Home » Articles » பாயும் ஆறு

 
பாயும் ஆறு


அனந்தகுமார் இரா
Author:

தமிழ்முறை ஆயுர்வேதம், சித்தமருத்துவம் முதலியவற்றில் இந்நோயை எப்படி அணுகுவார்கள்?  எதாவது இலைதழைகளை அரைத்துக் குடிக்கக் கொடுத்தால் தந்தையின் மூளைக்கட்டி சட்டென மாயமாக கரைந்து மறைந்து போய்விடக்கூடாதா? என்று சட்டென ஒரு கற்பனை நம்பிக்கைக் கீற்று மின்னிச்சென்றது?  அதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆராயக்கூடிய மனநிலை நமக்கு மட்டுமே (ஏன்?) இருப்பதாக தோன்றியது.  இதைப்பற்றி பேசுகிற தைரியம் (வருமா?) வரவழைக்க எத்தனிக்க, தயக்கமாக இருந்தது. செவிலியர்கள் அவசரமாக, இங்குமங்கும் நடைபோட்டவண்ணம், கண்டிப்பை கண்களிலும் கனிவை சொற்களிலும், கறாரை தொனியிலும் கலந்து கருத்து பரிமாற்றம் செய்த வண்ணம் இருந்தனர்.  அவர்களை அணுகி, பேசினால், அறிவுத் தகவல்கள் பெறலாம்… ஆனால் அவை நம்பிக்கை தருமா…  அச்சமூட்டுமா… என்று யோசிக்கும் பொழுதே… அவர்கள் அடுத்த வேலையாக கடந்து சென்றுவிடுகிறார்கள்.  இந்த சூழ்நிலையில் ஆறு… போல வாழ்வு ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி ஓடுவதாகவே தோன்றியது…

எண்ணற்ற நோயாளிகளை ஆய்வு செய்த அந்த மிகப்பெரிய மருத்துவமனையின், நியூரோபேதாலஜி, நியூரோ பிஸியாலஜி, அனத்தீஷியா, என்று வெவ்வேறு உயர்படிப்பு படித்த மேதைகளின் சொற்களை இயன்றளவு விரைவாக நம் நண்பர் புரிந்துகொண்டு பதில்தரவேண்டும் என்று சூழ்நிலையால் நிர்பந்திக்கப்பட்டார்.  ஐ.சி.யு உடைய கட்டணம் கண்களை கட்டும் அளவில் இருந்தது.  இரவு ஏழு மணிக்கு வந்த மருத்துவமனை… வந்து சரி… ஒரு அரைமணி நேரத்தில் திரும்ப வீட்டிற்கு போய் சாப்பிட்டுவிட்டு தூங்கலாம் என்று நினைத்திருந்த வான்முகிலுக்கு… அடுக்கடுக்கான அவசர பரிசோதனைகள் கதிர்வீச்சு ஆய்வக நடைமுறைகள் அதனுடைய பரிசோதனை முடிவுகள்… என பதினோரு மணி, இரண்டரை மணிக்கு சி.டி ஸ்கேன் ரிசல்ட்… என்று வந்துகொண்டே இருந்தது.  கிட்டத்தட்ட நான்கு மணிக்கு அந்த சற்றே பெரிய வடிவ எலுமிச்சம் பழம்போல் அமைந்திருந்த கட்டி… நம் நண்பர் மனதை விசுவரூபமெடுத்து ஆக்கிரமித்த பொழுது… இரவின் உறக்கமின்மை, தந்தையின் நோய்த்தாக்கம் ஆகியவை கண்களையும் இதயத்தையும் ஒருசேர பாரமாக்க… ஒரு பொறியாளராக கல்வி கற்றிருந்த நம் நண்பர் வான்முகில் அந்த ஒரே வேகமான இரவில்… “எழுதப்படிக்கத் தெரியாதவன் மாதிரி… என்நிலைமை ஆகிடுச்சுங்க சார், எல்லா லத்தின், கிரிக் டெக்னிகல் டெர்ம்ஸ்ஸும் உடனுக்குடன் நமக்கு புரிஞ்சி தெரிஞ்சி பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கறாங்க… எல்லா பார்ஃம்களும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றது.

