– 2017 – August | தன்னம்பிக்கை

Home » 2017 » August

 
 • Categories


 • Archives


  Follow us on

  நம் மதிப்பை.. நாம் மதிப்போம்…

  மற்றவர்களை சார்ந்திருப்பவரா நீங்கள்?

  அப்படியென்றால் நிச்சயம் இந்த கட்டுரை உங்களுக்காகத்தான்

  இந்த கல்யாணத்துலே சம்மந்தமா? என்று கேட்டால் அடக்கமாக உங்களுக்கு சம்மதம்னா.. எனக்கும் ஓ.கே? என்பவராக இருந்தால் நிச்சியமாக நீங்கள் பிறரின் ஆபிப்ராயங்களுக்கு அடிமையானவர்கள் தான். ஆடையிலிருந்து, ஆபரணங்கள் வரை படிப்பு முதல் பதவி வரை அத்தனைக்கும் அடுத்தவரை அலசுபவர் என்றால் உங்கள் சுய கௌரவத்தையும், தன்னம்பிக்கையையும் இழக்க தயராகிவிட்டீர்கள் அடுத்தவரின் ஆலோசனை கேட்பது, மிகவும் இக்கட்டான, முடிவெடுக்க முடியாத சூழ்நிலையிலோ, நமக்கு புரியாத நுட்பமான விஷயங்களுக்கோ மட்டும், அதுவும் அனுபவமானவர்களை கலந்தோசிப்பதில் தவறில்லை.

  அதைவிட்டு, ஆலோசனை கேட்பதால் அவர்களுக்கு நாம் மதிப்பும், மரியாதையும் தருவதாகவும், நம்மீது அவர்களுக்கு நல்ல ஆபிப்ராயம், நம்பிக்கை வரும் என்று நினைத்து விடுகிறோம். ஆனால் அது உண்மையல்ல. நம்மில் பலருக்கு மற்றவர்களின் அபிப்ராயங்களை கேட்டு நடப்பதில் அலாதிப்பிரியம். அவர்களையே வாழ்ககை வழிகாட்டியாக தீர்மானித்து, தொட்ட தொண்ணூறுக்கும் அவர்களின் வாழ்க்கையே வேதவாக்காக்கிக் கொள்வோம். இந்த அணுகுமுறை மறைமுகமாக நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பது பலருக்குத் தெரிவதில்லை.

  பெற்றவர்கள் முதல், நட்பு, காதல், வாழ்க்கைத்துணை வரை மட்டுமல்ல ஒரு உயிரற்ற பொருட்களைக் கூட சார்ந்திருந்தாலோ அல்லது அதையே சதம் என்றிருந்தாலோ, வாழ்க்கையில் பேரிழப்புகளை, அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இன்று மெத்தப் படித்தவர்கள் கூட ஏமாற்றங்களையும் தோல்விகளையும்,தோல்விகளையும் சந்திக்கிறார்கள் என்றால், இந்த உண்மையை சிந்திக்க மறந்தவர்கள் தான்.

  ஆழந்து யோசித்து பாருங்கள். இந்த அனுபவங்கள் நம் வாழ்வில் வேறுபட்ட ரூபங்களில் அனுபவமாயிருக்கும். எனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் நீங்களே பார்த்துக்காங்க, உங்களுக்குத் தெரியாததா? என்பதன் மூலம் நம்மை நாமே விவரம் தெரியாதவர்களாக வெளிபடுத்திக் கொள்கிறோம்.

  காரியம் நடக்க  வேண்டிய இப்படிப்பட்ட முகஸ்துதிகளால், நம் மதிப்பை, தனித்தன்மை, திறமைகளை மூடிக் கொள்கிறோம்.

  ஆரம்பத்தில் நீங்கள் பார்த்து எப்படி செய்தாலும் சரி என்று நாமே அவர்களுக்கு அனுமதி கொடுத்து விட்டு, எதிர்பாராத விதமாக அவர்கள் சிறு தவறினால், அந்த காரியம் நடக்கமால் போனால் ஏமாற்றி விட்டார்களே என்று பழி சொல்லத்தான் தோன்றும். இது பெரும் தவறு அதற்காக மற்றவர்களை அபிப்ராயம் கேட்க கூடாது என்று அர்த்தமல்ல. மற்றவர்களின் கருத்தை மதிக்கலாம், ஆமோதிக்கலாம், ஆலோசிக்கலாம். ஆனால் அதே சமயம் நம் சொந்த விருப்பத்தை, அபிப்ராயத்தை ஓரம் கட்டி விட்டு மற்றவர்களின் கருத்தை மையமாக, முழுமையாக முக்கியத்துவம் தந்து சார்ந்திருக்க கூடாது. அதாவது எந்த நிலையிலும் மற்றவர்களுக்கு நம்மீது இருக்கும் மதிப்பு குறையாமலும் நம்மீதே நமக்கு நம்பிக்கை இல்லாமல் போகாமலும் இருத்தல் அவசியம். இல்லையென்றால் பொறுப்பை ஒப்படைக்கிறோம் என்ற பெயரில் நம் விருப்பத்தை, சுதந்திரத்தை தான் ஒப்படைக்கிறோம். நம் விருப்பம் என்று ஒன்றில்லாமல் பிறரின், அபிப்ராய ஆலோசனைகள் தான் நம்மை ஆட்டி படைக்கும் ஆளுமை செய்யும் முடிவு…

  அவர்கள் இல்லாமல் நம்மால் சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாமலும், சுதந்திரமாய் வாழ முடியாமலும் போய்விடும். பிறக்கென்ன.. ஆட்டி வைத்தார் யார் ஒருவர் என்று அடிமைத்தனத்திற்கு தள்ளப்படுவோம். ஆகவே முதலில் ஒரு பிரச்சனை வந்தால், முடிந்தவரை நாமே அதை அகத்தாய்வு செய்து நேரில் எதிர் கொண்டு தீர்வுகளை காண வேண்டும். இந்த அணுகுமுறை தன்னம்பிக்கையை வளர்க்கும். பிறகு நம் அறிவுக்கும் எட்டாத கருத்துக்கள் நம் கவன குறைவினாலும், அவசரத்தாலும் விட்டு போயிருக்கலாம். அப்போது, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு பரிசீலனை செய்து அவர்களின் கருத்துகளோடு நம் சுய கருத்துக்கள் ஒத்து போகிறதா? என பகுத்தய்வு செய்யும்போது அந்தப் பிரச்சனையின் தீர்வு வெற்றியில் நம் பங்கு இருப்பதால் எந்த பிரச்சனை வந்தாலும் எதிர் கொள்ளும் தைரியமும் தன்னம்பிக்கையும் தானாக வரும். அதனால், பிரச்சனையோ காரிய முடிவோ எதுவானாலும் அதன் இறுதியான உறுதியான முடிவை எடுக்கும் பொறுப்பை நாமே வைத்துக் கொள்வது நல்லது.

  ஃபைப்ராய்டு கட்டு

  35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 20 – 30 சதவீத பெண்களுக்கு ஃபைப்பராய்டு கட்டிகள் உள்ளன. இதனால், மாதவிலக்கின் போது அதிக இரத்தப்போக்கு, வயிற்று வலி, குழந்தைப்பேறின்மை ஏற்படும். இவ்வகை கட்டிகள் பட்டாணி அளவிற்கு மிக சிறியதாகவோ அல்லது தேங்காய் அளவிற்கு மிக பெரியதாகவோ இருக்கலாம்.

  ஃபைப்ராய்டு கட்டிகள் கேன்சர் கட்டிகள் அல்ல.

  ஃபைப்ராய்டு கட்டிகள் என்றால் என்ன?

  • பெண்களின் ஹார்மோன்களான ஈஸ்ரோஷன் ப்ரொஜஸ்டட்ரோன் பைப்ராய்டு கட்டிகள் உருவாதை தீர்மானிக்கிறது.
  • மேலும் மரபு வழி காரணங்கள், உடல் பருமன், சிவப்பு இறைச்சி உட்கொள்ளுதல் கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொள்ளுதலால் அதிகரிக்கிறது.

  ஃபைப்ராய்டு கட்டி உள்ள எல்லோருக்கும் சிகிச்சை அவசியமா?

  • பெரும்பான்மையான ஃபைப்பராய்டு கட்டிகள் மிகவும் சிறிய அளவிலான மற்றும் அறிகுறிகள் அற்றவை. இவற்றிற்க்கு சிகிக்சைகள் தேவையில்லை.
  • ஒரு வேலை பெரிய கட்டிகளாக இருந்தால், அது கருப்பையின் உட்சுவர் வரை வளர்ந்து அதிக இரத்தப்போக்கு, வலி, வயிற்றில் உள்ள மற்ற உறுப்புகளில் அழுத்தம் மற்றும் குழந்தைப்பேரின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்நிலையில் அறுவை சிகிச்சை மூலமே தீர்வு காண முடியும்.

  லேப்ராஸ்கோபி ஃபைப்ராய்டு அறுவை சிகிச்சை

  ஃபைப்ராய்டு கட்டிகளின் அளவும், எண்ணிக்கையும் உருவாகி இருக்கும் பகுதி மற்றும் நோயாளியின் எதிர்கால கர்ப்பம் தரிக்கும் விருப்பம் ஆகியவைகளை கொண்டு அறுவை சிகிச்சை முடிவு செய்யப்படுகிறது.

  மிகப்பெரிய அளவிலான கட்டிகளாக இருப்பினும் மார்சலேட்டர் (Morcellator) என்ற கருவி மூலம் சிறிதாக்கப்பட்டு லேப்ராஸ்கோபி மூலமாக மட்டுமே வெளியே எடுக்கப்படுகிறது. ஓபன் (Open) அறுவை சிகிச்சை தேவையில்லை.

  ஃபைப்ராய்டு கட்டிகள் கேன்சர் (புற்று) நோய் கட்டிகளாக மாற வாய்ப்புள்ளதா?

  கட்டிகள் பெரிய அளவில் இருக்கும் போதோ… குறைந்த காலகட்டத்தில் கட்டிகள் வேகமாக வளர்ந்தாலோ…

  மாதவிடாய் நின்ற பிறகும் கட்டிகள் மேற்கொண்டு வளர்ந்தாலோ….

  புற்றுநோய் கட்டிகளாக மாற வாய்ப்புள்ளது.

  ஸ்ரீ சக்ரா மருத்துவமனையின் லேப்ராய்ஸ்கோபி அறுவை சிகிச்சை கருவிகளைப் பற்றி அடுத்த இதழில் காணலாம்.

  ஊழல் இல்லாத பாரதம்

  2015ம் ஆண்டிற்கான ஊழல் இல்லாத நாடுகள் வரிசையில் 2வது வருடமாக டென்மார்க் முதலாவது இடத்தில் உள்ளது. பின்லாந்து, சுவீடன், நியூசிலாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. 2015ல் இந்தியா 76வது இடத்தில் உள்ளது. ஊழல் ஒழிப்பில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆண்டுதோறும் ஊழல் அளவின் அடிப்படையில் உலக நாடுகளைப் பட்டியலிட்டு வருகிறது. இது சர்வதேச ஊழல் மற்றும் வெளிப்படைத் தன்மையை கண்டறியும் தரவு அறிக்கை ஆகும்.

  சராசரி மனிதனின் மனநிலையில் ஊழல் என்பது ஒரு வாய்ப்பு. அது தப்பிக்க கிடைத்தாகவும் இருக்கலாம். அதாவது, பொருளீட்ட கிடைத்தாகவும் இருக்கலாம். எப்படியாவது தன்னுடைய வாழ்க்கை வசதிகளைப் பெருக்கி விட வேண்டும் என்பதுதான் இன்றைய நவீன தேசத்தின் மனசாட்சி. தேர்தலில் ஊழல் பிரச்சனை பெரும் பங்காற்றுகிறது. ஊழல் என்பது இன்று இனம், மதம், மொழி, கலாச்சாரம், நாடு என்பதை கடந்து உலகளாவிய நடைமுறையாக மாறிவிட்டது. ஊழலை உரம்போட்டு வளர்க்கிறவர்கள், அரசு நிர்வாகத்துடன், தங்களது  தேவைகளுக்காக மக்கள் எப்போதெல்லாம் ஒப்பந்தங்கள் மூலம் பெரும் அளவிற்கு ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது. அதை தடுப்பதற்கான வழிமுறைகள் போதுமானதாக இல்லை. நவீனயுகத்தில் ஊழல் எங்கிருந்து துவங்குகிறது என்கின்ற கேள்விக்கு விடை தேடினால், கிடைக்கிற முதலும் கடைசியுமான விடை முதலாளித்துவ சிந்தனை என்பதுதான்.

