Home » Articles » உனக்குள் இருக்கும் உன்னை நம்பு !

 
உனக்குள் இருக்கும் உன்னை நம்பு !


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

என்னால் முடியாவிட்டால், வேறு யாரால் முடியும்?

இப்போது முடியாவிட்டால் வேறு எப்போது முடியும்?

இந்த 2 கேள்விகளைக் கேட்பவர்கள் மற்றவர்களை விட விரைவில் முன்னேறவும், சாதிக்கவும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் வாழ்கிறார்கள்.

இதற்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.

‘உனக்குள் இருக்கும் உன்னை நம்பு’

எனக்குள் நானா?

வித்தியாசமாக இருக்கிறதல்லவா?

உன்னையறிந்தால், உலகத்தில் நீ சாதிக்கலாம்.

வாழ்க்கை என்பது;

தேடிச் சோறு நிதம்தின்று- பல சின்னஞ்சிறு

கதைகள் பேசி-மனம்

வாடித் துன்பமிக உழன்று- பிறர் வாடப் பல

செயல்கள் செய்து நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி- கொடுங் கூற்றுக்கு

இறையெனப்பின் மாயும் பல

வேடிக்கை மனிதரைப் போல

என்று பாடிய முண்டாசுக் கவிஞன் பாரதியார் கூறியதல்ல.

உள்ளத்திலே கனலாய் மையம் கொண்டுள்ள நற்பண்புகளின் அடிப்படையில், சமுதாய நலனுக்காக, நாம் வாழும் காலத்திலே நம்முடன் வாழ்கின்ற உடன்பிறவா சகோதார சகோதரிகளின் வாழ்க்கை சிறப்புற அமையவும், வேறு யாராலும் பாதிப்புக்குள்ளாகாதவாறு பாதுகாப்புடன் வாழும் சூழலை வழங்கும் மக்கள் நல அரசு அமைய வாக்குரிமையைப் பயன்படுத்துவதுமே உனக்குள் இருக்கும் உனது வெளிப்பாடாகும்.

வேலியில் சென்ற ஓணானை எடுத்து பைக்குள் வைத்து வீட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், எப்படி இருக்கும்?

இன்று மக்கள் அனுபவிக்கும் எல்லாவற்றுக்கும் காரணம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.

தற்காலிக சுய லாபத்துக்காக உரிமைகளை விற்ற கதை தான்.

சரி! இனி என்ன செய்வது?

பக்கத்து நாடுகளைப் பாருங்கள் என்ற நிலை மாறி, பக்கத்து மாநிலங்களைப் பாருங்கள் என்று ஆதங்கத்துடன் சொல்லுமளவு கடந்த அரை நூற்றாண்டாக நாம் சுயத்தை இழந்து, தனி மனித வாழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து விட்டோம்.

மக்களுக்கும் தைரியமில்லை இவர்களால் தேர்வுசெய்யப்பட்ட ஆட்சியாளர்களுக்கும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை.

குடிநீர், கழிவு நீர், சாலை, மின்சாரம், கல்வி, தெருவிளக்கு, குப்பை நீக்கம் ஆகிய வசதிகளில் உங்கள் பகுதி எந்த நிலையில் இருக்கிறது?

என்றாவது சிந்தித்திருப்போமா? சிலர் எண்ணியிருக்கலாம். நமது தவறான வாழ்க்கை முறையால் இயற்கை வறட்சி என்ற தண்டனையை வழங்கியுள்ளதைக் கண்டும் காணாமல் இருப்பது நியாயமா?

இளைஞர் சக்தி, இன்றைய வறட்சியில் மேட்டூர் அணையைத் தூர்வார முன் வந்திருப்பபது, வருண பகவானையே சிந்திக்க வைத்துள்ளது.

உங்களளது கண்டு கொள்ளாத நிலையைக் கண்டு கொண்ட அரசாங்கம்  உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் பெயரில் கடன் வாங்கி, தமிழ்நாட்டின் கடன் தொகையை சுமார் மூன்று  லட்சம் கோடிகள் என உயர்த்தி சாதனை படைத்துள்ளது.

