Home » Cover Story » மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!

 
மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!


ஆசிரியர் குழு
Author:

திருமதி. சித்ரா பார்த்தசாரதி

ஐசால்வ் & க்யாட் க்ரூப், இயக்குனர் & முதன்மை நிதி மேலாளர்

நேர்காணல் : செந்தில் நடேசன்

விக்ரன் ஜெயராமன்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காணென்று கும்மியமடி

என்பார் பாரதி. கல்வி ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி நிகர் சமம். ஆண்களைப் போலவே பெண்களும் கல்வி கற்று இந்த உலகில் சாதிக்க முடியும் என்றவாக்கிற்கிணங்க வாழ்ந்து வருபவர்.

ஒரு பெண் இந்த சமுதாயத்தில் எவ்வாறு எல்லாம் சாதிக்கலாம், சாதிக்க என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறது என்பதை முறையாகப் பின்பற்றி நவீன உலகில் தனக்கென்று ஒரு இடத்தைப்பிடித்து தடம் பதித்து வருபவர்.

சாப்ட்வேர் துறைமற்றும் இணையதள தொழிற்நுட்பத்துறையில் பல சாதனைகள் செய்து இன்று உலகம் முழுவதும் வலம் வரும் வரலாற்றுப் பெண்மணி.

நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் என்றவாக்கிற்கிணங்க பல தொழிற்நுட்பத் துறைகள் தொடங்கி அதனால் சமுதாயத்திற்கு பல நன்மைகள் செய்து வரும் திருமதி சித்ரா அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி…

கே. உங்களின் பிறப்பும் பின்புலமும் பற்றிச்  சொல்லுங்கள்?

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கோயமுத்தூரில். ஒரு பாரம்பரியமான குடும்பத்தில்  பிறந்தேன். என் பெற்றோர்கள் பெயர் திரு. ராஜகோபால், திருமதி. சுந்தரி அவர்கள். எனக்கு ஒரு அண்ணன் திரு. ராமசாமி வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அண்ணி ராதிகா அவர்கள். என்னுடைய கணவர் திரு. ரா. பார்த்தசாரதி. CADD Centre, isolve Group, ikix Group Chairman & CEO.  எங்களுக்கு இரட்டைக் குழந்தைகள். பிரித்விக், ரித்விக். இவர்கள் ஐரோப்பாவில் எம். எஸ் படித்துள்ளனர்.

என்னுடைய தந்தை கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். குறிப்பாகப் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் கோவை மாவட்டத்தில் நல்ல புகழ் பெற்றஅவிலா கான்வென்ட் பள்ளியில் படித்தேன்.

மிகவும் ஒழுக்கமும் உயர்ந்த பண்பும் போதிக்கும் சிறப்பான பள்ளி. கல்லூரிப் படிப்பை  திரு. அவிநாசிலிங்கம் கல்லூரியிலும் எம். பி. ஏ பட்ட மேற்படிப்பை பாரதியார் பல்கலைகழகத்தில் பயின்றேன்.

கே. உங்கள் வாழ்க்கையில் யார் முன்னோடியாக இருந்தார்கள்?

பள்ளி, கல்லூரி மற்றும் மேற்படிப்பு படிக்கும் போது எல்லா ஆசிரியர்கள், பேராசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை தான் பின்பற்றினேன். ஆனால் குறிப்பாக பள்ளி பருவத்தில் எனது மாமாவின் மனைவி (அத்தை) திருமதி. இராஜலஷ்மி வாசன் எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் முன்மாதிரி ஆக இருந்தார்.

அதன் பின்பு அவிநாசிலிங்கம் கல்லூரியில் படிக்கும் போது டாக்டர். இராஜம்மாள். பி. தேவதாஸ் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தான் என் பல லட்சியங்களுக்கு ரோல் மாடல் என்று சொல்லலாம். கல்லூரியில் நான் படித்த வணிகவியல் துறையின் அனைத்துப் பேராசிரியர்களும் என்னுடைய இலட்சியங்கள் அடைவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு இங்கு படிக்கும் போது சிறந்த மாணவிக்கான விருதை (தங்க பதக்கம்) பெற்றேன்.