  முகவர்களின் உதவியால் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு தகு இல்லாத சிலர் சட்டவிரோதமாக உரிமை பெறுகின்றனர். அதிக கட்டணம் முகவர்களால் வசூலிக்கப்படுகிறது. லஞ்சம் செலுத்தாமல் இருந்தால், காரியம் தாமதமடைந்து பாதிக்கப்படும். மிக அதிக வரி விதிப்பு முறையால், அதிக வரிகட்டுவதற்குப் பதிலாக ஊழல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுப்பது மிகவும் மலிவாகக் கருதப்படுகிறது.

  சிக்கிக்கொள்ளாத தண்டிக்கப்படாத ஊழல்வாதிகள் என்ன தவறு செய்தாலும் சட்டத்தின் பிடியில் சிக்க மாட்டோம் என்கிற நம்பிக்கை அதிகரித்துவிட்டது. ஊழலில் 95 சதவீதம் ரொக்கமாகவே நடைபெறுகிறது. சரக்குகளை இடைமறிக்கும் போக்குவரத்து காவலர்கள் மற்றும் சுங்கச்சாவடிகள் என்று சட்டப்பூர்வமான அமைப்புகளுக்கு அளிக்கப்படும் லஞ்சம் மட்டும் ஆண்டிற்கு 5 மில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. நீதித்துறையில் நீதிமன்ற வழக்குகளுக்கான கால தாமதம், நீதிபதிகள் பற்றாக்குறை மிகவும் சிக்கலான நடைமுறைகள் போன்ற காரணிகளாலும் ஊழல் நடக்கிறது. ஊழல்வாதிகள் கோடிக்கணக்கான தொகைகளை நோட்டுகளாகத்தான் வாங்கிக்கொள்கிறார்கள். அரசுக்கு கணக்கு காட்டுவது இல்லை. சட்டத்திற்கு புறம்பான காரியங்களை மட்டும் செய்ய லஞ்சம் கொடுப்பது மாறி சட்டப்பூர்வமான காரியங்களுக்கே கட்டாயமாகி விட்டது.

  ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள்:

  ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால் முதலில் தேவையற்ற நுகர்வு தவிர்க்கப்பட வேண்டும். முதலாளித்துவத்தின் கோரமான இன்னொரு கரம் மனிதகுலம் இதுகாறும் தேடி கண்டடைந்த அடிப்படை நல் அறத்தை வெட்டி வீழ்த்துவதற்கு முன்பாக நாம் விழித்தெழ வேண்டும். ஊழல் உலகளவில் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஊழலை தடுக்க நவீன புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வாக்காளர்கள் ஓட்டுக்குப் பணம் வாங்க மறுப்பதுடன், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களை கேள்வி கேட்கும் நிலை வலுவடைந்தால், ஊழல் குறையும். ஊழலுக்கு எதிரான நிர்வாக சீர்திருத்தம் அவசியம் தேவை. சிங்கப்பூரில் அபராதம், சிறைதண்டனை, சொத்து பறிமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

  சிங்கப்பூரில் ஊழல் ஒழிப்பு திடீரென வந்துவிடவில்லை. தன்னுடைய முதல் கொள்கையாக ஊழல் ஒழிப்பை முனைந்து 1970ல் இருந்தே லி குவான் யூ செயல்படுத்த துவங்கி வெற்றி பெற்றார். ஊழல் ஒழிப்பு போன்ற விஷயங்களில் சிங்கப்பூரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஊழலின் மொத்த அளவு 1.6டிரில்லியன் டாலர் ஆகும். டிசம்பர் 9ம் தேதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழல்தான் உலகை விட்டு ஒழிந்தபாடில்லை. அதிகாரத்தில் இருந்து கொண்டு ஊழல் புரிபவர்களை சட்டத்தின் ஓட்டை வழியாகத் தப்பிக்க விடாமல் இருந்தால்தான் ஊழலை ஒழிப்பதில் ஓரளவாவது வெற்றி பெற முடியும்.

  ஊழல்புரிபவர்களில் குறைந்த சதவீதமே தண்டிக்கப்படுகிறார்கள். ஊழல்வாதிகள் தங்களுக்கு எதிரான  உறுதியான ஆதாரங்கள் இருந்தும் தண்டனையில் இருந்து தப்பிவிடலாம் என நம்புகிறார்கள். இந்நிலை மாற வேண்டும். வளர்ச்சித்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி, அந்தப் பணிகளுக்கு முழுவதும் போய்சேருவதில்லை என்றால் வளர்ச்சி குன்றிவிடும். ஒவ்வொரு துறைக்கும் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்படுகிறது. ஜனநாயக நாடான இந்தியாவில் மலிந்து கிடக்கும் ஊழலை களையோடு வெட்டி எடுக்காதவரை இந்தியா வல்லரசாவது இயலாத காரியம் என்பதே நிதர்சனம். இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சனை. இது நாட்டின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரும் பிரச்சனையாகவும், தடைகற்களாவும் இருப்பது ஊழல் பிரச்சனை.

  நியாயமானவர்களும், நேர்மையானவர்களும் நம்மிடையே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஊழலை உளப்பூர்வமாக எதிர்க்கிறார்கள். வாய்மையே வெல்லும் என்பதுதான் நமது நம்பிக்கை. ஒலிம்பிக் போட்டியில் நாம் முதலாவதாக வர வேண்டும் . நம் நாட்டில் ஊழல் குறைய வேண்டும். எழுத்தறிவு 100 விழுக்காடாக மாற வேண்டும். இன்றைய உலகின் மிக மோசமான நோய் ஊழல். வெளிப்படைத்தன்மைதான் அதற்கு மருந்தாக இருக்கும். ஊழலால் மிக மோசதமாக பாதிக்கப்படுபவர்கள் ஏழை  – எளிய மக்கள். நேர்மை கௌரவத்தைத் தருகிறது. கௌரவம் இழந்து முக்காடு போட்டபடி காவல் துறையால் அழைத்துச் செல்ல வைப்பது ஊழல். இளைஞர்களின் கடமை ஊழலை எதிர்ப்பதாகும். ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள் அவர்களிடமிருந்துதான் துவங்க வேண்டும். லஞ்சம் இல்லாத ஊழல் இல்லாத வெளிப்படையான வலிமை பொருந்திய இந்தியாவை இளைஞர்களால்தான் உருவாக்க முடியும். ஊழலுக்கு சவால் விட வேண்டிய தார்மீக கடமை இன்றைய இளைஞர்களுக்கு உள்ளது.

  நவீன ஜீனோமிக்ஸ் – பகுதி 7

  மரபுத்தகவல்களை (Genetic information) ஜீன்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை உயிரின் மையக்கோட்பாடு (Central dogma of life) விளக்குவதை நாம் முன்பே பார்த்தோம். செல்லினுள் பல மூலக்கூறுகள் இருந்தாலும், ஜீன்களே எப்பொழுதும் முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஆர்.என்.ஏ.க்கள் ஒரு இடை மூலக்கூறாகவே (intermediary) கருதப்படுகிறது. இதற்கு ஒரு காரணம் ஆர்.என்.ஏ.,க்கள் பெரும்பாலும் செய்தியற்ற ஆர்.என்.ஏ., (noncoding RNAs) மூலக்கூறாக அறியப்படுவதனாலே ஆகும். ஆனால், நிஜத்தில், ஆர்.என்.ஏ.,க்கள் தகவல் செயல்பாட்டிலும் அதன் உருமாறும் வடிவமைப்பிலும் (Plasticity) ஜீன்களை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினால் மிகையாகாது. இன்றும் டி.என்.ஏ., (DNA) ஆராய்ச்சி செய்பவர்களுக்கும், ஆர்.என்.ஏ.,களில் (RNA) ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான விவாதம் மற்றும் போட்டி இருந்து  கொண்டேதான் இருக்கிறது.

  இருப்பினும் ஆர்.என்.ஏ.,வின் பல்துறை செயல்திறனால் (Versatillity) பலவகையில் உயிரின் அடிப்படை கட்டமைப்பில் முக்கிய காரணியாக விளங்குகிறது என்பது மறுக்க முடியாத கூற்று.

  மனித மரபகராதி திட்ட (Human genome project) முடிவில் மனிதனில் ஏறத்தாழ 30,000 ஜீன்கள் இருப்பதாக விளக்கப்பட்டது. ஆனால், தற்போது 19,000த்திற்கும் குறைவான ஜீன்கள் இருப்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வரிசைப்படுத்தும் தொழில்நுட்பத்தால் (DNA sequencing technology) மெய்க்கருவுயிர்களில் (Eukaryotes) அதிகளவில் படியெடுப்பு (Transcription) நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவற்றில் 2சதவீதத்திற்கும் குறைவாகவே ஜீன்களாக புரத உருவாக்க நிகழ்வில் (Translation) ஈடுபடுகின்றன. பெரும்பாலான படியெடுப்பு மூலம் உருவான ஆர்.என்.ஏ.,க்கள் பயனற்ற கூளமாக (Junk) இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், தற்பொழுது அவைகள்தான் செல்லில் மிகவும் முக்கிய ஒழுங்காக்கிகளாக  (Genome regulators) செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

  இவைகளில் முக்கியமானது, நீண்ட செயதியற்ற ஆர்.என்.ஏ., க்களாகும். சுருக்கமாக எல்.என்.சி.ஆர்.என்.ஏ என அழைக்கப்படுகிறது. இவைகள் ஜீன்களின் படியெடுப்பு அல்லது மொழிபெயர்ப்பு நிகழ்வுகளை மிக நுணுக்கமாக கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

  பொதுவாக எல்.என்.சி.ஆர்.என்.ஏ.,க்கள் 200 நியூக்ளியோடைடுகளுக்கு மேலாக, ஜீன்களின் ஆர்.என்.ஏ.,க்கள் போலவே உருவாக்கப்படுகின்றன. இதனாலேயே பல மரபகராதி திட்டத்தில்  இத்தகைய எல்.என்.சி.ஆர்.என்.ஏ.,க்களை ஜீன்கள் என தவறாக சுட்டுவிளக்கம் செய்கின்றனர். ஆனால், இத்தகைய ஆர்.என்.ஏ.,க்கள் புரத தகவல் அல்லது மரபு செய்தியற்று  இருக்கும்.

  மேலும், எல்.என்.சி.ஆர்.என்.ஏ.க்களைபற்றிய ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் கடந்த 10 ஆண்டுகளுக்குள்ளே நிகழ்ந்தாலும், இதைப்பற்றிய ஆராய்ச்சி செய்பவர்கள் மிக குறைவு என்பதாலும், இந்தக் கட்டுரையை தமிழில் முதல் எல்.என்.சி.ஆர்.என்.ஏ. வைப் பற்றிய கட்டுரை என்று கூறினால் அது மிகையல்ல. மேலும், இந்த எல்.என்.சி.ஆர்.என்.ஏ., வை பற்றி ஆராய்ச்சி செய்ய முயல்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதா?  என்பதை பின்வரும் கண்டுபிடிப்புகளின் விளக்கம் மூலம் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

  எல்.என்.சி.ஆர்.என்.ஏ (lncRNA)வைப் பற்றிய முதல் கண்டுபிடிப்பே நம்மை அசர வைக்கும். மனிதர்களில் இரண்டு XY– பாலின் குரோமோசோம்கள் உள்ளன. இவைகளில், ஆண்கள் XY– குரோமோசோமையும், பெண்கள் XX – குரோமோசோமையும் கொண்டுள்ளனர். இதில், பெண்களில் உள்ள இரண்டு XY – குரோமோசோம்களில் ஒரு X – குரோமோசோம் செயலற்று இருக்கும். இதை செயலற்றதாக (inativation) செய்வது Xist – என்னும் எல்.என்.சி.ஆர்.என்.ஏ.,(lnc RNA) என முதன் முதலில் கண்டறியப்பட்டது. ஒருவேளை இந்த இரண்டு XX– குரோமோசோம்களும் செயல்பட்டால், அவைகளில் உள்ள ஜீன்கள் மூலம் உருவாகும் புரதங்களின் அளவு அதிகரிப்பது அந்த பெண் பாலூட்டிக்கு அழிவிற்கு அல்லது பாலின இயல்பிறழ்வுகள் (abnormalities) நிகழ்விற்கு வழிவகுக்கும். இவ்வாறு எல்.என்.சி.ஆர்.என்.ஏ., வின் முக்கிய பங்கு ஜீன் ஈடாக்கம் (gene dosage) எனும் நிகழ்வில் இருப்பது, இந்த ஆர்.என்.ஏ., வைப்பற்றிய பல்வேறு எதிர்கால ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது.

