Home » Articles » மூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் !!

 
மூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் !!


பார்த்தசாரதி ச
Author:

“ஸார், டைம் மேனேஜ்மென்ட் டெக்னிக் எல்லாம் நம்ம நாட்டுல யூஸ் ஆகாது. இங்க எல்லாரும் அலங்காரத்துக்குத்தான் வாட்ச் கட்டி இருக்கான். “

நேரே மேலாண்மை பற்றி நாம் யாரிடமாவது பேசினால் இப்படித்தான் பதில் சொல்வார்கள். மேலே ஏதாவது நாம் சொன்னால், ” ஸார், ஜப்பான்ல ஒரு தடவ என்ன ஆச்சு தெரியுமா ? ஒரு ட்ரெயின் மூணு மணி நேரம் லேட்டா வந்துது. அதாவது ஒரு பாஸன்ஜர் ட்ரெயின் எடுத்துகுற நேரம் ஆயிடுச்சி.  ரயில்வே டிபார்ட்மன்ட் என்ன செஞ்சாங்க தெரியுமா ? எக்ஸ்ப்ரஸ் ட்ரெயினுக்கு வாங்கின கூடுதல் காசை திரும்ப கொடுத்துட்டாங்க. அது நாடு ஸார்.” என்று உதாரணம் காட்டுவார்கள்.

இந்த மனோபாவத்தில் பெரிதான தவறு ஏதும் இல்லை. இவர், உங்களையும் என்னையும் போல் ஏதாவது ஒரு தரமான “நேர மேலாண்மைப்” புத்தகத்தைப் படித்திருப்பார். அதில் சிபாரிசு செய்யப்பட்ட ஒரு சில நல்ல யுக்திகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி இருப்பார். கொஞ்ச நாட்களில் அவை வலுவிழந்து போயிருக்கும். மேலும் இரண்டொரு முறை முயன்றிருப்பார். அப்பொழுதும் தோல்வியே கிட்டியிருக்கும். அதன் பிறகு நேர மேலாண்மை என்பதே நம் நாட்டுக்கு உகந்தது அல்ல என்ற முடிவிற்கு வந்திருப்பார்.

பெரும்பாலான மக்கள் இப்படிப்பட்ட எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். ஆனாலும் மேலும் ஒரு முறை முயற்சி செய்வோமே ! அதற்கு முன், ஒரு சில காட்சிகளைப் பார்ப்போம்.

ஒரு தம்பதியருக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை ஒன்று இருக்கிறது. ஒரு உதாரணம்தான்.  இருவருமே அலுவலகத்தில் பணி புரிபவர்கள். எல்லாக் காலைப் பொழுதுமே உஷ்ல்ழ்ங்ள்ள்ர் இர்ச்ச்ங்ங் இயந்திரம் போல் சத்தமும் நீராவியுமாக … ஒரே பதட்டம்தான். பல நாட்கள், அந்தக் குழந்தையின் தாய் இட்டிலித் துண்டை அதன் வாயில் திணித்தபடியேதான் பள்ளிகூட வாகனத்தில் ஏற்றுவார்.

இந்தக் குழந்தைக்கு “பதட்டம்” என்பது இயல்பான நிகழ்வு போலதான் கவனத்தில் பதியும். அதுவே மீண்டும் மீண்டும் நடக்கும் பொழுது அது ஒரு பலமான பதிவாகப் பொறிக்கப்படும். பின்னாளில் இதுவே ஒரு “படிமம்” என்பதாகவும் ஆகலாம். இதுதான் ஒரு மனதில் உருவாகும் “முதல் முடிச்சு”

அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி ‘ 2 படிப்பதாக வைத்துக் கொள்வோம். ஏதோ ஒரு தேர்வு நாள். தந்தை மகனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்.  வழியில் அவர்களது இரண்டு சக்கர வாகனம் “பங்க்சர்” ஆகி விடுகிறது. “இன்னமும் சீக்கிரம் நீ கிளம்பி இருக்க வேண்டும்” என்று தந்தை மகனை மிகவும் கடிந்து கொள்கிறார். பரிட்க்ஷை பயத்தோடு இந்தக் கடுஞ்சொல்லும் சேர்ந்து கொள்கிறது. உள்ளே ஒரு ஊமைக் காயம் உண்டாகிறது. இரண்டாம் முடிச்சு !

காட்சி மாற்றம். அந்த மாணவன் பட்டதாரி ஆகி வெளியூரில்  ஒரு வேலையிலும் சேர்ந்து விடுகிறான்… ம் .. இல்லை இல்லை சேர்ந்து “விடுகிறார்” !!. வீட்டிலிருந்து விடுதலை.  பிறகென்ன … விரும்பிய நேரம் தூக்கம். நினைத்த நேரத்தில் விழிப்பு. கட்டுப்பாடு கொஞ்சமும் இல்லாத வாழ்க்கை !!