பாரதியார் பல்கலை கழகத்தில் மேற்படிப்பின் போதும் அனைத்து பேராசிரியர்களும் நாங்கள் எதிர்காலத்தில் நல்ல மேலாளர்களாக வருவதற்கு நல்ல பயிற்சி அளித்தனர். 2015 ஆம் ஆண்டு “Distinguished Alumini Achiever Award” என்றவிருதையும் பெற்றேன். இப்போது, பெப்ஸி நிறுவனத்தின் இந்திரா நூயி எனக்கு பெரிய முன் மாதிரியாக இருக்கிறார்.

கே. நீங்கள் படிக்கும் போதே எதிர்காலத்தில் ஒரு தொழிற் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நினைத்தீர்களா?

எனக்கு ஆர்வம் எல்லாமே IAS படிக்க வேண்டும் என்பது தான். ஆனால் அந்த காலத்தில் பெண்கள் அத்துறைக்கு போவது சிறிது கடினம் தான் என்று என் பெற்றோர்க்கு இருந்தது. அதனால் அடுத்து என்ன என்று நினைத்து கொண்டிருந்த போது, கல்லூரியில் விருது வழங்க வந்த சிறப்பு விருந்தினர் எம்.பி.ஏ படிக்கலாமே என்று அறிவறுத்தினார். அதன் பின்பு தான் அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்த போது அத்துறையிலும் நான் சிறந்து விளங்கலாம் என்று எம்.பி.ஏ படித்தேன். ஆனால் படிக்கும் போது எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை.

கே. நீங்கள் படிக்கின்றகாலத்திலும் தற்போதும் பெண்கல்வி எவ்வாறு மாறுதல்கள் அடைந்துள்ளது?

நிச்சயமாக, நிறைய மாறுதல்கள் அடைந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் படிக்கின்ற காலத்தில் பெண்களை அதிகமாகப் படிக்க வைக்க மாட்டார்கள். ஆனால், தற்போது நிலை மாறிவிட்டது. நான் படிக்கின்றகாலத்தில் எனது வகுப்பில் மொத்தம் 35 பேர். அதில் என்னையும் சேர்த்து 10 பெண்கள் மட்டுமே படித்தோம். அப்போது ஆண், பெண் இருபாலரும் இணைந்து படிக்கும் கல்லூரிகளும், பள்ளிகளும் அதிகளவில் இல்லை. ஆனால் இப்போது எல்லாமே இயல்பாகிவிட்டது.

ஆண்களைப் போலவே பெண்களும் எல்லாத்துறையிலும் படித்து சாதனை புரிந்து வருகிறார்கள். பெற்றோர்கள் தங்களின் பெண் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு கூட அனுப்பி வைக்கிறார்கள். இதற்கு பெற்றோர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இது தற்போது பெண் கல்வியின் வளர்ச்சிதானே.

கே. மேலாண்மை படிப்பு மிகவும் கடினமாக இருந்ததா? எப்படி அதை மேற்கொண்டீர்கள்?

ஆம், முதலில் கடினமாக தான் இருந்தது. மேலாண்மை படிப்பில் எல்லா பாடங்களும் இருக்கும் (Accounting, Engineering, Economics, Computer Science etc). அப்படிப்பட்ட துறையைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்பது சற்று சவாலாக இருந்தது. அனைத்து பேராசிரியர்களும் புரியாத பாடங்களைத் திரும்பத் திரும்ப புரியும் வரை எங்களுக்குச் சொல்லி கொடுத்தார்கள். பல நேரங்களில் பல்வேறு துறைகளில் இருந்து வந்த நண்பர்களுடன் குழுப் படிப்பை செய்து புரிந்து கொள்வோம். என் வாழ்க்கையில் எம்.பி.ஏ படித்ததை ஒரு பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.

