– 2017 – May | தன்னம்பிக்கை

Home » 2017 » May

 
 • Categories


 • Archives


  Follow us on

  இங்கு இவர் இப்படி

  சிலம்பம் சந்திரன்

  உலக சிலம்பாட்டம் சங்கம், மாவட்ட தலைவர்

  கோவை

  தமிழர்களின் வரலாறு வீரத்தால் நிரம்பி இருப்பதை சங்ககாலம் தொட்டு இக்காலம் வரை பல வரலாற்றுச்சான்றுகள் இலக்கியங்களில் காணப் பெற்றுள்ளது. ஆடைகளின்றி அலைந்து திரித்து காடுகளிலும் மேடுகளிலும் நாடோடியாய் வாழ்ந்து வந்தார்கள் மனிதர்கள். விலங்கோடு விலங்காக வாழ்நத மனிதர்கள் மிருகங்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள சில தற்காப்பு முறைகளைக் கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். வெறும் கையால் அடித்தும், கூர்மையான கல்லைக் கொண்டும் தாங்கியும் கம்பு முதலான கருவிகளைக் கொண்டும் தங்களைப் பாதுகாத்தும் வேட்டையாடியும் வந்தார்கள்.

  வீரத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர்கள் தமிழர்கள். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் தமிழரின் அடையாளம். காதலானாலும் சரி, மோதலானாலும் சரி, நேர்ருக்கு நேர் எதிர் கொள்வது தான் பழக்கம் என்று நாம் படிக்காத காவியமல்ல, பார்க்காத ஓவியமல்ல, தமிழர்களுக்கே உரித்தான எத்தனையோ வீர விளையாட்டுகள் இருந்து வந்தாலும், நீட்டமான கம்மை புரட்டிப் போட்டு பார்ப்பவருக்கு சிந்தை கலங்கும் மண்ணின் மரபு மானசீகமாக மிளிர, ஆடுகளம் புழுதி பறக்க ஆடும் ஆட்டமே சிலம்பாட்டம். கிராமபுறத்தில் இந்த ஆட்டத்தை கம்பு சுற்றுதல் என்றும் அழைப்பர். பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த வீர விளையாட்டை பழமை மாறாமல் பயிற்றுவித்து வருகிறார் சிலம்பம் சந்திரன் அவர்கள், அவரின் நேர்முகம் இனி உங்களுக்காக…

  விவசாய பூமியான பொள்ளாச்சி அருகில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு சிலம்பாட்டத்தின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அதற்கு காரணம் எங்கள் ஊரில் ஒரு சிலம்பாட்ட ஆசான் இருந்தார். அவரின் அணுகுமுறையும் சிலம்பு சுற்றும் விதமும் என்னையும் என்னைப் போன்ற உள்ளவர்களையும் பெரிதாகக் கவர்ந்தது. நாமும் இவரைப் போன்று வர வேண்டும். இந்த சிலம்பாட்டத்தில் கால் பதித்து சாதனைப் புரிய வேண்டும் என்று நினைத்தேன். கடின பயிற்சியும் விடாபிடியான முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம் அப்போது எனக்குத் தோன்றியது.

  ஊர்த்திருவிழாவாக இருந்தாலும், மற்ற விழாக்கள் எதுவாக இருந்தாலும் சரி அதில் கலந்து கொள்வேன். மக்களிடையே என்னுடைய கலைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஆயக்கலைகள் 64 ல் ஒன்றாக இருந்து வந்து இந்த சிலம்பாட்டக்கலை கால மாற்றத்தின் காரணமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. நாம் முன்னோர்கள் காட்டிகாத்த இந்த அரிய கலையை காப்பற்ற வேண்டும் என்று எண்ணினேன்.

  இதனால் என்னிடம் வரும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுத்து வருகிறேன். இந்த கலை ஒரு அரிய பொக்கிஷம். இதை வெறும் விளையாட்டாகப் பார்க்காமல் அழித்து வரும் ஒரு கலை மீட்டுருவாக்கம் செய்ய ஒரு விழிப்புணர்வாகப் பார்க்க வேண்டும் என்று தான் மாணவர்களிடம் நான்  சொல்வேன்.

  நான் கோவையில் அரசுத்துறை அச்சகத்தில் பணியில் பணியாற்றிக்கொண்டிருந்தாலும், சிலம்பாட்டத்தை இளைஞர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்பதில் பெரும் அக்கரை எனக்கு இருக்கிறது. வீரமாருதி என்ற பயிற்சி மையத்தை நிரூவி இலவமாகப் பயிற்சி அளித்து வருகிறேன். இதுவரை இந்த பயிற்சியின் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவர்களை உருவாக்கியிருக்கிறேன்.

  என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் கடல் தாண்டியும் கண்டங்கள் தாண்டியும் இந்தோனிஷியா, ஐயர்லாந்து போன்ற நாடுகளில் தமிழ் மண்ணின் பெருமையை நாடறிய செய்ய பல வெற்றிகளைக்குவித்து பதக்கங்களையும் பாராட்டுகளையும் பெற்று சாதித்திருக்கிறார்கள் என்பது இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்ள கடமைப்படுகிறேன்.

  தற்போது உலக சிலம்பாட்ட சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராக இருந்து வருகிறேன். இந்தக்கலையின் சிறப்பம்சம் என்னவென்றால், குரு வணக்கத்துடன் தொடங்கப்படும் இந்த சிலம்பாட்டத்தில் தெக்கன்களரி, வாள்வீச்சு, சிறுதாக்குச்சி, நெடுங்கம்பு, கைப்போர், இரட்டைச்சுருள் போன்ற பல வகை உண்டு. தேகப்பயிற்சியுடன் யோகப் பயிற்சியும் தரும் இந்த சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்வதன் மூலம் தேகம் வலுப்பெறுவதுடன் மனதும் ஒரு நிலைப்படுகிறது. இதனால் படிப்பில் மட்டுமல்லாமல் பண்பாட்டிலும் சிறந்து விளங்க முடிகிறது என்று என்னிடமே இக்கலையை கற்றுக் கொண்ட மாணவர்கள் கூறுகிறார்கள்.

  தற்காப்புக்கலை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படுகிறது. பாதுகாப்பு குறைந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், இந்த தற்காப்புக்கலையை கற்றுக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடலையும், அசாதாரணமான தைரியத்தையும் கொண்டு தனியாக எதையும் சாமாளித்துக் கொள்ள முடியும் என்பது இக்கலையின் கூடுதல் பலம்.

  என்னுடைய சேவையைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது, செலண்ட் ஆப் சிலம்பம் விருது போன்ற விருதுகள் பெற்றிருக்கிறேன்.

  தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதபடும் இந்த சிலம்புக்கலையை அழியாக்கலையாக கொண்டு வர வேண்டும். எம் இனத்தின் தமிழ் மாமுனி அகத்தியர் அருளிய இந்தக்கலையை என் இறுதி மூச்சு உள்ள வரை இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுப்பேன் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

  மரபுக்கலையை கட்டிக்காத்து, இதுவரை பல ஆயிரகணக்கான மாணவர்களுகக்கு இந்தக்கலையைக் கற்றுக் கொடுத்துவரும் வீர மாருதி பயிற்சிப் பள்ளிக்கும், ஆசிரியர் சந்திரன் அவர்களையும் மனதாரப் பாராட்டலாம்.

  பாரம்பரிய கலைகள் பல மறைந்து வரும் இத்தருணத்தில் இவரைப் போன்ற சிலர் இன்னும் இம்மண்ணில் இருப்பதால் தான் இன்னும் இக்கலை மாறாமல் இருக்கிறது. மேலும் இவர்களுக்கு உரிய உதவிகளைச் செய்து ஊக்கப்படுத்தினால் இவர்கள் நம்முடைய பாரம்பரியத்தை உலகரிய செய்வார்கள் என்பதில் எவ்வித மாற்றும் இல்லை.

  சாதிக்க வா தோழா!

  நமது நாடு ஆன்மீகத்திலும், விவசாயத்திலும் தன் நிறைவு கொண்ட நாடாக விளங்குகிறது. ஆன்மீகம் நாட்டின் உயிர் மூச்சு. விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. அதுபோல பொருளாதாரம், கல்வி, விஞ்ஞானம், ஆராய்ச்சி, மருத்துவம், இராணுவம், அரசியல், தனிமனித முன்னேற்றம் போன்ற மற்ற துறைகளிலும் முன்னேறி தன்நிறைவு அடைய வேண்டும்.

  வரப்புயர நீர் உயரும்

  நீர் உயர நெல் உயரும்

   நெல் உயர குடி உயரும்

  குடி உயர கோன் உயரும்

  கோன் உயர நம் நாடு உயரும், முன்னேற்றம் அடையும்

  நம் நாடு அதிக பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குடியரசு நாடாகும்.  தனிமனித முன்னேற்றம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தால் மிகப்பெரிய வல்லரசு நாடாக ஆகும் என்று உறுதியாக நம்புகிறேன்.

  வேதகால நாகரீகம் வாய்ந்த ஆன்மீக ஆற்றலும், பொழிவும், மந்திர, மாந்திரீக சக்தியும் கொண்டது. முனிவர்களும், சித்தர்களும், ரிஷிகளும், ஞானிகளும், மகான்களும், சாதாரண மனிதனும் தெய்வமாகலாம் என்று  அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்த போதி தர்மன் போன்றவர்கள் நம் நாட்டிற்கு பெருமையும், புகழும் சேர்த்து சாதித்துள்ளார்கள்.

  நம் இந்திய நாட்டின் முன்னேற்றம் இளைய தலைமுறைகளின் கையில் உள்ளது. ஆகவே, ஒவ்வொரு இளைஞனும் உடல், உள்ளம், செயல் திறனுடன் மிகுந்த திறமையுனும், அறிவாற்றலுடன் திகழ வேண்டும்.

  மனிதன் என்பவன் யார்?

  உடல்: ஆரோக்கியமாக, உறுதியாக

  உள்ளம்: உயர்ந்த, தெளிந்த, நல் எண்ணங்கள் உள்ளதாக

  செயல் திறன்: அறிவாற்றல் மிகுந்த, திறமையான செயல்பாடு கொண்டதாக

  நமது நாடு இந்திய நாடு, அமெரிக்கா, ரஷ்யா போன்ற வலிமை மிகுந்த வல்லரசு நாடாக  திகழ வேண்டும் என்றால், அதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் ஆரோக்கியம், கல்வித்தகுதி, தரம் பொது அறிவு போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேசபக்திடன், தெய்வபக்தியுடனும், மொழிப்பற்றுடனும் செயல்பட வேண்டும்.

  ஜாதி, மொழி, இனம், மதம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சகோதரத்துவமுடன், ஒவ்வொருவருடைய நலனிலும் அக்கறை கொண்டு வாழ வேண்டும்.

  உடலே கோவில், உள்ளமே தெய்வம் என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும். இந்த உள்ளத்தில் உயர்ந்த சிந்தனைகளையும், முன்னேற்ற எண்ணங்களையும் வளர்க்க வேண்டும். அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது. இந்த மானிடப் பிறவியை முறையாக வாழ வேண்டும். இந்த உலகத்தில் 10 மாதத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பது சாஸ்திரம், நியதி, ஆண்டவன் கட்டளை. தந்தை உயிரைக் கொடுப்பதும், தாய் உடலைப் பெற்று எடுத்து இந்த உலகத்திற்கு சமர்ப்பணம் செய்கிறாள்.

  பிறப்பும், இறப்பும் ஆண்டவன் செயல். வாழ்கின்ற வாழ்க்கை நம்கையில். ஆண்டவன் படைப்பில் அதி அற்புதமானது மனிதப்பிறவி. இந்த உலகத்தில் நாம் வாழ்வது ஒருமுறைதான்.

  பசி எடுக்கும் போது குழந்தை பாலுக்கு அழுவது போல், மனிதன் துன்பம் வரும் நேரத்தில் கோவிலை நாடி, தீப, தூப ஆராதனைகள், அர்ச்சனைகள், அபிஷேகங்கள் செய்கிறான் ஆனால், ஒழுக்கத்தால், கல்வியின் படைப்பில் மனிதப் பிறவி உயரலாம். வாழ்க்கையில் முன்னேறலாம். நட்டு வைத்த கல்லில் தெய்வம் இல்லை. நல்ல எண்ணத்தில்தான் தெய்வம் உள்ளது என்று நம்பி வாழ வேண்டும்.

  (யமன்) காலன் வரும் முன்னேகண் பஞ்சாகும் முன்னே

  பாலும் கடவாய் வரும் முன்னே குற்றாலத் தானே நீ வந்து கூறு.

  மரணத்திற்கு முன்னால் பிறவிப்பயனை அடைந்து, நல்வழியில் வாழ்ந்து வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்.

