– 2017 – July | தன்னம்பிக்கை

Home » 2017 » July

 
 • Categories


 • Archives


  Follow us on

  வாழ நினைத்தால் வாழலாம் – 6

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஐந்தறிவு ஜீவராசிகளினும் உயர் பிறப்பாய் பிறந்ததாய் பெருமைப்படும் நாள் முதல் – விஞ்ஞான முன்னேற்றங்கள் விண்ணை முட்டும் வண்ணம் சாதனைகள் புரிந்துவரும் இன்று வரை – மனித ஜாதி கண்டுவந்த வளர்ச்சி அநேகம். அபாரம். இதற்கு அடிநாதமாக இருப்பது அவனின் சிந்தனை திறனே. ஆதாம் ஏவாள் மனதில் “இந்த கனியை சுவைத்தால் என்ன”? என்ற கேள்வியே உலகின் பல கோலங்களுக்கு போடப்பட்ட முதல் புள்ளியாய் ஆனது.

  சூரியனை ஒரு பந்தாக நினைத்து – விளையாட அதை எடுத்தால் என்ன? என்ற கேள்விதான் – பக்த அனுமனை பறக்க வைத்ததாக புராணம் சொல்கிறது. மரத்திலிருந்த  கனி ஏன் மண்ணில் விழுந்தது என்ற கேள்வியே – ஒரு புதிய விதியை உலகுக்கு உணர்த்தியது.

  “ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான் அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான் மற்றுமொருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான் நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான் இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான் – வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்” – என்பதற்கு சான்று மனிதனின் கேள்வி கேட்கும் திறன். பல விந்தைகளுக்கும் விடை சொல்ல வைக்கும். தனக்கு உள்ளே கேட்ட கேள்விகள் – மெய்ஞானமாகவும் தனக்கு வெளியே கேட்ட கேள்விகள் – விஞ்ஞானமாகவும் மாறி விடை சொல்வதை மக்கள் மறுக்க முடியுமா?

  “ஏனென்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை” – இதை நினைவு கொள். திருவிளையாடல் தருமிபோல் அனைவரின் மனதிலும் ஆயிரம் கேள்விகள் எந்நேரமும் எதிரொலித்துக்கொண்டே இருப்பது உண்மைதான். தருமி கேட்ட கேள்விகள் அவனின் வறுமைக்கான ஒரு விடியலாகவும் செழிப்பான வாழ்க்கைக்கான ஒரு  தீர்வாகவும் மாறியதை மறுக்க முடியுமா?

  நக்கீரன் கேட்ட கேள்விகள் தமிழின் செழுமையையும், கேட்பவன் யாராக இருந்தாலும் தயங்காமல் கேட்கும் வீரத்தின் வெளிப்பாடாக இருப்பதையும் மறுக்க முடியுமா வறுமைக்கு, வளமைக்கு, புலமைக்கு என்று வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் கேள்வியே எழா வண்ணம் தேர்வாவது “கேள்விகள்” என்பதுதான் நிதர்சன நிஜம். நாட்டாமை கூட்டும் பஞ்சாயத்திலும் கேள்விகள் – தீர்ப்பையும், தீர்வையும் தரும்.

  காணாமல் போன ஆடு கண்டுபிடிக்கப்பட்ட பஞ்சாயத்திலும், பக்கத்துக்கு ஊர்ப் பெண்ணின் கையை பிடித்து இழுத்த பஞ்சாயத்திலும்,- கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு வடிவேல் சொன்ன பதில்களும் நகைச்சுவைக்கும் மீறிய நல்ல தீர்ப்பு.

  ஒரு சம்பவம். வாழ்க்கை முடிந்த ஒருவன் கடவுளிடம் தன் வாழ்வின் பயணத்தை மறுபடி பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான். செவிமடுத்த கடவுள், ஒரு நீண்ட பாதையை காண்பித்து, இதுதான் உன் வாழ்க்கைப் பாதை. இதில் பார், எப்போதும் நான்கு கால் தடங்கள் இருக்கின்றன  இரண்டு உன்னுடையது, இரண்டு என்னுடையது.

  எப்போதும் நான் உன்னுடனேயே பயணித்திருக்கிறேன்.  நீ என் உண்மையான பக்தன் என்பதால், உன்னை நான் கைவிட்டதே இல்லை. உன் அனைத்து சாதனைகளுக்கும், மகிழ்ச்சி, நிம்மதி, சந்தோஷங்களுக்கும் நான் உன் கூடவே இருந்தது தான் காரணம்” என்று கூறினார். ஆனால் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.

  அவன் கஷ்டப்பட்ட காலங்களில், ஆதரவு தேடி அலைந்த காலங்களில், கடுமையான சோதனைகள் பல வந்த காலங்களில், நெருக்கடிகள் நெஞ்சை முறுக்கும் நேரங்களிலெல்லாம், நான்கு கால் தடங்களுக்கு பதிலாக இரண்டு கால் தடங்கள் மட்டுமே இருக்கக்கண்டான். கடவுளை நோக்கி,

   

  “என்ன கடவுளே, சோதனைக் காலத்தில் எல்லாம் என்னை விட்டு எங்கே சென்று விட்டாய்? துணைக்கு யாருமில்லாமல் நான் பூலோகத்தில் கஷ்டப்பட்டதை இங்கே வானுலகில் வரைபடமாக பார்க்க வைத்ததற்கு நன்றி. ஆக, கஷ்டகாலம் வந்தால் கடவுளும் காணாமல் போவான் – என்ற பழமொழிக்கு ஒரு உதாரண புருஷனை கண்ட பெருமை எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி – என்று ஏளனமாக எள்ளினான். அதற்கு கடவுள்

  “அட மட மானிடா, விதண்டாவாதமான உன் கேள்விக்கு விடையளிக்கிறேன் கேள். உன் துன்ப காலங்களில் உன்னை தூக்கி சுமந்தது நானடா.  அந்த இரண்டு பாத தடங்கள் என்னுடையவை.  நீ என் முதுகில் நிம்மதியாக பயணித்ததால், உன் கால் தடம் தரையில் படவில்லை. புரிந்ததா?என்று கேட்டார். ஜிகஷ்டங்கள், துயரங்கள் வரும்போது – “ஏன் எனக்கு (Why Me?) தருகிறாய் என்று கேட்கிறாயே, நன்மைகள், பணம், புகழ், செல்வாக்கு, அந்தஸ்து என்று பலப்பல நன்மைகளை நான் உனக்கு தந்தபோது “ஏன் எனக்கு (Why Me?) என்று என்றாவது கேட்டதுண்டா? – என்று கேட்டார்.

  கடவுளின் எதிர்கேள்வி, மனதை என்னவோ செய்தது. ஆம், மனிதனின் கேள்விகளுக்கு கடவுளிடம் பதில் உண்டு. கடவுளின் கேள்விக்கு மனிதனிடம் பதில் உண்டா? சுருங்கச் சொன்னால்,

  கேள்விகள் – பிரச்சினைகளின் தீர்வுக்கு கிடைக்கும் தீர்ப்பு.

  கேள்விகள் – குழப்ப இருட்டில் வெளிச்ச மின்னல்கள்

  கேள்விகள் – முன்னேற்றத்தின் முதல் பாதை

  கேள்விகள் – தெளிவான வாழ்க்கைக்கான தேடல்கள்

  கேள்விகள் – வெற்றியாளர்களின் விருத்தப்பா

  முருகன் ஔவையிடம் கேட்ட கேள்விக்கணைகள் – அரியது,கொடியது, பெரியது, இனியது – என்று வாழ்வின் பரிணாமத்தை பட்டியலிட்டது. அறிவுப்பூர்வமாக வாழ்வை அணுகுவது எப்படி என்று அடையாளம் காட்டியது.

  “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது – அதனினும்

  கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது” – என்று பிறப்பின் பெருமையை பறை சாற்றவில்லையா?

  “கொடிது கொடிது வறுமை கொடிது” – என்று உழைப்பின் மேன்மையை உனக்கு உரக்க சொல்ல வில்லையா?

  “கொடிது கொடிது அன்பில்லா பெண்டிர் – அதனினும் கொடிது அவர் கையால் உண்ணல்” – என்று மானத்தோடு வாழ்வதன் மதிப்பை உணர்த்தவில்லையா?

  “கேள்வி பிறந்தது அன்று – நல்ல பதில் கிடைத்தது இன்று

  ஆசை பிறந்தது அன்று – யாவும் நடந்தது இன்று.

  ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ என்றொரு காலம் எண்ணியது உண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று” – என்று நமது ஜனநாயகத்துக்கு வித்திட்டது பலருடைய கேள்விகள் தானே.

  “ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன – அந்த ஒருவன் ஒருத்தியை மணந்துவிட்டால் அந்த உரிமைக்கு பெயர் என்ன?

  நினைத்தவன் அவளை மறந்துவிட்டால் அந்த நிலைமையின் முடிவென்ன  பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அந்த பெண்மையின் நிலை என்ன?

  அடேங்கப்பா!!

  கவிஞரின் நான்கே கேள்விகள்.  ஒரு காதலின் கதையை கச்சிதமாக சொல்கிறது.

  காதலுக்கும் தேவை கேள்விகள்.

  இசையமைப்பாளரின் தத்தகாரக் கேள்விகளுக்கு – கவிஞனின் பாடல் வரிகள் பதிலாய். இசையில் மயங்குபவனும், வார்த்தையில் கரைகிறான். சங்கீதத்துக்கு தேவை சத்தமான கேள்விகள், சந்தமான கேள்விகள்.

  “என்ன செய்தான் என் தலைவன்” ? என்ற வாக்காளனின் கேள்வி – ஒரு முறையான ஆட்சியை முன் மொழியலாம். தம்பதியரிடையே வரும் தர்க்கமான கேள்விகள் குடும்பத்தில் குதூகலத்தை மேம்படுத்தலாம்.

  “நாடென்ன செய்தது நமக்கு – என கேள்விகள் கேட்பது எதற்கு – நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு” – என்ற கேள்வியை உன் அலுவலகப்பணிகளுக்கு அமர்த்திப்பார். அது நல்ல முதலாளியும் தொழிலாளியும் சந்திக்கும் சதுரங்க ஆட்டமாக, சுவாரசியமாக இருக்கும்.

  “ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன,

  தேடிய செல்வம் என்ன, திரண்டதோர் சுற்றம் என்ன, கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன? – என்ற இந்த வினாக்களுக்கு விடை, உனக்கு தன்னடக்கத்தை தரும், நாவடக்கத்தை நல்கும், பேராசையை பின்னுக்குத்தள்ளும், மற்றவரை மதிக்க கற்றுத்தரும் – அனைத்துக்கும் மேல் வாழ்வின் எதார்த்தத்தை எடுத்துச்சொல்லி – உனக்கு  மனிதர்களை மனிதர்களாக மதிக்க கற்றுத்தரும்.

  கட்டிலில் தொடங்கி காட்டினில் முடியும் வாழ்வின் அனைத்து விடைகளுக்கும் முன்னால் பல கேள்விகளின் ஊர்கோலம் உண்டு.

  “வேள்விகள்” பல செய்ய “கேள்விகள்” பல வேண்டும்.

  கேளுங்கள்,  கேளுங்கள். கேட்டுக்கொண்டே இருங்கள்.

  வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்

  வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்

  இளமை மாறாத இளமையுடன்….

  வழிகாட்டும் எண்ணங்கள்…

  செ. சரத், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

  எண்ணங்கள் ஒன்றா, இரண்டா… அதை எண்ணுவதற்கு எண்ணும் இல்லை, எண்ணமும் இல்லை. பல வகையான எண்ணங்கள் பலவகையான தருணங்களில் தோன்றும் அவைகளுள் ஒரு சிலவற்றை மறக்கவே முடியாது. அதுவும், சகதோழர்களிடத்தில் கூறவே தேவையில்லை. ஏனென்றால், இந்த வயதில் இது நல்லதா அல்லது கெட்டதா என்று நம்மால் யூகிக்க முடியாது. கவிஞர் வாலி கூறியது போல் தண்போன போக்கில் கால்போகும் … கால்போன போக்கில் மனம்போகும், மனம் போன போக்கில் நாமும் போய்க்கொண்டிருப்போம். எனவே, இளம்பருவத்தில் என்றுமே மேம்படுத்தப்பட்ட எண்ணங்களை இவ்விடத்தில் பட்டியலிடுகிறேன்.

  ஒன்று – பெற்றோருக்கு நல்லவனாக இருக்க வேண்டும்.

  இரண்டு – நான் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கும், சமூகத்திற்கும் நல்லவனாக இருக்க வேண்டும்.

  மூன்று – எனக்கு நானே நல்லவனாக இருக்க வேண்டும்.

  அதுவே உங்களிடம் ஏதேனும் எண்ணங்கள் இருந்தால், அதை உங்கள் பார்வைக்கு விழும்படி எழுதிவைத்துக்கொள்ளுங்கள். அத்தகைய எண்ணங்களே உங்களின் திடமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

   இளங்கன்று பயமறியாது என்பது பழமொழிதான். ஆனால், நான் அதற்கு உண்டான அர்த்தத்தை அப்பொழுதுதான் புரிந்துகொண்டேன். (நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்)

  அவர் எனது அண்ணனின் நெருங்கிய நண்பர். அதைவிட நேர்மையானவர். திறமையானவர், நல்ல சிந்தனையாளர் என்று பலவற்றுக்கும் சொந்தக்காரர். ஒருநாள், அவருடைய நிறுவனத்தின் அதிகாரி, செய்யாத தவறுக்காக அவரை கண்டித்துவிட்டார்.

  அதற்காக, அவர் சில நாட்கள் கழித்து அந்த அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதாவது, இதுவரை என்னுடை எண்ணமெல்லாம் நமது நிறுவனத்தை எப்படி வளப்படுத்த வேண்டும். எந்த முறையில் மேம்படுத்த வேண்டும், அதற்கு எப்படிப்பட்ட நடவடிக்கைகள் தேவை. அவற்றை எப்பொழுது செய்ய வேண்டும். அதற்கு மேல் எந்நாளும் நிறுவனத்தை நஷ்டத்தில் விட்டுவிடக்கூடாது என்று இப்படிப்பட்ட எண்ணங்கள்தான் இதுவரை என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. ஏன், ஒருநாளும் நிறுவனத்துக்கு எதிராக சிந்தித்தது கூட கிடையாது என்றும், எழுதிவிட்டு இறுதியாக, அதை மீறியும் என் மேலோ அல்லது எனது பணியின் மேலோ நீங்கள் சந்தேகப்பட்டால் தாராளமாக என்னை வேலையில் இருந்து நீக்கி விடலாம். என்று நிறுவன அதிகாரியிடம் கடிதத்தை கொடுத்து விடுகிறார்.

