Home » 2018 » February (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  பாயும் ஆறு

  தமிழ்முறை ஆயுர்வேதம், சித்தமருத்துவம் முதலியவற்றில் இந்நோயை எப்படி அணுகுவார்கள்?  எதாவது இலைதழைகளை அரைத்துக் குடிக்கக் கொடுத்தால் தந்தையின் மூளைக்கட்டி சட்டென மாயமாக கரைந்து மறைந்து போய்விடக்கூடாதா? என்று சட்டென ஒரு கற்பனை நம்பிக்கைக் கீற்று மின்னிச்சென்றது?  அதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆராயக்கூடிய மனநிலை நமக்கு மட்டுமே (ஏன்?) இருப்பதாக தோன்றியது.  இதைப்பற்றி பேசுகிற தைரியம் (வருமா?) வரவழைக்க எத்தனிக்க, தயக்கமாக இருந்தது. செவிலியர்கள் அவசரமாக, இங்குமங்கும் நடைபோட்டவண்ணம், கண்டிப்பை கண்களிலும் கனிவை சொற்களிலும், கறாரை தொனியிலும் கலந்து கருத்து பரிமாற்றம் செய்த வண்ணம் இருந்தனர்.  அவர்களை அணுகி, பேசினால், அறிவுத் தகவல்கள் பெறலாம்… ஆனால் அவை நம்பிக்கை தருமா…  அச்சமூட்டுமா… என்று யோசிக்கும் பொழுதே… அவர்கள் அடுத்த வேலையாக கடந்து சென்றுவிடுகிறார்கள்.  இந்த சூழ்நிலையில் ஆறு… போல வாழ்வு ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி ஓடுவதாகவே தோன்றியது…

  எண்ணற்ற நோயாளிகளை ஆய்வு செய்த அந்த மிகப்பெரிய மருத்துவமனையின், நியூரோபேதாலஜி, நியூரோ பிஸியாலஜி, அனத்தீஷியா, என்று வெவ்வேறு உயர்படிப்பு படித்த மேதைகளின் சொற்களை இயன்றளவு விரைவாக நம் நண்பர் புரிந்துகொண்டு பதில்தரவேண்டும் என்று சூழ்நிலையால் நிர்பந்திக்கப்பட்டார்.  ஐ.சி.யு உடைய கட்டணம் கண்களை கட்டும் அளவில் இருந்தது.  இரவு ஏழு மணிக்கு வந்த மருத்துவமனை… வந்து சரி… ஒரு அரைமணி நேரத்தில் திரும்ப வீட்டிற்கு போய் சாப்பிட்டுவிட்டு தூங்கலாம் என்று நினைத்திருந்த வான்முகிலுக்கு… அடுக்கடுக்கான அவசர பரிசோதனைகள் கதிர்வீச்சு ஆய்வக நடைமுறைகள் அதனுடைய பரிசோதனை முடிவுகள்… என பதினோரு மணி, இரண்டரை மணிக்கு சி.டி ஸ்கேன் ரிசல்ட்… என்று வந்துகொண்டே இருந்தது.  கிட்டத்தட்ட நான்கு மணிக்கு அந்த சற்றே பெரிய வடிவ எலுமிச்சம் பழம்போல் அமைந்திருந்த கட்டி… நம் நண்பர் மனதை விசுவரூபமெடுத்து ஆக்கிரமித்த பொழுது… இரவின் உறக்கமின்மை, தந்தையின் நோய்த்தாக்கம் ஆகியவை கண்களையும் இதயத்தையும் ஒருசேர பாரமாக்க… ஒரு பொறியாளராக கல்வி கற்றிருந்த நம் நண்பர் வான்முகில் அந்த ஒரே வேகமான இரவில்… “எழுதப்படிக்கத் தெரியாதவன் மாதிரி… என்நிலைமை ஆகிடுச்சுங்க சார், எல்லா லத்தின், கிரிக் டெக்னிகல் டெர்ம்ஸ்ஸும் உடனுக்குடன் நமக்கு புரிஞ்சி தெரிஞ்சி பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கறாங்க… எல்லா பார்ஃம்களும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றது.

  அதில் எழுதப்பட்டிருக்கின்ற விவரங்களும், மருந்துகளும் சான்றளிப்புக்களும்… நமக்கு ….உடனே “கூக்குள் டாக்டரை” படிச்சுத் தெரிஞ்சுக்க முயற்சி செய்ய வைக்குது.  ஆனாலும் பதட்டத்துல எவ்வளவு சார்… முடியும்… நமக்கே இப்படின்னா… படிக்காம… இங்க வருகின்றவங்க எப்படி புரிஞ்சுப்பாங்க… ஆனாலும்… நம்ம மருத்துவர்கள் இயன்ற அளவு விளக்கமாகவும்… மெதுவாகவும் சொல்ல முயற்சி செய்யறாங்க சார்”…

  ஆபத்பாந்தவன் அழகிய மருத்துவன்:-

  மேற்கண்ட சொற்களில் நண்பர் வான்முகில் அந்த சூழ்நிலையின் கனபரிமாணத்தை புரியவைத்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த நாளின் மாலை ஆறு-ஏழு மணி இருக்கும்.  முதல் நாள் இரவு, காலை 4 முதல் ஆறு வரை இரண்டு மணி நேரம் மட்டுமே… அதுவும் உடனிருந்த மருத்துவ நண்பர் அறிவுச் செல்வனுடன் காரிலேயே கண்மூடி எழுந்ததன் அயர்ச்சியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.  அந்த ஒருநாளுக்கும் குறைவான பொழுது அவர்களது குடும்ப மற்றும் நட்பு வட்டாரத்தில் ஒரு அமைதியான பிரளயத்தை உருவாக்கிவிட்டிருந்தது. யாருடைய முகமும் அழுகையோடில்லை.  அது நோயாளியை இன்னும் பதட்டமாக்கும் என்பதை உணர்ந்து புன்னகையோடு (கடும் முயற்சி செய்து வரவழைக்கின்றனர்) பேசிக்கொண்டு இருந்தனர்.  நண்பரின் அப்பாவும், தன்மகன், தான் கேட்டுக்கொண்டதை ஏற்றுக்கொண்டு தனக்கு அறுவைச்சிகிச்சை செய்வதை தடுத்துவிடுவான் என்கின்ற நம்பிக்கையோடு புன்னகைத்துக் கொண்டுதான் பேசினார்.  எழுபது வயதுவரை மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்த பெரியவர் அவர்.  பார்க்க ஐம்பது வயது மதிக்கத் தக்கவர்.  தனது எழுபதாவது வயதிலும் ஜாக்கிங் சென்றுவந்து ஆரோக்கியம் பேணுபவர் என்பது அவரது தொப்பை இல்லாத பிடித்தமான உடல்வாகில் தெரிந்தது.  இப்பொழுதுதான் வழுக்கையும் நரையும் விழ தொடங்கி இருந்தது.  அவரது முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புன்னகை குறைந்து… இறுக்கம் தவழ தொடங்கிய பொழுது… தளர்வாக தனது படுக்கையில் படுத்து… உறங்க தொடங்கினார்.  நம்மைப்போன்ற உடன் இருந்தவர்களின் ஒரே நம்பிக்கை ஒளியாக மருத்துவ நண்பர் அறிவுச்செல்வன் இருந்தார்.  அவரது அறிவுசார்ந்த எடுத்துக்காட்டுகளும், உணர்வுசார்ந்த உடனிருப்பும், இதயபூர்வமான நம்பிக்கையும் மட்டுமே எங்களுக்கு தெம்பு ஊட்டியது. 

  மூடு (Mood) தரும் முடிவுகள்:-

  மருத்துவர்களும் மகனும் எப்படியும் அவரை அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்துவிட இயலும்? என்று நம்பிக்கையுடன் இருந்தனர். சொற்கோ, அவரது மூளை தெளிவாக இயங்காத சூழ்நிலையில் அறுவை சிகிச்சை வேண்டாம் என்று கூறும் அவரது கருத்து எவ்வளவு சிந்தித்து எடுக்கப்பட்டது?  என்று தோன்றியது?  இத்தகைய அதிதீவிர சிகிச்சை குறித்த முடிவு ஒருபுறம் இருக்கட்டும்… நாம் ஒவ்வொரு நாளும் எடுக்கும் பல முடிவுகள் மூளையின் எவ்வளவு ஆழம்வரை சிந்தித்து எடுக்கப்படுகின்றன?  என்று யோசனை செய்யத் தோன்றியது.   பல சமயங்களில் அந்தந்த நேரத்து மனநிலைக்கு (Mood) ஏற்ப நாம் சட்டென முடிவெடுத்துவிடுகின்றோம்.  வார்த்தைகளை சிந்திக்காமல் சிந்திவிடுகின்றோம்.  காலதாமதமாவது மட்டுமே சரியான முடிவுக்கு உத்திரவாதமில்லை. களைத்துப்போகிறவரை சிந்திப்பது பிறகு பிழையானதொரு முடிவு எடுப்பது என்பதும் தவிர்க்க வேண்டுவதே… ஆழ்ந்து சிந்தித்து, நல்ல புள்ளிவிவரங்களை ஆராய்ந்து, விரைவாக எடுக்கப்படும் முடிவே திருப்தியான, சிறந்த முடிவுகளாக இருக்கும்.  திருப்தியான முடிவெல்லாம் சிறந்த முடிவல்ல!  சிறந்த முடிவுகளெல்லாம், முழுதிருப்தி தருவதில்லை!  ஆறு சுழல்போல.  இது கொஞ்சம் சுற்றி வருவதே!

  படம் தந்த பாடம்:-

  கிராமத்தில் பல்லாங்குழி பெட்டிபோல வரிசை வரிசையாக அடுக்கிய கருப்புவெள்ளை படங்களில் அனுப்பிய வாட்ஸ்அப் குறுஞ்செய்தியில் மூளையின் குறுக்குவெட்டு, நீள்வெட்டு படங்களில் உட்புற தோற்றத்தை பார்க்க முடிந்தது.  பாதாம் கொட்டை போல சல்சி, கைரி எனப்படும் மேடு பள்ளங்களோடு அச்சு அசலாக அப்பாவின் மூளை அக்குவேறு, ஆணிவேறாக படம்பிடிக்கப்பட்டிருந்தது.  வலதுபக்க மூளையில் இருந்த கட்டியின் காரணமாக மூளையின் பிறபகுதிகள் ஒருபக்கமாக தள்ளப்பட்டு… அதன் காரணமாக நீர் கோர்க்க ஆரம்பித்திருந்தது அதை சீடி ஸ்கேன் (CT Scan) படம் சற்றே மங்கலான நிறத்தில் காட்டியிருந்தது.  அதில் இருக்கிற இன்ஃப்ளமேட்டரி (            Inflammatory) பகுதிதான், அதாவது உடல்தடுப்பாற்றல் மூலம் நடத்தப்படும் போராட்டகளப்பகுதிதான் நண்பரின் தந்தையாரின் ஒருங்கிணைப்புக்குறைவிற்கு காரணம் என்று தோன்றுகிறது என்று டாக்டர்கள் கூறினார்கள்.

  உள்ளேயா? வேளியேயா?:-

  மெனிஞ்சியோமா என்பது மூளையை சுற்றியுள்ள மூன்றடுக்கு மெனிஞ்சஸ் எனப்படும் உறையிலிருந்து உருவாகும் கட்டி, கிளையோமா என்பது மூளைசெல்களிலேயே உருவாகும் கட்டி… இவற்றில், கட்டி மூளையின் சுற்றுச் சுவருடன் இணைந்துள்ள இடத்தை படத்தில் பார்த்து மருத்துவ நண்பர் இக்கட்டி முதல்வகையை சார்ந்தது எனவே சுற்றுச்சுவர் பிரச்சனைதான் ஏற்பட்டுள்ளது.  உள்ளே உள்ள முக்கிய மூளைசெல்கள் நன்றாகவே இருக்கும் என்று நம்புவோம் என்றார்.

  பொதுவாக நாம் சோகமான கட்டுரைகள் எதையும் எழுதுவதில்லை.  சோக கதைகளாக கருதப்படும் பல நிகழ்வுகள் பிற்காலங்களில் நகைச்சுவையாக மாறிய அனுபவங்கள் நிறைய நிறைய உண்டு.  ஆனால் இம்முறை இம்மருத்துவமனை நிகழ்வு மிகச் சட்டென ஏற்பட்டுவிட்டது.  அலுவலகத்திலிருந்து தகவல் பெற்றதும் சென்ற நம்மால்… மருத்துவமனையிலிருந்து சட்டென கிளம்ப கூட தோன்றவில்லை, அங்கிருந்து உதவிகள் புரியலாம் என்றே தோன்றியது.

  அடுத்தநாள் நாகர்கோவில் பயணிக்க வேண்டிய சூழல்… பயணத்திட்டத்தை கேன்சல் செய்துவிடலாமா? என்று யோசனை தோன்றியது! உள்ளே இருப்பதா? வெளியே போவதா? மூளையில் கண்ட புற்று நோய்க்கட்டி அறுவைச் சிகிச்சை எவ்வாறு வெற்றிகரமாக நடந்து மிகுந்த பூரண உடல்நலமுடன் நண்பரின் தந்தை வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்பதை விவரமாக எழுத வேண்டும்… அல்லது அவரது தந்தை கோரியதற்கேற்ப, சிறப்பு மருத்துவ முறைமூலம் அறுவை சிகிச்சையின்றி எப்படி புற்றுக் கட்டி கரைந்து போனது என்பது பற்றியும் எழுத வேண்டும்.   மருத்துவமனைகளை தேர்ந்தெடுப்பது குறித்தும், மருத்துவ முறைகளை தேர்ந்தெடுப்பது குறித்தும் அதிர்ஷ்டமும், சந்தர்ப்ப சூழ்நிலையுமே முடிவெடுக்கச் செய்வது குறித்து இன்னும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள தோன்றிடுகின்றது.

