Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி

ஏதேனும் ஒரு துறையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தங்களுடைய எதிர்காலத்தை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்? அவர்களால் சமுதாயத்திற்கு என்னவெல்லாம் செய்ய முடியும்?

ஆர். பார்த்திபன் ராமசாமி

ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்

சேலம்.

நீங்கள் ஒரு நல்ல கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். ஓய்வு பெறும் வயதிலும் ஓய்வு பெறும் மனநிலையிலும் உள்ள அதிகாரிகள் கேட்க வேண்டிய கேள்வி இது. அவர்கள் வலுவான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலும், சமுதாயத்திற்கு எதாவது நன்கொடையை தரவேண்டிய பொறுப்பிலும் இருக்கிறார்கள்.

ஓய்வு வயது:

மாநில அரசு அதிகாரிகள் ஓய்வு வயது 58 என்றும், மத்திய அரசு அதிகாரிகள் ஓய்வு வயது 60 என்றும் உள்ளது. பெரும்பாலும் அதிகாரிகள் ஓய்வு வயதை எட்டியபின் உண்மையில் ஓய்வு எடுக்கச் சென்று விடுகிறார்கள். சிலர், அரசு பதவியிலிருந்து ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாகவே மனதளவில் ஓய்வு பெற்று விடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் ஓய்வு பெற்ற பின்னரும் பல ஆண்டுகள் வேலை செய்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், 58 வயது என்பது ஒரு பெரிய வயதே இல்லை. நார்வே, சுவீடன், பின்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் மனிதர்கள் சராசரி 88 ஆண்டுகள் வாழ்கிறார்கள்,  அவர்கள் அந்த 88 வயதுவரை உழைக்கிறார்கள். முடியாத பட்சத்தில் ஓய்வு எடுக்கிறார்கள், ஆனால் முடிந்தவரை அவர்களது கடமைகளை அவர்களே செய்கிறார்கள்.

இன்று நீண்டநாள் வாழ்கிறோம்:

ஓய்வு வயது 58 என்பது பல ஆண்டுகளுக்கு முன் முடிவானது. அப்போது இந்தியர்கள் பெரும்பாலும் சிறு வயதில் இறந்து விட்டார்கள். நமது முன்னோர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள் என்பது உண்மை அல்ல, அதற்கு ஆதாரமும் இல்லை. ஒரு சிலர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திருக்கலாம், ஆனால் பெரும்பாலும் மக்கள் குறுகிய வயதில் இறந்துள்ளார்கள். 1947 ம் ஆண்டு இந்தியர்களின் சராசரி வயது 32 தான்! இன்று ஆங்கில மருந்துகள் அனைவருக்கும் கிடைப்பதாலும், உணவு பெருவாரியாக மக்களுக்கு கிடைப்பதாலும் சராசரி வயது ஆண்களுக்கு 68 என்றும் பெண்களுக்கு 67 என்றும் உயர்ந்துவிட்டது.  இந்திய விவசாயிகளும், MBBS படித்த மருத்துவர்களும் நமது வாழும் வயதை அதிகரித்து தந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லலாம்.

அரசுத்துறையில் வேலை செய்து ஓய்வு பெற்றபிறகு நிறைய நேரம் இருக்கும். அதை ஆக்கப்பூர்வமாக செலவு செய்வது மிகவும் அவசியம். அப்படிச் செய்யாமல் ஓய்ந்து விட்டால், மனச்சோர்வு அல்லது மனத்தளர்ச்சி ஏற்பட்டு மனநோயாளி ஆவதற்கும் வாய்ப்பு உண்டு. 80 வயதைத்தாண்டியும் மனதளவில் புத்துணர்ச்சியுடன் களப்பணியாற்றிய பாரத ரத்னா டாக்டர். கலாம் அவர்களை நாம் கண்டோம்.

சும்மா இருக்கக் கூடாது:

ஒய்வு என்றால் சும்மா இருப்பது என்றும் பலர் புரிந்து கொண்டுள்ளார்கள். சும்மா இருப்பதே நன்று, அதுவும் பக்திமானாக இருந்தால் போதும், அதுவே ஒரு பெரிய பாக்கியம்! என்று கூட பலரும் நம்புகிறார்கள். சும்மா இருந்து கொண்டு சாப்பிடுபவர்களுக்கு ஒரு காலத்தில் மரியாதை இருந்தது. ஜமீன்தார்கள் அப்படித்தான் சுகபோக வாழ்க்கையை நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார்கள். ஆனால் சும்மா இருப்பது உடலுக்கும் மனதுக்கும் ஆபத்தானது.