அதில் எழுதப்பட்டிருக்கின்ற விவரங்களும், மருந்துகளும் சான்றளிப்புக்களும்… நமக்கு ….உடனே “கூக்குள் டாக்டரை” படிச்சுத் தெரிஞ்சுக்க முயற்சி செய்ய வைக்குது.  ஆனாலும் பதட்டத்துல எவ்வளவு சார்… முடியும்… நமக்கே இப்படின்னா… படிக்காம… இங்க வருகின்றவங்க எப்படி புரிஞ்சுப்பாங்க… ஆனாலும்… நம்ம மருத்துவர்கள் இயன்ற அளவு விளக்கமாகவும்… மெதுவாகவும் சொல்ல முயற்சி செய்யறாங்க சார்”…

ஆபத்பாந்தவன் அழகிய மருத்துவன்:-

மேற்கண்ட சொற்களில் நண்பர் வான்முகில் அந்த சூழ்நிலையின் கனபரிமாணத்தை புரியவைத்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த நாளின் மாலை ஆறு-ஏழு மணி இருக்கும்.  முதல் நாள் இரவு, காலை 4 முதல் ஆறு வரை இரண்டு மணி நேரம் மட்டுமே… அதுவும் உடனிருந்த மருத்துவ நண்பர் அறிவுச் செல்வனுடன் காரிலேயே கண்மூடி எழுந்ததன் அயர்ச்சியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.  அந்த ஒருநாளுக்கும் குறைவான பொழுது அவர்களது குடும்ப மற்றும் நட்பு வட்டாரத்தில் ஒரு அமைதியான பிரளயத்தை உருவாக்கிவிட்டிருந்தது. யாருடைய முகமும் அழுகையோடில்லை.  அது நோயாளியை இன்னும் பதட்டமாக்கும் என்பதை உணர்ந்து புன்னகையோடு (கடும் முயற்சி செய்து வரவழைக்கின்றனர்) பேசிக்கொண்டு இருந்தனர்.  நண்பரின் அப்பாவும், தன்மகன், தான் கேட்டுக்கொண்டதை ஏற்றுக்கொண்டு தனக்கு அறுவைச்சிகிச்சை செய்வதை தடுத்துவிடுவான் என்கின்ற நம்பிக்கையோடு புன்னகைத்துக் கொண்டுதான் பேசினார்.  எழுபது வயதுவரை மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்த பெரியவர் அவர்.  பார்க்க ஐம்பது வயது மதிக்கத் தக்கவர்.  தனது எழுபதாவது வயதிலும் ஜாக்கிங் சென்றுவந்து ஆரோக்கியம் பேணுபவர் என்பது அவரது தொப்பை இல்லாத பிடித்தமான உடல்வாகில் தெரிந்தது.  இப்பொழுதுதான் வழுக்கையும் நரையும் விழ தொடங்கி இருந்தது.  அவரது முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புன்னகை குறைந்து… இறுக்கம் தவழ தொடங்கிய பொழுது… தளர்வாக தனது படுக்கையில் படுத்து… உறங்க தொடங்கினார்.  நம்மைப்போன்ற உடன் இருந்தவர்களின் ஒரே நம்பிக்கை ஒளியாக மருத்துவ நண்பர் அறிவுச்செல்வன் இருந்தார்.  அவரது அறிவுசார்ந்த எடுத்துக்காட்டுகளும், உணர்வுசார்ந்த உடனிருப்பும், இதயபூர்வமான நம்பிக்கையும் மட்டுமே எங்களுக்கு தெம்பு ஊட்டியது. 