  பயணம் – தொடர்ச்சியா தொடக்கமா?:-

  நண்பரின் தந்தையின் சிந்தித்து தீர்வுகண்டறியும் திறன் மாறுபட்டுள்ளது அதனால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்னும் முடிவை அவரது நெருங்கிய உறவினர்கள் எடுக்கலாம்?  என்று சட்டம் வழிவகை செய்துள்ளதா?  என்பதும் நாம் தெரிந்துகொள்ள விரும்பும் கட்டுரைப் பொருளாகும்.  இந்நேர்வில் என்ன நிகழ்ந்தது என்பதில் எழுத்தாளரின் கற்பனை கலந்துள்ளது, இச்சூழலில் நாகர்கோவில் பயணம் தொடங்கியது.  எனவே ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளபடி நாகர்கோவில் பயண அனுபவங்களையும் இக்கட்டுரை கொண்டுவருவது இயல்பே.  இச்சூழ்நிலையில் கட்டுரை தொடங்கிய இடத்திற்கு திரும்ப சென்று பார்ப்போம்.  அது ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள காரணம்பாளையம் ஆகும் காரணம் இல்லாமல் மருத்துவமனை வழியாக கனத்த இதயத்துடன் நாம் பயணிக்கச் செய்யப்படவில்லை.  மருத்துவமனை அனுபவத்திற்கு முன்பே காவிரி பயணம், ஆற்றின் அனுபவம் ஏற்பட்டுவிட்டது… ஆனால் கட்டுரையில் ஆற்றைவிட ஹாஸ்பிட்டல் அதிக இடம் பிடித்தது இயல்பானதே, சற்றுநேரம் ஆற்றைக்கண்டு திரும்ப வருவோம், வாருங்கள். காரணம்பாளையம் அருகில் கொளாநல்லி என்ற ஊரில் பொன்குழலி அம்மன் ஆலயம் உள்ளது, அதன் அருகே குட்டப்பாளையம் எனும் ஊரில் நண்பர் சென்பகராமன் வீட்டில் ஒருநாள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.  குட்டப்பாளையம் அருகே “பொன்னி தோற்றம்” என்று ஒரு நுழைவாயில் அமைத்து இருந்தனர்.  அதற்குள் நண்பர் சென்பகம், அழைத்துச் சென்றார்.  “பயணம் என்பது இனிமையானது.  வீட்டில் இருப்பதும் அதற்குச் சமமாக இனிமையானது.  இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானது; இருந்தாலும் இவை இரண்டையுமே நான் நேசிக்கின்றேன்’, என்று ஒரு எழுத்தாளர் கூறியிருந்ததை, ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் படித்தது ஞாபகம் வந்தது.

  பொன்னி தோற்றம்:-

  “பொன்னி தோற்றம்” என்பது ஒரு நுழைவாயில் முகப்பின் (Arch) ஆர்ச் மீது எழுதப்பட்டு இருந்தது.  அது வழியாக இருசக்கர வாகனத்தில் சற்றே மேடான சிறு குன்றின் மீது இலேசாக மழை தூறிக்கொண்டிருந்த, செப்டம்பர் 2017 ல், ஏறியது ஒரு அற்புதமான அனுபவம்.  அந்த மலைமீது ஏறி, அங்கிருந்த ஒரு தனியார் பள்ளி கட்டிடத்தின் பக்கவாட்டில் சென்றால், முன்பொரு காலத்தில் எழுத்தாளர் கல்கி அவர்களும் அவரது நண்பரும் அமர்ந்து, ‘பொன்னி’ நதியென புகழப்படும் காவிரி நதி வளைந்தோடி வரும் அழகை கண்டு இரசித்த, இடத்தை அடையலாம்.  ‘பொன்னியின் செல்வன்’ மிக நீளமான ஒரு காவியம்.  அதில் காவிரி நதியின் கண்ணைக் கவரும், கருத்தை நெகிழ்விக்கும் தோற்றம் குறித்து எழுதுவதற்கு… இந்த இடத்தில் வந்து, இப்படி ஒரு கண்கொள்ளா அழகை கண்டதும், ஒரு காரணமாக இருந்தது என்று இப்பகுதியில் வாழும் பெரியவர்கள் கூறுவார்கள் என்று நண்பர் சென்பகம் என்றழைக்கப்படும் சென்பகராமன் கூறினார்.

  அங்கிருந்து காரணம்பாளையம் வரை இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது மழை தூவியது.  ‘ஜோடர்பாளையம்’ என்ற ஊர் காரணாம்பாளைய காவிரிக் கரையின் மறுபகுதியில் அமைந்திருக்கிறது என்று நண்பர் சென்பகம் கூறினார்.  அந்த இடத்தில் ஒரு சிறு தடுப்பணை போல அமைத்து இருந்தனர் பொதுப்பணித்துறையினர்.

  சாதாரண சாகசங்கள்:-

  “பொன்னி தோற்றம்” இடத்திலிருந்து காவிரியை கண்டபொழுது தொன்னூற்றி ஐந்து சதவிகிதம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.  அதிலென்ன ஐந்து சதவிகித கணக்கு?  என்று நீங்கள் கேட்பது கேட்கின்றது… சொல்கின்றோம்… மழை பொழிந்து இப்பொழுது அசைந்தாடி நடனமாடி வரும் காவிரி கடந்த ஒருவருடமாக நீர்குறைவால் சிக்கலில் இருந்தபொழுது தலைநரைத்துப்போன கொஞ்சம் தென்னைமரங்கள் இன்னும் தங்களுக்கு தண்ணீரை உறிஞ்சி ‘டை’ (Dye) பச்சை நிறத்தில் அடித்துக்கொள்ளாமல் இருந்ததுதான் அந்த ஐந்து சதவிகித காட்சிக் குறைக்குக் காரணம்.  இருசக்கர வாகனம் ஓட்டி பத்தாண்டுகள் கடந்த நிலையிலும்… சென்பகம் விடுவதாக இல்லை வாகனம் ஓட்டுவது என்றவுடன், அட்டகாசமான வேகத்தில் சென்பகராமனின் எதையும் தாங்கும் இதயத்தைக்கூட அச்சத்தில் ஆழ்த்தும் வண்ணம் (காரை (Car) மகிழ்வுந்தை) செலுத்திவந்த நண்பரின் இல்லத்தரசியின் அபாயகரமான சாதாரண சாகசம் நினைவு வருகின்றது.  உடனே! இளங்கோ, என்னும் புதுக்கோட்டை ஓட்டுனர் நினைவு வருகிறது.  அவர்தான் முதன்முதலில் நான்குசக்கர வாகனம் செலுத்த கற்றுக் கொடுத்தார்.   “ஒவ்வொரு முறை வாகன செலுத்தும் வட்டத்தை கையில் பிடிக்கும் பொழுதும், அன்றுதான் முதன்முதலாக வாகனம் செலுத்த கற்றுக் கொள்வது போல எண்ணிக்கொண்டு அமர வேண்டும்” என்றார்.  ஆஹா… என்னே ஒரு கவனத்தைக் குவிக்கும் முயற்சி.

  லா – பெட்ரோஸா:-

  அண்ணியார் வாகனத்தை செலுத்திய சமயத்தில், கடவுள் எங்களது காரின் (சீறுந்தின்) பானெட்டில் (முகப்பில் – Bonnet) ல் அமர்ந்து எங்களை பாதுகாத்து சென்னையிலிருந்து சேலம் அழைத்துவந்தார் என்று கூறினோம்.  தி பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங் (The Power of Positive Thinking – நேர்மறை சிந்தனையின் ஆற்றல்) என்கின்ற புத்தகத்தில் கடவுள் உங்களுடனே இருக்கின்றார் என்பதை உணர்வீராக என்று கூறியிருப்பதை வாகனம் காற்றைக்கிழித்து பயணித்த பொழுது அச்சமுற்ற சென்பகராமனை கண்டு தெரிந்து, தெரிந்து தெளிந்தோம்.  தமிழக சாலைகள் விபத்துக்களால் இரத்த வண்ணம் உதட்டு சாயம்போல் பூசிக்கொண்ட தோற்றம் தருபவை என்ற மட்டில் நமக்கு சற்றே மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்று தோன்றலாம் ஆனால் அதில் உண்மை இல்லாமல் இல்லை என்று புள்ளி விவரங்கள் தெள்ளத் தெளிவாகக் காட்டும்.  நமக்குத் தெரிந்த உறவினர்கள் , நண்பர்களில் சிலபலருக்கு காயம் முதல் காலம் வரை பாதிப்புக்களை சாலைப் பயணங்கள் ஏற்படுத்தாமல் இல்லை என்கின்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்வோம்.  இருசக்கர வாகனப்பயணம், என்றவுடன் ‘லா-பெட்ரோஸா’ நினைவு வராமல் எப்படி?

  இந்த இதழை மேலும்

  ஒத்தி வைக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது எப்படி?

  “The big question is whether you are to be able to say a hearty yes to yours adventure”

  —  Joseph Campbel

  ஒரு சிலர் வேகமாக முடிவெடித்து,  வேகமாக பணியைத் தொடங்கி, அந்தத் தொழில் அதே வேகத்துடன் நின்று போய்விட்ட நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறோம், இது அவசர முடிவினுடைய அவலம்.

  ஒரு சிலர் தீவிரமாக யோசித்து நின்று நிதானித்து ஒரு முடிவுக்கு வந்த பின் அந்த வேலையைத் தொடங்கி வெற்றி பெறுவார்கள்,

  ஒரு சிலர் முடிவு செய்து விட்ட பிறகும் தொடங்கலாமா ?  வேண்டாமா ? என்று ஊசலாடி பணியை ஒத்திப் போடுவார்கள்,

  ஓரு சில ஒத்திப் போடும் இந்த பழக்கம் நன்மையில் முடிவதுண்டு,  பல நேரங்களில் இப்பழக்கம் தீய விளைவில் முடிவதுண்டு. பொதுவாக இந்த ஒத்திப்போடும் குணம் உங்களை  பின்னுக்கு இழுத்து முன்னேறுவதைத் தடுத்து வெற்றியிலிருந்து விலகச் செய்கிறது.

  பயமும், சந்தேகமும் அந்த பழக்கத்திற்கு  மூல காரணங்களாக அமைகின்றன.

  1) தோல்வியைப்பற்றி பயம்,

  2) பைத்தியகாரத்தனமான முடிவாக இருக்குமோ என்ற பயம்.

  3) சரியாக அமையுமோ? அமையாதோ ?  என்ற சந்தேகம் கலந்து பயம்.

  4)  வெற்றி கிடைக்குமா? கிடைக்கதோ?  என்ற பயம்,

  5)  ஆபத்தான முயற்சிகளுக்கு பயம்.

  இந்தப்பழக்கம் எப்படி நமக்கு நன்மை செய்யப்போகிறது அல்லது தீமை செய்யப் போகிறது எனளபதை உங்கள்  உள்ளுணர்வு மூலமாக கண்டறிய வேண்டும். எந்த வகையான பயம் என்பதையும் அறிய வேண்டும்.

  இந்தப் பழக்கத்தை அடியோடு வெல்ல செய்முறைத் திட்டங்கள்உள்ளன, அவைகள் எளிதானவை,  சுலபமானவை, இவைகளை நீங்கள் முன்னாலேயே கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது அதை மறந்திருக்கலாம்,  இந்தப் பழக்கத்தை ஒழிப்பது தொடர் நடவடிக்கைகளால்தான்  முடியும்.

  முதலாவதாகச்  செய்ய வேண்டிய தொழிலுனுடைய பெரிய அளவைப் பார்த்து பிரமித்துப் போவதால் உண்டாகிற இந்த ஒத்தி வைப்பு குணம்,  சில சில திட்டங்களினால் படிப்படியாக நிவர்த்தி செய்யமுடியும்.

  நமக்கு இந்தச் செயலை செய்து முடிக்க திறமை போதாது, இயலாது என்ற காரணத்தால் ஏற்படக்கூடிய ஒத்தி வைப்பு குணம் மற்றவர்களிடம் அறிவுரையும், உதவிகளையும் பெறுவதால் நிவர்த்தி செய்ய முடியும்.

  செய்யப்போகும் செயலின் பெரிய அளவைப் பார்த்தும், அதிலுள்ள சிக்கல்களைப் பார்த்தும் உண்டாகிற ஒத்தி வைப்பு குணத்தை கீழ்க்காணும் யோசனைகள் மூலம் நிவானத்தி செய்யமுடியும்.

  1. எது தன்னுடைய அளவின் காரணமாக பிரம்மிப்பையும், பயத்தையும் உண்டாக்குகின்றதோ? அந்தத் திட்டங்களில் ஒன்றைத்  தேர்வு செய்ய வேண்டும்.
  2. அந்தத் திட்டத்தை சமாளிக்ககூடிய  சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுதல் வேண்டும்.
  3. அந்த சிறு சிறு பகுதிகளை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு காலக்கெடுவுக்குள் படிப்படியாக அடுத்தடுத்து  தீர்வுகாண  வேண்டும்.
  4. சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, ஆராய்ந்து அதில் வெற்றி பெறும் வழிகளை ஒன்று சேர்த்தால் முழு அளவுடன் தீர்வு கிடைத்து விடும்.

  இந்த முறைகளில் அளவுகளில் மிகப்  பெரிதான சிக்கலான திட்டங்களை படிப்படியாக தீர்வு கண்டு  வெற்றி பெறுவது எளிதாகும்.

  அடுத்து  தனக்குப் போதிய திறமையில்லை மற்றும் இயலாது என்று நினைத்து ஒத்தி வைத்த திட்டங்களுக்கானது ,   அந்தத் தொழில் துறைச் சார்ந்த அனுபவசாலிகளிடம் இருந்தும், தொழில் நிபுணர்களிடமிருந்தும் ஆலோசனைப் பெறுதல் அல்லது உதவிகளைப் பெறுதல் இதற்கு உதவும்.

  1. எது தன்னால் இயலாது, முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறமோ அந்தத் திட்டங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
  2. அந்தத் துறையில் மேலானவர்களிடமோ, நிபுணர்களிடமோ, அனுபவசாலிகளிடமோ உதவிகளையும், ஆலோசனைகளையும் கேட்டுப் பெறுதல்  வேண்டும்.
  3. சந்தேகம் இல்லாமல் எல்லாம் தெளிவான பின்பு அந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒரு வழி முறையைத் தயார் செய்தல் வேண்டும்.
  4. அந்தச் செயல் திட்டத்தைச் சமாளிக்கக் கூடிய அளவு சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து எடுத்து  கொள்ள வேண்டும்.
  5. எவ்வளவு முறை வேண்டுமென்றாலும் ஆலோசனைகளையும், உதவிகளையும் கேட்டுப் பெறுதல்  வேண்டும்.

