Home » Articles » கானக சங்கமம்

 
கானக சங்கமம்


சிதம்பரம் ரவிச்சந்திரன்
Author:

நாம் பிறந்த வீடு தான் காடுகள். ஆதி மனிதர்களாகிய நம் மூதாதையர்கள் பரிணாம மாற்றங்களுக்கு பின் மனித உருவெடுத்து மனித பிறவியாக தோன்றி வாழ்ந்ததும், வளர்ந்ததும், மடிந்ததும் எல்லாம் ஆதிகாலத்தில் கானகங்களில்தான் நடந்தது. சிறிது சிறிதாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்ட மனிதன் தான் அதுவரை வாழ்ந்து வந்த குகைகளையும், மரப்பொந்துகளையும் விட்டு வெளியே வந்த பிறகுதான் அவனுக்கு சூரியனுடைய கண்களை கூச வைக்கும் பிரகாசத்தையும், மனதுக்கு குளிர்ச்சியை ஊட்டுகிற நிலவின் ஒளியையும் ரசிக்கவும், அனுபவிக்கவும் முடிந்தது. இயற்கையன்னையின் படைப்பில் காடுகள்தான் உயிரின சங்கிலியில் பல்லுயிர்களின் தாயகமாக விளங்கி வந்தது. நாகரீகம் வளர வளர மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக தன் வாழ்க்கைமுறைகளையும், வசிப்பிடம், உணவுப்பழக்கங்களையும் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டான். ஆனாலும் இன்னமும் உலகில் பல்வேறு பாகங்களில் ஆதிவாசிகள் எனப்படும் பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரியமான கலாச்சாரத்தையும், வாழ்கைமுறைகளையும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் காத்து வருகின்றனர். உலகில் பல நாடுகளில் இந்தியா உட்பட காட்டுக்குள் வாழ்ந்த மனிதர்கள் காடுகளை விட்டு வெளியே வராமல் தங்கள் வாழ்வை மொத்தத்தையும் காட்டுக்குள்ளேயே முடித்துக்கொள்ளும் பண்புடையவர்களாகவும் இருந்து வருகிறார்கள். நீலகிரி மலைகளில் கூட சில இன பழங்குடி மக்கள் காடுகளை விட்டு இப்போதும் கூட வெளியே வராமல் வெளியுலக தொடர்புகள் எதுவுமே இல்லாமல் பிறந்து, வளர்ந்து தங்கள் தாய்வீடாக காடுகளையே கருதி அங்கேயே மடிந்தும் போகிறார்கள். சில இன மக்கள் நாகரீகம் ஆயிரம் மாறியிருந்தாலும் தங்கள் பழக்கவழக்கங்களையும். பண்பாட்டையும் விட்டுக்கொடுக்காமல் வெளியுலகத்தோடு தொடர்புடையவர்களாகவே வாழ்கிறார்கள். இத்தகைய மக்கள் காடுகளுக்குள்ளும், காடுகளை சுற்றிலும் இருக்கும் பகுதிகளிலும் வசித்துவருகிறார்கள்.

‘தெய்வத்தின் சொந்தமான நாடு’ என்று பெருமையுடன் திகழும் கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில்தான் இந்த திருவிழா நடந்தது. கேரள வனத்துறையுடன் ஆதரவுடன் கேரளா உட்பட இந்தியாவின் பல்வேறு பாகங்களில் இருந்து 18 மாநிலங்களை சேர்ந்த காட்டின் மைந்தர்கள் இந்த விழாவில் பங்கு கொண்டார்கள். 4000 காட்டின் குழந்தைகள் ஒன்று கூடி ஒரே இடத்தில் இது போல ஒரு திருவிழா கொண்டாட்டத்தில் பங்கு பெறுவது இதுவே இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாகும். பங்கு கொண்ட பழங்குடி மக்களும், பார்க்க வந்திருந்தவர்களான நாட்டுப்புறத்தவர்களுக்கும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த திருவிழா திகழ்ந்தது. கடந்த 2015 ஏப்ரல் 17 முதல் 22 வரை திருவனந்தபுரத்தில் கோலாகலம் பூண்டிருந்த ஆதிவாசி மக்களின் கலைவடிவங்களும், அவர்கள் பகிர்ந்து கொண்ட பாரம்பரிய அறிவுசார்ந்த விஷயங்களும், அளித்த சுவை மிக்க உணவுவகைகளும், காடு அவர்களுக்கு கற்றுக் கொடுத்த பழமையான வனசிகிச்சை முறைகளும் எல்லா நகரவாசிகளுக்கு ஒரு அதிசய காட்சியாக விளங்கியது. இருளர் நடனம், பாலிக நடனம், மங்களம் களி, சார்த்து பாட்டு, கோத்ர மொழி எனப்படும் ஆதிவாசிகள் மொழிகள், தமிழ்நாட்டின் கலை வடிவங்களான கரகாட்டம், பொய்கால் ஆட்டம், கர்நாடகாவின் தொல்லு புலிக நடனம், ஆந்திராவின் லொம்பார்டி கலைவடிவம் போன்றவைகள் பல நூற்றாண்டுகால நம் பாரம்பரியத்தையும், காட்டின் கலாச்சாரத்தையும் பிரதிபலித்தது. மேள தாளங்களும், சுருதி லயங்களும் சங்கமமான இந்த காட்டின் கலாச்சாரத்தையும் பிரதிபலித்தது. மேள தாளங்களும், சுருதி லயங்களும் சங்கமமான இந்த காட்டின் திருவிழா என்றும் ஒரு மறக்க முடியாத அபூர்வமாகவே இருக்கபோகிறது.