கே. படித்த உடனே தொழில் தொடங்கினீர்களா? உங்களின் முதல் வேலை அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

படித்தவுடனேயே தொழில் தொடங்கவில்லை. பிரிக்கால் நிறுவனத்தில் (Pricol) என்னுடைய மேலாண்மை ஆய்வை செய்தேன். செய்யும் பொழுது அங்கேயே வேலை கிட்டியது.

அப்போது சில நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூக்கு வருவார்கள். நான் படித்து கொண்டிருந்த போது சிட்டி பேங்க்கிலிருந்து வந்தார்கள். நான் தான் பிரிக்கால் பணி கிடைத்து விட்டதே, இனி எதற்கு சிட்டி பேங்க் நடத்தும் நேர்முகத் தேர்விற்குப் போக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய பேராசிரியர்கள் என்னை அழைத்து உனக்கு கிடைக்கிறதோ இல்லையோ அதுவும் ஒரு அனுபவம். நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

அவர்களின் ஆலோசனை படி நானும் சென்றேன். அங்கு குழு கலந்துரையாடல், நேர்முகம் போன்றவை நடைப் பெற்றது. இறுதியாக இரண்டு பேரை மட்டும் தேர்ந்தெடுத்தார்கள். அதில் நானும் ஒருவர். ஆனால் வேலை மும்பையில், இதை என்  பெற்றோர்கள் எப்படி நினைப்பார்கள் என்று என் மனதில் ஒரு தயக்கம். ஆனால் என்னுடைய தந்தை மிகவும் ஊக்குவித்தார். மும்பை மட்டும் செல்ல அனுமதியளிக்கவில்லை. சென்னையில் சிட்டி பேங்க் அலுவலகம் இருந்தது. அங்கே சென்று பணியில் சேர்ந்தேன். நான்கு ஆண்டுகள் சென்னையி லேயே பணியாற்றினேன்.

பிறகு பேங்க் ஆப் அமெரிக்காவில் பணியில் சேர்ந்தேன். அதன் பின் அஆச அம்ழ்ர் பேங்கில் சேர்ந்தேன். மொத்தம் 12 வருடங்கள் வங்கிகளில் பணி புரிந்தேன்.

கே. உங்களின் தனித்தன்மை பற்றிச் சொல்லுங்கள்?

நான் எதை செய்தாலும் ஒரு முறைக்கு பல முறைநன்கு யோசித்து அதன் பிறகு தான் செயல்பட முனைவேன்.

திட்டமிட்டு செய்யும் எந்த பணியும் சோர்வும், தோல்வியும் அடையாது என்று நம்புவேன். அந்த வகையில் திட்டுமிடுதலை நான் முறையாக கடைப்பிடிப்பேன்.

Measure twice cut once, என்பது எனக்குப் பிடித்த பழமொழி. எங்கு சென்றாலும் என்னை நன்கு தயார் படுத்திக் கொண்டு செல்வேன். மீட்டிங், கருத்தரங்கம் போன்றவற்றிர்க்கு போகும் பொழுது என்னை நானே தயார் படுத்திக் கொள்வேன். எனக்குள் பல கேள்விகளைக் கேட்டுக் கொள்வேன்.

எந்த வினாவிற்கும் விடை தெரியாது என்று முடிந்தவரை சொல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

கே. நீங்கள் எப்போது முதலில் தொழில் செய்ய ஆரம்பித்தீர்கள்? உங்கள் நிறுவனத்தில் நீங்கள் செய்யும் பணிகள் குறித்து?

மேலே, நான் கூறியது போல 12 வருடங்கள் வங்கிகளில் பணி புரிந்தேன். எனது குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் போது அவர்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இதனால் என்னுடைய வேலையை ராஜினாமா செய்தேன்.