மூடு (Mood) தரும் முடிவுகள்:-

மருத்துவர்களும் மகனும் எப்படியும் அவரை அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்துவிட இயலும்? என்று நம்பிக்கையுடன் இருந்தனர். சொற்கோ, அவரது மூளை தெளிவாக இயங்காத சூழ்நிலையில் அறுவை சிகிச்சை வேண்டாம் என்று கூறும் அவரது கருத்து எவ்வளவு சிந்தித்து எடுக்கப்பட்டது?  என்று தோன்றியது?  இத்தகைய அதிதீவிர சிகிச்சை குறித்த முடிவு ஒருபுறம் இருக்கட்டும்… நாம் ஒவ்வொரு நாளும் எடுக்கும் பல முடிவுகள் மூளையின் எவ்வளவு ஆழம்வரை சிந்தித்து எடுக்கப்படுகின்றன?  என்று யோசனை செய்யத் தோன்றியது.   பல சமயங்களில் அந்தந்த நேரத்து மனநிலைக்கு (Mood) ஏற்ப நாம் சட்டென முடிவெடுத்துவிடுகின்றோம்.  வார்த்தைகளை சிந்திக்காமல் சிந்திவிடுகின்றோம்.  காலதாமதமாவது மட்டுமே சரியான முடிவுக்கு உத்திரவாதமில்லை. களைத்துப்போகிறவரை சிந்திப்பது பிறகு பிழையானதொரு முடிவு எடுப்பது என்பதும் தவிர்க்க வேண்டுவதே… ஆழ்ந்து சிந்தித்து, நல்ல புள்ளிவிவரங்களை ஆராய்ந்து, விரைவாக எடுக்கப்படும் முடிவே திருப்தியான, சிறந்த முடிவுகளாக இருக்கும்.  திருப்தியான முடிவெல்லாம் சிறந்த முடிவல்ல!  சிறந்த முடிவுகளெல்லாம், முழுதிருப்தி தருவதில்லை!  ஆறு சுழல்போல.  இது கொஞ்சம் சுற்றி வருவதே!

படம் தந்த பாடம்:-

கிராமத்தில் பல்லாங்குழி பெட்டிபோல வரிசை வரிசையாக அடுக்கிய கருப்புவெள்ளை படங்களில் அனுப்பிய வாட்ஸ்அப் குறுஞ்செய்தியில் மூளையின் குறுக்குவெட்டு, நீள்வெட்டு படங்களில் உட்புற தோற்றத்தை பார்க்க முடிந்தது.  பாதாம் கொட்டை போல சல்சி, கைரி எனப்படும் மேடு பள்ளங்களோடு அச்சு அசலாக அப்பாவின் மூளை அக்குவேறு, ஆணிவேறாக படம்பிடிக்கப்பட்டிருந்தது.  வலதுபக்க மூளையில் இருந்த கட்டியின் காரணமாக மூளையின் பிறபகுதிகள் ஒருபக்கமாக தள்ளப்பட்டு… அதன் காரணமாக நீர் கோர்க்க ஆரம்பித்திருந்தது அதை சீடி ஸ்கேன் (CT Scan) படம் சற்றே மங்கலான நிறத்தில் காட்டியிருந்தது.  அதில் இருக்கிற இன்ஃப்ளமேட்டரி (            Inflammatory) பகுதிதான், அதாவது உடல்தடுப்பாற்றல் மூலம் நடத்தப்படும் போராட்டகளப்பகுதிதான் நண்பரின் தந்தையாரின் ஒருங்கிணைப்புக்குறைவிற்கு காரணம் என்று தோன்றுகிறது என்று டாக்டர்கள் கூறினார்கள்.

உள்ளேயா? வேளியேயா?:-

மெனிஞ்சியோமா என்பது மூளையை சுற்றியுள்ள மூன்றடுக்கு மெனிஞ்சஸ் எனப்படும் உறையிலிருந்து உருவாகும் கட்டி, கிளையோமா என்பது மூளைசெல்களிலேயே உருவாகும் கட்டி… இவற்றில், கட்டி மூளையின் சுற்றுச் சுவருடன் இணைந்துள்ள இடத்தை படத்தில் பார்த்து மருத்துவ நண்பர் இக்கட்டி முதல்வகையை சார்ந்தது எனவே சுற்றுச்சுவர் பிரச்சனைதான் ஏற்பட்டுள்ளது.  உள்ளே உள்ள முக்கிய மூளைசெல்கள் நன்றாகவே இருக்கும் என்று நம்புவோம் என்றார்.