  இந்த வழிகளை பின்பற்றினால் ஒத்திப் போடும் பழக்கத்தை முழுமையாக அழிக்க முடியும்,

  பொதுவாக  வெற்றி பெற்றவர்களை ஆராய்ந்து பார்த்தால், தாங்கள் சாதித்த திட்டங்களைப் பற்றி  முழுமையாக அறிந்திருக்க மாட்டார்கள்.  அது பற்றிய ஆழமான அறிவும், திறமையும் அவர்களுக்கு போதிய அளவு இல்லை  என்றாலும்  கூட  தங்களைப் சுற்றி  தொழில் ஆலோசகர்களையும்,  நிளபுணர்களையும், வழிகாட்டுவோர்களையும் உடன் வைத்துக் கொண்டிருப்பார்கள்.

  அந்த அனுபவசாலிகள் அவர்களுக்கும் தரும் ஆலோசனைகளும், உதவிகளும் தான் அவர்களுக்கு வெற்றிப்படிக்கட்டுகளாக அமைகின்றன. தொழிலில் சிக்கல்களும், சிரமங்களும் வரும் போது ,பொருளாதார நிபுணர்களின்  ஆலோசனை பெற்று  செயல்படுகிறார்கள், எந்தத் துறையில் அவர்களுக்கு சிரமம் என்று தெரிகிறதோ அந்தத் துறைச் சார்ந்த அனுபவசாலிகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

  சில நேரங்களில் அனுபவம் பெற்ற தொழிலாளர்கள்  தரும் சில உபயோகமான  ஆலோசனைகள் கூட ஒரு நிறுவனத்தை சிக்கலில் இருந்து காப்பாற்றி வெற்றி பெறச் செய்யும். இதைப்போன்ற உதவிகள் தான் ஒத்தி வைக்கும் குணத்தை மாற்றும் என்றால்  அது மிகையல்ல.

  ஒரு பிரபலமான ஜப்பான் சோப் கம்பெனி அது, சோப்பை ஒரு சின்ன அழகிய பிளாஸ்டிக் டப்பாவில் பேக் செய்து விற்பனை செய்து வந்தது. அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

  ஒரு முறை ஒரு வாடிக்கையாளர் இந்த கம்பெனியின்  சோப்பை வாங்கி ஏமாந்து போனார், காரணம்  அவர் வாங்கிய சோப்டப்பாவில் சோப்பு இல்லை.

  கம்பெனியில் உள்ள அத்தனை நிர்வாகிகளும், இந்த சம்பவத்தால் பதறிப் போய் விட்டார்கள். அத்தனை உயர் அதிகாரிகளும் அவசரமாகக் கூடி ஆலோசித்தார்கள்,   சோப் இல்லாமல் ஒரு  டாப்பா கூட  கம்பெனியிலிருந்து வெளியே போகக் கூடாது, அதற்கு   என்ன செலவு ஆனாலும் சரி என்று  பல கோடி மதிப்புள்ள ஸ்கேனிங் மெசின் வாங்கி ,  கன்வேயர் பெல்ட்டுக்கு அருகில் பொருத்தலாமென  முடிவெடுத்தார்கள்.  அதிகாரிகள் படும்பாட்டை பார்த்து அங்கு பணியாற்றி வரும் அனுபவம் வாய்ந்த ஒரு தொழிலாளிக்கு ஆச்சரியமாக இருந்தது.

  சோப் இல்லாமல் டப்பாக்கள் எதுவும் காலியாக வெளியே போகக் கூடாது என்றால் அதற்கு விலை உயர்ந்த  ஸ்கேனிங்  மெசின்  எதற்கு?  ஒரு சாதாரண பெடஸ்டல் ஃபேன் போதுமே என்று சொல்லி,  கன்வேயர் பெல்ட்டுக்கு அருகில் ஒரு  பெடஸ்டல் ஃபேன் வைத்து ஓடவிட்டார், சோப் இல்லாமல் காலியாக இருந்த டப்பாக்கள் கனம் இல்லாத காரணத்தால் காற்றின் வேகத்தில் கீழே தள்ளப்பட்டன.

  இந்த எளிமையான தீர்வு நிர்வாகத்தை சிக்கலில் இருந்தும், அனாவசிய செலவிலிருந்தும் காப்பாற்றியது. இது போன்ற அனுபவசாலிகள் தரும் ஆலோசனைகள் வெற்றியைத் தரும் என்பது

  சந்தேகம் இல்லை.

  சாதித்தவர்கள் ஒவ்வொருவரும் எளிதாக அந்த உச்சத்தை தொட்டு விடவில்லை. தொடர் முயற்சிகள், அசராத  தன்னம்பிக்கை, தளராத மனோதிடம், சோர்ந்து போகாத விடா முயற்சி, ஓய்வில்லா கடும் உழைப்பு, இணையற்ற ஈடுபாடு, தடையில்லா ஆர்வம், இலக்கை  நோக்கி  முன்னேறும்  உத்வேகம், முடிவெடுத்தப்பின் செயல்படுத்துவதில் விவேகத்துடன் கூடிய நிதானமான வேகம், இவைகள் எல்லாம் சேர்த்த  ஒட்டு மொத்த பயன்  தான் வெற்றி என்பதை உணர வேண்டும்.

  பாதுகாப்பான பாதை என தெரிந்து விட்டால் பயணம்  சுகமாய் அமையும்.  இலக்கினை  எளிதாய் அடையலாம்,  சரியான பாதையை தேர்வு செய்யுங்கள், பல மடங்கு  பலன்  கிடைக்கும்.

  இந்த இதழை மேலும்

  வெற்றி உங்கள் கையில் – 50

  புதிய அத்தியாயங்கள்

  வெற்றியை நோக்கி வாழ்க்கைப்பாதையைத் திருப்பி, திறம்பட செயலாற்றியவர்கள் பலர் எளிதில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால், அவர்களில் சிலர் வெற்றி பெற்ற பின்பும், பெற்ற வெற்றியை முழுமையாக அனுபவிக்க இயலாமல் திண்டாடித் தவிக்கிறார்கள்.

  இதற்குக் காரணம் என்ன?

  வெற்றி என்பது ஒரே நாளில் உருவாக்கப்படும் ‘வித்தை’ அல்ல. அது பல நாட்களாக சிறந்த பயிற்சிகளை முறையாக மேற்கொள்வதால் கிடைக்கும் “அற்புதப்பரிசு” ஆகும். கீழ்நிலையிலிருந்து மேல்நிலையை அடையும்போது சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு வாழ்பவர்கள் மட்டுமே தங்கள் வாழ்வில் உன்னத நிலையை அடைகிறார்கள். மாறுகின்ற சூழலுக்குஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளாதவர்கள் நாளும் துன்பக் கடலில் நீராடுகிறார்கள். இன்பத்தை தொலைத்து இருள் வாழக்கைக்குள் மூழ்குகிறார்கள்.

  அது ஒரு அழகிய அரண்மனை.

  அந்த அரண்மனையின் அருகில் ஒரு ஏழை பிச்சைக்காரன் ஒருவன், தினந்தோறும் பிச்சை எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். ஒருநாள், அரண்மனை அருகில் வந்தபோது அரண்மனையின் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை கவனித்தான்.

  அந்த அறிவிப்பு இதுதான்.

  “அரண்மனையில் ஒரு பெரிய விருந்து அடுத்த வாரம் நடத்தப்படும். அந்த விருந்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் அடுத்தவாரம் புதன்கிழமை அரண்மனைக்கு வரலாம். ஆனால், அவர்கள் விருந்தில் கலந்துகொள்ள வரும்போது அரச உடையணிந்து வந்தால் மட்டுமே அரண்மனைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று அந்த அறிவிப்பு தெரிவித்தது.

  “அரண்மனைக்குள் ஒருதடைவையாவது சென்று பார்த்துவிட வேண்டும். விருந்திலும் கலந்துகொள்ள வேண்டும்” என்று ஏழை பிச்சைக்காரன் விரும்பினான். அவன் விருப்பம் நிறைவேறுவதற்குத் தடையாக அவன் உடுத்தியிருந்த கந்தல் ஆடைகள் அமைந்துவிட்டது.

  “இந்தக் கந்தல் ஆடையை அணிந்துகொண்டு சென்றால், நிச்சயம் அரண்மனைக்குள் நுழைய விடமாட்டார்கள். எனவே, என் போன்றவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது” என்று ஒதுங்கியிருந்தான். இருந்தபோதும், அவனது மனம் “அரண்மனைக்குள் நுழைய வேண்டும்” என்றே எண்ணியது.

  “அரண்மனைக்குள் எப்படியாவது சென்றுவிட வேண்டும்” என்று நினைத்த அவன் திடீரென துணிச்சலை வரவழைத்துக்கொண்டான்.

  “மன்னர் போன்று அரச உடை அணிந்து செல்லாமல் விருந்தில் கலந்துகொண்டால், பெரிய தண்டனை கிடைக்கும்” என எண்ணியபோது மனம் கலங்கியது. உடல் நடுங்க ஆரம்பித்தது. தைரியத்துடன் வேகவேகமாக அரண்மனையை நோக்கி நடந்தான் பிச்சைக்காரன்.

  அரண்மனை வாசலை நெருங்கியதும், “நான் மன்னரைப் பார்க்க அனுமதி தர வேண்டும்” என்று சொன்னான். வாயிற்காவலன் முதலில் அனுமதி மறுத்தான். பின்னர், மன்னரிடம் சென்று விவரம் சொன்னான்.

  மன்னரைப் போன்று அரச உடை அணியாத அந்தப் பிச்சைக்காரனை அரன்மனைக்கு உள்ளே வர அனுமதி கொடுத்தார் மன்னர்.

  அரண்மனைக்குள் நுழைய அனுமதி பெற்ற பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் ஆடையுடன் நேரடியாக அரண்மனைக்குச் சென்றான். பிரச்சைக்காரனைக்கண்ட மன்னர் அதிர்ச்சியடைந்தார். இருந்தபோதும், அரண்மனைக்குள் நுழைய தான் அனுமதி வழங்கியதால், கோபப்படாமல் அவனை அருகில் அழைத்து “நீ என்னை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்றுசொல்லி அனுமதி கேட்டிருக்கிறாய். நான் உடனே அனுமதி வழங்கிவிட்டேன். எதற்காக நீ என்னை பார்க்க வேண்டும் என அனுமதி கேட்டாய்?” என்று கேட்டார் மன்னர்.

  “மன்னா… நீங்கள் தரும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது. ஆனால், என்னிடம் மன்னர் அணியும் அரச உடையைப்போன்று நல்ல ஆடைகள் இல்லை. எனவே, நீங்கள் அணிந்த உங்களது பழைய அரச உடையைத் தந்தால், அதனை அணிந்துகொண்டு நான் விருந்துக்கு வருகிறேன்” என்று மிகவும் தயங்கி தயங்கிச் சொன்னான் பிரச்சைக்காரன்.

  பிரச்சைக்காரனின் ஆசையை நிறைவேற்ற அவனுக்கு மன்னர் அணிகின்ற விலையுயர்ந்த ஆடையை பரிசாக வழங்கினார்.

  பிச்சைக்காரன் மிகவும் மகிழ்ந்தான்.

  மன்னர் வழங்கிய ஆடையை அணிந்துகொண்டு கண்ணாடி முன்சென்று பார்த்தான். ராஜ கம்பீரத்தில் அவனது தோற்றம் முழுவதுமாக மாறியிருந்தது. மன்னர் அவன் அருகில் வந்து “நீ மன்னர்கள் அணியும் அரச உடையை அணிந்துகொண்டதால், இப்போது மன்னர்களுக்கான விருந்தில் கலந்துகொள்ளலாம். இந்த அரச ஆடையை உனக்கே வைத்துக்கொள். இந்த ஆடை உன் ஆயுள் முழுவதும் கம்பீர தோற்றத்தை உனக்குத் தரும். இந்த ஆடை அழுக்கு ஆகாது. எனவே, இதனை துவைத்து வெளுக்காமலேயே எல்லா நாளும் அணிந்து கொள்ளலாம்” என்றார் மன்னர்.

  பிரச்சைக்காரன் நெகிழ்ந்துபோனான். ஆனந்தக் கண்ணீருடன் விடைபெற எண்ணி, மெதுவாக வாசலை நோக்கி நடந்தான். சிறிதுதூரம் நடந்ததும் அவனது மனம் கலங்கியது.

  “எனக்கு மன்னர் நல்ல அரச உடை தந்துவிட்டார். அழுக்கு ஆகாமல் நீண்டநாள் உழைக்கும் என்றும் சொல்கிறார். ஆனால், இந்த மன்னர் தந்த ஆடை கிழிந்தபின்பு நான் என்ன செய்வேன்?. நான் அணிந்துகொள்வதற்கு எனது பழைய துணிகள் வேண்டுமல்லவா?” என்று தனது பழைய ஆடைகளையும் எடுத்துச் சுருட்டி கையில் வைத்துக்கொண்டான் பிச்சைக்காரன். விருந்தில் கலந்துகொண்டான். பின்னர், விருந்து முடிந்த பின்பும் தனது பழைய ஆடைகளை சுமந்துகோண்டே விருந்தில் கலந்துகொண்டான்.

  விருந்து முடிந்த பின்பும் பழைய ஆடைகளை கீழே வைக்க மனம் இல்லாமல் திரும்பி வந்தான். பழைய துணிகளை பாதுகாத்து வைப்பதற்கு அவனுக்குச் சொந்தமாக வீடு இல்லை. அதனால், அவனால் மன்னர் கொடுத்த விருந்தையும் முழுமையாக ரசிக்க முடியவில்லை. தனது பழைய உடைகளை கையில் வைத்துக்கொண்டே அங்கும் இங்குமாக அலைந்தான். அடுத்த நாளும் தனது பிச்சையெடுக்கும் தொழிலைத் தொடங்கினான். கையில் தனது கிழிந்த கந்தல் துணிகளை வைத்துக்கொண்டே அரச உடையில் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தான். இதனைப் பார்த்த மக்கள் சிரித்தார்கள்.

