Home » Articles » பிப்ரவரி மாத உலக தினங்கள்

 
பிப்ரவரி மாத உலக தினங்கள்


மனோகரன் பி.கே
Author:

  1. உலக காதலர் தினம் (World Valentine’s Day) (பிப்ரவரி – 14)

‘காதலர் தினம்’ அல்லது ‘புனித வாலண்டைன் தினம்’ உலகம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று  கொண்டாடப்படுகிறது. காதலர்கள் ஒருவருக்கொருவர் வாலண்டைன் வாழ்த்து அட்டைகளை வழங்கியும், பூங்கொத்து வழங்கியும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்கின்ற தினமாக இருக்கிறது. ‘ஆட்டின்’ எனப்படும் இதய வடிவிலான உருவம், புறாக்கள் மற்றும் சிறகுகளோடு பறந்து செல்லும் தேவதை போன்ற உருவங்கள் நவீன காலத்து காதலர் தினக் குறியீடுகளில் அடங்கும்.

கி.பி. நான்காம் நூற்றாண்டில் ‘வேலண்டைன்’ என்னும் பெயர் கொண்ட ரோமன் கத்தோலிக்க கிறித்தவப் பாதிரியார் ஒருவர் ரோம் அரசாங்கத்தின் தடை உத்தரவை மீறி ஏராளமான காதலர்களுக்கு ரகசியமான முறையில் திருமணம் செய்து வைத்து காதலை அங்கீகரித்த காரணத்தால் அவர் இறந்த பிப்ரவரி 14-ம்  தேதி ‘காதலர் தினம்’ என கிறித்துவ தேவாலயங்களில் கொண்டாடப்பட்டு வந்தது.  துவக்கத்தில் இது கிறித்துவ மதப் பண்டிகைகளில் ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது.  பின்பு படிப்படியாக இந்த தினம் எல்லா நாடுகளுக்கும் பரவி விட்டது.

காதலும் வீரமும் பாரதப் பண்பாட்டின் அடையாளங்கள்.  அகவாழ்வில் காதல் சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை அகநானூற்றுப் பாடல்களின் வாயிலாகவும்  புறவாழ்வில் வீரம் போற்றப்பட்டுள்ளது என்பதைப் புறநானூற்றுப் பாடல்களின் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.  காதல் புனிதமானது, காதல் தெய்வீகமானது, ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க முடியாதது.  எனவேதான் மகாகவி பாரதி ‘ஆதலினால் காதல் செய்வீர்’ உலகத்தீரே எனக் காதலைப் போற்றியுள்ளார்.

காதல் இறை வழிபாட்டிலும் போற்றப்படுகிறது. பார்வதி-பரமசிவன் காதலும், ராமர்-சீதை காதலும், கண்ணன்-ராதை காதலும், முருகன்-வள்ளி காதலும் புராணங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளன.  காதல் தெய்வங்களாக மன்மதனும் ரதிதேவியும் வணங்கப்படுகின்றனர்.

அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்வின் நெறிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்தளித்தனர். முப்பால் நூலாகிய திருக்குறளில் காமத்துப்பால் என ஓர் அதிகாரமே படைக்கப்பட்டுள்ளது. தமிழர் நாகரிகத்தில் காதல் மிகப் புனிதமானதாகக் கருதப்பட்டுள்ளது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள்,

வகைவகையான காதல் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை வீணடிக்கிறது.  யாரும் பார்த்து விடக்கூடாது, யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்றெல்லாம் பயந்து பயந்து மனதிற்குள் பொத்திப் பொத்திக் காதலை மலர வைத்தது நேற்றைய காதல்.  கண்டதும் காதல், பார்த்ததும் உருகல் என்பதே இன்றைய காதல்,  எது காதல் என்று தெரியாமலேயே அதன் மாய வலைக்குள் இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

‘காதலுக்குக் கண் இல்லை’ என்பதை தங்களுக்குச் சாதகமாகப் புரிந்து கொண்டு இளம் உள்ளங்கள் காதலில் திளைப்பதாக எண்ணி மகிழ்கிறார்கள்.  கனவு உலகத்திற்குள் உலா வரும் வரை இவர்களின் காதலுக்குக் கண் இல்லைதான்.  ஆனால் கனவு உலகைக் கடந்து நடைமுறை வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துக் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கும் போது காதலுக்குக் கண் வந்துவிடும்.

