– 2017 – February | தன்னம்பிக்கை

Home » 2017 » February

 
 • Categories


 • Archives


  Follow us on

  இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பாதுகாப்பானது…

  வளங்களைக் காப்போம்

  வளமுடன் வாழ்வோம்

  இயற்கையைப் போற்றுவோம்

  இதமாய் வாழ்வோம்

  சுற்றுச்சூழலைக் காப்போம்

  சுகமாய் இருப்போம்

  மரங்களை வளர்ப்போம்

  மானிடம் காப்போம்.

  வனங்களை வளமாக்குவோம்

  மனங்களை நலமாக்குவோம்

  காடுகளை வளப்படுத்துவோம்

  நாடுகளை பலப்படுத்துவோம்

  வனங்களை வளமுடன் வைப்போம்

  வாழ்வை நலமுடன் வாழ்வோம்

  வனத்தை வளமாக்கு

  வாழ்வை நலமாக்கு

  இயற்கையை சேமியுங்கள்

  இன்பத்தை செலவளியுங்கள்

  இயற்கையைப் பாதுகாப்போம்…!

  இந்திய தேசத்தை வளர்ப்போம்…!!

  மரங்களின் மூச்சு வெளிக்காற்று

  மனிதனின் உயிர்க்காற்று…

  மக்கள் தொகையோ பெருகுகிறது

  மரத் தொகையோ சிறுகுகிறது

  சுற்றுச்சூழலோ கெடுகிறது

  மானிடமோ அழிகிறது

  மானிடா – மரத்தை வெட்டியது தான்

  இப்பூவுலகில் மனிதன் செய்த

  மகத்தான சாதனை

  இதுவே நம் நாட்டிற்கு பெரும் சோதனை.

  இதை நினைத்தால் மனதிற்கு வேதனை

  இனியாரும் மரம் வெட்டக் கூடாது என்று

  நாம் செய்வோம் போதனை

  மண் மலடாகிவிட்டது

  மழை மாய்த்து விட்டது

  நல்ல காற்று காணாமல் போய்விட்டது.

  காற்றுக்கருகி விட்டது.

  கொஞ்ச நீரும் மஞ்ச நீரானது

  அட அந்த கொஞ்ச நீருக்கும்

  கெஞ்ச வேண்டியுள்ளது.

  துப்பாக்கிதான் மனிதனை சுடும்.

  ஆனால், இன்று சூரியனோ

  மனிதனைச் சுடுகிறது.

  துப்பாக்கிக்கு மட்டுமா சுடத்தெரியும்.

  சூரியனுக்கும் சுடத்தெரியும்.

  மரம் நடுவோம்

  மானுடம் காப்போம்

  மரம் வளர்ப்போம்

  மனிதனைக் காப்போம்

  மரத்தைக் காப்போம்

  தேசத்தை வளர்ப்போம்

  தேசத்தை காப்போம்

  வளமுடன் வாழ்வோம்

  இயற்கையை நேசிப்போம்

  இன்பமுடன் வாழ்வோம்.

  மனதில் உறுதி வேண்டும்.

  பள்ளி இறுதித்தேர்வில் கைகள் இரண்டும் ஊனமுற்ற மாணவி தனது கால் விரல்களாளேயே தேர்வு எழுதி சாதித்ததை பத்திரிக்கையில் அண்மையில் பார்த்திருப்பீர்கள்.

  அவரால் மட்டும் அந்த சாதனையைச் செய்ய எப்படி முடிந்தது? எப்படியும் தேர்வு எழுதியேத் தீருவேன் என்ற மளாதா மன உறுதி இருந்ததால் தானே?

  எதையும் எவரும்ல் சாதிக்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதெல்லாம் இது தானோ?

  நாடு மனை இழந்து, நல்லதொரு துணை இழந்து, மகன் இழந்தும் பொருள் இழந்தும் மனதார பொய்யுரையேன் என்று கொண்ட கொள்கையிலவிருந்து கொஞ்சமும் விலகாத அரிச்சந்திரனின் மன உறுதி அனைவரும் அறிந்த ஒன்றே.

  இங்கிலாந்து செல்லும் முன் தன் தாயிடம் மது, மங்கை, மாமிசம் ஆகிய மூன்றினையும் மனதால் கூட தீண்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்து அதைச் சற்றும் பிறழாமல் கடைப்பிடித்த அண்ணல் காந்தியடிகளின் மன உறுதிக்க ஈடு உண்டோ இன்றளவும்!

  அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து புண்ணிய பாரதம் காக்க விடுதலை வேண்டி தன் இன்னுயிரையே தூக்கு மேடையில் அர்ப்பணித்த வீரன் பகத்சிங்கின் மன உறுதி என்ன மலிவானதொன்றா?

  மன உறுதியை ‘வைராக்கியம்’ என்று கூறலாம். சங்கல்பம், தீர்மானம், சபதம் என்றெல்லாம் கூட இதனை அழைக்கின்றோம். ‘வில் பவர்’ என்று ஆங்கிலத்தில் இது அழைக்கப்படுகிறது.

  ஒரு நல்ல தலைமைக்கு தலையாய அம்சம் அவரிடம் காணப்படும் உருக்கு போன்ற மன உறுதியே ஆகும். எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும், வெற்றியின் வெளிச்சத்தையே நோக்கும் குணமும், எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் அசாத்திய துணிவும், எத்தகைய விமர்சனங்களுக்கும் ஈடு கொடுக்கும் திறனும் அடிப்படையில் அம்சங்களாக கொண்டதுதான் ஒருவரது  மன உறுதி எனலாம்.

  நோகாமல் நோன்பு நோற்கிற மனப்போக்கே நம்மிடையே அதிகம் காணப்படுகிறது. அலட்டிக்கொள்ளாமல், ஆதாயம்  அடைகின்ற போக்கு அனைவரிடமும் உள்ளது.

  தயக்கமும், காரியம் சொதப்பி விடுமோ என்ற எதிர் மறை எண்ணமும் சேர்ந்து கொண்டு நம்மை செயலற்றுப் போக விடுகிறது. இவற்றையெல்லாம் தர்த்தெறிந்து விட்டு நாம் நினைத்த இலக்கை சென்றடைய நமக்குத் தேவையானது அளவற்ற மன உறுதியும், தியாக மனப்பான்மையும் தான்.

  ஊளைச் சதையை குறைக்க மருத்துவர் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி செய்யச் சொல்கிறார். ஆனால், நமக்கோ அதிகாலை அருமையான தூக்கத்தை இழக்க மனமில்லை. எழுந்து நடந்து  செல்ல சோம்பேறித்தனம். விட்டு விடுகிறோம். புலன் வழி இன்பம் வேண்டி கட்டுப்பாடு இல்லாமல் செய்ய வேண்டியதை செய்யாமல் கை விடுவதால் எதிர் விளைவுகளை தான் சந்திக்க வேண்டியவர்களாகிறோம்.

  காற்று வீசும் திசையினிலே பறப்பதற்கும், ஆறு போகிற போக்கிலே மிதப்பதற்கும் அசாதாரண பலம் தேவையில்லை. எதிர் நீச்சல் போட்டு எதிர்த்து நின்றாலே எதையும் சாதிக்க முடியும். புதுமைகள் உருவாகும். புது வழிகள் புலனாகும்.

  எல்லாம்  இழந்த நிலையிலும் இருப்பதை தக்க வைத்துக் கொள்ளும் திறமையைத் தருவது ஒருவரின் மன உறுதியே ஆகும்.

  தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டது. இனி ஒரு கணமும் தாக்குப்பிடிக்க முடியாது. மூச்சு முட்டுகின்ற நிலை. அத்தருணத்திலும் நம்பிக்கை இழக்காமல், மேலும் ஒரு  வினாடியாவது தாக்குபிடித்தாலே போதும். அடுத்த அலை நமக்கு ஆதரவாகவே மாறும்.

  எடுத்த காரியத்தில் எத்தகைய இடர்வரினும், முடித்தே தீருவேன். நில்வேன்; அஞ்சேன் என்று முன் வைத்த காலை பின் வைக்காமல் முழு முயற்சியுடன் முனைந்து நின்று உழைத்திட நம் மன உறுதி துணை நிற்கும்.

  மன உறுதி என்பது எல்லோருக்கும் கொஞ்சமாவது இருக்கும். அதனை மேலும் வளர்த்துக் கொள்வதோ, வியர்த்தாமாக்குவதோ அவரவர் கைகளில்தான் உள்ளது.

  மன உறுதி ஒருவரின் மெய் வருத்தக் கூலி தரும். கிடைக்கும் சமயங்களில் எல்லாம் இதனை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பழக பழக நாளடைவில் அந்த குணம் நமது இயல்பாகவே ஆகி விடும்.

  உண்மையில் ஒருவரது தன்னம்பிக்கையும், சுயக்கட்டுப்பாடும் மன உறுதி எனும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்களே ஆகும்.

  அதிகாலை துயிலெழுதல், உடற்பயிற்சி செய்தல், நேரம் தவறாமை, பணிகளை திருத்தமாக முடித்தல், கால நிர்வாகம் போன்ற பல நற்பண்புகளின் அடி நாதமாக விளங்குவது ஒருவரது மன உறுதியே ஆகும்.

  அது போல தீயப்பழக்கங்களான புகைப்பிடித்தல், குடிப்பழக்கம், போதையில் புரளுதல் போன்றவைகளை அடியோடு ஒழித்திட பெரிதியும் தேவைப்படுவது மன உறுதி ஒன்றே தான் இல்லையா? இதனால், நமக்கு மிச்சப்படுவது பணம் மட்டுமல்ல. உடல் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.

  நல்ல ஆன்மீக நூல்களைப் படித்தல், காந்தி, கலாம் போன்றோர்களின் சுய சரிதைகளை வாசித்தல், மானுடம் தழைக்க தங்கள் வாழ்நாட்களை அர்பணித்த மாமனிதர்களின் வரலாறுகளைப் படித்தல் போன்றவை நமக்கு அளவற்ற மன உறுதியை அளிக்க வல்லவை.

  கன்னியரும் காளையரும்

  தமிழனின் இரு கண்கள் வீரமும் , காதலும் ஆகும். வீரத்தின் அடையாளமாக இம்மண்ணில் ஏராளமான கலாச்சாரப் பண்பாடு மக்களிடையே பரவிக் காணப்பட்டது. ஆனால் காலப் போக்கில் பல அடையாள கலச்சாரங்கள் நம் கண் முன்னே அழித்து வருவதை நம்மால் பார்க்க முடிந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு இனம் இன்று தனது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் இழந்து வருகிறது, என்பதை நினைக்கும் போது மிகவும் மனவேதனை ஏற்படுகிறது

  இல்லையென்று வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமால் அள்ளிக் கொடுத்தது எம் தமிழ் இனம், வந்தாரை எல்லாம் வாழ வைத்து எம் இனத்தின் பெருமைக்கு இன்று சில அடையாளங்களை இழந்து வருகிறோம். அதில் முதன்மையானது வீரத்தின் அடையாளமாக போற்றிப் புகழ்ந்து வந்த ஜல்லிக்கட்டு ஆகும். இதை இப்போது சில மிருகவதை அமைப்புகள் தடைசெய்யபட்டுள்ளது. இது வெறும் ஜல்லிக்கட்டுல்ல தமிழனின் ரத்ததோடு ஒன்றாக கலந்து விட்ட கலாச்சாரமும் பண்பாடும் ஆகும். இந்த தடை விதிப்பு வளம் கொழிக்கும் தமிழகத்தின் வளத்தைக் குறைக்கும் பெரும் முயற்சி என்பதை தமிழர்களான நாம் ஒவ்வொரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.