  “கந்தல்துணி கிழவன்” என்று அந்தப் பிச்சைக்காரனுக்குப் பெயர் சூட்டினார்கள். மன்னரின் அன்பைப் பெற்றிருந்தாலும், தனது தொழிலை விட்டுவிட முடியாமல் ஒவ்வொரு தெருவாகச் சென்று அவன் பிச்சை எடுத்தான். ஒரு சில மாதங்கள் கழித்து கடுமையான நோயினால் அவன் இறந்துபோனான். செய்தியறிந்த மன்னர் அவனைப் பார்க்க அவன் இருந்த இடத்திற்கு வந்தார். இறந்துபோன அவனது உடலின் அருகில் பழைய கந்தல் துணி மூட்டை இருந்தது. இதைப்பார்த்த மன்னர் மனம் வருந்தினார்.

  விலையுயர்ந்த, சிறப்புமிக்க அரச உடையை கொடுத்தபின்பும், தனது கந்தல் உடையை மறக்காமல் தன்னோடு சுமந்த பிச்சைக்காரனின் செயல் அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது.

  இந்தப் பிச்சைக்காரனைப்போலவே நம்மில் பலர் வாழ்க்கையில் பலவித கந்தல் துணிகள் போன்ற குணங்களை சுமந்துகொள்கிறோம். நம்மிடம் இருக்கும் கோபம், எரிச்சல், விரோதம், பழிவாங்கும் எண்ணம், சண்டையிடும் மனப்பான்மை என தேவையில்லாத குணங்களை சுமந்து வாழ்கிறோம். இந்தக் குணங்களை நாம் செல்லுமிடமெல்லாம் நம்மோடு தூக்கிக்கொண்டு அலைவதால், வாழ்க்கையில் கிடைக்கும் இன்பத்தை நுகர முடியாமல் தவிக்கிறோம்.

  அரண்மனைக்கு அரச உடையில் சென்ற பிச்சைக்காரனைப்போல, சிலருக்கு திடீர் பதவி உயர்வு, திடீர் பணம், திடீர் மகிழ்வு என பல்வேறு உயர்வுகள் வாழ்வில் கிடைக்கின்றன. அந்த உயர்வுகளையெல்லாம் பாதுகாத்து நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை தூக்கியெறிய அவர்கள் முன்வருவதில்லை.

  வீட்டுக்குள் வேண்டாதப் பொருட்களை சேகரித்து வைப்பதைப்போல மனதையே குப்பைத் தொட்டியாக்கி பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் நிலையை நம்மில் சிலர் உருவாக்கிவிடுகிறோம். இத்தகைய பிரச்சினைகளிலிருந்து மீள விரும்புபவர்கள், புதிதாக கிடைக்கும் சூழலை அனுபவித்து ரசிக்கவும், அதன்மூலம் நிலையான மகிழ்வைப் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

  “பழையன கழிதலும் புதியன புகுதலும்” வாழ்க்கையின் அடிநாதமாக விளங்க வேண்டும். வாழ்க்கையில் புதிய நிலைகளை அடையும்போது, தேவையற்ற தீய செயல்களையும் நிரந்தரமாக விலக்கிக்கொள்ளவும் முன்வர வேண்டும். அப்போதுதான், வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கும். மகிழ்வு பெருகும். சிகரம் தொடும் சிறப்புகள் தானாய் வந்து சேரும்.

  இந்த இதழை மேலும்

  சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்- தொடர்ச்சி- 3

  அதிர்ஷ்டம் இல்லாத நெசவாளி

  செயல், விதி இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நீ உன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்திப் பாடுபடு. பின் விதியின் விருப்பத்திற்கிணங்க நடந்து  கொண்டு கிடைத்ததை மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள், என்ற கருத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை, அதிர்ஷ்டம் இல்லாத நெசவாளி ஆகும். இக்கதை, தன் நிறைவு பேராசை, விதியின் வலிமை,ஈகையின் மகிமை மற்றும் விருந்தோம்பலின் சிறப்பு போன்ற கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது இக்கதையை மேலும் மிளர வைக்கிறது.

  சோபில்கா என்ற நெசவாளி, அரசர்கள் மற்றும் இளவரசர்கள் அணியும்  உயர் வகையான ஆடைகளை நெய்து அதனால் பெரும் பொருள் சம்பாதித்து வந்தான். ஆனாலும் அவன் மனம் நிறைவு காணவில்லை. ஆதனால், அவன் தன் மனைவியை அழைத்து, தான் வெளியூர்  சென்று அதிகமாக பணம் சம்பாதிக்க விரும்புவதாகக் கூறிச் சென்றார். அவர் வீட்டில் அருகில் மற்றுமொரு நெசவாளி, எளிமையான, விலை குறைந்த ஆடைகளை நெய்து தேவையான பொருள் சம்பாதித்து, அதன் மூலம் தன் குடும்பத்தினருடன் மகிழ்வுடன் அந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தான்.

  சோபில்கா, தன் விருப்பப்படி சில மாதங்களில் தன் உழைப்பால் 300 தங்க நாணயங்கள் சம்பாதித்து, தன் மனைவியைக் காண தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது விதியும், செயலும் சோபில்கா அறியா வண்ணம் பேசிக் கொண்டனர். விதி செயலை பார்த்து அவன் 300 தங்க நாணயங்கள் சம்பாதிக்க நீ ஏன் வழி செய்தாய்? அவனிற்கு அவ்வளவு பணம் தேவையில்லை என்றது. அதற்கு செயல் அவன் உழைப்பிற்கேற்ற பணம் கிடைத்துள்ளது, என்றும் அவன் எவ்வளவு பணம் எடுத்துக்  கொள்ளலாம்? என்று கேட்டது. அது சமயம் சோபில்கா தன் பணப்பையைச் சோதித்துப் பார்த்த போது அவனுடைய 300 தங்க நாணயங்களைக் காணவில்லை.. வெறும்  கையுடன் தன் மனைவியைப் பார்க்க ஊர் செல்ல விரும்பாமல் மீண்டும் தன் வியபாரத்தைத் தொடர வெளியூர் சென்றான். இம்முறை 500 தங்க நாணயங்கள் வரை சம்பாதித்து தன் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.

  முன்பு போலவே விதியும் செயலும் சோபில்கா அறியா வண்ணம் உரையாடினர். அவனுடைய 500 தங்க நாணயங்களும் காணாமல்  போனது. இந்த அவமானத்தை தாங்க முடியாமல், தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தான். அங்கிருந்து புற்களால் கயிறு ஒன்றை தயார் செய்து, அதை ஆலமரத்தில் தொங்கவிட்டு, தன் கழுத்தைச் சுற்றி அக்கயிற்றால் முடிச்சு போடும் தருணத்தில் விதி அவனைத் தடுத்தி நிறுத்தி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது, அதற்கு அவன் அதிகமான செல்வம் வேண்டும் என்றான், உயிர் போகும்  நிலையில் கூட  அவனுடைய பேராசையை அறிந்த விதி அவனை, பக்கத்து ஊரில் வாழ்ந்து  கொண்டிருக்கும் இரண்டு வியாபாரிகளைப் போய் சந்தித்து வரும்படியும் அதன் பின் அவன் விரும்பியதைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்லி அனுப்பியது. அதன்படி சோபில்காவும் அந்த ஊருக்குச் சென்று வந்தான். சோபில்காவைப் பார்த்தவுடன் முகம் சுழித்து, தரக்குறைவான உணவினை அவனுக்கு அளித்து, தூய்மை குறைவான விரிப்பானை அவனுக்கு உறங்குவதற்கு அளித்து மறுநாள் முகச்சுழிவுடன் வழி அனுப்பி வைத்தான்.  இந்த நிகழ்வை பார்த்த செயல் விதியிடம் இப்படிப்பட்ட அவமானம் அவனுக்கு ஏன் ஏற்பட்டது? என்று வினவியது. அதற்கு விதி அவன் அந்த வீட்டிற்கு அழைக்கப்படாத ஒரு விருந்தாளி என்று பதில் உரைத்தது.

  மறுநாள் சோபில்கா, விதி சொல்லி அனுப்பிய இரண்டாவது வியாபாரியின் வீட்டிற்குச்  சென்றடைந்தான். இந்த வியாபாரி, முதல் வியாபாரியை விட வசதியில் குறைந்தவன் தான். ஆனால் அவன் சோபில்காவைப் பார்த்தவுடன், தன் அகமும் முகமும் மலர வரவேற்றான். நல்ல நீரில் அவனை நீராடச் செய்து,புதிய ஆடைகளை அவனிற்கு அணிவித்து, மிகவும் சுவையான தரமான உண்பதற்கு அளித்து, தூய்மையான படுக்கை விரிப்பான்களை அவன் உறங்குவதற்கு அளித்து, மறுநாள் காலை முகமலர்ச்சியுடன் அவனை வழி அனுப்பி வைத்தான். இவ்வியாபாரியின் தன்னலம் அற்ற சேவைப் பண்பை பாராட்டி விரும்பி அவ்வியாபாரிக்கு அந்நாட்டு மன்னன் பொன்னும் பொருளும் பரிசாகக்  கொடுத்து அனுப்பினான்.

  சோபில்கா, விதியின் வழிகாட்டுதல் படி இரண்டு வியாபாரிகளையும் சந்தித்துவிட்டு, தெளிவான மனத்துடன் விதியை வந்து சந்தித்தான். விதி சோபில்காவைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது. அதற்கு அவன் தான் இரண்டாவது வியாபாரியை தன் முதன் மாதிரியாக வைத்து என் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடந்துமுவேன் என்று கூறி தான் உழைத்து சம்பாதித்த 800 தங்க நாணயங்களைப் பெற்று கொண்டு, தன் சொந்த ஊருக்குச் சென்று மனைவி மக்களுடன் தனக்கு கிடைக்கும் தேவையான வருமானத்தில் மகிழ்வுடன், தன் நிறைவுடன் வாழத் தொடங்கினான்.

  இக்கதையில் வரும் பல்வேறு நிகழ்வுகள், வாழ்வில் நடை பெறும் உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலிக்கின்றன. சோபில்காவும், அவன் வீட்டின் அருகில் வாழ்ந்து கொண்டிருக்கும் வியாபாரியும் ஒரே தொழில்  செய்து ஒரே ஊரில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஆனால் அவர்களின் எண்ணங்களில் வேறுபாடு உள்ளது. எளிய ஆடைகளை நெய்யும் நெசவாளி தன்னால் முடிந்த அளவு சம்பாதித்து தன் மனைவி, குழந்தைகளுடன் தன் நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றான். ஆனால் சோபில்காவோ பேராசையின் காரணமாய் தன் கனவுகளால் தன் தயிர்பானை உடைய, முதலையே தொலைத்து தயிர்பானைக்காரி போன்றும், தங்க முட்டை போடும் வாத்தை இழந்த வியாபாரி போன்றும், நிறைய நிலத்தை பரிசாகப் பெற எண்ணி போட்டியில் அதிக தூரம் இழந்த  போட்டியாளன் போன்று தன்னுடைய 800 தங்க நாணயங்களை இழந்து, உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறான். பின் விதியின் வழிகாட்டுதலால் தன்னிறைவான வாழ்க்கை முறைக்குத் திரும்புகிறான்.

  இக்கதை, ஒரு கற்பனைக் கதையானாலும் அவற்றில் விவரித்துள்ள ஒவ்வொரு நிகழ்வுகளும், அதே சூழ்நிலைகளைச் சந்தித்த ஒவ்வொருவரும் அவை அனைத்தும் உண்மை என்று உணரவும், வளரும் புதிய சந்ததியினர் விதி, செயல் என்ற இவை இரண்டின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கு என்று முன் கூட்டியே அறிந்து தங்களை தயார்படுத்திக்  கொள்ளவும் வழி வகுக்கும். மேலும் நல்ல கருத்துக்கள் கொண்ட சிறுகதைகளுடன்… மீண்டும் தொடரலாம்….

  இந்த இதழை மேலும்

  வாழ நினைத்தால் வாழலாம் – 12

  சகிப்புத்தன்மை

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

  எனக்கு மிகவும் பிடித்த நடிகரின் மீது தரமற்ற தாக்குதல்.  வார்த்தை சாடல்கள்.  என்னால் பொருக்க முடியவில்லை – பொங்கவா?

  என்னுடனேயே பழகிய என் நண்பன்.  புல்வெளியோடு தான் கட்டியிருக்கும் புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு என்னை அழைத்திருக்கிறான்.  புகைச்சலாக இருக்கிறது – போய்வரவா?

  ஏதேதோ மாற்றங்கள் அரசியலில்.  என் தலைவனின் ஆசைகள் தடம் மாறுகின்றது.  தகிக்கிறது என் மனம் – தாக்கவா?

  வீட்டுவாடகை, விலைவாசி, விடுமுறை செலவுகள், வருமானம் போதவில்லை.  சேமிப்பும் இல்லை.  என் முதலாளி வீட்டை – முற்றுகையிடவா?

  வழிப்பறி கொள்ளை, வீதியில் நடக்கவே பயமாக இருக்கிறது.  மனமும் கலவரமாக இருக்கிறது – களம் இறங்கவா?

  தாலி கட்டியவளோடு தகராறு.  தற்கொலை எண்ணத்தை தடுக்க முடியவில்லை – சாகவா?

  தொலைகாட்சி தொடர்களில் ஒலிப்பதுபோலே இப்போது இங்கே சமூகத்தில் எதிரொலித்துக்கொண்டிருப்பது இதுபோன்ற ஓலங்கள் தான்.

  இல்லாததைபற்றி மட்டுமல்ல “இழந்ததை” பற்றியும் புலம்பல் அதிகமாகத்தான் ஆர்பரிக்கிறது.

  தனக்கு சம்மந்தமே இல்லாத விஷயங்களும் சரி – அல்லது தானே சம்பந்த்தப்பட்ட விஷயங்களாகட்டும், இந்த நூற்றாண்டில் மனித சமூகம் மெல்ல மெல்ல என்று தொடங்கி இன்று மொத்தமாக தொலைத்து விட்டிருப்பது “சகிப்புத்தன்மை” என்ற ஒன்றைத்தான்.

  மற்றவர்களின் வெற்றி எனக்குப் பொறாமையைத் தருகிறது.

  என்னுடைய தோல்வி எனக்குக் கோபத்தைத் தருகிறது.