காதல் அரும்பும்போது சாதி, மதம், அந்தஸ்து, படிப்பு எல்லாம் தடையாக இருப்பதில்லை,  ஆனால் அது கல்யாணத்தில் நிறைவேறத் துடிக்கும்போதுதான் காதலுக்கு சாதி மதம் உள்ளிட்ட அனைத்தும் தடையாக நிற்பது தெரிய வரும்,  குடும்பத்திற்குள் தீர்க்க முடியாத குழப்பங்கள், சச்சரவுகள் ஏற்படும்.  காதல் வயப்பட்ட இருவர் காதலன்-காதலியாக இருக்கும்வரை காதல் சந்தனக் கட்டையாக மணம் வீசும்,  கணவன்-மனைவி என்று ஆகிவிட்டால் எரிந்து போன விறகுக் கட்டையாகப் புகை வீசும்.

வாழ்க்கை மொட்டவிழும் பருவம் இளமைப் பருவம்.  இந்தப் பருவம் லட்சியங்களைத் தேடிப்பிடிப்பதற்கான பருவம்.  காதலுக்கு ஒருவரைத் தேடிப்பிடிக்கும் பருவம் அல்ல,  இப்பருவத்தில் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் கண்ணாடி கைநழுவிக் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கி விடுவது போல் வாழ்க்கையும் நொறுங்கி விடும்,

இளமைப் பருவம் ஒற்றைக் கண் சிமிட்டலில் முடிந்து போய் விடும்,  அதற்குள் நம் சுய அடையாளத்தை அமைத்துக் கொள்வது மிகமிக முக்கியம், காதல் நங்கூரம் சரியான இடத்தில், சரியான பருவத்தில் பாய்ச்சப்பட வேண்டும்,  காதலில் புறப்பாதுகாப்பை விட மனக்கட்டுப்பாடாகிய அகப்பாதுகாப்புதான் உன்னதமானது.

லட்சியங்களுக்காகக் காதலைக் கொஞ்ச காலம் காக்க வைக்கலாம், தவறில்லை,  காத்திருக்கும் காதலுக்கே வலிமையும், மதிப்பும் அதிகம்,  காதல் வெறும் பொழுதுபோக்கல்ல, வாழ்க்கை சம்பந்தப்பட்டது,  கண்ணியமும் கட்டுப்பாடும் காதலுக்கும் உரியது.

  1. சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) பிப்ரவரி – 21

ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாள்  ‘தாய்மொழி தினம்’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  1952 ஆம் ஆண்டு தங்கள் தாய்மொழியைக் காப்பதற்கான போராட்டத்தில் உயிர் நீத்த வங்கதேச மொழியுரிமைப் போராளிகளின் நினைவாக, 2000-மாவது ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என ஐ.நா.வின் யுனெஸ்கோ 1953ம் ஆண்டிலேயே அறிவித்தது, அந்நிய மொழிகளின் மூலம் கற்பதைக் காட்டிலும் மிக விரைவாகக் கல்வி பெற உதவும் மொழி  தாய்மொழிதான் என கூறியுள்ளது.

மொழிகள் அழிந்தால் அது ஒட்டு மொத்த மனித குலத்துக்கே ஆபத்தாகும்.  மொழிகளின் எண்ணிக்கை குறைந்தால், சிந்தனைகள் குறையும்.  மொழிகளின் அழிவைத் தடுக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான ஒரு திட்டத்தையும் வகுத்துள்ளது யுனெஸ்கோ நிறுவனம்.  ஒவ்வொரு மொழியைச் சேர்ந்தவர்களும் தத்தமது மொழியைத் தங்குதடையின்றி எல்லாத் துறைகளிலும் புகுத்த வேண்டும் என்பதே அந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

சீர்திருத்தம் முதலில் சொந்த வீட்டில் தொடங்கப்பட வேண்டும் என்பார்கள். அதற்கிணங்க ஐ.நா.சபை தாம் ஏற்றுக் கொண்ட ஆறு மொழிகளுக்குள்ளும் (ஆங்கிலம், பிரெஞ்சு, சீனம், ஸ்பானிஷ், ரஷியன், அராபிக்) வேறுபாடு எதுவும் காட்டாமல், அனைத்தையும் சமமாகக் கருதிச் செயல்பட்டு, தம் அறிக்கைகள், ஆவணங்கள் அனைத்தையும் ஆறு மொழிகளிலும் வௌல்யிட்டு வருகிறது.