  நாட்டு மாடு அழிப்பது நாட்டையே அழிப்பதாகும். வியப்பாக இருக்கிறதா? முழுமையாகக் கேட்பதற்கு முன் நீங்கள் நிற்கும் நமது தாய் மண்ணை ஒரு முறை முத்தமிட்டுக் கொள்ளுங்கள். இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம். தமிழன் மேடுபள்ளங்களை சீர்படுத்தி, செம்மைபடுத்தி விவசாயம் செய்ய முனைந்தான். அதற்குத் துணையாக  நாட்டு மாடுகளை தன் விவசாயத்திற்குப் பெரிதும் ஒரு பாதுகாப்பு கவசமாக உருவாக்கிக் கொண்டான்.

  நாட்டு மாடுகளை அழிக்கும் முயற்சிகளில் ஆங்கிலேயேர் செய்த சூழ்ச்சி

  அப்போது 1970 ல் இந்தியாவிற்கு வந்தார் இராபர்ட் கிளைவ். 1975 ல் தமிழகம் வந்த அவர் அங்கு கண்ட இரண்டு நிகழ்வுகள் அவனை புருவம் உயர்ந்த செய்தது. அதில் ஒன்று குருகுலக்கல்வி, மற்றொரு விவசாயமும் விவசாய நுணுக்கமும் ஆகும். இந்த செயல்பாடு அவனை மிகவும் உருத்தியது. இதனால் சூழ்ச்சியை கையில் எடுத்தான் அதில் முதன்மையானது பசுவதைக்கூடங்கள். இது விவசாயத்தின் கண்களில் ஊசி ஏற்றுவது போல் இருந்தது. 1760 ல் இது ஒரு மாபெரும் இயக்கமாகவே ஆகிவிட்டது, இந்த இயக்கத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பசுக்களைக் கொன்று குவித்தார்கள். ஒன்று இரண்டு என்று தொடங்கிய பசுவதைக்கூடங்கள் 1910 ம் ஆண்டில் 350 ஆக உயர்ந்தது.

  இதனால் மாட்டுச்சாணத்தையும், கோமியத்தையும் மட்டுமே பயன்படுத்தி குழிக்கு 71 படி அரிசி விளைவித்த தமிழன் முதன்முறையாக தடுமாறினான். அந்த இடைவெளியில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டவைதான் இரசயான உரங்கள். அந்த சந்தர்ப்பத்தில் தான் காங்கேயம் காளைகளும், அவற்றின் விந்தணுக்களும் வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

  நம்மவர்கள் செய்த சூழ்ச்சி, பசுவதைக் கூடங்களின் பெருக்கம்

  1929 ம் ஆண்டு வட்டமேஜை மாநாட்டிற்காக காந்தி- இர்வின் ஒப்பந்தம் நடைபெற்ற காலம் அது. பசுவதைக் கூடங்கள் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தியா சுதந்திரம் வாங்கும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும் என்றார்; மகாத்மா. பசுவதைக் கூடங்களை ஒழிப்பதே  என் முதல் வேலை என்றார் ஜவஹர்லால் நேரு. இந்தியா சுதந்திரம் அடைந்து, பொருளாதார வளர்ச்சியும் அடைந்தது. ஆனால் 350 ஆக இருந்த பசுவதைக்கூடங்கள் 30 ஆயிரமாக உயர்ந்தது. தலைநகர் டெல்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக்கூடங்கள். மணிக்கு 10 ஆயிரம் பசுக்களை கொல்ல ஓங்கி நின்றது இயந்திரவியல். அவற்றை சுத்தம் செய்ய நாளொன்றுக்கு முகத்தல் அளவை லட்சம் முறை துணிந்தது. அன்று வைத்த தீ தான் இன்றும் அணைய மறுத்தது.

  தேசியப் பொருளாதாரத்தில் மாடுகளின் பங்கு

  இன்றைய பொருளாதார புள்ளிவிவரப்படி இந்தியாவில் மொத்த மாடுகளின் எண்ணிக்கை சுமார் 720 இலட்சம். இவை, இந்த பாழாய் போன மனித இனத்திற்கு ஆண்டொன்றிக்குத் தரும் உழைப்பு மட்டுமே 3624 கோடியே 16 லட்சத்து 10 ஆயிரத்து 738. 255 குதிரைத்திறன். அதன் கழிவுகள் தரும் மின்சார உற்பத்தி மூலம் இந்தியாவிற்கு ஈட்டித்தரும் வருமானம் ஆண்டொன்றிக்கு 1. 83 ஆயிரம் கோடி. தமிழகத்தில் மட்டும் பால் சந்தையில் ஆண்டொன்றிக்கு மூன்றரை லட்சம் கோடி. மாட்டுச் சாணத்தின் மூலம்  20 ஆயிரம் கோடியும், விறகிற்காக வெட்டப்படும் ஐந்தரை லட்சம் மரங்களும் சேமிக்கப்படுகின்றன.

  தமிழகத்திலிருந்து பசுக்களும், காளைகளும் கறிக்காகவும் தோலுக்காகவும், தனிநபர் சுய லாபத்திற்காகவும் கொல்லப்பட்டால், இன்னும் நம் நாட்டில் விவசாயம் செய்ய 73 லட்சம் இழுபொறிகள் தேவைப்படும். அதற்கான முதலீடு சுமார் 2 லட்சம் கோடி. அந்த இழுபொறிகளை இயக்கத் தேவைபடும் எரிபொருளுக்கான செலவு, ஆண்டுக்கு 1. 16 ஆயிரத்து 375 கோடி, அந்த எரிப்பொருட்களின் புகை மட்டும் ஓசோன் படலத்தை முத்தமிடுமா? என்ன இந்த செலவுகளும், வேதனைகளும் ஒருபுறமிருக்க, ஆண்டொன்றிக்கு தமிழகத்திற்கான வருவாய் இழப்பு சுமாராக 16,56,70,00,00,00,000 ஆயிரம் கோடி.

  நம்முடைய காங்கேயம் காளை பிரேசிலில் 1 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது, நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்…?திராவிட மக்களே பெருமையாக கூறிக்கொள்ளுங்கள். நாம் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆனால் கடைசித் தலைமுறை விவசாயிகள்.

  இங்கே, இப்பொழுது தமிழ் கலாச்சாரம் அழித்து விட்டது என்று கூறும் சில நயவஞ்சகர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விழைகிறேன். எந்த தமிழனும் தங்கை உறவுமுறையில் இருப்பவளை திருமணம் செய்து கொள்வது இல்லை. தமிழனின் மூச்சு உள்ள வரை தமிழ் கலாச்சாரம் வாழும் வாழ வைப்போம்.

  காளை வெறும் விலங்கு மட்டுமல்ல. எம் வீட்டின் ஒருவன். எம் விரல் கொண்டு எம் கண்ணைக் குத்தும் உம் சூழ்ச்சிகள் நிலைபெறாது விலையும் போகாது. வீரம் மறைந்து, வீரியம் குறைந்து, வேற்றான் சூழ்ச்சியால் விவசாயம் துறந்து வெட்டியான் வேலை பார்ப்பவன் தமிழன் அல்ல.

  காளைய அடக்கினால் தான் திருமணம் செய்தும் கொள்ளுவேன் என்று வீரத்தின் அடையாளத்தை எம் சங்க கால மகளிர் பின்பற்றிய வந்தார்கள் என்பதை எங்களது வீரத்தை மார்தட்டிச் சொல்வேன்.

  ஜல்லிக்கட்டு என்பது என்ன?

  வீரம் விளைந்த தமிழ் மண்ணில், காதலோடு ஒரு மோதல் உறுதியோடு நின்று எருதோடு விளையாடு, இது குருதியின் வெளிப்பாடு என்று பண்டைய காலம் தொட்டே நமது பாரம்பரியத்துடன் தொடர்புடையது ஜல்லிக்கட்டு. இந்தப் பெயரைக் கேட்டாலே நம் கலாச்சாரத்தின் கம்பீரம் வெளிப்படும். ஒட்டு மொத்த தமிழர்களின் தெய்வீக மணம் கமழும். உழுவுத் தொழிலைத் தொடர்ந்து ஏறுதழுவும் துடிப்பான விளையாட்டு ஜல்லிக்கட்டு.

  ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே. அக்காலத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனையே மணமகனாகத் தேர்வு செய்தார்கள்.

  ஜல்லி என்பது விழாவின் போது  மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் சல்லிக்காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில்  கட்டிவிடும் வழக்கம் வந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப்பழக்கம் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது.  பேச்சு வழக்கில் அது மருவி ஜல்லிக்கட்டு என்று என்று மாறியது.

  பழந்தமிழ் இலக்கியங்களிலும், சிந்துசமவெளி நாகரித்திலும் ஏறுத்தழுவதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவதல்( மஞ்சு விரட்டல்) என்ற சொல் பழந்தமிழர் இலக்கியத்தில் காளையை அடக்கும்  வீர விளையாட்டின் பெயராய் விளக்கி வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் கொல்லேறு தழுவுதல் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

  புதுடெல்லியிலுள்ள தேசியக் கண்காட்சியகத்தில் உள்ள சிந்துவெளி நாகரீகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவதல் வழகத்தில் இருந்தது என்றும் அறிஞர்கள் கூறுவார்கள்.

  அன்றும் இன்றும் மண் அசையா சொத்து. ஆனால் மாடு அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை) கவர்வதே வம்பிக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரையை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலைக் கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். முல்லை நிலத்தவரைத் தவிர வேறு எந்த நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்தச் செய்தியும் இலக்கியத்தில் இல்லை. என்றாலும், இது தமிழர்களின் பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது.

  ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவை வெறும் விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்வியலின் வெளிப்பாடாக விளக்கவில்லை. காளையின் கொம்பைப் பிடித்தால் ஆண்மை, வாலைப்பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை. வாலைப்பிடித்தவன் காளையின் காலால் உதைப்பட்டு மண்ணிடை வீழ்வான். ஆதாலால் கொம்மை விற்று வாலைப்பற்றுதல் கோழயின் செயல். தோல்வியின் அறிகுறி. காளைப்போரில் வெற்றி பெற்ற இளைஞரை கன்னியரின் கயல்கள் வியந்து நோக்குகும் நயந்து பார்க்கும்.

  இலக்கியங்களில் ஏறுதழுவதல்

  பண்பாட்டுத் திருவிழாவாகவும். மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுத்தழுவுதல் பற்றி, இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இனி பார்ப்போம். கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பகுதிகளில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண் மீது அமர்ந்து ஏறுதழுவுதலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.

  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இந்த ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுகக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.

  பிடவம்பூ, செங்காந்தள் பூ, காயாம் பூ உள்ளிட்ட மலர்கள் அணிந்த ஆயர்கள், தம் காளைகளை அடக்குபவதர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்து, சிவபெருமானின் குந்தாலிப்படை தோன்ற மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அந்த எருதுகள் இடிஒலி போலமுழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. காளைகளை அடக்குபவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

  கிருஷ்ணர், ஏழு காளைகளை அடக்கி நப்பின்னை என்ற நீளாதேவியை மணந்தார், என்று நம்மாழ்வாரின் திருவாய் மொழியிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலில் எருதேழ் தழீஇக் கோளியர் என்று கிருஷ்ணரைக் குறிப்பிடுகிறார் நம்மாழ்வார். இதிலிருந்து துவார யுகத்திலேயே எருதுகளை அடக்கும் வீர விளையாட்டு வழக்கத்திலிருந்து என்பது புலனாகிறதல்லவா?

