Home » Cover Story » மருத்துவத்தில் மகத்துவம் மகப்பேறில் தனித்துவம்

 
மருத்துவத்தில் மகத்துவம் மகப்பேறில் தனித்துவம்


ஆசிரியர் குழு
Author:

டாக்டர் சவிதா அசோக் MBBS.,DGO.,ART(Fellow)

ஸ்ரீ சக்ரா மருத்துவமனை, சக்தி கருத்தரிப்பு மையம்

உடுமலைப்பேட்டை

எந்த ஒரு சாதனைக்கும் வயது தடை இல்லை, சிறிய வயதில் பெரிய துறையைத் தேர்தெடுத்து கொழுந்து விட்டு எரியும் தன்னம்பிக்கையோடு வெற்றி பெற வேண்டும் என உழைத்துக் கொண்டுயிருப்பவர்.

மேலை நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வரும் நகர்புற மருத்துவ வளர்ச்சிகளை சிறு கிராமமும் சென்றடைய வேண்டும் என உறுதியாய் உழைப்பவர்.

சேவை மனப்பான்மையோடு இனி எல்லா குழந்தையில்லா தம்பதியர்க்கும் குழந்தை பெற்று தர வேண்டும் என்ற குறிக்கோளில் பல திட்டத்தைச் செயல்படுத்தி அதன் மூலம் சாத்தியப்படுத்தி வருபவர்.

கால மாற்றத்திற்கு ஏற்ப உடுமலையில் பல நவீன மருத்துவ தொழில் நுட்பக் கருவிகளை நிறுவி அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு மேலை நாடுகளைப் போல சிறந்த சிகிச்சை அளிப்பதில் முதன்மையாக விளங்குபவர்.

ஸ்ரீ சக்ரா மருத்துவமனையில் சக்தி கருத்தரிப்பு மையத்தின் தலைமை மருத்துவர் சவிதா அசோக் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…

கே : உங்களைப் பற்றி ?

தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் சிவகாசியில் வேளாண் குடும்பத்தில் திரு வெள்ளைச்சாமி திருமதி நிர்மலா தம்பதியருக்கு ஒரே மகளாகப்பிறந்தேன். சின்ன வயதிலிருந்தே நன்றாகப் படிக்கும் பழக்கம் எனக்கிருந்தது. இதனால் கல்வியில் சிறந்து விளங்கினேன். தொடக்கப்பள்ளி லயன்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியிலும், மேல்நிலைப்பள்ளியை SNG பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றேன். இந்தப்பள்ளியில் படிக்கும் போது தான் பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்தேன். அது போலவே பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களையும் வாங்கினேன். இது இன்றும் என் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கிறது.  படிக்கும் போதே வகுப்பில் ஆசிரியர்கள் எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக வருவீர்கள் என்று எல்லா மாணவ மாணவிகளிடமும் கேட்பார்கள்; அப்படிக் கேட்கும் போது நாம் எப்போதும் ஒரு மருத்துவராக தான் வரவேண்டும் என்று சொல்வேன். இந்த வார்த்தை வெறும் வார்த்தையாக வரவில்லை. என்னுடைய  ஆசையாகவும், ஆதங்கமாகவும் வந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆசை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இருப்பதால் எவ்விதப் பயனும் இல்லை. ஓரு குறிக்கோளை அடைய வேண்டும் என்றால் அதற்கு நிறைய முயற்சிகளும் பயிற்சிகளும் அதிகளவில் எடுக்க வேண்டும். இதனால் தினந்தினம் என்னை நன்றாகத் தயார்படுத்திக் கொண்டேன். பள்ளி அளவில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வும் பெற்றேன். நல்ல மதிப்பெண் எடுத்ததால் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். என்னுடைய கல்லூரிப்படிப்பை  புதுச்சேரி AVMC கல்லூரியில் முடிந்தேன். என்னுடைய முதுகலை மருத்துவப்படிப்பை பி.எஸ்.ஜி கல்லூரியில் முடித்தேன். அதே சமயத்தில் டெஸ்ட் டியூப் பேபி சம்மந்தமான படிப்பை இந்தியாவிலேயே சிறந்த 10 மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றான NADKARNI 21 ST CENTURY HOSPITAL & TEST TUBE BABY CENTER யில் பயின்றேன். பயிலும் போதே நிறைய கருத்தரங்குகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியும், கலந்தும் வந்தேன்.