  நீந்த தெரியாத மீன்கள் இல்லை. ஓடத்தெரியாத மான்கள் இல்லை. பாடத்தெரியாத குயில்கள் இல்லை, ஆடத்தெரியாத மயில்கள் இல்லை. ஆனால், வாழத் தெரியாத மனிதர்கள் உண்டு. ஒருவனுக்கு வாழ்க்கையில் நண்பர்களின் பங்கு மிக மிக முக்கியம். நண்பர்களால் பல தீய வழியில் செல்ல வாய்ப்புகள் உள்ளது. நாம் ஒருவரை தவறாக நினைத்துக் கொண்டு இருக்கும் வரை அவரை சரியாக புரிந்து கொள்ள முடியாது. அவரை சரியாக புரிந்து கொள்ளாதவரை நாம் அவரை தவறாக நினைத்துக் கொண்டு இருப்போம்.

  வாழ்க்கையில் நிரந்தரமாக நிலைத்து நிற்க்கக் கூடிய எண்ணங்களைத்தான் அனுபவங்கள் என்று கூறுகிறோம். ஆகவே, நல்ல  குண நலன்கள் உள்ளவர்களோடு நட்பு பாராட்டினால், பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற்கு இணங்க நாம் வாழ்க்கையில் மேன்மை பெற முடியும். நல்லோரைக் காண்பதுவும் நன்றே, நல்லோர் சொல் கேட்பதுவும் நன்றே..

  ஒரு நண்பனின் தேடல் எதைப்பற்றியது என்று அறிய

  கல்வியைப் பற்றியதா? பணத்தைப் பற்றியதா? அரசியலைப்பற்றியதா? அறிவைப் பற்றியதா? ஆன்மீகத்தைப் பற்றியதா? கவலையைப் பற்றியதா? காதலைப்பற்றியதா? ஆரோக்கியத்தைப் பற்றியதா? சமூக சேவைகளைப் பற்றியதா? பாவ செயல்களைப் பற்றியதா?    புண்ணிய கர்மாக்களைப் பற்றியதா? தராதரம், திறமை, சட்டவிரோதமான செயல்களைப் பற்றியதா?பண்பு, குணநலம் போன்றவற்றை ஆராய்ந்து தொûலைநோக்குடன் அறிந்து படிக்க வேண்டும்.

  சாக்கடையில் இருக்கும் புழுவைத் தூக்கி சந்தனத்தில் போட்டால், அது இறந்து போகும். ஒரு சாதாரண மனிதன் ஒரு பெண்ணின் காதலுக்காக அடிமையாகி, சிக்குண்டு, வெந்து, நொந்து வாழ்க்கையை வெறுத்து மதிகெட்டு, குடிக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தை கெடுத்து,

  தன்மானம், கௌரவம், எதிர்காலம், படிப்புகள், தாய், தந்தை, குடும்பம், சொந்தம், பந்தம், உறவுகள், உடன்பிறப்புகள், குலம், கோத்திரம், எல்லோருடைய வெறுப்பும் சம்பாதித்து மிருகத்தனமாய், காமுகர்களாய் சிக்குண்டவர்கள் பலர். காதல் மட்டும்தான் வாழ்க்கை அல்ல. இந்த பறந்த உலகில் நாம் சாதிக்க, நல்வழியில் செல்ல, புண்ணியம் தேட, வாழ்க்கையில் முன்னேற பல வழிகள் உள்ளன. உதாரணம், பெருந்தலைவர் காமராஜர், Dr A.P.J. அப்துல்கலாம் போல பலர் உள்ளனர்.

  காதல் என்பது புனிதம், காதல் என்பது ஓர் நல் உணர்வு. காதல் என்பது வேதம். காதல் என்பது கடவுள். காதல் என்பது நம் மனத்தைப் பற்றியது. புனிதமான உணர்வைப் பற்றியது. உயிர் என்பது வாழ்க்கையைப் பொருத்தது. காதல் தோல்வி அடைந்தவன் உயிரை விடத் தயாராகிறான். வாழ்ந்து காட்ட மறுக்கிறான். காதல் மட்டும்தான் வாழ்க்கை அல்ல. அது ஒரு புனிதமான உணர்வு அதைக் கொச்சைப்படுத்தாதே..

  காதலித்து திருமணம் செய்தல் என்பது சிலருக்கு தோல்வி. ஆகவே, திருமணம் செய்து மனைவியைக் காதலியாக நேசி, வாழ்க்கை நந்தவனமாகும். இந்த உலகில் நம் வாழ்க்கையில் முன்னேற பல துறைகள் உள்ளன.

  ஓர் அறிவு கொண்ட புழு, பூச்சி முதல் ஆரம்பித்து பல பிறவிகள் எடுத்த பிறகுதான் மனிதப்பிறவி தெய்வத்தால்  தரப்படுகிறது என்று நமது இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதைத்தான், ஒளவையார் அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது என்று கூறியுள்ளார். ஆண்டவன் படைப்புகளில் அதி அற்புதமானது மனிதப்பிறவிதான் அதை புனிதத்துடன் வாழ்ந்தால் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது உறுதி.

  காதல் என்பது ஆத்மாவின் ராகம், காமம் என்பது சரீரத்தின் கானம். அரிய, அற்புதமான, புனித பொக்கிஷமான இந்த  மனிதப்பிறவியை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். சாதனை படைக்க வேண்டும்.

  எங்கும் எதிலும் ‘ஆன்லைன்’!

  இது ‘ஆன்லைன்’ காலம்,  இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் அனைவராலும் பேசப்படும் சொல் ‘ஆன்லைன்’/ அதாவது இணையம்,  உலகமே ஆன்லைனில் இயங்கி வருகிறது என்றால் அது மிகையாகாது,  இணையதளத்தின் பயன்பாடு எல்லாத் துறையிலும் நுழைந்து விட்டது, டிக்கெட் முன்பதிவு செய்தல்,பணப்பரிமாற்றம், வீட்டுவரி, குடிநீர் மற்றும் மின்கட்டணம் செலுத்துவது, வீட்டு உபயோகப்பொருட்களை வாங்குவது, பழைய பொருட்களை விற்பது, திருமண வரவேற்பு, பிறந்த நாள், பள்ளி, கல்லூரி விழாக்கள்  உள்ளிட்ட  நிகழ்வுகளின் போது செல்போனில் புகைப்படம் எடுத்து அனுப்புவது என்று பல்வேறு பணிகள் ஆன்லைன் முறையில்தான் மேற்கொள்ளப்படுகின்றன,

  அறிவியலின் அரிய கண்டுபிடிப்பு இணையம் எனப்படும் ‘இன்டர்நெட்’.  அறிவுத் தேடலுக்கு, வணிக விருத்திக்கு, வலுவான உறவுக்கு, உடனடி தொடர்புக்கு என்று மனிதனின் அத்தனை தேவைகளுக்கும் எத்தனையோ வழிகளில் பயன்பட்டு வருகிறது இணையம்.  இன்று வீடுகளே அலுவலகங்களாகி விட்டன.  இணையம் வழியாக வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணிகளை முடித்துவிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

  இணையம் என்பது இன்றைய சமூகத்தில் பிரிந்து வாழும் மக்களை ஏதேனும் ஒருவகையில்இணைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளது. தனிமனித உரையாடல் மறைந்த வரும் இந்நாளில் அதனை ஈடுகட்டும் வகையில் ஒரு மாற்றாக இணையம் மாறியிருக்கிறது.  அன்றாடம் பலமணி நேரத்தை இணையத்தில் செலவிடும் இளைஞர்களைக் கொண்டு இதனை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

  உலக அளவில் ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றின் விரைவான தகவல் பரிமாற்றங்களின் காரணமாக சில நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் கூட நடைபெற்றுள்ளன.  இந்திய அளவிலும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.  சமீபத்தில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

  வணிக ரீதியாகவும் இணையத்தினை பயன்படுத்தி இலாபம் ஈட்ட முடியும்.  இணையவழி வணிக பரிவர்த்தனைகளின் தாக்கம் சாதாரண மக்களையும் எட்டியுள்ளதால் மின் வணிகம் வளர்ச்சி பெற்றுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தின் தேவைகள் அனைத்தையும் – அழகுசாதனப் பொருட்கள், புத்தகங்கள், ஆடைகள் என எல்லாவற்றையும் சலுகை விலையில் இணையத்தின் மூலம் வாங்க முடியும்.  வாங்கப்படும் பொருட்களின் தரமும், விலையும் வாடிக்கையாளர்களின் மனத்தில் நம்பகத்தன்மையை படிப்படியாக வளர்த்து வருவதால் இதன் எதிர்காலம் வளமாகவே இருக்கும்.

  மனிதனுக்கு மறதி என்பது இயல்பான ஒன்று. அத்தகைய ஞாபக மறதிக்கு மருந்தாக வாய்த்திருப்பது இணையத்தின் தேடுபொறிகள் (சர்ச் என்ஜின்).  மறந்து போன ஒரு சினிமா பாடல் அல்லது ஒரு கவிதை வரி எதுவாகிலும் அவற்றின் சில வார்த்தைகளை ‘டைப்’ செய்து தேடினால் மொத்தமும் கண்முன் வந்து வரிசையாய் நிற்கும்.  நம்முடைய தேவை எதுவாகிலும் இணையத்தில் தேடினால் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இணையம் ஏற்படுத்தி விட்டது.  இணையத்தில் உள்ள மின்அகராதிகள், மொழிமாற்றிகள் மூலமாக பல்வேறு மொழிகளையோ அல்லது குறிப்பிட்ட வேற்றுமொழிச் சொல்லுக்கான பொருளையோ உடனடியாக அறிய முடிகிறது.

  ஆன்லைன் கல்வி

  1980-90களில் வெளிநாடு போய் படிப்பதென்றால் அமெரிக்கா அல்லது இங்கிலாந்துக்கு மட்டுமே செல்வார்கள்,  அதுவும் மருத்தவம், பொறியியல் போன்ற துறைகளில் சிறப்புக்கல்வி படிக்க மட்டுமே வெளிநாடு செல்வார்கள்,  ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது,  அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி,கல்வியில் ஏற்பட்டுள்ள போட்டி, உலகமயம் போன்ற காரணங்களால் வெளிநாட்டுக் கல்வி என்பது நடுத்தர மற்றும் சாதாரண குடும்பங்கள் மத்தியிலும் கூட முக்கியத்துவம் பெறத் தொடங்கி விட்டது,

  ஆன்லைன் புகுந்துள்ள பல துறைகளில் முக்கியமானது கல்வித்துறை,  இருந்த இடத்தில் இருந்துகொண்டே, நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தி கல்வி பயில்வதற்கான வாய்ப்பை ஆர்வமுள்ள எல்லோருக்கும் வழங்குகிறது இணையவழிக் கற்றல். பள்ளிக்கல்வியிலும், உயர்கல்வியிலும் ஆன்லைனின் பங்கு மகத்தானது,  கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து உயர்கல்வி பெறுவது என்பது கடந்த தலைமுறைக்குப் பெரும் கனவு,  பணம் இருப்பவர்களுக்கும், செல்வாக்கு மிக்கவர்களுக்கும் மட்டுமே சாத்தியமான உயர்கல்வி இன்று எல்லா தரப்பு மக்களுக்கும்  எட்டும் அளவுக்கு சாத்தியமாகி இருப்பதற்கு முக்கிய காரணம் தொலைக்கல்வி,

  அத்தகைய தொலைக்கல்வியில் தோன்றியிருக்கும்  மகத்தான புரட்சிதான் ஆன்லைன் கல்வி,  அஞ்சல் வழியாக நடைபெற்று வந்த கல்வி இன்று ஆன்லைன் வழியாக நடைபெறத் துவங்கி உள்ளது,   கட்டிடம், வகுப்பறைகள், ஆசிரியர்கள், பாடப்புத்தகங்கள், போக்குவரத்து வசதிகள் என்று பெரிய அளவில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் கல்வி அளிக்க முடியும் எனும் வசதிதான் ஆன்லைன் கல்வியின் வெற்றியாக உள்ளது,

  வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கல்வி கற்பிப்பது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தற்போது அதிகரித்து வருகிறது,  ‘ஸ்மார்ட் கிளாஸ்’ எனப்படும் கணினி தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள் பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன,  அரசு வழங்கிய மடிக்கணினிகளிலும் மேல்நிலைப் பாடப்புத்தகங்கள் மின்னூல்களாக வழங்கப்பட்டுள்ளன,

  ஆன்லைன் கல்வி என்பது தொலைக்கற்றல் என்று; பொருள் கொள்ளலாம்,   நம்நாட்டில் 37 சதவீத மக்கள் எழுத்தறிவு இல்லாமல் இருப்பதால் ‘எல்லோருக்கும் கல்வி’ என்ற குறிக்கோளை உலகம் நிறைவேற்ற முடியாமல் முடங்கிக் கிடப்பதற்கு இந்தியாதான் முக்கிய காரணம்’ என்று சுட்டிக்காட்டுகிறது யுனெஸ்கோ நிறுவனம்,  இத்தகைய நிலையை போக்குவதற்கு அன்லைன் கல்வி துணைபுரியும்,