  மாட்டின வகைகள்

  தமிழ்நாட்டில் பல்வேறு மாட்டினங்கள் உண்டு. அதில் சில குறிப்பிட்ட மாட்டினங்களை மட்டும் பார்ப்போம்.

  காங்கேயம்

  தமிழ்நாட்டின் ஈரோடு, மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள காங்கேயம், தாராபுரம், பெருந்துறை, பவானி மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய வட்டங்களில் இம்மாடுத் தோன்றியது. இக்காளைகள் சாம்பல் நிறத்தில் காணப்படும்.

  பர்கூர்

  ஈரோடு மாவட்டத்தின் பர்கூர் மலையினைச் சுற்றியுள்ள பகுதிகளில் இம்மாட்டினம் காணப்படுகிறது. இம்மாட்டினம் பழுப்பு நிறத்திலும் நல்ல உடற்கட்டுடன் தென்படும்.

  உம்பலச்சேரி

  தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் அதிகளவு தென்படும். இவ்வகையான மாட்டினத்ûதை ஜாதிமாடு, மொட்டை மாடு, மோலை மாடு தெற்கத்தி மாடு என்று பல பெயர்களில் அழைப்பர். அது சிவப்பாகவும் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

  புலிக்குளம்

  தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், சேலம் போன்ற மாவட்டங்களிலும், கர்நாடகா போன்ற  மாநிலத்திலும்  அதிகளவு காணப்படுகிறது. அடர்ந்த சாம்பல் நிறத்திலும், கருப்புமாகவும் காணப்படும்.

  இளைஞர்களின் தன்னெழுச்சி;

  மாட்டுக்காக மகனையே பலிகொடுத்த மனுநீதி சோழன் இனத்தில் பிறந்த நாம் அனைவருக்கும் தெரியும் இது வெறும் மாட்டுக்காக நடக்கும் உரிமைப் போரல்ல எமது நாட்டுக்காக நடக்கும் உரிமைக்குரல் என்று. சிறுகன்றிலிருந்து வளர்க்கும் எந்த ஒரு வளர்ப்பாளனும் தம் கண் முன்னே வளர்ந்த காளை வதைப்படுவதை விரும்பி ரசிக்க மாட்டான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் இனத்தோடு தொடர்புடைய விளையாட்டை காக்க வேண்டும் என்பதால் மட்டுமே இதை பல ஆயிர ரூபாய் செலவு செய்து மாட்டை வளர்க்கிறான். நம் இனத்தின் கலாச்சாரம் அழிந்தால் நம் இனம் அழிவதற்கு சமம் என்பதால் நம் உரிமையை மீட்க போராடி வருகிறோம்.

  பீட்டா என்பது விலங்கு வதைகளைத் தடுக்குமாறு உருவான தன்னார்வல அமைப்பாகும். இந்த அமைப்பு அமெரிக்காவில் தோன்றிய அமைப்பாகும். இவர்களுக்கு தெரியாது நமது பண்பாடும் பாரம்பரியமும். உலகத்திலேயே சீறிக்கொண்டு வரும் காளையின் பிடறியைப் பிடித்து அடக்கும் வலிமையுடைய இந்த வீர தமிழனுக்கு மட்டும் உண்டு. இந்த வீர  விளையாட்டு நம் தமிழ் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது. வீரத்தின் அடையாளமாய் ஆண்டாண்டு காலமாய் நடைபெறும் எமது ஜல்லிக்கட்டை அழிப்பதை, தமிழனாய் பிறந்த எந்த ஒரு இளைஞனும் விரும்பமாட்டான். ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள் ஏன் அமெரிக்காவில் நடக்கும் காளை சண்டையை எதிர்க்க மறுக்கிறது. நமது அண்டை  மாநிலமான கேரளாவில் நடக்கும் யானை பந்தயமும். கர்நாடகாவில் நடக்குமும் குதிரைப் பந்தயத்தையும் நடப்பதை தடை செய்ய முடியவில்லை.

  இறுதியாக, ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இது எங்கள் வீர விளையாட்டு. இதில் காயப்படுபவனும், குத்துப்படுபவனும் விரும்பி தான் ஏற்கிறான். யாரையும் கட்டாயப்படுத்தி களம் இறக்கப்படுவதில்லை. நாங்கள் மாட்டுக்கு பொங்கல் விழா எடுக்கும் மாண்பை உடையவர்கள், சிவன் கோயிலுக்குச் செல்லும் போது கூட சிவனைப் பார்பதற்கு முன்னர் நந்தியை வணங்கி விட்டு தான் செல்வோம். நீங்கள் மாட்டை இறைச்சியாகப் பார்க்கிறீர்கள் நாங்கள் இறைவனாகப் பார்க்கிறோம். என் இனத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு என் பண்பாட்டு கலாச்சாரத்தின் அடையாளம் அதன் உரிமையும் பெருமையும் தமிழனுக்கு மட்டும் உண்டு.

  உணவு முறைகள்

  1.பாயாசம்

  சேமியா / அவல் – 30 கிராம்

  பால் – 100 மில்லி

  தண்ணீர் – தேவையான அளவு

  கரும்புச் சர்க்கரை – 20 கிராம்

  நெய் – 2.5 மி.லி.

  செய்முறை

  சேமியாவைத் தண்ணீருடன் சேர்த்து குழைவாகச் சமைக்கவேண்டும். கரும்புச் சர்க்கரையை நீரில் கலந்து வடித்து சேர்க்கவேண்டும். நன்கு வெந்தவுடன் நெய் சேர்த்துப் பரிமாறலாம்.

  சத்து விபரம் : கலோரி : 274.7 கி. கலோரி

  புரதம் : 5.7 கிராம்

  இரும்பு சத்து    :    3.5 மி.கி.

  2.கோதுமை பாயாசம்

  முளைகட்டிய கோதுமை மாவு – 30 கிராம்

  பொட்டுக்கடலை மாவு – 15 கிராம்

  வறுத்த நிலக்கடலை மாவு – 5 கிராம்

  கரும்புச் சர்க்கரை – 15 கிராம்

  நெய் – 2.5 மி.லி.

  செய்முறை

  முளைகட்டிய கோதுமை மாவை லேசான தீயில் வறுத்துக் கொள்ளவேண்டும். இதனுடன் வறுத்த பொட்டுக்கடலை, நிலக்கடலை மாவுடன் தேவையான அளவு நீர் சேர்த்து பசை போல் கலக்கி சமைக்க வேண்டும். முக்கால் பதம் வெந்தவுடன் கரும்புச் சர்க்கரையை நீரில் கலந்து வடித்து சேர்க்கவேண்டும். நன்கு வெந்தவுடன் நெய் சேர்த்து பரிமாறலாம்.

  சத்து விபரம் :

  கலோரி : 297.9 கிராம்

  புரதம் : 7.2 கிராம்

  இரும்பு சத்து : 4.0 மி.கி.

  3.கேரட் பாயாசம்

  கேரட்-½ கப் துருவியது

  வறுத்த அரிசி மாவு-½ கப்

  பால் – ½ கப்

  சர்க்கரை – 1 கப்

  நெய் – 1½ டீஸ்பூன்

  செய்முறை

  துருவிய கேரட்டை நெய்யில் (அ) எண்ணெயில் வறுத்துக் கொண்டு கூழாக அரைத்து கொள்ளவும். காய்ச்சிய பால், கேரட், அரிசி பவுடர் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை கலந்து கொண்டு லேசான தீயில் சமைக்கவும்.

  சத்து விபரம்:

  கலோரிகள் : 548.7 கிராம்

  புரதம் : 3.2 கிராம்

  இரும்புச்சத்து : 0.4 மி.கி.

  4.பாசிப்பருப்பு பாயாசம்

  வறுத்த அரிசி மாவு – 3 டீஸ்பூன்

  வேகவைத்த பாசி பருப்பு – 15 கிராம்

  பால் – 25 மில்

  கரும்பு சர்க்கரை – 15 கிராம்

  ஏலக்காய் – 1

  நெய் – 1½ டீஸ்பூன்

  செய்முறை

  காய்ச்சிய பால், பாசிப்பருப்பை கரைக்கவும். அத்துடன் கரும்புச் சர்க்கரையும் சேர்க்கவும். பின்பு வறுத்த அரிசி மாவுடன் சிறிது நீர் சேர்த்து வேக வைத்து அதையும் பாசிப்பருப்புடன் சேர்த்து பசை போல் ஆனவுடன் குழந்தைக்குக் கொடுக்கவும்.

  சத்து விபரம்:

  சக்தி : 151 கி. கலோரி

  புரதம் : 3.6 கிராம்

  இரும்புச்சத்து : 0.9 மி.கி.

  5.ரவை பாயாசம்

  வெள்ளை ரவை – 3 டீஸ்பூன்

  அரிசி பவுடர் – 3 டீஸ்பூன்

  சர்க்கரை – 3 டீஸ்பூன்

  பால் – 1 கப்

  அரிசி பவுடர் – 3 டீஸ்பூன்

  செய்முறை

  வெண்ணெயை வாணலியில் உருக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் ரவையைச் சேர்த்து வறுக்க வேண்டும். அத்துடன் பாலையும், சர்க்கரையையும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அரிசி மாவையும் கிளறிக் கொண்டே சேர்க்க வேண்டும். சிறிது நேரம் சூட்டில் சமைத்து பரிமாறலாம்.

  சத்து விபரம் :

  சக்தி : 250.4 கி. கலோரி

  புரதம் : 5.6 கிராம்

  இரும்புச்சத்து : 1.0 மி.கி.

  6.சோயா உணவு

  தாவர உணவு வகைகளிலே சோயாவில் தான் அதிக புரதம் உள்ளது. தயாரிப்பு முறை மற்றும் அதன் உணவு தயாரிப்பு வகைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

  100 கிராம் சோயா உணவு தயாரிக்கத்

  தேவையான பொருட்கள்

  கோதுமை (வறுத்தது) – 37.5 கிராம்

  பொட்டுக்கடலை – 18.8 கிராம்

  சோயாமாவு (வறுத்தது) – 6.2 கிராம்

  நிலக்கடலை (வறுத்தது) – 12.5 கிராம்

  கரும்புச்சர்க்கரை – 25.0 கிராம்

  செய்முறை

  கோதுமை, பொட்டுக்கடலை, நிலக்கடலை ஆகிய பொருட்களைக் கல் நீக்கிச் சுத்தம் செய்து தனித்தனியே வறுத்து மாவாக்கிக் கொள்ளவும். பின்பு வறுத்த சோயா மாவையும் சேர்க்கவும். பின்பு மேலே குறிப்பிட்டுள்ள அளவின்படி, கட்டிகள் இல்லாமல் நன்றாக பொடிக்கப்பட்ட நாட்டுச் சர்க்கரையுடன் ஒன்று சேர்த்து கலக்கவும். கலந்த மாவை சுத்தமான காற்றுப்புகாத பாத்திரங்கள் அல்லது பாலிதீன் பைகளில் நிரப்பி ஈரம் படாமல் பாதுகாப்பாக வைத்தால் மூன்று மாதங்களுக்குக் கெடாமல் இருக்கும். இதுவே சோயா அமிர்தம் எனப்படும். இதைக்கொண்டு கீழ்க்கண்ட உணவுகளைத் தயாரிக்கலாம்.