கே : நீங்கள் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தது குறித்து?

விவசாயத்தை பரம்பரையாக பின்பற்றி வரும் எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை மருத்துவர். எல்லா பெற்றோர்களும் எண்ணுவதுபோல், என் பெற்றோரும்   என்னை ஒரு மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள். பொதுவாக மருத்துவர் என்பவர்கள் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுவார்கள். மருத்துவத்துறை மகவும் சுவாரசியம் மிக்கது. மனித வாழ்வில் ஒவ்வொரு நகர்தலிலும் ஏதேனும் ஒரு விதத்தில் மருத்துவர்கள்  துணை நின்றிருப்பார்கள். நான் வெறும் பட்டத்திற்காக மட்டும் இந்த மருத்துவப் படிப்பைப் படிக்க வில்லை.  ஒரு பெரும் மாற்றத்திற்காகத் தான் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.

மருத்துவம் என்றாலே சேவை என்று சொல்வார்கள். இந்தசேவையை என் வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும் என்று நினைத்துத் தான் இந்தத் துறையையே நான் தேர்தெடுத்தேன்.

கே : மருத்துவத்துறையில் பலதுறைகள் இருக்கும் பொழுது கருத்தரித்தல் துறையைத் தேர்ந்தெடுத்ததுபற்றி?

எல்லாத் துறையும் போன்று, மருத்துவத்திலும் பலதுறைகள் உண்டு. ஆனால் என்னைப் பெரிதும் நேசிக்க வைத்தது  இந்தக் கருத்தரித்தல் துறையே.

ஒரு பெண்ணாய் நான் மிகவும் நேசித்தத் துறை இதுவாகும்.  திருமணம் ஆகி ஒரு பெண்ணுக்கு குழந்தைப் பேறு இல்லையென்றால் அந்தப் பெண்ணை இந்தச்சமுதாயத்தில் வார்த்தை சூட்டால் சுட்டெரித்து விடுவார்கள். எந்த தவறும் செய்யாத எத்தனையோ பெண்கள் இன்று பல சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.

குழந்தையின்மை காரணமாக பல பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று நாம் இன்றும் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பார்க்கிறோம். நான் மருத்துவம் படித்ததே இந்தக்குறையைப் போக்கி நல்ல ஒரு சேவையை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தான். இங்கு நிறைய மருத்துவமனைகளும் மருத்துவர்களும் உண்டு. அவரவர் ஏதேனும் ஒரு துறையில் வல்லுநர்களாக இருப்பார்கள். நாமும் அவர்களைப் போல வித்தியாசமான துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்துப் படித்தது தான் இந்த கருத்தரித்தல் துறை. இது தாய்மையைப் போற்றும் ஒரு உன்னதமான துறை என்றால் அது மிகையாகாது.

கே: ஸ்ரீ சக்ரா மருத்துவமனையில் சக்தி கருத்தரிப்பு மையம் துவக்கப்பட்டது பற்றிச் சொல்லுங்கள்?

உடுமலை, பொள்ளாச்சி போன்ற கொங்கு மண்டல பகுதியில் 150 க்கும் மேலான கிராமங்கள் உண்டு . இந்தக் கிராமங்கள் அனைத்திலும் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் நல்ல மருத்துவமனை இப்பகுதியில் இல்லை. சாதாரண பிரச்சனை என்றால் கூட பல மையில் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இங்கு வாழும் மக்களின் சில மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல வருடங்களுக்கு முன் துவங்கப்பட்டது தான் ஸ்ரீ சக்ரா மருத்துவமனை.

