌரவிக்கப் பட வேண்டும் என்று எண்ணினார்.  சமூக நலனில் அக்கறை கொண்ட அவர் ஏதாவது ஒரு நாளில் எல்லோரும் தங்களது தாயை, அவர் உயிரோடு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவர் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து கௌரவிக்க வேண்டும் என்று அனா ஜார்விஸ் விரும்பினார். தம் எண்ணத்தை பெனிசுல்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார்,  அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங்கீகரித்து அறிவித்தது,  இவரின் விடாமுயற்சியின் காரணமாக 1914ம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமான அன்னையர் தின அறிவிப்பை வெளியிட்டார்,  அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அனா ஜார்விஸ் திருமணம் செய்து கொள்ளாமல் அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர்.

உலக அளவில் தாய்மையைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை,  மாறாக, மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகின்றது.

தொடரும் அவலம்

உலகம் முழுவதும் பல சமூகச் சீர்திருத்தவாதிகள் பெண்களுக்காகப் போராடினர்.  இந்தியாவில் இராசாராம் மோகன்ராய், மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற பெருமக்கள் குரல் கொடுத்தனர்,  தமிழகத்தில் தந்தை பெரியார், திரு.வி.க. போன்ற தலைவர்களும், நீதிபதி வேதநாயகம் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன், பெரியார் போன்ற சிந்தனையாளர்களும் பெண்களுக்காக வாதாடினர்.

எனினும் பெண்கள் இன்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருவது வேதனைக்குரியது.  பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தாக்குதல்கள் பற்றியச் செய்தி இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்குப் பெண்கள் ஏமாற்றப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும், வேதனைக்கு உள்ளாக்கப்படுவதும், வதை செய்யப்படுவதும், சுரண்டப்படுவதும், கற்பழிக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளன.

நமது தேசத்தின் வாழ்வியல் முறையில் குடும்ப அமைப்பு அடிப்படையானது.  குடும்பம் என்பது திருமணத்தை முதலாகக் கொண்டு ஏற்படுவது, திருமணம் ஆன்ம உறவின் அழகிய தொடக்கம்,  அந்த இனிய உறவில் பூத்துக் குலுங்கும் அன்பின் பூந்தோட்டம் இல்லறம்.

இந்த இனிய பந்தத்தை பல ஆண்களுக்கு நேசிக்கத் தெரிவதில்லை,    சரியாகப் புரிந்து கொள்ளவும் முடிவதில்லை,  இதனால்  எண்ணற்ற எதிர்பார்ப்புகளோடும், இன்பக் கனவுகளோடும் இல்லறத்தில் அடியெடுத்து வைக்கும் பல பெண்களின்  எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி விடுகின்றன,  அவர்களின்  கனவுகள் கருகி குடும்ப வாழ்வு அர்த்தமற்றதாகி விடுகின்றது,   உண்மை அன்பு என்பது வெறும் உணர்ச்சியோ, இன்னொருவர் மீதான கவர்ச்சியோ அன்று,  ஒருவர் இன்னொருவர் மீது  காட்டும் ஆத்மார்த்தமான அக்கறை, அன்பு.

அக்காலத்தில், குடும்பத்திற்காக சம்பாதிப்பது என்பது கணவனின் கடமையாக இருந்தது,  குடும்பத்தை நிர்வகிப்பது மனைவியின் முழு நேர வேலையாக இருந்தது.  ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது,  மனைவியும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் காலம் வந்து விட்டது, இது வரவேற்கத்தக்கது என்றாலும் வேதனை நிறைந்ததாகவும் இருக்கிறது,  வீட்டையும் பராமரித்து வேலை பார்க்கும் இடத்திலும் தன் பெயரை காப்பாற்றிக் கொள்ள பெண் படாத பாடுபட வேண்டி இருக்கிறது.

உறவுகளுக்குள் திருமணம் நடக்கும்போது மாப்பிள்ளையைப் பற்றியும், மணப்பெண்ணைப் பற்றியும் இரு குடும்பங்களும் நன்கு அறிந்திருக்கும்,  எனவே, அவ்வப்போது ஏற்படும் விரிசல்கள், பிரச்சனைகள் உரிய முறையில் சரிசெய்யப்படும்,  ஆனால் இன்று உறவுகளுக்குள் திருமணம் என்பது அரிதாகி விட்டது,  பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்கள் குறைந்து விட்டன,  இதில் நன்மைகள் பல உண்டு என்றாலும் பேராபத்தும் பெருமளவில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை,  அதிலும் குறிப்பாக ஆணை விட பெண்ணும் அவளது குடும்பத்தினரும்தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்,  முள் மீது துணி விழுந்தாலும், துணி மீது முள் விழுந்தாலும் கிழியப் போவது துணிதானே!