காடுகளுக்குள் மட்டுமே ஒதுங்கி வாழும் இந்த காட்டின் மக்கள் நாட்டுக்கும் ஒரு அரிய சொத்தாகும் என்பதை இந்த திருவிழா எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. அறியப்படாத பல அபூர்வமான தாவரங்களை பற்றியும், அவற்றை எவ்வாறு, எது, எதற்கெல்லாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய அறிவும் இந்த காட்டின் மைந்தர்களுக்கு தான் தெரியும். பழமையான சித்த மருத்துவத்தையும், ஆயுர்வேதத்தையும் போல இயற்கையின் வழியில் வாழ்ந்து காட்டும் இவர்களுடைய அறிவு அளவிடமுடியாததாகும். 350 ஆதிவாசி கலைஞர்கள் பங்கு கொண்ட சூரியா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தயாரித்து வழங்கிய ‘நாட்டறிவுகள்’ என்ற கலைநிகழ்சியுடன் தான் கானக சங்கமம் ஆரம்பமானது. காட்டுக்குள் வாழும் இந்த நல்ல மனித உள்ளங்களின் வாழ்கைமுறைகள், சடங்கு சம்பிரதாயங்கள், சிகிச்சை முறைகள் போன்றவை சாதாரண மனிதர்களுக்கு புரியும் வகையில் கானக சங்கமம் அமைந்திருந்தது. காட்டுக்குள் தானே இவர்கள் எல்லாம் ஒதுங்கி வாழ்கிறார்கள் என்று கருதாமல் இவர்களும் நம் நாட்டின் மதிப்புக்குரிய சொத்தாகும் என்ற வகையில் நாம் பிறந்த வீட்டை மறந்தும், துறந்தும், வெளியே நவநாகரீகம் என்ற பெயரில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு வாழும் நாட்டுப்புறவாசிகளான நமக்கு இவர்களோடு பழக இந்த மக்களை அறிந்து கொள்ள இந்த விழா பேருதவியாக இருந்தது என்று பலரும் கருதினர்.

காட்டின் செல்வங்களான இவர்கள் எதிர் கொள்ளும் பல விதமான சிரமங்களையும், கஷ்டங்களையும் முடிந்தவரை குறைக்க நம்மால் ஆனதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை பலருக்கும் இந்த விழா ஏற்படுத்தியது. இன்னும் இந்தியாவில் பல பாகங்களில் உள்ள அடர்ந்த காடுகளில் பல ஆதிவாசி மக்கள் வானமே கூரையாக, பூமியாக பாயாக படுத்துறங்கும் அவலத்தில்தான் வாழ்வை கழிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும். கோடை காலங்களில் குடிப்பதற்கும் நீர் இல்லாமல், உண்பதற்கு சரியான உணவு கிடைக்காமலும் பல ஆதிவாசி மக்களின் குழந்தைகள் பலவித தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள் என்பது வருத்தம் தரும் செய்தியாகும். தமக்கென்று சொந்தமாக வீடு என்று எதுவும் இல்லாத இவர்கள் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் தாக்குதலுக்கும் பல நேரங்களில் ஆளாகிறார்கள். காடுகளில் வாழும் இந்த மக்களின் அவதிகளுக்கெல்லாம் காரணம் காடுகள் அழிக்கப்படுவதும், அதன் சரிசமமான சூழல் நிலைநிறுத்தப்படாமல் போவதும் தான். இந்த மக்களோடு கானகங்களில் வாழும் வனவிலங்குளும், பறவைகளும் வாழ்கையை நரகமாக அனுபவிக்க மூலகாரணமாக இருப்பது நாட்டுப்புறத்தில் வசிக்கும் நாம்தான்.