பொதுவாக நாம் சோகமான கட்டுரைகள் எதையும் எழுதுவதில்லை.  சோக கதைகளாக கருதப்படும் பல நிகழ்வுகள் பிற்காலங்களில் நகைச்சுவையாக மாறிய அனுபவங்கள் நிறைய நிறைய உண்டு.  ஆனால் இம்முறை இம்மருத்துவமனை நிகழ்வு மிகச் சட்டென ஏற்பட்டுவிட்டது.  அலுவலகத்திலிருந்து தகவல் பெற்றதும் சென்ற நம்மால்… மருத்துவமனையிலிருந்து சட்டென கிளம்ப கூட தோன்றவில்லை, அங்கிருந்து உதவிகள் புரியலாம் என்றே தோன்றியது.

அடுத்தநாள் நாகர்கோவில் பயணிக்க வேண்டிய சூழல்… பயணத்திட்டத்தை கேன்சல் செய்துவிடலாமா? என்று யோசனை தோன்றியது! உள்ளே இருப்பதா? வெளியே போவதா? மூளையில் கண்ட புற்று நோய்க்கட்டி அறுவைச் சிகிச்சை எவ்வாறு வெற்றிகரமாக நடந்து மிகுந்த பூரண உடல்நலமுடன் நண்பரின் தந்தை வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்பதை விவரமாக எழுத வேண்டும்… அல்லது அவரது தந்தை கோரியதற்கேற்ப, சிறப்பு மருத்துவ முறைமூலம் அறுவை சிகிச்சையின்றி எப்படி புற்றுக் கட்டி கரைந்து போனது என்பது பற்றியும் எழுத வேண்டும்.   மருத்துவமனைகளை தேர்ந்தெடுப்பது குறித்தும், மருத்துவ முறைகளை தேர்ந்தெடுப்பது குறித்தும் அதிர்ஷ்டமும், சந்தர்ப்ப சூழ்நிலையுமே முடிவெடுக்கச் செய்வது குறித்து இன்னும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள தோன்றிடுகின்றது.

பயணம் – தொடர்ச்சியா தொடக்கமா?:-

நண்பரின் தந்தையின் சிந்தித்து தீர்வுகண்டறியும் திறன் மாறுபட்டுள்ளது அதனால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்னும் முடிவை அவரது நெருங்கிய உறவினர்கள் எடுக்கலாம்?  என்று சட்டம் வழிவகை செய்துள்ளதா?  என்பதும் நாம் தெரிந்துகொள்ள விரும்பும் கட்டுரைப் பொருளாகும்.  இந்நேர்வில் என்ன நிகழ்ந்தது என்பதில் எழுத்தாளரின் கற்பனை கலந்துள்ளது, இச்சூழலில் நாகர்கோவில் பயணம் தொடங்கியது.  எனவே ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளபடி நாகர்கோவில் பயண அனுபவங்களையும் இக்கட்டுரை கொண்டுவருவது இயல்பே.  இச்சூழ்நிலையில் கட்டுரை தொடங்கிய இடத்திற்கு திரும்ப சென்று பார்ப்போம்.  அது ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள காரணம்பாளையம் ஆகும் காரணம் இல்லாமல் மருத்துவமனை வழியாக கனத்த இதயத்துடன் நாம் பயணிக்கச் செய்யப்படவில்லை.  மருத்துவமனை அனுபவத்திற்கு முன்பே காவிரி பயணம், ஆற்றின் அனுபவம் ஏற்பட்டுவிட்டது… ஆனால் கட்டுரையில் ஆற்றைவிட ஹாஸ்பிட்டல் அதிக இடம் பிடித்தது இயல்பானதே, சற்றுநேரம் ஆற்றைக்கண்டு திரும்ப வருவோம், வாருங்கள். காரணம்பாளையம் அருகில் கொளாநல்லி என்ற ஊரில் பொன்குழலி அம்மன் ஆலயம் உள்ளது, அதன் அருகே குட்டப்பாளையம் எனும் ஊரில் நண்பர் சென்பகராமன் வீட்டில் ஒருநாள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.  குட்டப்பாளையம் அருகே “பொன்னி தோற்றம்” என்று ஒரு நுழைவாயில் அமைத்து இருந்தனர்.  அதற்குள் நண்பர் சென்பகம், அழைத்துச் சென்றார்.  “பயணம் என்பது இனிமையானது.  வீட்டில் இருப்பதும் அதற்குச் சமமாக இனிமையானது.  இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானது; இருந்தாலும் இவை இரண்டையுமே நான் நேசிக்கின்றேன்’, என்று ஒரு எழுத்தாளர் கூறியிருந்ததை, ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் படித்தது ஞாபகம் வந்தது.