சில வருடங்கள் செல்கின்றன. இவர் பல இடங்களுக்குக்   கால தாமதமாகச் சென்றதால் சில கசப்பான அனுபவங்கள் நிகழ்கின்றன. நல்ல வாய்ப்புகள் பலவற்றை இழக்கிறார். இவரது அலட்சிய மனோபாவத்தால் ஒரு முறை பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. தான் நேரத்தைச் சரியாக நிர்வகிக்கவில்லை. அதனால்தான் இது போன்ற தோல்விகள்  என்று நினைக்கிறார். அந்தக் குறையைச் சரி செய்ய வேண்டும் ஏதாவது செய்தே ஆக வேண்டும் எனத் தீர்மானிக்கிறார்.

ஒரு நாள் எதேச்சையாக, நேர மேலாண்மை பற்றிய ஒரு புத்தகம் அவர் கண்ணில் படுகிறது. அதை வாங்குகிறார். ஆர்வத்தோடு படிக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில யுக்திகளைப் பயன்படுத்தத் தொடங்குகிறார். தோல்வி அடைகிறார். மீண்டும் முயற்சி. மீண்டும் தோல்வி. மீண்டும் ஒரு முயற்சி. ஆனால் அதே முடிவு. பிறகு, அந்தப் புத்தகத்தை அலமாரியின் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு, அதைப் பற்றி  மறந்தே போகிறார்.

யார் இவர் என்று கேட்கிறீர்களா ?  இவரைத்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் சந்தித்தோம். ஜப்பானை உதாரணம் காட்டியதும் இவரேதான். இதன் காரணம் என்ன ? அவர் பயன்படுத்திய யுக்திகள் குறையுள்ளவையா ? அல்லது இந்தியாவில் நேர மேலாண்மை என்பதே செல்லுபடியாகாதா ?

ஒரு பிரச்சனையைத் தீர்க்க தவறான யுக்திகளைப் பயன்படுத்தினால் தோல்விதான் கிட்டும். அது போலவே, ஒருவருக்குப் பொருந்தும் ஒரு யுக்தி இன்னொருவருக்கு எந்தப் பயனையும் அளிக்காமலும் போகலாம். ஆனால், இவை தவிர வேறு ஒரு காரணமும் இருக்கலாம். அது என்ன ?

இவரது வாழ்க்கையைக் கொஞ்சம் அலசுவோம். குழந்தைப் பருவத்தில் எந்த விதமான புரிதலும் இல்லாமல் “பதட்டம்” என்பது முதல் முடிச்சாக விழுந்தது. காரியங்களைச் செய்ய அதுவே சரியான முறை என்ற பதிவும் உண்டாகி உள்ளது.

மாணவப் பருவத்தில், அந்த பரிட்க்ஷை நாளன்று … தந்தையின் சாடல்… அந்த நிகழ்வு ஒரு சாதாரண நாளில் ஏற்பட்டிருந்தால் பெரிய விஷயமாக இருந்திருக்காது. வண்டி பழுதடைந்ததில் மகனின் தவறு ஏதும் இல்லை. சொல்லப் போனால் தந்தையின் தவறும் கூட ஏதும் இல்லை. ஆனால், தேர்வு பயம் என்னும் உணர்ச்சி உச்சத்தில் இருந்த அந்த நாளில் தந்தையின் திட்டு மகனைப் பாதித்திருக்கிறது. உணர்ச்சியின் ஆக்ரமிப்பில் உள்ள மனமானது பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் போன்றது. சாடல் போன்ற சம்மட்டி அடியில் அவலட்சண உருவகங்களாக வார்ப்படம் ஆகும். அதுவே இங்கு விழுந்த    இரண்டாம் முடிச்சு !

வேலை கிடைத்த பின், கட்டுப்பாடற்ற சுதந்திரம், எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தி இருக்கும். “காஞ்ச மாடு கம்பங் காட்டில் புகுதாற் போல்” சிந்தனை கட்டுப்பாடற்று ஓடியிருக்கும். விளைவு … குழப்பமான நடவடிக்கைகள்.   அதனால் நேர நிர்வாகம் என்னும் குணம் மேலும் சிடுக்காகி இருக்கும்.

இந்தத் தருணத்தில்தான் இவர் ஒரு நேர மேலாண்மைப்  புத்தகத்தை வாங்குகிறார். அதில் படித்த விஷயத்தைப் பிரயோகம் செய்கிறார். என்ன நடக்கும் ?