  இதைப்பார்த்த அதிகாரி ஒரு நிமிடம்… அவரை அமைதியாக இருக்கையில் அமரச்சொன்னார். பின்பு கூறுகிறார். எனக்கு யார், எப்படிப்பட்டவர்கள் என்று எப்பொழுதே தெரியும். எனினும் உனக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அதை எந்தமுறையில் சமாளிப்பாய் என்பதை அறியவே நான் முற்பட்டேன். மீண்டும் உன்னுடைய திறமைகளையும், நீ கையாண்ட விதத்தையும் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள் என்று மனதார பாராட்டினார்.

  எனவே, எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்த எண்ணத்தை செயல்படுத்தினால், நிச்சயமாக வெற்றிதான். அப்படிப்பட்ட வெற்றிக்கு இளைஞர்களிடம் பிடித்து விடுவது ஒற்றுமையான பாங்குதான். பெரியவர்களிடத்தில் நாம் என்னும் ஒற்றுமை உணர்வை பல சமயங்களில் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அதை இளைஞர்களிடத்தில் எதிர்பார்க்கலாம்.

  எண்ணங்கள் அச்சிடப்படாத இடமே இல்லை. ஏன்…? நாம் குடிக்கும் தண்ணீருக்கும் கூட எண்ணங்கள் உள்ளதாம். அவை எதிர்மறையான இடத்தில் இருக்கும்போது, தண்ணீருக்கும் எதிர்மறைôயன எண்ணங்கள் தோற்றுமாமம் (Negative thoughts) அதுவே ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் இருக்கும் இடத்தில் நல்ல எண்ணங்கள் (Positive thoughts) இருக்குமாம். இதைத்தான், ஆங்கிலத்தில் Structural water என்று கூறுகிறார்கள். ஆனால், இவற்றை எல்லாம் விட ஒரு வியப்பு என்னவென்றால், கங்கை நதி மாசு அடைந்திருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இதுவரை கங்கை நதியின் நீர்தான் புனித நீர் என்பதையும் அனைவரும் அறிவோம்.

  இதனை வியப்பு என்று கூறுவதா… அல்லது பாரம்பரியமா…? அல்லது விஞ்ஞானத்தைக் கடந்த மெய்ஞானமா…? தெரியவில்லை. ஆனால், கங்கை நதித்தாயிடம் நிறைய நல்ல எண்ணங்கள் (Positive thoughts) உள்ளது என்பது மட்டும் தெளிவாக புலப்படுகிறது.

  இப்படியெல்லாம் தோன்றி அவதாரம் எடுத்த எண்ணங்களுக்கு கவிஞர் கண்ணதாசன் தன்பால் ஏற்பட்ட கவிதைவரிகளை கூறியிருக்கிறார்.

  கோடையில் குளம் வற்றிவிட்டதே

  என்று கொக்கு கவலைப்படக்கூடாது

  மீண்டும் மழைகாலம் வருகிறது.

  மழைகாலம் வந்துவிட்டதே என்று நதி

  குதிக்கக்கூடாது, அதோ

   வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது.

  இதுவே, எண்ணங்கள் ஆயிரம் என்றார். இதனால்தான் என்னவே அந்த கவிஞனால் காலம் வென்ற பாடல்களைத் தர முடிந்ததோ என்று ஒரு எண்ணம் மேலோங்குகிறது.

  அண்மையில் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை படித்தேன். அதிலிருந்து நான் இன்னும் மீளவில்லை.

  அவருடைய  சொந்த ஊர் கோவை. ஆரம்பம் முதலே அவருடைய குடும்பம் ஏழ்மைதான். அவர்தான் அக்குடும்பத்தின் ஐந்தாவது மகன். இவர் பிறந்த சிறிது காலத்திற்குள் தந்தை இறந்து விடுகிறார். ஊரில் உள்ள பலரும் பையன் பிறந்த நேரம் என்று எப்படியெல்லாமோ எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், இவரின் தாய் எதற்கும் அஞ்சவில்லை. விறகு வெட்டி பிழைத்தாவது, தனது மகன்களை காப்பாற்றி விட வேண்டும் என்று வைராக்கியம் கொள்கிறார். ஆனாலும், ஏழ்மைக்கு பஞ்சம் இல்லை.

  பின் தாயிடம் கூறாமல் பட்டிணத்திற்கு, அதாவது சென்னைக்கு வந்து விடுகிறார். ஆரம்பத்தில் சிறுசிறு நாடகங்களில்  நடிக்கிறார். பின்பு அப்படியே வளர்ந்து ஒரு நடிகராக அவதாரம் எடுக்கிறார்.

  அந்த அவதாரத்திற்கு அவருடைய நம்பிக்கையும், விடாமுயற்சியும் உரமிட்டன. அப்படிப்பட்டவர்தான் இன்று ஒரு நல்ல நடிகராக, எழுத்தாளராக, ஓவியராக, பேச்சாளராக, நல்ல தந்தையாக, மேலும், ஒரு மாபெரும் சிந்தனையாளராக திரையுலக மார்க்கண்டேயனாக வலம் வரும் நடிகர் சிவகுமார் அவர்களே ஆவார்.

  ஆரம்பத்தில் அவரின் வாழ்க்கை எதிர்மறையான எண்ணங்களுன்தான் சூழ்ந்து இருந்தது. அதுவே, தற்பொழுது எதிர்பாராத விதமாக, அவரை வளர்த்து புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. எனவே, எப்பேர்பட்ட எண்ணத்தையும் கடந்து வரலாம் என்பதற்கு சிவக்குமார் அவர்கள் காலத்தின் பயனாய் ஒரு நல்ல உதாரணம்.

  வாழ்வாங்கு வாழ வேண்டுமா…? வாருங்கள் உங்களின் எதிர்கால எண்ணங்களுடன் உங்களின் அர்ப்பணிப்பான வாழ்க்கைக்கு.

  இன்னும் இளமை மாறதா இளமையுடன்….

  இளந்தென்றல் வீசும்…

  முதுமை – இறைவன் தந்த வரம்!

  ஒவ்வொரு மனிதனுக்கும் மழலை, இளமை, முதுமை என்று மூன்று பருவங்கள்; உண்டு. கவலையற்ற பருவம் மழலைப் பருவம். கனவுகளும் கற்பனைகளும் கொண்ட இனிமைக் காலம் இளமைப் பருவம்.  உடலும் மனமும் முதிர ஆரம்பிக்கும் நிலைதான் முதுமைப் பருவம்.  இளமைப் பருவம் அனைவராலும் விரும்பப்படுகிறது.  முதுமைப் பருவம் வெறுத்து ஒதுக்கப்படுகிறது.  இளமையைக் கொண்டாடும் சமூகம் முதுமை என்றால் முகம் சுளிக்கிறது.  இன்றைய நிலையில் கல்வி, மருத்துவம், பொருளாதாரம், விழிப்புணர்வு போன்றவற்றின் காரணமாக மனிதனின் ஆயுள் கூடிக்கொண்டு வருகிறது.  உலகெங்கும் முதியோர்களின் எண்ணிக்கை  பெருகிக் கொண்டிருக்கிறது.

  உண்மையில் முதுமையும் போற்றுதலுக்குரியது.  பிறந்த அனைவருக்கும் கிடைக்காத ஒன்று முதுமை.  அதிகமான ஆண்டுகள் வாழ்கிற வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கிறது?  கருவிலே கலைந்து போகிறவர்கள், பிறக்கும்போதே இறந்து போகிறவர்கள், பிறந்து இறந்து போகிறவர்கள், நோயில், விபத்தில் என்று இடையிலேயே வாழ்க்கை முடிந்து போகிறவர்கள்! இதன் நடுவே ஒருவர் நீண்ட நாள் வாழ்கிறார் என்றால் நிச்சயம் அவர் இறையருள் பெற்றவர் என்றே கொள்ளலாம்.

  விரும்பிய பருவத்தை கேட்டுப் பெறுவதோ, அல்லது ஒரு பருவத்தை நிலையாக நிறுத்தி வைத்துக் கொள்வது என்பதோ முடியாத காரியம்.  கால வரிசைப்படி அடுத்தடுத்த பருவங்களை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஒவ்வொரு பருவத்திலும் அந்தந்த பருவத்துக்கு உண்டான வாய்ப்புகளும் சவால்களும் இருக்கத்தான் செய்யும்.  அந்த வகையில் முதுமை என்பது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்துதான் தீரும். உண்மையில் முதுமை என்பது ஒரு பிரச்சனையல்ல.  அது இறைவன் தந்த வரம். முதுமையை சாபம் என்றோ, சுமை என்றோ வெறுக்கக் கூடாது.  முதுமை பருவத்திற்கும் நல்லது கெட்டது உண்டு.  நல்லதைப் பெரிதுபடுத்திப் பார்ப்பதால் துன்பத்தின் தாக்கம் குறையும்.

  நம் வாழ்நாளை எப்படி பகுத்து வாழ வேண்டும் என்பதை இந்தியப் பண்பாடுதான் மானுடத்துக்குச் சொல்லி வைத்திருக்கிறது. பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்கிற நான்கு நிலைகளில் நம் வாழ்க்கை அமையும். பிரம்மச்சரியம் என்பது இளமைப் பருவ கனவுகளோடு காலத்தை இன்புறுவது. கிருஹஸ்தம் என்பது குடும்ப வாழ்க்கை.  வானப்பிரஸ்தம் ஓய்வு வாழ்க்கை, முதுமையின் தொடக்கம். சன்னியாசம் என்பது ஆன்மீக வாழ்க்கை.  எல்லாவற்றிலிருந்து விடுபட்டு எந்த நேரம் வேண்டுமானாலும் பயணத்தை முடித்துக்கொண்டு அழைத்துப்போக வரும் வாகனத்தின் வழிபார்த்து நிற்க வேண்டிய வருத்தமற்ற நிலை.

  வயது அதிகரிக்க அதிகரிக்க முகத்தில் வசீகரம் கூடும் என்பது ஆய்வுகள் காட்டும் உண்மை.  வயது 20 முதல் 30 வரை உள்ளவர்களிடம் தங்களைப் பற்றிய உயர்வான எண்ணமும் வயதுக்கே உரிய கர்வமும் இருக்கும். 30 முதல் 50 வரை உள்ளவர்களிடம் அத்தகைய தற்பெருமை மறைந்து கலக்கமும், கவலைகளும் இடம் பெற்றிருக்கும். 50க்கு மேல் மனத்தில் அமைதியும், நிறைவும், ஆசையின்மையும் நிறையும்.  80 வயதை எட்டியவர்களின் முகத்தில் இவ்வளவு நாள் வாழ்ந்ததே சாதனை என்ற பெருமிதம் தோன்றும்.  அதன் பிரதிபலிப்பு முகத்தில் மகிழ்ச்சியாகவும் மலர்ச்சியாகவும் வெளிப்படும்.

  முதியவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய கவலையும் அச்சமும் அதிகமாக ஏற்படுவதில்லை. வாழ்க்கை இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொள்கின்றனர். ‘முயன்றாலும் முடியாது’ என்ற இயலாமை குறித்த முழுமையான புரிதலாலும் ‘இனி கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை’ என்ற பக்குவத்தாலும் எளிதில் இயல்புநிலைக்கு திரும்பி விடுகிறார்கள்.

  இனி தங்களுடைய ஆதரவும் அரவணைப்பும் பிள்ளைகளுக்கு அவசியமில்லை என்ற யதார்த்தமும் பலருக்குக் கவலைகளை குறைத்துவிடுகின்றன. பிள்ளைகளின் வாழ்க்கை சரியாக இல்லாவிட்டால் ஆரம்பத்தில் அதிகமாக கவலைப்படும் முதியவர்கள் காலப்போக்கில் அது அவர்களுடைய தலையெழுத்து என்று கவலையின் தீவிரத்தைக் குறைத்துக் கொள்கின்றனர். பழைய விரோதங்கள் மறக்கப்படுகின்றன. பழைய குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன. சிறிய  வயதில் நாமும் அப்படித்தானே இருந்தோம் என்னும் நினைவு இளையவர்களிடம் பரிவு காட்ட வைத்து எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது.  அவசரம் குறைந்து நிதானம் கூடுகிறது.

  முதுமைக் காலத்தில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது? என்பது போன்று பட்டியலிட தொடங்கினால் அதற்கு முடிவே இருக்காது.  பொதுவாக வயதான காலத்தில் கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்குவதை விட்டு விட்டு  கிடைத்தவற்றை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.  இளையவர்களை பொறுப்புடன் செயல்பட முழுமனதுடன் அனுமதிக்க வேண்டும்.  ‘நீங்கள் இல்லையென்றால் குடும்பமே நடக்காது’ என்பது போன்ற எண்ணம் கூடாது. அறிவுரையும், வாழ்க்கை முறையும் முரண்பாடில்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் நிகழ்காலம்தான் நிதர்சனம் என்பதை உணர வேண்டும்.

  மனிதனின் அறிவுக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டு விளங்கிக் கொள்ள முடியாத பல விநோதங்கள் உண்டு.  “எத்துணை பெரிய வானம்! எண்ணிப்பார் உனையும் நீயே!இத்தரை கொய்யாப் பிஞ்சு!நாம் அதில் சிற்றெறும்பே!” என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். நாம் சிற்றெறும்பு என்பதைப் புரிந்துகொண்டு சிந்தனையின் சிகரத்தைத் தொட முயலாமல் வழங்கப்பட்டிருக்கும் வாழ்நாளை வீணாக்காமல் முன்னோர்கள் அறுதியிட்டுச் சொன்னவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் அறிவுடைமை.