பொன்னி தோற்றம்:-

“பொன்னி தோற்றம்” என்பது ஒரு நுழைவாயில் முகப்பின் (Arch) ஆர்ச் மீது எழுதப்பட்டு இருந்தது.  அது வழியாக இருசக்கர வாகனத்தில் சற்றே மேடான சிறு குன்றின் மீது இலேசாக மழை தூறிக்கொண்டிருந்த, செப்டம்பர் 2017 ல், ஏறியது ஒரு அற்புதமான அனுபவம்.  அந்த மலைமீது ஏறி, அங்கிருந்த ஒரு தனியார் பள்ளி கட்டிடத்தின் பக்கவாட்டில் சென்றால், முன்பொரு காலத்தில் எழுத்தாளர் கல்கி அவர்களும் அவரது நண்பரும் அமர்ந்து, ‘பொன்னி’ நதியென புகழப்படும் காவிரி நதி வளைந்தோடி வரும் அழகை கண்டு இரசித்த, இடத்தை அடையலாம்.  ‘பொன்னியின் செல்வன்’ மிக நீளமான ஒரு காவியம்.  அதில் காவிரி நதியின் கண்ணைக் கவரும், கருத்தை நெகிழ்விக்கும் தோற்றம் குறித்து எழுதுவதற்கு… இந்த இடத்தில் வந்து, இப்படி ஒரு கண்கொள்ளா அழகை கண்டதும், ஒரு காரணமாக இருந்தது என்று இப்பகுதியில் வாழும் பெரியவர்கள் கூறுவார்கள் என்று நண்பர் சென்பகம் என்றழைக்கப்படும் சென்பகராமன் கூறினார்.

அங்கிருந்து காரணம்பாளையம் வரை இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது மழை தூவியது.  ‘ஜோடர்பாளையம்’ என்ற ஊர் காரணாம்பாளைய காவிரிக் கரையின் மறுபகுதியில் அமைந்திருக்கிறது என்று நண்பர் சென்பகம் கூறினார்.  அந்த இடத்தில் ஒரு சிறு தடுப்பணை போல அமைத்து இருந்தனர் பொதுப்பணித்துறையினர்.