உதாரணமாக, மறுநாள் முதல், காலை நான்கு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று அவர் தீர்மானிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கடிகாரத்தில் நாலு மணிக்கு ஒலி எழுப்ப அலாரத்தைப் பொருத்தி விட்டு தூங்கப் போவார்.

கொண்டைச் சேவல் போல் கடிகாரம், தன் கடமையை வினாடி பிசகாமல் செய்யும். ஆனால், அலாரம் அடித்தவுடன், அவர் விழித்துக் கொள்ளும் முன்பே அவரது ஆழ் மனம் விழித்துக் கொள்ளும். அது தனது குரங்கு புத்தியைக் காட்டும்.

மாணவப் பருவத்தில் அவருக்கு தந்தையோடு ஏற்பட்ட கசப்பை அந்த நொடியில் வெளியே துப்பும். உடனே, புதிய பழக்கத்திற்கு எதிரான ஒரு உணர்ச்சி பீறிட்டுக் கொண்டு பாயும். அவர் என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள் ?

நீங்கள் அனுமானித்தது சரியே ! கடிகாரத்தின் தலையில் ஓங்கி ஒரு தட்டு தட்டி விட்டு மீண்டும் தூங்கப் போய் விடுவார். அவரோடு அவரது ஆழ்மனமும் தூங்கப் போய்விடும். அதன் பின் “4 மணி” என்ற யுக்திக்குச் சங்கு ஊதப்படும் !!

இப்படித்தான் ஒரு நல்ல வழிமுறையைப் பிரயோகம் செய்ய அவர் முனையும் பொழுதெல்லாம் இந்த மூன்று முடிச்சுகள் தனியாகவோ அல்லது கூட்டணி முறையிலோ கைகோர்த்துக் கொண்டு அவர் சிந்தனையைப் பலமிழக்கச் செய்யும். புதிய நல்ல பழக்க வழக்கங்கள் உருவாகாமல் “காவல் காக்கும் !”

இதை எப்படிச் சரி செய்யலாம் ? விடையும் வழியும் மிக  மிகச் சுலபம். ஒரு நோட்டுப் புத்தகமும் சில மணி நேரத் தனிமையுமே போதுமானது.

தனியாக அமர்ந்து கொண்டு “நேரம் மற்றும் அதன் நிர்வாகம்” சம்பந்தமான உங்கள் கடந்தகால முக்கியப் பதிவுகளை எல்லாம் அந்த நோட்டுப் புத்தகத்தில் குறியுங்கள். எந்த ஒரு நிகழ்வானாலும் சரி. எழுதுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதுங்கள். அது சம்பந்தமான உங்கள் உணர்வுகளையும் அதன் பக்கத்திலேயே எழுதுங்கள்.

சிறு வயது, மாணவப் பருவம், வளர்ந்த பருவம் என்று எல்லா வகை நிகழ்வுகளையும் மீண்டும் மீண்டும் படியுங்கள். மொத்தத்தில் ஒரு டஅபபஉதச ( ஒரு தினுசு அமைவு) கிடைக்கும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தியுங்கள். ஒரு தெளிவு பிறக்கும்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள் அல்லது ஆச்சரியங்கள் உங்களுக்குத் தெரிய வரலாம் !

  • நிகழ்வுகள் சாதாரணமானவையாகவும் ஆனால் அவை உண்டாகிய தாக்கம் அதிகமானதாகவும் இருக்கும்.
  • யார் மீதோ உள்ள கோபம், நேரம் என்னும் ஒரு விஷயத்தின் மீது விழுந்திருக்கும்.
  • ஒருவர் நம் மீது செலுத்தும் அதிகாரத்தை மறைமுகமாக எதிர்க்க “நேர விரயத்தை” ஒரு சாதனமாக நாம் பயன்படுத்தி இருப்போம்.

இப்படி பல விஷயங்கள் மற்றும் முரண்கள் நமக்குத் தெரியவரும். கொஞ்சம் சிந்தித்தால், இவை ஒரு கடந்தகாலச் சுமைகள் என்பதைப் புரிந்து கொள்வோம். கொஞ்சம் நம் மனதோடு இணக்கமாகப் பேசினால், இது போன்ற பழைய கசடுகள் மெல்ல மெல்ல நீங்கும். மூன்று முடிச்சுகளும் மெல்ல மெல்ல அவிழும். சிடுக்கு விலகும். மனத்திரை “பளிச்” என்று பிரகாசமாகும்.

இப்பொழுது, காலையில் நம்மை எழுப்புவதற்குக் கடிகாரத்தில் அலாரம் பொருத்திப் பாருங்கள். அதன் ஒலி, உங்கள் காதுகளுக்கு “வெற்றி மணி” போல் இனிமையாகக் கேட்கும்.

நீங்கள் ஒரு புதிய மனிதராக வலம் வருவீர்கள் !!

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment