Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி?

எந்த உரிமையை வெல்ல வேண்டும் என்றாலும் இப்போது போராடி தான் வெல்ல வேண்டியுள்ளது. இந்த நிலை முறைதானா?

ரேணுகாதேவி, எழுத்தாளர்

கன்னியாகுமரி மாவட்டம்

எந்த உரிமையை வெல்ல வேண்டும் என்றாலும், இப்போது போராடித்தான் வெல்ல வேண்டியுள்ளது. இந்த நிலை முறைதானா? என்ற கேட்டுள்ளீர்கள். இந்த நிலை முறையற்றது என்று ஒரே வரியில் பதில் தந்துவிடலாம். ஆனால் அது, இந்த விவகாரத்தில் அடங்கியிருக்கும் பல பிரச்சனைகளை வெட்ட வெளிச்சமாக்காது. ஆகையால் விரிவான விளக்கம் தர வேண்டியுள்ளது.

மிக உயர்ந்த மனித உரிமைகைளப் போராடிப்  பெற்ற நாடு நம்நாடு. ஆங்கிலேயரின் ஆட்சியை அகற்ற நடந்த அறப்போராட்டங்களில் பலர் உயிர் இழந்தனர், சிலர் உடமையைத் துறந்தனர், பலர் வாழ்க்கையையே தொலைத்தனர். இறுதியில் சுதந்திரம் பெற்றோம். ஆனால், சுதந்திரப்போராட்டம் முறையானதுதான். அது பெரிய பிரச்சனை, அனைவரும் ஒன்றுசேர்ந்தால் மட்டுமே வென்றெடுப்பது சாத்தியம் என்ற நிலை இருந்தது. ஒன்று பட்டனர், வென்று காட்டினார்கள் நமது முன்னோர்கள். அவர்களைப் பாராட்டுவோம், அவர்களை நன்றியுடன் நினைவு கூறுவோம்.

நியாமா போராட்டம்?

ஆனால், இன்று எதற்கெல்லாம் போராட வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. அரசாங்கத்தின் எந்த ஒரு நியாயமான திட்டத்தையும் நிறைவேற்ற முடிவதில்லை. எல்லாத் திட்டங்களுக்கும் எதிராகப் போராட்டம். திட்டம் என்றாலே போராட்டம் என்பதே சிலரின் கொள்கையாகி விட்டது. மின்சாரம் நாட்டின் கட்டமைப்பு, அது அடிப்படைத் தேவை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மின்சாரத்தை தயாரிக்க ஒரு அணுஉலையை அமைத்து, மின்சாரம் எடுக்கும் நிலையில் போராட்டம் வெடிக்கிறது. அணு மின்சாரம் என்பது அனைத்து ரக மின்சாரத்திலும் பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் அனைத்து விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள். பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களும் கூறுகிறார். இருந்தாலும், போராட்டம் பல மாதங்கள் தொடர்கிறது. இதனால், மின் உற்பத்தி செய்வது தாமதமாகிறது. மின் திட்ட செலவு பலமடங்கு ஆகிவிடுகிறது. இது ஒருவிதப்போராட்டம்.

இன்னொரு ஊருக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல அந்த ஊரார் எதிர்க்கிறார்கள். போராட்டமும் நடத்துகிறார்கள். அப்படி ஒரு போராட்டம் நடந்த ஊரில் கலவரம் வெடித்து துப்பாக்கி சூடும் நடந்தது. இதனால், குடிநீரை எடுத்துச் செல்லும் திட்டம் கைவிடப்பட்டது. பைப்புகள் மட்டும் அங்கே இன்றும் கிடக்கின்றன. இன்றுவரை தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள் 15கி.மீ., தூரத்தில் உள்ள அந்த ஊர் மக்கள்! ஒரு விபரீத போராட்டத்தின் விளைவு தகித்த வாய்க்கு தண்ணீர் இல்லை!.

தொழில்களை நசுக்கும் போராட்டம்

தொழிற்சாலையில் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடக்கிறது, அது பல நாட்கள் நீள்கிறது. தொழிலாளி கேட்ட ஊதிய உயர்வு தருவதாக இருந்தால் தொழிற்சாலை மூடும் அபாயம் ஏற்படும் என்று நிர்வாகம் எச்சரிக்கிறது. இருந்தாலும் போராட்டம் தொடர்கிறது. அதுவே வன்முறையாக மாறுகிறது. கோவையில் ஒரு தொழிற்சாலையில் நடந்த வன்முறையில், நிர்வாக உயர் அதிகாரியே கொல்லப்பட்டார். இது போராட்டங்களின் மிக மோசமான ஒரு விளைவு. இது போன்ற பலபோராட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்ததையும், ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலை செய்த பல பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டதையும், அதற்கு பின்னர் அந்த தொழிலாளர்கள் திண்டாடியதையும், நீங்களே கண்கூடாகப் பார்த்து விட்டீர்கள்.

தொழிலாளர் போராட்டம் பற்றி பேசும்போது, தொழிற்சாலை முதலாளிகள் அனைவரும் நீதிமான்கள் என்றோ, அவர்கள் கூலியை சரியாகத்தான் கொடுப்பார்கள் என்றோ நான் சொல்லவில்லை. தொழிலாளிக்கு நியாயமான ஊதியம் தராமல், சுய ஆடம்பரங்களில் வாழும் முதலாளிகளாலும் பல தொழில்கள் அழிந்துவிட்டன.

மனைநிலை மாற்றம் வேண்டும்

சுதந்திரத்திற்காகவும், பெண் கல்விக்காகவும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், மூடப்பழக்கங்களை ஒழிக்கவும் போராடிய நிலை மாறி இன்று குடிதண்ணீர் வரவில்லை என்றால் சாலையை மறிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. குடிதண்ணீர் மக்களின் உரிமைதான், ஆனால் சாலையில் பயணிப்பது மற்றவர்களின் உரிமை இல்லையா? மருத்துவமனை, அலுவலகம், வீடு என்று போக வேண்டியவர்களைப் போராட்டக்காரர்கள் நடு வீதியில் தடுத்து நிறுத்தி அராஜகம் செய்வது எந்த வகையில் நியாயம்..?

பல இலட்சம் ரூபாய் செலவு செய்து MBBS படித்த ஒரு மருத்துவரை உருவாக்குகிறது ஏழைமக்களின் அரசு. அந்த மாணவனுக்கு கல்வி இலவசம், ஆனால் அதற்கான பணம் மக்கள் வரிப்பணம். இந்த மாணவர்களில் பலர் கிராமப்புற மாணவர்கள்தான். இவர்கள் ஒரு ஆண்டுகாலம் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்கிறது அரசு. உடனே மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், பணிகிறது அரசு. கிராமங்களில் மருத்துவர்க்ள போதுமானதாக இல்லாமல் உயிரிழக்கிறார்கள். MBBS படிப்புதான் உண்மையான  மருத்துவப்படிப்பு என்பதால் விஞ்ஞான மருத்துவ சிகிச்சை இல்லாத கிராமத்தில் பாதிப்பு அதிகமாகவே இருந்து விடுகிறது. இதுவும் உரிமைக்கான போராட்டம் என்கிறார்கள் சிலர்.

ஆக, எந்த உரிமைக்காகப் போராடுகிறோம் என்பது ஆராய வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் நடந்து விட்ட பல போராட்டம் ஒரு நல்ல காரணத்திற்காக நடைபெறவில்லை. அதேபோல்,  அப்படி போராடினாலும் அந்த வெற்றியால் எந்த பயனும் இல்லை. இந்த நியாயமில்லாத போராட்டங்களால் ஒரு தொழிற்சாலை வருவதும், வேலை வாய்ப்புகள் உருவாவதும் நின்று போகிறது. முறையாக இயங்கிய தொழிற்சாலை மூடப்படுகிறது. தொழிலாளி வேலை செய்யாமல் இருப்பதால் உற்பத்தி தடைபடுகிறது. நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பிக்கிறது. இதன் விளைவாக கொரியா நாட்டு மோட்டர் சைக்கிலும், ஜப்பான் நாட்டு கார்களையும், சீனா நாட்டு பர்ணிச்சர்களும் வந்து இறங்குகின்றன. அதை நாம் வாங்கி வெட்கமில்லாமல் பயன்படுத்துகிறோம். பிற நாட்டு பொருட்களை நம்பி வாழ்ந்து பழகிவிட்டோம்.