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக அனைத்து மருத்துவமும் ஒரே இடத்தில் கிடைக்கும் படி கொண்டு வர திட்டமிட்டோம். SCAN,X-RAY,ADVANCED LABORATORY,LAPAROSCOPY SURGERIES என அனைத்தையும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்து வைத்தோம். எங்கள் மருத்துவமனை துவக்கப்பட்ட சில மாதங்களிலேயே எங்கள் மருத்துமனை சேவையைப் பாராட்டி ISO  தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வயிறு அறுவை சிகிச்சைகள், புற்று நோய் அறுவை சிகிச்சைகள் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையில் ஆர்தொரோ கோபி மூட்டு அறுவை சிகிச்சைகள்  என அனைத்து அறுவை சிகிச்சைகளும் உடுமலையில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி முதன்மையான மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது.

கே : சக்தி கருத்தரிப்பு மையம் உருவானது பற்றிச் சொல்லுங்கள்?

இது என்னுடைய நீண்ட நாள் கனவு என்றே சொல்லாம். அந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் தொடங்கப்பட்டது தான் இந்தக் கருத்தரிப்பு மையம். குழந்தையில்லா ஏழை தம்பதிகள் பயன் பெறும் வகையில் சக்தி கருத்தரிப்பு மையம் என்ற பெயரில் தமிழக அரசு அங்கீகாரத்துடன் தொடங்கப்பட்டோம்.

திருமணமான அனைவருக்கும் குழந்தைப் பேறு கிடைப்பதில்லை. தாய்மை அடைந்தால் மட்டுமே ஒரு பெண்ணை இந்தச் சமுதாயம் முழுமையடைந்த பெண்ணாகப் பார்க்கும். அப்படியிருக்கும் போது ஏதேனும் சில காரணங்களால் சில பெண்களுக்குத் தாய்மை என்ற குணமே இல்லாமல் போய்விடுகிறது. இவர்களின் மீது அக்கரைக் கொண்டு உருவானது தான் இந்தக் கருத்தரிப்பு மையம். வசதியில்லாத ஏழைப் பெண்களுக்கு இந்தத்திட்டம் போய்ச் சேர வேண்டும் என்பதுவே எங்களின் நோக்கமாக இருக்கிறது.

கே: சக்தி கருத்தரிப்பு மையத்தின் மூலம் செய்து வரும் சமூக சேவைகள் பற்ற?

இத்திட்டத்தின் மூலம்  பல சமூக நலத்திட்டங்களை மக்களுக்குச் செய்து வருகிறோம்.

இளம் பருவ பெண்களுக்கு ஆரோக்கியக் கருத்தரங்குகள் அரசு தனியார் பள்ளி, கல்லூரிகளில் அதன் வளாகத்திற்கேச் சென்று கருத்தரங்குகள் நடத்தி விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச யோகா, உடற்பயிற்சி போன்றவை எங்களது மருத்துவமனை கருத்தரங்கு அறையில் மாதம் ஒரு முறை நடத்தி வருகிறோம்.

மலைவாழ் மக்கள் மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆலோசனை மையத்தின் மூலம் இலவச மருந்துகள் அளித்து வருகிறோம்.

ஒவ்வொரு மாதமும் கிராமம், நகரங்களில், குழந்தையில்லாத் தம்பதியனருக்கு இலவச ஆலோசனை முகாம் நடத்தி வருகிறோம்.

அருகில் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து வருகிறோம்.

கே: சமீப காலமாக குழந்தையின்மை அதிகரிப்பு பரவலாக உள்ளது. அது பற்றி உங்களின் கருத்து?

பெருகி வரும் நவீன நாகரிக உலகில் ஆண்களைப் போலவே பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள். வேலைக்குச் செல்வதை தவறு என்று சொல்லவில்லை, அது அவர்களின் குடும்ப சூழலாக இருக்கலாம், அல்லது வேறு எதாவது காரணமாகக் கூட இருக்கலாம். இன்றைய சூழலில் ஒரு குடும்பத்தில் தம்பதியர்கள் இருவரும் வேலைக்குச் சென்றால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையும் இருக்கிறது.