  தற்பொழுது மனித நோய்களை பற்றிய அறிவியல் எல்.என்.சி.ஆர்.என்.ஏ.,க்கள் இல்லாமல் முழுமை அடையாது என்ற அளவில் இந்த எல்.என்.சி.ஆர்.என்.ஏ.,களின் பங்கு கண்டறியப்பட்டுள்ளது. மனிதனின் எண்ணற்ற நோய்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட எல்.என்.சி.ஆர்.என்.ஏ.,க்களுக்காக ஒரு தனி தரவு தளமே (database) இணைய தளத்தில் (https://www.cuilab.cn/lncrnadisease) கட்டமைக்கப்பட்டுள்ளது. அவைகளில் முக்கியமாக எய்ட்ஸ் (AIDS) மற்றும் பல வைரஸ் நோய்கள் (viral diseases) அல்சைமர் (Alzheimer’s) என்னும் மூளை நரம்பியல் நோய்கள், பல்வேறு விதமான கேன்சர் (Cancer), சர்க்கரை வியாதி (database), இதய சம்பந்தமான நோய்கள் (Heart database) என பல்வேறு நோய்களில் இதன் நன்மை (Positive effect) மற்றும் விளைவை (Nagative effect) ஏற்படுத்த கூடிய செயல் திறன் கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால், இத்தகைய ஆர்.என்.ஏ.,வைப் பற்றிய கூரிய அறிவும், ஆராய்ச்சியும் தற்போதைய மருத்துவ உலகில் மிகவும் தேவையான ஒன்றாக விளங்கி வருகின்றது. எனவே, பெரும்பாலான மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தனி ஆய்வகம் உருவாக்கி மரபுத் தொகையியல் (Genomics) மூலம் குறிப்பிட்ட நோய் சம்பந்தமாக ஆய்வுகள் மேற்கொள்கின்றன.

  தாவரங்களிலும் இதன் சிறப்பு திறன் வெளிவந்துள்ளது. பொதுவாக தாவரங்களில் வாழ்க்கை சுழற்சியில் (life cycle) பூக்கும் காலம் (Flowering time) மிகவும் முக்கியமானது. ஏனென்றால், இதுவே தாவரங்களின் பெருக்கம் (reproductive growth) மற்றும் வளர்ச்சியில் (Development) முக்கிய படியாகும். இத்தகைய முக்கிய நிகழ்வில் இந்த எல்.என்.சி.ஆர்.என்.ஏ.,க்கள் ஒழுங்காற்று பணியை (regulatory) செய்வது அறிவியலார்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதனால், தாவரங்களிலும் இந்த ஆர்.என்.ஏ.,க்களை பற்றிய ஆராய்ச்சி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு முக்கிய பங்கு நெல்லில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல் நமது உணவில் தவிர்க்க முடியாத முக்கிய பங்கு வகிக்கிறது. வீரியமுள்ள கலப்பு நெல் ரகங்களை (Hybrid rice with heterosis) உருவாக்குவதில் எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதில் மலட்டு தன்மையற்ற நெல் தாவரங்களை (Sterillity liners) தேர்வு செய்வது மிகவும் இன்றியமையாத ஒன்று. சமீபத்தில், எல்.என்.சி.ஆர்.என்.ஏ.,வால் நெல்லில் மலட்டு தன்மை கட்டுப்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர, சூரிய ஒளியால் தாவரங்களை நற்பலன் அடையச் செய்வது, தாவரங்களுக்குத் தேவையான கனிம ஊட்டச்சத்துக்களை சமச்சீர் செய்வது (ex: phosphate homeostasis) என பல்வேறு ஒழுங்காற்று செயற்பாடுகள் (Regulatory roles) கண்டறியப்பட்டுள்ளன. இவை தவிர பல தாவரங்களில் பருவ நிலை மாறுபாடுகளால் ஏற்படும் விளைவுகளில் இருந்து தாவரங்களை காக்கும் பணியில் ஈடுபடுவதும் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எல்.என்.சி.ஆர்.ஏ.,வின் வியத்தகு செயல் முறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் பல்வேறு வகையான தளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகமொத்தத்தில் குறு செய்தியற்ற ஆர்.என்.ஏ.,க்கள் (miRNAs) போலவே இவையும் தனக்கென தனி இடத்தையும், ஆர்வத்தை அறிவியலாளர்கள் மத்தியில் பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வளர்ந்து வரும் மரபுத்தொகையியலின் தொழில்நுட்பத்தால் இதைப் பற்றிய துல்லிய ஆராய்ச்சி முடிவுகள் நம்மை மேலும் அரச வைக்கும் என்பது உறுதி.

  உங்களை வாழ வைப்பவர்

  நீண்ட காலம் வாழ வேண்டியதன் அவசியத்தை நாம் புரிந்து கொண்டோம். அடுத்து நம்மை வாழவைப்பவரை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? அவரை உச்சுக் குளிர வைத்தால் நாம் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். ஆக, “முதலில் அவரைக் காட்டுங்கள். ஐஸ் வைப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று நீங்கள் சொல்வதுப் புரிகிறது. ஆனால் அவரைக் குளிரவைக்க வேண்டுமானால், முதலில் நீங்கள் உங்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் உங்களைக் காய்த்தெடுத்துவிடுவார். அவர்தான் உங்கள் கல்லீரல். ஆங்கிலத்தில் நம் கல்லீரலை லிவர் (Liver) என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அன்பு நண்பர்களே! நம்மை வாழவைக்கும் கல்லீரலைத் தரமாகக் கையாண்டால் நாம் நீண்ட ஆயுளோடு வாழ முடியும். நம் கல்லீரலைச் சரியாகக் கையாள நாம் முதலில் அதன் தன்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதுபற்றி நாம் முதலில் பார்ப்போம்.

  கல்லீரல். ஆங்கிலத்தில் நம் கல்லீரலை லிவர் (Liver) என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அன்பு நண்பர்களே! நம்மை வாழவைக்கும் கல்லீரலைத் தரமாகக் கையாண்டால் நாம் நீண்ட ஆயுளோடு வாழ முடியும். நம் கல்லீரலைச் சரியாகக் கையாள நாம் முதலில் அதன் தன்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதுபற்றி நாம் முதலில் பார்ப்போம்.

  1. ஆகாச சக்தி அவன்: நம் கல்லீரல் பஞ்ச பூதங்களில் ஆகாசமாகும். நம் உடலில் ஆற்றல் மிக்க உறுப்பு நம் கல்லீரலே ஆகும். நம் கல்லீரல் நம் உடல் ஆரோக்கியத்திற்குச் செய்யும் பணிகள் மகத்தானவை.
  2. பச்சை மரம் அவன்: ஆகாச சக்தியை கிரகிக்கும் தன்மை கொண்டதால் நம் கல்லீரல் வெட்ட வெட்டத் தளிர்க்கும் பச்சை மரத்திற்கு ஈடான தன்மையினைக் கொண்டுள்ளது. அதனால்தான் “எவ்வளவு (தண்ணி) அடித்தாலும் தாங்குவான்” என்று பெயரெடுத்தவன். நம் கல்லீரல் 90 விழுக்காடு சேதமானாலும் மீட்டெடுக்கக்கூடிய தன்மையைக் கொண்டிடுப்பதால்தான் உலகில் இன்னும் குடிகாரர்கள் வாழ்ந்துகொண்டும், குடித் தொழில் நீண்டு கொண்டும் இருக்கிறது. ஆக, தன்னைக் கெடுக்கும் குடிகாரர்களையே வாழவைக்கும் கல்லீரலானது நல்லது செய்யும் நம்மை வாழவைக்காதா?
  3. நம் உடலின் உறுதி அவன்: நம் உடல் கட்டுமானத்திற்கு வேண்டிய புரதத்தைச் செரிக்க பித்த நீர்ச் சுரப்பு மூலம் நொதிகளை வெளியிட்டு செயல்படுத்துகிறது. நல்ல புரதச் செரிமானமே நம் உடலின் உறுதித் தன்மையை அளிக்கிறது.
  4. நம் உடலின் பாதுகாவலன் அவன்: நம் உடல் பாதுகாப்பிற்கு வேண்டிய கொழுப்புச் செரிமானத்தில் பித்த நீர்ச் சுரப்பு மூலம் பங்கெடுக்கிறது. நல்லக் கொழுப்பே நம் நோய் எதிர்ப்பு அமைப்பை காக்கிறது.
  5. உயிர் காக்கும் உற்ற நண்பண் அவன்: நம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விஷங்களை இனம் கண்டு அவற்றை முழுமையாக முறிக்கும் செயலை நம் கல்லீரல் செய்கிறது. ஆக, நம் கல்லீரல் நம்மை வாழ வைப்பது மட்டுமல்லாது, நம்மை ஆபத்திலிருந்து காக்கும் நண்பனாகவும் இருக்கிறது.
  6. கற்பக விருட்சம் அவன்: நம் மண்ணீரலின் மாவுச்சத்துச் செரிமானத்தின் மூலம் கிடைக்கும் குளுக்கோஸை உடல் ஆக்க சக்தித் தேவைக்குப் போக மீதியை கிளைக்கோஜனாக மாற்றி கல்லீரலானது சேமித்து வைத்துக்கொள்கிறது. நம் உடலுக்கு எப்போதெல்லாம் சக்தி தேவையோ அப்போதெல்லாம் நம் கல்லீரல் அதனை குளுக்கோஸாக மாற்றித் தருகிறது.
  7. தன்னம்பிக்கையின் ஊற்று அவன்: நம் கல்லீரல் ஆற்றலாகவும் தரமாகவும் செயல்பட்டால் தான் நாம் தன்னம்பிக்கையாக இருக்க முடியும். நம் உடலின் உறுதியைப் பொறுத்துதான் அதனூடே ஓடும் உயிரானது நிலைத்த தன்மையோடு இயங்க முடியும். இந்த உறுதியான உடலில் நிலைத்த உயிர் ஓட்டமே தன்னம்பிக்கையைத் தரும். நாக்கு சுவைக்கும் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி கல்லீரலைக் கெடுத்துக் கொண்டவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பதை நாம்  காணலாம்.
  8. கண்களின் ஒளி அவன்: நம் கல்லீரலின் திணிவு பெற்ற ஆகாச சக்தியே நம் கண்களின் நெருப்பு சக்தியாக விளங்குகிறது. கல்லீரலின் ஆக்கத் திறன் மற்றும் சக்தி நிலையினை நம் கண்கள் காட்டிக்கொடுக்கும். சான்றாக, நம் கல்லீரலில் பித்தம் அதிகமானால் நம் கண்கள் மஞ்சளாகவும், கல்லீரல் இரணமாகும்போது நம் கண்கள் சிவந்து போவதையும் காணலாம்.

  ஆகாச சக்திரூபமான கல்லீரலை

  நாம் ஆரோக்கியமாக வாழ வைப்போம்!

  ஆகா! அது நம் உடலை உறுதிப்படுத்தி

  நம்மை நீடூழி வாழ வைக்கும்.

  இதயத்தின் மொழியை வாசிப்பது எப்படி

  இதயத்தின் மொழி என்பது உள்ளுணர்வின் அறிவுறுத்தலே, அந்த உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ள சில பண்புகளை நம்முள் வளர்த்துக் கொள்வது அவசியம். அவற்றை சில புதிய கண்ணோட்டத்தில் இனி காண்போம்.