நமது சமுதாயம் தாயை முதன்மையாகக் கொண்டது,  மொழிகளிலும் தாய்மொழிக்கே முதலிடம். தனிமனிதனை சிறந்த குடிமகனாக மாற்றுவதே தாய்மொழிக் கல்வியின் உயர்ந்த நோக்கமாகும்.   தாய்மொழி  வாயிலாகப் பெறப்படும் கல்வியறிவே மக்கள் மனங்களைப் பண்படுத்தி, பண்பாட்டை வளர்த்து, நாட்டுப்பற்றை ஊட்டி எந்தத் தியாகத்துக்கும் அவர்களைத் தயார்படுத்துகிறது.

தாய்மொழியோடு கூட தேசிய மொழி ஒன்றையும்/ பன்னாட்டு மொழி ஒன்றையும் கற்றுக் கொள்வது நல்லது,  உலகமயமாகும் இக்காலச் சூழலில்/ பல மொழிகளை ஒருவர் தெரிந்து வைத்திருந்தால் அவருக்கு வேலைவாய்ப்புச் சிறப்பாக அமையும்.

உலக மொழிகள் என்று எடுத்துக் கொண்டால் எண்ணிக்கையில் அது அறுநூறு.  அவற்றுள் இலக்கியம் மற்றும் இலக்கணம் உடையவை என்று பார்த்தால் வெறும் முன்னூறு,  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு உடைய மொழிகள் எத்தனை என்று பார்த்தால் எண்ணிக்கை ஒற்றை இலக்கில்தான் உள்ளது. அதாவது ஆறு மொழிகள் மட்டுமே அத்தகைய சிறப்பு கொண்டவை,  1. தமிழ், 2.சீனம், 3.சமஸ்கிருதம், 4.இலத்தீன், 5.ஹீப்ரு, 6.கீரிக்.இந்த ஆறு மொழிகளில் முதலிடம் வகிப்பது தமிழ்.  தமிழ் மொழி மட்டுமே மனித சிந்தனைகளை நுண்ணிய உணர்வுகளை மிகத் தெளிவாக உணர்த்தும் ஆற்றல் கொண்ட மொழி என்று மொழியியல் தந்தை எமினோ கூறியிருக்கின்றார்.

‘என்றுமுள தென்றமிழ்’ என்று கம்பன் தமிழின் இனிமையைத் தன் படைப்புக் காப்பியங்களில் உணர்த்தியிருக்கிறார்.  எம்மொழியும் பெறாத முச்சங்கம் அதாவது தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று சங்கம் வைத்து வளர்ந்த செம்மையான மொழி தமிழ்ச் செம்மொழி.

“ஆங்கில மொழியில் எழுதுவதை விட, பேசுவதைவிட என் தாய்மொழி குஜராத்தில் எழுதினால், பேசினால் எளிமையாக என்னால் கருத்துகளை வெளிப்படுத்த முடியும்” என்றார் மகாத்மா காந்தியடிகள்.

குறிப்பிட்ட ஒரு மொழியில் பேசும்போது, எழுதும் போது மொழிப் புலமை வளரலாமே ஒழிய அறிவு வளரும் என்று சொல்ல முடியாது,  அப்படி இருந்தால் ஆங்கிலம் பேசும் அனைவரும் அறிவாளிகளாக அல்லவா இருக்க வேண்டும்,  அறிவு என்பது குறிப்பிட்ட துறையில் ஒருவருக்கு இருக்கும் சிந்தனைத் தெளிவு, அறிவுக் கூர்மை, படைப்பாற்றல் போன்றவற்றின் உள்ளடக்கமே ஆகும்,  மொழியறிவு இதற்கு உதவியாக இருக்கலாமே ஒழிய அதுவே அடிப்படை அறிவாகாது.

‘அனைத்து மொழிகளையும் கற்று வை, ஆனால் அன்னை மொழியிடம் பற்று வை’  என்ற வைர வரிகளை சிந்தையில் கொள்ள வேண்டும்,.