  7.சோயா அமிர்த லட்டு

  தேவையான பொருட்கள்    அளவு

  சோயா அமிர்தம் – 25 கிராம்

  கொதிக்கும் நீர் – 25 மி.லி.

  சோயா  உணவு கலவையைப் பொன்னிறமாக வறுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு கொதிக்கும் நீரை சிறிது சிறிதாகத் தெளித்து கெட்டியான உருண்டைகளாக பிடிக்கலாம்.

  சத்து விபரம்:

  சக்தி : 98 கிராம்

  புரதம் : 3.65 கிராம்

  இரும்புச்சத்து : 1.375 மி.கி.

  8.சோயா அமிர்த அல்வா

  தேவையான பொருட்கள் அளவு

  சோயா அமிர்தம் – 50 கிராம்

  மைதா – 25 மி.கி.

  சர்க்கரை (அஸ்கா) – 25 கிராம்

  நெய் (அ) எண்ணெய் – 13 மி.லி.

  முந்திரி – 5 கிராம்

  ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை

  தண்ணீர் – 175 மி.லி.

  1. மைதா மாவையும், சோயா உணவு கலவையும் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  2. சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கைவிடாது கிளறவும்.
  3. பாத்திரத்தில் ஒட்டாது சுருண்டு வரும்போது நெய் தடவி தட்டில் கொட்டி சமமாகப் பரப்பவும்.
  4. நெய்யில் வறுத்த முந்திரியை மேலே தூவவும்.
  5. ஆறிய பின் வில்லைகளாகப் போடவும்.

  சத்து விபரம்:

  சக்தி : 532.5 கிராம்

  புரதம் : 11.12 கிராம்

  இரும்புச்சத்து : 3.76 மி.கி.

  கொங்கு நாட்டுத் தங்கம்

  பொள்ளாச்சி அருட் செல்வர் பத்மபூசன் டாக்டர் என் மகாலிங்கம் அய்யா அவர்களுக்கு இந்திய அரசு பத்மபூசன் விருது வழங்கி கௌரவித்தது. இவருக்கு வாய்த்த விருதால் அந்த விருது பெருமை பெற்றது.

  தடம் பார்த்து நடந்தால் மனிதன்

  தடம் பதித்து நடந்தால் மாமனிதன்

  சிலர் வரலாறு படிப்பார்கள்

  சிலர் வரலாறு படைப்பார்கள்

  வைத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த

  அருட்செல்வர் அவர்கள் ஒரு வரலாறு படைத்த மாமனிதர், மாமேதையும் கூட

  பன்முக திறமைகளைக் கொண்ட வல்லுநர் அவர்,

  அருட்செல்வர் அவர்கள் ஒரு தொழிலதிபராக, அரசியல்வாதியாக, ஆன்மீக வாதியாக, அரசியல் வல்லுநராக, கல்வியாளராக, ஞான தான வள்ளலாக, தமிழ் வளர்த்த பெரியோராக, பொருளாதாரம் அறிந்த மேதையாக, வணிகத்தின் நுணுக்கங்களை அறிந்த வல்லுநராக, தொழில் அமைப்பின் துருவ நட்சத்திரமாக விளங்கி நாட்டிற்கு ஆற்றிய பணி அளப்பரியது. தமிழுக்காக இவர் செய்திருக்கிற தொண்டு இணை இல்லாதது.

  இராமலிங்க நற்பணி மன்றத்தின் தலைவராக இருந்து வள்ளலார் பெருமைகளை நாடு முழுவதும் பரவச் செய்த பெருந்தகை. விவசாயத்தைப் பற்றியும், கங்கை காவிரி நதி நீர் இணைப்பு பற்றிய அரசுக்கு ஆலோசனை கூறிய வித்தகர், சிறந்த கருத்துச் செறிவுடன் பேசுகின்ற பேச்சாளர், பல கட்டுரைகளை எழுதிய கட்டுரையாளர், அள்ளி அள்ளித் தந்த வள்ளல், வள்ளலார் நூல்களையும், கிடைத்தற்கரிய பழம் பெரும் நூல்களையும் புதுப்பித்து, பல்லாயிரம் தமிழ்ப்புத்தகங்களை மலிவு விலையில் வெளியிட்ட அருளாளர்.

  லெமூரியாக் கண்டம் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி தமிழ் மற்றும் தமிழ் மக்களின் பழம் பெருமையை உலகிற்குக் கொண்டு வந்து காட்சிப்படுத்திய ஆராய்ச்சியாளர்.

  எங்கள் தந்தையோடு சுமார் 50 ஆண்டு கால நட்பு கொண்ட பெருந்தகையாளர்.  என்னை தன்னோடு நெருக்கமாக வைத்து அழகு பார்த்த உத்தமர்.

  அருட்செல்வர் அய்யா அவர்களுக்கு பொள்ளாச்சியில்டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் பத்மபூசன் விருது பெற்றதற்காக, பொள்ளாச்சி மக்கள் சார்பில் ஒரு பாராட்டு விழா நடைப்பெற்றது. அதே விழாவில் பார்வையாளராக சிவநேயச் செல்வர் உடுமலை திரு முத்துக்குமாரசாமி அவர்களும், வழக்கறிஞர் திரு சோமசுந்தரம் அவர்களும் என் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களும், நானும் கலந்து கொண்டோம்.

  விழா முடிந்த பிறகு இதைப் போன்ற ஒரு பாராட்டு விழா அருட்செல்வர்க்கு உடுமலை மக்கள் சார்பிலே வைக்கலாம் என்ற கருத்தை நான் முன்மொழிந்தேன். என்னோடு இருந்த திரு லோகநாதன் அவர்கள் இதே சிந்தனை என் மனதிலும் தோன்றியது என்றார்கள் திரு முத்துக்குமாரசாமி அவர்களும் வழக்கறிஞர் திரு சோமசுந்திரம் அவர்களும் நன்றாகவே செய்ய வேண்டும் என்று வழி மொழிந்தார்கள்.

  அடுத்த நாள் லோகநாதன் அவர்களும் நானும் உடுமலை மக்கள் பேரவையின் தலைவரும், தமிழ்நாடு மாநில கம்ப மகாஜன சங்கத்தின் தலைவரும், தொழிலதிபருமான டாக்டர்.திரு கொங்குசாமி நாயுடு அவர்களுது இல்லத்திலே சந்தித்து இது பற்றி பேசினோம்.

  தொடக்கத்தில் அவர் பேச்சிலே தயக்கம் காணப்பட்டது. அவர் சொல்லும்போது பொதுவாக உடுமலையிலே ஒரு விழா எடுத்தால் சரியாக கூட்டம் வருவதில்லை. தமிழகம் அறிந்த ஒரு மனிதரை அழைத்து விழா  எடுக்கும் போது, சரியான கூட்டம் இல்லாமல் போய்விட்டால் அதனால் அந்த மனிதருக்கு கௌரவக் குறைவு ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.

  நானும் என்னுடன் இருந்த திரு லோகநாதன் அவர்களும் கூட்டம் பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் ஒப்புதல் இருந்தால் போதும் என்று குறிப்பிட்டோம். அவர் மகிழ்ச்சியோடு அதற்கு ஒப்புதல் தந்து விட்டு விழாவை சிறப்பாக நடத்துவோம் என்று சொல்லி, அடுத்தநாள் உடுமலை மக்கள் பேரவைக் கூட்டத்தைக் கூட்டினார்கள்

  உடுமலை வாழ் அனைத்து அமைப்புகள் மற்றும் சேவைச் சங்கங்களின் பிரதிநிதிகள் அந்தக்கூட்டத்திலே கலந்து கொண்டார்கள். விழா சிறப்பாக நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. பொறுப்பாளர்களுக்கு பணிச்சுமை இருக்கிறது. ஆதலின் திரு லோகநாதன் அவர்களும், நீங்களும் இதிலிருந்து ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு விழாவை முன்னின்று நடத்துங்கள் என்று ஒப்புதல் வழங்கினார்கள்.

  நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து அந்த குழு நண்பர்களான முன்னாள் அரிமா மாவட்ட ஆளுநர் திரு Er M. குருநாதன், வழக்கறிஞர் திரு. சி. பாலன், வியாபாரிகள் சங்கச் செயலர் திரு. எஸ். குமரன் அவர்கள் துணையுடன் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோம்.  உடுமலை நகரின் தொடக்கத்திலிருந்து விழ நடைபெறும் அரங்கு வரை, ஒவ்வொரு பிரிவிலும் அருட்செல்வர் அவர்களை வரவேற்று சிறப்பான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தனியார் நிறுவனங்களும் விரும்பி, மனமுவந்து, பிரியப்பட்டு பிளக்ஸ் போர்டுகûள் வைத்திருந்தார்கள். இந்த பணியை ஒருங்கிணைந்து செய்த பெருமை  நண்பர் திரு. A. லோகநாதன் அவர்களையே சாரும். விழாவில் அவரது பணி உன்னதமானது. போற்றிப்பாராட்டுதலுக்குரியது.

  இந்த நேரத்தில் ஒரு சில நிகழ்வுகளை பதிவு செய்ய விரும்புகிறேன். விழா நடத்தலாம் என்று முடிவு எடுத்த போது சில பொறுப்பாளர்கள் தங்களுக்கு பணி அதிகமாக இருக்கிறது என்று விலகிக்கொண்டார்கள். ஆனால், அப்படி விலகிக்கொண்டவர்கள் விழா அன்று அரங்கு நிரம்பி வழிந்து பார்வையாளர்கள் இடமின்றி அரங்கிற்கு வெளியே காத்திருந்ததைக் கண்டும் விழா நிகழ்வுகளின் ஏற்றத்தைக் கண்டும் மேடையிலே தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் மிகந்த முனைப்புக் காட்டினார்கள்.

  20.05.2007 ஞாயிற்றுக்கிழமை அன்று 5 மணியளவில் G.V.G. கலையரங்கத்தில் விழா கோலகலமாக தொடங்கியது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கூட்டம் அலை மோதியது. அனைத்து தரப்பினரும் அலை கடல் என திரண்டு வந்திருந்தார்கள்.

  டாக்டர் திரு. V. கெங்குசாமி நாயுடு அவர்கள் தலை ஏற்க, முன்னாள் உடுமலை நகரமன்றத் தலைவர் தொழிலததிபர் திரு. V. வித்யாசாகர் அவர்களும், அன்றைய சட்டமன்ற உறுப்பினர் திரு. C. சண்முகவேலு அவர்களும், உடுமலையின் அன்றைய நகர்மன்றத்தலைவர் திரு. C. வேலுச்சாமி அவர்களும் முன்னிலை வகித்தார்கள். திரைப்பட நகர், கலைமாமணி திரு. S. சத்யராஜ் அவர்கள் பாராட்டுரை வழங்கினார்கள். பேராசிரியர் முனைவர் நாவுக்கரசர் திரு. சோ. சத்யசீலன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். விழா குழுவின் சார்பில் நான் வரவேற்புரை ஆற்றினேன்.

  சிறப்பான முறையில் விழா நடந்து முடிந்த பிறகு, அருட்செல்வர் அவர்கள் பொள்ளாச்சி டாக்டர். மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் செயலாளர் திரு. Prof. C. ராமசாமி அவர்களிடம், “பொள்ளாச்சியில் விழா நடைபெற்றதை விட உடுமலைப்பேட்டையில் மிக நல்ல முறையில் சிறப்பாக விழா நடத்தியுள்ளார்கள். நமது சொந்த ஊரான பொள்ளாச்சியில் விழா எடுத்தது இயல்பு. ஆனால், உடுமலைப்பேட்டையில் இப்படி சிறப்பாக விழா ஏற்பாடு செய்து நடத்துவது என்பது உள்ளபடியே மிகச் சிறப்புக்குரியது. அந்த விழாதான் எனக்கு முழு மன நிறைவைத் தந்துள்ளது” என்று பெருமையோடு குறிப்பிட்டதாக C. ராமசாமி அவர்கள் சொல்லி மகிழ்ந்தார்கள்.