  ஆன்லைன் முறைக்கும், பாரம்பரிய வகுப்பு கல்வி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடு வேகமாக மறைந்து வருகிறது,  வேலைவாய்ப்பை வழங்கும் தனியார் நிறுவனங்களும் ‘என்ன படித்திருக்கிறாய்?’ என்பதை கேட்டறிவதில் காட்டும் அக்கறையை ‘எப்படிப் படித்தாய்? அதாவது ‘எந்த முறையில் படித்தாய்?’ என்பதில் காட்டுவதில்லை,

  ஆன்லைன் கல்வியில் பலவகை முறைகள் இருக்கின்றன,  ஓன்று முழுமையான ஆன்லைன் (completely online) கல்வி,  மற்றொன்று இரண்டும் சேர்ந்த கலப்பு முறை (Hybrid online),  முதல் வழியில் மாணவன் ஆசிரியரை பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் வராமலே கூட போய்விடும், ஆனால் இரண்டாவது முறையில் சில குறிப்பிட்ட தருணங்களில் கல்விநிலைய வளாகத்திற்கு வந்து ஆசிரியரை சந்திக்க வேண்டி வரும்,  அதாவது பாரம்பரிய முறையும், இணையவழி முறையும் சேர்ந்தது,

  அதேபோல ஆன்லைனில் இன்னொரு வகையும் உண்டு,  ஒன்று ஏக காலத்தில் நடைபெறும் கற்பித்தல் கற்றல் முறை). அதாவது இணையத்தின் வழியாக ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே (Synchronous) வகுப்பறையில் நடைபெறுவது போன்று கற்றல்-கற்பித்தல் நடைபெறும்,  வகுப்பறையில் ஆசிரியர் எழுதுவதைப்போலவே இம்முறையிலும் ஆசிரியர் எழுதுவதை இணையத்தில் வழி பார்க்க முடியும், சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற முடியும்,  மற்றொரு முறையில் ஏதோ ஒருநேரத்தில் ஆசிரியர் நடத்திய பாடம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, மாணவன் தான் விரும்பும் நேரத்தில் இணையத்தின் வழியாக பார்ப்பதும், கேட்பதும் ஆகும்,  இம்முறை Aynchronous முறை எனப்படும்,  மாணவன் தன்னுடைய ஐயப்பாடுகளை இமெயில் போன்ற வழிமுறையாக ஆசிரியருக்கு தெரிவித்து, அதனைப் பார்த்து பிறகு அவர் விளக்கம் அனுப்புவார்,  எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் முதலில் குறிப்பிட்டது இருவழிப்பாதை,  இரண்டாவதாக குறிப்பிட்டது ஒருவழிப்பாதை,

  எவ்வளவுதான் ஆன்லைன் கல்வி பயனுள்ளதாக இருந்தாலும், பாரம்பரியக் கல்விமுறையின் மகத்துவத்தை மறுப்பதற்கில்லை,  இன்றைக்கும் வார இதழை கையில் வைத்துக் கொண்டு படிப்பதில் கிடைக்கும் சுகம், ‘டேப்’பில் படிக்கும்போது கிடைப்பதில்லை,  பாரம்பரியக் கல்வி முறையில் மாணவன் நேரடியாக வகுப்பறைக்குச் செல்லுவதால் உண்மையான கல்லூரி அனுபவம் கிடைக்கும்,  என்,எஸ்,எஸ்,,என்,சி,சி, விளையாட்டு போன்ற அமைப்புகளில் சேர்ந்து கற்க நல்ல வாய்ப்பு ஏற்படும், நேரடியாக பேராசிரியர்களை அணுகி ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் பெற முடியும்,  75 சதவீத மக்கள் கிராமங்களில் வாழும் ஒரு தேசத்தில், தொழில்நுட்ப வசதிக்கான வாய்ப்புகள் கிடைக்காத, கிட்டாத மாணவர்களுக்கு ‘ஆன்லைன் கல்வி’ என்பது இன்னும் எட்டாக்கனி தான்,  அந்த எட்டாக்கனிக்காக அதிகம் கவலை கொள்ளத் தேவையும் இல்லை,

  தமிழ் தினசரி நாளிதழே கிடைக்காத ஒரு தேசத்தில் உட்கார்ந்து கொண்டு இணையத்தில் ‘பேப்பர் படிப்பதை’ வசதியான ஒன்றாகக் கருதலாம்,  அதே செய்தித்தாள் இரண்டு ரூபாய்க்கு 10 பக்கத்தில் கிடைக்கும்போது ஆன்லைனைப் பற்றி கவலை கொள்ள வேண்டியது இல்லை,  ஆகவேதான் இன்றைய தொலைக்கல்வியில் இரண்டு வழிகளிலுமான கல்வி வழங்கப்படுகிறது, அவரவர்களின் வசதி மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சரியானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்,

  இணையம் உலகத்தையே ஒரு கூகுளுக்குள் சுருக்கிவிட்டதால் எல்லாம் எளிதாகிப் போனது, ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்று கடவுளாக மதிக்கப்பட்ட குருவுக்கு உண்டான சிம்மாசனம் மறைந்து ‘மாதா, பிதா, கூகுள்,தெய்வம்’ என்று ஆசிரியரின் இடத்தை ஆன்லைன் ஆக்கிரமித்து வருகிறது,  எனினும், ஆசிரியரை மீறி கற்கும் வாய்ப்பு ஒருபுறம் இருந்தாலும் அதில் தோன்றும் விபரீதத்தையும் மறுப்பதற்கில்லை,

  ஆன்லைன் கல்வியில் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்,  ஒருகாலத்தில் இந்தியாவை எட்டிக்கூடப் பார்க்காமல் புறக்கணித்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இன்று இந்திய மாணவர்களை குறிவைத்து வந்து கொண்டிருக்கின்றன,  பாரத தேசத்து  பாரம்பரியக் கல்வியின் குரல்வளையை ஆன்லைன் கல்வி நெரித்து விடும் அபாயம் இருப்பதால் அரசும், மக்களும் கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்,

  அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கத்திற்கும் வழிவகுக்கும், அழிவிற்கும் துணைபோகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  இந்த நியதி இணையத்திற்கும் பொருந்தும்.  நல்ல விதமாக பயன்படுத்தினால் நன்மையே கிட்டும்.  தீய வழியில் பயன்படுத்தினால் அழிவையே தரும். எனவே, பாதுகாப்பாக கையாளுவோம்! பயன் பெறுவோம்!!.

  தடைகளைக் கண்டு தயங்காதீர்கள்

  மனித வாழ்வில் இடர்பாடுகள் (Risks) தவிர்க்கவே முடியாதவை. உயர்கல்வியை பெறுவதற்கு, நல்ல வேலையை பெறுவதற்கு, தொழிலில் வெற்றி பெறுவதற்கு, நல்ல வாழ்க்கைத் துணை அமைவதற்கு பல இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

  மறைந்த முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள் நாடகத்தில் நடித்த போது ஒரு சக நடிகரை தூக்க வேண்டிய காட்சியில் “ரிஸ்க்” எடுத்து நடிக்க  அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இனி அவ்வளவுதான் என்றார்கள். ஆனால் அவரே உடல் நலம் தேறி மீண்டும் நடிப்புத் தொழிலை தொடர்ந்தார். பல தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படமெடுக்க காத்திருந்தனர். பணம் வந்தால் போதும் என சும்மா இருக்கவில்லை. தனக்குப் பிடித்தமான நல்ல சீர்த்திருத்தக் கருத்துக்களை சொல்ல ஆசைப்பட்டு பெரும் பொருட்செலவில் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தை எடுத்தார். வென்றால் மன்னன், தோற்றால் நாடோடி என்றார்கள். படம் வெற்றி பெற்றது.

  ஒருமுறை துப்பாக்கியால் சுடப்பட்டு விட்ட போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து வந்தார். சரிவர பேச முடியாத சூழலில் கூட தன்னம்பிக்கையை இழக்கவில்லை. இவர் சந்தித்த இடர்பாடுகள் எண்ணற்றவை. சிறு வயதில் தந்தையை, குடும்பச் சொத்தை இழந்தவர்தான். நாம் இடர்பாடுகளில் இருந்து மீண்டெழுவதற்கு, துணிந்து போராடுவதற்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்பதற்கு இவரது வாழ்க்கை சிறந்த உதாரணமாகும்.

  இயற்கை இடர்பாடுகள்:

  இயற்கை பேரழிவு (Risks) என்பது சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பதாகும். வெள்ளப்பெருக்கு, எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், மண்சரிவு போன்ற பேரழிவால் மிகையான அளவில் பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. இதனால், ஏற்படும் பெரும் நட்டத்தை தாங்கிக் கொள்வது சுலபமல்ல. இதன் சுவடுகள் வாழ்நாள் முழுவதும் பாதிப்படைந்தவர்களை துன்பத்திலும், துயரத்திலும் ஆழ்த்திவிடுகிறது. அதைத் தாங்கிக் கொண்டு மீள்வதற்கான செயல்பாடுகளில் மனிதகுலம் ஈடுபடுகிறது. சில இயற்கையான இடையூறுகள் ஒன்றுடன் ஒன்று என தொடர்பு கொண்டவையாகும். உதாரணமாக, நிலநடுக்கம் காரணமாக சுனாமி உருவாகாலாம். வறட்சியின் விளைவாக பஞ்சமும் நோய் தொற்றும் ஏற்படலாம்.

  1900 ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவை தாக்கிய வறட்சி பல லட்சம் இந்திய மக்களை காவு வாங்கியது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பல இலட்சம் பேர் மரணமடைந்தார்கள். 2005 ல் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கியது. கட்டுக்கு அடங்காத தீ காட்டுப்பகுதியில் பல லட்சம் மரங்களை சாம்பலாக்கியது. நில நடுக்கத்தால் கட்டிடங்கள் பாழடைந்தன. புயல், சாலை விபத்து, மற்றும் எயிட்ஸ், கேன்சர் போன்ற கொடும் நோய்கள் என எவ்வளவோ இடர்பாடுகளை முன்னறிவிப்பு இன்றி மனித குலம் சந்திக்க வேண்டியுள்ளது.

  சிறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள் நாள்தோறும் உள்நாட்டு, வெளிநாட்டு போட்டிகளையும் சவால்களையும் சந்திக்க  வேண்டியுள்ளது. சிறு தொழிலில் ஈடுபட நினைக்கும் தொழில் முனைவோருக்கு பெரும்பாலான வங்கிகள் கடன் கொடுக்கத் தயங்குகின்றன. சிறு குறு தொழில் நிறுவனங்களில் இன்றைக்குப் பணி செய்ய திறமையான ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. விலை நிர்ணயம் போன்றவற்றில் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டியை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

  பேருந்தில் நடத்துநருக்கு சில்லறைப் பிரச்சனை பெரும் இடர்பாடாக உள்ளது. ஓட்டுநருக்கு தினம் தினம் வாகனத்தை விபத்தின்றி ஓட்டுவதே இடர்பாடாகும்.

  பங்குச்சந்தையில் லாபம் குறித்த உத்திரவாதம் கிடையாது. முதலீடு அதிக இடர்பாடுகளைக் கொண்டுள்ளது.

  பெண்களுக்குத்தான் எத்தனை விதமான இடர்பாடுகள் இருந்தன.தேவதாசிமுறை, பலதாரமுறை, சொத்துரிமை மறுப்பு, பால்ய விவாகம் என பல பல… இடர்பாடுகளை களைய இன்று சட்டம் வந்துவிட்டது.     விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் போதுமான மழையின்மை, ஆட்கள் பற்றாக்குறை, விளைச்சல் குறைவு, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இடர்பாடுகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

  வாழ்வில் நாம் ஆபத்துக்களை எதிர்கொள்கிறோம். அதில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி! தோல்வி அடைந்தால் அது ஒரு அனுபவப் பாடம்! மருத்துவராக விரும்பினால் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும், மாவட்ட ஆட்சியாளராக விரும்பினால் மத்திய அரசு போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். களத்தில் போட்டியாளர்கள் ஏராளம். வெற்றி நிச்சயமானதல்ல.  இந்த இடர்பாடுகளை எதிர்கொள்வதில் தான் வாழ்வே உள்ளது. ரிஸ்க்கே எடுக்க வேண்டாம் என்று இருந்தால் நம் கனவுகள் ஒருபோதும் நனவாக முடியாது.

  சாதனைகள் செய்யப்படவில்லை. இடர்பாடுகளை எதிர்கொள்ள விருப்பமில்லாதவர்கள், மிகச் சாதாரண வாழ்க்கையே வாழ்கிறார்கள். பெரும் படைவலிமை கொண்ட ஹெமுவை இரண்டாம் பானிபட் போரில் அக்பர் சந்திக்க தயங்கியிருந்தால் மொகலாய சாம்ராஜ்யம் சரிந்து தரை மட்டமாகியிருக்கும். நமக்கு எது வேண்டும் என்கிற கனவு வேண்டும். அதை அடைவதற்கான வழியில் உள்ள தடைகளை தாண்டுவதற்கு புதிய வழி கிடைக்கும், அவநம்பிக்கையை, அச்சத்தை,பயத்தை மனதில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஒருவன் எவ்வளவு உச்சிக்குச் செல்ல முடியும் என்பதை அவன் எவ்வளவு இடர்பாடுகளை அச்சமின்றி சந்திக்க துணிகிறான் என்பது தான் தீர்மானிக்கிறது.

