Home » Articles » வாழ நினைத்தால் வாழலாம் – 12

 
வாழ நினைத்தால் வாழலாம் – 12


மித்ரன் ஸ்ரீராம்
Author:

சகிப்புத்தன்மை

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

எனக்கு மிகவும் பிடித்த நடிகரின் மீது தரமற்ற தாக்குதல்.  வார்த்தை சாடல்கள்.  என்னால் பொருக்க முடியவில்லை – பொங்கவா?

என்னுடனேயே பழகிய என் நண்பன்.  புல்வெளியோடு தான் கட்டியிருக்கும் புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு என்னை அழைத்திருக்கிறான்.  புகைச்சலாக இருக்கிறது – போய்வரவா?

ஏதேதோ மாற்றங்கள் அரசியலில்.  என் தலைவனின் ஆசைகள் தடம் மாறுகின்றது.  தகிக்கிறது என் மனம் – தாக்கவா?

வீட்டுவாடகை, விலைவாசி, விடுமுறை செலவுகள், வருமானம் போதவில்லை.  சேமிப்பும் இல்லை.  என் முதலாளி வீட்டை – முற்றுகையிடவா?

வழிப்பறி கொள்ளை, வீதியில் நடக்கவே பயமாக இருக்கிறது.  மனமும் கலவரமாக இருக்கிறது – களம் இறங்கவா?

தாலி கட்டியவளோடு தகராறு.  தற்கொலை எண்ணத்தை தடுக்க முடியவில்லை – சாகவா?

தொலைகாட்சி தொடர்களில் ஒலிப்பதுபோலே இப்போது இங்கே சமூகத்தில் எதிரொலித்துக்கொண்டிருப்பது இதுபோன்ற ஓலங்கள் தான்.

இல்லாததைபற்றி மட்டுமல்ல “இழந்ததை” பற்றியும் புலம்பல் அதிகமாகத்தான் ஆர்பரிக்கிறது.

தனக்கு சம்மந்தமே இல்லாத விஷயங்களும் சரி – அல்லது தானே சம்பந்த்தப்பட்ட விஷயங்களாகட்டும், இந்த நூற்றாண்டில் மனித சமூகம் மெல்ல மெல்ல என்று தொடங்கி இன்று மொத்தமாக தொலைத்து விட்டிருப்பது “சகிப்புத்தன்மை” என்ற ஒன்றைத்தான்.

மற்றவர்களின் வெற்றி எனக்குப் பொறாமையைத் தருகிறது.

என்னுடைய தோல்வி எனக்குக் கோபத்தைத் தருகிறது.

என்னால் சகிக்க முடியவில்லை.

விரல் வலிக்க நான் நடந்துகொண்டிருக்கும்போது – என் நண்பனின் விமானப்பயணம்.

கந்தல் உடையை நான் தைத்துக்கொண்டிருக்கும்போது – புது சட்டை என் எதிர்வீட்டு கொடியில்.

நோட்டை வாங்கி – ஓட்டை போட்டு – கோட்டை அனுப்பி விட்டேன் – கோட்டை விட்டேன் என்பது அரிசிக்காகவும், சர்க்கரைக்காகவும் பெரிய வரிசையில் காத்திருக்கும்போது – கொடிபோட்ட காரில் அவன் சிரித்தபடி சென்று கொண்டிருந்தான் – தன் வணிகக்கட்டிடத்தில் தன் வியாபாரத்தை கவனிக்க.

சகிக்க முடியவில்லை.

சுமக்க நான் – சுகிக்க மற்றவரா?

உண்மைதான் நண்பரே!  உங்கள் புரிதல் சரியாக இல்லாதபோது மற்றவர் பார்வையில் மட்டுமல்ல – வாழ்விலுமே நீங்கள் ஒரு கோமாளியாய், ஏமாளியாய், முட்டாளாகத்தான் முத்திரைப் பெறுவீர்கள்.

“சகிப்புத்தன்மையை” சரியாய் புரிந்து கொள்ளுங்கள்.

நாத்திகனுக்கு கல்லாக தெரிவதுதான் ஒரு ஆத்திகனுக்கு கடவுளாகத் தெரிகிறது.

கல்லோ கடவுளோ!  நீ முழுவதுமாகத் தெளிந்துகொள்.

உன்னுடைய “சகிப்பும்” “தன்மையும்” தான் “சகிப்புத்தன்மை” என்று உணர்.

எதற்கு சகிப்பது – எதற்கு எதிர்ப்பது என்று அறி.

எப்படி சகிப்பது – எப்படி எதிர்ப்பது என்று உணர்.