ஆதிவாசிகள் படும் கஷ்டங்களை நாட்டுப்புறத்தில் இருக்கும் சாதாரணமானவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் இந்த விழா பெரிதும் உதவியாக இருந்தது. இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைதொடர்களும், கடலும், கடலோடு சேர்ந்துள்ள கழிமுகத்துவார கண்டல் காடுகளும், 44 ஆறுகளும் உடைய ஒரு மாநிலத்தில் இந்த திருவிழா நடப்பது பொருத்தமானதுதான்.. பல ஆபூர்வமான தாவரங்களும், விலங்குகளும், பறவைகளும் வாழும் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் உள்ள இயற்கை செல்வங்களும், அங்கு வாழும் ஆதிவாசி மக்களும்தான் மிகவும் விலைமதிக்க முடியாத சொத்து என்று கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் கனககுன்னு அரண்மனை வளாகத்தில்தான் இந்த திருவிழா நடந்தது. காடுகளை காப்பதற்காக அங்கு வாழும் மக்களாலேயே அமைக்கப்பட்டுள்ள சூழல் பாதுகாப்பு குழுக்களின் ( eco development committees ) ஒரு அரிய சங்கமம் இது. இந்த சங்கங்கள் ஒவ்வொரு வருடமும் அவரவர்களுடைய சங்க ஆண்டுவிழாக்களில் கலந்து கொள்கிறார்கள் என்றாலும், இந்த வருடம்தான் இந்தியா முழுவதிலும் இருந்து அத்தகைய எல்லா குழுக்களையும் ஒன்று சேர்த்து ஒரு விழாவாக சங்கமிக்க செய்யப்பட்டுள்ளது. இந்த திருவிழாவின் முக்கியமான குறிக்கோள் காட்டிலும், காடுகளுக்குள்ளேயும் வாழந்து வரும் மக்கள், அவர்களுடைய விவசாய பொருள்கள் மற்றும் அவர்கள் சூழலை பாதுகாக்கும் முறைகள் போன்றவை எல்லாம் நாட்டறிவுகளின் அடிப்படையில் புதிய தலைமுறைக்கு, இன்றுள்ள இளம் தலைமுறையினருக்கு முழுமையாக புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு அளிப்பதே ஆகும். அதோடு வனமைந்தர்களான இந்த ஆதிவாசி மக்கள் உற்பத்தி செய்யும் மதிப்புமிக்க பொருள்களை கொண்டு சென்று சந்தைப்படுத்துவதற் உரிய திறனையும், அதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதும், அத்தகைய ஒரு விசயத்தில் அவர்களுக்கு ஒரு பங்களிப்பும் பண்பை வளர்பதும் ஆகும். 4000 ஆதிவாசி மக்கள் ஒன்று கூடும் ஒரு அபூர்வமான சங்கமமாக இது திகழ்ந்தது என்றால் அது ஒரு அற்புதமான செயலே ஆகும். நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்து கடந்த ஏப்ரல் 16-ம் தேதி இரவு முதல் வந்து சேர்ந்த இந்த ஆதிவாசி மக்கள் திருவனந்தபுரத்தில் தேசீய விளையாட்டு போட்டிகளுக்காக செய்யப்பட்ட விளையாட்டு போட்டிகளுக்காக தயார் செய்யப்பட்ட விளையாட்டு கிராமத்தில் தங்க வைக்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர்.