எனது கணவர் CADD Centre India Private Limited என்ற மிகப் பெரிய நிறுவனத்தை நடத்தி வந்தார், தற்போதும் நடத்தி வருகிறார். இதில் தொழில் நுட்பக்கருவிகள் விற்பனை, மென்பொருள் விற்பனை, க்யாட் பயிற்சி போன்றவை அடங்கும்.

அப்போது வங்கிகள் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள், தங்களுடைய சில சேவைகளுக்கு உதவ அவரிடம் அணுகினர். பெண்கள் எப்போதும் அவருடைய சொந்த காலில் நிற்கவேண்டும் என்றமுற்போக்கு சிந்தனை உடையவர் என் கணவர். அப்போது நான் என் வேலையை ராஜினாமா செய்தவுடன், உனக்குத் தெரிந்த தொழிலான, வங்கிகள் தொடர்பான சேவைகள் கொடுக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. நாமே அதற்கு ஒரு நிறுவனம் ஆரம்பித்து நீ அதை வழி நடத்தலாமே என்று கூறி ஐசால்வ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தோம். இப்படித்தான் நான் ஒரு Entrepreneur ஆனேன். முதலில் பகுதி நேரம் வேலை செய்தேன். பிறகு குழந்தைகள் வளர்ந்தவுடன் முழு நேர பணியாளாராக என்னை இணைத்து கொண்டேன்.

நான் இந்நிறுவனத்தின் இயக்குனராகவும், முதன்மை நிதி மேலாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். CADD Centre மற்றும் ikix 3D  பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராகவும், முதன்மை நிதி மேலாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

கே. பெரிய நிறுவனத்தை வழி நடத்துவதில் உள்ள சவால்கள் என்ன?

என்னைப் பொறுத்த வரை சவால்கள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் நல்ல பணியாளர்களுடன் சவால்களை மேற்கொள்ள முடியும்.  எல்லாமே சாத்தியம் தான்.

உலகத்தின் மிப்பெரிய இஅஈஈ பயிற்சி தரும் நிறுவனம் எங்களின் CADD Centre தான். 750 கிளைகளும், 22 நாடுகளிலும் இருக்கிறது. அதற்கு காரணம் என்னுடைய கணவர் மற்றும் அவரின் குழுவினரின் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் தான்.

இதைத் தவிர ஐசால்வ் மற்றும் உலகத்தின் மிகப்பெரிய 3D பிரிண்டிங் நிறுவனமான ikix 3D   பிரிண்ட்ஸ் என்றநிறுவனங்களும் நடத்துகிறோம்.

ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பு அங்கு பணியாற்றும் பணியாளர்கள் தான்.  அவர்களைச் சரியாக வழிநடத்தினாலே போதும், சாதித்து விடலாம்.

கண்டிப்போடு எதையும் சொல்லுதல் கூடாது. அவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். என்பது என்னுடைய கணவருடைய அடிப்படைத் தத்துவம்.

எனக்கும் சரி, எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கும் சரி என்னுடைய கணவர் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். இதனால் எங்களால் எல்லாப் பணியும் செம்மையாகச் செய்து முடிக்க இயலும்.

அதே போல் ஒரு வேலையை தனியாகச் செய்வதை விட குழுவாகச் செய்தால் அந்தப் பணி மேலும் சிறப்பாக அமையும்.

அந்த வகையில் எங்கள் நிறுவனத்தில் வேலை பணியாளர்கள் அனைவரும் மிகுந்த அக்கரையும், கவனத்துடனும் பணியைச் செய்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

கே. இந்த தொழிற்நுட்ப துறையிலுள்ள சிக்கல்கள், அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

எல்லாத் துறையிலும் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதை சிக்கலாகப் பார்க்காமல், புதிய முறையில் வேலையைக் கற்றுக் கொள்வதாகப் பார்க்க வேண்டும். எல்லாம் சரியாகப் போகும் பொழுது எதுவும் தோன்றாது. ஆனால் சில சவால்களைச் சந்திக்கும் பொழுது தான் நமக்கு புது புது எண்ணங்கள் மனதில் தோன்றும். நான் ஆரம்பத்தில் சொன்னதைப் போல எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியே குழு இருக்கிறது. எது நடந்தாலும் அவற்றைமுறையாகக் ஆராய்ச்சி செய்து அவற்றிக்குத் தீர்வு காணுவார்கள்.