  ஏன் முதுமை என்ற ஒன்றை இறைவன் தந்தான்?தொடர் வெற்றிகளாலும், செல்வச் செழிப்பினாலும் மகிழ்ச்சிப் பெருமிதத்தில் மிதந்த மன்னன் ஒருவனுக்கு ஒரு கவலை பற்றிக் கொண்டது. இத்தனை இன்பங்களில் திளைத்திருக்கும் நாம் மரணம் இன்றி வாழ்ந்தால்தானே மகிழ்ச்சி நீடிக்கும்!‘இறப்பே இல்லாமல் சிரஞ்சீவியாக இருக்க ஏதேனும் மருந்து இருக்கிறதா? திசை எங்கும் தேடிப்பார்த்து வாருங்கள்’ என்று ஆணையிட்டார்.

  அண்டம் முழுவதும் அலசிப்பார்த்தும் அப்படி ஒரு மருந்து அரண்மனை ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை.  மன்னர் கோபிப்பாரே என்று மனம் வருந்திய அவர்களிடம் ‘உங்கள் மன்னருக்கு தகுந்த மருந்து இருக்கும் இடம் எனக்குத் தெரியும்.  கவலைப்படாதீர்கள்! என்று மகான் ஒருவர் கூறினார். உடனேஅவரை மன்னரிடம் அழைத்துச் சென்றார்கள். ‘அரசே! இங்கிருந்து வடக்கே இரண்டாயிரம் மைல் தூரத்தில் இருக்கும் சஞ்ஜீவனத் தடாகத்தின் தண்ணீரை பத்து நாள் குடித்தால் மரணம் இல்லாமல் நீங்கள் வாழலாம்’ என்றார் மகான்.

  மன்னரும் பரிவாரங்களுடன் புறப்பட்டார். குளத்தை கண்டுபிடித்தார். மகிழ்ச்சி மேலிட அத்தண்ணீரை இரு கைகளாலும் ஏந்தி வாயருகே கொண்டு சென்றார். அப்போது அங்கிருந்த கிழட்டு முதலை ஒன்று ‘குடிக்காதீர்கள்! குடிக்காதீர்கள்!’ என்று கூச்சல் போட்டது. ‘இந்தத் தண்ணீரைப் பருகி நான் வாழ்வதால் எனக்கு மரணமே நேரவில்லை. ஆனால் ஆயுள் அதிகரிக்க அதிகரிக்க முதுமை என்னை பாடாய் படுத்துகிறது. என்னால் நகரக் கூட முடியவில்லை.  வருத்தும் இந்த முதுமையோடு நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை. சாவு வராதா என்று தவிக்கிறேன்’ என்றது கிழட்டு முதலை.

  கவலை மேலிட மீண்டும் மகான் முன் மண்டியிட்டார் மன்னர். மகான் சொன்னார் ‘கவலைப்படாதீர்கள்! அந்தப் பொய்கையிலிருந்து கிழக்குப் பக்கம் ‘யவ்வன வனம்’ ஒன்று இருக்கிறது. அக்காட்டில் உள்ள பழங்களை உண்டால் மூப்பையும் மரணத்தையும் தவிர்க்கலாம்’ என்றார். அடுத்த சில தினங்களில் அக்காட்டைச் சென்றடைந்தார் அரசர். அங்கு ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டும், உரத்த குரலில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டும் அமைதியின்றி இருப்பதைப் பார்த்தார். ‘ஏன் இப்படி சண்டை சச்சரவு?’ என்று கேட்டார்.  அவர்கள் சொன்ன பதில் அரசரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

  ‘சாவு என்ற ஒன்றோ அல்லது முதுமை என்ற ஒன்றோ இருந்தால்தானே எங்களுக்குள் பரஸ்பர அன்பும் அன்யோன்யமும் இருக்கும்? அந்த இரண்டும் இங்கே யாருக்கும் இல்லை.  அப்படி இருக்கும் போது பாசம், பரிவு, அனுதாபம் எங்களுக்குள் எப்படி ஏற்படும்?  எப்போதும் சண்டையும் சச்சரவும்தான்! என்றனர்.

  காட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய அரசரிடம் மகான் சொன்னார். “ஆண்டவன் நம்மீது கருணை கொண்டுதான் அனைத்தையும் தந்துள்ளார்.  சிருஷ்டியின் ரகசியங்களை அவ்வளவு சீக்கிரம் மனிதனால் விளங்கிக் கொள்ள முடியாது.  வயோதிகமும் வரும், வாழ்வும் ஒருநாள் முடியும்.  இந்த நிர்பந்தங்களுக்குள் கட்டுப்பட்டு சாதனை புரிவதில்தான் மனித சரித்திரமே இருக்கிறது.  எவ்வளவு பெரிய உண்மை! இந்த உண்மையை உணர்ந்தால் முதுமையும் இன்பமாகத் தெரியும்.  மரணமும் மகிழ்ச்சியானதாகத் தோன்றும்.  இதைத்தான் விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கிறார். ‘மரணத்தைப் பற்றி சிந்திப்பதையும், கவலைப்படுவதையும் மனிதனே நிறுத்து!’ ஏனென்றால் நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை”.

  முதுமை என்பதும் இளமை என்பதும் நம் மனதின் நினைப்பில்தான் இருக்கிறது. காலத்திற்கு ஏற்றாற்போல் நம்மை மாற்றிக் கொள்வதில்தான் மகிழ்ச்சியின் இரகசியம் மறைந்திருக்கிறது. முதுமை என்பது வருந்தத்தக்க நிகழ்வு அல்ல.  அது ஒரு பருவம். அவ்வளவுதான். உடம்பை இளமையாகவே வைத்துக் கொள்ள முடியாது.  ஆனால் உள்ளத்தை இளமையாகவே வைத்துக் கொள்ள முடியும். உள்ளத்துக்கு முதுமை கிடையாது. வாழ்க்கையில் கடந்து போன, மறந்து போன அழகான நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டு வந்து ரசிக்கவும் அனுபவிக்கவும் தயாராகும்போது மனம் இளமையாகவே இருக்கும்.

  “நாற்பது வயது என்றால் இளமையில் முதுமை.  ஐம்பது வயது என்றால் முதுமையில் இளமை” என்கிறார் ஹோசாபாலோ என்ற அறிஞர். கவனமாக இருக்க வேண்டிய பருவம் முதுமை.  அளவான உணவு, எளிமையான உடற்பயிற்சி, தியானம், யோகா என உடம்பைபாதுகாத்துக் கொள்வது முக்கியம். முடிந்தவரை தனிமையை தவிர்ப்பது நல்லது. இசை, ஆன்மீகம், புத்தக வாசிப்பு போன்ற பொழுது போக்கான விஷயங்களில் கவனத்தை செலுத்தலாம். இயந்திரகதியாக உழைத்துக் கொண்டிருந்த மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு கிடைத்திருப்பதை அனுபவித்து ரசிக்க வேண்டும். முதுமையில் இளமை இருக்கிறது. அதை அனுபவிக்க மனசு மட்டும்தான் வேண்டும்!

  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

  “The Significant problems we have cannot be solved at the same level of thinking that created them”.

  – Albert Einstein

  1, அறனிழீஇ  அல்லவை செய்தலின் தீதே

  புறனழீஇப் பொய்த்து நகை,

  ‘நல்லதை அழித்து  தீயதைச்  செய்து வருவதைக் காட்டிலும், ஒருவர் இல்லாத போது அவரை பழித்துப் பேசிவிட்டு,  அவரை நேரில் பார்க்கும் போது பொய்யாக சிரித்து நடிப்பது தீமை தரத்தக்கதாகும்’,

  2, புறங்கூறிப்  பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

  அறங்கூறும் ஆக்கம் தரும்,

  ‘ஓருவர் இல்லாத போது அவரைப் புறம்கூறி உயிர் வாழ்தலைவிட இறந்து போதல் மேலானது’,

  3, நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

  குற்றமும்  ஆங்கே  தரும்,

  ‘நடுவு நிலையில் இல்லாமல் பிறருக்குச்  சொந்தமான பொருளை கவருவதற்கு நினைத்தால் அவன் குடும்பம் கெட்டுப்  போவதுடன், அவருக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும்’,  …….குறள்

  உளவியல் வல்லுநர்கள் மனிதர்களை

  1) திறமையானவர்கள்

  2) திறமையைப் பயன்படுத்தாதவர்கள்

  3) திறமையை  தீயவழியில் பயன்படுத்துபவர்கள்

  4) திறமையிருப்பதாக நடிப்பவர்கள்

  5) திறமையற்றவர்கள் என்று  ஐந்து வகைகளாகப் பிரிக்கிறார்கள்,

  ஒரு நிறுவனத்தினுடைய தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தன் கீழ் பணிபுரிபவர்களை அவரவர் திறமைகளுக்கும், தகுதிகளுக்கும் ஏற்ப தரம் பிரித்துக் கொள்ள வேண்டும், மேலே சொன்ன ஐந்து வகைகளில் அவர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறிந்து அதற்கேற்ப அணுகு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்;,

  நிறுவனத்திற்கு திறமையானவர்கள் கிடைத்து விட்டால் நிறுவனம் நல்ல முறையிலே இலாபத்தோடும், புகழோடும் வளரும், போட்டிகளில் முதலிடம்  பெறும், உயர்தர நிறுவனமாக திகழும். திறமையைப் பயன்படுத்தாதவர்கள் அமைந்துவிட்டால் நிறுவனத்தினுடைய வளர்ச்சியில் தேக்கம் ஏற்படும், திறமையை தீய வழியில் பயன்படுத்துபவர்கள் அமைந்து விட்டால் நிறுவனத்திற்கு அவப் பெயர் ஏற்பட்டு  வளர்ச்சி குன்றும். திறமை இருப்பதாக நடிப்பவர்கள் அமைந்தால் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டு தொழில் நலிவடையும், திறமையற்றவர்கள் அமைந்தால் உற்பத்தி மற்றும் வியாபாரப் போட்டிகளில் நிறுவனம் தோல்விகளைத் தழுவி, தொழிலை மூட வேண்டி வரும்,

  இங்கிலாந்திலுள்ள East Anglia பல்கலைக்கழகம் சமீபத்தில் நடந்த ஆய்வில் ஒரு உண்மையைக் கண்டறிந்துள்ளது, மேலதிகாரியின் முழு ஒத்துழைப்பு இல்லாத போது பணியாளர்கள், தானாக முன் வந்து அதைப் பற்றி அறிந்தவர்களின் அறிவுரை மற்றும் அவர்களுடைய தகவல்களின் மூலம் தனக்குள்ளே ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி பணியை முடிக்கிறார்கள், இவ்வாறு ஈடுபாட்டுடன் தானாகவே செயல்படும் போது பணியாளர்களின் மகிழ்ச்சி அதிகமாகிறது என்று கண்டறிந்துள்ளார்கள்,

  மேல் அதிகாரிகள் திறமையைப் பயன்படுத்தாதவர்களாக இருந்தால் இவைகள் நடக்க வாய்ப்புண்டு என்று ஆய்வு கூறுகிறது,

  திறமை இருப்பது போன்று நடிப்பவர்கள் பலர்  தங்களுடைய மயக்கும் வார்த்தைகளின் மூலம் தலைமைப்  பொறுப்பில் இருப்பவர்களிடம் நெருங்கிப் பழகி, பாசாங்கு செய்து,  நல்லவனைப் போல நடித்து, தன்னுடன் பணிபுரிகிற திறமையானவர்கள் மீது புறம் கூறி, பொய்ப் பழி சுமத்தி,  அவர்கள் மேல் ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தி சுயலாபத்திற்காக அவர்களை நிறுவனத்திலிருந்து வெளியேற்ற முயற்சி செய்வார்கள், இவர்களின் ஒரே குறிக்கோள் பழி தூற்றுவது, மற்றவர்களை ஏமாற்றுவது ,  இதனால்   பணியாளர்களிடையே  ஒற்றுமை குறையும், நிறுவனத்தின் ஆரோக்கியம் குறைந்து வளர்ச்சி தடைப்படும். சில நிறுவனத் தலைவர்கள்  இதைப்போன்று நடிப்பவர்களை நம்பி திறமையானவர்களை இழந்து நிறுவனத்தை சோதனைக்குள்ளாக்கிய கதைகள் பல உண்டு,

  ஒரு நிறுவனம் நல்ல முறையில் நடக்க வேண்டுமென்றால்,  திறமைசாலிகளை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவித்து அவரிடம் சிறு குறைகள் இருந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு நிறுவனத்தை வளப்படுத்துவதையே  கடமையாகப் பேண வேண்டும்,

  ஒரு சில நிறுவன மேலாளர்களுக்கு  இயற்கையாகவே இந்த அடையாளம் கண்டு கொள்ளும் கலை கை வந்திருக்கும்,  ‘உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களோடு உறவு கலவாமல் ஒதுக்கி வைப்பார்கள்’ அவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள், அவர்களை தன் பக்கத்தில் நெருங்கவே அனுமதிக்க மாட்டார்கள், நன்றாக பணிசெய்பவர்களை, நிறுவனத்திற்காக தியாகம் செய்பவர்களை அடையாளம் கண்டு, பதவி உயர்வு தந்து நிறுவனத்தை வளர்ப்பார்கள்.

  அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுபவர்களையும் புறம் கூறுபவர்களையும், பொய் பேசி கபட நாடகம் ஆடுபவர்களையும், கண்முன் சிரித்து சிரித்துப் பசப்பு வார்த்தைகளைப் பேசி, பின் அவர் இல்லாத போது புறம் பேசி, இகழும் குணம்  கொண்டவர்களை  ஒதுக்கி வைத்தால் தான் அந்த நிறுவனம் வளர்ச்சிப் பாதையிலே செல்ல முடியும்,

  இதற்கு உதாரணமாக  எனக்குத் தெரிந்த  ஓய்வு பெற்ற IAS அதிகாரியைப் பற்றி சொல்ல வேண்டும். பணியில் இருக்கும் போது நேர்மையானவர் என்ற பெயரோடு இருந்தவர், ஆனால் அப்பகுதி மக்கள்  இவரைப் பற்றி ஒரு மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார்கள். நேர்மையாளராக  நடிப்பதும் ஆனால் எதிர்மறையாக நடப்பதும், அவருடைய பழக்கம் என்று  சொல்கிறார்கள், அவருக்கு இரு முகங்கள் உண்டு  என்றும்,  ஒரு முகம் தன்னைத் திறமையானவர் என்றும் நேர்மையானவர் என்றும் காட்டிக் கொள்வதும்,  இன்னொரு முகம் அதற்கு நேர் எதிரானது என்றும், அடுத்தவர்களுடைய பொருளை அபகரிக்கும் எண்ணமும் மற்றவர்களைப் பற்றி புறம் கூறுவதும், தன் முன் இல்லாதவர்களைப் பற்றி பழிச்சொல் பேசுவதும்,  அதனால் தன்னைத்  தரம்  தாழ்த்திக் கொள்வதும் இவரின் வழக்கமாகும்  என்றும் பேசுகிறார்கள்,

  ஒருபுறம் நல்லவர் என்று பெயர் எடுக்க முயற்சிப்பதும், மறுபுறம் கெட்ட எண்ணங்களுடைய ஒட்டு மொத்த உருவமாக இருப்பதும், நேரில் பேசும் போது  நீதிபோதனைச்  செய்வதும்,  ஒருவர் இல்லாத போது அவதூறு பேசுவதும் அவரின் குணமாகும்  என்கிறார்கள் ,  படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்  என்ற பழமொழி இவருக்கு முற்றிலும் பொருந்தும் என்றும், இடத்திற்கு இடம்  நிறம் மாறும் பச்சோந்தியைப்  போல தன் நிலையை மாற்றிக் கொள்வதும், நேரில் பார்க்கும் போது குழைந்து பேசி கும்பிட்டுப் புகழ்வதும் பின்னர் ஏசுவதும் தான் இவரின் தலையாய குணம் என்றும் குறிப்பிடுகிறார்கள்,

  ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் மற்றவர்களுக்கு மிகப் பெரிய காயம் உண்டாக்கும் ஆயுதம்  எது என்றால் அது மனிதனின் நாக்கு என்று சொல்வார்கள்,  இந்த வேலையை இவருடைய நாவில் வரும் பேச்சுக்கள் கன கச்சிதமாக செய்யும்  என்றும்,  திறமையானவர்களைக் கண்டால் இவருக்குப் பிடிக்காது  என்றும் படம் பிடித்துக் காட்டுகிறார்கள்,

  நல்லவராக நடிக்கும் இவர் தன் நெருங்கிய உறவினருக்கு சேர வேண்டிய சொத்தைப் பொய்யான ஆவணம் மூலம் அபகரித்துக் கொள்ள முயற்சித்து, அது தோல்வியில் முடிந்தது, என்று  இவரால் பாதிக்கப்பட்ட அந்த உறவினர் தன் கதைகளை வரிவரியாகச் சொல்லி மனம் நொந்து சாபமிட்ட நிகழ்வுகளும் நடந்ததுண்டு,

  இவர்களைப் போன்றவர்கள்  ஒருநிறுவனத்திலே அமைந்தால், அந்த நிறுவனம் வளர்ச்சிக்குப் பதில் வீழ்ச்சியை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை,

  இப்படிப்பட்ட இரட்டை குணம் கொண்டவர்கள் மற்றும் தாங்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள், திறமையானவர்கள், என்று  போலியாக நடிப்பவர்கள், ஒரு நிறுவனத்திற்கு  தலைமைப் பொறுப்பாளராக அமைந்து விட்டால்,  அது அந்த நிறுவனத்திற்கு சாபக் கேடாக அமையும், அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு நிறுவனத்தை விட்டு நீக்கி, திறமையானவர்களை மட்டுமே நிறுவனத்தில் வைத்துக் கொண்டால் அந்த நிறுவனம் செழித்தோங்கி வளரும் , மாற்றி யோசிக்கப்படும் உயர்ந்த சிந்தனைகள், நிறுவனத்தில் உண்டாகும் பிரச்சனைகளை எளிதாகத் தீர்க்கும்,

  களைகளை நீக்கி பயிர்களைக் காப்பதைப் போல, தீயவர்களை ஒதுக்கி வைப்பதும் நல்லவர்களை தன் பக்கத்தில் வைத்துக் கொள்வதும், தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வேதவாக்காகும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அது அடித்தளமாகவும், உறுதுணையாகவும் அமையும்என்பதுநிதர்சனமான, அனுபவபூர்வமான உண்மையாகும்,

  நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி-6)

  உயிரினங்களில் உள்ள அனைத்து செல்களும் ஒரே அளவில் துல்லியமாக மரபணுக்களை கொண்டிருக்கும். இருப்பினும், செல்லில் இருந்து வெவ்வேறான உறுப்புகளும் (organs), திசுக்களும் (Tissues) உருவாகிறது. அதன் பின்னணியில் இருக்கும் மாயவித்தையை உற்று நோக்கினால் அது நம் புருவத்தை சற்று உயர்த்தவே செய்யும். இதற்கான காரணத்தை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்த போது செல்லில் உள்ள குறிப்பிட்ட சில ஜீன்களின் படியெடுப்பு (Gene transcription) அல்லது மொழிபெயர்ப்பு (Translation) முறையானது முடக்கப்பட்டு அதன் வெளிப்பாடு (Expression) தடுக்கப்படுவதே (Silence / Repress) இதற்கு காரணம் என கண்டறிந்தனர். இத்தகைய இயங்கமைப்புக்கு காரணியாக இருப்பது 20-24 நியூக்களியோடைடு அளவிலான சிறு செய்தியற்ற ஆர். என் ஏ களான (Small Noncoding RNAs) குறுக்கீடு (Small Interference RNA: siRNAs) மற்றும் நுண் (Micro RNSs: miRNAs) ஆர். என்.ஏகள் என்பது மிகவும் வியப்பிற்குரிய ஒன்றாகும். இவைகளைப் பற்றிய துல்லிய விவரங்களை இந்த இதழில் விரிவாகப் பார்க்கலாம்.

  1993 ஆம் ஆண்டு இத்தகைய சிறு ஆர். ஏன். ஏ கள் (Samll RNAs) ஜீன் மூலம் உருவாகும் ஆர். என். ஏகளின் (mRNA) ஒரு பகுதியான 3 மொழிபெயர்பில்லா பகுதியில் (3’ Untranslated Region) ஒட்டி கட்டுப்படுத்தப்படுவது நூற்புழுவில் (Nematode) கண்டறியப்பட்டது. இதன் பின், வெவ்வேறு வகையான இயக்கமுறைகள் (Mechanism) கொண்டு குறுக்கீடு மற்றும் நுண் ஆர். என். ஏ கள் (siRNA/miRNA) 3 ஜீனின் வெளிப்பாட்டை ஒடுக்குவது கண்டுபிடிக்கப்பட்டது. குறுக்கீடு ஆர். என். ஏ கள் (siRNA) முதலில் எறத்தாழ 20 நியூக்ளியோடைடு இரட்டை இழை (Double – Stranded) கொண்டவையாக இருக்கும். பின் டைஸர் (Dicer) எனும் நொதிகளால் (Enzyme) சிதைக்கப்பட்டு ஒற்றை இழை (Single Strand) குறுக்கீடு ஆர். என்.ஏ (siRNA) வாக உருவாகிறது. குறிப்பிட்ட தாவர மற்றும் விலங்குகளில் வைரஸ் எதிர்பாற்றலில் (Antiviral) குறுக்கீடு  ஆர். என். ஏகள் (siRNAs) முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகள் வைரஸ் ஜீன்களை கட்டுபடுத்தி அந்த தாவர மற்றும் விலங்கின் பாதுகாப்பாற்றலாக செயல்படுகிறது. ஆனால், நுண் ஆர். என். ஏகள் (miRNA) உள்ளார்ந்த (Endogenus) நுண் ஆர். என். ஏ ஜீன்களால் (miRNA Genes) உருவாக்கப்பட்டு பின் முதிரான நுண் ஆர். என். ஏ (Mature miRNA) வாக ஏறத்தாழ 20-24 நியூகிளியோடைடு கொண்டவையாக டைஸர் (Dicer) நொதிகளால் உருவாக்கப்படுகிறது. நுண் ஆர். என். ஏவின் உயிரிவழித் தோற்றமானது (Biogenesis) தாவரம் மற்றும் விலங்குகளில் வெவ்வேறு முறையில் உருவாகினாலும் அவைகளின் செயல் ஒன்றே.

  இந்த சிறு ஆர். என். ஏகள் RISC என்னும் கலவையான புரத  மூலக்கூறுகளின் உதவியால் ஜீன்களை கட்டுபடுத்துகின்றன. பரிணாம வளர்ச்சியின் போது, இத்தகைய சிறு ஆர். என் ஏ கள் ஒவ்வொரு உயரினத்திலும் பிரத்யோகமாக உருவாகி திசு மற்றும் உறுப்பு உருவாக்க நிகழ்வில் பங்கு வகிக்கிறது. உதாரணமாக, ஏறத்தாழ 1000 நுண் ஆர். என். ஏ கள் (miRNAs) மனிதர்களிடம் மட்டும் காணப்படுகிறது. இத்தகைய சிறு ஆர்.என்.ஏ.கள் (Samll RNAs) செல்லில் ஒழுங்காற்று (Regulation) முறைகளில் ஈடுபடுவதால் இவைகள் செல்லில் உள்ள ஜீன் மூலம் உருவாகும் புரதங்களின் (Protein) செயல்பாடுகளை கண்டறியும் கருவியாக (Tools) குறிப்பாக ஆர். என். ஏ குறுக்கீடு தொழில்நுட்பத்தில் (RNA Interference: RNAi) பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட ஜீனை இந்த சிறு ஆர். என்.ஏ வால் ஒடுக்கப்படுவதன் (Silence) மூலம் அந்த ஜீன் மூலம் உருவாகும் புரதம் (Protein) தடுக்கப்படுகிறது. அவ்வாறு தடுக்கபடுவதால் உயிரினங்களில் ஏற்படும் விளைவுகளை கண்டறிவதன் மூலம் ஒரு ஜீனின் செயலை (Gene Function) கண்டறியமுடிகிறது. இவ்வாறு ஜீன்களின் செயலை கண்டறிந்தால் அவைகளை உயிர் தொழிற்சநுட்பத்தால் (Biotechnology) கையாண்டு உயிரினங்களுக்கு நன்மை விளைவிக்க முடியும். குறிப்பாக, மருத்துவத் துறையில் மனிதர்களின் நோய்களுக்கு காரணமான ஜீன்களைக் கண்டறிந்து அவற்றை சிறு ஆர். என். ஏ வால் கட்டுபடுத்தி குணடடைய செய்யும் யுத்திகளைக் கண்டறிந்துள்ளனர். இதே போல், பயிரினங்களின் (Crops) விளைச்சல் (Yield) மற்றும் வளர்ச்சியில் (Development) இவை முக்கிய பங்கு வகித்துள்ளது. குட்டை ரக மற்றும் நீண்ட நெற்கதிர் கொண்ட நெல் உற்பத்தியில் இந்த சிறு ஆர்.என். ஏ வின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தக்காளி பழத்தில் மனிதனுக்கு நன்மை விளைவிக்கும் கரோட்டினாய்டு (Carotenoids) மற்றும் பிளோவோனாய்டுகளின் (Flavonoids) பெருகத்திற்கு உதவுகிறது.

  மேலும் தக்காளியின் அளவை (Size) நிர்ணயிப்பதிலும், கனியவைப்பதிலும் (Fruit Ripening) இவைகளின் பங்கு இன்றியமையாதது. தற்போது, விதையில்லா பழங்களுக்கு (Seedless Fruits) சந்தையில் மிக பெரிய வரவேற்பு இருப்பதால், விதையில்லா பழங்களை உருவாக்குவதிலும் இந்த சிறு ஆர்.என். ஏகளின் பங்கு விளக்கப்பட்டுள்ளது. இவை தவிர, பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நுண் உயிரிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கும் பணியிலும் இடம் வகிக்கிறது. வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை பயிர் உற்பத்தியைப் பாதிக்கும் மிகப்பெரும் தடைகளாகும். இந்த சிறு ஆர். என். களை கருவியாகப் பயன்படுத்தி வறட்சியை தாங்கும் பயிர் ரகங்களை உருவாக்கி இத்தகைய சிறு ஆர். என். ஏகளின் பங்கை வியப்படைய செய்துள்ளனர். எண்ணற்ற முக்கியத்துவம் கொண்ட இந்த சிறு ஆர். என்.ஏகளை பற்றிய மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி பல ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பற்றிய அறிவும், ஆராய்ச்சியும் செய்பவர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. அடுத்த இதழில் நீண்ட செய்தியற்ற ஆர். என். ஏ களின் (Long Noncoding  RNAs) முக்கியத்துவத்தைக் காணலாம்.

  தோல்வியும்… வெற்றியும்…

  தோல்வி குறித்து என்னுள் எழும் கேள்விகளை என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை ஏன்? வெற்றியைப் பெற நான் விண்ணப்பித்த எத்தனை விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்பட்டன? திரும்பிப் பார்க்காமல் போனது எத்தனை குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதையாக ஏதோர், முயற்சியால் கிடைத்த வெற்றியை மட்டும் ஏன் மனம் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகின்றது.

  காரணம் இல்லாமல் காரியம் இல்லை. ஒவ்வொரு முறை நான் தோல்வியைத் தழுவும் போது, அது கற்றுத்தரும் பாடம், மிகப்பெரிய ஞானத்தை அடைந்ததற்கு சமமாக ஆகின்றது. ஆனால், ùவ்றியை நான் சந்திக்கின்ற போது அதனால் என்னுள் எந்தவித பெரிய மாற்றமும் நிகழுவதில்லை. கொஞ்ச நேரம் மகிழ்வு அடைகின்றேன். இல்லை என்றால் அகந்தை கொண்டு ஆணவத்துடன் நிமிர்கின்றேன். வேறு ஒன்றும் நிகழ்வதில்லை. இருந்தாலும் தோல்வியைத் தழுவ ஏன் நான் தயங்குகிறேன்? என்று எனக்குள் தெரியவில்லை.