‘ஊரு மித்ரா’, (ஊருக்கு நண்பன்), ‘ஊரின் உறவு, காட்டின் உணர்வு போல பல விதமான பிரிவுகளில் கானக சங்கமம் நடந்தேறியது. இதோடு கண்காட்சிகள், பல விஷயங்கள் பற்றிய கருத்தரங்குகள், பல விதமான போட்டிகளும் நடந்தன. பல மாநிலங்களில் இருந்து உயர் அதிகாரிகள், முக்கிய பிரதிநிதிகள் போன்றவர்கள் விழாவின் அங்கமாக நடந்த கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் பங்கேற்றனர். கண்காட்சியின் பாகமாக நடந்தது. நடந்த விவாதங்களில் கேரள மாநில அரசின் வனதுறை அமைச்சரும் கூட பங்கேற்றார். மாநிலத்தின் உள்புறங்களில் இருந்தும், மாநிலத்தின் வெளியிலிருந்தும் தாங்கள் உருவாக்கிய பொருள்களுடன், தங்கள் கலைவடிவங்களோடு விழாவில் பங்குகொள்ள வந்திருந்த ஆதிவாசி மக்கள் அவற்றை மற்றவர்களுக்கு முன்னால் காட்சிப்படுத்தவும், அதன் மூலம் தங்களுக்கு ஒரு அங்கீகாரம் தேடவும் செய்த இந்த மக்களின் தன்னம்பிக்கையை வளர்க்க இந்த திருவிழா பெரிதும் உதவியது. வனங்களுக்குள்ளேயே வாழ்ந்து வாழ்வை முடிக்காமல் வெளியுலகத்திற்கும் தங்கள் திறமைகளை வெளியுலகத்திற்கும் தங்கள் திறமைகளை வெளிகாட்டி, தங்களை  அங்கீகரிக்கவும் நல்ல உள்ளங்கள் நகரங்களிலும் இருக்கிறார்கள் என்ற நல்லெண்ணத்தை வளர்த்துக்கொள்வதற்கும் காட்டின் குழந்தைகளான இந்த மக்களுக்கு இந்த விழாவின் மூலம் முடிந்தது. அதனால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகமாகியது. விழா முடிந்து சென்ற அனைவருமே தங்களுடைய திறமைகளுக்கு ஒரு மறக்க முடியாத சிறந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்கிற உறுதியான நல்ல நம்பிக்கையுடன்தான் சென்றிருக்கிறார்கள். ஆயிரமாயிரம் நகரவாசிகள் வந்து பார்த்துவிட்டு சென்ற கண்காட்சியை பற்றி பார்த்தவர்கள் அனைவருமே தங்கள் கருத்துகளை பதிவு செய்து சென்றிருக்கிறார்கள். அவை எல்லாமே ஆதிவாசி மக்களின் செயல்திறன்களை வாழ்த்தி போற்றவே செய்திருக்கிறார்கள் என்பது ஒரு மகிழ்சி தரும் செய்தியாகும். காட்டின் குழந்தைகளுக்கும், தாய் வீட்டை விட்டு வெளியே வந்து வாழும் நாட்டுப்புற மக்களுக்கும் இடையே ஒரு உறவு பாலமாக  இந்த வன பெருவிழா அமைந்திருந்தது என்றால் மிகையில்லை. பழங்குடியினர் கலாச்சாரம் (tribal culture) என்ற பிரிவில் ஏற்படுத்தப்பட்டிருந்த பழங்குடிமக்களின் குடில்கள், அவற்றுக்குள் அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு சாமானகள், விவசாய கருவிகள் இவைகள் எல்லாம் முடிந்தவரை சேகரிக்கப்பட்டு லேபிள் ஒட்டி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பழங்குடி மக்களின் பாரம்பரியமான மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றியும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. இந்த மருத்துவமுறைகள் பற்றி சொல்வதற்காக 26 பாரம்பரிய மருத்துவர்கள் விழாவுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் தயாரித்த மருந்துகளை வந்திருந்தவர்களுக்கு அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். நோய்களை எவ்வாறு கண்டறியவேண்டும், அதற்கு எவ்வாறு மருந்துகளை இயற்கை பொருள்களில் இருந்தே உருவாக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அவர்கள் வந்திருந்தவர்களுக்கு தெரிவித்தார்கள்.