சாதாரண சாகசங்கள்:-

“பொன்னி தோற்றம்” இடத்திலிருந்து காவிரியை கண்டபொழுது தொன்னூற்றி ஐந்து சதவிகிதம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.  அதிலென்ன ஐந்து சதவிகித கணக்கு?  என்று நீங்கள் கேட்பது கேட்கின்றது… சொல்கின்றோம்… மழை பொழிந்து இப்பொழுது அசைந்தாடி நடனமாடி வரும் காவிரி கடந்த ஒருவருடமாக நீர்குறைவால் சிக்கலில் இருந்தபொழுது தலைநரைத்துப்போன கொஞ்சம் தென்னைமரங்கள் இன்னும் தங்களுக்கு தண்ணீரை உறிஞ்சி ‘டை’ (Dye) பச்சை நிறத்தில் அடித்துக்கொள்ளாமல் இருந்ததுதான் அந்த ஐந்து சதவிகித காட்சிக் குறைக்குக் காரணம்.  இருசக்கர வாகனம் ஓட்டி பத்தாண்டுகள் கடந்த நிலையிலும்… சென்பகம் விடுவதாக இல்லை வாகனம் ஓட்டுவது என்றவுடன், அட்டகாசமான வேகத்தில் சென்பகராமனின் எதையும் தாங்கும் இதயத்தைக்கூட அச்சத்தில் ஆழ்த்தும் வண்ணம் (காரை (Car) மகிழ்வுந்தை) செலுத்திவந்த நண்பரின் இல்லத்தரசியின் அபாயகரமான சாதாரண சாகசம் நினைவு வருகின்றது.  உடனே! இளங்கோ, என்னும் புதுக்கோட்டை ஓட்டுனர் நினைவு வருகிறது.  அவர்தான் முதன்முதலில் நான்குசக்கர வாகனம் செலுத்த கற்றுக் கொடுத்தார்.   “ஒவ்வொரு முறை வாகன செலுத்தும் வட்டத்தை கையில் பிடிக்கும் பொழுதும், அன்றுதான் முதன்முதலாக வாகனம் செலுத்த கற்றுக் கொள்வது போல எண்ணிக்கொண்டு அமர வேண்டும்” என்றார்.  ஆஹா… என்னே ஒரு கவனத்தைக் குவிக்கும் முயற்சி.

லா – பெட்ரோஸா:-

அண்ணியார் வாகனத்தை செலுத்திய சமயத்தில், கடவுள் எங்களது காரின் (சீறுந்தின்) பானெட்டில் (முகப்பில் – Bonnet) ல் அமர்ந்து எங்களை பாதுகாத்து சென்னையிலிருந்து சேலம் அழைத்துவந்தார் என்று கூறினோம்.  தி பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங் (The Power of Positive Thinking – நேர்மறை சிந்தனையின் ஆற்றல்) என்கின்ற புத்தகத்தில் கடவுள் உங்களுடனே இருக்கின்றார் என்பதை உணர்வீராக என்று கூறியிருப்பதை வாகனம் காற்றைக்கிழித்து பயணித்த பொழுது அச்சமுற்ற சென்பகராமனை கண்டு தெரிந்து, தெரிந்து தெளிந்தோம்.  தமிழக சாலைகள் விபத்துக்களால் இரத்த வண்ணம் உதட்டு சாயம்போல் பூசிக்கொண்ட தோற்றம் தருபவை என்ற மட்டில் நமக்கு சற்றே மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்று தோன்றலாம் ஆனால் அதில் உண்மை இல்லாமல் இல்லை என்று புள்ளி விவரங்கள் தெள்ளத் தெளிவாகக் காட்டும்.  நமக்குத் தெரிந்த உறவினர்கள் , நண்பர்களில் சிலபலருக்கு காயம் முதல் காலம் வரை பாதிப்புக்களை சாலைப் பயணங்கள் ஏற்படுத்தாமல் இல்லை என்கின்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்வோம்.  இருசக்கர வாகனப்பயணம், என்றவுடன் ‘லா-பெட்ரோஸா’ நினைவு வராமல் எப்படி?

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2018

கண்கள் காட்டும் கல்லீரல் காதல்
மூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் !!
முயற்சியே முன்னேற்றம்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 10)
சுயமுன்னேற்ற தத்துவ முத்துக்கள்
கானக சங்கமம்
பழைய – புதிய நினைவுகள்
ஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்
பிப்ரவரி மாத உலக தினங்கள்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
பாயும் ஆறு
ஒத்தி வைக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது எப்படி?
வெற்றி உங்கள் கையில் – 50
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்- தொடர்ச்சி- 3
வாழ நினைத்தால் வாழலாம் – 12
தன்னம்பிக்கை மேடை
உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…
உள்ளத்தோடு உள்ளம்