Home » Cover Story » உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…

 
உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…


ஆசிரியர் குழு
Author:

பேராசிரியர். முனைவர் பொ. குழந்தைவேல்

துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

என்ற குறட்பாவில் வள்ளுவர், ஒருவர் எதைச் செய்தாலும் அன்போடும் தர்ம நியாயம் தவறாமலும் செய்தால் அது தான் அவர்களின் இல்வாழ்க்கையின் தன்மையாகும். அதனால் உலகத்துக்கும் நல்ல பயன் உண்டாகும் என்பதே இக்குறளின் நோக்கமாகும். இக்குறளிற்கு ஏற்றார் போல் வாழ்ந்துவருபவர்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தமிழ்வழியில் கல்வி பயின்று, கிராம சூழ்நிலையில் இயற்பியல் விஞ்ஞானத்தை முடித்து, பல நாட்டு வல்லுநர்களிடம் ஆராய்ச்சிகளில் பாராட்டுப் பெற்று இன்று துணைவேந்தர் பதவியை அடைந்துள்ளவர்.

இயற்பியல் விஞ்ஞானத்தை கல்லூரி முதல் பல்கலைக்கழகம் வரை எளிய முறையில் கற்பித்து பல ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

எப்பொழுதுமே ரௌத்திரம் இல்லாத நவரசத்தை மட்டுமே அனைவரிடத்திலும் போதிக்கும் அன்பும் அரவணைப்பும் மிக்கவர்.

வாழ்கையில் பெரும் எதிர்பார்ப்பற்று வாழ்வது கடினம் தான். எதிர்பாராத எதிர் பார்ப்புகள் அமைவது மிகக்கடினம். உலகம் பெரும் வித்தியாச மனப்போக்கை கொண்டது. அப்படிப்பட்ட உலகில் “பண பலத்தை விட மனபலம் தான் முக்கியம்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் இவர் தன் வாழ்வை ஏர் முனையில் ஆரம்பித்தவர்.

நல்ல பண்பாளர், படைப்பாளர், அறிவியல் விஞ்ஞானி, வேளாண் வித்தகர், நேர்மையின் சொந்தகாரர் என்று பன்முக திறமை உடைய சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பொ. குழந்தைவேல் அவர்களின் நேர்முகம் நம்மோடு…

கே. உங்களைப் பற்றியும் நீங்கள் கல்விப் பயின்றது பற்றியும் கூறுங்கள்?

நாமக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டி என்னும் அழகிய குக்கிராமத்தில் திரு. பொன்மலைக்கவுண்டர் திருமதி. நல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தேன். விவசாயம் மட்டுமே அறிந்த தெரிந்த குடும்பம் எங்கள் குடும்பம். அன்றும், இன்றும், இனியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு விவசாயத்தை  நேசிக்கும் குடும்பமாகத் திகழ்ந்து வருகிறது. எனக்கும் சின்ன வயதிலிருந்தே விவசாயம் செய்வது மிகவும் பிடிக்கும். இன்றும் விடுமுறைநாட்களில் வயலுக்குச் சென்று விவசாயம் பார்த்து தான் வருகிறேன். இதற்கு நான் எப்போதும் பெருமைப்படுவதுண்டு. என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதிரிகள். என் மனைவி அமராவதி வீரபாண்டி இரத்தினசாமி அவர்களின் புதல்வி.  எங்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள், மூத்த மகன் டாக்டர். கு. பிரசாத், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகின்றார். எனது இளையமகன்   கு.கல்யாணசுந்தரம், சாப்ட்வேர் இன்ஜினீயராக கோவையில் பணிபுரிகின்றார்.

விவசாயக் குடும்பத்தின் பின்னணி என்றாலும் என்னைப் படிக்க வைக்க வேண்டும் என்பது எனது தந்தையின் மிகப்பெரிய இலட்சியமாக இருந்தது. இதனால் அருகிலிருந்த கல்கட்டானூர் என்ற சிற்றூரிலுள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தேன். அங்கு எனக்கு திரு. சுப்பரமணியம் அவர்கள் ஆசிரியராக இருந்தார் அவர் மாணவர்களிடம் பழகும் அணுகுமுறை மிகவும் நன்றாக இருக்கும். அவர் வகுப்பில் எப்போதும் கல்வியின் சிறப்பினைப் பற்றிக் கூறுவார். இது எனக்கு மிகவும் கல்விப் பயணத்தில் உறுதுணையாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்போது என்னுடன் இருக்கும் நேர்மையும், நம்பிக்கையும் என்னுடைய தாய் தந்தையிடமிருந்தும், எனக்கு கல்வி போதித்த ஆசிரியர்களிடமிருந்து வந்தது.

