Home » Articles » வெற்றி உங்கள் கையில் – 49

 
வெற்றி உங்கள் கையில் – 49


கவிநேசன் நெல்லை
Author:

வாழ்க்கை வரம்

மனம்போல் வாழ்வு என்பது பெரியோர் வாக்கு.

நமது மனம் எப்படி சிந்திக்கிறதோ, அதைப்போலவே நமது வாழ்வு அமைந்துவிடுகிறது. செம்மையான சிந்தனை பல வழிகளில் வாழ்வில் வெற்றியைத் தருகிறது.  ஏழ்மை நிலையில் இருந்தாலும், வறுமைக்கோட்டில் வாடினாலும், சோதனைப் புயலில் சிக்கினாலும், புத்திக்கூர்மையோடு திகழ்பவர்கள் வாழ்க்கையில் மிகச்சிறந்த வெற்றியைப் பெறுகிறார்கள்.

வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்பது பழமொழி. நல்ல எண்ணங்கள் கொண்ட வார்த்தைகளை, சரியான நேரத்தில் பேசத் தெரிந்தவர்கள் மகிழ்சியோடு காணப்படுவார்கள். அவர்கள் வாழ்வில் வெற்றிகள் குவிந்துகொண்டே இருக்கும். வேதனைகள் இருந்தாலும், அந்த வேதனைகளை சாதனைகளாக மாற்றும் சக்தி இவர்களுக்கு உண்டு.

எந்த நேரத்தில், எதைப் பேச வேண்டுமோ, அதனை சரியான முறையில் பேசத் தெரிந்தவர்கள் அதிக சக்தி கொண்டவர்களாக உலா வருகிறார்கள். தான் சந்திக்கும் பிரச்சினைகளை வாய்ப்புகளாக மாற்றி, அந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி, வாழ்க்கையை வளமுள்ளதாக மாற்றத் தெரிந்தவர்களின் வாழ்க்கையில் வெற்றிகள் குவிந்துகொண்டே இருக்கும்.

அது ஒரு கடற்கரை கிராமம்.

நாள்தோறும் கடலுக்குச்சென்று மீன்பிடித்து, அதன்மூலம் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார் ஒருவர்.

குடிசையில் வசிக்கும் குடும்பம். மிகவும் ஏழ்மையான நிலை. அவரது அம்மாவுக்கு கண்பார்வை முழுவதுமாகத் தெரியாது. திருமணமாகி பல வருடங்கள் கழிந்தபின்பும் அவருக்கு குழந்தையில்லை. மனதில் கவலையோடு ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டே தனது வாழ்நாளை கழித்து வந்தார் அவர்.

வழக்கமாக கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதைப்போல ஒருநாள் அவர் மீன்பிடிக்கச் சென்றபோது கடற்கரையில் பெரிய மீன் ஒன்று ஒதுங்கிக் கிடந்து, உயிருக்குப் போராடியது.

பெரிய மீனாக இருக்கிறது. இதையெடுத்து நல்ல விலைக்கு விற்றுவிடலாம் என்று நினைத்து அந்த மீனை நெருங்கினார் அவர். அந்த மீன் பேச ஆரம்பித்தது.

தயவுசெய்து என்னை ஆழ்கடலுக்கு தூக்கிக் கொண்டுபோய் விட்டுவிடுங்கள். நான் மற்ற மீன்களைப்போல சாதாரணமான மீன் அல்ல. கடலிலுள்ள எல்லா மீன்களுக்கும் தலைவனாக நான் இருக்கிறேன். நடுகடலின் ஆழ்பகுதியில் வசித்து வருகிறேன். திடீரென வந்த புயலால், பெரிய அலைகள் என்னை கரைக்கு இழுத்துகொண்டு வந்துவிட்டன. அலைகள் வேகமாக அடித்ததால் என்னால் நீந்த முடியவில்லை. கரையில் ஒதுங்கிவிட்டேன். இப்போது மிகவும் களைப்பாக இருக்கிறது. என்னால் நீந்தக்கூட முடியவில்லை. எனக்கு உதவி செய்யுங்கள். எனக்கு நீங்கள் உதவி செய்தால், உங்களுக்கு ஒரு வரம் தருவேன் – என்று கெஞ்சியது.  

அந்த மீனைப்பார்க்க அவருக்குப் பரிதாபமாக இருந்தது. கடல் மீன்களின் தலைவனான அந்த மீன் தர இருக்கின்ற வரம் மகிழ்ச்சியைத் தந்தது. தனது படகில் மீனை ஏற்றி நடுகடலுக்குச் சென்று அந்த மீனை கடலில் விட்டுவிட்டார். நடுகடலில் மீனைக்கொண்டு விடும்போது, இந்த மீனிடம் என்ன வரம் கேட்கலாம் – என்று யோசித்தார். பின்னர், மீன் கொடுக்க இருக்கும் ஒரே வரத்தை வீட்டில்போய் கலந்துபேசி முடிவெடுத்துக்கொள்வோம் என்று எண்ணி கரைக்குத் திரும்பினார்.

வீட்டிற்கு வந்து கடல் மீன் அவருக்கு தர இருக்கும் வரத்தைப்பற்றி முதலில் சொன்னார்.