வந்தப் பின் எதிர்கொள்வதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்பது தான் எங்கள் நிறுவனத்தின் அடிப்படைத் தத்துவம்.

எங்களுடைய நிறுவனம் 24 மணி நேரமும், 365 நாட்களும் இயங்கிக் கொண்டிருக்கும். வெளிநாடுகளுக்கு நாங்கள் செய்திதாளை வடிவமைத்து கொடுக்கிறோம். எங்கள் நிறுவனத்தின் கிளைகள் சென்னையிலும், கோவையிலும் உள்ளன. இங்கிருந்து தான் கிட்டதட்ட 500 பதிப்பகங்களுக்கு 22 மொழிகளில் வடிவமைத்துக் கொடுக்கிறோம். இதைத் தவிர வங்கிகள் மற்றும் அலைபேசி நிறுவனங்களுக்கு சேவைகள் செய்கிறோம். நாங்கள் நிறுவனத்தில் நேர மேலாண்மை என்பது சரியாகக் கடைப்பிடித்து வருகிறோம்.

வாடிக்கையாளர்களின் தேவையை உடனுக்குடன் செய்து கொடுப்போம், ஏனெற்றால் செய்திகள் எப்போது வேண்டு மென்றாலும் வரும் என்பதால் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.

கே. உங்களின் எதிர்காலத்திட்டம்?

தற்போது தொழிற்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே தான் செல்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய வளர்ச்சி வருகிறது. அதைச் சரியாகக் கையாண்டு எங்கள் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து தொழிற்நுட்ப வசதிகளை பெருக்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகமான சேவைகள் கொடுக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் துறைகளில் சேவைகள் செய்ய உள்ளோம். தொழிற்நுட்ப முறையில் நல்ல உறவு முறைகளை ஏற்படுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

மருத்துவ துறைக்கு தொழிற்நுட்பத்தைத் தொடங்கியுள்ளோம். அதன் தேவைகளை சேவைகளாகக் கொடுக்கின்றோம். பெரிதளவில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.

கே. தற்போது அரசின் சில அதிரடித் திட்டத்தால் உங்கள் நிறுவனம் பெறும் ஏற்றஇறக்கங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

இந்தியா வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று. நாடு வளர வேண்டும் என்றால் சில அதிரடித்திட்டங்கள் எடுத்து தான் ஆக வேண்டும்.

ஒரு சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் ஏற்படும். இது இயல்பு தான். ஆனால் இந்த மாற்றத்தின் காரணமாக பல புதிய வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.

பணம் இல்லா பரிவர்த்தனை, ரூபாய் நோட்டு மாற்றம் போன்றவை சில வளர்ச்சியின் படி நிலைகள் தான்.

ஆரம்பத்தில் பண பரிவர்த்தனையில் கால தாமதம் ஏற்பட்டது. இப்போது உடனுக்குடன் கிடைத்துவிடுகிறது.

வெளிநாடுகளில் நிறைய இடங்களில் பணம் இல்லாத பரிவர்த்தனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்று நம் நாட்டில்  நடந்து வருகிறது.

சென்னையில் ஒரு ஆட்டோவில் அனைத்து தொழிற்நுட்ப வசதிகள், செய்திதாள்கள், புத்தகங்கள் போன்றவை ஓட்டுனர் வைத்திருக்கிறார், ஆட்டோவில் பயணம் செய்யும் பொழுது அனைத்தையும் நாம் இலசவமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சமீபத்தில் செய்தித்தாளில் படித்த பொழுது நிச்சயம் நான் மகிழந்தேன். இது தான் வளர்ச்சியின் அழகு.   .