அதன் பிறகு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை பயின்றேன். அன்றைய காலக்கட்டதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது அதிகம் மதிப்பெண் எதில் வாங்குகின்றோமோ அதனை ஆசிரியரே தேர்வு செய்து நமது பாடப்பிரிவைத் தேர்வு செய்வார்கள். ஆனாலும் சிலர் தங்களின் விருப்பத்திற்கிணங்க பாடங்களை மாற்றிக் கொண்டார்கள், ஆனாலும் என்னால் இயற்பியல் துறையிலிருந்து மாற்றிக் கொள்ளவில்லை. இயற்பியல் துறையில் எனக்கு அப்பொழுதே ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் ஆசிரியர்கள் தேர்வு செய்ததையே படித்தேன்.

கே. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பிற்குள் நுழைந்தது குறித்து சொல்லுங்கள்?

பி.யுசி மற்றும் இளநிலைப் படிப்பை ஈரோட்டின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான சிக்கையநாயக்கர் கல்லூரியில் முடித்தேன்.  முதுகலைப் பட்டப்படிப்பை தஞ்சாவூரிலுள்ள ஏ.வி.வி.எம் புஷ்பம் கல்லூரியில் பயின்றேன்.  பள்ளியில் பழனிசாமி ஆசிரியர் அவர்கள் தான் நான்  இயற்பியல் எடுத்து படிக்க வேண்டும் என்று ஊக்கம் கொடுத்தார். எனது இந்த ஆர்வம் என் ஆசிரியர் மூலம் தான் வந்தது என்றுதான் கூற வேண்டும்.

நான் படிக்கும் பொழுது முதுகலையில் நல்ல மதிப்பெண் பெற்றதால் தான் எனக்கு ஆராய்ச்சி செய்ய ஆர்வம் கூடியது. 1979 ல் முதுகலைப் படிப்பை முடித்த நான், 1980ல் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று எண்ணினேன் அவ்வாறு இருக்கையில் அன்னூரில் உள்ள அரசினர் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அதில் 6 மாதங்கள் மட்டுமே நிலைத்து நின்றேன். எனக்கு ஆராய்ச்சித் துறையில் ஆர்வம் இருந்ததால் நான் எம்.ஐ.டி கல்லூரியில் ஆராய்ச்சித் துறையில் சேர்ந்தேன். அதற்கு முழுக்காரணமும் என்னுடன் பணிப்புரிந்த இராமய்யா என்பவர் தான். அவர் தான் என்னைப் படிக்கும் படியும் ஆசிரியர் பணியை விடும்படியும் அறிவுறுத்தினார். பிறகு என் பணியில் இருந்து விலகி விட்டு எம்.ஐ.டி கல்லூரியில் சேர்ந்தேன்.

இதுபற்றி வீட்டில் யாருக்கும் தெரியாது. வீட்டில் இவ்வாறு இருந்த தருணத்தில் என் வீட்டில் எனக்கு மணம் புரிய பெண் பார்த்தனர். அப்பொழுது எனக்கு 22 வயதுகளே நிரம்பி இருந்தது. அவ்வாறு இருக்கையில் நான் வேலையை விட்டதைக் கூறிவிட்டு படிப்பைத் தொடரவே திருமண வேலைகள் நின்றன.

ஆரம்பத்தில் என்னுடைய தந்தை இதற்கு மறுப்பு தெரிவித்தார். உனக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கும் போது இப்படி வேலையை விட்டுவிட்டு படிக்கிறேன் என்று சொல்கிறாய். என்று முதலில் சொன்னார் அதன்பின் படிப்பதற்கு அனுமதி கொடுத்தார்.

கே. வேலையை விட்ட பின்னர் அடுத்த உங்கள் திட்டம் என்னவாக இருந்தது?

சென்னை சென்று படிக்க வேண்டும் என்று நினைத்து கையில் ஒரு பொட்டி எடுத்துக் கொண்டு சென்று விட்டேன். முதன் முதலில் ஊரை விட்டு வெளியே செல்கிறேன்.

இதற்கு முன் ஒரு முறைசென்னைக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நானும் என் நண்பர் ஒருவரும் சென்றோம் இருவருக்கும் சென்னை புதியது. இருவருக்கும் அந்த முகவரி தெரியாது. ஆனாலும் சரியாகப் பேருந்து பிடித்து சென்று விட்டோம், ஆனால் இறங்கும் இடத்தை விட்டுவிட்டு 5 கி.மீ நடத்தே சென்றது சென்னையின் முதல் அனுபவம்.