  சங்கிலித்தொடர்….

  சங்கிலித் தொடராக நினைவுகள் அமைவது இயற்கையான விஷயம். வாழ்க்கையின் நிகழ்வுகளும் அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளன. நாம் செய்யக்கூடிய பணிகளைக் கூட வரிசைப்படுத்தி, எதற்குப் பிறகு எதைச் செய்ய வேண்டும் என்று ஒரு சங்கிலித் தொடராகத்தான் அமைத்துக் கொள்கிறோம். பயணங்களில் கூட ஒரு இடத்திற்குச் சென்று அங்குள்ள அனைத்துப் பணிகளையும் சங்கிலித் தொடராக முடித்து, பிறகு அடுத்த இடத்திற்குச் செல்வது பணிகளை எளிதாக்குகின்றது.

  தேர்வில் சங்கிலித்தொடர்

  கடந்த பல வருடங்களாக பள்ளி, கல்லூரி, கால்நடை அறிவியல் முதுகலைப்பட்டம், கட்டுரைப் போட்டிகள், முதுகலை ஆங்கில இலக்கிய தொலைதூரக்கல்வி, நான்கு வருட போட்டித் தேர்வுகள், முதுகலை வணிகச்சட்ட மேற்படிப்பு என பல தேர்வுகளைச் சந்தித்ததே ஒரு சங்கிலித்தொடராக ஆகிவிட்டது. அதில் கண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, இன்னொரு சங்கிலித் தொடர் மனதில் ஏற்படுத்தும். சுந்தரேசன், இளம்பரிதி, இராம்பிரசாத் மனோகர், கோபி என நான்கு இளையவர்களோடு ரிலே ரேஸாக கற்குக் கொண்டதே ஒரு சங்கிலித் தொடராகும். திரு. முருகேசன், திரு மீனாட்சி சுந்தரம், திரு ஆனந்த், திரு. செங்கதிர் என்னும் மரியாதைக்குரிய மூத்தோர்களிடமிருந்து ஆரம்பித்து, இளைவர்களைச் சென்றடைந்த சங்கிலித் தொடர் அது. ஒரு உதாரணத்திற்காக என்று தாரளமாக கூறலாம். அறிவு ஒரு சங்கிலித் தொடராக பயணித்தது. ஏராளமான வலிமை சேர்ந்த நண்பர்களுக்கும், மூத்தோர்களுக்கும் நன்றியினை உரித்தாக்க வேண்டும். அந்தப் பணி ஜென்ம ஜென்மமாய்த் தொடரும்.

  காட்சியும் சங்கிலித் தொடரும்

  கன்னிமாரா நூலகம் குறித்து பள்ளிப்பருவத்திலிருந்து படித்திருந்தாலும், நாற்பது வயதுக்குப் பின்னர் தான் பழைய கட்டிடத்திற்குச் சென்று பார்க்கின்ற வாய்ப்பு அமைந்தது. திருவாளர். மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமை நூலகர். முப்பது வருடங்களுக்கு மேலாக கன்னிமாரா நூலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவரது நண்பர் திருவாளர். ஜெகதீசன் அவர்கள் மதுரை நூலகர். விருதுநகர் மாவட்ட விளையாட:ட மைதான அரங்கில் தினந்தோறும் மிக நீண்ட தொலைவு நடக்கும்  அரை, எதிர்பார்க்காமல் சந்தித்தும், அதன் பின்னர் அவருடைய சதுரகிரி மலையின் மீது ஏறித்திரும்பியதும் நல்ல அனுபவம். அன்று எனக்குத் தெரியாது; அந்த அறிமுகம் மற்றும் அளவளாவலின் காரணமாக, சங்கிலித் தொடராக கன்னிமார் காண்பேன் என்பது.

  அத்தகைய வியப்பூட்டும் கட்டிடம் ஒரு சில விஷேச நாட்களில் மட்டும் அனைத்து வாசகர்களும் உள்ளே சென்று பார்த்து இரசிக்க அனுமதிக்கின்றத. இதற்கு முன்பு பலமுறை கன்னிமாரா நூலகம் வந்திருந்தாலும், இந்த பழைய கட்டித்திற்குச் சென்று பார்க்க வேண்டும் என்பது, நூலகர் அழைத்தபொழுது தான் தெரியவந்தது. தமிழில் முதன்முதலில் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் பிரதிகள் உள்ளே வைக்கப்பட்டு இருந்தது. சங்கிலித் தொடராய் பழைய நினைவுகளைக் கோர்த்து இழுத்து வந்தது.

  ஆரம்ப காலங்களில், பனை ஓலைகளில் தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்ட பொழுது எழுத்தாணிகள் மூலம் குத்தப்பட்டு புள்ளிகள் வைக்கப்படவில்லையாம். அந்த வழக்கம் அச்சுப்பிரதிகள் வந்த பிறகும் சிறிது காலம் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. அதனை கன்னிமாரா நூலகத்தில் பார்க்க முடிந்தது.

  விடுமுறை நாட்களில் நூலகம் செல்ல வேண்டும் என்கின்ற ஒரே நல்ல சிந்தனையின் பலனாக, அற்புதமான பெல்ஜியன் வண்ணக்கண்ணாடிகள் மூலம் பாய்ந்து வந்த புத்தொளியோடு கூடிய அலங்காரமும், அழகும் பொதிந்த பிரமிக்கத்தக்க நூலகக்கட்டிடத்தை காண நேர்ந்தது. நூல்களின் சிறப்பும், நூலகங்களின் உன்னதமும் எத்தனை கட்டுரைகளில் திரும்பத் திரும்ப எழுதினாலும் தீராது. சமீபத்தில் பொறியியல் இளங்கலை படித்த மாணவர் ஒருவரிடம் உங்களுக்குப் பிடித்த திருக்குறளைக் கூறி அதன் பொருளைக் கூறுங்கள் என்று கேட்டபொழுது, அகரமுதல  என்கின்ற முதல் குறளே எனக்கு மிகவும் பிடிக்கும் அதன் அர்த்தம் என்னவென்று தெரியாது என்றார். நூலகத்தில் சென்று புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் அவருக்கு இருந்திருந்தால், ஒருவேளை பொருளோடு சேர்த்துப்படிக்கும் குறளார்வம் வந்திருக்கும். பொது அறிவுத் தேர்வுகள் எழுத நூலகங்கள் மிகவும் உதவும். நூலகத்தில் அரை மணிக்குள் வெளியே இரண்டு  மணி நேரம் படிக்கின்ற அளவு கவன கூர்மையுடன் படித்து விடலாம்.

  நூலகத்திற்குள், செல்லிடத்தொலைபேசியில்லாமல் அதில் உள்ள சமூக வலைத்தளங்கள் தேடுபொறிகளின் பயன்பாடு இல்லாமல் படிப்போமேயானால், ஒரு உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று உடற்பயிற்சி செய்வதற்கும், வீட்டிலேயே பயிற்சி ùச்வதற்கும் உள்ள வேறுபாடு. என்னவோ, அந்த அளவிற்கு கூடுதல் பலன் கிடைக்கிறது என்பது நான் அனுபவத்தில் கண்டதாகும்.

  உதாரணமாக, லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும் என்கின்ற புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம் என்று நூலகம் சென்றோம். மாவீரன் நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்துச் சென்று  கடுங்குளிரில் சிரமப்பட்டு மாஸ்கோவை அடைந்ததும், பயனில்லாமல் திரும்பிச் செல்கையில் பல சங்கடங்களுக்கு ஆளாகிய சூழ்நிலையை கிட்டத்தட்ட ஏழு இலட்சம் வார்த்தைகளில் எழுதிய கதை. ஆஸ்திரியா, ஜெர்மனி, போலந்து, பிரான்ஸ், இரஷ்யா என்னும் பல நாடுகளின் அரச குடும்பங்களும், இராணுவ அதிகாரிகளும், நிலப்பிரபுகளின் வீட்டுச்சீமாட்டிகளும் கலந்துரையாடும் வசனங்கள் அடங்கிய கதை. ‘உலகின் அனைத்து நாகரீகங்களைச் சேர்ந்தவர்களும் படிக்ல்க ஏற்ற புதினம் ’ என்று என்சைக்ளோபிடியா பிரிட்டானிக்கா நிறுவனமே பரிந்துரைத்த கதை.

  நாற்பது வயதைத் தாண்டிய பிறகாவது… நாம் உலகின் மிகச்சிறந்த புதினங்களில் தலையாயது என்று கருதப்படக்கூடிய இந்த புத்தகத்தை படித்து விடலாமே என்று விருப்பப்பட்ட எண்ணம், ஒரு வலிமையான சங்கிலியாக மாறிப்பிணைந்த்தன் விளைவு தான் அந்தத் தேடல். கிட்டத்தட்ட ஐநூற்றி முப்பத்தி ஒன்பது காதாபாத்திரங்கள் அதில் உள்ளன என்று எண்ணிக் கூறியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!  மஹாபாரத்தோடு ஒப்பிட்டு விடலாம் போல. பல வருடங்களாக ஆழ்ந்து படித்து கி.பி. 1805களில் நடந்த கதையினை படம்பிடித்துக்காட்டியிருக்கின்றார்கள். டால்ஸ்டாய், அதிலுள்ள சில வசனங்கள் கீழே….

  இளவரசர் போல்கோன்ஸ்கி, வாயினால் மட்டும் சிரித்தார். அவரது கண்கள் சிரிக்கவில்லை.

  ஜெனரல் அவர்களே, நான் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியவன் தான், ஆனால், அவமானங்களை சகித்துக்கொள்ள வேண்டியவன் அல்ல என்று தோலோகோவ் கணீரென்ற குரலில் கூறினான்.

  அழகிய நடாஷா, தன்னுடைய பெயர் சூட்டு விழாவில் திடீரென விருந்தினர் கூட்டத்தின் மத்தியில் சிறுவயது குழந்தையாய் ஓடிவந்து சிரிக்கும், அறிமுகக்காட்சியை டால்ஸ்டாய் கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். ஒரு திரைப்படக்காட்சியைப் போல  நடாஷாவின் கதாப்பாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு மேலே குறிப்பிட்டுள்ள மூத்தவர் திரு. டாக்டர் செங்கதிர் ஐ.பி.எஸ்., அவர்கள் தன் மகளுக்கு “நடாஷா” என்றே பெயர் வைத்துள்ளார். என்ன, ஒரு புத்தகத்தின் சங்கிலித்தொடர் உணர்வு!!

  கன்னிமாரா நூலகத்தில் இணையதளப்பரிவு ஒன்று தரைதளத்தில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்தது. அதில் ‘போரும் அமையும்’, குறித்த விளக்கவுரைகளைப் படித்து, கதையின் வாழ்க்கை வரலாற்றையும் உணர்ந்து கொண்டேன். பள்ளி மாணவனொருவன் படிப்பதைப் போல, ஒவ்வொரு சங்கிலி வளையமாக எடுத்து, தூய்மை செய்து, ஒன்றாக இணைத்து, பிறகு புதினத்தை வரிசை கிரமமாகப் படித்து ஒரு சங்கிலித்தொடராக அமைத்துக் கொள்ள அது உதவியாக இருந்தது.