அதே போல சில ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண்கள் தனது குடும்பத்தின் வறுமையைப் போக்க திருமண வயது எட்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் வயது முதிர் கன்னியாகவே இருக்கிறார்கள்.

இது போன்ற பெண்கள் மன அழுத்தம், உடற்பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். இதுவும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம் தான்.

அதே போல இயற்கையிலேயே சில பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு அதிகளவில் இருக்கும். இந்தக் குறைபாடு ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது ஒன்று தான்.


கே: குழந்தையில்லாத் தம்பதியர்கள் எப்போது சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்?

தம்பதியர்கள் எவ்வித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு வருட காலத்திற்கு தாம்பத்திய உறவை மேற்கொண்டும் கருத்தரிக்கவில்லை என்றால் அவர்கள் பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும். குழந்தைப்பேறின்மைக்கு 40 % ஆண்களிடமும், 40 % பெண்களிடமும், 10% இருவரிடமும், 10 % கண்டறிய முடியாத காரணங்களாலும் இருக்கும்.

ஒரு ஆண் போதுமான அளவு நல்ல விந்தணுக்களை உற்பத்தி செய்து அந்த உயிர் அணுக்களை பெண்ணின் கருப்பைக்குள் கொண்டு சேர்க்கும் தன்மை உடையவராக இருக்க வேண்டும். இந்த விந்தணுக்கள் பெண்ணின் கரு முட்டைக்குள் சென்று கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் கரு முட்டையின் உற்பத்தி சரியாக இருக்க வேண்டும் கரு வரும் வழி அடைப்பில்லாமல் இருக்க வேண்டும். கரு முட்டையின் விந்தணுவை ஏற்று கரு வளரக் கூடிய அளவுக்கு பலமுள்ள நிலையில் கருப்பை இருக்க வேண்டும்.

ஆண்களுக்ளுக்கான மலட்டுத்தன்மைகளின் காரணங்கள்:

ஹார்மோன் குறைபாடு, உடற்பருமன், நீண்ட கால தீவிர புகைப்படித்தல், மது அருந்துதல், விந்தணு மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்சனைகள், விந்து திரவத்தில் உயிரணுக்கள் குறைந்தோ (அ) இல்லாமலோ இருப்பது. விந்தணுக்களின் அசையும் திறன் குறைவாக இருப்பது (MOTILITY) உருவ அமைப்பு குறைபாடுகள் (MORPHOLIGY) சர்க்கரை வியாதி மரபுரீதியான நோய்களால் ஏற்படும் விந்தணு குறைபாடுகள் (GENETICS) போன்ற காரணங்கள் இருக்கிறது.

பெண்களுக்கான காரணங்கள்:

கருக்குழாய் அடைப்பு மற்றும் கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பையில் கட்டி, ஹார்மோன் குறைபாடுகளால் கரு முட்டைகள் உற்பத்தி ஆகாத நிலை, சினைப்பையில் அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகள் இருந்தும் முட்டை வளர்ச்சி முதிர்ச்சி பாதிக்கபடும் நிலை (PCOD) உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, தைராய்டு ஹார்மோன் தொந்தரவுகள் போன்றவைகள் பெண்களுக்கு ஏற்படும் காரணங்களாகும்.

கே. குழந்தையில்லாப் பெண்கள் அனைவருக்கும் டெஸ்ட் டியூப் பேபி முறை தான் நிரந்தரத் தீர்வா?

உலகில் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கும். அந்தத் தீர்வு நிரந்தரமாகக் கூட மாறலாம். அது அந்தப் பிரச்சனையை எவ்வளவு வெகுவாக கண்டறிந்தோம் என்பதில் தான் அதன் தீர்வு அடங்கியுள்ளது. அது போல தான் மருத்துவத்துறையிலும் எல்லாம் நன்றாக இருக்கும் பொழுது மருத்துவரை யாரும் அணுக மாட்டார்கள். ஏதேனும் உடலில் மாற்றம் ஏற்பட்டால் தான் அணுகுவார்கள். இது எல்லா விதமான நோய்களுக்கும் பொருந்தும்.