  என்னால் சகிக்க முடியவில்லை.

  விரல் வலிக்க நான் நடந்துகொண்டிருக்கும்போது – என் நண்பனின் விமானப்பயணம்.

  கந்தல் உடையை நான் தைத்துக்கொண்டிருக்கும்போது – புது சட்டை என் எதிர்வீட்டு கொடியில்.

  நோட்டை வாங்கி – ஓட்டை போட்டு – கோட்டை அனுப்பி விட்டேன் – கோட்டை விட்டேன் என்பது அரிசிக்காகவும், சர்க்கரைக்காகவும் பெரிய வரிசையில் காத்திருக்கும்போது – கொடிபோட்ட காரில் அவன் சிரித்தபடி சென்று கொண்டிருந்தான் – தன் வணிகக்கட்டிடத்தில் தன் வியாபாரத்தை கவனிக்க.

  சகிக்க முடியவில்லை.

  சுமக்க நான் – சுகிக்க மற்றவரா?

  உண்மைதான் நண்பரே!  உங்கள் புரிதல் சரியாக இல்லாதபோது மற்றவர் பார்வையில் மட்டுமல்ல – வாழ்விலுமே நீங்கள் ஒரு கோமாளியாய், ஏமாளியாய், முட்டாளாகத்தான் முத்திரைப் பெறுவீர்கள்.

  “சகிப்புத்தன்மையை” சரியாய் புரிந்து கொள்ளுங்கள்.

  நாத்திகனுக்கு கல்லாக தெரிவதுதான் ஒரு ஆத்திகனுக்கு கடவுளாகத் தெரிகிறது.

  கல்லோ கடவுளோ!  நீ முழுவதுமாகத் தெளிந்துகொள்.

  உன்னுடைய “சகிப்பும்” “தன்மையும்” தான் “சகிப்புத்தன்மை” என்று உணர்.

  எதற்கு சகிப்பது – எதற்கு எதிர்ப்பது என்று அறி.

  எப்படி சகிப்பது – எப்படி எதிர்ப்பது என்று உணர்.

  வாழ்க்கை சாகரத்தில் “சகிப்புத்தன்மை” குறித்து முத்தெடுப்பதர்க்கு ஒரு முன்னுரையாக – என்னுரை.

  இந்த உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக, முதல் புள்ளியாக விளங்குவது சகிப்புத்தன்மை இல்லாதது தான்.

  மனிதர்களை துண்டாடும் மத பிரச்சினை, பேதம் பார்க்கும் ஜாதி பிரச்சினை, விரிசல்கள் பெரிதாகாமல் விட்டுக்கொடுத்து போகும் தன்மையற்ற நிலை – எல்லாவற்றுக்கும் காரணம் சகிப்புத்தன்மை இல்லாதது தான்.

  ஆண்டாளை பற்றிய ஒரு கவிஞரின் கருதும் சரி – அதற்க்கான அரசியல் விமர்சகர்களின் கருத்தும் சரி – சகிப்புத்தன்மையின் எல்லையை சோதித்துப்பார்த்த சோதனையே.

  Cricket விளையாட்டின் ஒரு தோல்வி – அந்நாட்டு பயிற்சியாளரை ப(லி)ழி வாங்கிய அந்த சம்பவம் சகிப்புத்தன்மை இழந்த சில விளையாட்டு வீரர்களின் வெறியின் வெளிப்பாடே.

  மற்றவர்களின் கருத்து சுதந்திரத்திற்கும், எழுத்து சுதந்திரத்திற்கும் எதிர்ப்பு வருவது – சம்பந்தப்பட்டவர்களின் சகிப்புத்தன்மையை சந்தேகப்பட வைக்கிறது.

  பிறருடைய எண்ணங்களை, உணர்வுகளை மதிக்க மறுப்பது சரியான அணுகுமுறை அல்ல.

  இந்த உலகம் நமக்காக மட்டுமே படைக்கப்பட்டதல்ல.  இயற்கையின் படைப்புகள் அனைத்துக்கும் இங்கே இடம் உண்டு – உரிமை உண்டு.

  போராட்டம் நிறைந்த இந்த வாழ்க்கை – போர்க்களமாக மாறிப்போவதர்க்கு சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது தான் காரணம் என்று உணர்க.

  சகிப்புத்தன்மை என்பது ஒரு சாதனை வரம்.

  அதை கற்றவர்களும் பெற்றவர்களும் என்ற பட்டியல் நம் முன்னோர்களோடு முடிந்துவிடக்கூடாது.

  ஆம்.

  ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற தன்மைகளில் மிக முக்கியமானது “சகிப்புத்தன்மை”

  அவர்கள் வாழ்வியல் சிறந்ததர்க்கும், சாதனைகள் தொடர்ந்ததர்க்கும் காரணியாக இருந்தது அவர்கள் சகிப்புத்தன்மையே.

  சூதாட்டத்தில் தன் சகோதரன் செய்வது தவறு என்று தெரிந்தும் – வனவாசம் இருந்த காலங்களில் சந்தித்த இடர்கள் பல இருந்த போதும் – ராஜ்யம் மறுக்கப்பட்டு போர்தான் தீர்வு என்று ஆனபோதும் பஞ்ச பாண்டவர்களிடம் விஞ்சி இருந்தது “சகிப்புத்தன்மையே.

  கூட்டுக்குடும்பம் என்ற சொல் பல இல்லங்களின் இனிய நாதமாக விளங்கியதற்கு சகிப்புத்தன்மையே காரணம், ஏனென்றால் அங்கே தவறுகள், கருத்து பேதங்கள் மன்னிக்கப்பட்டன.

  முனிவர் ஒருவர் புனித ஆற்றில் முங்கி குளித்து வெளியில் வந்தபோது கயவன் ஒருவன் சேற்றை வீசி எறிந்தான்.  மீண்டும் முங்கி எழுந்து வந்தார் முனிவர்.  இப்போதும் அவன் சேற்றை வீசினான்.  மூன்று, நான்கு, ஐந்து என்று ஏறிக்கொண்டே போனது எண்ணிக்கை.  கயவனும் நிறுத்தவில்லை, முனிவரும் முடிக்கவில்லை.  கோபத்தின் உச்சிக்கு போன கயவன் “ஏன் முனிவரே? இப்படி அவமானப்படுத்தியும் இன்முகம் காட்டுகிறீர்கள்.  உங்களுக்கு என்மேல் கோபமே வரவில்லையா?” என்று கேட்டான்.

  முனிவர் சொன்னார் “நான் உனக்கு நன்றி சொல்கிறேன் நண்பா.  இந்த புனித ஆற்றில் மீண்டும் மீண்டும் மூழ்க வைத்து என் பாவங்களை கரைக்க பேருதவி செய்கிறாய் நீ.  நீடுழி வாழ்” என்று ஆசீர்வதித்தார்.

  வெட்டுப்பட்ட மரம்போல் முனிவர் காலில் விழுந்தான் கயவன்.  “என்னை மன்னித்துவிடுங்கள்.  இந்த ஊரின் செல்வந்தர் ஒருவர் உங்கள் புகழின்மீது பொறாமை கொண்டு என்னை இப்படி செய்யும்படி பணித்தார்.  நீங்கள் அவமானப்படுவதில் ஆனந்தம் காண நினைக்கிறார்.  உங்களை ஆத்திரப்படுத்தி, அவமானப்படுத்தினால் நீங்கள் தன் நிலை மறந்து என்மீது கோபப்பட்டு சண்டையிடுவீர்கள்.  நாம் கட்டிப்பிடித்து உருண்டு சண்டையிடுவதை ஊர்மக்கள் பார்த்தால் உங்களை கேவலமாக பேசுவார்கள்.  நீங்கள் மதிப்பிழப்பீர்கள்” என்பதே அவர் திட்டம்.  அதை செவ்வனே செய்தால் எனக்கு பெருமளவு பணம் தருவதாக சொன்னார்.  நானும் பணத்துக்கு ஆசைப்பட்டு சம்மதித்தேன்.  இப்போது தோற்றுப்போய் நிற்கிறேன்.  என்னை மன்னிக்கவும், என்றான்.

  முனிவர் சொன்னார் “தோழனே, இதை நீ முன்னமே சொல்லியிருந்தால் நான் உன்னுடன் சண்டை போட்டிருப்பனே.  உனக்கும் பணம் கிடைத்திருக்குமே.  இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார்.

  கயவன் ஆச்சரியப்பட்டான்.  கரகரத்த குரலில் கண்ணீர்மல்க சொன்னான் “ஐயா, காரணமே தெரியாத சூழலில் நான் இழைத்த துன்பத்தை “சகிப்புத்தன்மை” கொண்டு புண்ணியம் என்று ஏற்றீர்.  காரணம் தெரிந்தபிறகு என் தவறை மன்னித்து எனக்கு உதவ முடியவில்லையே என்று வருந்துகிறீர்.  என்னே உங்கள் சகிப்புத்தன்மை” – என்று வியந்து போற்றினான்.

  “சகிப்புத்தன்மையின் உச்சம் இந்த சம்பவம்!

  “சகிப்புத்தன்மை” – மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக்காட்டும் வித்தை.

  “சகிப்புத்தன்மை” – ஆன்ம பலம் வேண்டுவோரின் அஸ்திவாரம்.

  “சகிப்புத்தன்மை” – நிறை ஞானாம் கொண்டவரின் நெற்றிக்கண்.

  “சகிப்புத்தன்மை” – வெற்றியாளர்களின் விசேஷ குணம்.

  “சகிப்புத்தன்மை” – ஆறாம் அறிவின் அடையாள சின்னம்.

  முனிவரின் “சகிப்புத்தன்மை” – அருளாக அறியப்பட்டது.  கயவனின் ஊனக் கண்களை திறந்தது.

  காந்தியின் “சகிப்புத்தன்மை” -சத்தியாக்கிரகம் என்று உணரப்பட்டது.  கத்தியின்றி, ரத்தமின்றி சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தது.

  அன்னை தெரசாவின் “சகிப்புத்தன்மை” -அன்பு என்று உணரப்பட்டது.  வாழ்வில் தள்ளி வைக்கப்பட்டவர்களுக்கும் நல்ல தடத்தை காட்டி சென்றது.

  “சகிப்புத்தன்மை” – என்பது சாதனை படைத்தவருக்கு மட்டும் சொந்தமல்ல.  சாமானியனுக்கும் தேவை.  ஒவ்வொருவருடைய “சகிப்புத்தன்மையும் வெவ்வேறு பொருளாக, சொல்லாக அடையாளம் பெறுகிறது – அவரவர் நிலையில்.

  அவையாவும் தனிமனிதனுக்கும், இந்த சமூகத்துக்கும் நன்மை படிப்பதாக இருப்பதே நலம்.

  உங்கள் “சகிப்புத்தன்மை” –

  நல்ல கல்வியாக அறியப்படட்டும் – தற்கொலைகளை தடுக்கட்டும்.

  நல்ல ஞானமாக அறியப்படட்டும் – மதங்களையும், மனங்களையும் இணைக்கட்டும்.

  நல்ல சிந்தனையான அறியப்படட்டும் – உயர்ந்த வாழ்க்கை முறையாக மாற்றட்டும்.

  நாட்டின் முன்னேற்றமாக அறியப்படட்டும் – விஞ்ஞான வளர்ச்சியாக மிளிரட்டும்.

  இறக்க குணமாக அறியப்படட்டும் – வன்முறைகள் ஒழியட்டும்.

  தயாள குணமாக அறியப்படட்டும் – மனிதநேயம் மலரட்டும்.

  இப்படி முற்போக்கான அர்த்தங்களாக அறியப்பட்டால் – “வர்கபூமி” என்று ஏளனப்பேரை எடுத்த உலகம் – “சொர்க்கபூமி” என்று சொல்லப்படும்.

  அந்த பூமியில் துன்பமும் வன்மமும் இருக்காது. பொறாமை எண்ணங்கள் புதை குழிக்கு இரையாகி இருக்கும். தெளிவான பாதைகள் தீர்க்கமாகத் தெரியும்.                         நண்பர்கள் நல்லவர்களாகவும் – நல்லவர்கள் நண்பர்களாகவும் சங்கமிப்பதால் சங்கடங்கள் சவக்குழியில்.

  கை கொடுப்பவன் கர்ணனாகவும், தோள் கொடுப்பவன் தோழனாகவும் ஒரு இனிமையான சுற்றம்.

  மாதிரியான மனிதர்கள் இனி “முன்மாதிரியான” மனிதர்கள் என்ற உயர்ந்த நிலையில்.

  ஆன்மீகமான அரசியலும், அரசியலான ஆன்மீகமும் உங்கள் சிந்தைக்குளத்தை சிதைக்காத கற்களாக – வெறும் சொற்களாக இருக்கும்.

  தலை நிமிர்ந்து வாழும் அடுத்த தலைமுறைக்கு ஒரு தலையாக – தலைவனாக நீங்கள்.

  உங்கள் வாழ்வெனும் ஆனந்த சோலையின் அத்தனை நறுமலர்களும் உங்கள் காலடியில் – பாதை எங்கும் பன்னீர் புஷ்பங்களாய்.

  கவியரசர் சொல்வதுபோல் “இத்தனை சிறிய மனிதன் தலையில் எத்தனை சுமைகளடா, இருப்பதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா” – என்ற சோகப்புலம்பல் இல்லாத சுவர்க்க வாழ்க்கை.

  முன்னேற்றப்பாதையில் முட்டுக்கட்டை வந்தாலும் கூட “சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ, வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு – காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்” – என்று நம்பிக்கையுடன் நகர்த்த வைக்கும்.

  “சகிப்புத்தன்மை” யின் உச்சமாக கவியரசரின் கட்டியம் கூறும் வரிகள் இது.

  “ஆசையிலே சில நாள் பெரும் அவதியிலே சில நாள்

  காதலிலே சில நாள் மனக் கவலையிலே சில நாள்

  வாழ்வதுவோ சில நாள் இதில் வாடுவதேன் பல நாள்” – என்று தைரியம் ஊட்டுகின்றார்.