  புதருக்குப்பின்னாடி என்ன இருக்கிறது?

  என்னுடைய குரு சுவாமி ரிஷியோகியின் தாய் தாமரைச்செல்வி வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். கதிரறுக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு வேலைகளைத் தொடங்கினால் , இரவு பன்னிரண்டு மணி வரைக்கும் அவருக்கு ஓய்வுவே இருக்காது.

  வேலையாட்கள் கதிரறுக்க தான் மேற்பார்வை பார்ப்பது என்பது கிராமத்து மனிதர்களுக்கு இயல்பல்ல. தானும் ஒரு வேலையாளாகப் பாடுபடுவது தான் அவர்களின் சமத்துவ பண்பாடு.

  அப்படி கதிரறுக்கும் வேலை நடந்து கொண்டிருந்த போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. சுவாமி ரிஷியோகியின் தாய்  தாமரைச்செல்வியின் உள்ளங்கை கதிரறுக்கும் போது கிழிந்து விட்டது. இரத்தம்  பெருகி ஓடுகிறது. எல்லோரும் பதைபதைப் போடு துணி கொண்டு கட்டி இரத்தத்தைக் கட்டுபடுத்துவதில் முனைப்பாக இருந்த போது அந்த இடத்திற்கு ஸ்வாமி ரிஷியோகி வந்தார்.

  நடந்ததை அறிந்தார். அவர் முகம் மவுனமாக இருந்தது.  சிறிது நேரத்தில் முகத்தில் இருந்த மவுனம் மலர்ச்சியாகி, அது அதிகரித்து, புன்னகையாக வெளிப்பட்டது. காடு, மலை, சுடுகாடு என்று சுற்றி, கண்ட இடத்தில் உட்கார்ந்து கண்ணை மூடியதில் பைனுக்கு இதயம் கல்லாகிவிட்டதோ என்று அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள். சிலர் அதை வெளிபடுத்தவும் செய்தார்கள். என்னப்பா! அம்மா வலியால் துடிக்கிறேன் நீ கவலையில்லாமல் சிரிக்கிறாய், என்று அவரின் தாயார் கண்ணீரோடு, மகனை கண்டிக்கும் விதமாகவும் கூறினார்.

  அம்மா! என் இதயம் எவ்வளவு இலகியது, எவ்வளவு அன்பு மையமானது என்பதை அறிந்து கொள்வது சாமான்யர்களுக்கு கடினம் தான். நான் உனக்கு நடக்கயிருந்த பெரிய தீமை இந்தக் காயத்தோடு விலகிப் போனதை நினைத்து தான் மகிழ்ச்சியில் சிரிக்கிறேன் என்றார். உன் பூர்விக கர்மவினைப்படி இன்று உன்னைப் பாம்பு கடிக்க வேண்டும் என்று இருக்கிறது. குருவின் அருளால் அது இந்தக் காயத்தோடு விலகி விட்டது. உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் இந்தப் புதரில் இருந்த பாம்பு வெளிவரும் பாருங்கள் என்றார்.

  சிலர் அருகில் இருந்த புதரை விலக்கி தடியால் அடிக்க ஒரு பாம்பு அந்தப் புதரில் இருந்து வெளியேறி ஓடியது. ஸ்வாமிஜியை விமர்ச்சித்தவர்களுக்கு என்ன சொல்வது  என்று  தெரியவில்லை. ஒரு யோகி உணர்ந்த உண்மையை உலகம் உணர வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இயற்கைப் புதரில் இருந்த ஆபத்தை வெளிப்படுத்தியது. ஆனால் மற்றவர்களுக்கு புதர் ஒரு புதிராகவே இருக்கும். அது தான் இயற்கையின் தர்மம். ஏனெனில் தன்னை உணர்ந்து உலகை அறிந்த ஞானிக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் சிறிது இருக்கத்தான் செய்யுமில்லையா?

  ஏன் எனக்கு மட்டும் இப்படி? என்னையேன் காரணமே இல்லாமல் இறைவன் சோதிக்கிறான் என்று புலம்பும் மக்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் இல்லாமல் காரியமில்லை.

  ஒரு செயலுக்குப் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை அறிந்துகொள்வது ஒரு ஞானிக்கு சாத்தியமாகிறது. ஒவ்வொரு செயலுக்கும் பின்னும் இந்த இயற்கை நேர்மறையான ஒரு நல்ல காரணத்தை வைத்திருக்கும் என்று புரிந்து கொள்வது சாமான்யனுக்கும் ஞானத்தை சாத்தியமாக்கும்.

  ஒரு கிராமத்தில் ஒரு அப்பா, மகன், அவர்களிடம் குதிரை இருந்தது. அதை வைத்து தான் அவர்களின் ஜீவனமே நடந்து வந்தது. குதிரை வண்டி ஓட்டி வந்த சொற்ப வருமானத்தில் தான் அவர்களின் வாழ்க்கையே ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நாள் அந்தக்குதிரை காட்டுக்குள் ஓடிவிட்டது.

  ஊரார் வந்தார்கள். அடக்கடவுளே குதிரை ஓடிவிட்டதே. இனி வாழ்வதற்கு நீவிர் என்ன செய்வாய், என்ன ஒரு துரதிர்ஷ்டமான நிலை என்றனர்.

  இது துரதிர்ஷ்டம் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? ஊராரைப் பார்த்து இப்படிக் கேட்டான் அந்தக் குதிரை வண்டிக்காரன்.

  சில  தினங்கள் கடந்து சென்றது…காலை வேளை…

  குடியானவன் குதிரை லாயத்தின் பக்கமாக சென்று போது, அங்கு தனது குதிரை திரும்பி வந்திருப்பதைக் கண்டான்.அது மட்டும் வரவில்லை. உடன் காட்டிலிருந்து சில வலிமையான குதிரைகளையும் அழைத்து வந்திருந்தது.

  ஊர்க்காரர்கள் இந்த முறையும் வந்தார்கள். அட! என்ன ஒரு அதிர்ஷடம், இந்தக் குதிரைகளைப் பழக்கினால் உன் மகனுக்கும் ஒரு குதிரை வண்டி கிடைக்கும். மேலும், சில குதிரை வண்டிகளை வாடகைக்கு விடலாம். என்றார்.

  இந்த முறையும் நிதானமாக இது அதிர்ஷ்டம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டான் அந்த வண்டிக்காரன்.

  சில வாரங்கள் கடந்தது. காட்டில் இருந்து வந்திருந்த குதிரை சவாரிக்குப் பழக்கிய போது கிழே விழந்ததில் அந்த வண்டியோட்டியின் மகனுக்கு கால் முறிந்து விட்டது. ஊர்க்காரர்கள் ஆப்பிள் பழக்கூடையுடன் வந்து ஆறுதல் கூறினர்.

  ச்சே! அந்தக் கடவுளுக்கு கருணையே இல்லையா? உன் மகன் நடக்க வருடங்கள் ஆகும், போலிருக்கிறதே. நீ உன் வேலையையும் பார்க்க வேண்டும். உன் மகனையும் கவனித்துக் கொள்ள வேண்டும். என்ன ஒரு துயரத்திற்குரிய சம்பவம் என்றனர் மீண்டும்.

  தனது மகனின் கால்களுக்கு, அவன் வலியில் துடிப்பதைப் பார்த்துக் கொண்டே கட்டுப் போட்டான் வண்டியோட்டி. பொறுத்து கொள் மகனே! விரைவில் குணமாகிவிடுவாய் கால் முறிந்ததே தவிர அதை நீ இழக்கவில்லை. அதற்கே கடவுளுக்கு நன்றி சொல் என்றபடி ஆறுதல் சொன்னார்களைத் தீர்க்கமாகப் பார்த்தான் வண்டிக்காரன்.

  நடந்தது துயரத்திற்குரிய சம்பவம் தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவனுடைய விசித்திரமான போக்கு அனைவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. மகனுக்கும் தான் சில மாதங்கள் கடந்திருக்கும். அந்த நாட்டின் மீது வெறும் படையோடு அண்டை நாட்டு மன்னன் படையெடுத்து வந்தான்.

  அந்தக் கிராமத்தில் இருந்த வாலிபர்கள் அனைவரையும் ராணுவம் போருக்கு அழைத்துக் கொண்டே சென்றது. போர் முனையில் அனைவரும் மரணம் அடைந்தனர்.

  கால் ஒடைந்த வண்டியோட்டியின் மகன் மட்டுமே தப்பினார்.

  ‘இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு’ இது என்று அவ்வையார் கூறுகிறார். இடும்பை அதாவது துன்பத்தை இடும் பை இந்த சாரீரத்தைச் சொல்கிறார். இந்த உடம்போடு இருக்கும் வரை துன்பம் இருக்கத்தான் செய்யும்.

  இன்பம் துன்பம் காகிதத்திற்கு இரண்டு பக்கங்கள் போன்றது. அந்த பக்கங்களால் ஆனது தான் நமது வாழ்க்கை சரித்திரம்.

  எனவே, இயற்கையாக உங்களுக்கு ஏற்படும் துயரங்களை சகிப்புத்தன்மையோடு ஏற்றுக் கொள்ள முயலுங்கள் ஏனெனில். தீதும் நன்றும் பிறர்தர வாரா. என்பது தான்  உண்மையான தத்துவம்.

  சிகரமே சிம்மாசனம்

  இலட்சியம் பணி நதியாய் உங்களுக்குள் பயணிக்கட்டும்

  வாழ்க்கை – நெளிவு சுளிவுகளின் நெடுஞ்சாலை. வறட்சியின் வர்ணம் காட்டும் பாலைவனம், முள்ளுக்குள் முகிழ்ந்தாலும் ரோஜா தரும் நறுமணம் பாறைக்குள் மறைந்தாலும் பருகத்தகுந்த சுனைநீர். இப்படி இரு வேறு கலவையாய் எங்கும் பொங்கித் தளும்பும் பூம்புனலாய் வாழ்க்கை நதி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

  நம்பிக்கையை நடவு செய்யும் மனித வாழ்க்கை காலந்தோறும் கவனிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. வாழ்க்கையின் வெகுமதி வியர்வைத் துளிகளால் ஆனது. வாழத் தெரியாதவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். வாழத் தெரிந்தவர்கள் வியர்வைச் சிந்துகிறார்கள். உள்ளே போகிற நீர் வெளியே வந்துதான் தீரவேண்டும் என்பர் பேராசிரியார் க. இராமச்சந்திரன். இதையே இறையன்பு அவர்களும் சொல்வார். ‘விடலைப் பருவத்தில் வியர்வை வாய்க்காலாக வடியாவிட்டால் கடைசிக் காலத்தில் கண்ணீர் கால்வாயாகப் பெருக்கெடுக்கும் என்பார்.

  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் உலகிற்கு கொடுத்த அழிக்க முடியாத, கல்வெட்டுகளாய் மனதின் உள்தட்டுகளில் பதிக்கப்பட வேண்டிய செய்திகளைக் கோர்வைக் குறையாமல் குறிப்பிட விரும்புகிறேன். நம் செல்லக் குழந்தைகளை பள்ளிக்கு முதல் நாள் அனுப்பிய அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறேன். லிங்கன் இவற்றை ஒட்டு மொத்த பெற்றோரின் ஆசைகளின் அணிவகுப்பை செல்லக் குழந்தைகள் சேகரித்து வைக்க வேண்டிய குறிப்பு என்னும் அறிவுப்பேழையை மாணவர் பருவம் தன் மனதில் தினந்தோறும் வருடிப்பார்க்கும் வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும். இது எதிர்காலத்தில் குழந்தைகள் எடுத்து வைக்கும் இலட்சியங்களின் தொகுப்பாய், வாழ்க்கை வகுப்பாய் – அமையும். இதோ லிங்கன் தரும் செய்தி.