  தோல்வியை சந்திக்காத வெற்றியாளன் எவரும் இங்கு வென்றதில்லை என்பது ஏன் எனக்கு உரைப்பதில்லை. வெற்றியாளர்களை விளம்பரப்படுத்தும் அளவுக்கு, தோல்வியாளர்களை இந்த உலகம் கண்டு கொள்வதில்லை என்பதாலா? தோல்வி மேல் தோல்வியைத் தழுவிய எத்தனை தன்னம்பிக்கையாளர்கள், தம் வெற்றியை பெரிய அளவில் உயர்ந்து, என்றும் அழியாமல் உலக வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். சான்றாக தாமஸ் ஆல்வா எடிசன், வால்ட் டிஸ்னி, ஆப்ரகாம் லிங்கன் என எண்ணற்ற பேரை உதாரணம் காட்டலாம்.

  ஒரு விசயம் குறித்த முயற்சியால் ஏற்படும் எல்லாத் தோல்விகளையும், நாமே எதிர்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த விசயம் குறித்து நமக்கு முன்னே முயன்றவர்களின், தோல்வியில் இருந்து நாம் சில பாடங்களை கற்றுக் கொள்ளலாம். இது அந்த விஷயத்தில் வேகமாக முயற்சிக்க உதவக்கூடும் என்பது உண்மை.

  அதுபோல தோல்வியையோ, தோல்வியாளர்களையோ உடனே தூக்கி எறிவதில் கவனம் அதிகம் வேண்டும். ஏன், என்றால் வலியைமான தோல்வி  எந்த நிலத்திலும் தானாகவே முளைக்கக்கூடிய வல்லமையுடையது என்பது மறுக்க முடியாதது. இது காலம் நமக்கு கற்பித்த பாடம். ஆகையால் வெற்றி தோல்வியை வைத்து எவரையும் மதிப்பிடுவதை பரிசீலனை செய்வோம்.

  வெற்றியாளர்கள் தான் சந்தித்த தோல்வியை கொஞ்சம் மிகைப்படுத்தி பேசி பெருமிதம் கொள்ளும் அளவு, தோல்வியாளர்கள் தான் அடையாது போன வெற்றி குறித்து ஏன், கொஞ்சம் மிகைப்படுத்தி பேசாது போகின்றார்கள். அவர்களின் செயலுக்கு எந்த வகையில் இவர்களின் செயல் குறைந்து போனது என்பது யாம் அறியோம் பராபரமே!. இந்த மனப்பான்மை எப்படி தோன்றியது? வெற்றியாளன் என்பவன் பெரியவன், தோல்வியாளன் என்பவன் சிறியவன் என்கின்ற இந்தச் சமூகப்பார்வை என்றைக்கு மாறுமோ! அன்றைக்கு இரண்டும் ஒன்றாய் தோன்றுமோ என்னவோ, காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

  வெற்றியின் மீதான வெறி இன்றைக்கு கண்மூடித்தனமாக இயங்குகின்றது. தோல்வி குறித்தான எண்ணம் இன்றைக்கு வேள்வித் தீயாய் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. வெற்றியும், தோல்வியும் இன்பமும், துன்பமும் இரண்டறக்கலந்து இருப்பதுதான் வாழ்க்கை என்ற தத்துவம் தூசுபடிந்து கேட்பாரற்றுக் கிடப்பதுதான் காரணம் இதற்கெல்லாம்.

  ஒரு பிஞ்சுக்குழந்தை பிறந்ததில் இருந்து அது செத்து சுடுகாடு போகும்வரை நம்பர் ஒன்னாக இரு, இரு என்று அடிமாடு போல, அடிமேல் அடிவைத்து , ஓடு ஓடு என துரத்தி துரத்தி விடுவது இயற்கையான வாழ்க்கையை அறுத்து எறிந்தமைக்கு சமமாக கருத வேண்டியுள்ளது. ஏன், இந்த போக்கு? எதற்கு இந்த நாடகம், சிந்தித்துப்பார்த்தால் சிரிப்பதைத்தவிர வேறு வழியில்லை.

  ரசித்து, ருசித்து, அணு அணுவாய் வாழ்வை அனுபவித்து மகிழ வேண்டிய மனம், வெற்றி என்னும் போலி மணி மகுடத்தை தலைக்கு ஏற்றி பெரும் தலைவலியை விலை கொடுத்து வாங்கி, அனலிடை புழுவாய், அலுத்து, சளித்து, நொந்து கொள்ளுகிறதே ஏன்? வெற்றி, தோல்வி என்கிற விளக்கெண்ணையை சரிவர புரிந்து கொள்ளாதததுதான் எல்லாவற்றிக்கும் காரணம். மனம் மலர்ந்து இருந்தால் மனிதம் மகிழ்ந்திருக்கும். மலரும் காலம் வருவதற்கு கொஞ்சகாலம் காத்திருக்க வேண்டும் என்பது இயற்கையின் சட்டம். இது புரிந்து விட்டால், தோல்வியாவது! வெற்றியாவது! மலர்ந்த மனதால் வழிநடத்தப்படும் மனிதம் மட்டுமே முக்கியம் என்பது விளங்கும்.

  உயர்ந்த குடிப்பிறப்பும் சிறந்த இல்லறமும் சமுதாய வளர்ச்சிக்கான இரண்டு வெற்றிப்படிகள்…

  “செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்

  செந்நெல்லேயாகி விளைதலால் – அந்நெல்

  வயல் நிறைய காயக்கும் வளவயல் ஊர

  மகன் அறிவு தந்தை யறிவு”.

  என்பது சமணமுனிவர்கள் பாடிய நாலடியார் பாடல். இப்பாடலின் விளக்கமானது – வளம் நிறைந்த நல்ல வயலில் விதைக்கின்ற நல்ல விதையானது பல்கிப்பெருகி ஒன்று நூறாகப் பரிணமித்து பலன் தருவது போன்று ஒரு குடியில் தந்தை ஒருவன் அறிவில் சிறந்து விளங்கினால் அவனுடைய மகனும் பின்னர் வளர்ந்து அறிவு மிக்கவனாக இருப்பான் என்பதாகும்.  இக்கருத்தை மேலும் வலுவூட்டும் வகையில் வள்ளுவர்,

  “நிலத்தில் பிறந்தமை கால்காட்டும் காட்டும்

  குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்”. ( குறள்: 959)

  என்று கூறுகிறார். ஒரு செடியின் தண்டானது அது வளர்ந்த நிலத்தின் தன்மையை எடுத்துக்காட்டுவது போல், ஒருவரது நற்செயல்கள் அவர்களது குடிப்பிறப்பின் சிறப்பை எடுத்துக்காட்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும், வள்ளுவர் இவ்வுயர்குடிப் பிறந்தோர் தம்மை விட தன்னுடைய மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது இவ்வுகலத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் இன்பம் தரும் என்று மகிழ்வர் என்ற உயரிய கருத்தை,

  “தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து

  மன்னுயிர்கெல்லாம் இனிது”. (குறள்: 68)

  பிரபஞ்சம் என்று தோன்றியதோ, அன்றே ஆற்றல் ஒன்று உருவாகிவிட்டது. அந்த ஆற்றல் பல்வேறு பரிமாணங்களில் செல்பட்டுக் கொண்டிருக்கின்றது. உயர்குடிப்பிறந்தோர் தங்கள் உழைப்பு என்ற ஆற்றலின் தன்மையைச் சரியாக வடிகால் செய்து, சமுதாய வளர்ச்சி என்ற வெற்றிக்கொடியை தேசம் எங்கும் பறக்க விட்டு புகழ் அடைந்து வருகின்றனர். அவர்கள் தம் மூதாதையர்களிடமிருந்து உழைப்பு, நாட்டுப்பற்று பணிவு போன்ற நெறிகளைக் கையாண்டு தங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு அங்கத்திலும் தினச்சிறப்பு அடைந்து உருவாகின்றனர். இத்தகையோர் சமுதாயத்தில் என்றும் பேரும் புகழும் பெற்று விளங்க அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவை சிறந்த கல்வி, ஈகை, ஊக்கம் மற்றும் சிறந்த இல்லறமும் ஆகும்.

  “பல்லவையுள் நல்லவை கற்றலும் பார்துண்டாங் (கு) இல்லற முட்டாதியற்றலும் வல்லதின்

  தாளி பொருளாகக்கலும் – இம்மூன்றும்

  கேள்வியுளெல்லாந்தலை”.

  என்ற நல்லாதனாரின் திரிகடுகம் பாடல், கல்விகள் எல்லாவற்றிலும் சிறந்த மூன்று கல்விகள், பல்வேறு நல்லநூல்களில் உள்ள நல்லனவற்றைக் கற்றுணர்தல், யாருக்கும் பகிர்ந்து கொடுத்து தானும் உண்டு இல்லறத்தைக் குறையில்லாமல் நடத்துதலும் ஊக்கத்துடன் முயற்சி செய்து செயற்கறிய செயல்களைச் செய்தலும் ஆகும் என்று விளக்கியுள்ளது.

  மனைவி மக்களுடன் குடும்பம் நடத்தும் தலைவன் தன்னுடைய சமுதாயத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்கள், எளியவர்கள் ஆகிய மூன்று கிளத்தார்க்கும் நல்லமுறையில் உதவியாக இருந்து வாழ்வு அளிப்பவனாக இருப்பான் என்ற கருத்தை

  தன்னிடம் இருக்கின்ற தகுதியையும், அறிவாற்றலையும் பிறருக்காக செலவிடுகின்ற போதுதான் உழைப்பின் வலிமையும், பெருமையையும் என்னவென்று வெளிப்படுகின்றது. இறைவனது படைப்பில் நல்லவை, கெட்டவை என்ற இரண்டும் எல்லாவித உயிரினங்களிலும் தாவரங்களிலும் உண்டு. உதாரணமாக மரங்களில் பலவிதங்கள் உண்டு. எல்லா மரங்களும் பூக்கின்றன. காய்க்கின்றன, கனிகளையும் தருகின்றன.

  “இன்சொல் அளாவல் இடம் இனிதுணை யாவர்க்கும்

  வன்சொல் கலந்து வகுப்பானேல் – மேல்சொல்

  முருந்தேய்க்கும் முட்போல் எயிற்றினாய் நாளும்

  விருந்தேற்பர் வின்னோர் விரைந்து”.

  என்ற பாடல் மூலம் இல்லறம் பற்றிய சிறப்பு பற்றி பாடியுள்ளார்.

  அப்பாடலின் விளக்கமாவது, அனைவரிடத்தும் இன்சொல் கூறல், அவர்களுடன் கலந்துரையாடல், இருக்கையுதுவுதல், அறுசுவை உண்டியளித்தல், கடுஞ்சொல் நீக்குதல், பணிவு கலந்த சொல் கூறல் ஆகியவை பொருந்தியவள் இல்லாள் ஆகும்.

  அத்தகைய இல்லாளுடன் இல்லறம் நடத்துபவரின் சிறப்பினை அறிந்த தேவர்கள் அத்தகைய நல்லோர்களை தங்களுடைய விருந்தினர்களாக ஏற்றுக் கொள்வார்கள் என்பதாகும். இத்தகைய நல்லோர்களின் மக்களும் பெருமைக்குரியவர்களாகவே இருப்பார்கள் என்ற கருத்தை வள்ளூவரின்

  “மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

  நன்கலம் நன் மக்கட்பேறு”. (குறள்: 60)

  என்ற குறள் மேலும் வலியுறுத்துகின்றது. மேலும், அத்தகைய இல்லத்தரசிகள் கடவுளின் நல்லாசியுடன் உலகில் பல்வேறு புகழுடன் வாழ்வர் என்று,

  “பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு

  புத்தேளிர் வாழும் உலகு”.

  என்ற குறள் மூலமும் வள்ளுவர் வாழ்த்தியுள்ளார். இத்தகைய நல்லோர்களின் செயல்பாடுக்ள பற்றி ஒவ்வொரு நகரத்திலும், தேசத்திலும் நாம் கண்கூடாகப்பார்கின்றோம். பயன் அடைகின்றோம். அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களைத் தருகின்றன. ஆனால், தனிமனித முயற்சியாலும் அவன் தன் சிறந்த இல்லற வாழ்க்கையாலும் சமுதாய வளர்ச்சிக்காக அவர்கள் செய்யும் தொண்டுகள் யாவரும் அறிந்ததே. ஆகையால், சிறந்த இல்வாழ்வும், உயர்ந்த குடிபிறப்பும் ஒரு சமுதாய வளர்ச்சிகான இரண்டு வெற்றிப்படிகள் என்று உரைப்பதில் பெருமையே அடைவோம். வாழ்க நல் இல்லறம். உயர்குடி பிறந்தோர்களின் நற்பணிகள் மேலும் வளர நன் மக்களின் நல்வாழ்த்துக்கள்.

  மனத்தடையை தகர்த்தால் மாற்றங்கள் மலரும்

  இன்றைய சமுதாயத்தில் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரிதாக வளர்ந்து நின்று அவர்களது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது மனத்தடை. அவர்கள் மனதில் அடிவரை சென்று ஒட்டிக் கொண்டுள்ள தடைக்கல்லாக உள்ளது. தன் திறமையையும், அறிவாற்றலையும் தானே மிகக் குறைவாக கணித்துக் கொள்கிறார்கள். தனக்குத் தானே தடையாக முன்னேற்ற எண்ணங்களை கைவிட்டு விட்டு சராசரி வாழ்க்கைக்கும் கீழான வாழ்க்கையை, சுரத்தேயில்லாமல் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் ஏராளம்.