வாழ்க்கை சாகரத்தில் “சகிப்புத்தன்மை” குறித்து முத்தெடுப்பதர்க்கு ஒரு முன்னுரையாக – என்னுரை.

இந்த உலகின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக, முதல் புள்ளியாக விளங்குவது சகிப்புத்தன்மை இல்லாதது தான்.

மனிதர்களை துண்டாடும் மத பிரச்சினை, பேதம் பார்க்கும் ஜாதி பிரச்சினை, விரிசல்கள் பெரிதாகாமல் விட்டுக்கொடுத்து போகும் தன்மையற்ற நிலை – எல்லாவற்றுக்கும் காரணம் சகிப்புத்தன்மை இல்லாதது தான்.

ஆண்டாளை பற்றிய ஒரு கவிஞரின் கருதும் சரி – அதற்க்கான அரசியல் விமர்சகர்களின் கருத்தும் சரி – சகிப்புத்தன்மையின் எல்லையை சோதித்துப்பார்த்த சோதனையே.

Cricket விளையாட்டின் ஒரு தோல்வி – அந்நாட்டு பயிற்சியாளரை ப(லி)ழி வாங்கிய அந்த சம்பவம் சகிப்புத்தன்மை இழந்த சில விளையாட்டு வீரர்களின் வெறியின் வெளிப்பாடே.

மற்றவர்களின் கருத்து சுதந்திரத்திற்கும், எழுத்து சுதந்திரத்திற்கும் எதிர்ப்பு வருவது – சம்பந்தப்பட்டவர்களின் சகிப்புத்தன்மையை சந்தேகப்பட வைக்கிறது.

பிறருடைய எண்ணங்களை, உணர்வுகளை மதிக்க மறுப்பது சரியான அணுகுமுறை அல்ல.

இந்த உலகம் நமக்காக மட்டுமே படைக்கப்பட்டதல்ல.  இயற்கையின் படைப்புகள் அனைத்துக்கும் இங்கே இடம் உண்டு – உரிமை உண்டு.

போராட்டம் நிறைந்த இந்த வாழ்க்கை – போர்க்களமாக மாறிப்போவதர்க்கு சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது தான் காரணம் என்று உணர்க.

சகிப்புத்தன்மை என்பது ஒரு சாதனை வரம்.

அதை கற்றவர்களும் பெற்றவர்களும் என்ற பட்டியல் நம் முன்னோர்களோடு முடிந்துவிடக்கூடாது.

ஆம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற தன்மைகளில் மிக முக்கியமானது “சகிப்புத்தன்மை”

அவர்கள் வாழ்வியல் சிறந்ததர்க்கும், சாதனைகள் தொடர்ந்ததர்க்கும் காரணியாக இருந்தது அவர்கள் சகிப்புத்தன்மையே.

சூதாட்டத்தில் தன் சகோதரன் செய்வது தவறு என்று தெரிந்தும் – வனவாசம் இருந்த காலங்களில் சந்தித்த இடர்கள் பல இருந்த போதும் – ராஜ்யம் மறுக்கப்பட்டு போர்தான் தீர்வு என்று ஆனபோதும் பஞ்ச பாண்டவர்களிடம் விஞ்சி இருந்தது “சகிப்புத்தன்மையே.

கூட்டுக்குடும்பம் என்ற சொல் பல இல்லங்களின் இனிய நாதமாக விளங்கியதற்கு சகிப்புத்தன்மையே காரணம், ஏனென்றால் அங்கே தவறுகள், கருத்து பேதங்கள் மன்னிக்கப்பட்டன.

முனிவர் ஒருவர் புனித ஆற்றில் முங்கி குளித்து வெளியில் வந்தபோது கயவன் ஒருவன் சேற்றை வீசி எறிந்தான்.  மீண்டும் முங்கி எழுந்து வந்தார் முனிவர்.  இப்போதும் அவன் சேற்றை வீசினான்.  மூன்று, நான்கு, ஐந்து என்று ஏறிக்கொண்டே போனது எண்ணிக்கை.  கயவனும் நிறுத்தவில்லை, முனிவரும் முடிக்கவில்லை.  கோபத்தின் உச்சிக்கு போன கயவன் “ஏன் முனிவரே? இப்படி அவமானப்படுத்தியும் இன்முகம் காட்டுகிறீர்கள்.  உங்களுக்கு என்மேல் கோபமே வரவில்லையா?” என்று கேட்டான்.