அவ்வாறு ஒரு மறக்க முடியாத சம்பவத்திற்கு அடுத்து சென்னை செல்கிறோம், என்று முதலில் சற்று மனதிற்குள் ஐயமாக இருந்தது.

அதுவும் சென்னை போன்றபெரிய நகரம், அங்கு யாரும் தெரியாது, எங்கு தங்குவதும் என்றும் தெரியாது இப்படிப்பட்ட சூழலில் சென்றேன்.

ஒரு கிரமாத்துக்காரன் எப்படி இருப்பாரோ அப்படி நானும் வேட்டி சட்டை கையில் ஒரு பெட்டி, கண்ணில் ஒரு தேடுதல் என்று அங்கும் இங்கும் தேடிக்கொண்டு இருந்தேன். அதன் பிறகு நெறியாளர் உதவியுடன் அங்கு விடுதியில் தங்குவதற்கு அனுமதி கிடைத்தது.

சில ஆண்டுகளுக்கு பின்னர் நான் பேராசிரியர்  பொன்னுசாமி என்பவர்  உதவியால் திருச்சியில் பல்கலைக்கழகத்தில் இணைந்தேன். பல இடர்பாடுகளுக்கு இடையில் அங்கு இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். 4 வருட ஆராய்ச்சிக்கு பல விதங்களில் என்னுடைய ஆசிரியர் நடராஜன் அவர்கள் உதவியாக இருந்தார். அடுத்து இயற்பியல் துறைப் பேராசிரியர் இலட்சுமணன் அவர்களின் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

கே. எம்.ஐ. டி யில் முனைவர் பட்டம் பயின்ற அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

வேலையை விட்டு படிப்பதற்கு வந்தவுடன் ISRO நிறுவனத்திடமிருந்து அப்போது ஒரு புராஜெக்ட் வந்தது.     அதில் நானும் இன்னும் இரண்டு பேர் என்னுடன் புராஜெக்ட்டில் இணைந்தார்கள். அதில் என்னுடன் இருந்தவர் நேஷனல் கல்லூரியில் படித்தவர். மீதி இருந்தவர் அங்கேயே படித்தவர்கள்.

அப்போது தான் இந்த நிறுவனம் தனியாரிடமிருந்து அரசாங்கத்திற்கு செல்லும் நேரம். அப்போது இந்நிறுவனத்தை வாங்க நிறைய முதன்மையான நிறுவனங்கள் போட்டிப் போட்டு வாங்க முனைந்தன. ஆனால் மீண்டும் அரசாங்கமே வாங்கிக் கொண்டது.

ஆனால் இப்படிப்பை பி. டெக் என்று மாற்றமுனைந்தார்கள், ஆனால் சிலர் இது டிப்ளமோ என்றபெயரிலேயே இருக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

இந்த புராஜெக்ட்டில்  எங்களை நன்றாக இணைத்து கொண்டு செய்தோம். நான் எப்போதும் நினைப்பது என்னவென்றால் எதையும் சரியாகவும் துல்லியமாகவும் செய்ய வேண்டும் அப்போதுதான் தன்னை தகுதியானவராக நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்பதால் தான்.

மிகவும் தரமான படிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கல்வி நிறுவனம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பார்கள்.  என்னுடன் முனைவர் பட்டம் பயில வந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே சென்றார்கள். அதன் பிறகு நானும் படிப்பை முடிக்காமல் வீட்டிற்கு வந்து விட்டேன்.

கே. அப்போதைய அறிவியல் ஆய்வு முறைக்கும், தற்போது இருக்கும் ஆய்வு முறைக்கும் உள்ளவேறுபாடாக நீங்கள் பார்ப்பது?

தற்போது உலகம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அறிவியல் துறையின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் செல்கிறது. அறிவியல் துறைஒரு கடல் போன்றது, அதில் முழ்கிப் பார்த்தால் பல அதிசியங்கள் புதைந்து இருக்கும். அதை யார் முதலில் தேடி கண்டுபிடிக்கிறார்களோ அவர்களே வரலாற்றில் அதிகம் இடம் பிடிப்பார்கள்.

அப்போதும் இப்போதும் தொடர்ந்து புதிய புதிய கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு டாக்டர் கமிட்டி முறையை நான் தான் கொண்டு வந்தேன்.