  மிகப்பெரிய சாதனைகள் மிகப்பெரிய இடர்பாடுகளில் தான் அடங்கியுள்ளன. இடர்பாடுகளின்றி வருமானமில்லை. எல்லாவற்றையும் சுவையானதாக, இனிப்பானதாக ஆக்குவதே இடர்பாடுகள்தான். இடர்பாடுகளை எதிர்கொள்ளத் தயங்கி நல்ல வாய்ப்புகளை நழுவ விட்டால் பின்னாளில் அதை நினைத்து வருந்த வேண்டியதாகும்.

  வாழ்க்கையில், சமுதாயத்தில், நமது மதிப்பு என்ன என்பதை நாம் எதிர்கொண்ட இடர்பாடுகள் தான் வெளிப்படுத்துகிறது. இடர்பாடுகளில் வென்றவர்களே தலைமை தாங்குகிறார்கள்.

  எல்லோருமே வைரமாக ஜொலிக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். ஆனால் வெகு சிலரே தான் அறுக்கப்படுவதற்கு, தீட்டப்படுதற்கு விருப்பமுடன் தயாராகிறார்கள். இதுவரை பெற்றிராத ஒன்றை அடைய விரும்பும் போது, நாம் இதுவரை செய்திராத ஒன்றை செய்ய வேண்டியுள்ளது. கூட்டத்தில் ஒருவராக நிற்பது மிகவும் எளிதானது. தனியாக நிற்பதற்குதான் தைரியம் வேண்டும். இடர்பாடுகளை எதிர் கொண்டு வெற்றி பெறாதவரை நம் வாழ்வில் அற்புதமான, சிறப்பான மாற்றங்கள் ஏற்பட போவதில்லை. இடர்பாடுகளை எதிர்கொள்ளாத வாழ்வு வீணானது.  நாம் ஆக்ஸிஜனை வீணடிக்கிறோம்.  தடையின்றி வெகுமதியில்லை. ஆபத்தான முயற்சியில் கொலம்பஸ் துணிவுடன் ஈடுபட்டதால் தான் அமெரிக்கா கண்டுப்பிடிக்கப்பட்டது.

  இயற்கை இடர்பாடுகள் தவிர்க்க இயலாதவை ஆனால்  வாழ்வில் எதிர்படும் தடைகளைக் கண்டு தயங்காமல் போராடும் போது வெற்றி கிட்டுகிறது.  நல்வாழ்வு மலர்கிறது.

  கதை + விதை = கவிதை

  எந்த ஒரு விஷயத்திலும் சாதிப்பதற்கு முயற்சி அவசியம் நண்பர்களே, தானாக எதுவுமே நடக்காது. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிறார் ஆசான் வள்ளுவர். சரி, அந்த முயற்சி எப்படி இருக்க வேண்டும்? முயற்சியின் சுவை என்ன?

  எப்படி??

  மனோத்துவ நிபுணர் மாதிரி மெஸ்மரிச உறக்கத்தில் உங்களை கொஞ்சம் பின்னோக்கி அழைத்துப் போகிறேன்.

  10,9,8,….1 கண்களை மூடி யோசித்து பாருங்கள்…

  தாயின் கருப்பைக்குள் நடந்த ஓட்டப்பந்தயம் தான் முதல் முயற்சி. அந்த முயற்சியில் ஜெயித்ததால்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது, மனசு என்ற ஒன்று நமக்கில்லை. அதனால், அதை விட்டு விடலாம்.

  இரண்டாவது முயற்சி, புரண்டு படுப்பதற்கும், எழுந்து நிற்பதற்கும் மழலையில் எடுத்தவை. அது நமது ஞாபகத்தில் இருப்பதில்லை. நடைவண்டி பிரயாணம், தானாக சாப்பிட்டது, உறவுகளை இனம் கண்டது, இப்படி பட்டியலிடலாம். ஆனால், அப்போது அதெல்லாம் வெற்றி என்று நாம் எண்ணியிருக்க மாட்டோம். அதனால், அதையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டாம்.

  சரி எதைக்கணக்கில்எடுப்பது?

  நம்மால் மறக்கவே முடியாத, ஒரு சாதனை முயற்சியை சொல்லட்டுமா?

  “சைக்கிள் பழகிய சாதனை”.

  பள்ளி நாட்களில் சைக்கிள் பழகியது ஞாபகம் இருக்கா? பின்னாடி அப்பா பிடிக்க கொரங்கு பெடல் பேட்டு ஓட்டுவோம். பின்னாடி பிடித்திருப்பவர், நாம் பார்க்காத போது விட்டுவிடுவார். கீழே விழுவோம்.

  “ஏம்பா விட்டிங்க?” என்று அப்பாக்கிட்டை சண்டைக்குப் போவோம். அப்பதாண்டா, கத்துக்க முடியும் என்பார். கால்களில் விழுப்புண் பட்டிருக்கும். மண்னைத் தொட்டு வச்சுக்குவோம். மீண்டும் டெல் போடுவோம். ஒரு நாள் அந்த திருநாள் வரும் யாருடைய உதவியும் இல்லாமல் நாம் சைக்கிள் ஓட்டிய அந்த கணம் மறக்க முடியாத ஒன்று….

  இந்த கதை மூலம் நான் சொல்லும் விதை… “வாழ்க்கைப்பயணமும் – சைக்கிள் பயணம் போலத்தான். பழகப் பழக நம்வசமாகும்”.

  சரி இப்போது கதை விதை கவிதை என்னவெனில்,

  “குரங்கின் பரிணாமம், சொன்ன தத்துவம்,

  எழத் தயாராக இருந்தால்,

  மனிதனாக வெற்றிப் பெறலாம்…

  குரங்குப்பெடல் பரிணாமம் சொன்ன தத்துவம்,

  விழத்தயாராக இருந்தால்

  வெற்றி மனிதனாகலாம்”.

  நமது நாட்டின் பழமையான நீர் பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கும் சீசன் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பார்வைக்கு இச்சரணாலயம் நவம்பர் 22 திறந்துவிடப்படும்.

  கனடா, சைபீரியா, ஆஸ்திரேலியா போன்ற குளிர்பிரதேச நாடுகளில் இருந்து 45 ஆயிரம் பறவையினங்கள் இங்கு வந்து தங்கிச் செல்ல வருகை தரவிருக்கிறது. பாஸ்போர்ட் எடுக்காமல், கண்டம் விட்டு கண்டம் பறந்து, கடல் கடந்து அந்தப் பறவைகள் வருகின்றன.

  என்றைக்காவது, இதைப் பற்றி சிந்தித்திருக்கிறீர்களா? இந்தியாவின் தெற்கே இருக்கும் தமிழகத்தில், செங்கல்பட்டுக்கு பக்கத்தில் வேடந்தாங்கல் என்ற ஒரு இடம் இருக்கு, அங்கே கடம்ப மரங்கள் நிறைய நிறைந்திருக்கும். அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் நல்ல சீதோஷணம் இருக்கும். இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடம் அது என்று அந்தப் பறவைகளுக்கு எப்படி தெரியும்?

  விலாசம் சொன்னாலே பத்துப்பேரை விசாரிச்சுத்தான் நம்மால் ஒரு இடத்துக்கு போக முடியும். பறவைகள் மட்டும் ஆண்டுகள் தவறாமல் எப்படி சரியாக வந்து சேர்கின்றன?

  காரணம், நமது அறிவை விட உள்ளுணர்வு உயர்ந்தது நண்பர்களே. பறவைகளின் டி.என்.ஏ.வில் இந்த செய்தி ஊறிப்போயிருக்கு… அதுதான் அவைகளை வழிநடத்துகிறது.

  இந்த கதை உணர்த்தும் விதை என்னவென்றால், “அந்தராத்மாவின் குரல்தான்” தன்னை வழிநடத்துவதாக சொல்வார் மகாத்மா காந்தி. அதை நான் இதயத்தின் ரீங்காரம் என்பேன். எனவே, உங்களின்  உள்ளுணர்வின் குரலைக் கொஞ்சம் கேளுங்கள். அதற்கு நேரம் கொடுங்கள்.

  சரி இப்போது கதை + விதை = கவிதை என்னவெனில், “செவிவழி செய்திகளில் மூழ்கி புவி வழி போனது போதும். கவிவழி கருத்துக்களையும் குவித்துவைத்தென்ன லாபம்!? இதயம் பேசுகின்ற உணர்வு மொழி. அதுôன் இறைவனின் மவுனமொழி”.

  இந்த வாழ்க்கையை அனுபவிச்சு வாழணுமா? கள்ளங் கபடம் இல்லாமல் நம்மை நாமே குற்றம் கூறாமல், சுதந்திரமாக வாழ வேண்டுமா? கோபம், காமம், பொறாமை, பேராசை இது எல்லாம் மனதை அண்டாமல் இறகைப்போல மென்மையாக, மலர் போன்று மேன்மையாக வாழ வேண்டுமா? அதுக்கு நாம் குழந்தைகளாக வேண்டும்.

  குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தருகிறோம். ஆனால், குழந்தைகளிடமிருந்து எதையாவது நாம் கற்றுக்கொண்டிருக்கிறோமா? சொல்லுங்க… சரி, இப்போது என்னென்ன கற்றுக் கொள்ள முடியும் என்று பார்ப்போம்…

  ஒரு குழந்தை புரண்டு படுக்கும் போது, அதன் கைகளே அதற்கு தடையாக இருக்கும். இருந்தும் தொடர்ந்து முயன்று ஜெயிக்கும். இதிலிருந்து “நமக்கு நாம்தான் முதல் தடை” என்பதை கற்றுக்கொள்ளலாம்.

  அடுத்து தவழத்தொடங்கும்… ஒரு ஜாலிக்காக நீங்க இப்போது தவழ்ந்து பாருங்கள். எவ்வளவு கஷ்டமாக இருக்கும். ஆனால், குழந்தைகள் சிரிச்சுக்கிட்டே தவழும் இதிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ளலாம். மகிழ்ச்சியோட செய்தால் எதுவும் சிரமமில்லை.

  பிறகு எழுந்திருக்க முயலும். விழும், வலிக்கும். ஆனாலும், வலியை மறந்து; எழும்; நடக்கும். எழுவதில் இருக்கும் பெருமிதத்திற்கு வலியை விலையாகத் தரவேண்டும் என்பதை இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.

  இன்று நீங்கள் குழந்தைகளிடமிருந்து ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள்… எனக்கு எழுதுங்கள்…

  இன்னும் கற்றுக் கொள்ள காத்திருப்போம் அடுத்த இதழில்

  கவிக்கோ சிற்பியின் பவளவிழா ஒலிச்சிதறல் ஒன்று

  தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான கவிக்கோ சிற்பி அவர்களுடைய பவளவிழா 30. 07. 2011 அன்று கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியின்அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

  இந்திய துணைக்கண்டத்தின் அன்றைய குடியரசு தலைவர் மேதகு ஏ.பி. ஜெ. அப்துல்கலாம் அவர்கள் விழாவை தலைமை தாங்கி சிறப்பித்தார். கவிப் பேரரசு வைரமுத்து அவர்களும், நடிகர் சிவக்குமார் அவர்களும் தமிழ்ப்பெரும் கவிஞர் பெருமக்களும் விழாவில் கலந்து கொண்டார்கள்.

  அந்த விழாவில் என்னையும் அவரை வாழ்த்திப் பேச அழைத்திருந்தார்கள். அன்று நான் கவிக்கோ சிற்பி அவர்களை வாழ்த்திப் பேசிய பேச்சின் சாராம்சம் வாசகர்களின் பார்வைக்காகவும் காலத்தின் பதிவிற்காகவும். இதோ

  சொற்கள் ஊர்வலம் போகுமா? வார்த்தைகள் கொடி பிடிக்குமா?

  கருத்துக்கள் கர்ஜனை புரியுமா? மானுடம் பாடும் வானம்பாடி

  வித்தகச் சொற்களின் விளைநிலம், கவிஞர் சிற்பி அவர்கள் பேசினால், எழுதினால்

  வார்த்தைகள் ஊர்வலம் போகும், கொடியும் பிடிக்கும், கர்ஜனையும் புரியும்.

  சொற்கள் சிலருக்கு புதைமணல், சொற்கள் சிலருக்கு வழுக்கு மரம்

  சொற்கள் சிலருக்கு சிக்கலான நூற்கண்டு-  ஆனால்

  சொற்கள் இவருக்கு ஞானம் வழங்கும் போதிமரம்

  சொற்கள் இவருக்கு ஒளிகாட்டும் கலங்கரை விளக்கம்.

  சொற்கள் இவருக்கு மின்னுகின்ற தங்கச்சுரங்கம்

  சொற்கள் இவருக்கு அள்ளக்குறையாத அட்சயப் பாத்திரம்

  சொற்கள் இவருக்கு சலசலக்கும் சங்கீத அருவி.