  மனத்தடைக்கு காரணங்கள்

  நம் உயரம் குறைவு, அழகான தோற்றம் நமக்கு இல்லை. அகற்றப்படாத தாழ்வு மனப்பான்மை. நமது குடும்ப சூழ்நிலை பலவீனமானது. நாமெல்லாம் முன்னேற முடியாது. நாம் ஏழ்மையானவர்கள். நாமெல்லாம் ஆசைப்படக்கூடாது. நாம் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற மனப்பான்மையும், மனத்தடையும் நமது புதிய முயற்சிகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாகி விடுகிறது. எனக்கு கார் ஓட்ட வராது. ஆங்கிலம் பேச வராது. கணிதம் வராது. மற்றவர்களை விட நாம் குறைவாக படித்து இருக்கிறோம் என எண்ணுதல். தாம் எது செய்தாலும், தவறாகவே முடிகின்றது என்ற எண்ணம். இதற்கு மேல் நம்பெற்றோர்கள் நம் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடர்களிடம் போய் நிற்பது. நம் புதிய முயற்சியை நமது நெருங்கிய நண்பன் இந்த முயற்சி வீண் எனச்சொன்னால் பாதியிலேயே கைவிட்டு விடுவது. லஞ்ச லாவன்யமில்லாமல் நேர்மையான முறையில் முயன்றால் வெற்றி பெறவே முடியாது என தவறான மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது. அதையே நம்புவது, வெற்றி பெற்றவர்கள் குறுக்கு வழியில்தான் வென்று இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு சிறப்பான அறிவுக்கூர்மையும், திறமையும் இயற்கையிலேயே உள்ளது. அது நமக்கு கிடையாது என்கிற மனப்பான்மையும் மனத்தடையும் பல இளைஞர்களுக்கு உள்ளது. இன்று ஊக்க வார்த்தைகளுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. உண்மையே. முன்னோர்களை விட போதிய கல்வியறிவையும், பொது அறிவையும் வளர்க்கத் தவறுதல், நம்மால் எங்கே படிக்க முடியும், நமக்கு எங்கே அவ்வளவு பண வசதி இருக்கிறது? என்கிற மனத்தடை பரவி இருக்கிறது. பாதுகாப்பற்ற உணர்வு வங்கியிலே நமக்கெல்லாம் கடனுதவி கிடைக்காது. நமக்கு நீதி கிடைக்காது என மனத்தடுமாற்றம் ஏற்படுவது உள்ளிட்ட பல காரணங்களைச் சொல்லாம்.

  எதையும் சிரமம் என்று நினைப்பவர்கள் மலைத்துப் போய் நிற்கிறார்கள். பல்லில்லாத பாம்பைக் கண்டு நடுங்குகிறார்கள். உயர் பதவி வகிப்பவர்களுடன் நேரடியாக பேச மனத்தடை உள்ளது. வீட்டை விட்டு வெளியேற சிலருக்கு மனத்தடை உள்ளது. மேடையில் பேசுவதற்கு சிலருக்கு மனத்தடை உள்ளது. தமது தவறை ஒத்தக் கொள்வதற்கு நிறைய பேருக்கு மனத்தடை உள்ளது. என்னால் கொஞ்சம் கூட விற்பனை செய்ய முடியாது. என்னால் இவ்வளவுதான் முடியும் என்கிற எண்ணம் வேரூன்றி விடுகிறது.

  மனத்தடை என்றால் என்ன?

  அறிவுத்திறனும், திறமையும் அவர்களுக்கு பிறவியிலேயே, இயற்கையிலேயே கூடுதலாக உள்ளதால்தான் வெற்றிமேல் வெற்றி பெறுகிறார்கள். நமக்கு அது போல கிடையாது என நம்புகிறார்கள். கடின முயற்சியால் திறமையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள முடியும். நம்மாலும் வெற்றி பெற முடியும் என்பதை உணர்வதில்லை. முயற்சியின்றி இயற்கையில் அமைந்த திறமையால் மட்டுமே வெற்றியாளர்கள் ஜெயிக்கிறார்கள் என தவறாக சுயமனத்தடையை உருவாக்கிக் கொள்கிறார்கள். தமக்கு திறமைகள் இவ்வளவுதான். திறமைகளை வளர்த்துக் கொள்ளவே முடியாது என தவறாக முடிவெடுக்கிறார்கள். சின்னஞ்சிறிய பின்னடைவுகளை கண்டு பாதியிலேயே முயற்சியை கைவிடுபவர்கள் உள்ளனர். சவால்களை தவிர்க்கிறார்கள். வாய்ப்பை நழுவ விடுகிறார்கள். முயற்சி செய்வது காலத்தை வீண் விரயமாக்கும் என நம்புவது. மற்றவர்களின் அசுர வெற்றியைக் கண்டு பயப்படுகிறார்கள். அறிவு, திறமை நிலையானது. வளர்த்துக் கொள்ள முடியாததது என்கிற மனப்பான்மையில் மனத்தடையில் உழல்கிறார்கள். உறுதியாக நம்புகிறார்கள்.

  மனத்தடையை அகற்றுவது எப்படி?

  கல்விதான் மனத்தடைகளை உடைக்கும் ஆயுதம். கல்விதான் விடுதலையைத் தருகிறது. கல்விதான் நமக்கு தலை நிமிர்வைத் தருகிறது. நூலகங்களுக்குச் செல்வது நல்லது. வாசிக்கும் பழக்கம் மனிதர்களை வாழ்க்கையை மாற்றவல்லது. எவ்வளவு மோசமான சூழ்நிலைகளிலும் வெற்றி பெற்ற மனிதர்களை நூலகம் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. எல்லா விஷயங்களிலும் உத்தி என்பது மிக முக்கியமானது. காலத்திற்கேற்ப புதிய உத்திகள் இல்லாத எந்தவொரு செயலும் வெற்றி பெறுவதில்லை.

  நமது இலக்கை அடைய ஜோதிடரிடம் யோசனை கேட்பது சரியானதல்ல. தவறான நண்பர்களின் எதிர்மறையான ஆலோசனையைப் புறக்கணிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக தங்களுக்கு வாழ்வில் கிடைக்காத பல அரிய சந்தர்ப்பங்களை தனது சந்ததியினருக்கு ஏற்படுத்தி தரலாம்.

  வயதானவர்கள் எதையும் செய்ய இயலாத மனத்தடை வரும்போது தன்னுடைய சக்தியை தூண்டுவதற்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்தால் மனம் உற்சாகம் அடையும். நம் அளப்பறிய ஆற்றலை, பொன்னான நேரத்தை கணினி, டி.வி. மற்றும் வீண் கேளிக்கைகளில் விரயமாக்கக் கூடாது.

  புதிய உலகை கண்டுபிடிக்க வேண்டும் என்கிற வெறித்தனமான முயற்சி இருந்ததால்தான் கொலம்பஸ் வெற்றி பெற்றார். கொஞ்சம் கூட விற்பனை செய்ய முடியாது என சக விற்பனையாளர்கள் சொல்லும் குக்கிராமத்தில் கூட, தன் நிறுவனத்தின் சாதனங்களை பல மடங்கு விற்றுக் காட்டும் விற்பனையாளர்கள் உள்ளனர். சாதனைக்குக் காரணம் மனத்தடை அகற்றப்பட்டதே ஆகும். மனத்தடை இல்லாத போது இயல்பான நமது முழுத்திறமையும் வெளிப்படுகிறது. உற்சாகப்படுத்தும் போது மனத்தடை அகல்கிறது.

  நம்முடைய நேரத்தை, உழைப்பை ஒரு சீரிய காரணத்திற்காக அர்ப்பணம் செய்வது ஒரு தவம். கடின உழைப்பும், முயற்சியும், அர்ப்பணிப்பும் இருந்தால் திறன்கைள வளர்த்துக் கொள்ள முடியும். மிக உயர்நிலையை அடைந்தவர்களுக்கு இத்தகைய குணங்கள் உள்ளன.

  எந்த ஒரு துறையிலும் லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர். அதில் பலர் சில காலங்களில் காணாமல் போய் விடுகிறார்கள். குறைந்த முனைப்புடன் அரைகுறையாக ஈடுபடுபவர்கள் கொஞ்சம் இருப்பர். அவர்கள் வெற்றி பெறுவதில்லை. தொடர்ந்து கடின முயற்சியுடன் வெறித்தனமாக அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களே முதலாவதாக வெற்றி பெறுகிறார்கள். நிலைத்து நிற்கிறார்கள். எந்தத் துறையிலும் ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கவே செய்கிறார்கள். அவர் வரலாற்றைப் பார்த்தால் நமக்கு இன்று உள்ள அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அல்லாடித்தான் இன்று உயரிய நிலையை உச்சத்தை அடைந்து இருப்பார்கள்.

  ஒரு சிறிய உத்தி மிகப்பெரிய மாற்றத்தை வடிவமைக்கிறது. வணிகத்தில் கல்வித்துறையில், விளையாட்டுத்துறையில் சாதிப்பதற்கு ஆக்கப்பூர்வமான, நேர்மறையான மனநிலையே செயல்பட தூண்டுகிறது. முயற்சியும், கடின உழைப்புமே ஒருவரை வலிமையாக்குகிறது. கூடுதல் நேரத்தையும், உழைப்பையும் நல்கும் போது சாதனைக்கு வழி அமைக்கிறது. ஒருமுறை நமது மனத்தடை அகன்றுவிட்டால் வெளிப்புறம் இருக்கும் எல்லாமே மாறிவிடுகிறது. எல்லாமே நம் மனதைப் பொருத்தே உள்ளது. நம்மை வெற்றியின் முகட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு, நாம் மேன்மை அடைவதற்கு நாம் வாழ்வில் உயர்வதற்கு, நம்மை அழைத்துச் செல்ல எளிதான இயந்திரம் ஏதுமில்லை. நாம்தான் வியர்வை சிந்த வேண்டும். மன உறுதியுடன் உழைக்க வேண்டும். வெற்றிப்படிக்கட்டுகளில் முயன்று ஏற வேண்டும்.

  சவால்கள்தான் நம் வாழ்வை சுவாரஸ்யம்மிக்கதாக ஆக்குகிறது. சவால்களை இடர்பாடுகளைக் கடக்கும்போதுதான் நம் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறுகிறது. முடியாது என்ற எண்ணம் விலகும்போது நம்மால் எப்படியெல்லாம் செய்து முடிக்க முடியும் என்கிற சிந்தனை பெருகுகிறது. நமது மனப்பான்மையையும், மனநிலையையும் சார்ந்தே நமது மகிழ்ச்சியான வாழ்வு இருக்கிறது. நாம் நல்ல முடிவுகளை எடுக்காமல் முன்னேற்றத்தை அடைய முடியாது. நமது மிகப்பெரிய போர்க்களமே, போராட்டமே நமது சொந்த மனத்தடையில் இருந்துதான் துவங்குகிறது. நமது வாழ்க்கை மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறது.

  நம்முடைய வாழ்க்கையை மாற்றுவதற்கு, நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நம்மை நாமே மாற்றிக் கொள்வதற்கும் நம் மனத்தடையை மாற்ற வேண்டி உள்ளது. சவால்கள், இடர்ப்பாடுகள், தடைகள், முட்டுக்கட்டைகள் இல்லையெனில், நாம் வாழ்வில் உயரவே முடியாது. நமது வாழ்வின் கதையை வடிவமைக்கும் பேனாவை மற்றவர்கள் பிடிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மனத்தடையை அகற்றும் போது சவால்களை தழுவத் தயாராகி விடுகிறோம். எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தாலும் முயற்சியை ஒருபோதும் கைவிடுவதில்லை. நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் நம்மை அந்த துறையில் நிபுணராக மாறுவதற்கு பாதை அமைக்கிறது. விமர்சனங்களிலிருந்து கற்றுக்கொள்கிறோம். சக வெற்றியாளர்களை முன்மாதிரியாக நினைத்து அவர்களுடன் நல் உறவுகளை மேம்படுத்திக் கொள்கிறோம்.

  நம் சிந்தனைகளே நம் வாழ்வை வடிவமைக்கிறது. எல்லா விஷயங்களுமே, இலக்குகளுமே, எளிமையாவதற்கு முன் கடினமானதாகவே இருந்துள்ளது. வெற்றியாளர்கள் எப்போதும் மனத்தடையை அகற்றியவர்கள்தான், யாருக்கு கனவுகளின் அழகியல் நம்பிக்கை இருக்கிறதோ, அவர்களையே நல்ல எதிர்காலம் சார்ந்து இருக்கிறது. தவறான எண்ணங்களில் நாம் சிறைப்பட்டு இருக்கும்வரை நம்மை விடுவித்துக் கொள்ளவே முடியாது. காற்றை எதிர்க்கும் போதுதான், பட்டங்கள் வானில் உயரே பறக்கின்றன. காற்றுடன் உறவாடுவதால் அல்ல. அதுபோல நம் மனத்தடையை எதிர்க்கும் போதுதான் நாம் உயரே பறக்க முடியும். புதிய கதவுகளை பழைய உத்திகள் திறப்பதில்லை. நம் மனம் எதை நுகர்கிறதோ அதுவே நம் வாழ்வை கட்டுப்படுத்துகிறது.

  குடும்பத்தில் அன்பும், கனவும் கலக்கும்போது நாளை நமதாகி விடுகிறது. இலக்கு இல்லாத அறிவும் திறனும் பெற்றவர்கள் இறக்கை இல்லாத பறவையைப் போன்றவர்கள். பாதியளவே முயன்றால், முடிவுகளும் பாதியளவுதான் இருக்கும். இன்றைய பணக்காரர்கள் தங்கள் வாழ்வை வளமாக்குவதற்கு தங்களை தங்கள் துறையில் அர்ப்பணித்து இருக்கிறார்கள். ஆனால், இன்றைய ஏழைகளோ, எவ்வித முயற்சியும் எடுக்காமல் தாங்கள் பணக்காரர்கள் ஆக விரும்பி மட்டுமே இருக்கிறார்கள் அவ்வளவுதான். நாளுக்கு நாள் இடைவிடாது செய்யும் சிறுசிறு முயற்சியின் கூட்டுத் தொகையே ஒருநாள் மாபெரும் வெற்றியாக மாறுகிறது.

  ஜீனுக்கு தீனி…!

  ஜீனுக்கு தீனி என்ற தலைப்பு மிகவும் புதுமையாக இருக்கிறது. ஆனாலும், இப்படியொரு வித்தியாசமான தலைப்பை இனியாள் தேர்ந்தெடுத்துள்ளார். இனியாள் ஒரு கற்பனை கதாபாத்திரம். இக்கட்டுரை முடியும்பொழுது ஜீன்கள் குறித்த நம் பார்வை சற்றே மாறியிருக்கும்.