  இணையதளமும் சங்கிலித்தொடரும்

  நவீன இரண்டாயிரத்து பதினேழில் நாம் காலடி எடுத்து வைத்திருக்கிறோம், சமூக வலைத்தலங்களும், வாட்ஸ் அப், டிவிட்டர், டெலகிராம், முகநூல் குழுக்களும் பல்கிப் பெருகி, நமது நேரத்தை பங்கிட்டுக் கொள்கின்ற சூழ்நிலை உண்டாகி இருக்கிறது. ஒரு குழுவில் நடக்கும் நிகழ்வில் இருந்து, அடுத்த குழுவில் புகைப்படம் பதிவிட்டு, அதன் பின் அலுவலக ரீதியான ஆவணங்களைப்படித்து பதிலிட்டு முகநூலில் நகைச்சுவை அல்லது விந்தை அல்லது வியப்பு நிறைந்த ùச்யதிகளைப் பார்த்து, தொலைதூரத்தில் நடக்கின்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. அதில் செலவிடும் நேரம் எவ்வளவு என்று ஒரு சின்னக் கேள்வி அவ்வப்போது எழுந்து உடனுக்குடன் அலட்சியப்படுத்தப்பட்டு விடுகின்றது. அதில் சங்கிலித் தெடராக ஒன்றிலிருந்து ஒன்றாகத் தாவி, மணிக்கணக்கில் கண்கள் சிவக்க கழுத்து வலிக்க செலவிடும் நண்பர்களுக்கும் இல்லாமல் இல்லை.

  “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது” என்றொரு திரைப்பாடல் சரியான நேரத்தில் காதில் ஒலிக்கிறது. இது நாகூர் ரூமி அவர்கள் சொல்லும் “தற்செயலே”!.

  “இணையதள விரதம்” என்றொரு வழக்கம் வைத்துக் கொள்வது நல்லது. கிட்டத்தட்ட இவ்வளவு மணிநேரம் நான் இணையதளத்தைப் பார்க்காமல் இருப்பேன் என்று குடும்ப, அலுவல், நட்பு, உறவு சூழ்நிலையை அனுசரித்து முடிவெடுப்பது நல்லது.

  “  Fomo” ஃ போமோ… Fear Of Missing Out

  என்றொரு உளவியல் குளறுபடி உள்ளதாம். அதாவது நமது “வாட்ஸ் அப்” “டெலகிராம் ”பதிவிற்கு எவ்வளவு பேர் பதில் போட்டிருக்கிறார்கள்? அல்லது நம் நண்பர்கள் அவர்களது செய்திக்கு பதில் போட்டோமா? மறுமொழி போடா விட்டால் கோபித்துக் கொள்வார்களா? என்கின்ற பதட்டத்தில், அடிக்கடி செல்லிடத்தொலைபேசியை எடுத்துப் பார்த்து, அதற்காகவே சிந்தித்து, சங்கிலித் தொடராக தன்னைச் சுற்றிக் கட்டிக் கொள்கின்ற மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகுகிறதாம்.

  சாலையில், பூங்காக்களில், சுற்றுலாத்தளங்களில் குனிந்து தலைகுத்தி எதையோ பறிகொடுத்து விட்டு தேடுவது போல அல்லது செல்ஃபோனில் நல்லது கெட்டதை எல்லாம் புகைப்படம் எடுக்கவே பிறந்தது போலாகிவிட்ட நம்நிலை, சங்கிலித் தொடரால் பிணைக்கப்பட்ட நிலையா? உண்மையாகவே நாம் இதனால் மகிழ்வாக இருக்கின்றோமா?

  இணைய தளம் பார்ப்பதால் கழுத்தில் எலும்பில் ஏற்படும் சிக்கல் குறித்தும், கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தச் சங்கிலிகளை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவோமாக!

  இப்படியாக, நாம் சங்கிலித் தொடராக, தேர்வில் இருந்து கன்னிமாரா நூலகம் வழியாக, இரஷ்யா வரை பயணித்து, பிரெஞ்சு கதையையும், இணையதள நடப்புகளையும் பேசியிருக்கிறோம். மீண்டும் அடுத்த மாதம் வேறொரு தலைப்பில் தொடர்வோம்!

  பணியாளர்களுக்கான பண்பு நலன்கள்

  “தன் குணம் குன்றாத தகைமையும் தாவில்சீர்

  இன்குணத்தார் ஏவின் செய்தலும் நன்குணர்வின்

  நான் மறையாளர் வழிசெல்லவும் இம்மூன்றும்

  மேன் முறையாளர் தொழில்”.

  என்று நல்லாதனார் தன்னுடைய திரிகடுகம் என்ற நூலில் குடிப்பிறப்பின் பெருமை பற்றி கூறியுள்ளார்.  குறைபடாத ஒழுக்கமும், அழிவு இல்லாத பெரும் புகழையுடைய நற்குணம் கொண்டோர் ஏவியதைச் செய்தலும், அறத்தின் இயல்பை அறிந்த வேதியர் கூறிய வழியில் நடத்தலும், ஆகிய இவை மூன்றும் மேன்மையுடையவரது தொழில்கள் என்று கூறியுள்ளார்.

  ஒவ்வொரு உடம்பிற்கும் சுவாசம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் ஒவ்வொரு தொழிலுக்கும் உயிர்மூச்சு ‘உழைப்பு’ ஆகும். அந்த உழைப்பைத் தருபவர்கள் பணியாளர்கள் அந்தப் பணியாளர்களையும், அவர்கள் செய்யும் தொழில்களையும் அனைத்தையும் மதிக்கும் மனப்பான்மை அனைவருக்கும் இருக்க வேண்டும்.

  “முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்

  அவர்கள் தன்னை கடைசியில் இருந்து பணியாற்றுவதாக

  பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள்தாம் சேவகர்களாக

  இருக்க முடியும்”. (மாற்கு: 9:35)

  என்று சேவை மனப்பான்மை பற்றி ஏசுகாவியம் கூறுகிறது. பணியாளர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக காற்றோட்டமான சூழ்நிலை, சுத்தமான தண்ணீர், சத்துள்ள உணவு மற்றும் பாதுகாப்பான உறைவிடம் இவற்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதுபோல் தங்களுடைய ‘மதி’ (Mind) ஆரோக்கியமாய் இருப்பதற்கும் அவர்கள் சில முயற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அது பற்றி, மேலாண்மை வல்லுஞர்கள் சொன்ன வழிமுறைகளைக் காண்போம்.

  முதலாம் வழிமுறை

  பணி செய்யும் இடங்களில் மூன்று விதமான பணியாளர்கள் உள்ளனர் முதல் பிரிவினர் எந்த வேலையிலும் நிலையாக இல்லாமல் மாறிக்கொண்டே இருப்பார்கள். இரண்டாவது பிரிவினர் தற்போது செய்யும் வேலையே போதுமானது என்று நினைத்து அடுத்த முன்னேற்றத்தை நினைக்காமல் இருப்பார்கள் மூன்றாவது பிரிவினர் எப்பொழுதும் உற்சாகத்துடன் பணிபுரிந்து, தான் உயர்வதுடன், தான் பணிபுரியும் நிறுவனமும் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பணியாற்றுவார்கள். ஒவ்வொரு நாளையும் புதிய நாளாகப் பாவித்து, புதிய சவால்களை சந்திக்க தயாராக இருப்பார்கள். மேலும் இவர்கள்

  “நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோ

  டின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ

  டொப்புர வாற்றிலறிதல் அறிவுடைமை

  நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்

  சொல்லிய ஆசாரவித்து”.

  என்ற ஆசாரக்கோவை – 1 ல் கூறியுள்ளபடி தனக்குப்பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல், பொறுமை, இனிமையான சொற்களையே பயன்படுத்துதல், எவருக்கும் தீங்கு செய்யாமை, கல்வியில் என்றும் நாட்டம் குன்றாதிருத்தல், நடந்து கொள்ளல், நுண்ணறிவு கொள்ளல், நல்லாரோடு சேர்ந்திருந்தல் போன்ற நற்குணங்கள் உடையவர்களாக இருப்பார்கள். முதல் மற்றும் இரண்டாம் பிரிவு பணியாளர்கள், மூன்றாம் பிரிவில்  உள்ள பணியாளர்களை கேலி செய்தும் அவர்களது முயற்சிகளைத் தடை செய்யவும் முயல்வார்கள்.

  “மனத்தின் அமையாதவரை எனைத் தொன்றும்

  சொல்லினால் தேறற்பாற்று அன்று”. (குறள்: 825)

  என்ற வள்ளுவரின் வாக்குப்படி உண்மையான அன்பு இல்லாமல், போலி வார்த்தைகளை பயன்படுத்துவரோடு நட்பு கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட கேடு தரும் நட்பைத் தவிர்க்கவும். மூன்றாம் பிரிவு ஊழியர்களுடன் சேர்ந்து பணிபுரிபவர்கள், தங்கள் மதிக்கான ஆரோக்கியத்தை தடையின்றிப் பெறுங்கள்.

  இரண்டாம் வழிமுறை

  பணியாளர்கள் தம்துறை அல்லாத மற்ற பணியாளர்களுடன் நட்புக்கொள்வதால் பொது அறிவும் நல்ல விபரங்களைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

  “நல்லாரைக் காண்பதுவும் நன்றே – நலம் மிக்க

  நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே

  நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே

  அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே”.

  என்று ஒளவை பிராட்டி, நல்ல சுற்றம் நல்லவற்றையை தரும் என்று தம் பாடலில் சொல்கிறாள்.  அதே போல் வள்ளுவர்

  “நவில்தொறும் நூல்நயம் போலும் பயிதொறும்

  பண்புடை யாளர் தொடர்பு”. (குறள்: 783)

  என்ற குறள் மூலம் சிறந்த நூல் தரும் மட்டில்லா மகிழ்ச்சியை நல்ல பண்புடையோரின் நட்பும் தரும் என்று கூறியுள்ளார். இந்த தரமான நட்பு வட்டாரம் பணியாளர்களின் ‘மதி’யில், நல்ல எண்ணங்கள் ஏற்பட வழிவகுக்கும். அதோடு இல்லாமல் அதன் வெளிப்பாடு அவர்கள் பணியாற்றும் இடத்திலும் பிரதிபலிக்கும்.

  மூன்றாவது வழிமுறை

  மனிதனின் ‘மதி வளர்ச்சிக்கான பயிற்சிகள், பணியிடங்களில் மட்டுமின்றி அவர்களின் குடும்பசூழ்நிலைகளிலும் நடைபெறுகின்றன. உதாரணமாக X,Y என்ற பணியாளர்கள், ஒரே நிறுவனத்தில் ஒரே மாதிரியான பணியாற்றுகின்றனர். இதில் ‘Y’ என்பவர் வாரத்தில் ஐந்து நாட்கள் பணியாற்றிவிட்டு மீதமுள்ள இரண்டு நாட்களை வீட்டில் தூங்கிக் கழித்துவிட்டு, அடுத்தவாரம்  முதல் நாள் எந்த வித உற்சாகமும் இன்றி சென்றார்,அதனால் அவரது பணியில் தளர்வு  உண்டானது. மதிநுட்பமும் மங்கத் தொடங்கி விட்டது. ஆனால் ‘X’ என்ற பணியாளர் வாரத்தில் ஐந்து நாட்கள் நிறுவனத்தில் உற்சாகமாகப் பணிபுரிந்தார்.