ரங்கிலுக்காக ஒரு தனி பிரிவையே ஏற்படுத்தியிருந்தார்கள். மூங்கிலை வைத்து ஆதிவாசிகள் வீடுகள் அமைக்கும் முறைகள், பல விதமான வீடுகள், பழமையான குடில்கள், நவீன மூங்கில் குடிகள், இயந்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மூங்கில் வீடுகள் போன்றவை எல்லாம் இந்த பிரிவில் வைக்கப்பட்டிருந்தன. மூங்கிலால் செய்யப்பட்ட விதவிதமான கலைபொருள்கள் 12 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டது. இது போல பாரம்பரியமான வன உணவுவகைகள் (ethimic food shed) கானகங்களில் சேகரிக்கும் பொருள்களை கொண்டு தயாரிக்கபட்ட பல வித உணவுகள் ஆகியவை இங்கு வைக்கப்பட்டு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் கேரளாவில் உள்ள வயநாடு வனப்பகுதியில் அங்குள்ள பழங்குடியினர் விலைவித்து எடுக்கும் இருவகை ‘வீரகெச்சலா’, ‘கந்தச்சாலா’ ஆகிய இருவகை அரிசி இனங்களை கொண்டு தயார் செய்யப்பட்ட உணபொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த இருவகை அரிசி ரகங்களும் மிகவும் அபூர்வமாகவே வனங்களை விட்டு வெளியுலகுக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த இருவகை அரிசிரகங்களும் விற்கப்பட்டன. கேரளாவின் 18 பாகங்களில் இருந்து வனங்களில் சேகரிக்கப்பட்ட வெவ்வேறு சுவையும், மணமும் உடைய காட்டு தேன் விற்பனை செய்த ஒரு பெரிய தேன் திருவிழாவும் இந்த சங்கமத்தின் ஒரு சிறப்பு அம்சமாக விளங்கியது. காடுகளுக்குள் வாழும் இந்த மக்களின் திறன்களையும், அவர்கள் உருவாக்கும் அற்புதமான கலை பொருள்களை வெளியுலகுக்கு காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கும், அதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை முன்னேற்றிக்கொள்வதற்கும், அவர்களுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதற்கும் அவர்களுக்கு அவர்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியை திறந்துவிடுவதற்கும் இந்த வனவிழா பெரிதும் உதவி செய்துள்ளது.

இந்த வகையில் இந்த கானக சங்கமம் ஒரு வெற்றியாக அமைந்தது. உள்ளத்தில் உறவை ஏற்படுத்துவதற்காக காடுகளை விட்டு வெளியே வந்த காடுகளின் உணர்வை நாட்டுப்புறத்தில் இருந்தவர்களுக்கு வழங்கினார்கள். காண வந்திருந்தவர்களை அறிவும், ஆனந்தமும் அடைய செய்தார்கள். ஒவ்வொரு வனப்பகுதியின் தலைமை பொறுப்பு வகிக்கும் தலைவர்களும் இந்த திருவிழாவில் வனத்தின் குழந்தைகளோடு பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பழமையும், புதுமையும் கை கோர்த்து முகம் பார்த்து நாமெல்லாம் ஒரே மனித இனம்தான் என்பதில் வெளிப்படுத்தும் வகையில் அனந்தபுரி என்ற நகரத்தில் வனத்தின் மைந்தர்கள்க்கும், நகர மக்களுக்கும் இந்த திருவிழா ஒரு புத்துணர்ச்சியையும், புதிய உறவையும் ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கையை இயந்திரங்களோடு இயந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நகர மக்களுக்கு இயற்கையின் குழந்தைகளாக சொல்லிகொடுத்து ஏராளமான விஷயங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எது நடந்ததோ இல்லையோ காண வந்திருந்தவர்களில் சிலராவது இனிமேல் வனத்தை அழிக்க கூடாது, சூழலை மாசுபடுத்த கூடாது, தேவைகளை குறைத்து, அவசியத்துக்கு மட்டுமே வாழ்ந்து, ஆடம்பரங்களை அடியோடு விட்டுவிட்டால் அதுவே இந்த சங்கமத்தின் பெரும் வெற்றியாக அமையும். இந்த அற்புதமான கானக சங்கமத்தை பற்றி கேள்விப்படும், அறிந்துகொள்ளும் நமக்கு இதுபோன்ற ஒரு நல்லுணர்வு ஏற்பட்டால் அதுவே நாம் இந்த அன்னை பூமிக்கு செலுத்தும் மிகப்பெரிய நன்றிக்கடனாக அமையும்..

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2018

கண்கள் காட்டும் கல்லீரல் காதல்
மூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் !!
முயற்சியே முன்னேற்றம்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 10)
சுயமுன்னேற்ற தத்துவ முத்துக்கள்
கானக சங்கமம்
பழைய – புதிய நினைவுகள்
ஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்
பிப்ரவரி மாத உலக தினங்கள்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
பாயும் ஆறு
ஒத்தி வைக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது எப்படி?
வெற்றி உங்கள் கையில் – 50
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்- தொடர்ச்சி- 3
வாழ நினைத்தால் வாழலாம் – 12
தன்னம்பிக்கை மேடை
உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…
உள்ளத்தோடு உள்ளம்