  சொற்கள் இவருக்கு வழிகாட்டும் ஒளிக்கீற்று,

  சொற்கள் இவருக்கு வசந்தத்தைக் கூட்டி வரும் தென்றல் காற்று,

  சொற்கள் இவருக்கு தேன்மழை மொழியும் சர்க்கரைப் பந்தல்

  சொற்கள் இவருக்கு மயக்கும் மந்திரக்கோல்.

  கல்லிலே சிலை வடிக்கும் சிற்பியின் நேர்த்தியும், நளினமும்

  சொல்லிலே சிலை வடிக்கும் இச்சிற்பிக்கு இரண்டாம் பட்சம்.

  சிறந்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், சிறந்தபேச்சாளர், சிறந்த விமர்சகர், சிறந்த மொழிபெயர்ப்பாளர், சிறந்த பல மொழிகள் அறிந்த ஆய்வாளர், எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த மாமனிதர்.

  தமிழ்ப்பணிக்கானக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கனகமணி சரவிளக்கு.

  மனிதநேயம் போற்றும் சொர்ண அரும்பு, அன்பு பூப்பூக்கும் ஆனந்த நந்தவனம்.

  காலம் கண்டெத்த சீதனம், சின்ன சின்ன வாக்கியங்களில் விஸ்வரூப சிந்தனைகளை

  வடித்துக் கொடுக்கும் கருத்துச் சுரங்கம்.

  இவர் மனம் ஒரு சிந்தனை நந்தவனம், இந்த நந்தவனத்தில் ஏதாவது செடிகள் முளைத்தால், அவை துளசிச் செடிகளாகவே இருக்கும், மரங்கள்முளைத்தால் சந்தன மரங்களாகவே வளரும்,

  கற்கள் கிடைத்தால் நவரத்தினங்களாகவே மின்னும்

  பூக்கள் பூத்தால் பரிஜாத பூவாகவே மலரும்.

  சின்ன பனித்துளிக்குள்ளே சூரியனையும், தேங்கிய நீருக்குள்ளே வானத்தையும்

  வளைத்துப் போடுகின்ற லாவகம் இவருக்குண்டு

  சதிராடும் நெய்பயிரின் அசைவிலும், சலசலக்கும் அருவியின் நெளிவிலும், மூங்கில் இலை நுனி பனித்துளியில் மின்னும் வானவில் ஒளியிலும் இருக்கும் அழகின் நுட்பம் இவர் நட்பின் நுட்பத்திற்கு இரண்டாம் பட்சம்.

  ஒரு சருகின் அசைவில் சங்கீதத்தையும், ஒரு சிறகின் ஸ்பரிசத்தில் சிருங்காரத்தையும்,  கொண்டு வரும் தென்றலைப்போல, இருந்த இடத்திலேயே வசந்தத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகின்ற சித்திர விரல்களின் வித்தகம் இவருக்கு உண்டு.

  சிலைக்கு கண் திறக்கிற நயனசிற்பியின் நளினமும், வியர்வை சிந்துகிற விறகு வெட்டியின் உழைப்பும், ஒப்பில்லாத திறமையும், இவரை நாடறிந்த கவிஞனாக மாற்றி இருக்கிறது.

  வைகை ஆறும், பொன்னி ஆறும்கூட வற்றிப்போகலாம், ஆனால் சிற்பி ஒரு வற்றாத பேராறு. மண்ணில் கிடந்தாலும், மடியில் இருந்தாலும், பொன்னின் நிறம் மாறுவதில்லை. அதுபோல, இவர் மாற்றுக் குறையாத தங்கம்.

  முள்ளின் முனையிலே முல்லைப்பூ பறிக்கிற சாமர்த்தியம் இவருக்கு உண்டு. இவர் விரல்கள் நீட்டினால் வித்தகம் விளையும். விழிகள் திறந்தால் வித்தைகள் நிகழும். எழுத முனைந்தால் காவியம் பிறக்கும்.

  பூவின் இதழில் புகுந்தபனித்துளி போல, சங்கில் நுழைந்த சத்தமிடும் காற்றைப்போல மென்மையானவர். வானமும், பூமியும் வளர்வதுமில்லை, தேய்வதுமில்லை.  அதுபோல வானவர் சொன்ன வார்த்தைகளும், வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் தந்த தத்துவங்களும், வாழும் கவிஞர் சிற்பியின் கவிதைகளும்  பொய்த்துப் போவதில்லை.

  பொன்னந்தி மாலைப் பொழுதாக இருந்தாலும் சரி, பூவிரியும் காலைப்பொழுதாக இருந்தாலும் சரி, விண்மீனை காவல் வைத்து வெண்ணிலவு தூங்குகிற இராப்பொழுதாக இருந்தாலும் சரி, எந்த நேரமாக இருந்தாலும் கவிதைதான் இவருடைய தொழில்.

  இவருடைய உச்சரிப்புகள் சுகமானவை, சுவையானவை. அவைகள் ஐஸ்கிரிமுக்குள் ஆழப்பதிந்துள்ள திராட்சையை விட தித்திப்பானவை.

  ஓயாமல் அடிக்கின்ற தென்றலும், ஒயிலாக செல்லுகின்ற நதியும், மழை தொட்டு அடிக்கின்ற சாரலும், மாடிதொட்டு வீசுகின்ற தூரலும் கூட இவர் புகழை சப்தமிட்டுப் பாடும்.

  ஈரத்தென்றலாய், இனிய கீதமாய், என் மனதின் பூப்பிரதேசங்களில் புல்லாங்குழல் வாசித்து  வாசித்து புல்லரிக்கச் செய்த நண்பர் கவிக்கோ சிற்பி அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்ப்பணியில் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  அவருடைய சிரிக்கும் இதயம் தமிழில் சிரிக்கும். சிந்தனை இதயம் தமிழ் சிந்திக்கும்.  அவர் விழித்திடும் காலை தமிழாய் விடியும். திறக்கும் கண்கள் தமிழாய்த் திறக்கும். திகழும் புருவம் தமிழ்வில் தொடுக்கும், பிறக்கும் மொழியில் தமிழ்ப் பூ மலரும். சுரக்கும் ஊற்றில் தமிழ்நதி பெருகும். எங்கும் எதிலும் தமிழ்த் தேன் இனிக்கும்.

  கவியரசு கண்ணதாசன் வரிகளில் சொன்னால், தமிழுக்கும் வயது உண்டோ? தமிழர்களுக்கும் முதுமை உண்டோ? அமிழ்துக்கும் எல்லை உண்டோ? அன்பிற்கும் முடிவுநாள் உண்டோ? தமிழ் பெற்று தமிழைச் சேர்ந்து, தமிழைக் காத்து தமிழாய் வாழும் தமிழ் நெஞ்சன் சிற்பி வாழ்க! வாழ்க! வளமுடன் வாழ்க!

  வானம் நிரந்தரம், பூமி நிரந்தரம், காற்று நிரந்தரம் என்பதைப் போல சிற்பியின் புகழும்  நிரந்தரம் எனச் சொல்லி நிறைவு செய்கிறேன்.

  இளமை மாறாத இளமையுடன்…. சொல்லாமல் சொல்கிறேன்

  இன்றைய நிலைமையில் யாருக்கு மன உளைச்சல் அதிகம் என்று கேட்டால் நான்  இளைஞர்களைத் தான் (சக தோழர்கள்) கைகாட்டுவேன். அவர்களும், என்னைப்போல் பலவற்றையும் சொல்லாமல் சிக்கித்தவிக்கிறார்கள். ஆனால் அதனை ஒரு கட்டத்தில் சொல்லிவிட்டால் சற்றே மனதில் உள்ள பாரம் குறையும். எனவே நானும் என்னுடைய சிலவற்றை சொல்லாமல் சொல்கிறேன்.

  இன்றும் பல இடங்களிலும், பலரையும் பார்த்தால், இவனெல்லாம் எப்படி சம்பாதித்து இருப்பான் என்று பலதரப்பட்ட எண்ணங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். அந்த எண்ணத்தை நாம் ஒரு நிமிடத்தில் மனதில் நினைத்து விடுகிறோம். ஆனால் அப்படிப்பட்ட நிலைக்கு வருவதற்கு அவர் எப்படிப்பட்ட வேதனைகளையும் தடங்கல்களையும் சந்தித்து இருப்பார் என்று யாரும் சிந்திப்பதில்லை.

  அநேகமாக அவனுக்கு வயது 19 இருக்கும். பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். செல்வச் செழிப்பான குடும்பம் என்பதால் வசதிக்குக் குறை ஒன்றும் இல்லை. இதுபோக அவனது தந்தை அவ்வூரின் நாட்டாமை என்ற காரணத்தினால் அவருடைய குடும்பத்திற்கு ஊருக்குள் நல்ல செல்வாக்கும் மரியாதையும் இருந்தது. சில நாட்கள் கழித்து மகனின் மேற்படிப்பிற்காக பட்டணத்திலுள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் சேர்த்தார்.

  அவருடைய மகனை விட்டுப் பிரிய மனமில்லாமல் இருந்தபோதும் படித்தாக வேண்டும் என்று அனுப்பினார். அவன் கல்லூரியில் நுழைந்தவுடனேயே, அவனை சீண்ட ஆரம்பித்தார்கள். டேய் பட்டிக்காட்டான் வருகிறான் என்று கூவியது மட்டுமில்லாமல், பல வகைகளிலும் அவனை தினமும் கேலி செய்ய ஆரம்பித்தார்கள். அவன் மனநிலையை புரிந்து கொள்ள கல்லூரியில் ஒருவரும் இல்லை, இப்படியே நாட்கள் சென்றன. ஒரு கட்டத்தில் கிண்டலும், கேலியும் செய்த நண்பர்கள் வாயடைத்துப் போனார்கள். காரணம் அவனும் பட்டணத்துக்காரனாகவே மாறிப்போயிருந்தான்.

  அவனுடைய வாழ்க்கையே குடியும் கூத்துமாய் மாறிப்போனது. நண்பர்களுடன் தினமும் சேர்ந்து குடிப்பது போதாக்குறைக்கு பணம் இல்லையென்றால் நண்பர்களிடத்திலேயே திருடவும் ஆரம்பித்தான். திருடிய பணத்தில் குடிக்கிறான் என்று நண்பர்களும் இவனிடமிருந்து விலகினர். கல்லூரியின் இறுதி நாட்களும் வந்தது. கூடப்படித்தவர்கள் வேலையில் சேரத் தகுதி பெற்றனர். ஆனால் அவனால் முடியவில்லை. காரணம் இரவு பகல் பார்க்காமல் குடிக்க ஆரம்பித்தான். ஒருநாள் சொல்லாமல் அவனுடைய தந்தை அவனைப் பார்க்க வந்துவிட்டார்.

  மகனின் நிலையைப் பார்த்தும் ஒரு கணம் ஆடிப் போய்விட்டார். அப்படியே திறந்த கதவை மூடாமல் அவனின் நிலையைப் பார்த்து பரிதவித்துப் போனார். மனம் வருந்தி பாராமலே திரும்பிப் போய் விட்டார்.

  ஒருநாள் குடித்துவிட்டு சாலையில் கிடந்தான். அவனைப் பார்த்த அவனுடைய நெருங்கிய உறவினர், அவனை அழைத்துக் கொண்டு மறுவாழ்வுமையத்தில் சேர்த்துவிட்டார். இரண்டு வருடங்கள் கழித்து, கிராமத்திற்குத் திரும்பினான். பழைய மகனை கண்டவுடன் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது. உன்மீது நம்பிக்கை இருந்தமையால் தான் அன்றைக்கு அப்படியே வந்து விட்டேன். இன்றைக்குநீயே திருந்திவிட்டாய் என்று சொல்லி தொழில் தொடங்க பணமும் கொடுத்தார்.

  அவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு முன்னேறினான். இப்பொழுது(அவன் என்று சொன்னால் மரியாதையாய் இருக்காது) அவர் பல கல்வி நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் நடத்திவரும் மாபெரும் தொழில் அதிபராகவும், சமூக சிந்தனையாளராகவும் வலம் வருகிறார். இவரைப் போன்று பலரும் ஆரம்ப நிலையில், தன்னை அறியாமல், மனம் போன போக்கில் சென்று மீண்டும் மனம் மாறி வெற்றியாளர்களாக உருவெடுத்து இருக்கிறார்கள்.எனவே, நண்பா… ஒன்றை இழந்துவிட்டால், அல்லது அதை இழப்பதற்கு முன்னால் விழித்துக் கொள்ளுங்கள். பின் சமூகமும் நம்மை பழிக்காது. நாமும் கவலைப்படத் தேவையில்லை.