ஒரேயொரு வரம்தான் அந்த மீன்களின் தலைவன் வழங்கும் என்பதால், மிகக் கவனமாக குடும்பத்தினர் யோசித்தார்கள்.

நாம் ஏழைகள். ரொம்ப வருடமாக இந்தக் குடிசையில்தான் வாழ்கிறோம். மழை பெய்தால் இந்தக் குடிசையிலுள்ள ஓட்டை வழியாக நீர் ஒழுகுகிறது. வீடு நனைந்து இடிந்துவிழும் நிலைக்கு வந்துவிடுகிறது. எனவே, புதிதாக ஒரு வீடு வேண்டும் என்ற வரத்தை கேள் – என்று தந்தை சொன்னார்.

நீ பிறந்ததிலிருந்து நான் கண் பார்வை இல்லாமல் கஷ்டப்படுகிறேன். எனக்குப் பார்வையைத் தரும்படி அந்த மீனிடம் வரத்தைக் கேட்கலாம் – என்றாள் அம்மா.

நாம் கல்யாணம் செய்து 15 வருடங்கள் ஆகிறது. நமக்கு ஒரு நல்ல குழந்தை வேண்டும் என்று மீனிடம் குழந்தை வரம் கேட்டால் நல்லது – என்று சொன்னாள் ஆசை மனைவி.

 வீட்டிலுள்ள மூன்றுபேரும் மூன்று விதமான வரங்களைக் கேட்கிறார்களே? நான் என்ன செய்வது? – என்று குழம்பிப்போனார் அவர்.

அன்று இரவு முழுவதும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. மறுநாள் அதிகாலையில் தனது படகில் நடுகடலுக்குச் சென்றார். வரம்கொடுத்த அந்த மீன், அவரிடம் வந்தது. தனது தந்தை, தாய், மனைவி கேட்ட வரங்களை ஒவ்வொன்றாக மீனிடம் சொன்னார். ஆனால், அந்த மீன் ஒரேயொரு வரம்தான் கேட்க வேண்டும். மூன்று வரங்களைக் கேட்கக்கூடாது என்று முடிவாகச் சொன்னது.

சரி, ஒரேயொரு வரத்தை எனக்கு தந்தால் போதும். எனது மகன் வீட்டின் கீழ் தளத்தில் விளையாடிக் கொண்டிருப்பதை எனது மாடி வீட்டில் இருந்து என்னைப் பெற்ற பெற்றோர்கள் தினந்தோறும் பார்த்து மன மகிழ்ச்சியோடு வாழ வழிசெய்ய வேண்டும். இதுதான் நான் கேட்கும் வரம் – என்றார் அவர்.

ஒரே வரம் என்பதால் கடல் மீனும் வரத்தைக் கொடுத்தது. அவர் மகிழ்ந்தார். ஒரே வரம் என்றாலும்கூட அந்த வரத்தில் வீட்டிலுள்ளவர்கள் கேட்ட மூன்று வரங்களும் அடங்கியிருந்தது.

என் மகன் விளையாடுவதை என்று கேட்ட வரத்தின் மூலம் எனக்கு குழந்தை வேண்டும் என்ற தனது மனைவியின் வரத்தை அவர் கேட்டார்.

மாடியிலிருந்து பார்க்க வேண்டும் என்பதன் மூலம் எனக்கு அடுக்குமாடி வீடு வேண்டும் என்று தந்தை விரும்பிய வரத்தை மறைமுகமாகக் கேட்டார்.

பெற்றோர்கள் தினந்தோறும் பார்க்க வேண்டும் என்று கேட்டதன் மூலம் எனது தாய்க்கு கண் பார்வை வேண்டும் என்ற வரத்தையும் சேர்த்தே கேட்டார்.

மொத்தத்தில் அந்த ஏழையின் கூர்மையான புத்தியால், சரியான நேரத்தில் எடுத்த முடிவால், பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால், அவரது வறுமை விடைபெற்றது. வரம் அவன் வாழ்வில் வளமையைச் சேர்த்தது.

நல்ல எண்ணங்கள் கொண்டவர்கள் வாழ்க்கையில் எளிதில் தங்கள் சோகங்களை யெல்லாம் விரட்டியடிக்கும் வல்லமையைப் பெற்றுவிடுகிறார்கள். நேர்மறையான சிந்தனையோடு மற்றவர்களோடு பழகும்போது, அவர்களின் எண்ணங்கள் மற்றவர்களையும் நல்ல எண்ணங்கள் கொண்டவர்களாகவே மாற்றிவிடுகிறது.

நாம் சந்திக்கும் நபர்களுக்கு எப்படியாவது உதவ இயலுமா? என்பதைப் பற்றிய சிந்தனையோடு வாழ்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் எதிர்பாராத மாற்றங்கள் எப்போதும் உருவாகும். மற்றவர்களிடம் பலன் எதிர்பார்த்தே பழக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பல நேரங்களில் தோல்வியை சந்திக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த வெற்றியும் அவர்களுக்கு சரியான நேரத்தில் கிடைப்பதில்லை.

எனவே, வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்கள், மற்றவர்களுக்கு உதவும்; எண்ணங்களை வளர்த்துக்கொண்டு அறிவுக்கூர்மையோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மகிழ்வை மட்டுமல்ல, மனநிறைவுடன்கூடிய வெற்றியையும் நமக்கு வழங்கும்.

தொடரும். 

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!