அது போல தான் குழந்தையில்லாத் தம்பதியர்கள் ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பெறவில்லை என்றால் மருத்துவரை அணுகுவார்கள். மருத்துவர்களும் சில மருத்துவக் குறிப்புகளும், தாம்பத்திய உறவு முறைகள் குறித்தும் விளக்குவர். அதைப் பின்பற்றி நடந்தாலே சிலருக்கு குழந்தைப் பாக்கியம் கிடைத்து விடும். ஒரு சிலருக்கு பல மருத்துவ முறைகள் செய்தும் குழந்தைப்பேறு அடைவதில்லை, அப்படிப்பட்டவர்கள் தான் இந்த சிகிச்சைக்கு வருவார்கள். பெரும்பாலானவை சில ஹார்மோன் குறைபாடுகளை சீர் செய்தாலே வெற்றிகளைக் காண முடியும். உடலளவில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அவைகளை லேப்ராஸ்கோபி (அ) ஹிஸ்ட்ரோஸ்கோபி கருவிகள் முலம் அறுவை சிகிச்சை செய்தாலே குழந்தைப் பாக்கியம் பெறலாம். மிக சிலருக்கு மட்டுமே டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை முறை தேவைப்படும்.

கே: டெஸ்ட் டியூப் பேபி எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது பற்றிச் சொல்லுங்கள்?

செயற்கைக் கருத்தரித்தல் சிகிச்சை (ART)

ஆய்வுக்கூடல், சோதனைக்குழாய் கருகட்டுதல் என்பது உடலுக்கு வெளியே பெண் உயிருடன் கரு முட்ûயுடன் ஆண் விந்துவை இணைத்து நிகழும் செயல் முறை. பொது வழக்கில் ஆங்கிலத்தில் இதனை(IVF) என்பர். இவ்வாறு பெரும் குழந்தைகளைப் பேச்சு வழக்கில் சோதனைக்குழாய் குழந்தைகள் (TEST TUBE BABY) என்று அழைப்பர்.

இந்த செயல் முறையை 3 கட்டங்களாக செய்யப்படும்.

  1. கருமுட்டை சேகரித்தல்:

பெண்ணின் சினைப்பை ஹார்மோன் பரிசோதனை செய்யப்பட்டு பிரத்யோக மருந்துகள் மூலம் 12-15 கருமுட்டைகள் மட்டும் முதிர்வடையச் செய்யபடுகின்றது. சரியான காலக்கட்டத்தில் முதிர்ந்த முட்டைகளை ஒரு ஊசி மூலம் வெளியே சேகரிப்படுகின்றன.

  1. ஒன்றாகச் சேர்த்தல்:

ஆய்வகத்தில் உயிரணுவையும், முட்டையும் ஒன்றாகச் சேர்த்து கரு உருவாக்கம் செய்யப்படும். அதன் பின் கருப்பை ஒத்த காற்றின் அளவு, ஹார்மோன் அளவு, வெப்ப அளவு என அனைத்து உள்ள INCUBATOR என்னும் செயற்கைக் கருவில் வளர்க்கப்படுகிறது.

  1. கருவை கர்ப்பப்பைக்குள் செலுத்துதல்:

நன்கு வளர்ந்த ஆரோக்கியமான கருக்கள் மட்டும் கண்டறியப்பட்டு பிரத்தேகக் கருவி மூலம் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படுகின்றது. பின்பு இந்தக் கரு இயற்கையான உருவான கரு போலவே நன்றாகத் கருவறையில் வளரத் தொடங்கும்.

கே : நீங்கள் செய்த அறுவை சிகிச்சையில் உங்களால் மறக்க முடியாதது?