  கவலையை போக்குவதற்கு பல வழிகளும் உண்டு. அவற்றுள் மதுவே சிறந்த அருமருந்து என்பது முட்டாள் தனம் இளமைக்காலம் என்பது, கிடைத்தற்கரிய ஒரு அற்புதமான பருவம். அதை மட்டும் சரியான நேரத்தில் சரியான முறையில் அறிந்து கொண்டால், நாமும் இளமையின் நாயகனாக வலம் வரலாம். அதனால்தான், இதிகாசத்திலும் கூட வீரத்திற்கு சிறந்த அபிமன்யு இறுதியில் சொர்க்கத்திற்கு செல்லும் பாக்கியத்தை பெற்றான். இன்றைய சமூகமும், இளைஞர்களிடமிருந்து பலவற்றையும் எதிர்பார்க்கிறது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையாமலே போய் விடுகிறது.அதேபோல்,எட்டாவது வரையே படித்த ஒருவர் தனது முதல் கவிதையை எழுதி ஒரு புத்தகக் கடைகாரரிடம் கொடுத்த போது, நீயெல்லாம் கவிதை எழுதுகிறாயா? கவிதை எழுதும் மூஞ்சியைப் பார் என்றாராம்.

  ஆனால் பிற்காலத்தில் எழுதிய பாட்டுக்கும், கவிதைக்கும் எல்லையே கிடையாது. 5000 சினிமா பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், கதைகள் என்று அவரின் பங்களிப்பு அதிகம். எல்லையில்லாதது. அவர் யார் என்று தெரியுமா? அவர்தான் காலத்தைக் கடந்தும், பலரிடம் பாசமும், நேசமும் கொண்ட கவித்தாயின் இளையமகன் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

  இன்னும் அவரைப்பற்றி கூறினால், பக்கங்கள் போதாது. ஆனால், அவரே அதை வனவாசம், மனவாசம் என்று எழுதி ஒரு காவிய மாந்தராய் அனைவரின் மனதிலும் பதிந்து விட்டார். எனவே, தோழா எந்தவொரு நிலைமைக்கும் அஞ்சி விடாதே. அஞ்சாத மனமே, அசராத நிலைக்கு வழிவிடும். ஒரு சொல்லில் வார்த்தையில் போக்கிவிடக்கூடியது மனஉளைச்சல் என்றால், சற்றும் அசராமல் கூறுகிறேன். “இதுவும் கடந்து போகும்”.

  மாறுபட்ட மனம், மாறுபட்ட வாழ்வு, மாறுபட்ட திசைகளில்  இவைகளைக் கொண்டு வெற்றி நடை போடுங்கள்!… வாழ்வு வசப்படும். இன்னும் இளமை மாறாத இளமையுடன்!…

  இளந்தென்றல் வீசும்…

  வெற்றி உங்கள் கையில்- 41

  படித்தால் மட்டும் போதுமா…?

  ‘நான் எம். ஏ படித்துவிட்டேன். எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்து விடுவேன். எனக்கு யாரையும் பற்றி கவலை இல்லை.’

  ‘நாங்கள் பரம்பரையாய் பணக்காரர்கள். வாழ்க்கையில் பணம் இருந்தால் வெற்றி தானாக வந்துவிடும்.’

  ‘அவருக்கென்ன கம்பெனியின் முதலாளி. எந்தத் தொழிலை ஆரம்பித்தாலும் அவருக்கு அதிக லாபம் கிடைக்கிறது.’

  இப்படி பலரும் வெற்றியைப்பற்றி வெவ்வேறு விதமாக சிந்திக்கிறார்கள்.

  வெற்றிகரமாக பட்டம் பெற்றுவிட்டால் வெற்றி வந்துவிடும் என சிலர் நினைக்கிறார்கள் பணம் இருந்தால் வாழ்க்கையில்  வெற்றி பெற்று விடலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். தொழிலதிபராக இருந்தால் வெற்றிகள் தானாக வந்து சேரும் என்று சிலர் நம்புகிறார்கள்.

  வாழ்க்கையில் வெற்றி என்பது மன மகிழ்வைத் தருகின்ற நிகழ்வாகும். எப்போதெல்லாம் மனம் திருப்தியுடன் காணப்படுகிறதோ, அப்போதெல்லாம் மனதில் வெற்றி குடியிருக்கிறது என்று அர்த்தம். வெளியிலிருந்து கிடைக்கும் பொருள், பதவி, மரியாதை போன்றவைகளெல்லாம் வெற்றி போல தோன்றினாலும், மனதின் நிறைவுதான் ஒருவருக்கு உண்மையான வெற்றியாகும்.

  ஒருவரின் மனநிறைவு பிறரோடு இணைந்து பழகுவதில் தான் அமைகிறது. நாள்தோறும் சண்டையிடுவதும், குறைக்கூறித்திரிவதும், விமர்சனம் என்ற பெயரில் விவாதங்களை வளர்ப்பதும், அவதூறுத் தகவல்களை அள்ளித் தெளிப்பதும் ஒருவரின் இணைந்து பழகும் தன்மைக்கு எதிராக அமைந்து விடுகிறது. எனவே தான் நல்ல எண்ணத்தோடு பிறரோடு பழகுகின்ற நல்ல பண்புகள் வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவை என பெரியவர்கள் கூறுகிறார்கள்.

  அது ஒரு கிராமம்.

  அந்தக்கிராமத்தில் இருவர் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் விவசாயி. மற்றொருவர் வேட்டைக்காரர். அந்த நண்பர்களுக்குள் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட ஆரம்பித்தது. வேட்டைகாரர் சில வேட்டை நாய்களை  வளர்த்து வந்தார் அந்த நாய்களில் சில  பக்கத்து விவசாயி வீட்டிற்குள் சென்று ஆட்டுக்குட்டிகளைத் துரத்த ஆரம்பித்தன. சில நேரங்களில் கடிக்கவும் செய்தன.

  விவசாயி பயந்து போனார். அவருக்கு கோபமும் வந்தது.

  வேட்டைகாரரை நேரில் சந்தித்து உங்கள் வீட்டு வேட்டை நாய்கள் என் வீட்டிற்கு வந்து ஆடுகளைக் கடித்துக் குதறுகின்றன. அந்த நாய்களைக் கொஞ்சம் கட்டிப் போட்டு கொள்ளுங்கள் என்றார்.

  வேட்டைகாரர் விவசாயின் ஆலோசனையைக் கேட்கவில்லை. சரி சரி என தலையை ஆட்டிவிட்டு எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்தார்.

  மீண்டும் சில நாட்கள் கழித்து, வேட்டை நாய்கள் விவசாயின் ஆடுகள் சிலவற்றைக் கடித்து துரத்தியது விவசாயிக்கு எரிச்சலும் கோபமும் வந்தது.

  தினந்தோறும் எனது ஆட்டுக்குட்டிகளை வேட்டை நாய்கள் கடித்தால் என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அழுத்தமாகச் சொன்னார்.  வேட்டைக்காரருக்கு கோபம் வந்தது.

  இங்கு பாருங்கள் உங்கள் ஆடுகளை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆடுகளைத் துரத்துவதும், கடிப்பதும் நாய்களின் குணம். இதற்கு நான் என்ன செய்ய முடியும்? உங்களால் முடிந்தால் போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் கொடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் வேட்டைக்காரர்.

  விவசாயி திடுக்கிட்டுப் போனார். என்ன செய்வது? என்று தெரியாமல் விழித்தார்.  அவரது நண்பரான பஞ்சாயத்துத் தலைவரிடம் வந்தார். நடந்ததை விவரமாகச் சொன்னார்.

  நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்.  வேட்டைக்காரரை அழைத்து அவருக்கு அபராதம் போடுகிறேன். அந்த வேட்டை நாய்களையும் கட்டிப்போடச் சொல்கிறேன் என்றார் பஞ்சாயத்துத் தலைவர்.

  விவசாயி மனம் மகிழ்ந்தார்.  வீட்டிற்குத் திரும்பிச் செல்ல ஆரம்பித்தார். அப்போது பஞ்சாயத்து தலைவர் விவசாயியை அழைத்தார்.

  அந்த வேட்டைகாரருக்கு தண்டனை கொடுக்க என்னால் முடியும். ஆனால்,  அவருக்கு அபராதம் போட்டு, தண்டனை கொடுத்தால் தேவையில்லாமல் நீங்கள் ஒரு நண்பரை எதிரியாக மாற்ற வேண்டிய நிலை உருவாகிவிடும். நீங்கள் இருவரும் சொந்த வீட்டில் அருகருகே குடியிருக்கிறீர்கள். நேருக்கு நேர் ஒருவர் முகத்தை ஒருவர், தினந்தோறும் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்.  நீங்கள் எதிரியாக மாறிவிட்டால் உங்கள் மனம் வேதனைப்படும் அல்லவா? எனவே, உங்கள் பக்கத்து வீட்டு வேட்டைக்காரர் உங்களுக்கு நண்பராக இருக்க வேண்டுமா? அல்லது எதிரியாக இருக்க வேண்டுமா? என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். என்றார்.

  நீதி கேட்டு பஞ்சாயத்துத் தலைவரிடம் வந்த விவசாயி அதிர்ந்து போனார்.

  பஞ்சாயத்துத் தலைவர் நிதானமாகத் தொடர்ந்து பேசினார்.

  நான் சொல்வதை நீங்கள் கேட்டு நடந்தால், உங்கள் இருவருக்கும் இடையேயுள்ள பிரச்சனையை யாருக்கும் துன்பம் இல்லாமல் தீர்த்து வைக்கிறேன். உங்கள் ஆட்டுக்குட்டிகளும் பாதுகாப்பாக இருக்கும். என்று சொன்னார்.

  பஞ்சாயத்துத் தலைவரின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டார் விவசாயி.

  நீங்கள் உங்கள் வீட்டு ஆட்டு மந்தையிலிருக்கும் ஆட்டுக்குட்டிகளில் இரண்டு அழகான ஆட்டுக்குட்டிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த இரண்டு ஆட்டிக்குட்டிகளையும் வேட்டைக்காரரின் இரண்டு மகன்களுக்கும் பரிசாகக் கொடுங்கள். அந்தக் குழந்தைகள் இருவரும் நீங்கள் கொடுத்த ஆட்டுக்குட்டிகளை நண்பராக நினைத்து விளையாடுவார்கள். இப்போது வேட்டைக்காரர் கண்டிப்பாக  தனது நாய்களை சங்கிலியில் கட்டிப் போட  வேண்டிய நிலை வரும். உங்கள் பிரச்சனையும் தீர்த்து விடும் என்றார் பஞ்சாயத்துத் தலைவர்.

  அடுத்த நாள் பஞ்சாயத்துத் தலைவர் சொன்னதைப் போலவே இரண்டு அழகான ஆட்டுக்குட்டிகளை எடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டு வேட்டைக்காரனின் மகளுக்குப் பரிசளித்தார் விவசாயி. தனது பிள்ளைகள்  ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து ஆனந்தமாக துள்ளி விளையாடுவதைப் பார்த்த வேட்டைகாரர் மகிழ்ந்தார்.  தானாக முன் வந்து தனது வேட்டை நாய்களை சங்கிலியால் கட்டிப் போட்டார். விவசாயிக்கு நன்றி சொன்னார்.  காட்டில் வேட்டையாடிக் கொண்டு வந்த இறைச்சிகளையும், தேன் போன்றவற்றையும் பரிசாகக் கொடுத்தார். இப்போது இருவரும் மகிழ்ந்தார்கள். அந்த மகிழ்ச்சி நெருங்கிய நண்பர்களாக அவர்கள் மாறுவதற்கு அடித்தளமிட்டது.

  இந்த நிகழ்வு சில முக்கிய உண்மைகளை நமக்கு விளக்குகிறது.

  நாம் பாதிக்கப்பட்டிருந்தாலும், எதிர்த்து நிற்பதற்கு வல்லமை இருந்தாலும், தேவையில்லாமல் எதிரிகளை உருவாக்கிக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  தனது ஆடுகளுக்கெல்லாம் துன்பம் வருகிறதே என்று எண்ணி பக்கத்து வீட்டு வேட்டைக்காரரை எதிரியாக்கி சண்டைபோட்டிருந்தால் விவசாயின் மனம் வேதனையிலும், கோபத்திலும், பழிவாங்குவதிலும் துடிக்கும் அல்லவா? இதன் மூலம், அவரது நிம்மதியும் நிரந்தரமாக விடை பெற்றுவிடும்.

  இதனால் தான் நியாயம் நம் பக்கம் இருந்தாலும், தேவையில்லாமல் பிறரை புண்பட வைப்பதும், காயப்படுத்துவதும், சில வேளைகளில் பெரிய பிரச்சனைகளை உருவாக்கிவிடும். வேதனைத் தீயில் வெந்து புலம்பும் நிலையை நமக்குள் உருவாக்கி விடும்.

  வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள் எந்தசூழலிலும் தங்களின் வெற்றியைப் பாதிக்கும் அளவு மற்றவர்களோடு கருத்து வேறுபாடுகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது. கருத்து வேறுபாடுகள் களம் இறங்கும் போது அங்கு முரண்பாடுகள் தலைதூக்கும். முரண்பாடுகள் அதிகமாகும் போது தேவையில்லாத மன வருத்தங்களும், பிரச்சனைகளும் ஏற்படும். இதன்மூலம் ஒருவரின் வெற்றி நிரந்தரமாகக் பாதிக்கப்படும்.