இதன் மூலம் ஆராய்ச்சியின் மகத்துவத்தை ஆய்வாளர்கள் முறையாக பின்பற்றுவார்கள். எதையும் எழுவது அல்ல ஆய்வு, ஒரு பக்கம் எழுதினாலும் ஆய்வு அறிவியல் முறைபடி எழுத வேண்டும்.

இது பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

கே. உங்கள் ஆசிரியர் பயணத்தில் பணியாற்றிய பிற பொறுப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?

என்னுடைய ஆசிரியர் பயணத்தில் பல பொறுப்புகளை அடைந்திருக்கிறேன். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்  ஆராய்ச்சி டீன், பதிவாளராகவும், பிளானிங் அண்ட் டெவலப்மெண்ட்டில் பொறுப்பாளராகவும், இப்படி நிறைய பொறுப்புகளை பணியாற்றியுள்ளேன்.

ஒவ்வொரு பணியிலும் தலைசிறந்த அம்சங்களைக் கொண்டு வந்தேன். என்றேசொல்லலாம். நம்மிடம் ஒரு பொறுப்பு வரும் பொழுது அது கொண்டு எனனென்ன நலத்திட்டங்கள் கொண்டு வரமுடியுமோ அனைத்தையும் கொண்டு வரமுயன்றேன்.

கே. அறிவியல் துறையில் உங்கள் வாழ்வில் ஏதேனும் வெற்றிடம் விட்டதாக நினைக்கிறீர்களா?

நிச்சயம் என் வாழ்வில் அப்படி எதுவும் விட்டதாக எனக்குத் தெரியவில்லை. நானும் முதல் நாள் கல்லூரிக்குள் நுழையும் போது என்ன நினைத்தேனோ, அதை இன்று வரை கடைபிடித்து வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு புதுமைகளை செய்தல் வேண்டும் என்று நினைப்பேன். அப்படி நான் பேராசிரியராகப் பணியில் ஓய்வு பெற்றாலும் கூட என்னால் முடிந்த அளவுக்கு பணியைச் சிறப்பாகச் செய்துள்ளேன் என்ற மன நிறைவோடு இருக்கிறேன்.

நான் வருடத்திற்கு ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன். அவர்களுக்கு முதலில் ஆய்வு குறித்தான அடிப்படை தகவல்களை மட்டுமே முதலில் போதிப்பேன்.

இப்படி ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் அனைத்து பணிகளையும் சரியாகவும் நேர்மையாகவும் செய்தேன் என்பதை இங்கு என்னால் சொல்ல முடியும்.

கே. தாங்கள் ஆசிரியர் பணியில் இணைந்ததைப் பற்றிக் கூறுங்கள்?

எனது முதல் ஆசிரியர் பணி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்காலிகப் பணியாளராகச் சேர்ந்தேன். டிசம்பர் மாதம் 1984ல் ஆசிரியராகப் பணியில் முதன் முதலில் அமர்த்தப்பட்டேன். ஊட்டியில் பணியில் சேர்ந்த நான் 3 மாதங்களில் இடமாற்றுதல் கேட்டு விண்ணபித்து சிவகங்கையில் சேர்ந்தேன். மீண்டும் மீண்டும் மாற்றுதல் பெற்று தர்மபுரி, திண்டிவனம் என்று மாறிய பின் இறுதியில் ஊட்டிக்கே மாற்றமானேன். 1986 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து ஊட்டியில் ஒரு பெரிய வீட்டில் வாடகையில் தங்கினோம்.

குறைந்த சம்பளத்துடன் வாடகை வீட்டில் நானும் என் மனைவியும் தங்கினோம். என் மனைவி பேறு காலமாய் அவரது இல்லம் செல்ல நான் விடுதியில் தங்கி பணிபுரிந்தேன். இந்த  நான்கு ஆண்டு கால இடைவெளியில் எனது இரண்டு ஆராய்ச்சிகளை வெளியிட்டேன். அதற்குமேல் எந்த ஒரு முன்னேற்றமும் எனது ஆராய்ச்சியில் இடம் பெறவில்லை. இதன் நடுவே கிருஷ்ணகிரியில் உள்ள அரசுக்கல்லூரியில் பணியில் சேர்ந்தேன்.  இவ்வாறு இருக்கையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராய் பணியில் இணையும் பொழுது நான் ஆசிரியரின் மாற்றம் பெரும் பயணம் இத்தோடு நிற்குமென நான் அறியவில்லை.