  சென்றதெல்லாம் வருமோ – அதை சிந்தனை தான் தருமோ

  வந்ததை யார் தடுத்தார் – இனி வருவதை யார் மறுப்பார்

  இமைகளை மூடிடுவோம் – அதில் துயர்களை மூடிடுவோம்

  மறுபடியும் விழிப்போம் – புது மனிதரைப்போல் பிறப்போம்” – என்று “சகிப்புத்தன்மை” யை சந்தோஷத்தோடு ஏர்க்கச்சொல்கிறார்.

  எர்ப்பீர்!  “சகிப்புத்தன்மை” யை வாழ்வில் சேர்ப்பீர்!

  சேர்த்தால்

  “வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

  “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”

   

  இந்த இதழை மேலும்

  தன்னம்பிக்கை மேடை

  நேயர் கேள்வி…?

  தமிழரின் கலாச்சாரங்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து வருகிறது. கலாச்சாரம் சீரழிந்தால் இனத்தின் பெருமை குறையும் என்று நினைக்கிறேன். அது பற்றி உங்களின் கருத்து?

  கோ.கிருபானந்தன்

  எம்.செட்டிப்பட்டி

  சேலம்

  தமிழத்தில் கலாச்சாரங்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து வருகிறது என்றும் கலாச்சாரம் சீரழிந்தால் இனத்தின் பெருமை குறையும் என்று நினைப்பதாகவும் கூறுகிறீர்கள். இதில் என் கருத்து என்ன என்று கூறுவதற்கு முன்னர், தமிழகத்தில் எந்தெந்த கலாச்சாரங்கள் குறைந்து வருகிறது, எந்தெந்த கலாச்சாரங்கள் சீரழிந்து வருகிறது என்று நீங்கள் விளக்கியிருக்க வேண்டும். அப்படி விளக்கிக் கூறாத நிலையில் அவற்றை நாம் ஊகித்துப் பார்ப்போம்.

  )ஒரு ஊரில் ஓரிருவர் பல நூறு ஏக்கர் நிலத்தின் உரிமையாளராகவும், மீதி உள்ள ஒரு ஆயிரம் பேர் ஒரு காணி நிலம் கூட இல்லாமல் விவசாயக் கூலிகளாகவும், கூலி கூட தரப்படாமல் விளையும் போது விளைச்சலில் ஒரு சிறு பகுதி மட்டும் கூலியாக பெற்ற ஏழைகளாக வாழ்ந்த அந்தக் கலாச்சாரத்தைக் கூறுகிறீர்களா? அல்லது

  ஆ)ஒரு சிலர் உயர்ந்தவர்கள் என்றும், ஒரு சிலர் தீண்டப்படாதவர்கள் என்றும் இடைப்பட்டவர்களுக்குள் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று உயர்வு தாழ்வுகள் வரையறுக்கப்பட்டு, இவருக்கு இவர் தாழ்வு என்று வாழ்ந்தார்களே அந்தக் கலாச்சாரத்தைக் கூறுகிறீர்களா? அல்லது

  )அத்தை மகளை மட்டும் தான் மணக்க வேண்டும், அல்லது அக்கா மகளைத் தான் மணக்க வேண்டும் என்றும், இன்னும் சில நெருங்கிய உறவுகளுக்குள் மணக்கலாம் என்ற கலாச்சாரம் இருந்ததே அதைச் சொல்கிறீர்களா? அல்லது

  )பத்து வயது கூட நிரம்பாத பெண் பிள்ளைகளை திருமணம் செய்து வைத்து, அந்தச் சிறுமி மிகச்சிறு வயதில் பல பிள்ளைகளைப் பெற்று உடல்நலம் கெட்டு, மனநலம் குன்றி சிறு வயதில் உயிர் இறந்தாளே, அந்தக் கலாச்சாரத்தைச் சொல்கிறீர்களா? அல்லது

  )கணவன் இறந்தால், மனைவி உடன்கட்டை ஏறவேண்டும்; அல்லது கணவனை இழந்த பெண், விதவையாக வெள்ளை சேலை கட்டி, தலைமுடி வெட்டி வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்ற நியதி இருந்தது அந்தக் கலாச்சாரத்தைச் சொல்கிறீர்களா? அல்லது

  )பெரிய செல்வந்தர்கள் ஒரு கொடுங்குற்றம் செய்தாலும் பெரிய தண்டனை இல்லை, ஒரு பாமரன் சிறிய குற்றம் செய்தாலும் மரண தண்டனை என்ற நியதி இருந்ததே அந்தக் கலாச்சாரத்தைச் சொல்கிறீர்களா? அல்லது

  )பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடந்தால் போதும், அவர்களுக்கு கல்வி வேண்டாம், அவர்கள் வேலைக்கும் போக வேண்டாம் என்று அவர்கள் வீட்டில் சமையல் மட்டும் செய்து கொண்டு வாழ்ந்தார்களே அந்தக் கலாச்சாரத்தைச் சொல்கிறீர்களா? அல்லது

  )உடல்நலம் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டதும் அவரை எந்த மருத்துவ அறிவும் இல்லாத போலி மருத்துவரிடமும், மந்திரவாதியிடமும் அழைத்துச் சென்று அவருக்கு நோய் குணமாகாமல் அவதிப்பட்டாரே அந்தக் கலாச்சாரத்தைச் சொல்கிறீர்களா? அல்லது

  )பெண்களும், குழந்தைகளும் காலைக் கடன்களை கழிக்க வெகுதூரம் நடந்து சென்று திறந்த வெளியில் அவதிப்பட்டார்களே அந்தக் கலாச்சாரத்தைச் சோல்கிறீர்களா?

  ஆக, மேலே குறிப்பிட்ட கலாச்சாரங்கள் குறைந்துவிட்டது அல்லது அழிந்துவிட்டது என்று இருந்தால் சற்றும் கவலைப்படாதீர்கள், இது நல்லதுதான். இவை மோசமான கலாச்சாரங்கள். இன்று நல்ல கலாச்சாரங்கள் வந்துவிட்டன.

  நல்வரவு :

  என்னைப் பொறுத்தவரை இன்று சில நல்ல கலாச்சாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக,

  • அனைவருக்கும் ஒரே சட்டம், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
  • பெண்களுக்கும் கல்வி, நமது பெண் பிள்ளைகள் அனைத்துத் துறையிலும் கால் பதித்துவிட்டனர்.
  • நமது இளைஞர்கள் உலக மக்களுக்கு இணையாக போட்டியிட்டு அதில் சிலர் வென்றுவிட்டனர்.
  • விங்ஙான மருத்துவத்தை தழுவி இருக்கிறோம், அதனால் உடல் நலத்தையும், மன நலத்தையும் காத்துக் கொண்டோம்.
  • நிறைய பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் தோன்றிவிட்டன, அவற்றால் லட்சக்கணக்கான பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம், அறிவியல் கற்றுக்கொள்கிறார்கள். 

  கலாச்சாரம் என்றால் என்ன? :

  கலாச்சாரம் என்பது நமது மனதிலும் அறிவிலும் இருப்பது. நமது ஆளுமையும், நமது நடத்தையும், நமது சிந்தனையும், நமது ஒழுக்கமும்தான் கலாச்சாரம்.

  சமத்துவம்; பெண்கல்வி; பொதுசுகாதாரம்; அறிவியல் மருத்துவம்; சகிப்புத்தன்மை; சட்டங்கள்; தனிமனித ஒழுக்கம்; கருத்து சுதந்திரம் ஆகியவை நவீன காலங்களில் வந்துவிட்டன. அதாவது இவை அனைத்தும் விரும்பத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துவிட்டன. நாம் அறிவார்ந்த மக்களாகவும், சிந்திக்கும் மக்களாகவும், அன்பான மக்களாகவும் மாறி வருகிறோம். எனவே அவற்றை நினைத்து நாம் மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர, கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று கவலைப்பட வேண்டியதில்லை!

  அப்போது, எதுவுமே நாம் இழக்கவில்லையா? எந்த கலாச்சாரமும் கெட்டுப்போகவில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். ஆம்! சில விஷயங்கள் பெரிதும் கெட்டுப்போய்விட்டன என்பதில் சந்தேகமில்லை. அவையாவன

  கலாச்சார சீரழிவு 

  1. காடுகளும் மலைகளும் அழிக்கப்பட்டு, வன விலங்குகள் வேட்டையாடப்பட்டு இன்று இயற்கையை அழித்துக் எகாண்டிருக்கிறோம். இப்படியே போனால், புலிகளும், யானைகளும் நம் நாட்டில் இருக்காது, இது கலாச்சார சீரழிவு.
  1. ஒரு சதவீத பணக்காரர்கள் இந்தியாவின் எழுபது சதவீத சொத்துக்களை கையகப்படுத்திவிட்டதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஏழைகள் பரம ஏழைகளாகவும், பணக்காரர்கள் பெரிய பணக்காரர்களாகவும் மாறிக்கொண்டிருப்பதால் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு வலுத்து ஒரு அதிருப்தியான சமுதாயம் மலர்ந்து வருகிறது. இது கலாச்சார சீரழிவு.
  1. பலர் படித்துவிட்டாலும், வேலையில்லாத் திண்டாட்டம் இன்று பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அனைவருக்கும் வேலை என்ற கலாச்சாரமும் இன்று இல்லை! அப்படி ஒரு கலாச்சாரம் உருவாக்க வேண்டும்.
  1. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுவிட்டால் அந்தக் குழந்தைகளுக்கு உணவளிக்கவும், கல்வி அளிக்கவும், மருந்து அளிக்கவும் நம்மிடம் வசதி இல்லை. எனவே ஒரு குடும்பத்தில் இரண்டிற்கும் அதிகமான குழந்தைகள் இருப்பது ஒரு நல்ல கலாச்சாரம் இல்லை.
  1. மதம், ஜாதி, மொழி, ஊர் என்ற அடிப்படையில் மனிதனை மனிதன் வெறுக்கும் நிலை அதிகரித்து வருகிறது. அது மாறி, மனிதர்கள் அனைவருக்கும் மூதாதையர்கள் ஒன்றுதான், எனவே அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற அடிப்படையில் ஒருவரையொருவர் அன்புடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ளும் கலாச்சாரம் வரவேண்டும்.
  1. ஒரு ஆண்டிற்கு ஒரு லட்சம்பேர் வாகன விபத்தில் இறந்து போகிறார்கள். கவனக் குறைவாலும், அலட்சியத்தாலும், குடிபோதையாலும் இந்த இழப்பு ஏற்படுகின்றன. இந்தக் கலாச்சாரம் மாற வேண்டும், பொறுப்புடன் வாகனம் ஓட்டும் கலாச்சாரம் மலர வேண்டும்.
  1. பல சமுதாயங்கள் அறிவியலை நாடி, பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும், மனிதாபிமான ரீதியிலும் உயர்ந்து நிற்கிறார்கள். அவர்கள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியை கொடையாக மற்ற நாட்டவர்களுக்கும் அளிக்கிறார்கள். ஆனால், நமது நாட்டில் பலரும் அறிவியலை புரிந்து கொள்ளாத ஒரு கலாச்சார நிலையில் இருக்கிறோம். 
  1. குடிப்பழக்கம் இன்று மிக மோசமான கலாச்சாரமாக உருவெடுத்து வருகிறது. குடும்பம் தெருவுக்கு வருமளவிற்கு வருமானம் அனைத்தையும் குடிப்பதற்காக செலவிடுபவர்கள் அதிகரித்து விட்டனர். இது கலாச்சார சீரழிவு. (வளர்ந்து விட்ட நாட்டவர்களும் மது அருந்துகிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை) 
  1. லஞ்சம், ஊழல் என்ற இந்த நேர்மையற்ற கலாச்சாரம் பெரியஆபத்தாக மாறி வருகிறது. இதனால் மக்களுக்கு உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 

  முடிவுரை: 

  நமது கலாச்சாரம், நமது மொழி, நமது சரித்திரம், நமது நம்பிக்கை ஆகியவை நம்மை ஒரு நாட்டவராக இணைக்கின்றன. எனவே கலாச்சாரம் நமது அடையாளம். கலாச்சாரம் குறைந்து அல்லது கலாச்சாரம் கெட்டுவிட்டது என்ற பேச்சு அடிக்கடி எழுகிறது. என்னதான் நமது கலாச்சாரம்? அதில் என்னதான் கெட்டுவிட்டது அல்லது எதுதான் சீரடைந்திருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்து அதன் பின்னர் ஒரு முடிவிற்கு நீங்கள் வரவேண்டும்.

  எது நல்ல கலாச்சாரம், எது கெட்ட கலாச்சாரம் என்று முடிவு செய்வதற்கு முன்னர், உலகில் மற்ற நாட்டு மக்களின் கலாச்சாரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு அந்த நாடுகளுக்குச் சென்று வர முடியவில்லை என்றாலும் அவற்றை நூல்களின் மூலம் கற்று தெரிந்து கொள்ள வேண்டும். சில நாட்டு மக்கள் போற்றப்படும் அளவுக்கு தூய்மையுடன் வாழ்கிறார்கள் என்பது ஒரு எடுத்துக்காட்டு.

  பல கலாச்சாரங்களில் பின்னடைவு என்றாலும் பல கெட்ட கலாச்சாரங்கள் ஒழிந்து நல்ல கலாச்சாரங்கள் தோன்றிவிட்டன. எல்லா மக்களுக்கும் எல்லா வசதிகளும் கிடைப்பதும், அனைத்து தரப்பு மக்களும் வேற்றுமைகளை மறந்து அனைவரும் மனிதர்கள் என்ற உணர்வு ஏற்படும் கலாச்சாரம் உயர்ந்த கலாச்சாரம். அன்பு, நேர்மை, தைரியம், அறிவியல், உதவி செய்தல், உணவு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்ற கலாச்சாரம் அவை. அந்தக் கலாச்சாரத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் சற்று வேகமாக பயணிக்க வேண்டும், அவ்வளவுதான்.

  இந்த இதழை மேலும்

  உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…

  பேராசிரியர். முனைவர் பொ. குழந்தைவேல்

  துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

  பண்பும் பயனும் அது

  என்ற குறட்பாவில் வள்ளுவர், ஒருவர் எதைச் செய்தாலும் அன்போடும் தர்ம நியாயம் தவறாமலும் செய்தால் அது தான் அவர்களின் இல்வாழ்க்கையின் தன்மையாகும். அதனால் உலகத்துக்கும் நல்ல பயன் உண்டாகும் என்பதே இக்குறளின் நோக்கமாகும். இக்குறளிற்கு ஏற்றார் போல் வாழ்ந்துவருபவர்.

  விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தமிழ்வழியில் கல்வி பயின்று, கிராம சூழ்நிலையில் இயற்பியல் விஞ்ஞானத்தை முடித்து, பல நாட்டு வல்லுநர்களிடம் ஆராய்ச்சிகளில் பாராட்டுப் பெற்று இன்று துணைவேந்தர் பதவியை அடைந்துள்ளவர்.

  இயற்பியல் விஞ்ஞானத்தை கல்லூரி முதல் பல்கலைக்கழகம் வரை எளிய முறையில் கற்பித்து பல ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

  எப்பொழுதுமே ரௌத்திரம் இல்லாத நவரசத்தை மட்டுமே அனைவரிடத்திலும் போதிக்கும் அன்பும் அரவணைப்பும் மிக்கவர்.

  வாழ்கையில் பெரும் எதிர்பார்ப்பற்று வாழ்வது கடினம் தான். எதிர்பாராத எதிர் பார்ப்புகள் அமைவது மிகக்கடினம். உலகம் பெரும் வித்தியாச மனப்போக்கை கொண்டது. அப்படிப்பட்ட உலகில் “பண பலத்தை விட மனபலம் தான் முக்கியம்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் இவர் தன் வாழ்வை ஏர் முனையில் ஆரம்பித்தவர்.

  நல்ல பண்பாளர், படைப்பாளர், அறிவியல் விஞ்ஞானி, வேளாண் வித்தகர், நேர்மையின் சொந்தகாரர் என்று பன்முக திறமை உடைய சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பொ. குழந்தைவேல் அவர்களின் நேர்முகம் நம்மோடு…

  கே. உங்களைப் பற்றியும் நீங்கள் கல்விப் பயின்றது பற்றியும் கூறுங்கள்?

  நாமக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டி என்னும் அழகிய குக்கிராமத்தில் திரு. பொன்மலைக்கவுண்டர் திருமதி. நல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தேன். விவசாயம் மட்டுமே அறிந்த தெரிந்த குடும்பம் எங்கள் குடும்பம். அன்றும், இன்றும், இனியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு விவசாயத்தை  நேசிக்கும் குடும்பமாகத் திகழ்ந்து வருகிறது. எனக்கும் சின்ன வயதிலிருந்தே விவசாயம் செய்வது மிகவும் பிடிக்கும். இன்றும் விடுமுறைநாட்களில் வயலுக்குச் சென்று விவசாயம் பார்த்து தான் வருகிறேன். இதற்கு நான் எப்போதும் பெருமைப்படுவதுண்டு. என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதிரிகள். என் மனைவி அமராவதி வீரபாண்டி இரத்தினசாமி அவர்களின் புதல்வி.  எங்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள், மூத்த மகன் டாக்டர். கு. பிரசாத், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகின்றார். எனது இளையமகன்   கு.கல்யாணசுந்தரம், சாப்ட்வேர் இன்ஜினீயராக கோவையில் பணிபுரிகின்றார்.

  விவசாயக் குடும்பத்தின் பின்னணி என்றாலும் என்னைப் படிக்க வைக்க வேண்டும் என்பது எனது தந்தையின் மிகப்பெரிய இலட்சியமாக இருந்தது. இதனால் அருகிலிருந்த கல்கட்டானூர் என்ற சிற்றூரிலுள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தேன். அங்கு எனக்கு திரு. சுப்பரமணியம் அவர்கள் ஆசிரியராக இருந்தார் அவர் மாணவர்களிடம் பழகும் அணுகுமுறை மிகவும் நன்றாக இருக்கும். அவர் வகுப்பில் எப்போதும் கல்வியின் சிறப்பினைப் பற்றிக் கூறுவார். இது எனக்கு மிகவும் கல்விப் பயணத்தில் உறுதுணையாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்போது என்னுடன் இருக்கும் நேர்மையும், நம்பிக்கையும் என்னுடைய தாய் தந்தையிடமிருந்தும், எனக்கு கல்வி போதித்த ஆசிரியர்களிடமிருந்து வந்தது.

  அதன் பிறகு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை பயின்றேன். அன்றைய காலக்கட்டதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது அதிகம் மதிப்பெண் எதில் வாங்குகின்றோமோ அதனை ஆசிரியரே தேர்வு செய்து நமது பாடப்பிரிவைத் தேர்வு செய்வார்கள். ஆனாலும் சிலர் தங்களின் விருப்பத்திற்கிணங்க பாடங்களை மாற்றிக் கொண்டார்கள், ஆனாலும் என்னால் இயற்பியல் துறையிலிருந்து மாற்றிக் கொள்ளவில்லை. இயற்பியல் துறையில் எனக்கு அப்பொழுதே ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் ஆசிரியர்கள் தேர்வு செய்ததையே படித்தேன்.

  கே. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பிற்குள் நுழைந்தது குறித்து சொல்லுங்கள்?

  பி.யுசி மற்றும் இளநிலைப் படிப்பை ஈரோட்டின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான சிக்கையநாயக்கர் கல்லூரியில் முடித்தேன்.  முதுகலைப் பட்டப்படிப்பை தஞ்சாவூரிலுள்ள ஏ.வி.வி.எம் புஷ்பம் கல்லூரியில் பயின்றேன்.  பள்ளியில் பழனிசாமி ஆசிரியர் அவர்கள் தான் நான்  இயற்பியல் எடுத்து படிக்க வேண்டும் என்று ஊக்கம் கொடுத்தார். எனது இந்த ஆர்வம் என் ஆசிரியர் மூலம் தான் வந்தது என்றுதான் கூற வேண்டும்.

  நான் படிக்கும் பொழுது முதுகலையில் நல்ல மதிப்பெண் பெற்றதால் தான் எனக்கு ஆராய்ச்சி செய்ய ஆர்வம் கூடியது. 1979 ல் முதுகலைப் படிப்பை முடித்த நான், 1980ல் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று எண்ணினேன் அவ்வாறு இருக்கையில் அன்னூரில் உள்ள அரசினர் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அதில் 6 மாதங்கள் மட்டுமே நிலைத்து நின்றேன். எனக்கு ஆராய்ச்சித் துறையில் ஆர்வம் இருந்ததால் நான் எம்.ஐ.டி கல்லூரியில் ஆராய்ச்சித் துறையில் சேர்ந்தேன். அதற்கு முழுக்காரணமும் என்னுடன் பணிப்புரிந்த இராமய்யா என்பவர் தான். அவர் தான் என்னைப் படிக்கும் படியும் ஆசிரியர் பணியை விடும்படியும் அறிவுறுத்தினார். பிறகு என் பணியில் இருந்து விலகி விட்டு எம்.ஐ.டி கல்லூரியில் சேர்ந்தேன்.

  இதுபற்றி வீட்டில் யாருக்கும் தெரியாது. வீட்டில் இவ்வாறு இருந்த தருணத்தில் என் வீட்டில் எனக்கு மணம் புரிய பெண் பார்த்தனர். அப்பொழுது எனக்கு 22 வயதுகளே நிரம்பி இருந்தது. அவ்வாறு இருக்கையில் நான் வேலையை விட்டதைக் கூறிவிட்டு படிப்பைத் தொடரவே திருமண வேலைகள் நின்றன.

  ஆரம்பத்தில் என்னுடைய தந்தை இதற்கு மறுப்பு தெரிவித்தார். உனக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கும் போது இப்படி வேலையை விட்டுவிட்டு படிக்கிறேன் என்று சொல்கிறாய். என்று முதலில் சொன்னார் அதன்பின் படிப்பதற்கு அனுமதி கொடுத்தார்.

  கே. வேலையை விட்ட பின்னர் அடுத்த உங்கள் திட்டம் என்னவாக இருந்தது?

  சென்னை சென்று படிக்க வேண்டும் என்று நினைத்து கையில் ஒரு பொட்டி எடுத்துக் கொண்டு சென்று விட்டேன். முதன் முதலில் ஊரை விட்டு வெளியே செல்கிறேன்.

  இதற்கு முன் ஒரு முறைசென்னைக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நானும் என் நண்பர் ஒருவரும் சென்றோம் இருவருக்கும் சென்னை புதியது. இருவருக்கும் அந்த முகவரி தெரியாது. ஆனாலும் சரியாகப் பேருந்து பிடித்து சென்று விட்டோம், ஆனால் இறங்கும் இடத்தை விட்டுவிட்டு 5 கி.மீ நடத்தே சென்றது சென்னையின் முதல் அனுபவம்.

  அவ்வாறு ஒரு மறக்க முடியாத சம்பவத்திற்கு அடுத்து சென்னை செல்கிறோம், என்று முதலில் சற்று மனதிற்குள் ஐயமாக இருந்தது.

  அதுவும் சென்னை போன்றபெரிய நகரம், அங்கு யாரும் தெரியாது, எங்கு தங்குவதும் என்றும் தெரியாது இப்படிப்பட்ட சூழலில் சென்றேன்.

  ஒரு கிரமாத்துக்காரன் எப்படி இருப்பாரோ அப்படி நானும் வேட்டி சட்டை கையில் ஒரு பெட்டி, கண்ணில் ஒரு தேடுதல் என்று அங்கும் இங்கும் தேடிக்கொண்டு இருந்தேன். அதன் பிறகு நெறியாளர் உதவியுடன் அங்கு விடுதியில் தங்குவதற்கு அனுமதி கிடைத்தது.

  சில ஆண்டுகளுக்கு பின்னர் நான் பேராசிரியர்  பொன்னுசாமி என்பவர்  உதவியால் திருச்சியில் பல்கலைக்கழகத்தில் இணைந்தேன். பல இடர்பாடுகளுக்கு இடையில் அங்கு இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். 4 வருட ஆராய்ச்சிக்கு பல விதங்களில் என்னுடைய ஆசிரியர் நடராஜன் அவர்கள் உதவியாக இருந்தார். அடுத்து இயற்பியல் துறைப் பேராசிரியர் இலட்சுமணன் அவர்களின் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

  கே. எம்.ஐ. டி யில் முனைவர் பட்டம் பயின்ற அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

  வேலையை விட்டு படிப்பதற்கு வந்தவுடன் ISRO நிறுவனத்திடமிருந்து அப்போது ஒரு புராஜெக்ட் வந்தது.     அதில் நானும் இன்னும் இரண்டு பேர் என்னுடன் புராஜெக்ட்டில் இணைந்தார்கள். அதில் என்னுடன் இருந்தவர் நேஷனல் கல்லூரியில் படித்தவர். மீதி இருந்தவர் அங்கேயே படித்தவர்கள்.

  அப்போது தான் இந்த நிறுவனம் தனியாரிடமிருந்து அரசாங்கத்திற்கு செல்லும் நேரம். அப்போது இந்நிறுவனத்தை வாங்க நிறைய முதன்மையான நிறுவனங்கள் போட்டிப் போட்டு வாங்க முனைந்தன. ஆனால் மீண்டும் அரசாங்கமே வாங்கிக் கொண்டது.

  ஆனால் இப்படிப்பை பி. டெக் என்று மாற்றமுனைந்தார்கள், ஆனால் சிலர் இது டிப்ளமோ என்றபெயரிலேயே இருக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

  இந்த புராஜெக்ட்டில்  எங்களை நன்றாக இணைத்து கொண்டு செய்தோம். நான் எப்போதும் நினைப்பது என்னவென்றால் எதையும் சரியாகவும் துல்லியமாகவும் செய்ய வேண்டும் அப்போதுதான் தன்னை தகுதியானவராக நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்பதால் தான்.

  மிகவும் தரமான படிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கல்வி நிறுவனம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பார்கள்.  என்னுடன் முனைவர் பட்டம் பயில வந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே சென்றார்கள். அதன் பிறகு நானும் படிப்பை முடிக்காமல் வீட்டிற்கு வந்து விட்டேன்.

  கே. அப்போதைய அறிவியல் ஆய்வு முறைக்கும், தற்போது இருக்கும் ஆய்வு முறைக்கும் உள்ளவேறுபாடாக நீங்கள் பார்ப்பது?

  தற்போது உலகம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அறிவியல் துறையின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் செல்கிறது. அறிவியல் துறைஒரு கடல் போன்றது, அதில் முழ்கிப் பார்த்தால் பல அதிசியங்கள் புதைந்து இருக்கும். அதை யார் முதலில் தேடி கண்டுபிடிக்கிறார்களோ அவர்களே வரலாற்றில் அதிகம் இடம் பிடிப்பார்கள்.

  அப்போதும் இப்போதும் தொடர்ந்து புதிய புதிய கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

  பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு டாக்டர் கமிட்டி முறையை நான் தான் கொண்டு வந்தேன்.

  இதன் மூலம் ஆராய்ச்சியின் மகத்துவத்தை ஆய்வாளர்கள் முறையாக பின்பற்றுவார்கள். எதையும் எழுவது அல்ல ஆய்வு, ஒரு பக்கம் எழுதினாலும் ஆய்வு அறிவியல் முறைபடி எழுத வேண்டும்.

  இது பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

  கே. உங்கள் ஆசிரியர் பயணத்தில் பணியாற்றிய பிற பொறுப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?

  என்னுடைய ஆசிரியர் பயணத்தில் பல பொறுப்புகளை அடைந்திருக்கிறேன். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்  ஆராய்ச்சி டீன், பதிவாளராகவும், பிளானிங் அண்ட் டெவலப்மெண்ட்டில் பொறுப்பாளராகவும், இப்படி நிறைய பொறுப்புகளை பணியாற்றியுள்ளேன்.

  ஒவ்வொரு பணியிலும் தலைசிறந்த அம்சங்களைக் கொண்டு வந்தேன். என்றேசொல்லலாம். நம்மிடம் ஒரு பொறுப்பு வரும் பொழுது அது கொண்டு எனனென்ன நலத்திட்டங்கள் கொண்டு வரமுடியுமோ அனைத்தையும் கொண்டு வரமுயன்றேன்.

  கே. அறிவியல் துறையில் உங்கள் வாழ்வில் ஏதேனும் வெற்றிடம் விட்டதாக நினைக்கிறீர்களா?