  உலகே! எனது மகன் இன்று பள்ளி செல்லத் தொடங்குகிறான். (World my son starts school today!) உலகே! என் குழந்தையைக் கைப்பிடித்துக்கொள். அவன் இன்று பள்ளி செல்லத் தொடங்குகிறான். எல்லாமே சில காலத்திற்கு அவனுக்கு அந்நியமாகவும் புதிதாகவும் இருக்கும். அவனைக் கனிவுடன் நடத்துவாய் என்று நான் நினைக்கிறேன். உனக்குத் தெரியுமா? அவனது கூண்டில் இதுவரை அவன்தான் அரசன். அவன்தான் கொல்லைப் புறத்தின் தலைவனாய் இருந்திருக்கிறான். நான் எப்போதுமே அவனது காயங்களுக்கு மருந்திட அவனைச் சுற்றியே இருந்திருக்கிறேன்! நான் அவனைத் தேற்றி ஆறுதல் அளிக்க கூடவே இருந்திருக்கிறேன்.

  ஆனால் இப்போது எல்லாமே வித்தியாசமாய் இருக்கப்போகிறது. இன்று காலை அவன் முன்வாசல் வழியாக இறங்கி நடக்கப் போகிறான். போர்களையும் துன்பங்களையும்,துயரங்களையும் கொண்டிருக்கக் கூடிய பெரியதொரு சாகசப்பயணத்தைத் தொடங்கப் போகிறான். இந்த உலகில் வாழ்வதற்கு நம்பிக்கையும், அன்பும், தையரியமும் தேவை. ஆகவே, உலகே! அவனது பிஞ்சுக்கைகளைப் பற்றிக் கொண்டு அவன் அறிய வேண்டிய விஷயங்களை நீ அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவனுக்குக் கற்றுக்கொடு உன்னால் முடிந்தால் மிருதுவாகக் கற்றுக்கொடு.

  எல்லா மக்களும், நியாயமானவர்கள் இல்லை, எல்லா ஆண்களும், பெண்களும், உண்மையானவர்கள் இல்லை, என்பதை அவன் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு தீயவனுக்கும் ஒரு நல்லவன் இருப்பான் என்பதையும், ஒவ்வொரு எதிரி இருக்கும் இடத்திலும் ஒரு நண்பன் இருப்பான், என்பதையும், அவனுக்குக் கற்றுக் கொடு. மற்றவரை பயமுறுத்தி கொடுமைப் படுத்துபவரே மிக எளிதில் மண்ணைக் கவ்வக்கூடியவர்கள் என்பதை அவன் சீக்கிரம் கற்றுக் கொள்ளட்டும்.

  அவனுக்கு புத்தகங்களின் அற்புதத்தைக் கற்றுக்கொடு. வானத்தில் உள்ள பறவைகள் சூரிய வெளிச்சத்தில் தேனீக்கள், பசுமையான மலையில் உள்ள பூக்கள் போன்றவற்றின் சாசுவதமான புதிர்நிலையைப்பற்றிச் சிந்திப்பதற்கு அவனுக்கு அமைதியான நேரத்தைக்கொடு. ஏமாற்றுவதைவிட தோல்வியடைவது மிகமிகக் கௌரவமானது என்பதை அவனுக்குக் கற்றுக்கொடு, மற்றவர்கள் அவனது சொந்தக் கருத்துகளைத் தவறு என்று சொன்னாலும் அவற்றில் அவன் நம்பிக்கை வைத்திருக்கும்படி அவனுக்குச் சொல்லிக்கொடு. மற்ற எல்லோரும் கூட்டமாகச் செல்லும்போது கூட்டத்தைப் பின்பற்றிச் செல்லாமல் தனித்தன்மையுடன் இருக்கத் தேவையான பலத்தை என் மகனுக்குத்தர முயற்சி செய். மற்றவர்கள் சொல்வதைக் கேட்குப் படியும், ஆனால் உண்மை என்கிற பிரிப்பானில் (Filter) கேட்கின்றவற்றை யெல்லாம் வடிகட்டி அதிலிருந்து வருகின்ற நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ளும்படியும் சொல்லிக்கொடு.

  அவனது இதயத்திற்கும் ஆன்மாவிற்கும், ஒருபோதும் விலை வைக்கக் கூடாது என்று கற்றுக்கொடு. சத்தமிடும் கூட்டத்திற்குச் செவி சாய்க்காமல் அவன் எதனைச் சரியென்று நினைக்கின்றானோ, அதற்காக நின்று போராடும்படிக் கற்றுக்கொடு! ஆனால் செல்லம் கொடுக்க வேண்டாம் ஏனென்றால் தீயிலிட்டு சோதிப்பதால் தான் உறுதியான எஃகு உருவாகிறது.

  உலகே! இது பெரிய ஆணைதான். ஆனால் உன்னால் என்ன செய்ய முடியும் என்று பார்! அவன் அவ்வளவு அருமையான பையன்!

  கையொப்பம் – ஆபிரகாம் லிங்கன்.

  கவிஞன் பேச்சாளன், எழுத்தாளன் என்ற என் பன்முகத் தன்மையைப் புறந்தள்ளி ஒரு தந்தையாய் என் மகன்களுக்கு இந்த நூற்றாண்டில் சொல்ல வேண்டியதை எழுதிவைக்கிறேன். இது உயில் இல்லை; என் உயிர்.

  என் செல்லங்களே! என்னில் இருப்பதை உங்களுக்குள் திணிக்க விரும்பவில்லை. இருந்தாலும் காலந்தரும் அரிய பொக்கிஷங்களை கவனமாகப் பதித்துக் கொள்ளுங்கள். என் பிஞ்சுப்பருவத்தில் முகம் தெரியாத நேரத்தில் என் அப்பா அகால மரணத்தை அள்ளிக் கொண்டார். அப்பாவின் அரவணைப்பு இல்லாமல் அலைந்திருக்கிறேன். அப்பாவின் பாசத்திற்காகவும் அணைத்துக் கொள்ளும் அன்பிற்காகவும், நாடோடி போல் கிடந்திருக்கிறேன். அப்பாவின் முகமே தெரியாமல் ஒரு ஜென்மம் கழிந்துவிட்டது. என் அப்பாவைப்போல் இல்லாமல் ஒரு அப்பாவியாய் உங்கள் பிஞ்சுவிரல் தொட்டு கொஞ்சியிருக்கிறேன். வேகமாய் வார்த்தைகளை வீசியிருந்தாலும் உங்களுக்குத் தேவையான நல்லவைகளை அதற்குள் விதைத்திருக்கிறேன். நண்பர்களை அளவோடு வைத்துக்கொள்; புரிதபோடு அவர்களுடன் நட்பாடு; ஆணவத்திற்கு என்றும் அடிபணியாதே; மமதை இல்லாமல் மனதை வைத்துக்கொள்; அடுத்தவரின் வார்த்தையை மரியாதையோடு கூர்ந்து கேள்.

  உலகம் – வேகமாக முன்னேறி வருகிறது. விஞ்ஞான விசயங்களை உன் ஞாபகப்பேழையில் செறுகிவை. இண்டர்நெட், இமெயில் செய்திகளை நாள்தோறும் உனக்குள்ளே நட்டுவை. என்னை என் தொழில் தேவதை வான்வழிப் பயணத்தில் வலம் வரவைத்தாள். உன் தொழில் மூலம் எதிர்காலத்தில் ஆகாய விமானத்தின் அகலங்களை அளந்துபார். யாரைப்பற்றியும், யாரிடமும் புறம் பேசாதீர்கள், முடிந்தால் அந்த இடத்தில் இருங்கள்; இல்லையேல் வெளியேறிவிடுங்கள் – அடுத்தவர்களிடமும், முகம் தெரியாதவர்களிடமும் அளவோடு பேசுங்கள்.

  முடிந்ததை சொல்லுங்கள்; உண்மையாக இருங்கள். குடும்பத்தை கோவில்போல் நினையுங்கள் – முடிந்தபோது, முடிந்தால் உதவுங்கள் பிறருக்கு உதவும்போது நாமும் உயர்வோம். இதை எதிர் பார்த்து செய்யாதீர்கள்.

  இலட்சியம் பனி நதியாய் உங்களுக்குள் பயணப்படும் நாளே உங்களுக்கு திருநாள். கொண்ட கொள்கையில் குறியாய் இருக்க வேண்டும். எந்தநேரத்திலும் சுய கௌரவத்தையும் தன்மானத்தையும் இழந்து விடாதீர்கள் மனிதனுக்குள் இருக்க வேண்டிய மாபெரும் சொத்தே அதுதான்.

  விடாமுயற்சியை பக்க துணை ஆக்குங்கள்; பொறுமையை எளிமையாய் கடைபிடியுங்கள்; நிதானத்தோடு செயலில் இறங்குங்கள்; சகிப்புத்தன்மை உங்களுக்குள் இருந்தால் மட்டுமே சாதனையின் சிகரத்தை தாராளமாய் தொடமுடியும்.

  நல்லவற்றை செய்யுங்கள்; அல்லவற்றை தவிருங்கள். உங்களை உசுப்பிவிடும் கூட்டம் ஒன்று அலைந்து கொண்டிருக்கும். அதற்குள் அகப்பட்டு விடாதீர்கள். புத்தகம் படி; தேடிப்படி; புரிதலோடு புறப்பட்டுபடி; நாளைய நம்பிக்கை கதவுகள் திறக்கும். சேமிக்கும் பழக்கத்தை சிறுகசிறுக கற்றுக் கொள்ளுங்கள் – உடற்பயிற்சியோடு நடைபோடுங்கள், யோகாவோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள்; மூச்சுப்பயிற்சியோடு முன்னுக்கு நில்லுங்கள்; பேச்சுப்பயிற்சியும் உங்களுக்கு பிரகாசமாய் கிடைக்கும்.

  ஸ்மார்ட் கிச்சன்

  ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சொந்தமாக வீடு கட்டுதல் என்பது பெரும் இலக்கு என்றே சொல்லலாம். சொந்த வீடோ, வாடகை வீடோ, ஒரு வீட்டின் மகாராணி என்று அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணைச் சொல்ல வேண்டும். அவரது அரண்மனை பெரும்பாலும் சமையலறையாகத் தான் இருக்கும்.

  எல்லா வசதிகளுடனும் கூடிய சமையலறையைத் தான் இப்போது கட்டி வருகிறோம். சமைத்தல் என்ற புனிதமான செயலை நம் பெண்கள் மிகச் சாதாரணமாகச் செய்கின்றனர்.

  பெரும்பாலும் வரவேற்பறையாக இருக்கும் ஹால் ஓரளவு பராமரிப்புடனேயே இருக்கும், அடிக்கடி தினமும் பலமுறை உபயோகிக்கப்படும் சமையலறையைப் பார்த்த உடனேயே, அந்த வீட்டு மகாராணியின் வேலைத் திறமையும், சுறுசுறுப்பும் தெரிந்து விடும்.

  “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது போல் ஒரு குடும்பத் தலைவியின் திறமைகள் வெளிப்படும் இடம் சமையலறை தான்.

  மனிதர்கள் உயிருடன் ஆரோக்கியமாக, புத்துணர்ச்சியுடன் செயல்படத் தேவையான ஆற்றலைத்தரும் உணவைத் தயாரிக்குமிடம் தான் சமையலறை. அதைத் தயாரித்து, சுவையாக, மணமாக, விரைவாக வழங்குபவர்கள் பெண்கள்.

  இன்று நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்களும் சிறிய உணவகங்கள், சாலையோர ஓட்டல்கள் போன்றவைகளைத் தவிர்த்து விலை அதிகமானலும், நல்ல ஓட்டல்களை நாடிச் செல்வதற்கு காரணம், அங்குள்ள சுத்தமும் சுகாதாரமும் தான்.

  சிறு கடைகளில் சுத்தமாவது? சுகாதாரமாவது? அதோடு உணவெண்ணைய் திரும்பத் திரும்ப சூடுபடுத்துவது, மீதமான உணவுப் பொருட்களை புதிய உணவுப் பொருட்களுடன் கலந்து விடுவது என்ற பணிகள் குறைவில்லாமல் தொடர்வதை அறிவோம்..