  எனவே எந்தச்சூழலிலும் பிறரோடு இணைந்து பழகும் நல்ல பண்பை வளர்த்துக் கொள்ள இளம் வயதிலேயே முயற்சிகள் மேற் கொள்வது சிறந்த செயலாகும். இந்தப் பண்புதான் வெற்றி வாழ்க்கையின் வித்தாக அமையும்.

  கண்ணில் மின்னல்

  இந்தக்கதை சொந்தக்கதை  சோகமில்லாத கதை

  பட்டினத்தார் பாடல் ஒன்றில், “உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன  உவப்பாம்” என்றொரு வரி வருகின்றதுங்க. அதாவது,

  “இன்றைய சோகம்தான் நாளைய நகைச்சுவை, நேற்றைய சிரமம் இன்றைய சாதனை!

  நேற்றைய கண்ணீர் நாளைய ஆனந்த கண்ணீர்இன்றைய உழைப்பு, நாளைய வெற்றி முன்னர் கசப்பு…. அடுத்தது இனிப்பு…”என்று சொல்லிக்கொண்டே போகலாம்…

  இது…

  இன்ஸ்பெக்டர் இனியாளுக்கு கண்ணில் திருவிழா நடந்த கதை!

  ஊர்த்திருவிழா என்றால் வானவேடிக்கை அவசியம் உண்டு.

  அதுபோல கண்ணுக்குள்ளே மத்தாப்பு, பத்தவைத்தால் எப்படி இருக்கும்? அப்படி உலகம் முழுவதும் வெளிர்பச்சை நிறத்தில் இலைகளில் நரம்புகள் கிளை பிரிந்திருக்குமே அதுபோல, கிளை பிரிந்த இரத்தக்குழாய்கள் அடர்சிவப்பு நிறத்தோடு அடுக்கடுக்கான அலைவீச்சு போல கண்களுக்கு ‘லேசர்’ கதிர்வீச்சு பட்டு விழித்திரை மீதிருந்த செல்களை உருக்கி அதை ஸ்கிளிரா (Sclera) என்கின்ற வெளிப்பாகத்தோடு ஒட்ட வைக்கின்ற முயற்சி செய்த பொழுது… வைத்தியம் செய்த பொழுது… இந்த நிகழ்வுகள் ஏற்பட்டது. அதுஒரு புதுமையான அனுபவம். இந்த அவசர உலகத்தில் நிறையப்பேர்களின் கண்களுக்குள் சுயநினைவோடு இருக்கையிலேயே லேசர் பாயும் வாய்ப்பு (கிடைக்க வேண்டாம்) கிடைக்கப் போவது இல்லை. அவருடைய நண்பர்களும், உறவினர்களும்

  ஏன் சொல்லாமலேயே செய்து கொண்டாய்?”என்று கேட்ட பொழுது… அவரிடம்… அனைவரையும் சமாதானப்படுத்துவது போன்ற பதிலும் இருக்கவில்லை. ஆனால், என்ன வைத்தியம்? என்ன செய்திருக்கிறார்கள்?

  ஏன்? கால்பந்து, கிரிக்கெட் (இன்ஸ்பெக்டர் இனியாள், அப்படித்தான் விளையாடுகிறார்) ஜாக்கிங், நீச்சல் என்று எதுவும் செய்யகூடாது? (ஒரு மாதத்திற்கு) கண்ணில் தூசு விழுவதும், டி.வி பார்த்து படிக்க ஏன் தடை ஏதுமில்லை? இருந்தாலும் படிக்காதே? ஏன் இன்றே? அலுவலகம் செல்கின்றாய்? என்பது போன்ற கேள்விகள் நண்பர்களிடம் இருந்தும் உறவினர்களிடம் இருந்தும் எழுந்த வண்ணம் இருந்தன.

  நமக்கு எந்த பிரச்சனையும் வராது என்று இருந்தவருக்கு! (அவ்வளவு உடற்தகுதியுடன், உடற்பயிற்சியும் செய்து, நேரத்தே தூங்கி எழுபவர் அவர்) இரு ஒரு அதிர்ச்சியேநம்ம முடியவில்லை. “கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்”“கண்ணாலே பேசிக் கொல்லாதே” என்ற பாடல்களும்… பாசமலரின் “ஆனந்தா… என் கண்ணையே! உன்னிடம் ஒப்படைக்கிறேன்… என்பது போன்ற வசனங்களும் திடீரென அதிக மதிப்புள்ளதாக தோன்றின

  அச்சமில்லை! என்றிருந்தாலும்…

  ஒளிமயமான எதிர்காலம் கண்ணில் தெரிய வேண்டும் அல்லவா?

  என்னதான் கண்ணுக்கு ஆனது ஏன் வெல்டிங் (Welding) லேசர் – வைத்தியம் செய்தார்கள் என்று… விலாவாரியாக விளக்க வேண்டி ஒரு கட்டுரை எழுதி விடுகின்றேன். படங்களுடன் அப்பொழுதுதானுங்க விஷயம் முழுவதுமாக ( இதைவிட தெளிவாக) தெரியும் என்று இனியாள் கூறினார்.

  யார் இனியாள்?

  என்கின்ற கேள்வி… புதிதாக நம் கட்டுரையைப் படிப்பவர்களுக்கு வந்திருப்பது இயற்கை. அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் இனியாள் ஒரு கற்பனை கதாபாத்திரம்… நம்மில் ஒருவர்… என்று தெரிந்திருந்தால் போதும். இந்த ‘கண்’ கட்டுரையை படித்துவிடலாம். இன்ஸ்பெக்டர் இனியாளது தன் வரலாற்று கட்டுரைகள் அறிவியல் கலையம்சம் கொண்ட உண்மைகளும், கற்பனைகளும் கலந்தன… ஏற்கனவே சில எழுதப்பட்டு… இரசிக்கப்பட்டன. இப்பொழுதுக்கு இதுபோதும்.

  பன்னிரண்டாம் வகுப்பு உயிரியல் பாடத்தை எடுத்துக்கொண்டால் கண்களின் அமைப்பு குறித்து அதற்குள்ளே, வேறுவேறு வகுப்புகளில் படித்து தெளிவாகிவிடுகின்றோம். அது கேந்திரிய வித்யாலயா, அண்ணாநகர் பள்ளியில் இரண்டாவது மாடிக்கு ஏறி, மாடிப்படி திரும்புகையில் சுவற்றிலும் வரையப்பட்டு இருக்கின்றது. அதை இனியாள் பார்த்திருக்கின்றார். (மூன்றாவது மாடி திருப்பத்தில் காதின் உள்ளமைப்பு படம்) அந்தப்படங்கள் அடிப்படை அறிவை வளர்ப்பவை.

  இந்த மாதிரி அமைந்துள்ள இயற்கையான கண் அமைப்பு கிட்டப்பார்வை குறைபாடுள்ள இனியாள் போன்ற நாள்பது வயதை தாண்டியவர்களுக்கு விழிக்கோளம் நீண்டுவிட வாய்ப்புள்ளது. சாதாரணமாக குறைபாடில்லாத கண்களில் ஒளி கீழ்காணும் வண்ணம் பாய்கின்றது. இது ஒரு கிட்டத்தட்ட அறிவியல் கட்டுரை மாதிரி போகின்றது. ஒருவேளை பொறியாளர்களுக்கு… விருப்பத்தை கிளறாமல் போகலாம்… ஆனால், அனைவருக்குமே கண்கள் இருப்பதால்… ஒருவேளை… என்ன நடந்தது? என்று தெரிந்து கொள்ள விரும்பலாம். ஏனெனில், கிட்டத்தட்ட ஒரு மாதம் இனியாளால் கூட தனக்கு விழித்திரையில் ஒரு கண்ணுக்கு ஒன்று என்கின்றபடி இரண்டு ஓட்டைகள் இருக்கின்றன என்றபோது நம்பவே முடியவில்லை. மிக விலை உயர்ந்த கருவிகள் வந்துவிட்டன. அவை எவ்வளவு ஆழமான தொலைவு வேண்டுமானாலும் உடலினுள் பயணித்து நோய்களை கண்டுபிடித்து கொடுத்து விடுகின்ற. எல்லோருக்கும், திறமையாக ஆராய்ந்தால் எதாவது குறைபாடு (Disorder) அல்லது வியாதி (Disease) கண்டுபிடித்துவிட முடியும் என்று இனியாள் கருதினார்.

  பள்ளி புத்தக படங்களில் கண் குறைபாடுகளை ஆடிகளை (கண்ணாடி, லென்சுகள் (Lens)) பயன்படுத்தி நிவர்த்தி செய்வதை பற்றி படித்திருப்போம். அவற்றுக்கான இன்னும் நான்கு படங்களை வரைந்தால் மாத இதழில் அச்சிடுவதற்கு சிரமம் நேரலாம்.

  “கிட்டக்குழி தோண்டி, தூர குவி” என்பது பள்ளி பருவத்திலே இனியாள் கண் குறைபாடுகளில் எந்த குறைபாட்டிற்கு எந்த லென்ஸ் (Lens)? பயன்படுத்துவார்கள் என்னும் கேள்விக்கு ஒரு மார்க் சரியாக வாங்க ஞாபகம் வைத்துக்கொண்ட  நிமோனிக் (Mnemonic) முதலில் உள்ள ‘M’ சைலன்ட் (Silent) ஆகும்.  நிமோனிக் என்றால் சுருக்கமான வழியில் (VIBGIOR) போல முதல் எழுத்துக்களை கூட்டி வைத்துக்கொள்வது. இதுவும் ஒருவித நிமோனிக்கு என்று கருதலாம். கீழே அதை விரித்து விளக்குவோம்…

  கிட்ட —————- கிட்டப்பார்வை ————- மையோபியா —— குழி —- குழி

  Myopia – தோண்டி-

  —- குழி ஆடி — Concave Lens

  தூர — தூரப்பார்வை — ஹைபர்மெட்ரோபியா— குவி — Concave Lens

  Hyper metropia குவி ஆடி

  மேற்கண்டது சரிசெய்யும் வழியாகும். இதை கான்டாக்ட் லென்சுகள், லேசிக்ஸ் சர்ஜரி என பலமுறைகளில் சரி செய்கின்றனர். இனியாளின் பிரச்சனை இதுவல்ல! பிறகென்ன? என்று நீங்கள் கேட்கலாம். மேற்கண்ட தகவல்களை ஒரு பொது அறிவிற்காக, அவர் எழுதியதாக வைத்துக்கொள்ளுங்கள். பொது இடங்களில் பார்த்தால் நிறையபேர் கண்ணாடி அணிந்திருக்கின்றோம். எவ்வளவு பேர் இதை தெரிந்திருக்கின்றோம். பாட புத்தகங்கள்… தகவலை தருகின்றன. கிட்டப்பார்வை குறைபாட்டைப்பற்றியும், அது எப்படி வருகின்றது என்பதை குறித்தும் மிக விளக்கமாக படங்களுடன் இப்பொழுது இனியாள் விளக்கி உள்ளார்.

  ஹைபாட்மெட்ரோபியா (Hyper metropia) என்றும் தூரப்பார்வை என்றும் அழைக்கப்படும் குறைபாடு  பேச்சு வழக்கில் ‘சாலேச்சுரம்’ என்று சொல்லப்படுகின்றது. இக்குறைபாடு பொதுவாக நாற்பது வயதை தாண்டியவர்களுக்கு இந்த குறைபாடு… அருகிலிருக்கின்ற பொருட்கள் தெளிவாக தெரியாத நிலை ஏற்படுகின்றது. இதற்கு முன்பு கிட்டப்பார்வைக்கு கூறிய காரணங்களுக்கு நேரெதிரான காரணங்கள் உண்டு. லென்ஸ் மெலிததாதல் மற்றும் விழிக்கோளம் குறுகலாக அமைதல் போன்ற காரணங்கள் அதற்கான படங்கள், பாடப்புத்தகங்களில் தெளிவாக கொடுக்கப்பட்டு உள்ளன. இணையதளத்தில் நிறைய படங்களுடன் கூடிய விளக்கங்கள் கிடைக்கின்றன. அதுபோன்ற கட்டுரைகளுக்கும் இக்கட்டுரைக்கும் வேறுபாடு என்ன என்றால்? இங்கே கட்டுரையின் பின்னால் ஒரு உயிரோட்டம் உள்ளது. இனியாள் என்ற ஒருவரின் அனுபவப்பகிர்வு உள்ளது. அதனால் இவ்விவரங்கள் மெருகேறுகின்றது. மனதில் பதிகின்றது.

  இனியாளுக்கு நீண்ட காலமாக கிட்டப்பார்வையே. ஆறாம் வகுப்பில் மைனஸ் 1.50ல் தொடங்கி மையோபியா (Myopia) இப்போது மைனஸ் ஆறை தொட்டுவிட்டது. தூரப்பார்வையை நேர்மறை (Plus) எண்களிலும், கிட்டப்பார்வையை எதிர்மறை (Minus) எண்களிலும் குறிப்பிடுகின்றனர். ஆறுமீட்டர் தொலைவிலிருந்து ஆறு வரிசைகளையும் படிக்க முடிந்தால் 6/6 கண்பார்வை என்கின்றனர். ஐ.பி.எஸ்., ஆக இது அவசியமாகும்.