முனிவர் சொன்னார் “நான் உனக்கு நன்றி சொல்கிறேன் நண்பா.  இந்த புனித ஆற்றில் மீண்டும் மீண்டும் மூழ்க வைத்து என் பாவங்களை கரைக்க பேருதவி செய்கிறாய் நீ.  நீடுழி வாழ்” என்று ஆசீர்வதித்தார்.

வெட்டுப்பட்ட மரம்போல் முனிவர் காலில் விழுந்தான் கயவன்.  “என்னை மன்னித்துவிடுங்கள்.  இந்த ஊரின் செல்வந்தர் ஒருவர் உங்கள் புகழின்மீது பொறாமை கொண்டு என்னை இப்படி செய்யும்படி பணித்தார்.  நீங்கள் அவமானப்படுவதில் ஆனந்தம் காண நினைக்கிறார்.  உங்களை ஆத்திரப்படுத்தி, அவமானப்படுத்தினால் நீங்கள் தன் நிலை மறந்து என்மீது கோபப்பட்டு சண்டையிடுவீர்கள்.  நாம் கட்டிப்பிடித்து உருண்டு சண்டையிடுவதை ஊர்மக்கள் பார்த்தால் உங்களை கேவலமாக பேசுவார்கள்.  நீங்கள் மதிப்பிழப்பீர்கள்” என்பதே அவர் திட்டம்.  அதை செவ்வனே செய்தால் எனக்கு பெருமளவு பணம் தருவதாக சொன்னார்.  நானும் பணத்துக்கு ஆசைப்பட்டு சம்மதித்தேன்.  இப்போது தோற்றுப்போய் நிற்கிறேன்.  என்னை மன்னிக்கவும், என்றான்.

முனிவர் சொன்னார் “தோழனே, இதை நீ முன்னமே சொல்லியிருந்தால் நான் உன்னுடன் சண்டை போட்டிருப்பனே.  உனக்கும் பணம் கிடைத்திருக்குமே.  இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார்.

கயவன் ஆச்சரியப்பட்டான்.  கரகரத்த குரலில் கண்ணீர்மல்க சொன்னான் “ஐயா, காரணமே தெரியாத சூழலில் நான் இழைத்த துன்பத்தை “சகிப்புத்தன்மை” கொண்டு புண்ணியம் என்று ஏற்றீர்.  காரணம் தெரிந்தபிறகு என் தவறை மன்னித்து எனக்கு உதவ முடியவில்லையே என்று வருந்துகிறீர்.  என்னே உங்கள் சகிப்புத்தன்மை” – என்று வியந்து போற்றினான்.

“சகிப்புத்தன்மையின் உச்சம் இந்த சம்பவம்!

“சகிப்புத்தன்மை” – மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக்காட்டும் வித்தை.

“சகிப்புத்தன்மை” – ஆன்ம பலம் வேண்டுவோரின் அஸ்திவாரம்.

“சகிப்புத்தன்மை” – நிறை ஞானாம் கொண்டவரின் நெற்றிக்கண்.

“சகிப்புத்தன்மை” – வெற்றியாளர்களின் விசேஷ குணம்.

“சகிப்புத்தன்மை” – ஆறாம் அறிவின் அடையாள சின்னம்.

முனிவரின் “சகிப்புத்தன்மை” – அருளாக அறியப்பட்டது.  கயவனின் ஊனக் கண்களை திறந்தது.

காந்தியின் “சகிப்புத்தன்மை” -சத்தியாக்கிரகம் என்று உணரப்பட்டது.  கத்தியின்றி, ரத்தமின்றி சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தது.

அன்னை தெரசாவின் “சகிப்புத்தன்மை” -அன்பு என்று உணரப்பட்டது.  வாழ்வில் தள்ளி வைக்கப்பட்டவர்களுக்கும் நல்ல தடத்தை காட்டி சென்றது.

“சகிப்புத்தன்மை” – என்பது சாதனை படைத்தவருக்கு மட்டும் சொந்தமல்ல.  சாமானியனுக்கும் தேவை.  ஒவ்வொருவருடைய “சகிப்புத்தன்மையும் வெவ்வேறு பொருளாக, சொல்லாக அடையாளம் பெறுகிறது – அவரவர் நிலையில்.

அவையாவும் தனிமனிதனுக்கும், இந்த சமூகத்துக்கும் நன்மை படிப்பதாக இருப்பதே நலம்.

உங்கள் “சகிப்புத்தன்மை” –

நல்ல கல்வியாக அறியப்படட்டும் – தற்கொலைகளை தடுக்கட்டும்.