3.உலக சாரணியர் தினம் (World Scout Day) பிப்ரவரி – 22

‘ஸ்கவுட்’ (Scout) எனப்படும் சாரணியர் இயக்கம் உலகளவில் செயற்படும் மிகப்பெரும் ஓர் இளைஞர் இயக்கமாகும்,   1907 ஆம் ஆண்டு சாரண இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும்;  – ராபர்ட் பேடன் பவல் (Robert Baden Powell),   அவர்களால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

மனித சமூகத்தின் மேம்பாட்டிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தக் கொண்ட ராபர்ட் பேடன் பவல் 1857 பிப்ரவரி 22ஆம் தேதி பிறந்தார்,  அவர் பிறந்த தினத்தை ‘உலக சாரணியர் தினம்’ என்றும், ‘பேடன் பவல் தினம்’ என்றும் சாரணிய உலகம் அழைக்கிறது.

முதலாவது சாரணிய இயக்க மாநாடு  ஆகஸ்டு 1ம் தேதி தொடங்கியது.  சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூறும் தினமாக  இவை கடைப்பிடிக்கப்படுகிறது.  வாய்மை, நேர்மை, நம்பகத்தன்மை, தேசப்பற்று, நேசம், ஜீவகாருண்யம் போன்ற ஆளுமைப் பண்புகளை இளைஞர்களிடையே வளர்ப்பது இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும்.  ‘எதற்கும் தயாராக இரு’  (To Always Be Ready) என்பது சாரணர் இயக்கத்தின் தாரக மந்திரம். தற்போது இந்த இயக்கம் 216 நாடுகளில் செயல்படுகின்றது, உலகம் முழுவதும் சுமார் 38 மில்லியன் சாரணர்கள் உள்ளனர்,

மாணவ மாணவியர் சமூகத்தில் தங்களை இணைத்துக் கொண்டு மேம்படவும், சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கும் சாரணர் இயக்கம் கல்விச் சாலைகளில் ஒரு பயிற்சிக்களமாக விளங்குகிறது.  சாதி, மத வேற்றுமை கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது,  வயது வந்தோர் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, துயர்துடைப்பு போன்ற சமுதாயப்பணிகளைச் சாரணர் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்,

முழுமையாக ஒரு மனிதனை உருவாக்கும் நற்காரியத்தை இன்று சாரண இயக்கம் பாடசாலையிலிருந்தே வளர்த்து வந்துள்ளது, சாரணியத்தின் செயற்பாடுகள் இன, மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கப்பால் நல்ல பல பண்புகளை இளம் வயதிலிருந்தே வளர்த்துக் கொள்ள சாரணர் பாசறைகளும், ஒன்றுகூடல்களும் வழிகாட்டுகின்றன.

சாரணிய இயக்கத்தில் இருந்த பலர் உலகில் பலதுறைகளிலும் பெயர் பதித்துள்ளனர்,  சந்திரனில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ரோங் ஒரு சாரணியரே, நிலவில் இதுவரை காலடி பதித்தவர்களில் 12 பேர்; சாரணர்கள்.      உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப்.கென்னடி ஒரு சாரணர், அமெரிக்க ஜனாதிபதிகள் வரிசையில் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் போன்றோரும் சாரணர்களே.  இவ்வாறான பல சாரணியர்கள் உலகளவில் புகழ்பெற்றவர்களாக விளங்கி இருக்கின்றனர், விளங்கி வருகின்றனர்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2018

கண்கள் காட்டும் கல்லீரல் காதல்
மூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் !!
முயற்சியே முன்னேற்றம்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 10)
சுயமுன்னேற்ற தத்துவ முத்துக்கள்
கானக சங்கமம்
பழைய – புதிய நினைவுகள்
ஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்
பிப்ரவரி மாத உலக தினங்கள்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
பாயும் ஆறு
ஒத்தி வைக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது எப்படி?
வெற்றி உங்கள் கையில் – 50
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்- தொடர்ச்சி- 3
வாழ நினைத்தால் வாழலாம் – 12
தன்னம்பிக்கை மேடை
உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…
உள்ளத்தோடு உள்ளம்