  மீதமுள்ள இரண்டு நாட்களை, தன் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், மனைவி குழந்தைகளுடன் பொழுது போக்குகளில் ஈடுபடுத்திக் கொள்ளுதல், நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்தித்தல் போன்றவற்றில் கழித்தார்.                            “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

  ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”. (குறள்: 43)

  என்ற குறளில் கூறியுள்ளபடி ஒரு இல்வாழ்வானுக்குரிய கடமைகளை சரியாகச் செய்து விட்டு அடுத்தவாரம் முதல்நாள் பணிக்குச் செல்லும்போது, அவர்தம் பணியில் அதிகமான உற்சாகத்துடன் ஈடுபட்டார். அதனால் அவரது மதியில் ஆரோக்கியம் ஏற்பட்டு பதவி உயர்வையும் பெற்றார். பெண் பணியாளர்கள், தங்கள் மூளைக்கான உழைப்பை நிறுவனங்களிலும் உடல் உழைப்பை தங்களது இல்லத்திலும் பகிர்ந்து செய்வதால் பல உயர் பதவிகளை அடைவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

  நான்காவது வழிமுறை

  புரளி (Gossip) பேசும் பணியாளர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வது பணியாளர்களுக்கான மற்றொரு பயிற்சி ஆகும்.. எப்படி ‘விஷம்’  உடம்பை உயிரிழக்கச் செய்யுமோ, அதுபோல் ‘புரளி’ பணியாளர்களின் ‘மதி’யை செயலிழக்கச் செய்துவிடும்.

  தவறான எண்ணங்களை 0% லிருந்து 100% ற்கு எடுத்துச் சென்று , செய்யும் தவறான செயல்கள் எல்லாம் 100% சரியானது என்ற மனநிலைக்கு கொண்டு சென்று விடும்.

  புரளியால் ‘மதி’ ஒரு பகைவனாக மாறி தவறான வழிக்கு அழைத்துச் செல்லும். தவறானவர்களின் வார்த்தைகள் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நச்சுக்கழிவுகளைப் போன்றது. தவறான வார்த்தைப் பிரயோகம், பணியிடச் சூழ்நிலையை மாசுபடச் செய்யும்.

  “நண்ணாத வஞ்சர் இடம் நாடி நெஞ்சம்

  நளிநொந்து நைந்து நவையாம்

  புண்ணாகி நின்ற எளியேனே”.

  என்ற பாடலில் வள்ளலார் கூறியபடி, வீண் புரளிகளால், பொறாமை, ஆசை, கோபம், கொடுஞ்சொல், காம இச்சை போன்றவைக்கு மதியானது அடிமைப்பட்டு, மனிதனுக்குரிய இயல்பை மறந்து அங்கு வஞ்சம் குடிகொண்டுவிடும். ஆகையினால் புரளி பேசும் சிற்றினமான பணியாளர்களிடமிருந்து அஞ்சி, ஒதுங்கி இருக்க வேண்டும்

  “முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

  வஞ்சரை அஞ்சப் படும்”. (குறள்: 824)

  என்ற குறள் மூலம் வெளியில் சிரித்துப்பேசி, உள்ளுக்குள்ளே தீமையை நினைக்கும் வஞ்சகருக்கு அஞ்சி ஒதுங்க வேண்டம் என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.  சேராத இடந்தனிலே சேர வேண்டாம். என்று ஒளவையும் எச்சரிக்கிறாள்.  எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டுமானால், புத்திதான் ‘முதல்’ கட்டளையை தெரிவிக்கும், அதை மனம் ஆராய்ந்து முடிவெடுக்கும். இந்தப் பயிற்சிதான் நல்லபணியிடைச் சூழ்நிலையை உருவாக்குகிறது. இதற்கு “ Be Still and Know”  என்ற முறையைக் கையாள வேண்டும். ஒரு நீர்நிலை அசைவில்லாமல் இருக்கும்போது வானத்தின் அமைப்பு அப்படியே பிரதிபலிக்ககிறது அதுபோல், மனம் சலமில்லாமல் தெளிவாக இருக்கும் போது, முழுமையாக வேலை செய்கிறது அடிக்கடி சோதித்துக்கொள்ள வேண்டும் என்று  மேலாண்மை வல்லுநர்கள் கூறுகிறார்கள். . தங்கள் பணிகளில் தங்கள் முழுத்திறமையும் காட்டி முத்திரைப் பதிக்க முடியும். வாழ்க்கையில் சாதனைப் படைக்க முடியும்.

  சாதாரணமானவன் எப்படி சாதனையாளனாகிறான்?…

  வங்கியில் பணியாற்றும் ஒரு நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்தவரின் மூன்றாவது மகன் முத்துராம். சிறுவயதாக இருக்கும் போது, அவர் தந்தை இவருக்கு கற்பித்த பாடம், ஏலே, நீ என்னைக்கும் ஒரு இடத்திலே வேலைக்குப் போ, மாத சம்பளம் வாங்கி வாழும் அடிமை வாழ்வை வாழ்ந்திடாடா? என்று தன் அனுபவத்தின் சாரத்தை, மகாகவி பாரதிக்கு அவர் தந்தை சொன்னது போல் சொன்னார்.

  அதுமட்டும் இன்றி, நீ எப்பவும் சுதந்திரத் தன்மையுடன் இயங்கவும், உன்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வளர்ச்சியை எட்டிப்பிடிக்கவும் வாய்ப்பு அதிகமாக உள்ள சுயதொழில் தான் செய்யனும் என்றும், அடிக்கடி அச்சிறுவனுக்கு அவர் தந்தை கீத உபதேசம் போல செய்தார்.

  அதன் விளைவு, அச்சிறுவன் Diplomo Machanical Engineering படிப்பை தனது 18வது வயதில் முடித்த மறுநாளே தான் படித்த கல்லூரிக்கு அருகில் உள்ள நிறுவனத்தில் உடனே வேலைக்குச் சேர்ந்து விட்டான். தன்னம்பிக்கையும், சுறுசுறுப்பும், ஆர்வமும் மிக்க அந்த இளைஞன் அந்த 8 மணி நேர உழைப்புக்கு பதில் 16 மணி நேர உழைப்பை கொடுத்ததின் விளைவு படிப்படியாய் அந்நிறுவனத்தில் பல பொறுப்புகளை வகிக்கும் வாய்ப்பு கிட்டியது.

  400 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த முத்துராமன், இரண்டே வருடத்தில் 2000 ரூபாய் சம்பளம் பெற்றதுடன், அந்நிறுவனம் கொடுத்த கார், வீடு என்று இடைவிடாது பணியாற்றி, முதலாளிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நிலைக்கு உயர்வு பெற்றார். 500 நபர்கள் வேலை செய்யக்கூடிய பாரம்பரியம் மிக்க நிறுவனத்தில் ஒருவன் வேலைக்கு சேர்ந்த இரண்டே ஆண்டில் மிக முக்கிய இடத்தை பிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

  முத்துராமனின் அப்பா, பையன் படித்ததும் வேலைக்கு போய் விட்டானே, பாவம் அவன் அங்கே போய் என்ன கஷ்டப்படுகிறானோ? என்று ஒரு எட்டு பார்த்திட்டு செலவுக்கு பணம் கொடுத்திட்டு வரலாம் என்று முத்துராமன் வேலை செய்யும் நிறுவனத்தில் காவலாளியிடம் சென்று, “யப்பா, முத்துராமன் எங்கே இருக்கான்? நான் அவன் அப்பா என்றார்”. உடனே காவலாளி சாருடைய அப்பாவா நீங்க வாங்க சார் அந்த ரூம்ல இருப்பாரு அங்கே போய் பாருங்க என்றார். இதை எதிர்பார்க்காத அவர் அப்போதே முடிவு செய்து விட்டார், இவர் பெரிய ஆளா வருவான் என்று.

  முன்னேற்றம், முன்னேற்றம் என்ற இழக்கை நோக்கி இடைவிடாது இயங்கும் முத்துராமனுக்கு நிறுவனத்தில் மேலும் பணியாற்ற விருப்பமின்றி, தனது முதலாளியிடம் எப்படி இதைச் சொல்வது என்ற தர்ம சங்கடத்தில் இருக்க, வேறு வழியின்றி ஒரு நாள் சொல்லிவிட்டான் என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று.

  அவன் நினைத்தற்கு எதிர்மாறாக, முதலாளியிடம் இருந்து பதில் வந்தது. அப்படியா முத்துராமன், சரி என்ன செய்யப் போறிங்க? என்றார். சுய தொழில் செய்யப் போரேன் சார் என்றவுடன் மனதார வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

  நாம பெரிய ஆளு, நாம் நின்னுட்டா, நிறுவனம் அவ்வளவுதான். ஒன்றுக்கும் ஆகாமல் போய்விடும் என்ற எண்ணத்தில் இடிவிழுந்தது.

  ஒரு நிறுவனத்தை நடத்தும் நிறுவனர், எந்த நிலையிலும் சந்திக்கவும், சமாளிக்கவும் திறமை கொண்டவராக இருக்க வேண்டும் என்ற பாடத்தை அன்றைக்கு முத்துராமன் கற்றுக் கொண்டேன்.

  சக ஊழியர்கள் எல்லாம், இவனுக்கு என்ன குறையாம், இவ்வளவு வசதி, எவன் செஞ்சு கொடுப்பான், இவனோட கெட்ட நேரம் வெளியே போய் கஷ்டப்படனும் என்று இருக்கு என்றார்கள். சாதாரணமானவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். சாதனையாளர்கள் நாம் முதலாளி போல் தான் இருப்பார்கள் என்று உணர்நதேன் அன்று.

  அந்த நேரத்தில் முன்னேற வேண்டும் என்கின்ற பொறி மட்டுமே என் கண் முன்னே இருந்தது. எதற்கும் எப்போதும் தாமதிக்கக் கூடாது, எதையும், உடனுக்குடனே, சுடச்சுடச் செய்து விட வேண்டும் என்ற என் இலட்சியமும் என்னை உசுப்பிவிட்டுக்கொண்டே இருந்தது.

  தீபாவளி போனஸைக் கூட பெரியாத நினையாது உடனே வேலையை விட்டு, அப்பா அந்த நேரத்தில் கொடுத்த 55 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் மதுரையில்  படித்த தொழிலை தொடங்கினேன். அது, அடி சரக்கு வியாபாரம் என்பது எனக்கு அப்போது தெரியாது. வெளியே, என் முகத்திற்கு முன்னே, நான் செய்யும் தொழிலை குறைவாக மதிப்பிடுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உடனே அதை விடுத்து Textile இயந்திர உபகரணங்களை வாங்கி விற்கும் தொழிலைச் செய்ய ஆரம்பித்தேன் சிறிய அளவிலே.

  தொழில் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று அப்போது கிடைத்த பணத்தை எல்லாம் சேர் மார்கெட்டில் அவ்வப்போது முதலீடு செய்து வந்தேன். அது சில காலத்தில், மிகப்பெரிய தொகையானது. சுமார் 21 லட்சம் ரூபாய் இருந்தது. திடீர் என்று அது ஹர்சத் மேத் பிரச்சமனையால், அந்த பணம் சரிந்து 1 லட்சமாகிவிட்டது. அந்த நேரத்தில் பல தொழிலதிபர்கள், தற்கொலை கூட செய்து கொண்டனர்.

