Home » Articles » தேசத்தின் மீது நேசம் வை

 
தேசத்தின் மீது நேசம் வை


செல்வராஜ் P.S.K
Author:

தேசம் காக்க களம் சென்றவர்கள் எத்தனையோ பேர்.

தம் உயிரை விட இம்மண்ணை அதிகம் நேசித்தவர்கள் எண்ணற்றோர்.

தாய் மண்ணைக் காக்க களம் செல்லாவிட்டாலும், இத்தேசத்தின் மீது நேசம் கொண்டவனாக என்றும் இரு.

இளைஞர்கள் பெண்ணைக் காதலிப்பார்கள். ஆனால் பாரதி என்ற அந்த இளைஞனோ தாய் மண்ணைக் காதலித்தான். அதற்காகவும் அவன் கொள்கைக்காகவும் தன் உயிரைத் (நீத்தான்) துறந்தான். அப்படிப்பட்ட கவிஞர் பாரதியைப் போல் தேசப் பற்றுள்ள தேசப் பக்தனாகத் திகழ்.

தன்னை நேசித்தவன் இம் மண்ணையும் நேசிப்பான். இம் மண்ணை நேசிப்பவன் எதையும் இழப்பான், எதையும் துறப்பான், எதையும் செய்வான்.

உண்மையிலேயே இம்மண்ணை நேசிக்கிறான் என்பதற்கான சான்றும் அதுவே.

நம் முன்னோர்கள் யாகம் செய்தா விடுதலை பெற்றனர்? யாகம் செய்து பெறவில்லை, தியாகம் செய்து தான் பெற்றனர்.

சான்றோர்களின் தியாகத்தினால் தான் சுதந்திரக் காற்றை அடைந்தோம். அடிமைக் காற்றை அகற்றினோம்.

நம் கைகளுக்குப் பூட்டப்பட்டிருந்த அடிமை விலங்கு பெரியோர்களின் தன்னலமற்ற செயலால் திறக்கப்பட்டது.

தன்மானத்தைத் தானம் செய்யாமல் உயிரைத்தானம் செய்து சுதந்திரம் பெற்ற நாடு இந்தியாவென்பது உலகுக்கும் தெரியும்.

பழைய உலக ஏடுகளைப் புரட்டிப்பாருங்கள். உலக நாடுகள் அனைத்தையும் விட அதிக இழப்பை இழந்தவர்கள் நாம், அதிக இழப்பை இழந்த நாடு இந்தியா.

நாட்டைக்காத்து நம்மை வளர்த்த சமூகத் தந்தைகள் செய்த நன்றியை என்றும் மறக்கவும், மறுக்கவும் காரணமாயிராதே. இவர்களை எண்ணாமல் இச் சமூக தந்தைகளின் கொள்கையை கைவிட்டுவிட்டு நடிகர் நடிகை என்ற பெயரில் ரசிகர் மன்றங்களை ஏற்படுத்தி நீயும் கெட்டு அவர்களையும் கெடுத்தது போதவில்லையா? இந்தக் கூத்தாடிகள் மீது இவ்வளவு மோகம் எதற்கு? இந்த மோகத்தால் சோகமடைவது உன் எதிர்காலம். இவர்கள் மீது அளவு கடந்த பற்று தேவைதானா? நன்றாக யோசித்துப்பாருங்கள். இவர்களது சமூக சேவையையும், தேவையையும், நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதையும் பட்டியலிடு.

இளைஞர்களே! நாட்டுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் தீமை செய்யாதீர்கள்.

இந்தியனே, அதோ வானில் அழகாகப் பறக்கின்றதே நம் இந்திய தேசக் கொடி அதை வெறும் தேசக்கொடி என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம்.

நம் தாயின் மணிக்கொடியில் நம்மால் என்றும் மறக்க முடியாத இரண்டு நூற்றாண்டு நினைவுகளும், இருநூறு ஆண்டு கனவுகளும், இருநூறு வருட சரித்திரங்களும், நான்கு ஐம்பது வருட சாதனைகளும், கடந்த நூற்றாண்டின் வேதனைகளும், 18, 19, 20 ஆகிய மூன்று  நூற்றாண்டுகளின் வரலாறுகளும், எண்ணற்ற தியாகிகளும், கணக்கற்ற தியாகங்களும் அடக்கியது தான் நம் பாரதக் கொடி.

சுதந்திரப் போரில் இறந்தவர்களின் உயிர் விலைமதிப்பற்றது. தங்கத்தையும், வைரத்தையும் வைடூரியத்தையும் ஒரு கணிதமேதை மதிப்பிட்டு விடலாம். ஆனால் விடுதலைப் போரில் வீர மரணமடைந்தவர்களின் உயிரை மதிப்பிட இயலாது.

பிரிவினைகள் ஒழிய வேண்டும்.

சாதி, மதம், பேதம் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்று இது போன்றுள்ளவைகள் சமுதாயத்திற்குள் புகுந்து அமைதியை, ஒற்றுமையை சீர்குலைத்து சமூகத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டு வருகிறது. இவை என்று அடியோடு(வேறோடு) ஒழிகிறதோ அன்று தான் மனித சமுதாயம் ஏற்றம் பெறும். இவை உயிரோடு இருக்கும் வரை நாட்டில் சண்டை சச்சரவுகள், வன்முறைகள், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவைகளும் உயிரோடு இருந்து கொண்டு தான் இருக்கும். ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இவைகள் என்றும் உகந்தவைகள் அல்ல.

இன்னும் ஏன் இந்த நிலை?

பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும் அனைத்திலும் உலக நாடுகளுக்கெல்லாம் மிக உயர்ந்த தலை சிறந்த நாடு இந்தியா. புத்தர்,காந்தி, விவேகானந்தர், வள்ளுவர், சிறந்த எழுத்தாளர் இல.செ.கந்தசாமி என உனை வழி நடத்திச் செல்லவும், தன்னம்பிக்கையூட்டவும் ஆயிரமாயிரம் வரலாற்றவர்களும், சான்றோர்களும் வரலாற்றில் இருக்கையில் ஏன் அவர்களையெல்லாம் விட்டுவிட்டு, மறந்துவிட்டு நாட்டிற்கு ஒன்றுமே செய்யாத உனக்கும் வழிகாட்டாத, தன்னம்பிக்கையூட்டாத, உதவாத நடிக நடிகையரின் கொள்கை தான் நாட்டிற்குத் தேவையென்றும், பெரிதென்றும் நடிகைக்குக் கோயில் கட்டினாய்.

இச்சம்பவம் நடந்தது இந்தியாவில், அதுவும் நம் தமிழ்நாட்டிலல்வா. இச்செயல் நம் தமிழகத்தையே இழிவு செய்யும் மிகவும் கேவலமான செயல் அல்லவா. இந்தியாவில் ஆங்கிலேயர்களை முதன் முதலில் எதிர்த்துப் போரிட்டு விரட்டிய மாவீரன் தீரன் சின்னமலை, காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், போன்றவர்களுக்கு கோயில் கட்ட ஏன் மறந்தாய்?  சுதந்திரம் என்னும் சுவாசக் காற்றை நாம் சுவாசிக்க காரணமானவர்களை துதிக்கவும், வழிபடவும் ஏன் இன்னும் தாமதிக்கிறாய்? யோசிக்கிறாய்? அதை விட்டுவிட்டு சினிமா என்னும் சிற்றின்பத்தில் முழ்கியிருப்பதை விட மேற்சொன்ன தியாகத் தலைவர்களில் யாரேனும் ஒருவரை முன்னோடியாக மனதில் வைத்துக் கொண்டு பொது நலனில் செயலாற்ற வேண்டும். செயலாற்ற முன் வரவேண்டும். அப்பொழுது தான் முதுகெலும்பாக இளைஞர்களை நம்பியிருக்கும் இந்த பாரத தேசம் அதிரடியாய் வளர்ச்சியுறும் வல்லரசாகும்.

பத்திரிகைகளைப் படியுங்கள்

புத்தகங்களைப் படியுங்கள் அது உங்கள் வெற்றிக்கு பக்க பலமாக என்றும் இருக்கும், உமது அறிவுக்கும் சிந்தனைக்கும் பல வழியில் பல வகையில் பெரிதும் பயன்படும். நமது அப்துல்கலாம் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். தனது சாதனைக்குப் பயன்பட்டது பத்திரிகை தான். இது இன்றி எனது வெற்றியும் இல்லை. எனது சாதனையின் முதுகெலும்பே புத்தகங்கள் தான் என்று கடுமையாக அழுத்திச் சொல்லியிருக்கின்றார்.

அனைவரது நோக்கத்திற்கும் இதழ்கள் வழிகாட்டும் என்பது உண்மை.

உலகம் ஒரு ஓட்டப்பந்தயம்

உலகம் என்பது பந்தய மைதானம் மாதிரி. அதில் உலகில் உள்ள உனது துறை இலட்சியத்திலேயே கூட பலர் ஓடக்கூடும். தாங்கள் முதலாவதாக ஓடிவர முயற்சி செய்ய வேண்டும். முதலில் வர என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு அருகில் ஓடி வருபவனை காலை வாரி நயவஞ்சகமாகக் கீழே தள்ளிவிட்டால் நாம் ஜெயித்துவிடலாம் என்கிற எட்டப்பனது தீய எண்ணங்கள் மனதிலும் சிந்தனையிலும் எப்பொழுதும் இருக்கக்கூடாது. ஆனால் பலருக்கு இன்று எண்ணங்கள் இப்படித்தான் உள்ளது. ஒருவரை தாழ்த்தினால் நாம்  உயர்ந்துவிடலாம் என்று எதிர்மறையாக கருதுவதை விட நம்மை உயர்த்தினாலே அவர் தாழ்ந்து விடுவார் என்கிற நல்ல நேர்மறையாக சிந்திப்பதற்கும் செயல்படவும் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் உயர வேண்டும் என்பது பிறரைத் தாழ்த்த வேண்டும் என்பதற்காகவுமல்ல நீங்கள் உயர வேண்டும் என்பதற்காகவே.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2017

நம் மதிப்பை.. நாம் மதிப்போம்…
ஃபைப்ராய்டு கட்டு
ஊழல் இல்லாத பாரதம்
நவீன ஜீனோமிக்ஸ் – பகுதி 7
உங்களை வாழ வைப்பவர்
இதயத்தின் மொழியை வாசிப்பது எப்படி
சிகரமே சிம்மாசனம்
ஸ்மார்ட் கிச்சன்
ஏன் உண்மைக்கு அரிச்சந்திரன்? கொடைக்கு கர்ணன்?
டைஃபாய்டு மற்றும் பேரா டைஃபாய்டு காய்ச்சல்
அங்கரதம்
தேசத்தின் மீது நேசம் வை
வாழ்வின் உயானவுக்கான சூத்திரங்கள் மூன்று
வாழ நினைத்தால் வாழலாம்
வெற்றி உங்கள் கையில் – 44
நம்பிக்கை கொள்வது எப்படி
தன்னம்பிக்கை மேடை
துவளாமல் உறுதி எடு… துணிந்து சிகரம் தொடு…
உள்ளத்தோடு உள்ளம்