  ஜீன்கள் மரபணுக்களில் பரம்பரையாக வரும் குணங்களை எடுத்துச் சென்று குழந்தைகளிலும் அடுத்த தலைமுறைகளிலும் வெளிப்படுத்துகின்றன, என்பதை நாம் அறிவோம். விதி என்றும், தலையெழுத்து என்றும் தத்துவவாதிகள் பேசுவது உண்டு. எல்லாம் அவர் தலையில் எழுதியிருக்கிறது என்று கூறுவார்கள். உயிரியல்… அந்த எழுத்தை ஜீனில்தான் எழுதியிருக்கிறது; எழுதப்பட்டிருக்கிறது; என்று நம்புகிறது. அத்தகைய ஜீன்கள்தான் ஒருவர் அமைதியானவரா, அன்பானவரா, ஆர்ப்பாட்டமானவரா? நன்றாக படிப்பவரா, நன்றாக விளையாடுபவரா? என்றெல்லாம் முடிவு செய்கின்றது போலும்…

  அதனை… மதியால் மாற்ற இயலாதா? என்று யோசிக்கலாம். அப்படியானால் ஜீனில்  மாற்றங்கள் செய்யலாம். GM உயிரினங்கள் என்று பல ஜீன்களை கலந்து உருவாக்கப்பட்ட பயிர்கள், என்சைம்கள் குறித்து, மரபியல் சொல்கின்றது. அது ஒரு அறிவியல் திசை. இக்கட்டுரையில் சற்றே உணர்வியலும் கலக்கப்பட்டுள்ளது.

  நமது கட்டுரை ஒரு ஜீன் எப்படி நல்லெண்ணத்தால் மாற்றப்படலாம்… அதற்கான சாத்தியக்கூறு யாது? என்பதை குறித்து இன்ஸ்பெக்டர் இனியாளின் கண்பார்வையில் எழுதப்பட்டுள்ளது. அவர் வாழ்வில் இடம்பெற்ற பள்ளி, கல்லூரி நிகழ்வுகள், அவர் சந்தித்த ஒரு இ.ஆ.ப., அதிகாரியின் யோகா மற்றும் தியானம் செய்ததது குறித்த கருத்துக்கள், ஒரு நல்ல ஆங்கில திரைப்படம், ஒரு புத்தகம் ஆகியவற்றின் அறிமுகம். அதன்பிறகு… கல்லூரியில் எப்படி படிக்கலாம்… என்றொரு கருத்துப்பதிவு. அதை தொடர்ந்து புதிய உயிரியல்  சிந்தனை மூலமாக… நம்பிக்கை எப்படி ஜீன்களை நல்வழியாக கொண்டு வருகின்றது என்று தகவல். இப்படி வரிசையாக அறிவுக்குத் தீனி போடும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.

  வாருங்கள் கட்டுரைக்குள் பாயலாம்….

  தேர்வுகள் முடிவுற்ற பிறகு கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்க காத்திருக்கின்ற இளைய சமுதாயத்தினருக்கு வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலம் தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்க வேண்டும். கல்லூரிகள் தங்களின் வருகையை எதிர்நோக்கி காத்திருப்பதை இங்கிருந்தே காண முடிகின்றது. பெற்றோரின் கனவு, மாணவன் அல்லது மாணவியின் விருப்பம், வசதி வாய்ப்புகள், தகவல்கள் கிடைப்பது, அவற்றின் நம்பகத்தன்மை, செய்திகள், விளம்பரங்கள் என ஒரு இளைய தலைமுறையைச் சேர்ந்த முதலாமாண்டு கல்லூரி மாணவர் அல்லது மாணவியின் பட்டப்படிப்பு வாழ்வின் தொடக்கத்திற்கு காரணம் ஆயிரம் இருக்கக் கூடும். அவர், இதைத்தான் விரும்புவார் என்பது ஜீனில் எழுதப்பட்டு இருக்குமோ? என்னவோ? ஆனால், அவரது சூழ்நிலை அதற்கு அனுமதிக்க வேண்டுமே! மனம் போல் வாழ்வு! என்று சொல்லப்படுவது எதற்காக? வாருங்கள் மேலே பார்ப்போம்.

  எதிர்காலம் நிகழ்காலம் ஆகுமா?

  இன்ஸ்பெக்டர் இனியாள் தனது கல்லூரி வாழ்வை 1993ல் தொடங்கினார். சமீபத்தில் அரைவல் (வருகை – ஆங்கிலம் 2016) என்கின்ற திரைப்படம் பார்த்தார். அது வேற்றுகிரகவாசிகள்  பூமிக்கு வருவதை குறித்து எடுக்கப்பட்ட அறிவியல் புனைகதை திரைப்படம். அதில் எதிர்காலத்தில் நடக்க உள்ள சம்பவங்களை, கடந்த காலத்தில் நடந்து முடிவது போல தெரிவித்து இருப்பார்கள். மிக புதுமையான கதை கூறும் உத்தி. அதைப்போல… தனது 1993ம் ஆண்டின் நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடப்பதை போல அவர் கூற வருகின்றார். மூன்று காலங்களுமே ‘மாயை என்று கூறும் தத்துவஞானிகள் உண்டு. ஒருவரின் கடந்தகாலம் இன்னொருவருக்கு எதிர்காலம் ஆகலாம்! அனுபவம் என்பது தேர்வு முடிந்து, மதிப்பெண்கள் கிடைத்த பிறகு கற்றுக்கொள்ளும் பாடம் ஆகும். அது அடுத்தவர்களுக்குத்தான் அதிகம் பயன்பட வாய்புள்ளது. ஆனால், அவர்களின் ஜீன் எப்படி இருக்குமோ?

  பல கல்லூரிகளில் படிப்பு

  இனியாள் ஆறு கல்லூரிகளில் சேர்ந்து விலகி மீண்டும் வேறு கல்லூரியில் சேரும் படியான சூழ்நிலை நிலவியது. அவருடைய தந்தை வேளாண்மைத்துறையில் ஒரு களநிலை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். மிகவும் வசதிபடைத்த குடும்பம் என்று கூறிவிட முடியாது. ஆனால், வசதிகுறைவு என்ற உணர்வே வந்தது கிடையாது. அவ்வளவு மகிழ்வான வாழ்வு. கோவை அரசுக்கலைக்கல்லூரியில் இளங்கலை வேதியல் முதலாமாண்டை 1992ல் தொடங்கினார். அந்த வருடம்தான் பன்னிரண்டாவது முடிந்திருந்தது. ஆரம்பத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரிகான கலந்தாய்வில் இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு வேறு கல்லூரிகளில் கலை, பொறியியல் எல்லாம் சிறிது, சிறிது நாட்கள் படித்த பிறகு மீண்டும் கால்நடை மருத்துவம் கிடைத்தது அதில் சேர்ந்தார். ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு நினைவுப்பதிவுகள்.

  கோவை, கல்லூரியின் வகுப்பறையின் வடிவமைப்பு புதுமையாக இருந்தது. முதன் முதலாக, கீழிருந்து படிப்படியாக உயர்ந்து இறுதி பெஞ்சுகள் மிகவும் உயரமாக… கிட்டத்தட்ட ஆசிரியர் நின்று பாடம் எடுக்கும் தளத்தில் இருந்து சுமார் ஐந்து அடி உயரம் உள்ள கடைசி பெஞ்சை கொண்ட (ஒரு வேளை ஆங்கிலேயர் காலத்து வகுப்பறை கட்டிடமாக இருக்குமோ?) வகுப்பறைக்குள் சென்று அமர்ந்திருப்பதே… ஒரு கனவுலக சஞ்சாரம் போல இருந்தது. திரைப்படங்களில் பார்த்திருந்தாலும், தானே அதில் அமர்வது ஒரு தனி அனுபவம், அற்புதமான நினைவிலிருந்து அகலாத அனுபவம். பர்மா தேக்கு மரத்தில் செய்யப்பட்ட மர இருக்கைகளும் மேஜைகளும் எவ்வளவு முறை வேதியியல் சமன்பாடுகளைக் கேட்டிருக்குமோ? தெரியவில்லை. வகுப்புகளை நேசிக்கும் பழக்கம் அங்கிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். அதற்கும் ஒரு ஜீன்… இருக்கும் போல… பின்னாளில் இனியாள் தொலைதூர கல்வி மூலம் நிறைய படித்தார். பாடம் கேட்பதற்காகவே தான் பிறந்திருக்கிறோமோ? என்று பின்னாளில் உணர்ந்தார்.

  களவும் கற்று மறந்த கதை

  கோவை, சிங்காநல்லூர், சாந்தி தியேட்டரில் திரைப்படம் பார்க்கச் சென்ற சம்பவம் வாழ்வில் முதலும் கடைசியுமாக கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு படத்திற்குச் சென்ற அனுபவமாக இனியாளின் வாழ்க்கை வரலாற்றில் பதிவானது. அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களின் திரைப்படம் பார்க்கும் ஆர்வமோ? அல்லது அந்த வயதுக்குரிய சாகசம் செய்கின்ற துடிப்போ? ஆனால், கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக அந்த ஒரு சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பு உணர்வு மாறவே இல்லை. நாமாக நமது சிறிய சறுக்கல்களில் இருந்து கற்றுக்கொள்ளும் பாடம்… மிகவும் அர்த்தம் உள்ளது. ஜீன்களில் பதியுமோ என்னவோ?

  இந்த நிகழ்வை தன்னம்பிக்கை இதழ் கட்டுரையில் எழுதத்தான் வேண்டுமா? என்று மனது கிடந்து அடித்துக் கொண்டது. இப்படி எண்ணங்கள் தோன்றவும் ஜீன்கள் தான் காரணமா? என்னவோ? உதாரணமாக, DRD 4/7r என்பது மனித உடலில் உள்ள மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ வரிசையில் உள்ள ஒரு ஜீன் ஆகும். இந்த ஜீன் மூளையில் உள்ளே டோபமைன் என்னும் வேதிப்பொருளின் அளவை அதிகரிக்கிறது. அதன் காரணமாக, இந்த ஜீன் உள்ள மனிதர்களின் மனதில், அதிகமாக நாம் பயணம் செய்ய வேண்டும் என்கின்ற உணர்வை தூண்டுமாம். அது மட்டும் அல்ல புதிது புதிதாக ஏதாவது காரியத்தை, சாகசத்தை செய்ய வேண்டும் என்றும் DRD 4/7r ஜீன் உள்ளவர்களுக்கு  தோன்றிக்கொண்டே இருக்குமாம். இந்த மரபணு வரிசை இருந்தால்… அவர்களுக்குள் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்குமாம். அப்படி எதையோ தேடித்தான் திரைப்படங்களுக்கு இனியாள் போன்ற இளையவர்கள் செல்கின்றனரோ என்னவோ? ஆனால்… சரியான… நேரம் காலத்தில் அல்லது விடுமுறை நாட்களில் சென்றால் சரியே!

  ஜீனுக்கு தீனி போட வேண்டுமல்லவா?

  தேர்வு முடித்து எதிர்காலத்தைத் தேடும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும், கல்லூரி நடக்கும் பாட நேரத்தில் சினிமா பார்க்க செல்வது தவிர்க்க முயல வேண்டிய ஒன்று, என்று எடுத்துச் சொல்வதற்கு… இனியாளுக்கு தகுதி உள்ளது என்பதற்காக இதையும் எழுதலாம் என்றே தோன்றியது.

  காலத்தின் ஆற்றல் டாக்டர் விஜய் பிங்களே, இ.ஆ.ப.,

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த திரு விஜய் பிங்களே, புதுதில்லியில் இரயில்வே பவனில், இரயில்வே துறை அமைச்சரின் தனி செயலராக பணிபுரிகின்றார். அவரை அந்த அலுவலகத்தில் சென்று சந்திக்கும் வாய்ப்பு கடந்த 12.10.2017 அன்று கிடைத்தது.

  இரயில்வே பவனில் நுழைந்து அதன் காவல் கட்டுப்பாடுகளை கடந்து நடந்து செல்லும் பொழுது பிரமிப்பு தோன்றுகின்றது. இரயில்வே பவனின் சுவர்களை புத்தம் புது இரயில்களின் புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. துறை தொடர்பான பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன. இவரை இப்பொழுது ஏன் அறிமுகப்படுத்துகின்றோம், என்றால்… அவர் படித்து வரும் ஒரு புத்தகம்… “தி பவர் ஆஃப்நவ்” என்பது “எட்கார்ட் டால்லி” என்பவர் எழுதியது. இந்த புத்தகத்தை ஏன் அறிமுகப்படுத்துகிறோம் என்றால்… அதில் எண்ணங்கள் எப்படி, ஏன், எதற்காக, எந்நேரத்தில் ஏற்படுகின்றது? என்றும்… அவற்றுக்கான ஆயிரம் காரணங்கள் குறித்தும் விளக்கம் அளித்திருப்பார்.

  விஜய் பிங்களே… ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் செய்கின்றார். அவர் “பவர் ஆஃப்நவ்” புத்தகம் மூலம்… அந்த தருணத்தில் வாழ்கின்ற தத்துவத்தை அறிந்து கொண்டதுடன் மட்டும் அன்றி… அது குறித்து படிக்குமாறு தன் நண்பர்களை அடிக்கடி கேட்டுக் கொள்வதை கவனித்திருக்கின்றார் இனியாள்.

  இரமண மகரிஷி எண்ணங்களை மனம் தான் உற்பத்தி செய்கின்றது. தியானம் என்பது மனோலயம் அன்று மனோ நாசமே! என்று கூறுவதைத்தான் எட்கார்ட் டால்லி ஆங்கிலத்தில் சொல்வதாக கருதினார் இனியாள்.

  எண்ணங்களின் தொடக்கமே வாழ்வில் எடுக்கப்படும் தீர்மான முடிவுகளாக அமைந்து விடுகின்றன. கல்லூரியின் எந்த சம்பவத்தை எழுதுவது? என்று தொடங்கிய கட்டுரை… அமராவதி ஆறு போல… கோவை முதல் தில்லி வரை தொடர்வண்டியாய் பயணித்திருப்பதற்கு ஜீன்கள் காரணமாக இருக்கலாம்!

  துள்ளியெழும் பறவைகள் வெல்க

  நாகூர் ரூமி அவர்களின் அதே விநாடி புத்தகத்தில் தற்செயலாக எதுவுமே நடப்பதில்லை… உலகில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கின்றன. கூர்ந்து பார்த்தால் நம் கண்களுக்குத் தெரியலாம் என்று எழுதியிருப்பார். நாம் சிறிய சம்பவம் என்று நினைப்பதெல்லாம் உண்மையில் ஒரு பெரிய உதவியை செய்வதற்காக காத்திருக்கும் உதவியாக இருக்கும். அறிவிப்புகள்… என்று அடுத்த விநாடி என்னும் புத்தகத்தில் எழுதி உள்ளார்.