  கிட்டப்பார்வை விழிக்கோளம் நீள்வதால் உருவாகிறது என்றோம். அதனால் அதிக தொலைவிற்கு விழித்திரை மெலிதாக இழுக்கப்படுகின்றது. ரெடினா என்னும் விழித்திரையில் இதன் காரணமாக ஓட்டைகள் அல்லது துளைகள் (Holes) உருவாகக் கூடும். இது எப்படி என்றால், நீர் நிரம்பிய பலூனில் அழுத்தம் பக்கவாட்டில் கொடுத்தால் அது பிதுக்கமடைந்து நீள்வட்டம் ஆகும்பொழுது அதன் சுவர்க்ள ஆங்காங்கே, மெலிதாவதைப் போலத்தான். விழித்திரை ஒரு இரண்டடுக்கு அமைப்பாகும். கண்ணின் உள் அறையில் விட்ரியஸ் ஹயூமர் என்னும் திரவம் நிறைந்துள்ளது. இத்திரவம் துளைகளுக்குள் நுழைய வெறும் ஐந்து சதவிகிதம் வாய்ப்புள்ளது. நுழைந்தால் விழித்திரை பிரிந்து விடும். (Detachment) அதன் காரணமாக பார்வை பறிபோகலாம்.

  ஆனால், 95% அவ்வாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றாôர் ஒரு மருத்துவர்.

  இனியாளுக்கு தலைசுற்றுவது போல இருந்தது… “சார் ஓட்டை என்று கூறுகின்றீர்கள், நான், நன்றாகத்தானே இருக்கின்றேன்”!. கண்கள் கண்ணாடி போட்டால் தெளிவாகத்தானே காட்சிகளை காட்டுகின்றன? இப்பொழுது கூட வழக்கமாக வருகின்ற கண் பரிசோதனைக்குத் தானே வந்திருக்கின்றேன்… விழித்திரையில் ஓட்டை என்று கூறி என் மனத்திரையில் ஓட்டை விழிந்து விட்டதே, டாக்டர். என்றார் ஆச்சரியத்துடன்…

  அவ்வளவு  பதட்டமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இது பலருக்கு ஏற்படக்கூடிய விளைவுதான். நிறைய பேருக்கு இப்படி இருப்பதே தெரியாமல் இயல்பாக கண்ணாடி அணிந்து வாழ்ந்து விடுகிறார்கள். ஒரு சிலருக்ல்குத்தான் “டிடாட்ச்மென்ட்” வரை போகின்றது என்றார் டாக்டர்.

  பதட்டம் எதுவும் இல்லை டாக்டர். என்னை வழக்கமாக டாக்டர்கள் ஓரளவு விசாரித்து பரிசோதித்து அனுப்பி விடுவார்கள். நீங்கள் நிறைய நேரம் தேடி துளையை கண்டுபிடித்து விட்டீர்கள். இவ்வளவு நேரம் தேடினால் குறையை கண்டுபிடித்து விட முடியும் டாக்டர். தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதே… என்றார்?

  சரி, இப்பொழுது என்ன செய்ய வேண்டும், டாக்டர்? லேசர் கதிர்வீச்சு வைத்தியம் என்றால் என்ன? என்பன போன்ற டாக்டருடனான கலந்துரையாடல்… அதன் பின்பு விழித்திரை துளையை… லேசர் கதிர்வீச்சை உள்ளே செலுத்தி… அத்துளை வழியே நீர் நுழையாமல் அணை (Barrage) கட்டிய அனுபவம். மெழுகை உருக்கி இரப்பர் பந்தில் ஊற்றி ஒட்ட வைப்பது போல… கண்ணுக்குள்ளே வெல்டிங் (Welding)  வைத்த அனுபவம்.

  வெளியே வெல்டிங் (Welding) வைப்பவர்களே கருப்புக் கண்ணாடி போட்டக்கொள்ள… அதை திறந்த கண்களுக்குள்ளே மயக்க மருந்தில்லாமல் அனுபவித்த பிரகாசமான வலியற்ற வலியான விந்தையான அனுபவம்…

  காடராக்ட் (Cararact removal) நீக்கம் அதாவது, கண்புரை நீக்கம், லேசிக்ஸ் (LASIK), க்ளுக்கோமா என்று பிரபலமான கண் சிகிச்சை வழி சேராத புதுவித நிபந்தனைகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சைக்கு பின்னான முன் ஜாக்கிரதை நடவடிக்கைகள்..

  உடனே செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு ஒரு மாதம் கழித்து, “உலகின் இரண்டாவது கண் மருத்துவமனையில்” வைத்தியம் செய்து கொண்ட இனியாளின் பிரமிப்பு என்ற எல்லா… ஆச்சரியமான சுவாரஸ்யமான செய்திகளையும், தகவல்களையும் மனப்போராட்ட உணர்வுகளையும் அடுத்த மாத இதழில் தொடர்வோம்.

  அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது இன்ஸ்பெக்டர் இனியாள்.

  மத்தாப்பு வெளிச்சம் தொடரும்….

  ஸ்ட்ரெஸ்சும், டென்ஷனும்

  இன்று சிறுபிள்ளைகளில் இருந்து பெரிய மனிதர்கள் இவரை எவ்வித பாரபட்சமும் இன்றி சர்வசாதாரணமாக ஸ்ட்ரெஸ்சும் டென்ஷனும் தோன்றி தொல்லை கொடுத்துக் கொண்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இன்று நிலவும் பணத்தட்டுபாடும், அதனால் எற்பட்டுள்ள வேலை சுணக்கத்தினாலும் இதன் ஆதிக்கம் அதிகரித்து அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது.

  1948 ல் பிரபல உணவியல் நிபுணரான காட்லெவின் என்பவர் தான் முதன் முதலில் டென்சன் என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தினார். டென்சன் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்றால், மனித மனத்தின் சமநிலையின் சீரழிவால் வெளிப்படும் நிகழ்வைக் குறித்த சொல்லாகவே அது பிரயோகிக்கப்படுகின்றது. டென்ஷன் ஒருவர் தனக்குள்ளே அடக்கி அதனால் அவர் மட்டும் அவஸ்தைப்படுவதும் உண்டு. மேலும் ஒருவர் தனக்கு ஏற்பட்ட டென்ஷனால், தன்னைச் சூழ்ந்துள்ளவர்களையும் அவஸ்தை அடையச் செய்வதும் உண்டு.

  டென்ஷன் எப்படி மனிதருக்கு ஏற்படுகின்றது என்றால் ஒரு சில நேரத்தில் மனிதர் மேற்கொள்ளும் துரித செயல்பாட்டினால் அது துளிர்ப்பதும்  உண்டு. மற்றும் தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்பு கொண்டுவரும் ஏமாற்றம், ஒருவித பாதுகாப்பு அற்ற சூழ்நிலை ஏற்படுத்தும் பயம், ஒருவர் இருக்கும் இடம் மற்றும் அவர் இயங்கும் இடத்தில் ஏற்படும் அசவுகரியச் சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடிய அளவு இல்லாத திறமையின்மை, அத்தியாவசியத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவு, பொருளாதார நிலை என அதற்கான காரணத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.

  இன்றைய சூழ்நிலையில், டென்ஷன் முற்றிலும் இல்லாமல் இருக்க முடியாது. அதன் அளவு குறைவாக இருக்கும் படியும் அதிகமாகாதபடியும், ஒருவித பாதுகாப்பான நிலையில் நம்மை எப்படி தக்கவைத்துக் கொள்வது? என்பதை மட்டும் அறிந்து கொண்டால் போதும். உதாரணத்திற்கு, நம்மை சுற்றியுள்ளவர்கள் நம்மிடம் கொள்ளும் உறவுடன் ஒன்றிப் போய்விடுவதால், நாம் மற்றவரைப் புரிந்து கொள்ளும் விதம், மற்றவர் நம்மைப் புரிந்து கொள்ளும் விதம், இதற்கிடையில் ஏற்படும் இடைவெளியை, அதாவது சரியான தகவல் தொடர்பு இன்மையை எல்லாம், இழுத்துப் போட்டுக் கொண்டு திணறுவது போன்ற பல்வேறு விசயத்தில் கவனம் செலுத்தினாலே பாதி டென்ஷனை குறைத்து விடலாம்.

  மேலும், தாழ்வு மனப்பான்மையை எதிர்மறை எண்ணத்தை மேலோங்க விடாமல் பார்த்துக் கொள்ளுவது, நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததை விரும்பக் கற்றுக் கொள்ளுவது, நேர்மறை எண்ணத்துடன், அனைவருடனும் அன்யோன்யமாக பழகுவது, நல்லது, கெட்டது, நியாயம், தர்மம் முதலானவற்றை முறையாக கடைப்பிடிப்பதன் மூலமும், டென்ஷனில் இருந்து எளிதில் விடுபடலாம்.

  எந்தச் செயலைச் செய்தாலும் அதிலே தெளிவும், தைரியமும் கட்டாயம் இருக்க வேண்டும். நம் நிலையில் நாம் தெளிவாய் இருப்போமானால், எதையும், எளிதில் தைரியத்துடன் சமாளித்து விடலாம். அதாவது, இது நம் கட்டுப்பாட்டில் உள்ளது. இது நம் கட்டுப்பாட்டைக் கடந்தது என்ற தெளிவு இருக்கும் பட்சத்தில், பிரச்சனையால் ஏற்படும் முடிவை ஏற்றுக் கொள்ளுவது எளிதாகும்.

  எல்லாவற்றிற்கும் மேலாக நம் உடல் நலன், தான் உயிர்நாடி என்பதை அறிந்து, அதற்கு முதலிடம் தந்து மற்றைய பிரச்சனைகள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ள தெரிந்து கொள்ள வேண்டும். உடம்பு உறுப்படியாக இல்லாது. உலக ஞானத்தைப் பெறுவது, ஒன்றுக்கும் உதவாது என்ற உயரிய சிந்தனை, புத்தனுக்கு தோன்றிய பின்புதான், அவன் உடலை ஓம்ப சத்துணவை நாடினான். வலுவான உடம்பு வந்த பின்புதான், அவன் ஞானம் அடைந்தான் என்பது வரலாறு. ஓய்வும், உடற்பயிற்சியும், தேவையான அளவு தினம் தோறும் கொடுத்தாலே டென்ஷனால் ஏற்படும் மனப்பிரச்சனையை குறைத்து விடலாம்.

  வாழ்வில் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பது மன உளைச்சலுக்குத் தான் வழிவகுக்கும். குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் அதை நிறுத்தி வைத்தால்தான் ஓய்வு குறித்து உணர முடியும். ஓய்வில்லாத உடலும், மனமும் உருப்படாது. தேவையான ஓய்வு, நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்ச்சி அடையவும் உறுதுணையாய் அமைகின்றது. எதையும், ஏனிது நமக்கு நேர்கின்றது என்பதை மீண்டும் மீண்டும் யோசித்தோமானால், நிச்சயம் அதற்கான தீர்வு கிடைக்கும். எப்படி அதை யோசிப்பது என்றால், அது சம்பந்தமான புத்தகத்தை வாசிப்பது, அத்தகைய விசயத்தை ஏற்கனவே சந்தித்தவர்களின் ஆலோசனையை பெறுவது. நம் உள்ளுணர்வு, அது குறித்து நமக்கு சொல்லுவதைக் கேட்பது போன்ற பல்வேறு விசயத்தில் நம் கவனத்தைத குவிப்பதன் மூலம், அதற்கான சரியான தீர்வை எளிதில் நாம் அடையலாம்.

  ஒரு விசயத்தின், சாதக, பாதகத்தைச் சரியான முறையில் அதாவது, அவநம்பிக்கையை விட்டு நேர்மறை எண்ணத்துடன், அணுகினால் அதன் முடிவு எப்போதும் மனநிறைவு அளிக்கக்கூடிய வகையிலேயே அமையும் என்பது உறுதி.

  எப்போதும், எதையும் சரியானபடி, தெளிவான வகையில் திட்டமிடுங்கள், உங்கள் புறச்சூழலை, நல்லமுறையில் பேணிக்காத்துக் கொள்ளுங்கள். அதற்காக சில நஷ்த்தைக் கூட நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் பரவாயில்லை.  ஏமாற்று வேலையில் எப்போதும் இறங்காதீர்கள்.  அதிகப்படியாக பணிச்சுமையை ஏற்காதீர்கள். எதிலும், பாதுகாப்பற்ற உணர்வு நிலையை அனுமதிக்காதீர்கள். இவை எல்லாம் தான், மன அழுத்தத்திற்கும், இறுக்கத்திற்கும் மூல காரணமாகும்.

  நம் சக்தியை மீறிய செயல் பல உண்டு. நம் கட்டுப்பாட்டை கடந்து எழும் அத்தகைய முடிவுகளை, அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகும் போதுதான், நம் மன அழுத்தத்தை, இறுக்கத்தைக் குறைத்துக் கொள்ள முடியும்.

  “முயன்று பாருங்கள் டென்ஷன் இல்லாமல்,

  முடிவு நல்லதாகவே அமையும்”.