கே. பெண்கல்வியின் மூலம் சமுதாயத்தின் வளர்ச்சி எப்படியிருக்க வேண்டும்?

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. இதில் ஆண், பெண் பாகுபாடில்லை.

ஆரம்பத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை இருந்தது, ஆனால் தற்போது எல்லாத் துறையிலும் பெண்களின் வளர்ச்சி இருக்கிறது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் வேலை செய்கிறார்கள்.

ஒரு பெண், கல்வி கற்றால் அப்பெண்ணும் முன்னேறி, அம்முன்னேற்றத்தால் அந்த குடும்பம், அந்த சமுதாயமே வளர்ச்சி பெறும் என்பதில் எவ்வித மாற்றும் இல்லை.

பெண் கல்வி என்பது நாட்டிற்கு மிகவும் தேவை.

கே. இன்றைய சூழலில் தொழிற்நுட்பத்தின் சேவை எந்தளவிற்கு பயன்படுகிறது?

இன்றைய வியபார உலகில்  அனைத்து துறைகளிலும் தொழிற்நுட்பத்தின் பயன் அதிகளவில் தேவைப்படுகிறது.

புதுமைகள் நிகழ நிகழ தான், வளர்ச்சியும், மாற்றங்களும் அதிகளவில் தோன்றும். இந்த மாற்றம் தான், தனி மனித வளர்ச்சியும் நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கும்.

தற்போது நாம் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது சில தொழிற்நுட்பத்தின் வளர்ச்சியை நாம் பயன்படுத்தி தான் ஆக வேண்டும்.

கணினி மயமான உலகில் அனைத்தும் தொழிற்நுட்பத்தின் கீழ் இயங்கி வருகிறது. அப்படியிருக்கும் போது, நாடு வளர்ச்சியை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது.

கே. புதியதாய் தொழில் தொடங்க வருபவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

நான் இளம் தொழில் முனைவோர்களிடம் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். இங்கு சாதிக்க பல வழிகள் இருக்கிறது. அதில் நீங்கள் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதில் தான் உங்களின் வளர்ச்சியே இருக்கிறது.

புதியதாய் தொடங்க வருபவர்களுக்கு நான் கூறிக் கொள்வது என்னவென்றால் நம்மைத் தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

பணம் வாங்குவது, பெறுவதில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

ஒரு வேலையை நம்மிடம் ஒப்படைத்து விட்டால், அதை வாடிக்கையாளர்களுக்கு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே அகல கால் வைக்க வேண்டாம். தேவையானதை மட்டும் செய்தல் வேண்டும்.

வேலை செய்யும் பணியாளர்களைச் சரியாக மதிக்க வேண்டும். அவர்களுக்கு போதுமான சுதந்திரம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2018

உயர்வுக்கு மூலதனம் தன்னம்பிக்கை…
வரலாற்றில் ஓளிவீசும் தைரியத் திலகங்கள்
மனிதர் புனிதர்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 11)
ஆயுளைக் கூட்டும் உணவுகள்
உள்ளத்திலே உள்ளது உலகம்
முயன்றேன் வென்றேன்
முயற்சியே முன்னேற்றம்
கரியடுப்பிலிருந்து கணினி வரை
இளைஞனால் முடியாதது உண்டா? மனிதனால் முடியாதது உண்டா?
தீக்காயம்
விடியலை நோக்கும் மண்ணின் விதைகள்
வாழ நினைத்தால் வாழலாம்- 14
வெற்றி உங்கள் கையில்
பாயும் ஆறு
பெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்
என்று மடியும் பெண்ணடிமை?
தன்னம்பிக்கை மேடை
மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!
உள்ளத்தோடு உள்ளம்