சும்மா இருந்து சாப்பிட்டால்:

 • உடல் நலன் கெடும்
 • மன நலம் கெடும்
 • வருமானம் குன்றும்
 • மனிதர்களுடனான உறவு முறியும்
 • சுயமதிப்பு குறையும்
 • மகிழ்ச்சி மறையும்
 • தூக்கம் வராது
 • பிறரை வெறுக்கும் மனநிலை வரும்

ஆக, ஓய்வு பெற்றவர்கள் எதாவது ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபட வேண்டும். அதிகாரிகள் எந்த துறையில் பணியில் ஈடுபட்டிருந்தாரோ அந்தத் துறை சார்ந்த பணியில் ஈடுபடலாம்.

 • ஓய்வு பெற்ற இராணுவ வீரர், ஒரு செக்யூரிட்டி நிறுவனம் துவங்கலாம் அல்லது அதுபோன்ற துறையில் பணியாற்றலாம்.
 • ஓய்வு பெற்ற ஆசிரியர், ஒரு தனியார் பள்ளியில் தொடர்ந்து பணியாற்றலாம் அல்லது பள்ளி ஒன்று துவங்கலாம்.
 • ஓய்வு பெற்ற சிவில் இன்ஜினியர், சுயமாக ஒரு கட்டுமான நிறுவனம்(Civil Construction Compay) துவங்கலாம் அல்லது ஒரு நிறுவனத்தில் பணியில் சேரலாம்.
 • ஓய்வு பெற்ற அரசு மருத்துவர், தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவர் ஆகலாம். மருத்துவர்களுக்கு ஓய்வு இல்லை.
 • ஓய்வு பெற்ற நூலக ஊழியர், நூல் அச்சிடலாம் அல்லது நூல் எழுதலாம் அல்லது ஊர் ஊருக்கு பொது நூலகம் திறக்கலாம்.

விவசாயம்:

இப்படி பல பணிகள் இருக்கத்தான் செய்கின்றன. அதைச் செய்ய ஆர்வம் வேண்டும், அவ்வளவுதான். ஒன்றுமில்லை என்றால் சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் செய்யலாம். அதையும் தீவிரமாகச் செய்யலாம். மற்ற விவசாயிகள் பார்த்து மகிழும்படியாகவும், பார்த்துப் படிக்கும்படியாகவும் விவசாயம் செய்யலாம். நானும் அதைத்தான் செய்யலாம் என்று இருக்கிறேன். ஆனால் அதற்கு நிலம் வேண்டும். என்னிடம் நிலம் இல்லை. வாங்க வேண்டும். ஓய்வு பெற்ற பின்னால் வாய்ப்பு கிடைக்கும். பார்ப்போம்.

ஓய்வு பெற்றவர்கள் இப்படி உருப்படியாக ஏதாவது ஒன்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் பொழுது போகும். மனநலம் மற்றும் உடல் நலம் காக்கப்படும். வருமானமும் பெருகும். ஆனால் உளமாற ஆனந்தம் ஏற்பட வேண்டும் என்றால் அவர்கள் ஒன்றைச் செய்ய வேண்டும். அதுவும் இலவசமாகச் செய்ய வேண்டும் அதுதான் ‘சேவை.’ அந்த சேவைதான் உண்மையான மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் உயர் சுயமதிப்பையும் தரும். வாழ்க்கைக்கு ஒரு பொருளையும் பெரு நோக்கத்தையும் அது தரும்.

ஆனந்தம் பெற என்ன செய்யலாம்?

 • ஒரு ஆசிரியர், 100 மாணவர்களுக்கு இலவச பயிற்சி தரலாம். ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடப் பயிற்சி மிகவும் உயர்வானது.
 • ஒரு டாக்டர், இலவசமாக சிகிச்சை தரலாம். பல்லாயிரம் ஏழைகள் பயனடைவார்கள். டாக்டர் பூரணி ரவிச்சந்திரன் என்ற மகப்பேறு மருத்துவர் கோத்தகிரி பகுதியில் தங்கியிருந்து மலை வாழ் பெண்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார்.
 • விளையாட்டுத் துறையில் வேலை பார்த்தவர்கள், பிள்ளைகளுக்கு ஓட்டம், சைக்கிள், நீச்சல், கைப்பந்து, கால்பந்து  போன்ற விளையாட்டுகளில் பயிற்சி தரலாம். ஒரு விளையாட்டு கிளப் நிறுவலாம். ஒரு உடற்பயிற்சி மையத்தையும் நிறுவலாம்.
 • பத்து ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம். அதற்கு நிதி திரட்டலாம்.