நல்ல ஞானமாக அறியப்படட்டும் – மதங்களையும், மனங்களையும் இணைக்கட்டும்.

நல்ல சிந்தனையான அறியப்படட்டும் – உயர்ந்த வாழ்க்கை முறையாக மாற்றட்டும்.

நாட்டின் முன்னேற்றமாக அறியப்படட்டும் – விஞ்ஞான வளர்ச்சியாக மிளிரட்டும்.

இறக்க குணமாக அறியப்படட்டும் – வன்முறைகள் ஒழியட்டும்.

தயாள குணமாக அறியப்படட்டும் – மனிதநேயம் மலரட்டும்.

இப்படி முற்போக்கான அர்த்தங்களாக அறியப்பட்டால் – “வர்கபூமி” என்று ஏளனப்பேரை எடுத்த உலகம் – “சொர்க்கபூமி” என்று சொல்லப்படும்.

அந்த பூமியில் துன்பமும் வன்மமும் இருக்காது. பொறாமை எண்ணங்கள் புதை குழிக்கு இரையாகி இருக்கும். தெளிவான பாதைகள் தீர்க்கமாகத் தெரியும்.                         நண்பர்கள் நல்லவர்களாகவும் – நல்லவர்கள் நண்பர்களாகவும் சங்கமிப்பதால் சங்கடங்கள் சவக்குழியில்.

கை கொடுப்பவன் கர்ணனாகவும், தோள் கொடுப்பவன் தோழனாகவும் ஒரு இனிமையான சுற்றம்.

மாதிரியான மனிதர்கள் இனி “முன்மாதிரியான” மனிதர்கள் என்ற உயர்ந்த நிலையில்.

ஆன்மீகமான அரசியலும், அரசியலான ஆன்மீகமும் உங்கள் சிந்தைக்குளத்தை சிதைக்காத கற்களாக – வெறும் சொற்களாக இருக்கும்.

தலை நிமிர்ந்து வாழும் அடுத்த தலைமுறைக்கு ஒரு தலையாக – தலைவனாக நீங்கள்.

உங்கள் வாழ்வெனும் ஆனந்த சோலையின் அத்தனை நறுமலர்களும் உங்கள் காலடியில் – பாதை எங்கும் பன்னீர் புஷ்பங்களாய்.

கவியரசர் சொல்வதுபோல் “இத்தனை சிறிய மனிதன் தலையில் எத்தனை சுமைகளடா, இருப்பதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா” – என்ற சோகப்புலம்பல் இல்லாத சுவர்க்க வாழ்க்கை.

முன்னேற்றப்பாதையில் முட்டுக்கட்டை வந்தாலும் கூட “சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ, வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு – காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்” – என்று நம்பிக்கையுடன் நகர்த்த வைக்கும்.

“சகிப்புத்தன்மை” யின் உச்சமாக கவியரசரின் கட்டியம் கூறும் வரிகள் இது.

“ஆசையிலே சில நாள் பெரும் அவதியிலே சில நாள்

காதலிலே சில நாள் மனக் கவலையிலே சில நாள்

வாழ்வதுவோ சில நாள் இதில் வாடுவதேன் பல நாள்” – என்று தைரியம் ஊட்டுகின்றார்.

சென்றதெல்லாம் வருமோ – அதை சிந்தனை தான் தருமோ

வந்ததை யார் தடுத்தார் – இனி வருவதை யார் மறுப்பார்

இமைகளை மூடிடுவோம் – அதில் துயர்களை மூடிடுவோம்

மறுபடியும் விழிப்போம் – புது மனிதரைப்போல் பிறப்போம்” – என்று “சகிப்புத்தன்மை” யை சந்தோஷத்தோடு ஏர்க்கச்சொல்கிறார்.

எர்ப்பீர்!  “சகிப்புத்தன்மை” யை வாழ்வில் சேர்ப்பீர்!

சேர்த்தால்

“வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”

 

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2018

கண்கள் காட்டும் கல்லீரல் காதல்
மூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் !!
முயற்சியே முன்னேற்றம்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 10)
சுயமுன்னேற்ற தத்துவ முத்துக்கள்
கானக சங்கமம்
பழைய – புதிய நினைவுகள்
ஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்
பிப்ரவரி மாத உலக தினங்கள்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
பாயும் ஆறு
ஒத்தி வைக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது எப்படி?
வெற்றி உங்கள் கையில் – 50
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்- தொடர்ச்சி- 3
வாழ நினைத்தால் வாழலாம் – 12
தன்னம்பிக்கை மேடை
உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…
உள்ளத்தோடு உள்ளம்