  விலை குறைவு என்பதற்காக சாலையோரத்தில் சரியாகப் பராமரிக்கப்படாத உணவகங்களில் சாப்பிட்ட பலர் அதனால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காகச் செய்த செலவை நினைத்துப் பார்த்தால், சுத்தமான ஓட்டல்களில் விலை அதிகமானலும் கூடப்பரவாயில்லை. எனச் சாப்பிடுவது ஆஸ்பத்திரிக்குச் செல்லும் காலத்தை ஒத்தி வைக்கும். அதை விடச் சிறப்பானது நாமே நம் வீடுகளில் நமக்கு விருப்பமான பல்வகை உணவுகளைத் தயாரித்து உண்பதாகும்.

  வீட்டுக்கு வருவோரை வரவேற்று உபசரிப்பது என்பது நம் கலாச்சாரம், பண்பாடு என்பதாகும். சமையலறையை ஹால் போல சுத்தமாகவும், ஒழுங்காகவும் பராமரிப்பது எப்படிப்பட்ட உணவையும் சுவையுள்ளதாக்கி விடும்.

  நெருங்கிய சொந்தம், நெருங்கிய நட்பு வட்டத்தைத் தவிர, மற்றவர்களை வரவேற்பறையிலேயே அமர வைத்து உபசரித்து அனுப்பி விடுவார்கள், ஏனென்றால் பெரும்பாலும் சமையலைறையில் பாத்திரங்களும், மற்ற பொருட்களும் கலந்து ஆங்காங்கே இறைந்து கிடக்கும், அல்லது சுத்தம் செய்ய வேண்டிய பாத்திரங்கள், கழுவுவதற்கான இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கும், சமையல் செய்யும் போது சேர்ந்து விட்ட காய்கறிகளின் வேண்டாத பகுதிகள் அனைத்தும் ஒரு குப்பைக் கூடையில்(CARBAGE BOX) கிடக்கும்.

  பெரும்பாலும் இக்காட்சியை நம்மில் பலர் பார்த்திருப்பர். வீடுகளில் கரப்பான்பூச்சி, பல்லி, கொசு, ஈ, மற்றும் சிறுபூச்சிகள் வசிக்குமிடம் சமையலறை தான், அங்கிருந்து வீட்டின் மற்ற பகுதிகளுக்கு அவை சுற்றுலா சென்று திரும்பும்; அல்லது அங்கேயே தங்கிவிடும்.

  சமையலறையில் என்ன தான் வைத்திருக்கிறோம்? சமையலுக்கான தானியங்கள், மளிகை சாமான்கள், மிக்சி, கிரைண்டர் பாத்திரங்கள், அடுப்பு காய்கறிகள், நீர், குளிர்சாதனப்பெட்டி(FRIDGE) மற்றும் குப்பைக்கூடை முதலியன மேலுள்ளவற்றுள் வசதியைப் பொறுத்து பொருட்கள்  கூடலாம்; குறையலாம்.

  சமையலுக்கு உபயோகிக்கும் எந்தப் பொருளையும் நாம் காசு கொடுத்தே வாங்கி வருகிறோம். சில மாதங்கள் ஆனபின் சில பொருட்களில் செல் பிடித்து விடும். காசு கொடுத்து வாங்கியதால், செல்களை நீக்கி, அந்தப் பொருளை சமையலுக்குப் பயன்படுத்துவோர் பலர் உள்ளனர்.

  காய்கறிகளை வாங்கி வந்து, வெளியே வைத்தால் காய்ந்து விடும் என்று பிரிட்ஜில் வைத்து. அதை மறந்து விட்டு, திடீரெனப் பல நாட்கள் கழித்து நினைவு வந்து எடுத்து, கொடுத்த காசு நினைவுக்கு வந்ததால், அந்த சத்துக்களை இழந்த காய்களையும் சமைத்து சாப்பிடும் பலர் உள்ளனர்.

  காய்கறிகளை நறுக்கி, தேவையற்ற காம்புகள், நார்கள் விதைகளை நீக்கி, சமைத்து உண்கிறோம். நீக்கியவைகளை குப்பைக் கூடையில் போட்டு வைப்போம். குப்பைக்கூடையில் போட்டுள்ள காய்களின் நறுக்கிய பகுதிகளுக்கும் தான் காசு கொடுத்து வாங்கினோம் என அதையும் சமைத்துச் சாப்பிடுவோர் உள்ளனரா?

  அல்லது ஒரு நாள் காய்கள் இல்லையென்பதற்காக, இதுபோல் நறுக்கி குப்பைக் கூடையிலுள்ளவைகளை எடுத்து சமைப்போர் உள்ளனரா?

  பதில்  இல்லை என்பது தான். சமையலறை போன்றது தான் நம் உடலும் மனமும். நாம் சமைத்துச் சாப்பிடும் உணவைச் செரித்து, தேவையான சக்தியைப் பெறுகிறது உடல். படித்தல் கேட்டல், பார்த்தல், சிந்தித்தல் போன்ற காரியங்களால் புதிய தகவல்களைப் பெற்றும், தெரிந்தவைகளை நினைவு படுத்தியும் பதிவு செய்து கொள்கிறது மனம்.

  சத்தான உணவில்லையெனில், நம் சக்தியும் குறைந்து சோம்பலும், சோர்வும், பலவீனமும் நம்மை நண்பர்களாக்கிக் கொள்ளும்.

  அதே போலத்தான் நம் மனம் என்பது. நல்ல எண்ணங்களான அன்பு, பொறுமை, பணிவு, உதவுதல், மன்னித்தல், பாராட்டுதல், விட்டுக்கொடுத்தல், நன்றி கூறுதல், இவற்றால் நல்ல மணம் வீசும் பூக்களால் நிரம்பிய கூடையாக இருக்க வேண்டும்.

  இதை வலியுறுத்தவே, இறைவனை வழிபடச் செல்லும் போது தூய மலர்களை கூடையில் வைத்து எடுத்துச் செல்கின்றனர்.

  உலகம் என்பது வெளிச்சமும், இருட்டும் இணைந்ததே. வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததே ; இதுபோல் மனம் என்பதும் நல்ல எண்ணங்களும், தேவையற்ற எண்ணங்களும் இணைந்தது தான்.

  இருட்டைப் போக்க செயற்கை வெளிச்சத்தைக் கண்டுபிடித்து உபயோகித்து மகிழ்கிறோம். வாழ்க்கையைத் துன்பங்கள்  இல்லாமல் வாழ்வதற்கு பல வழிகளைக் கண்டுபிடித்து அமைதியாக வாழும் வழியையும் பலர் கடைப்பிடிக்கின்றனர்.

  ஆனால் மனதிலே பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ள எண்ணங்களைத் தரம் பிரித்து, நல்லவைகளை மட்டும் வைத்துக் கொண்டு, தேவையில்லாதவைகளை, துன்பம் தரக்கூடியவைகளை,பகை உணர்வை உண்டாக்கக் கூடியவைகளை வெளியேற்றும் வழி தெரியாமல் பலர் திண்டாடிக் கொண்டுள்ளனர்.

  அதிலும் குறிப்பாகப் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பின் வெளிப்பாடு தான் தலைவலி, கழுத்து வலி, முதுகுவலி, இடுப்பு வலி, மூட்டுவலி போன்றவைகள் என ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.

  காய்கறிகளில் நல்ல பகுதிகளை சமைப்பதற்கு எடுத்துக் கொண்டு, தேவையற்றவைகளை நீக்கும் திறமை ; வசிக்கும் வீட்டில் குப்பைகளைக் கூட்டி அகற்றும் திறமை ; மளிகை சாமான்களில் கலந்துள்ள தேவையில்லாத தூசு, கல், பிற பொருட்களை புடைத்தல், சுத்தம் செய்தல் போன்றவற்றால் பிரித்தெடுத்து அப்புறப்படுத்தும் திறமை ;இது மட்டுமா?

  வீட்டுக்கு வருவோரில் தீய எண்ணம், தகாத எண்ணம், பொறாமை குணம் உள்ளோரை, பார்த்த உடனேயே எடைபோட்டு கண்டுபிடித்து வீட்டாருக்கு எச்சரிக்கும் உயர்பண்பு ஆகியவை நிரம்பிய தாய்க்குலம் தன் மனதிலுள்ள தேவையில்லாத எண்ணங்களை வெளியேற்ற வழி தெரியாமல், தெரிந்தாலும் வெளியேற்ற விரும்பாமலும் கஷ்டப்பட்டு இது தான் என் விதி என வாழ்ந்து வருவது வேதனைக்குரியது.

  எனவே முதலில் தேவையற்ற குணங்கள் எவை என்பதில் தெளிவு வேண்டும். பகைமை, வெறுப்பு, பொறாமை, எதிர்பார்ப்பு, கோபம், பாகுபாடு, அதிக ஆசை, பிடிவாதம், விமர்சனம், சுயபச்சாதாபம், ஒப்பீடு, கவலை போன்றவைகள் நமக்குத் தேவையில்லாத குணங்களாகும்.

  இவைகளை நீக்கும் எளிய வழிகளுக்கு காத்திருப்போம்.

  ஏன் உண்மைக்கு அரிச்சந்திரன்? கொடைக்கு கர்ணன்?

  இன்றைக்கும் உண்மைக்கு எடுத்துக்காட்டாக அரிச்சந்திரனைத்தான் கூறுகிறோம்.  உண்மை பேசுபவர்களைக் கூட ‘அரிச்சந்திரனுக்குப் பக்கத்து வீடா’ என்றுதான் கேட்கிறோம்.  அத்தகையதொரு புகழ் அரிச்சந்திரனுக்குச் சாதாரணமாகக் கிடைத்து விடவில்லை.

  ஒரு முறை தேவலோகத்தில் வசிஷ்டருக்கும் விசுவாமித்திரருக்கும் பெரும் வாக்குவாதம் நடந்தது.‘பொய் சொல்லாத மானிடரும் உண்டு’ என்று வசிஷ்டர் கூற ‘பொய் பேசாத மனிதர்களே இல்லை’ என்று விசுவாமித்திரரும் வாதிட்டனர்.

  ‘பூலோகத்தில் உள்ள அயோத்திநாட்டு மன்னன் அரிச்சந்திரனை ஒரு பொய் சொல்ல வைத்து விடுங்கள்,  உங்களிடம் நான் தோற்றதாக ஒப்புக் கொள்கிறேன்’ என்றார் வசிஷ்டர்.

  ‘சரி! அரிச்சந்திரனைப் பொய் சொல்ல வைக்கிறேன்’ என்று சவால் விடுத்து விசுவாமித்திரர் கோபமாகப் பூலோகம் வந்தார்,  நேராக அயோத்தி நாட்டு மன்னனை நாடிச் சென்றார், ஏதாவது ஒரு சிக்கலில் அரிச்சந்திரனைச் சிக்கவைத்துப் பின்னர்தான் பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

  அரண்மனைக்குள் நுழைந்த விசுவாமித்திரரை வணங்கி வரவேற்றான் மன்னன் அரிச்சந்திரன், மன்னனை வாழ்த்திய விசுவாமித்திரர் “அரிச்சந்திரா! நான் செய்யும் யாகத்திற்குச் சிறிது பொருள் தேவைப்படுகிறது, அதற்காக உன்னை நாடி வந்துள்ளேன்’ என்றார்.

  மனம் மகிழ்ந்த அரிச்சந்திரன் ஆயிரம் பொற்காசுகளை அளித்தான், அதைப் பெற்றுக்கொண்ட விசுவாமித்திரர் அரிச்சந்திரனை நோக்கி, ‘மன்னா! இந்தப் பொற்காசுகள் உன்னிடமே இருக்கட்டும், தேவைப்படும்போது வந்து பெற்றுக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார்.

  நாட்கள் கடந்தன, விசுவாமித்திரர் மீண்டும் அரிச்சந்திரனை நாடிச் சென்றார், வழக்கம்போல மன்னன் அவருக்கு வரவேற்பு அளித்து, ‘நான் தங்களுக்குச் செய்ய வேண்டிய காரியம் ஏதேனும் உள்ளதா? என்று பணிவோடு கேட்டார்.

  ‘அரிச்சந்திரா, நீ சொன்ன சொல் தவறாதவன் என்றும், சத்தியமே பேசுபவன் என்றும் அறிவேன்,  நேற்று என் கனவில் உன்னுடைய நாட்டை எனக்குத் தானமாகக் கொடுப்பதுபோல் கனவு கண்டேன், அப்படி நடக்குமா என்ன!’ என்று கள்ளச் சிரிப்போடு கேட்டார் விசுவாமித்திரர்.