  நிச்சயம் என் வாழ்வில் அப்படி எதுவும் விட்டதாக எனக்குத் தெரியவில்லை. நானும் முதல் நாள் கல்லூரிக்குள் நுழையும் போது என்ன நினைத்தேனோ, அதை இன்று வரை கடைபிடித்து வருகிறேன்.

  ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு புதுமைகளை செய்தல் வேண்டும் என்று நினைப்பேன். அப்படி நான் பேராசிரியராகப் பணியில் ஓய்வு பெற்றாலும் கூட என்னால் முடிந்த அளவுக்கு பணியைச் சிறப்பாகச் செய்துள்ளேன் என்ற மன நிறைவோடு இருக்கிறேன்.

  நான் வருடத்திற்கு ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன். அவர்களுக்கு முதலில் ஆய்வு குறித்தான அடிப்படை தகவல்களை மட்டுமே முதலில் போதிப்பேன்.

  இப்படி ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் அனைத்து பணிகளையும் சரியாகவும் நேர்மையாகவும் செய்தேன் என்பதை இங்கு என்னால் சொல்ல முடியும்.

  கே. தாங்கள் ஆசிரியர் பணியில் இணைந்ததைப் பற்றிக் கூறுங்கள்?

  எனது முதல் ஆசிரியர் பணி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்காலிகப் பணியாளராகச் சேர்ந்தேன். டிசம்பர் மாதம் 1984ல் ஆசிரியராகப் பணியில் முதன் முதலில் அமர்த்தப்பட்டேன். ஊட்டியில் பணியில் சேர்ந்த நான் 3 மாதங்களில் இடமாற்றுதல் கேட்டு விண்ணபித்து சிவகங்கையில் சேர்ந்தேன். மீண்டும் மீண்டும் மாற்றுதல் பெற்று தர்மபுரி, திண்டிவனம் என்று மாறிய பின் இறுதியில் ஊட்டிக்கே மாற்றமானேன். 1986 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து ஊட்டியில் ஒரு பெரிய வீட்டில் வாடகையில் தங்கினோம்.

  குறைந்த சம்பளத்துடன் வாடகை வீட்டில் நானும் என் மனைவியும் தங்கினோம். என் மனைவி பேறு காலமாய் அவரது இல்லம் செல்ல நான் விடுதியில் தங்கி பணிபுரிந்தேன். இந்த  நான்கு ஆண்டு கால இடைவெளியில் எனது இரண்டு ஆராய்ச்சிகளை வெளியிட்டேன். அதற்குமேல் எந்த ஒரு முன்னேற்றமும் எனது ஆராய்ச்சியில் இடம் பெறவில்லை. இதன் நடுவே கிருஷ்ணகிரியில் உள்ள அரசுக்கல்லூரியில் பணியில் சேர்ந்தேன்.  இவ்வாறு இருக்கையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராய் பணியில் இணையும் பொழுது நான் ஆசிரியரின் மாற்றம் பெரும் பயணம் இத்தோடு நிற்குமென நான் அறியவில்லை.

  40 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி தூய நெஞ்சத்துடன் ஆசிரியர் பணிக்குள் நுழைந்தேனோ, அந்த மன நிலையில் தான் இன்று வரை இருக்கிறேன் என்பதே நிதர்சனம்.

  கே. இயற்பியல் துறையில் தாங்கள் செய்த சாதனைகள் பற்றிக்  கூறுங்கள்?

  நான் எப்போதும் ஒரு சாதனையாளராய் என்னை அடையாளப்படுத்திக்  கொள்ள விரும்பவில்லை, எனது பணியை நான் சரிவர செய்தேன் என்று தான் சொல்ல வேண்டும். நான் பயிற்சி வகுப்புகளைவிட பாடம் எடுப்பதில் கைத்தேர்ந்தவன். 1988ல் ஆரம்பித்த எனது பணி 28 வருடங்களாக அங்கேயே தொடர்ந்தது. இயற்பியல் துறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று நான் வெகுவாக முயன்றேன். அதற்கு என்னுடன் பணிபுரிந்த அனைத்து ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தார்கள். நான் செல்வது வெறும் பாதையில் செல்லும் சாதாரண பயணமாக இல்லாமல் சரித்திரப் பயணமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன் இதனால் ஒரு வருடத்திற்கு ஒரு மாணவனை மட்டுமே எனது ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுத்தினேன். எனது ஆராய்ச்சி கட்டுரைகளை அற்புதமாக வெளியிட்டோம். இதுவரை நாங்கள் 175 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம். இதற்கு என்னுடன் பணியாற்றி ஆராய்ச்சி மாணவர்கள் தான் காரணம். இன்னும் அவர்களுடன் சேர்ந்தே பயணிக்கிறேன்.

  நான் பல வெளிநாட்டில் தங்கி பல விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். அதில் மிகவும் உயர்ந்த Fulbright(USA), JSPS(Japan) Royal society (UK) Germany  போன்ற நாடுகளில் ஆராய்ச்சி நிதி உதவி பெற்று ஆய்வுகள் செய்தது, மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன்.

  Molecular Structure, Interactions, molecular dynamics போன்ற பல பாடப்பிரிவுகளை ஆராய்ச்சி செய்தேன். நான் இயற்பியல் துறையின் துறைத்தலைவராக 9 வருடங்கள் பணிபுரிந்தேன். பல ஆசிரியர்கள் எனக்கு நல்முறையில் உதவினர். நான் செய்யும் மாற்றங்களுக்கு எனக்கு  உறுதுணையாய் நின்றனர் என்று சொன்னால் அது மிகையல்ல.

  கே. கல்வி ஆராய்ச்சி தலைவராக தாங்கள் கல்லூரிக்கு ஆற்றிய பணிகள் பற்றிக் கூறுங்கள்?

  நான் ஆராய்ச்சி முதன்மையாளராக 3 வருடங்கள் பணி புரிந்தேன். அந்த நாட்களில் நான் ஆராய்ச்சி துறையில் பல மாற்றங்களையும், பல கட்டுபாடுகளைக் கொண்டு வந்தேன்.

  பெரிய கல்வி நிறுவனங்களில் 20% மட்டுமே பயிலும் மாணவர்களுக்கு 80% பண உதவியும், நமது பல்கலைக்கழகம் போன்றவற்றில் 80% மாணவர்களுக்கு 20% பண உதவியும் வழங்குவது என் மனதில் நீண்ட நாள் நெருடலாகவே இருந்து வந்தது. இன்னும் விடை கிடைத்தபாடில்லை. எங்களது ஆராய்ச்சி வேகம் தடை பட  ஒரே காரணம் கணினியின் வேகக்குறைவு மட்டும் தான். இதனால் கணினியின் தட்டுபாட்டை தடுக்க புதுவித கணினி மையத்தை அமைக்க எண்ணினேன். பல முன்னேற்ற படிகளுக்கு பிறகு தான் கணினி மையம் அமைத்தேன்.

  திறன்மிகு ஆராய்ச்சிகளை வாங்க பெரும் நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் பணத்தொகை புதிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு உதவியாக இருக்கும். மாணவர்களுக்கு படிக்கும் காலத்தில் உதவித்தொகை வழங்க பெரும் உதவியாக இருக்கும். இது போன்ற ஆராய்ச்சி திட்டங்களை கொண்டு வர எனது முழு முயற்சியையும் செலவிடுவேன்.

  கே. பெரியார் பல்கலைகழகம் துணைவேந்தராக தாங்கள் தேர்வு செய்யப்பட்டது எவ்வாறு?

  பெரியார் பல்கலைகழகத்தில் நான் துணை வேந்தராக பல கட்ட தேர்வுக்கு பிறகு தான் அமர்ந்தேன். அதிக எண்ணிக்கையில் இந்தப் பதவியில் அமர விண்ணப்பித்தனர். நேர்மைக்கும், தன்னலமற்றபணிக்கும் தான் எனக்கு இந்தப் பணி கிடைத்துள்ளது. இறுதியில் ஆளுநரிடம் நேரடித் தேர்வுக்கு பிறகு முறையான தீர்வு கிடைத்தது.

  எங்களது பல்கலைகழகத்திற்கு கீழ் இயங்கும் தன்னாட்சி கல்லூரிகள் கேட்கும் விதங்களில் அவர்களுக்கு நான் உதவத் தயாராக இருகின்றேன். புதுமுறையான கட்டமைப்புகளை நிறுவவும், அவர்களது பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவும், வீடியோ காட்சி கருத்தரங்கங்கள் நடைபெறவும், புதுவிதமான பயிற்சி வகுப்புகளைத் தொடரவும் நான் உதவத் தயாராக இருகின்றேன்.

  பல்கலைகழக்கதில் அறிவியல் பூங்கா ஒன்றை நிறுவி மாணக்கர்களுக்கு வித்தியாசமான அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிவதற்கு உதவியாக இருக்கும் படி அறிவியல் பூங்கா ஒன்றை அமைக்க இருகின்றோம்.

  கே. வளரும் தலைமுறையினருக்கு தாங்கள் கூறும் கருத்து என்ன?

  ஒரு பாடப்பிரிவில் கால் ஊன்றி நிலைத்து நின்று புது புது கண்டு பிடிப்புகளை உருவாக்க வேண்டும். இன்றைய தலைமுறையினரின் பல விதங்களில் ஏறுமுகம் உண்டு என்ற போதும் பல விதங்களில் இறங்கு முகமும் உண்டு. அவர்களுக்கு விடாமுயற்சியாய் பணி செய்யும் வழக்கமற்று, வேலைகளை எளிதில் முடிக்கவே முயல்கின்றனர். இதுவே அவர்களிடம் உள்ள பெரும் பின்னடைவாக உள்ளது.

  இன்று 100% மாணவர்களில் 80% மாணவர்கள் எளிதாகப் பணியை முடிக்கவே எண்ணுகின்றனர். அதில் 10 முதல் 20% மாணவர்கள் மட்டுமே விடாமுயற்சியை கைக்கொண்டுள்ளனர். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மட்டுமே இளம் தலைமுறையினரை படிக்க வைத்து முன்னேற்ற துடிகின்றனர். மாணவர்களும் படித்து, சாதனைகளை புரிய வேண்டும்.

  கே. தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறவிரும்புவது?

  உண்மையாய் இருங்கள். எந்த நிலை வந்தாலும் உண்மைக்கு சற்றும் புறம்பாக நடந்து கொள்ளாதீர்கள்.

  நீங்கள் மற்றவர்களை விட முன் மாதிரியாக திகழ வேண்டுமா? மற்றவர்கள் தூங்கும் நேரத்தில் நீங்கள் விழித்திருக்க வேண்டும். அவ்வாறு விழித்திருப்பின் உங்களுக்கென்று வரலாற்று பக்கத்தில் ஒரு பக்கம் நிச்சயம் காத்திருக்கும்.

  இந்தப் புத்தகத்தின் தலைப்பை போன்று தன்னம்பிக்கை என்ற ஒன்று எப்பொழுதும் உங்களோடு உறவாடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

  அவ்வாறு இருப்பின் நீங்களும் சாதிக்கலாம், சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம்.

  இந்த இதழை மேலும்

  உள்ளத்தோடு உள்ளம்

  ஒரு கிராமம், அங்கு ஒரு பணக்கார விவசாயிக்கு பல ஏக்கர் நிலம் இருந்தது. வங்கி கணக்கிலோ ஏராளமான பணமும் நகையும் இருந்தது. தனது கடுமையான உழைப்பாலும், உறுதியான உள்ளத்தாலும் அவர் தனது வாழ்நாளில் ஏராளமான செல்வத்தை ஈட்டினார்.

  அந்த ஊரில் பலரின் முன் மாதிரியாக விளங்கக்கூடியவர். பலர் இவரைப் போல முயன்றும் வெற்றி பெற முடியவில்லை.

  இவரைப் பற்றி அறிந்த ஒரு பத்திரிக்கையாளர் நேர்காணலுக்காக செல்கிறார். ஐயா உங்களுடைய பேருக்கும், புகழுக்கும் காரணமான அந்த ரகசியத்தை அறிய விரும்புகிறோம். அதற்கு முன்பு நீங்கள் எப்படி இந்த அளவுக்கு பெரும் பணம் சம்பாதித்தீர்கள் என்று எங்கள் வாசகர்களுக்குச் சொல்ல முடியுமா? என்று கேட்டார்.

  ஆர்வம் ததும்பிய அந்த பத்திரிக்கையாளர் அவரின் பதிலுக்காக காத்திருந்தார். அந்த விவசாயி தம்பி உண்மையிலேயே இது ஒரு பெரிய கதை, கதை சொல்வதற்கு முன் தேவையில்லாமல் எரிந்து கொண்டிருக்கும் அந்த மின்சார விளக்கை அணைத்து விடலாம். அதன் மூலம் ஓரளவுக்கு மின்சாரத்தை சேமிக்கலாமே என்று விவசாயி கனிவுடன் சொன்னார்.

  தங்கள் முயற்சியாலும், கடுமையான உழைப்பாலும் செல்வம் ஈட்டும் ஒவ்வொருவருமே தாங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயின் மதிப்பையும் நன்கு அறிந்தவர்கள். அவர்கள் தான் ஒவ்வொரு ரூபாயும் சேமிக்கிறார்கள்.

  தங்கள் சேமிப்பில் இவர்கள் மிகுந்து அக்கரை கொண்டு, எதற்கும் வீணாக செலவழிக்காமல் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். அது போல தான் நானும் இருக்கிறேன்.

  நான் சம்பாதித்து அதன் மூலம் வரும் வருமானத்தை மீண்டும் அதே தொழிலில் முதலீடு செய்கிறேன். இது தான் என்னுடைய வருமான உயர்வுக்கு காரணமாக இருக்கிறது.

  நம்மில் சிலர் இதைத் தான் கடைபிடிக்க தவறுகிறோம்… ஒரு தொழிலில் வருமானம் வந்து விட்டால் அந்தப் பணத்தைக் கொண்டு அடுத்த தொழில் செய்ய முயல்கிறோம். ஒரு தொழிலில் நல் ஆளுமையும், அனுபவமும் இருந்தால் அதே தொழிலில் அடுத்த அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும்.

  இதை சரியாக பின்பற்றினாலே எந்தத் தொழில் செய்தாலும் அதில் ஒரு சாதனையாளராக வர முடியும்…