மாணவர் போராட்டம்

மாணவர்கள் போராட்டத்தில் குதித்து உரிமைகளை வென்றெடுத்தார்கள் என்று பெருமையாகப் பேசப்படுகிறது. ஆனால், மாணவர்கள் கடமை என்ன? அவர்கள் கல்வி கற்க வேண்டும்.  தொழில் நுட்ப வல்லுநர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், நிர்வாக அதிகாரிகளாகவும் வரவேண்டும். அதற்கு பதில் அவர்கள் போராட்டம் நடத்தச் சென்று விட்டால் அவர்களால் எப்படி கல்வி கற்க முடியும். அவர்கள் சில நாட்கள் தானே போராட்டத்தில் வீணடித்தார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அவர்கள் கற்கும் உயர்கல்வி இன்று மிகவும் தரம் தாழ்ந்து கிடப்பதாகவே கல்வியாளர்களே கவலைப்படுகிறார்கள். இந்த தருணத்தில் அவர்களது பொன்னான நேரத்தை இப்படி வீணடிக்கலாமா..? அதுவும் அவர்கள் போராடும் காரணத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள்? அறிவை வளர்க்க போராடவில்லை, அறிவியலை வளர்க்க போராடவில்லை, தொடர்புத் திறனை வளர்க்க போராடவில்லை, செயல்திறனை வளர்க்க போராடவில்லையே! அவர்களுக்கு சற்றும் சம்மந்தமில்லாத எதற்கோ போராடுகிறார்கள்.

ஏன் போராட்டங்கள்?

இறுதியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். உயர்ந்த நோக்கத்திற்காக போராட்டங்கள் நடப்பது நல்லது. ஆனால், இன்று நடக்கும் பல போராட்டங்கள் தேவையில்லாதவை, அதோடு மிகவும் ஆபத்தானவை. பெரும்பாலும் போராட்டங்கள் பொய்யான தகவல்களை உண்மையாகச் சித்தரித்து, ஊதிப்பெரிதாக்கி, மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களைக் கோபமடையச் செய்து சில விஷமிகள் பின்னணியில் இருந்து நடத்தும் போராட்டமாகத்தான் இருக்கிறது. வளர்ந்து விட்ட நாடுகளான டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மக்கள் உரிமைக்காகப் போராடுவது இல்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. ஏழ்மை, கல்வியின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமுதாய ஏற்றத்தாழ்வுகள், மோசமான நம்பிக்கை முறை, பரஸ்பர சக மனிதன் மீது வெறுப்பு, பெண் அடிமைத்தனம் போன்ற பிரச்சனைகள் இன்னும் இருப்பதால்தான் இந்த போராட்டங்கள் நம் நாட்டில் நடைபெறுகிறது என்று எனக்குப்படுகிறது.

முடிவு

உரிமைக்காக போராடும் நாம் நமது கடமைகளையும் உணர்ந்துவிட்டால் காலப்போக்கில் தேவையில்லாத போராட்டங்களை சம்மந்தமில்லாதவர்கள் செய்யாமல் இருப்பார்கள். போதுமான உணவு, குடியிருக்க வீடு, உடுக்க உடை, குடிக்க தண்ணீர், ஒரு நல்ல வேலை, நியாயமான சம்பளம், எதிர்கால நம்பிக்கை, பாதுகாப்பு என்பவை இல்லாதவரை நமது நாட்டில் இதுபோன்ற உரிமைப் போராட்டங்கள் நடத்த மக்களுக்கு நேரம் இருக்கும். எனவே, இந்த தேவைகள் அனைத்தையும் நமது மக்களுக்குப் பெற்றுத்தருவதுதான் இன்றைய இளைஞர்களின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, போராட்டங்களை நடத்துவது அல்ல. போராட்டங்களை நடத்தி அரசை பணிய வைப்பதால் நடக்கவிருந்த ஓரளவு முன்னேற்றம் கூட தடைபடும்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2017

இங்கு இவர் இப்படி
சாதிக்க வா தோழா!
எங்கும் எதிலும் ‘ஆன்லைன்’!
தடைகளைக் கண்டு தயங்காதீர்கள்
கதை + விதை = கவிதை
கவிக்கோ சிற்பியின் பவளவிழா ஒலிச்சிதறல் ஒன்று
இளமை மாறாத இளமையுடன்…. சொல்லாமல் சொல்கிறேன்
வெற்றி உங்கள் கையில்- 41
கண்ணில் மின்னல்
ஸ்ட்ரெஸ்சும், டென்ஷனும்
நவீன ஜீனோமிக்ஸ் ( பகுதி 4)
உனக்குள் இருக்கும் உன்னை நம்பு !
யோகமும் மனோபாவமும்
சீதபேதி- அமீபியாசிஸ் (Amebiasis)
கற்பனை சக்திக்குள்தான் எத்தனை அற்புதங்கள்
தன்னம்பிக்கை மேடை
உதவிக்கு கரம் நீட்டு உழைப்புக்கு வரும் பாராட்டு
உள்ளத்தோடு உள்ளம்