இந்தக்கடன் எதற்காகப் பெறப்பட்டது? மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் செலவினங்களுக்காகத் தான் என அரசின் வரவு – செலவுத் திட்டம் தெரிவிக்கிறது.

இது சரிதானா? என ஆய்வு செய்வது வரவேற்கப்படக் கூடிய செயல்தான்.

நடந்ததை யாராலும் மாற்ற முடியாது. அதிலிருந்து கற்றுக் கொள்ள முடியும். எனவே, இப்போதாவது உனக்குள் இருக்கும் உன்னை நம்ப முடிவு செய்து செயல்படு.

இன்று தமிழ்நாடு பரிதாபமாகத்தான் உள்ளது. தேவை கறை படியாத கரங்களும், “மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற பொது நல நோக்கும் வளைக்கும் உள்ள இளைஞர் படைதான்.

சுவாமி விவேகானந்தர், நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் கூறியது:

இளைஞர்கள் சினிமா, அரசியல் இரண்டையும்  தவிர்க்க வேண்டும்.

நம் தேசத் தந்தை மகாத்மாகாந்தி நம் முன்னேற்றத்துக்கு கிராமமே அடிப்படை. கிராம நிர்வாகத்தில் சேவை மனப்பான்மையுடன் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்றார்.

இதோ, சரியான தருணம். இளைஞர்களுக்காகத் தாயராகிவிட்டது. உங்களிடமுள்ள நேர்மை, நாணய உணர்வுகளுடன் சேவைக்கான வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

உங்கள் கண்முன்னால் உங்கள் உரிமை பறிபோவதை இனியும் அனுமதிக்கக் கூடாது. நீங்கள் வசிக்கும் தெருவில் நாட்டு நலனில் அக்கறையுள்ள சிலரை இனம் கண்டு ஒன்று சேருங்கள்.

மக்கள் நலத்திட்டங்கள் உங்கள் தெருவில் செயல்பாட்டுக்கு வரும்போது, எச்சரிக்கையாக, விழிப்பு நிலையிலிருந்து சரியான விபரங்கள் பெற்று கண்காணிக்க வேண்டும்.

வார்டு மக்கள் பிரதிநிதிகளுடன் இணக்க நிலையில் உங்கள் தெருவுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் விபரம் கூறி, அதைப்பெற வலியுறுத்த வேண்டும்.     புழுக்கள் கூட, ஊசியால் குத்தினால் நெளிகிறது.

காய்ந்த சருகுகள் கூட, அதன் மீது நடந்தால் சப்தமிடுறது.

நீங்களென்ன, சருகுகளை விட, புழுக்களை விட தாழ்ந்தவர்களா?

எதையும் சாதிக்கும் மனோசக்தி அளவில்லாமல் உங்களுக்குள் நிரம்பியுள்ளது. நியாயமான செயல்களுக்கு, ஒத்த கருத்துடைய இளைஞர் பெருமக்கள் ஓடிவரக்காத்துள்ளனர்.

உங்களுக்குள் இருக்கும் நீ எப்படிப்பட்டவர் எனக் கண்டுபிடி.

நீங்கள் அனைவரும் நொந்து கொண்டு, நடக்கின்ற அநியாயமான நிகழ்வுகளை  ஏற்றுக் கொண்டு வாழ்வதற்காகப் பிறக்கவில்லை என்பதை உறுதியாக நம்புங்கள்.

அவிழ்த்துச் சிதறிய நெல்லிக்காய்களாக இறைந்துள்ள நிலையை நீக்கி,  ஒன்று சேரும் மனநிலைக்கு வரவேண்டும்.