  ஆகவே, இனியாளுக்கு ஜீனுக்குத்தீனி தோன்றியது… அதில்… திரைப்பட நிகழ்வு வந்ததுவும் எதிர்கால நன்மைக்கே! எதிர்காலத்தில் எந்த கல்லூரியில், என்ன படிக்கப்போகின்றோம்? என்று யோசிப்பவர்களுக்கு தயது செய்து… எப்படி படிக்கப்போகின்றோம் என்றும் அதே அளவு யோசியுங்கள் என்று கேட்டுக்கொள்ள தோன்றுகின்றது. ஏனெனில் வாழ்வின் வெற்றி அதில்தான் அடங்கியுள்ளது. இனியாள் படித்த கல்லூரி படிப்பிற்கும், தற்பொழுது பார்க்கும் வேலைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. ஆனாலும், அவர் கல்லூரியில் பல தங்கப்பதக்கங்கள் வாங்கிய படிப்பு பிற்காலத்தில், அரசு பணிக்கு வர உதவியது என்றால் மிகையாகாது.

  பள்ளிக்கல்வியில் படித்து களைத்துப்போனவர்கள் ஓய்வெடுக்கும் இடமாக கல்லூரிகள் கருதப்பட்டு விடக்கூடாது. பள்ளியிலிருந்து ஓடக்கற்றுக்கொண்டு துள்ளிப்பறக்கும் எதிர்காலப்பறவைகள் வெற்றிச் சிகரத்தை தொட வாழ்த்துக்கள் கூறுகின்றார் இன்ஸ்பெக்டர் இனியாள். வெல்க!

  புதிய உயிரியல்

  நமது கட்டுரை இனியாளின் இளம் வயது நினைவுகளில் தொடங்கியது. அது ‘வருகை’ திரைப்படம் மூலம், நினைவுப்பதிவுகளை கால வரிசை மாற்றி பதிவு செய்யும் முறை குறித்து விவாதித்தது. அதன் மூலமாக கடந்த கால நிகழ்வு ஒன்றுக்கு அழைத்துச் சென்றது. அதன்பிறகு ஏன் எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதற்கு அறிவியல் பூர்வமான ஒரு ஜீன் குறித்த கண்டுபிடிப்பை தெரிவித்தது. அதன் பின்னர் தியானம் குறித்து ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரியின் கருத்துக்களோடு சேர்த்து ஒரு புத்தகத்தையும் முன் நிறுத்தியது.

  தியானம் போன்ற செயல்பாடுகளும் நேர்மறை சிந்தனைகளும் உளவியலும் உடற்செயலியலும் கலந்ததொரு கலவையாக மனித வாழ்வில் ஏற்படுத்தும் நல்ல விளைவுகளை அறிவியல் ஆராய்ந்து, அவ்வப்போது நம்பிக்கையூட்டும் ஆராய்ச்சி முடிவுகளை தருகின்றது. புதிய உயிரியல் என்று செல்லமாக அழைக்கப்படும் நம்பிக்கையின் உயிரியல் () என்று தலைப்பிடப்பட்ட புத்தகம் அறிமுகப்படுத்திய… புதிய கோணம் கவனிக்கத்தகுந்தது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றும் நாளை நமதே என்றும் உற்சாகப்படுத்தும் சொற்களுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் உள்ளதாம்.

  Biology of Belief ஐ எழுதியவர் Bruce Lipton என்ற அறிவியலறிஞர். இவர் எண்ணங்கள் ஜீன்களை மாற்றியமைக்கக்கூடும் என்று கூறி உள்ளார். ஜீனுக்குத் தீனி போடுவது போல நல்லெண்ணங்களோடு வாழ்வது நன்மை பயக்கும் என்று சொல்லி…

  தொடர் சங்கிலியாக ஜீனுக்கு தீனி போடும் எண்ணங்களை தோற்றுவிக்கும் இக்கட்டுரையை… தற்காலிகமாக இங்கு முடிக்கின்றோம்… இது தொடங்கிவைத்த எண்ணங்களை நாம் அசை போடலாம்….

  தொடரும்…

  இரத்தசோகை

  வரையறை

  இரத்தசோகை என்பது இரத்த சிவப்பு அணுக்கள் குறைவுபடும் நிலை மற்றும் ஹீமோகுளோபின் குறைவுபடுவதால் வரும் நிலையாகும். இதனால் இரத்தத்தின் பிராண வாயு எடுத்துச் செல்லும் திறன் குறைகிறது.

  காரணங்கள்

  சிவப்பணுக்கள் உற்பத்தியாவது குறைந்தாலும் அல்லது அதன் அழியும் தன்மை அதிகமாகும் போதும் இரத்த சோகை ஏற்படுகிறது.

  சிவப்பணுக்களின் உற்பத்தி குறைவு

  • சரியான உணவு ஊட்டம் இல்லாததால் சிவப்பு அணுக்கள் உற்பத்தி குறைதல் (எ.கா.) இரும்புச் சத்து குறைவு, போலிக் அமில குறைவு, வைட்டமின் பி 12, வைட்டமின் பி குறைவு.
  • தாய்ப்பாலை மட்டும் நீண்ட நாள் கொடுத்தல்.
  • குழந்தை விரும்புகின்ற உணவை மட்டும் கொடுத்தல்.
  • பாலை மட்டுமே 1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கொடுத்தல் (இணை உணவை தாமதமாக கொடுக்க ஆரம்பிக்கும்போது)
  • எலும்பு மஜ்ஜையில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி குறைவு.

  இரத்த இழப்பு

  • காயங்கள் காரணமாக இரத்த இழப்பு, இரத்த அணுக்கள் குறைவாக உற்பத்தியாதல், இரத்த அணுக்கள் அதிகமாக அழிவது, இரத்தம் உறையும் செயல்பாட்டில் குறை ஆகிய காரணங்களால் இரத்த இழப்பு ஏற்படுகிறது.
  • குடலில் கொக்கிப் புழு இருத்தல்.

  சிவப்பணுக்கள் அதிகமாக அழிதல்

  • சிவப்பணு அல்லாத புறக்காரணங்கள்
  1. மருந்துகள், இரசாயனப் பொருட்கள்
  2. நோய்த் தொற்று
  3. ஆன்டிபாடிகள் எதிர்வினை
  • சிவப்பணு குறைபாடு காரணங்கள்
  1. சிவப்பணுக்களின் மேலுறை குறைபாடுகள்
  2. குறைபாடுள்ள சிவப்பணுக்கள் உருவாதல் (சிக்கிள் செல் இரத்த சோகை, தலசீமியா சின்ட்ரோம் போன்றவை) சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோ குளோபின் உற்பத்தியாகும் அளவிற்கு அழிக்கப்படுகிறது.

  அறிகுறிகள்

  முதல்நிலை

  • அமைதியின்மை
  • சோர்வு
  • பசியின்மை
  • சக்தி குறைவு
  • தலை வலி

  பின் அறிகுறிகள்

  • கண் மற்றும் தோல் வெளிறிய தன்மையுடன் காணப்படுதல்
  • பலவீனமாக இருத்தல்
  • கல்லீரல் வீக்கம்
  • இருதய துடிப்பு அதிகமாதல்
  • படபடப்பு
  • வகுப்பறையில் தூங்குதல்
  • ஞாபக மறதி மற்றும் படிப்புத்திறன் குறைதல்
  • சுவாசம் அதிகரித்தல்
  • குறுகிய சுவாசம்
  • மண், சாக்பீஸ் போன்றவற்றைச் சாப்பிடுதல்
  • பரிசோதனை
  • இரத்த அணுக்களின் எண்ணிக்கை பரிசோதனை
  • ஹீமோகுளோபின் அளவைக் கண்டறிதல்

  இரத்த சோகை வகைகள்

  மிதமான இரத்த சோகை

  இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 8-10 கி வரை இருக்கும்.

  நடுத்தரமான இரத்த சோகை

  ஹீமோகுளோபின் அளவு 6-8 கி வரையே இருக்கும்.

  கடுமையான இரத்த சோகை

  ஹீமோகுளோபின் அளவு 6 கிராமுக்கும் குறைவாக இருக்கும்.

  1. இரத்த இழப்பினால் ஏற்படும் இரத்த சோகை

  அதிக இரத்த இழப்பு அல்லது தொடர்ந்து குறைவான இரத்தப் போக்கினால் ஏற்படுவது.

  1. இரும்புச்சத்து குறைவதால் ஏற்படும் இரத்த சோகை
  • தவறான உணவுப்பழக்கம்
  • சத்துக் குறைபாடுகள்
  1. பெர்னிஷியஸ் இரத்த சோகை

  இரைப்பையின் பரைட்டல் செல்கள் (Parietal cells) உற்பத்தி (Intrinsic factor) உட்பொருள் குறைபடுவதால் குடலிலிருந்து வைட்டமின் பி12 இரத்தத்தில் உறிஞ்சப் படுவதில்லை.

  1. சிக்கில் செல் இரத்த சோகை

  இது ஒரு பரம்பரை நோய். இரத்த ஹீமோகுளோபின் அமைப்பு மாறி விடுவதால் அதிகளவு இரத்த அணுக்கள் அழிக்கப்படுகிறது.

  1. ஏப்பிளாஸ்டிக் இரத்த சோகை

  இரத்த அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றது. எலும்பு மஜ்ஜை அழியும் போது அல்லது ஏதேனும் குறைபாடு ஏற்படும் போது இரத்த அணுக்களின் உற்பத்தி குறைந்து இரத்த சோகை ஏற்படுகின்றது.

  1. மெகலோபிளாஸ்டிக் இரத்த சோகை

  இது வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் குறைவதால் ஏற்படுகின்றது. இந்த வைட்டமின்கள் டி.என்.ஏ.உருவாக மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. இதன் குறைவினால் ஒரே மாதிரியான எலும்பு மஜ்ஜை ஏற்பட்டு இரத்த சோகை உண்டாக்குகிறது.

  1. இரத்த சிவப்பு அணுக்கள் குறைபாடு இருந்தால் மிக விரைவில் அழிக்கப்படுகின்றது.

  சிகிச்சை முறைகள்

  1. இரத்த போக்கினால் ஏற்படும் இரத்த சோகை

  இரத்தம் ஏற்றுதல் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகள்

  1. இரும்புச்சத்து குறைவினால் ஏற்படும் இரத்த சோகை – தீவிர நிலைக்கேற்ப கீழ்கண்டவாறு சிகிச்சை தேவை.

  (i).  மிதமான இரத்த சோகை என்றால்,

  • குழந்தைக்கு இனிப்புக்காக வெல்லம், கருப்பட்டி, தேன், கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை உபயோகித்தல்.
  • இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடுதல்.

  (ii).  நடுத்தரமான இரத்த சோகை என்றால்,

  • இரும்புச்சத்து மாத்திரைகள், மருந்துகள் கொடுத்தல்.
  • குடலில் உள்ள புழுக்களை மாத்திரைகளைக் கொடுத்து அகற்றுதல்.
  • உணவுப் பண்டங்களை இரும்புப் பாத்திரத்தில் சமைத்தல்.

  (iii).  கடுமையான இரத்த சோகை என்றால்,

  இரத்தக்குழாய் மற்றும் தசைகளின் வழியாக இரும்புச்சத்து மருந்து மற்றும் இரத்தத்தை செலுத்துதல்

  இரும்புச்சத்து மாத்திரைகளைக் கொடுக்கும்போது, ஏற்படும் விளைவுகள்   தவிர்க்கும் முறைகள்

  1. பற்களில் கறை படிதல் மருந்தை உறிஞ்சி குழாய் மூலம் குடித்தல், மருந்தை சாப்பிட்ட பின் வாய்க் கொப்பளித்தல்
  2. மலச்சிக்கல் நார்ச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுதல் (வாழைப்பழம், வாழைத் தண்டு)
  3. மலத்தின் நிறம் இது இயல்பாக ஏற்படும் காப்பி நிறமாக மாறும் ஒன்று
  1. பெர்னிஷியஸ் இரத்த சோகை

  வைட்டமின் பி12 உள்ள உணவு பொருட்கள் மற்றும் ஊசிகள் போடுவதன் மூலம் சரி செய்யலாம்.

  1. சிக்கில் செல் இரத்த சோகை

  இரத்தம் செலுத்துதல் மற்றும் போலிக் அமிலங்கள் கொடுக்கலாம்.

  1. ஏப்பிளாஸ்டிக் இரத்த சோகை

  எலும்பு மஜ்ஜை மாற்றுவதின் மூலமும், நோய் எதிர்ப்பு சக்தியை மருந்தின் மூலம் குறைப்பதன் மூலமும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

  1. மெகலோபிளாஸ்டிக் இரத்த சோகை

  வைட்டமின் பி12 போலிக் அமிலம் தினமும் 1 மி.கி. மற்றும் சத்துள்ள உணவு கொடுப்பதின் மூலம் சரிசெய்யலாம்.

  இரும்புச்சத்து உணவுகள்

  அ.  காய் மற்றும் கீரை வகைகள்

  • அரைக்கீரை
  • வெந்தயக்கீரை
  • புதினா
  • சோயா பீன்ஸ்
  • முருங்கைக்காய்

  ஆ.  தானிய வகைகள்

  • கம்பு
  • சோளம்
  • முளைவிட்ட கோதுமை
  • கேழ்வரகு

  இ.  பழங்கள்

  • பேரீச்சம்பழம்
  • உலர்ந்த திராட்சை

  ஈ.  இனிப்பு வகைகள்

  • பனைவெல்லம்
  • தேன்

  உ.  பிற வகைகள்

  • நண்டு
  • ஈஸ்ட்
  • இறைச்சி வகைகள் (ஈரல்)

  முடிவுரை

  இரத்த சோகை வராமல் தடுப்பதற்கு இரும்புச்சத்து நிறைந்த உணவினையும், காய்கறிகள், கீரைகள் மற்றும் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்யப்படும் உணவுகளையும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.