Home » Articles » துபாய் வாங்க!

 
துபாய் வாங்க!


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

துபாய் சிட்டி டூர்:

2-ஆம் நாள் காலை தங்கியிருந்த ஓட்டலில் காலை இட்லி உட்பட பலவகையான உணவுகளைச் சாப்பிட்டோம். 9 மணிக்கு பஸ் ஏறினோம். தமிழ்நாடு நாகர்கோயிலைச் சேர்ந்த ஷர்புதின் என்ற கைடு உடன் வந்து தமிழில் முழுமையாக விவரித்து வந்தார்.

பேனா முனை போன்ற கூரை அமைப்புடைய எத்திகாடு மியூசிய கட்டடம், ஜூமெய்ரா மசூதி கட்டடம், ஆர்ட் காலரி, ஜூமெய்ரா பீச், தங்கமுலாம் பூசிய குதிரை சிலைகள், பனைமர வடிவிலான செயற்கைத்தீவில் அமைந்துள்ள அட்லாண்டிக் பாம் என்ற ஓட்டல் வெளிப்புறம், மெரினா பகுதி என்று பார்த்தோம்.

அந்தச்சாலையில் கட்டடங்கள் அனைத்துமே முதல் மாடிக்கு மேல் இல்லை. ஆர்ட் காலரியில் ஒட்டகங்களின் எலும்புகளிலிருந்து செய்த பல விதமான பொருட்கள் காண்பித்தனர்.

மதிய உணவு முடித்து, அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின், மாலை 4 மணிக்கு பஸ் ஏறி 1.30 மணி நேர பயணத்தில் சார்ஜா பகுதியிலுள்ள பாலை வனப் பகுதிக்குச் சென்றோம்.

லேண்ட் குரூசர் என்ற காரில் 6 பேர் வீதம் அமர்ந்து பெல்ட் அணிந்து கொண்டோம். பாலை வன மணலில் கார் வெகு வேகமாய் சென்றது. 20 நிமிட பயணம் உண்மையிலேயே மயிர் கூச்செரியுமாறு அமைந்தது.

வயது அதிகமானவர்கள் இருந்த ஒரு கார் மட்டும் இடையில் திரும்பியதாம். அதன் பிறகு துபாய் பகுதிக்கு சென்று கேம்ப் இடத்தில் நடுவே உள்ள மேடையைச் சுற்றிலும் அமர்ந்தோம். இங்கும் வரவேற்பு பானம், பாஸ்தா, காய்கள், பழங்கள் என இரவு உணவு வழங்கினர். பலராலும் சாப்பிட இயலவில்லை.

இடுப்பை ஆட்டும் பெல்லி நடனம், நெருப்பு டான்ஸ் நடந்தது; பார்த்து இரவு 9.15 க்கு திரும்பி உறங்கினோம்.

3-ஆம் நாள்:

உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபாவைக் கண்டு களித்த நாள். பகல் முழுவதும் ஓட்டலுக்கு அருகிலுள்ள 1 முதல் 10 திரம் கடை, டே டு டே மற்றும் பாலிவுட் கடை போன்றவற்றில் பல பரிசளிப்புப் பொருட்களை வாங்கினோம்.

காலணிகளும், ரெடிமேடு துணிகளும் 50 சதவீதம் தள்ளுபடியில் கிடைத்தன. மாலை 6.30 க்கு துபாய்  மால் பகுதியில் 5 நிமிட நீருற்று நடனம் பார்த்து, புர்ஜ் கலிபா கட்டடத்தின் 125 வது மாடிக்கு விப்டில் 70 விநாடிகளில் சென்றோம். 

தரையிலிருந்து இது 555 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கிருந்து சுமார் 95 கி.மீ. தூரம் சுற்றிலும் பார்க்கலாம். கட்டுமான விபரம்:

31400 மெட்ரிக் டன் ஸ்டீல் உபயோகம்

3.30  லட்சம் கன மீட்டர் கான்கீரிட்

5.67 மில்லியன் சதுர அடி பரப்பளவு

மொத்த உயரம் 828 மீட்டர் (2716அடி)

தரையை விட மேலே 6oC குளிர் அதிகம்.

57 லிப்ட் 8 எஸ்கலேட்டர் உள்ளன,

2004 சனவரியில் துவங்கி, 2007 ல் 100 மாடி கட்டி முடித்து, முழுமையாக கட்டி 4.1. 2010 ல் பொது மக்களுக்கு திறக்கப்பட்டது.

இரவு ஆப்பக் கடையில் ஆப்பம், சாப்பாத்தி, தோசை, புரோட்டா, காலி பிளவர் என விதவிமாய் உண்டு அறைக்குத் திரும்பி உறங்கினோம்.  

அபுதாபி:  மறுநாள் காலை தோசை உட்பட பல வித உணவுகளை உண்டு, 9 மணியளவில் பஸ்ஸில் புறப்பட்டோம். அபுதாபி செல்லும் வழியல் பெராரி உலகம் என்ற விளையாடுமிடம் (தீம் பார்க்) வெளியில் இருந்து பார்த்தோம். இங்கு பார்முலா 1 கார் ரேசில் உபயோகித்த கார் முன் நின்று  போட்டு எடுத்து மகிழ்தோம். வழியில் சாய்ந்த கட்டடம் ஒன்று பார்த்து வியந்தோம்.