  ‘சுவாமி, கனவிலே சொன்னால் என்ன நனவிலே சொன்னால்தான் என்ன? சொன்னது சொன்னதுதான், என் நாட்டைத் தங்களுக்குத் தானமாக இப்போதே தருகிறேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூறிய அரிச்சந்திரன் உடனே தன் நாட்டை முனிவருக்குத் தானமாகக் கொடுத்து விட்டான்,  அடுத்த சில நிமிடங்களில் தன் மனைவி சந்திரமதி, மகன் லோகிதாசன் ஆகியோருடன் அரண்மனையை விட்டுப் புறப்பட்டான்.

  அரிச்சந்திரன் புறப்பட்டுச் செல்லும்போது ‘நில் அரிச்சந்திரா! என்னுடைய ஆயிரம் பொற்காசுகளைத் தந்துவிட்டுப் போ’ என்றார் விசுவாமித்திரர்.

  ‘சுவாமி, அந்தப் பணமும் அரண்மனைக் கருவூலத்தில் தான் உள்ளது’ என்றான் மன்னன்.

  ‘அது சரி, நீ மன்னனாக இருந்தபோது அது உனக்குச் சொந்தம்,  நீ இப்போது அனைத்துச் செல்வங்களையும் தானமாகத் தந்து விட்டாய், இப்போது அவை எனக்குச் சொந்தம், எனவே, நீ தரவேண்டிய ஆயிரம் பொற்காசுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்? என்றார் விசுவாமித்திரர்.

  அரிச்சந்திரன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலை குனிந்து நின்றான், அப்போது முனிவர் மெதுவாக ‘அரிச்சந்திரா! நான் ஆயிரம் பொற்காசுகளை உங்களிடம் தரவே இல்லை என ஒரு பொய் சொல்லிவிடு, உன் நாட்டையே நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார் விசுவாமித்திரர்.

  அரிச்சந்திரன் திடுக்கிட்டான், ‘நான் பொய் சொல்வதா! அது என்னால் இயலாது’ என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு நடந்தான்.

  விசுவாமித்திரர் விடவில்லை, ‘என் ஆயிரம் பொற்காசுகளுக்குப் பதில் சொல்லிவிட்டுப்போ’  என்றார்,  தான் சம்பாதித்துத் தருவதாகக் கூறிய மன்னன், ஒரு சீடனைத் தன்னுடன் அனுப்பும்படி கூறி அவனையும் அழைத்துக் கொண்டு அரண்மனையை விட்டுப் புறப்பட்டான்,  காட்டில் அலைந்து திரிந்த அரச குடும்பத்தினர் தங்கள் பசியைத் தாங்கிக் கொண்டு, தங்களுடன் வந்த சீடனின் பசியைப் போக்கப் பாடுபட்டனர், அந்த சீடனோ விசுவாமித்திரரின் கட்டளைப்படி வேண்டுமென்றே பசி, பசி என்று மன்னனைப் பாடாய்ப் படுத்தினான்.

  எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து அந்தச் சீடனை அனுப்பிவிடத் துடித்தான் மன்னன்,  ஆனால் வழி தெரியாமல் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்.

  சில நாட்கள் கழிந்ததும் ஒரு ஊர் வந்தது,  அந்த ஊரில் காலகண்டன் என்ற செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார், அவருடைய வீட்டில் வேலைக்காரியாக இருக்கத் தன் மனைவி மற்றும் மகனை விற்றான்; அப்பொன்னைத் தன்னுடன் வந்த விசுவாமித்திரரின் சீடனிடம் கொடுக்க அவன் இத்தொகை என் குருவிற்குச் சேர வேண்டியது, நான் இத்தனை நாட்கள்; உன்னுடன் அலைந்தற்குக் கூலி தாருங்கள் என்றான்.  வேறு வழியின்றி அரிச்சந்திரன் சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வீரவாகு என்பவனிடம் தன்னை விற்று விசுவாமித்திரரின் சீடனுக்குக் கூலி கொடுத்தான், வீரவாகுகிற்குத் தன்னை விற்றதால் அவன் அடிமையாகச் சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வேலை செய்து வந்தான்.

  நாட்கள் நகர்ந்தன, அடிமையாக வேலை செய்துவந்த சந்திரமதியை மட்டுமல்லாது, அவளது மகன் லோகிதாசனையும் கடுமையாக வேலை வாங்கினாள் காலகண்டனின் மனைவி.

  ஒருநாள் காலகண்டன் லோகிதாசனைத் தர்ப்பைப் புல் பறித்துவரக் காட்டிற்கு அனுப்பினான், அங்கு நாகப்பாம்பு லோகிதாசனைக் கடிக்க, அவன் மரணமடைந்தான், லோகிதாசனுடன் சென்ற சிறுவர்கள் சந்திரமதியிடம் சொல்ல, மகனை நினைத்துத் துடித்தாள் சந்திரமதி.

  ‘மகனை அடக்கம் செய்து சீக்கிரமே திரும்ப வேண்டும்’ என்ற தன் எஜமானின் கட்டளையை ஏற்றுக் கொண்டு சந்திரமதி காட்டுக்கு ஓடினாள், அங்கே தன் மகனின் உடலைக் கண்டு கதறினாள், பிணமாகக் கிடந்த மகனைத் தூக்கிக் கொண்டு சுடுகாடு நோக்கிச் சென்றாள்.

  அங்கே தன் மகனைக் கிடத்தி அழுதுகொண்டே சிதைக்குத் தீ மூட்டினாள், அப்போது அங்கே வந்த அரிச்சந்திரன், “பெண்ணே! கால்படி அரிசியும், ஒரு முழத் துண்டும், கால்பணமும் கொடுக்காமல் நீ இங்குப் பிணத்தை எரிக்க முடியாது ,” என்றான்.

  ‘ஐயா! நான் பரம ஏழை, அடிமையாக வேலை செய்து வருகிறேன்,  என்னிடம் ஏது பணமும் அரிசியும்? கருணை காட்டுங்கள்’ என்று மன்றாடினாள்.

  ‘அப்படியானால் உன் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை விற்று எனக்குச் சேர வேண்டியதைக் கொடு’ என்றான்,  திடுக்கிட்டாள் சந்திரமதி, தன் கணவன் ஒருவனைத் தவிர அன்னியர் யார் கண்ணுக்கும் தென்படாதது அந்த மாங்கல்யம், எனவே, தன் முன்னே நிற்பது தன் கணவனே எனத் தெரிந்து கொண்டாள் சந்திரமதி  “ஐயோ சுவாமி! தாங்களா? தங்களுக்கா இந்தக் கதி? நான்தான் உங்கள் சந்திரமதி, இறந்து கிடப்பவன் நம்முடைய மகன்” என்று கதறினாள்.

  இதைக் கேட்ட அரிச்சந்திரன் மகனது உடலைக் கட்டிக் கொண்டு அழுதான், மறுகணம் மனத்தைத் தேற்றிக் கொண்டு ‘சந்திரமதி நீ உன் எஜமானனிடம் சென்று நான் கேட்ட பொருட்களைக் கொண்டு வா, அதுவரை இந்த உடலை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றான், ‘உங்கள் மகனுக்குக் கூடவா நீங்கள் பணம் கேட்கிறீர்கள்?’ என்றாள் சந்திரமதி.

  ‘என் எஜமானனுக்கு நான் உண்மையானவனாக இருக்கவே விரும்புகிறேன், நீ சென்று பணத்தை வாங்கி வா’ என்று கூறினான் அரிச்சந்திரன்,  இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விசுவாமித்திரருக்கு வியப்பு மேலிட்டது,  தன்னுடைய சவாலில் வசிஷ்டரிடம் தோற்று விடுவோமோ என்ற அச்சமும் ஏற்பட்டது,  எனவே, அரிச்சந்திரனுக்கு மேலும் துன்பம் கொடுக்க எண்ணினார்.

  சந்திரமதி நடந்து செல்லும் பாதையில் அந்நாட்டு மன்னன் காசிராஜனின் மகன் இறந்த நிலையில் விழும்படிச் செய்தார், அதன் காரணமாக மன்னனின் மகனைக் கொன்றவள் எனப் பழி சுமத்தப்பட்டாள் சந்திரமதி, அவளே குற்றவாளி எனத் தீர்ப்பளித்த காசிராஜன் அவளைச் சிரச்சேதம் செய்ய ஆணையிட்டான், கொலைக் களத்துக்குக் கொண்டு வரப்பட்ட சந்திரமதியைக் கொல்ல வேண்டிய கடமையை அரிச்சந்திரனே ஏற்க வேண்டியதாயிற்று.

  அந்த நிலையிலும் மனம் கலங்காது நின்றான் அரிச்சந்திரன், அப்போது அங்கு வந்த விசுவாமித்திரர் ‘அரிச்சந்திரா! இப்போதேனும் நான் சொல்வதைக் கேள், எனக்கு வாக்குக் கொடுக்கவில்லை என ஒரு பொய் சொல்லிவிடு, மீண்டும் அரசப் பதவி, இழந்த நாடு, வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்’ என்றார்,  ஆனால் அதனை ஏற்க மறுத்தான் அரிச்சந்திரன்.

  கட்டளைப்படி கத்தியை ஓங்கி சந்திரமதியின் கழுத்தில் வீசினான், என்ன ஆச்சரியம!; கத்தி மாயமானது,  கழுத்தில் மாலையுடன் நின்றாள் சந்திரமதி, சிவனும் பார்வதியும் வசிஷ்டரும் தோன்றி ஆசி கூறினர், காசிராஜனின் மகனும், லோகிதாசனும் உயிர்பெற்று ஓடிவந்து இறைவனை வணங்கி நின்றனர், விசுவாமித்திரர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

  ‘அரிச்சந்திரா, உலகில் உண்மையும், சத்தியமும் உள்ளவரை உன் பெயரும் நின்று நிலைக்கும், நீ உன் நாட்டை அடைந்து பல்லாண்டுகள் வாழ்வாயாக,” என்று ஆசி வழங்கி மறைந்தார்,

  எத்தனை துன்பங்கள் நேர்ந்த போதும் பொய்யே சொல்லாமல் உண்மையை மட்டுமே பேசிய அரிச்சந்திரனின் அன்றைய வாழ்க்கை, இன்றைக்கும் நமக்கெல்லாம் ஒரு பாடமாகவே உள்ளது,

  கொடைக்கு ஏன் கர்ணன்?

  உண்மை என்றாலே நினைவுக்கு வருவது அரிச்சந்திரன்,  அகிம்சை என்றாலே நினைவுக்கு வருவது மகாத்மா காந்தியடிகள்,  அந்த வரிசையில் கொடை என்றாலே நினைவுக்கு வருவது கர்ணன் தான்.

  கொடை என்றாலே ஏன் கர்ணன் பெயர் சொல்லப்படுகிறது என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்,   அர்ஜூனனும் கொடையாளிதான், அவனும் தம்மை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவன்தான்,  ஆனால் கொடை என்றாலே கர்ணன் பெயர் முன்னிலை வகிப்பது அர்ஜூனனுக்கு வருத்தத்தைத் தந்தது.

  பகவான் கிருஷ்ணரிடம் சென்று “கிருஷ்ணா! நானும் தானே என்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளி வழங்கி தான தருமங்களைச் செய்துவருகிறேன், அப்படி இருக்க ‘கொடை’ என்றாலே கர்ணன் பெயர் மட்டும் முன்னிலை பெறுவது ஏன்? என் பெயரை மறந்தும்கூட எவரும் உச்சரிப்பது இல்லையே… ஏன் இந்த ஓரவஞ்சனை?” என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினான் அர்ஜுனன்.

  “சரி… என்னுடன் வா! உனக்கு புரிய வைக்கிறேன்” என்று கூறி அர்ஜூனனை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர். தனது மாய சக்தியால் இரண்டு மலைகளை உருவாக்குகிறார், அதில் ஒன்று தங்கம், மற்றொன்று வெள்ளி.