40 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி தூய நெஞ்சத்துடன் ஆசிரியர் பணிக்குள் நுழைந்தேனோ, அந்த மன நிலையில் தான் இன்று வரை இருக்கிறேன் என்பதே நிதர்சனம்.

கே. இயற்பியல் துறையில் தாங்கள் செய்த சாதனைகள் பற்றிக்  கூறுங்கள்?

நான் எப்போதும் ஒரு சாதனையாளராய் என்னை அடையாளப்படுத்திக்  கொள்ள விரும்பவில்லை, எனது பணியை நான் சரிவர செய்தேன் என்று தான் சொல்ல வேண்டும். நான் பயிற்சி வகுப்புகளைவிட பாடம் எடுப்பதில் கைத்தேர்ந்தவன். 1988ல் ஆரம்பித்த எனது பணி 28 வருடங்களாக அங்கேயே தொடர்ந்தது. இயற்பியல் துறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று நான் வெகுவாக முயன்றேன். அதற்கு என்னுடன் பணிபுரிந்த அனைத்து ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தார்கள். நான் செல்வது வெறும் பாதையில் செல்லும் சாதாரண பயணமாக இல்லாமல் சரித்திரப் பயணமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன் இதனால் ஒரு வருடத்திற்கு ஒரு மாணவனை மட்டுமே எனது ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுத்தினேன். எனது ஆராய்ச்சி கட்டுரைகளை அற்புதமாக வெளியிட்டோம். இதுவரை நாங்கள் 175 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம். இதற்கு என்னுடன் பணியாற்றி ஆராய்ச்சி மாணவர்கள் தான் காரணம். இன்னும் அவர்களுடன் சேர்ந்தே பயணிக்கிறேன்.

நான் பல வெளிநாட்டில் தங்கி பல விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். அதில் மிகவும் உயர்ந்த Fulbright(USA), JSPS(Japan) Royal society (UK) Germany  போன்ற நாடுகளில் ஆராய்ச்சி நிதி உதவி பெற்று ஆய்வுகள் செய்தது, மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன்.

Molecular Structure, Interactions, molecular dynamics போன்ற பல பாடப்பிரிவுகளை ஆராய்ச்சி செய்தேன். நான் இயற்பியல் துறையின் துறைத்தலைவராக 9 வருடங்கள் பணிபுரிந்தேன். பல ஆசிரியர்கள் எனக்கு நல்முறையில் உதவினர். நான் செய்யும் மாற்றங்களுக்கு எனக்கு  உறுதுணையாய் நின்றனர் என்று சொன்னால் அது மிகையல்ல.

கே. கல்வி ஆராய்ச்சி தலைவராக தாங்கள் கல்லூரிக்கு ஆற்றிய பணிகள் பற்றிக் கூறுங்கள்?

நான் ஆராய்ச்சி முதன்மையாளராக 3 வருடங்கள் பணி புரிந்தேன். அந்த நாட்களில் நான் ஆராய்ச்சி துறையில் பல மாற்றங்களையும், பல கட்டுபாடுகளைக் கொண்டு வந்தேன்.

பெரிய கல்வி நிறுவனங்களில் 20% மட்டுமே பயிலும் மாணவர்களுக்கு 80% பண உதவியும், நமது பல்கலைக்கழகம் போன்றவற்றில் 80% மாணவர்களுக்கு 20% பண உதவியும் வழங்குவது என் மனதில் நீண்ட நாள் நெருடலாகவே இருந்து வந்தது. இன்னும் விடை கிடைத்தபாடில்லை. எங்களது ஆராய்ச்சி வேகம் தடை பட  ஒரே காரணம் கணினியின் வேகக்குறைவு மட்டும் தான். இதனால் கணினியின் தட்டுபாட்டை தடுக்க புதுவித கணினி மையத்தை அமைக்க எண்ணினேன். பல முன்னேற்ற படிகளுக்கு பிறகு தான் கணினி மையம் அமைத்தேன்.

திறன்மிகு ஆராய்ச்சிகளை வாங்க பெரும் நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் பணத்தொகை புதிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு உதவியாக இருக்கும். மாணவர்களுக்கு படிக்கும் காலத்தில் உதவித்தொகை வழங்க பெரும் உதவியாக இருக்கும். இது போன்ற ஆராய்ச்சி திட்டங்களை கொண்டு வர எனது முழு முயற்சியையும் செலவிடுவேன்.