வாய்ப்பை உருவாக்கி, தெரு மக்களுக்கு, அத்தொகுதியில் சேவை செய்யக் கூடிய வாய்ப்பை, தேர்தல் மூலம் பெறவும் ஆராய்ந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

மயக்க நிலை முடியும் காலம் நெருங்கி விட்டது. மயங்கிக் கிடப்போரும், நம் உடன் பிறவா நல்ல அன்பர்களே என்று  அவர்களது குடும்பத்தார் மூலம் உங்கள் சேவைக்கான அங்கீகாரத்தைப் பெற முயல வேண்டும்.

தவறு கண்ட இடத்திலே, சுட்டிக்காட்டும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு குச்சியை எளிதில் உடைத்து விடலாம். ஆனால், பல குச்சிகள் சேர்ந்த கட்டை உடைப்பது மிகவும் சிரமம் என்பதை மறந்து விடாதீர்கள்.

விமான நிலையம் சொல்லும் பாடம். ரன்வேயில் ஓடுகின்ற விமானம், ரன்வே முடியுமிடத்துக்கு சற்று முன்னர்தான் மேலெழுந்து ஆகாயத்தில் பறக்கிறது.

முயற்சியில் தோல்வி என்றால் துவண்டு விடக்கூடாது. இடைவிடா முயற்சி ஒன்றே நம் துயரோட்டும். தோல்வி தரும் பாடங்களை விருப்பத்துடன் ஏற்று, தேவையான மாற்றங்களுடன் மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிப்பதைக் கடமையாகக் கருத வேண்டும்.

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திமிருந்து சுதந்திரம் பெறத் தமது சொத்து, சுகம் அனைத்தையும் இழந்தவர்கள் கணக்கிலடங்காதவர்.

சிறைகளில் அவர்கள் அனுபவித்த  கொடுமைகள் கல் நெஞ்சையும் கரைக்கும். அந்தமான் தீவிலுள்ள செல்லுலார் சிறையில் நம் முன்னோர்கள் அனுபவித்த துன்பங்கள் அளவில்லாதவை.

இன்று தமிழ் நாட்டில் ஏராளமாக இழந்து விட்டோம். இந்திய அரசியல்  நிர்ணய சட்டம் கூறும் உரிமைகளை அனுபவிப்பது கூட சிரமமே.

வேதாத்திரி மகரிஷி சொன்னது போல், சில சுயநலவாதிகள் ஒன்று சேர்ந்து அரசியல் கட்சி என்ற போர்வையில்  மக்களைக் காயடித்து வருகின்றனர்.

சட்டங்களை இயற்றுவோரும், அதை அமல்படுத்துவோரும், சுயநலத்துக்காக அச்சட்டங்களை மீறுவது தொடர்கதையாகி விட்டது.

இந்த அராஜகங்களை மாற்ற இளைஞர்கள் செய்ய வேண்டியது, உங்களுக்குள் உறைந்துள்ள உங்களை அறிந்து, நம்பி, அதன் வழிகாட்டுதலில் செயல்படுவதே!

செயல்படுவோம்! சந்தோஷமாக வாழ்வோம்!!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2017

இங்கு இவர் இப்படி
சாதிக்க வா தோழா!
எங்கும் எதிலும் ‘ஆன்லைன்’!
தடைகளைக் கண்டு தயங்காதீர்கள்
கதை + விதை = கவிதை
கவிக்கோ சிற்பியின் பவளவிழா ஒலிச்சிதறல் ஒன்று
இளமை மாறாத இளமையுடன்…. சொல்லாமல் சொல்கிறேன்
வெற்றி உங்கள் கையில்- 41
கண்ணில் மின்னல்
ஸ்ட்ரெஸ்சும், டென்ஷனும்
நவீன ஜீனோமிக்ஸ் ( பகுதி 4)
உனக்குள் இருக்கும் உன்னை நம்பு !
யோகமும் மனோபாவமும்
சீதபேதி- அமீபியாசிஸ் (Amebiasis)
கற்பனை சக்திக்குள்தான் எத்தனை அற்புதங்கள்
தன்னம்பிக்கை மேடை
உதவிக்கு கரம் நீட்டு உழைப்புக்கு வரும் பாராட்டு
உள்ளத்தோடு உள்ளம்