உறவுகளுக்கு வெளியே மாப்பிள்ளை பார்க்கும்போது ஏமாற்று வேலைகள் அதிகமாக இருக்கின்றன. திருமணத்தை முன்மொழியும் போது ‘உனக்காக எதையும் செய்வேன், உயிரையும் கொடுப்பேன்’ போன்ற ஆயிரம் உறுதிமொழிகளை அள்ளி வீசுகிறார்கள்,  புது உறவு என்பதால் மாப்பிள்ளை குடும்பத்தினரை முன்பின் அறியாத சூழலில் அவர்களின் வார்த்தைகளை நம்பி பெண் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதித்து விடுகிறார்கள்,  திருமணத்திற்கு பிறகு ‘கணவன்’ என்று ஆகி விட்டால் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு ‘அந்நியன்’-ஆக மாறிவிடுகிறார்கள்,  இன்பத்திலும் துன்பத்திலும் உன்னைக் கைவிட மாட்டேன் என்று ஊரறிய உறுதி கூறி தாலிக் கட்டியவன் மனைவி மீது மாறி மாறி குற்றப்பத்திரிகை வாசித்துக் கொண்டே இருந்தால் வாழ்வது எப்படி?  அக வாழ்க்கைக்கும் புற வாழ்க்கைக்கும் அர்த்தம் தெரியாமல் கணவன் மனைவிக்கிடையேயான அந்தரங்க உரையாடலைக் கூட அடுத்தவரிடன் கூறினால் இல்லறத்தின் மாண்பு என்னாவது?

தன்னைப் போலவே மனைவியும் அலுவலகம் சென்று களைத்துப் போய் வீட்டுக்கு வரும் நிலையில் தான் வீட்டிற்கு  வரும் போது மனைவி இன்முகம் காட்டி வரவேற்க வேண்டும் என்றால் எப்படி?  வேலைக்குச் செல்லாமல் ஆண்மகனை அண்டிப் பிழைத்து வாழ்ந்த காலத்திற்கு வேண்டுமானால் இது பொருத்தமானதாக இருக்கலாம்,  ஆணுக்கு இணையாக, ஏன் சற்று மேலாகவும் இருக்கும் இந்தக் காலத்திலும் அதையே எதிர்பார்த்து பெண்களை கொடுமைக்கு உள்ளாக்குவது எந்த வகையில் நியாயம்?  குடும்ப பாரத்தைச் சுமப்பவள் பெண் என்றாலும் கரம் பிடித்தவன் துணை நின்றால்தான் சுமப்பதிலும் சுகம் இருக்கும்,  அதனால்தான் வாழ்க்கைத் துணை என்றார் வள்ளுவர்.

ஆனால் அற்ப விஷயங்களைக் காரணம் காட்டி பெண்களை அடிமையாக நினைத்து ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுகின்றனர்.  கணவனின் உண்மையான தோற்றம் தெரியும்போது செய்வதறியாது தவிக்கும் பெண்கள் ஏராளம்,  திருமணத்திற்கு முன்பு இருந்த பூரிப்பு, மகிழ்ச்சி, வியப்பு எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு பெண்ணிடம் காணாமல் போய்விடுகிறது,   இன்றைக்கும் ஒரே ஒரு செல்போன் இணைப்பில் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும் குடும்பங்கள் பல,  தன் உரிமைக்காக குரல் கொடுக்க பெண் முற்பட்டால் செல்போன் இணைப்பு துண்டித்து விட்டு ஒதுங்கிக் கொண்டால் அபலைப் பெண்ணால் என்ன செய்ய முடியும்?    சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்லப்படும் திருமண வாழ்க்கையை பலர் நரகத்தில் நடத்த வேண்டிய துர்பார்க்கிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

கூட்டுக் குடும்பங்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில், பெண்கள் பேசிப் பேசியாவது தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டார்கள்.  இப்போது அதற்கும் வாய்ப்பில்லை. காரணம் கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் தனிக்குடும்பங்களாகி இப்போது ஒவ்வொருவரும் தனித்தனி குடும்பமாகி விட்டனர். ஆலோசனை சொல்பவர்களும் ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’, ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்’ என்று பிரச்சனைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் தன் பங்குக்கு ஏதோ ஒன்றை சொல்லி விட்டு செல்வார்கள், பேசித் தீர்க்க தொலைபேசியை நாடலாமா என்றால் அது இன்னும் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்கி எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றிய கதையாகத்தான் இருக்கிறதே ஒழிய பிரச்சனைகளை தீர்க்க பயன்படுவதில்லை.

உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில் பெண்களின் இன்றைய இழி நிலையை நினைக்கும்போது ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் வரும் கவிஞர் வைரமுத்துவின் ‘கண்ணின் மணியே, கண்ணின் மணியே போராட்டமா?’ என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்

ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்

ஏனென்று கேட்கத்தான் இப்போதும் ஆளில்லை

சமநீதி சேர்க்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை

உலகமெல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இரவுகள் விடியவில்லை!!

(கண்ணின் மணியே )

‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்று பாடிய மகாகவி பாரதி இன்றிருந்தால் ‘என்று மடியும் இந்தப் பெண்ணடிமை?’ என்றுதான் பாடியிருப்பான்,

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2018

உயர்வுக்கு மூலதனம் தன்னம்பிக்கை…
வரலாற்றில் ஓளிவீசும் தைரியத் திலகங்கள்
மனிதர் புனிதர்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 11)
ஆயுளைக் கூட்டும் உணவுகள்
உள்ளத்திலே உள்ளது உலகம்
முயன்றேன் வென்றேன்
முயற்சியே முன்னேற்றம்
கரியடுப்பிலிருந்து கணினி வரை
இளைஞனால் முடியாதது உண்டா? மனிதனால் முடியாதது உண்டா?
தீக்காயம்
விடியலை நோக்கும் மண்ணின் விதைகள்
வாழ நினைத்தால் வாழலாம்- 14
வெற்றி உங்கள் கையில்
பாயும் ஆறு
பெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்
என்று மடியும் பெண்ணடிமை?
தன்னம்பிக்கை மேடை
மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!
உள்ளத்தோடு உள்ளம்