கே. பெரியார் பல்கலைகழகம் துணைவேந்தராக தாங்கள் தேர்வு செய்யப்பட்டது எவ்வாறு?

பெரியார் பல்கலைகழகத்தில் நான் துணை வேந்தராக பல கட்ட தேர்வுக்கு பிறகு தான் அமர்ந்தேன். அதிக எண்ணிக்கையில் இந்தப் பதவியில் அமர விண்ணப்பித்தனர். நேர்மைக்கும், தன்னலமற்றபணிக்கும் தான் எனக்கு இந்தப் பணி கிடைத்துள்ளது. இறுதியில் ஆளுநரிடம் நேரடித் தேர்வுக்கு பிறகு முறையான தீர்வு கிடைத்தது.

எங்களது பல்கலைகழகத்திற்கு கீழ் இயங்கும் தன்னாட்சி கல்லூரிகள் கேட்கும் விதங்களில் அவர்களுக்கு நான் உதவத் தயாராக இருகின்றேன். புதுமுறையான கட்டமைப்புகளை நிறுவவும், அவர்களது பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவும், வீடியோ காட்சி கருத்தரங்கங்கள் நடைபெறவும், புதுவிதமான பயிற்சி வகுப்புகளைத் தொடரவும் நான் உதவத் தயாராக இருகின்றேன்.

பல்கலைகழக்கதில் அறிவியல் பூங்கா ஒன்றை நிறுவி மாணக்கர்களுக்கு வித்தியாசமான அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிவதற்கு உதவியாக இருக்கும் படி அறிவியல் பூங்கா ஒன்றை அமைக்க இருகின்றோம்.

கே. வளரும் தலைமுறையினருக்கு தாங்கள் கூறும் கருத்து என்ன?

ஒரு பாடப்பிரிவில் கால் ஊன்றி நிலைத்து நின்று புது புது கண்டு பிடிப்புகளை உருவாக்க வேண்டும். இன்றைய தலைமுறையினரின் பல விதங்களில் ஏறுமுகம் உண்டு என்ற போதும் பல விதங்களில் இறங்கு முகமும் உண்டு. அவர்களுக்கு விடாமுயற்சியாய் பணி செய்யும் வழக்கமற்று, வேலைகளை எளிதில் முடிக்கவே முயல்கின்றனர். இதுவே அவர்களிடம் உள்ள பெரும் பின்னடைவாக உள்ளது.

இன்று 100% மாணவர்களில் 80% மாணவர்கள் எளிதாகப் பணியை முடிக்கவே எண்ணுகின்றனர். அதில் 10 முதல் 20% மாணவர்கள் மட்டுமே விடாமுயற்சியை கைக்கொண்டுள்ளனர். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மட்டுமே இளம் தலைமுறையினரை படிக்க வைத்து முன்னேற்ற துடிகின்றனர். மாணவர்களும் படித்து, சாதனைகளை புரிய வேண்டும்.

கே. தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறவிரும்புவது?

உண்மையாய் இருங்கள். எந்த நிலை வந்தாலும் உண்மைக்கு சற்றும் புறம்பாக நடந்து கொள்ளாதீர்கள்.

நீங்கள் மற்றவர்களை விட முன் மாதிரியாக திகழ வேண்டுமா? மற்றவர்கள் தூங்கும் நேரத்தில் நீங்கள் விழித்திருக்க வேண்டும். அவ்வாறு விழித்திருப்பின் உங்களுக்கென்று வரலாற்று பக்கத்தில் ஒரு பக்கம் நிச்சயம் காத்திருக்கும்.

இந்தப் புத்தகத்தின் தலைப்பை போன்று தன்னம்பிக்கை என்ற ஒன்று எப்பொழுதும் உங்களோடு உறவாடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அவ்வாறு இருப்பின் நீங்களும் சாதிக்கலாம், சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2018

கண்கள் காட்டும் கல்லீரல் காதல்
மூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் !!
முயற்சியே முன்னேற்றம்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 10)
சுயமுன்னேற்ற தத்துவ முத்துக்கள்
கானக சங்கமம்
பழைய – புதிய நினைவுகள்
ஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்
பிப்ரவரி மாத உலக தினங்கள்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
பாயும் ஆறு
ஒத்தி வைக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது எப்படி?
வெற்றி உங்கள் கையில் – 50
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்- தொடர்ச்சி- 3
வாழ நினைத்தால் வாழலாம் – 12
தன்னம்பிக்கை மேடை
உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…
உள்ளத்தோடு உள்ளம்