  அர்ஜுனனுக்கு ஒரு பரிட்சை வைக்கிறார் கிருஷ்ணர்,  “அர்ஜுனா! இன்று மாலைக்குள் நீ இந்த இரண்டு மலைகளையும் அதாவது இதில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி இரண்டையும் தானம் செய்துவிடவேண்டும், இது தான் உனக்குப் பரீட்சை” என்று கட்டளையிடுகிறார்.

  உடனே அர்ஜுனன் “பூ… இதென்ன பிராமாதம்… இதற்குப் போய் மாலை வரை அவகாசம் எதற்கு? அதற்கு முன்னதாகவே அனைத்தையும் தானம் செய்துவிடுகிறேன்” என்று மார்தட்டுகிறான்.

  தங்கம் மற்றும் வெள்ளியைத் தான் தானம் செய்யவிருக்கும் விபரத்தைத் தண்டோராப் போட்டு நாட்டு மக்களுக்கு அறிவிக்கச் செய்கிறான் அர்ஜுனன்,  உடனடியாக நாட்டு மக்கள் பலர் போட்டி போட்டு வந்து வரிசையில் நிற்க, அர்ஜுனன் தனது பணியாட்களை விட்டு மலைகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளியை வெட்டி வெட்டி கொடுக்கச் சொல்கிறான்.

  பணியாட்களும் தங்கம் மற்றும் வெள்ளியை வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்,  இரண்டு மலைகளையும் வெட்டி ஆயிரக்கணக்கானோருக்குக் கொடுத்த பின்பும் கூட மலையின் அளவு கால்பாகம் கூட குறைந்ததாகத் தெரியவில்லை,  மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது,  நேரம் செல்லச் செல்ல அர்ஜுனனின் முகத்தில் கலவரம் படர ஆரம்பித்தது,  இந்தப் பரீட்சையில் தாம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை இழந்தான் அர்ஜுனன்.

  கிருஷ்ணரிடம் சென்று “கிருஷ்ணா என் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இதே பரீட்சையைக் கர்ணனுக்கும் வையுங்கள்,  அவன் மட்டும் எப்படி ஜெயிக்கிறான் என்று பார்க்கிறேன்” என்கிறான் அர்ஜுனன்.

  கிருஷ்ணர் புன்னகைத்துக் கொண்டே சேவகர்களிடம் சொல்லி கர்ணனை அழைத்து வரும்படி கூறுகிறார்,  அடுத்த சில நிமிடங்களில் கர்ணன் அங்கு வந்து சேர்கிறான்.

  “;பரமாத்மாவே… அடியேனைத் தாங்கள் அழைத்ததன் நோக்கம் என்னவோ… நீங்கள் இட்ட பணியைச் செய்யக் காத்திருக்கிறேன்” என்கிறான் பணிவுடன்.

  கிருஷ்ணர் அந்த இரண்டு மலைகளையும் கர்ணனிடம் காண்பித்து, “கர்ணா!… நாளை மாலைக்குள் நீ அந்த இரண்டு மலைகளில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி அனைத்தையும் தானம் செய்துவிடவேண்டும்,  இதுதான் நான் உனக்கு வைத்திருக்கும் பரிட்சை” என்கிறார்,

  “எத்தகையதொரு புண்ணியத்துக்கு என்னை ஆளாக்கியிருக்கிறீர்கள் பரமாத்மாவே… நன்றி… நன்றி…! என்று உள்ளம் நெகிழக் கூறிய கர்ணன்…“சரி… இதற்குப் போய் எதற்கு நாளை மாலை வரை அவகாசம்…? இதோ ஒரு நொடியில் செய்துவிடுகிறேன்…” என்று கூறிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்க்கிறான்.

  தூரத்தில் இரண்டு விவசாயிகள் சென்று கொண்டிருக்கிறார்கள், அவர்களை அழைத்து “நீ இந்தத் தங்க மலையை எடுத்துக்கொள், நீ இந்த வெள்ளி மலையை எடுத்துக்கொள், இன்று முதல் உங்களுக்கு இந்த மலைகள் சொந்தம், யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் கொடுக்கலாம்,  அது உங்கள் உரிமை” என்று கூறுகிறான்.

  இதைப் பார்த்துகொண்டிருந்த அர்ஜுனன் வெட்கித் தலைகுனிந்தான், “கர்ணா… உண்மையில் நீதான் கொடையாளி… என்னை மன்னித்துவிடு” என்று கர்ணனை அணைத்துக்கொள்கிறான் அர்ஜுனன்,  அனைத்தையும் பார்த்துக்கொண்டு பகவான் கிருஷ்ணர் புன்முறுவல் பூத்தார்.

  சிறிதோ பெரிதோ தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அப்பொழுதே செய்துவிடுவார்கள், கொடைத் தன்மை என்பது ஒருவரது நாடி,  நரம்பு, சிந்தனை மற்றும் இரத்தத்தில் ஊறியிருக்கும் ஒரு விஷயம்,       பெயருக்காகவும், புகழுக்காகவும், மற்றவர்கள் செய்கிறார்களே என்று செய்பவர்களுக்கும் அது கைவராது,  ஆகவேதான் கொடை என்றாலே இன்றுவரை கர்ணன் பெயர் சொல்லப்படுகிறது.

  டைஃபாய்டு மற்றும் பேரா டைஃபாய்டு காய்ச்சல்

  டைஃபாய்டு மற்றும் பேராடைஃபாய்டு என்றஇரண்டும் குறிப்பிடத்தக்க நோயாகும்.

  காரணிகள்

  சால்மோநெல்லா (Salmonella)

  கிராம் நெகடீவ் பேசில்லை வகையைச் சார்ந்தது. இதில் இரு கிருமிகள் இந்நோயை உருவாக்குகின்றன. அவையாவன :

  டைஃபாய்டு – சால்மோநெல்லா டைஃபி (S. typhi)

  பேராடைஃபாய்டு – சால்மோநெல்லா பேராடைஃபி ஏ, பி மற்றும் சி

  (S. Paratyphi A, B & C)

  சால்மோநெல்லா டைஃபி மற்றும் சால்மோநெல்லா பேராடைஃபிக்கு மிக முக்கியமான உறைவிடம் மனிதன்.

  • சால்மோநல்லா பராடைஃபிக்கு மிருகங்களும் தங்கும் இடமாகும்.
  • இரண்டு உயிரிகளும் சில சமயங்களில் கழிவுநீர்

  மற்றும் அசுத்தமான உணவுப் பொருட்கள் ஆகியவற்றைத் தங்குமிடமாகக் கொண்டுள்ளது.

  பரவல் தன்மை

  டைஃபாய்டு மற்றும் பேராடைஃபாய்டு உலகம் முழுவதிலும் வளர்ந்துவரும் மேலும் வளரும் நாடுகளில் இருக்கக்கூடிய ஒரு நோயாகும்.

  உலகம் முழுவதிலும், 15 மில்லியன் மக்கள் பாதிக்கப் படுவதாக யூகிக்கப்பட்டுள்ளது. அதில் ஏறக்குறைய அரை மில்லியன் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதில் மிகவும் அதிகமான உயிர் இழப்பு குழந்தைகளில் தான் ஏற்படுகிறது.

  பரவும் முறைகள்

  • கழிவுகள் மற்றும் சிறுநீரினால் மாசுபடுத்தப்பட்ட அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் பரவும் (கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து வெளியேறும்).
  • சூடு, வெப்பம் பாக்டீரியாக்களைக் கொல்லும். அதனால் சமைக்காத உணவுகள், குளிர்பானங்கள் மற்றும் பால் சம்பந்தமான உணவுப் பொருட்கள் பொதுவாக கிருமிகளின் வாகனங்கள் ஆகும்.
  • டைஃபாய்டு கிருமிகள் மனித உடலில் நீண்ட நாள் அறிகுறிகள் இல்லாமலும், மனித கழிவுகளால் வெளியேற்றப்படுவதாகவும் உள்ளது.

  நோய்க்கிருமி தாக்கியபின் அறிகுறிகள் உடலில் தோன்றுவதற்காகும் காலம்

  • 1-3 வாரங்கள் (தாக்கிய கிருமிகளின் அளவைப் பொறுத்தது).
  • பேராடைஃபாய்டு கிருமியால் வரும் வயிற்றுப் போக்குக்குக் குறைந்த கால அளவாகும்.

  அறிகுறிகள்

  இரண்டு நோய்களின் அறிகுறிகளும் தோன்றும் முறை களும் ஒன்றுபோலவே இருக்கும்.  மிகவும் கொடியதாகவும், மிகவும் தீவிரமாகவும், ஒரு சில சமயங்களில் உயிரைப் பாதிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

  டைபாய்டு காய்ச்சலின் ஆரம்ப நிலை மெதுவான தாகவும், உடல் சோர்வு, தலைவலி, மலம் கழிக்க கஷ்டப்படுதல் போன்றவையாகும். இது முற்றிலும் அறிகுறிகளற்றதிலிருந்து மிகவும் கடுமையான, உடலில் பரவக்கூடிய டைபாய்டு காய்ச்சல்  மற்றும் குடலில் ஓட்டை விழுதல் வரை ஏற்படலாம்.

  • கல்லீரல் வீக்கம்
  • மண்ணீரல் வீக்கம்
  • குறைந்த நாடித்துடிப்பு
  • நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் ரோஜா நிறப் புள்ளிகள்

  கண்டறியும் முறைகள்

  இந்த உயிரியை நோயின் ஆரம்பக்கட்ட நிலையில் இரத்தத்திலிருந்தும், முதல் வாரங்களில் மனித கழிவுகள் மற்றும் சிறுநீரிலிருந்ததும் பிரித்துவிடலாம்.

  • மனித கழிவுகளிலிருந்து கல்ச்சர் (culture) மூலம் கிருமியைத் தனிமைப்படுத்துதல்
  • ரெக்டல் சுவாப்ஸ் (மலத்தில் பரிசோதனை)
  • இரத்த பரிசோதனை (culture)
  • சீராலஜி – வைடால் சோதனை (Widal Test)

  சிகிச்சை முறைகள்

  ஆன்டிபயோடிக் தெரபியே இந்த ஊடுறுவும் நோய்க்கான தகுந்த சிகிச்சை முறையாகும்.

  • சென்சிடிவிட்டி பரிசோதனை செய்தபின் சரியான ஆன்டிபயாடிக்கினைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்).
  • காய்ச்சலுக்கான சிகிச்சையினை 2 வாரம் கொடுக்க வேண்டும்.
  • எலும்பினில் கிருமி தாக்கம் இருந்தால் இரத்தநாளம் வழியாக மருத்துவம் செய்ய வேண்டும்.
  • இந்த சிகிச்சை முறை 6 வாரம் வரை கொடுக்க வேண்டியிருக்கும்.

  நீண்ட நாள் கிருமி தொற்று இருப்பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

  • அருகிலுள்ள மருத்துவரிடம் இவர் இக்கிருமியால் பாதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட வேண்டும்.
  • தொற்றுநோய் நிபுணரிடம் இதைப் பற்றி தெரிவிக்க வேண்டும்.
  • நோயாளியின் குடும்பத்தினரின் கழிவுகளின் மாதிரியை எடுத்து நோயின் அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும்.
  • நோயினால் பாதிக்கப்பட்டவர், அவர் எந்த நோயின் அறிகுறிகளும் இன்றி 3 தொடர் மலம் பரிசோதனைகளில் நெகடிவ் வர வேண்டும்.
  • நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர், மிகவும் அதிக அளவு ஆம்ப்பிசிலின் குழந்தைகளுக்கும், சிப்ஃரோஃபிலாக்ன் பெரியவர்களுக்கும் உபயோகிக்க வேண்டும்.
  • அடிக்கடி நோயால் பாதிக்கப்படுபவருக்கு பித்தப்பையை அறுவை சிகிச்சை மூலம் எடுப்பதே (கோலிசிஸ்டெக்டொமி) குணமாக்கக் கூடியதாகும்.

  தடுப்பு மருந்துகள் (Immunisation)

  தடுப்பூசி (டைஃபாய்டிற்கான) 2 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

  3 வகையான டைஃபாய்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.