மருத்துவருக்கு ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் தங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாதது தான். அந்த வகையில் ஒவ்வொரு சிகிச்சையும் ஒரு பாடமாக அவர்கள் மனதில் பதிந்திருக்கும். அதுபோல என் மருத்துவ வாழ்க்கையில் நிறைய இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்.

மாதவிடாய் நின்ற பிறகும் 47 வயதான பெண்ணுக்கு டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை மூலம் குழந்தைப் பேறு அளித்திருக்கிறோம்.

கருத்தடை செய்து கொண்ட தம்பதியருக்கும் 12 ஆண்டுகள் கழித்து மறு அறுவை சிகிச்சை மூலம் இயற்கை முறையில் கருத்தரித்தல் செய்திருக்கிறோம்.

சிறு வயதிலேயே கரு முட்டைகளை இழந்த பெண்ணிற்கு முட்டை தானம் பெற்று மீண்டும் கருத்தரிக்கச் செய்தோம்.

கருப்பை சிறிதாக உள்ள பெண்ணுக்குக் கருப்பையை வளர வைத்து கருத்தரிக்க செய்து குழந்தைப் பாக்கியம் பெற்று தந்தோம்.

கே : ஒரு நிறுவனம் மேன்மை பெற வேண்டும் என்றால் ஊடகங்களின் முக்கியத்துவம் தேவையா?

சமுதாயத்தின் நான்காவது மிகப்பெரிய தூண் ஊடகம். அந்த வகையில் ஊடகத்தின் பங்கு எங்கள் மருத்துவனைக்கு அதிகளவு உண்டு. ஊடகவியலார்கள் எதையும் உடனுக்குடனே நன்கு ஆராயாமல் எந்த செய்தியையும் வெளியிடமாட்டார்கள். அந்த வகையில் எங்கள் மருத்துவமனைக்கு ஊடகத்தால் நிறைய பயன் கிடைத்திருக்கிறது.

நோய்க்கு நன்றாக சிகிச்சை அளிப்பதை விட நோய்களை பற்றி விழிப்புணர்வு அளிபவரே சிறந்த மருத்துவர். இதற்காக எங்களது மருத்துவமனையில் கணினி தொழிற்நுட்ப குழு செயல்பட்டு வருகிறது.

அனைத்து நோய்களையும் விபரங்களையும் பற்றி அனிமேஷன், கருத்தரங்குகள், கட்டுரைகள் ஆகியவற்றை Facebook, Twitter,Google+ Website,Youtube போன்ற அனைத்து சமூக வலைதளங்களில் “SAKTHI FERTILITY” என்ற பெயரில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இவை அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கே: எதிர்காலத்திட்டம் பற்றிச் சொல்லுங்கள்?

எங்கள் சேவையானது செயற்கைக் கருத்தரிப்பு முறையில் அதிக செலவில் சிகிச்சை என்ற கருத்தினை மாற்றி குறைந்த செலவில் டெஸ்ட் டியூப் பேபி மருத்துவ வசதி இல்லாத  அனைத்து கிராமங்களிலும் எங்களது சேவையை வழங்குவதே தலையாய நோக்கமாகும். இதற்காக எங்களைப் போல் சேவை மனப்பான்மை உள்ள அனைத்து இளைய தலைமுறை மருத்துவர்களை எங்களோடு இணைத்து கொண்டு செய்யப்பட உள்ளோம்.

கே : ஒரு பக்கம் மருத்துவமனையின் பெருக்கம், மற்றொரு பக்கம் நோய்களின் பெருக்கம் இது பற்றி?

மக்கள் தொகையின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போவதால் தேவைகள் பெருகுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. இதனால் எல்லாவற்றிலும் வளர்ச்சியும் பெருக்கமும் தேவைப்படுகிறது.