கிராண்ட் மசூதி என்ற பெரிய மசூதிக்குச் சென்று பார்த்தோம். தாஜ்மஹாலைப் போல வடிவமைத்துள்ளனர். பெரிய ஹால் முழுதும் ஒரே பெரிய கார்பெட் (67570 ச.அடி) விரித்துள்ளனர். ஷேக் சையது மசூதி எனப்படும் இது 30 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.

1996 ல்ஆரம்பித்த பணி 2006 ல் முடிவடைந்தது. இந்த ஹாலில் 41000 பேர் அமரலாம். பெரிய ஏழு சர விளக்குகள்  பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை உள்ளன. இவற்றில் ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்கள் உபயோகித்துள்ளனர். இதில் பெரியது 49 அடி உயரமும் 33 அடி விட்டமும் உடையது.

வியப்புடன் பார்த்து சங்கீதா ஓட்டலில்  மதிய உணவு முடித்து, பேரீட்சை மார்க்கெட்டில் பேரம் பேசி நல்ல பேரிட்சைகள் வாங்கிக் கொண்டு மாலை 6.15 க்கு துபாய் ஓட்டலுக்குத் திரும்பினோம்.

இரவு ராயல் கார்டனில் அருமையான பஃபே உணவாக சைவ தம் பிரியாணி, ரொட்டி, பலவித சைடு டிஷ்கள், தயிர் சாதம் என சாப்பிட்டு, அறைக்குத் திரும்பி உறங்கினோம்.

அபுதாபியில் எண்ணெய் இருப்பு ஏராளமாய் உள்ளது. இங்கு சுமார் 20 இலட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். வசதியற்ற இந்நாட்டின் மக்களுக்கு இலவசமாக வசதியான வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளனர். வானுயர்ந்த கட்டடங்கள் குறைவாக உள்ளன.

புறப்பாடு: மறுநாள் காலை உணவு, மதிய உணவு இரண்டுமே பனோரமா கிராண்ட் ஓட்டலில் சாப்பிட்டோம். சுவையாக இருந்தது. உடன் வந்தோர் இறுதி நேர  ஷாப்பிங் முடித்தனர். ஒய்வு. அறைகளைக் காலி செய்து தரைத்தள பக்கவாட்டு ஹாலில் பெட்டிகளை வைத்து காத்திருந்தோம்.

பஸ் மாலை 5-க்கு வந்து உடன் வந்தோரை அழைத்துக் கொண்டு சார்ஜா விமான நிலையம் சென்றது. இரவு விமானம் ஏறி, மறுநாள் காலை 5 மணியளவில் கோவையில் இறங்கி, நிறைவாய் இல்லம் திரும்பினர்.

என் துணைவியாருடன் நான் அன்றிரவு துபாய் நண்பர் சங்கர் ஏற்பாட்டில் இன்டர்நேஷனல் டோஸ்ட் மாஸ்டர்ஸ் கிளப் என்ற அமைப்பில் FORGIVE & FORGET To GET & GIVE என்ற தலைப்பில் 20 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினேன்.

மறுநாள் சில இடங்கள், மால்கள் பார்த்து பீச் ஒன்றில் குளித்து, நண்பர் ஒருவர் இல்லம் சென்று வந்தோம்.

மறுநாள் மாலை புர்ஜ் கலீபா கட்டடம் அருகில் சவுத் ரிட்ஜ் டவர் 3 என்ற கட்டட முதல் மாடியில் நகர்த்தார் சங்க உறுப்பினர்களுக்கு விரும்பும் வாழ்க்கை விரல் நுனியில் என்ற தலைப்பில் 1.30 மணி நேரம் பேச்சு, பயிற்சி என வழங்கினேன்.

மறுநாள் இரவு சார்ஜாவில் நண்பர் ரவி சங்கர் இல்லத்தில் இரவு இட்லி, சாப்பாத்தி சாப்பிட்டு அவர் வழியனுப்ப, விமானம் ஏறி கோவைக்குத் திரும்பினோம்.

பாலைவனம் என்பதால் கட்டடங்களின் வெளிபுறத்துக்கு பல வண்ண நிறங்கள் அடிக்கவில்லை.

சர்ச் 1 , கோயில் 2 துபாயில் உள்ளன. வெள்ளி மதியம் 12.30 மணிக்கு ஓட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மூடப்படுகின்றன. மதியம் தொழுகை முடிந்தபின் 11/2 மணிக்கு திறக்கப்படுகின்றனர்.

வழியில் போலீஸ் ஒருவரைக் கூட காணவில்லை அனைத்தும் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

தேவையான பொருட்கள் அனைத்துமே பிற நாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்ளூர் மக்கள் 20 சதவீதம், வெளிநாட்டினர் 80 சதவீதம் என்று வசிக்கின்றனராம்.

ஊழலற்ற ஆட்சியும், குற்றங்களுக்கு கடுமையான தண்டனையும் தான் இவ்வளவு சிறப்புக்கும் காரணம்.

இந்த நிலை இங்கு வரும் நாள் தொலைவில் இல்லை என்ற நேர்மறையான எண்ணத்துடன் நிறைவு செய்வோம்.

வாழ்க வளமுடன்…

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!