இப்படியான மார்க்கங்கள் பல உண்டு. எந்த பண முதலீடும் இல்லாமலே சில தொழில்கள் செய்யலாம். எனக்கும் ஒரு ஆசை, ஓய்வு பெற்ற பின்னர் இளைஞர்களுக்கு அறிவியல் போதிக்க வேண்டும் என்பதே அது. அதற்காக இப்போதே பல அறிவியல் நூல்களை படித்தும், அறிவியல் அறிஞர்களைப் பற்றி விவாதித்தும் வருகிறேன். விஞ்ஞானத்தை புரிந்து கொண்ட பிள்ளைகள் நல்வழியில் நடப்பார்கள், நாகரீகமாக வாழ்வார்கள், பிறரை எளிதில் வெறுக்கவும், குறை கூறவும் மாட்டார்கள். அவர்களது செயல்பாடு சிறப்பாக அமையும் என்பது எனது நம்பிக்கை.

என்ன செய்யக் கூடாது:

ஓய்வு பெற்றவர்கள் என்ன செய்யக் கூடாது என்பதும் முக்கியம்.

 • இளைஞர்களை குறைகூறிக் கொண்டு இருக்கக் கூடாது.
 • எல்லாம் கெட்டுப்போய் விட்டது என்று கூச்சலிடக்கூடாது.
 • சாதி மத அமைப்புகள் உருவாக்கி கலாட்டா செய்யக்கூடாது.
 • மூடநம்பிக்கைகளை பரப்பக்கூடாது.

 முதுமை வியாதி:

ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய முடியாமலே போவதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களது உடல் நலக் குறைவு எனலாம். சர்க்கரை வியாதி, இருதய நோய், சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வை இல்லாதது போன்ற பெரிய பிரச்சனைகள் பலருக்கு உண்டு. ஆனால் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் இவை எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 • அதிக உணவு உண்பது
 • உடற்பயிற்சி இல்லாதது
 • உறக்கம் குறைவு
 • கவலைப்படுவது
 • அளவுக்கதிகமாகப் பயப்படுவது
 • விஞ்ஞான மருத்துவத்தைப் புறக்கணித்து போலி மருத்துவத்தை நாடுவது

ஆக, அறிவியல் மருத்துவத்தின் மீது கவனம் செலுத்தி, அறிவியல் கண்டுபிடிப்புகளை நம்பி, ஆதாரம் உள்ள உடல் நலக்குறிப்புகளை அறிந்து உடல் நலம் பேணினால் 88 வயது வரை வாழலாம். ஓய்வு பெற்ற பின்னர், 30 ஆண்டுகள் சேவை செய்யலாம். ஒரு நோக்கத்தோடு வாழ்ந்தோம் என்ற திருப்தியுடன் கண்களை மூடலாம். நமது உடம்பில் இருக்கும் அணுக்களும், மூலக்கூறுகளும், கார்பன், ஹைட்ரஜன் உள்ளிட்ட 118 தனிமங்களும் நாம் இறந்த பின்னர் வந்த மண்ணிலேயே கலந்து விடும். அதற்கு பிறகு எதுவும் இருக்காது, எல்லாம் இருட்டு என்ற நிலைதான். இறந்தவர்களைப் பொறுத்துவரை வேறு எதுவும் இல்லை.

முடிவு:

முதல் 25 ஆண்டுகள் கற்கிறோம், அடுத்த 20 ஆண்டுகள் கடமையாற்றுகிறோம், இறுதி 25 ஆண்டுகள் சமுதாயத்திற்கு நமது பங்கைத் திருப்பித் தருகிறோம். இதுவே நல்ல ஒரு கோட்பாடு. இதில், இறுதி 25 ஆண்டுகள் நாம் ஆற்றும் நற்பணி இந்த நாட்டிற்கு நமது பங்களிப்பு. அப்படி பெரியதொரு பரிசை சமுதாயத்திற்கு வழங்க இன்றே நம்மை தயார்படுத்த வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2017

நம் மதிப்பை.. நாம் மதிப்போம்…
ஃபைப்ராய்டு கட்டு
ஊழல் இல்லாத பாரதம்
நவீன ஜீனோமிக்ஸ் – பகுதி 7
உங்களை வாழ வைப்பவர்
இதயத்தின் மொழியை வாசிப்பது எப்படி
சிகரமே சிம்மாசனம்
ஸ்மார்ட் கிச்சன்
ஏன் உண்மைக்கு அரிச்சந்திரன்? கொடைக்கு கர்ணன்?
டைஃபாய்டு மற்றும் பேரா டைஃபாய்டு காய்ச்சல்
அங்கரதம்
தேசத்தின் மீது நேசம் வை
வாழ்வின் உயானவுக்கான சூத்திரங்கள் மூன்று
வாழ நினைத்தால் வாழலாம்
வெற்றி உங்கள் கையில் – 44
நம்பிக்கை கொள்வது எப்படி
தன்னம்பிக்கை மேடை
துவளாமல் உறுதி எடு… துணிந்து சிகரம் தொடு…
உள்ளத்தோடு உள்ளம்