அதுமட்டுமின்றி வளர்ச்சியின் காரணமாக உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் தான் பல நோய்களுக்கு முதன்மைக்குக் காரணமாக இருக்கிறது. இதை எல்லாம் முறையாகக் கடைப்பிடித்தாலே பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

கே :மருத்துவம் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை அனைவருக்கும் இருக்க வேண்டும். வாழ்க்கையில் தெளிவான ஒரு இலக்கு வகுத்துக் கொள்ள வேண்டும். அந்த இலக்கை அடைய தீவிர உழைப்பு அவசியம், விடாமுயற்சி தான் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆற்றல் மிகு ஆயுதம்.

இன்று எப்படி டாக்டாக ஆக வேண்டும் என்று இலட்சியம் இருக்கிறதோ? அது இறுதி வரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

மருத்துவரானப் பின்னர் இன்னும் இருமடங்கு அதிகமாக உழைக்க வேண்டும். வயது ஆனாலும் புதுமையை உள் புகுத்திப் பார்க்க வேண்டும். எதையும் நான் முழுமையாக கற்றுணர்ந்து விட்டேன் என்று நினைக்கக்கூடாது.

தனிமனிதனால் எதையும் சாதிக்க முடியம் என்ற நிலை தனக்குள் உருவாக்கிக் கொள்ளவும்  வேண்டும்.

கே : குடும்பம் குறித்து?

எனது கணவன் டாக்டர் அசோக் ஸ்ரீ சக்ரா மருத்துவமனையின் தலை லேப்ராஸ்கோபி சிகிச்சை நிபுணராக விளங்கி வருகிறார். மேலும் மருத்துவமனையில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் நல்ல மருத்துவராகவும், நல்ல கணவராகவும் இருக்கிறார்.  அதே சமயத்தில் குடும்ப வாழ்க்கையில் எனது மாமா, அத்தை திரு. முத்துகிருஷ்ணன் திருமதி. காஞ்சனா மற்றும் எனது கணவனின் சகோதரர் திரு. ஆனந்த் திருமதி. சபிதா ஆகியோர் எனக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் எப்போதுமே மருத்துவமனையின் வளர்ச்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதால் அவ்வபோது நல்ல ஆலோசனையும் வழங்கி வருகிறார்கள். இது எனக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு உங்களின் பொன் மொழிகள் என்ன?

வெற்றியின் முதல் படியே தன்னம்பிக்கை  தான். தளராத மனத்தைத் தனக்குள்ளே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

எதை நினைத்தாலும் உயர்வாகவும், தெளிவாகவும் கருத்தியல் தன்மையுடன் இருக்க வேண்டும். நல்ல நூல்களைப் படியுங்கள். நல்லோரிடம் நட்பு கொள்ளுங்கள். தினம் தினம் புதுமையை நோக்கி நகருங்கள். வாழ்க்கைச் சக்கரம் மிகவும் வேகமாகச் சுழலும் தன்மையுடையது. அந்த வேகத்திற்கு ஏற்றார் போல் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

கஷ்டங்களை நினைத்துக் கவலைப்படாதீர்கள். அதைக் கடக்க என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் யோசியுங்கள். வெற்றியின் பிரமிப்பை அறிந்து கொள்ள முடியும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2017

வாழ நினைத்தால் வாழலாம் – 6
இளமை மாறாத இளமையுடன்….
முதுமை – இறைவன் தந்த வரம்!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி-6)
தோல்வியும்… வெற்றியும்…
உயர்ந்த குடிப்பிறப்பும் சிறந்த இல்லறமும் சமுதாய வளர்ச்சிக்கான இரண்டு வெற்றிப்படிகள்…
மனத்தடையை தகர்த்தால் மாற்றங்கள் மலரும்
ஜீனுக்கு தீனி…!
இரத்தசோகை
வீழ்வேனென்று நினைத்தாயோ?
சிகரமே சிம்மாசனம்
வெற்றி உங்கள் கையில் 43
எதார்த்தம்
நீள் ஆயுள் அவசியமா?
தன்னம்பிக்கை மேடை
மருத்துவத்தில் மகத்துவம் மகப்பேறில் தனித்துவம்
உள்ளத்தோடு உள்ளம்