  ஆனால், நான் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். நாம் ஒன்றும் கெட்டவழியில் பணத்தை இழக்கவில்லை, எப்படிப்போனதோ, அது போன்று அது தானாய் வரும் என்ற நம்பிக்கையுடன் உழைத்தேன். கிட்டத்தட்ட 9 வகையான தொழில் செய்து பெரிய இழப்பை எல்லாம் சந்தித்து, 20 வயதில், 20 லட்சம் கடன் தொகை ஏறி இருந்த போது, வீட்டில் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்கள்.

  நான் கடனை கட்டி முடித்தபின் திருமணம் செய்கிறேன் என்றேன். அது முடியாது என்று தெரிந்த அவர்கள், அந்த கடனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று வற்புறுத்தினார்கள். வேறு வழியின்றி ஒரு நிபந்தனையுடன் அதை ஒப்புக் கொண்டேன். நான் நல்லா இருக்கும் சமயம் அந்த இருபது லட்சத்தை திருப்பித் தருவேன் என்று.

  திருமணத்திற்குப் பிறகு ஒரு மாற்றம் ஏற்பட்டது. என்னுடைய இளைய வயதில் செய்யப்போகும் 9வது தொழிலாக, செராமிக் டைல்ஸ் தொழில் என்னை உயர்வான நிலைக்கு கொண்டு போய் நிறுத்தும் என்று தெரியாமல் 3 ஆட்களுடன், 350 சதுர அடி இடத்தில் டைல்ஸ் தொழிலைக் கோவை, ஆர்.எஸ்.புரத்தில் தொடங்கினேன்.

  “வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்தல்

  கூட்டு முயற்சியின் முபப்பலனை அடைதல்

  நல்ல நிர்வாகத்தை திட்டமிட்டு நடத்துதல்”… போன்ற

  உயரிய கொள்கைகளை முன்னிறுத்தி சென்றேன். இன்றைக்கு சுமார் 250 பணியாளர்களுடன் 300 கோடி விற்பனையை ஓராண்டிற்குள் எட்டுகின்றோம் என்றால் அதற்கு முழு முதற்காரணம், கடின உழைப்பு, கூட்டு முயற்சியே என்றால் மிகையாகாது. அளவாக சம்பாதித்தால் அது நமக்கு மட்டும் போதுமானது. அளவுக்கு மேல் சம்பாதித்தால் அது நாட்டுக்கானது என்ற கொள்கைப்பிடிப்புடன் இருப்பவன் நான் உயிர் மூச்சு உள்ளவரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தலையாய எண்ணமாகும்.

  சரியான நேரத்தில் நாம் சந்திக்கும் சரியான நபர்கள் நம்மை மிகப்பெரிய இடத்திற்கு அழைத்துச் சென்று விடுவார்கள் என்பது என் வாழ்விலும் உண்மையானது. என் அண்ணன் எனக்கு கிடைத்தது.

  அதுபோல், படித்த துறைதான் சமப்பாதிக்க முடியும் என்பதும், தவறானது என்பதை நான் பணிபுரிந்த நிறுவனத்தலைவர் கட்டிடப்பொறியாளர் துறையைப் படித்துவிட்டு இயந்திரப் பொறியியல் துறையில் கோடி, கோடியாய் சம்பாதிக்கும் போது, நாம் ஏன், இயந்திரத்துறையை படித்துவிட்டு, கட்டிடத்துறையில் தொழில் செய்து சம்பாதிக்க முடியாது? என்ற கேள்விதான் என்னை இந்த தொழில் புரிய உந்து சக்தியாக இருந்தது.

  அதுமட்டுமல்ல மக்களுக்கு அதிகம் தேவைப்படும் பொருளை விற்றால், அந்த வியாபாரத்தில் வெற்றி அடைய முடியும் என்பதும் ஒரு காரணம்.

  அளவுக்கு அதிகமான கடனை வாங்கி, தொழில், அடுத்தவன் போட்டிக்கு வராதபடி அதை பெரிய அளவில் நடத்திச் செல்ல ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் சும்ம வந்துவிடாது. நாம, நம்ம மேலே தெளிவா இருந்தால் மட்டும் அது வரும். என்னால் முடியும், அதற்கான தெளிவான திட்டம் என்னிடம் இருக்கிறது என்கிற பரிபூரண நிலை இருந்தால் மட்டுமே அது நடக்கும்.

  சராசரி மனிதனா, பிறந்து, வாழ்ந்து மடிந்து போவதா? வாழ்வு, நாமே, தப்பு தப்பா கணக்குப் போட்டு நம்மள நாம், தப்பு தப்பா இயக்கி, நம்ம வாழ்க்கையை நாம தோற்கடித்து விடுவது எவ்வளவு முட்டாள் தனம்.

  ஒருவர் ஈட்டியதைப் பார்க்க தெரிந்த உலகத்துக்கு அதற்காக அவர் இழந்ததை ஏறிட்டு பார்க்க தெரியாது. என்பதை உணர்ந்தவர்களுக்கு ஒருநாளும் துன்பம் வருவதில்லை.

  உலகத்தில் 1000 பேர் போட்டியில் கலந்து கொண்டால், அதுல 600 பேர் பாதியிலேயே நின்று விடுகிறார்கள். 370 பேர் முடிவை எட்டுகிற நேரத்தில் வாழ்வை முடித்துக் கொள்கிறார்ôகள். மீதமுள்ள முப்பது பேர் மட்டும்தான் ஜெயித்துக் காட்டுகின்றார்கள். இது இயற்கை. அந்த 30 பேருல நாம ஒருத்தரா இருக்கனும். என்று ஆரம்பத்திலே இருந்து திட்டம் தீட்டி செயல்படுபவன் தான் நிச்சயம் வெற்றியாளானாக விளங்க முடியும்.

  புதிய புதிய தோல்விகளை வெற்றியாளர்கள் சந்திக்க தயங்குவதில்லை. ஒரே தோல்வியை திரும்பி சந்திக்க அவர்கள் விரும்புவதில்லை. இந்த உலகில், ஒவ்வொருவரிடம் இருந்தும், ஒவ்வொன்றிடமும் இருந்து ஒன்றை கற்றுக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் யாரும் தெரிந்து கொண்டு வருவதில்லை. பொதுவாக வெற்றியாளர்கள் அனைவரின், அனுபவம், முயற்சியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே உள்ளது என்பதை என் வாழ்க்கை எனக்களித்த அனுபவத்தில் இருந்து நான் அதை உறுதி செய்கிறேன் கடையாக ஒரு வரி.

  பெரும்பாலும் சாதாரண மனிதர்களே, சளைக்காத உழைப்பால் சாதனையாளர்களாக உருவாகிறார்கள்.

  திசை மாறிய பயணம்

  தோல்வியும் வெற்றியும்

  குழந்தைகளுக்கு சின்னச் சின்ன தோல்விகளை ஏற்கவும், பழக்கப்படுத்துங்கள். சின்னச் சின்ன அவமானங்களைத் தாங்கும் மன உறுதியை ஊட்டுங்கள். நேரம் கிடைக்கும் போது, நீங்கள் அடைந்த தோல்விகளையும், அதிலிருந்து மீண்டு வந்த உங்கள் அனுபவங்களையும் பரிமாறிக் கொள்ளுங்கள். வெளியே கூட்டிச் சென்று வெளியுலக அனுபவங்களைக் கற்றுக் கொடுங்கள்.

  “தனி” யைத் தவிர்த்திடுங்கள்

  தனி அறை, தனி கைபேசி, தனிக்கணினி இப்படி எல்லாமே தனி, தனி என்று இருப்பதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள், முடியாதபட்சத்தில் அவற்ûக் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. அந்தக் கண்காணிப்பை, சில நேரங்களில் அவர்களுக்குத் தெரியாமலும், சில நேரங்களில் அவர்களுக்குத் தெரிந்தும் செய்வது நல்லது. ஆனால், அதே நேரம், அது அவர்களைச் சந்தேகிப்பது போல அமைந்து விடக்கூடாது. அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விடும். குறிப்பாக அவர்களின் மெயில் ஐடி, பாஸ்வோர்டு போன்றவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.

  ஆணுக்கும் உண்டு கட்டுப்பாடு

  இன்றைய சூழலில் பெண் குழந்தைகளுக்கு மட்டும்தான் கட்டுப்பாடு அவசியம் என்பதில்லை. ஆணுக்கும் மிகுந்த கட்டுப்பாடு அவசியமாகிறது. அவனது நட்பு வட்டம், வெளியே செல்லும் நேரம், திரும்பும் நேரம், வேறு ஏதேனும் கெட்ட பழக்க வழக்கம் போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். பெண்களை விட ஆண்களுக்குத்தான் கெட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகம்.

  தனியாக நீண்ட நேரம், கூடாது   

  ஆணோ அல்லது பெண்ணோ கைபேசியில் அழைப்பு வந்தவுடன் தனியாக ஒரு அறைக்குள்ளோ அல்லது வெளியே நின்றோ நீண்ட நேரம் பேசினால், கவனிக்க வேண்டும். இரவில் நீண்ட நேரம் தூங்காமல் குறுஞ்செய்தி அனுப்புதல் அல்லது பேசுதல் என கைபேசியோடு செலவழித்தாலும் கவனிக்க வேண்டும்.

  பெற்றோரை நிராகரித்தல்

  பெற்றோரை நிராகரித்தல், தனிமையை விரும்புதல், எப்போதும் சோர்வாக இருத்தல், அடிக்கடி தன் கைபேசியில் எதையோ எதிர்பார்த்தல், வீணாய்க் காத்தித்தல் போன்ற நடவடிக்கைகள் தென்பட்டால், உங்கள் மகன் அல்லது மகள் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்கள் அல்லது இனி சிக்க இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

  திட்ட வேண்டாம்

  உங்கள் மகன் அல்லது மகள் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி அதை உங்களிடம் சொல்லும்போது, ஆதரவோடு, கவனமுடன் கேளுங்கள். அதற்கான தீர்வைச் சொல்லுங்கள், எக்காரணம் கொண்டும் திட்டாதீர்கள். “நீ மேக்-அப் போட்டுட்டு போகும் போதே தெரியும் நீ ஏதாவது ஒரு பிரச்சனையில் கிக்கிட்டு வந்து நிப்பேன்னு” அல்லது “நீ பைக் வாங்கிக் கொடுங்கனு கேக்கும் போதே தெரியும், ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிட்டு வந்து நிப்பேன்னு” போன்ற வார்த்தைகளை உதிர்த்து? மனச்சிதைவுக்கோ, தவறான முடிவுக்கோ வழி வகுக்காதீர்கள். காரணம் உங்கள் மகன் அல்லது மகள் தவறு செய்யாதவர்களாகக் கூட இருக்கலாம்.

  ஆதரவு பேச்சு

  அவர்கள் பிரச்சனைகளை உங்களிடம் சொல்லும் போது, ‘இனி நாங்கள் இருக்கிறோம். கவலைப்பட வேண்டாம்’, என்ற நம்பிகையை ஊட்டும் விதமாக உங்கள் செயல், பேச்சு இருக்க வேண்டும். அதை அவர்கள் உணரும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் பிரச்சனையின் முழு ஆழத்தைப் புரிந்து தீர்வு காண முடியும்.

  உதவிக்கரம்

  பிரச்சனைக்கு ஆளான குழந்தைகளுக்கு பிரச்சனையின் ஆழம், பாதிப்பு, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நல்ல மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம். தேவைப்பட்டால் காவல் துறையின் உதவியை நாடலாம்.

  கட்டுப்பாடான சுதந்திரம்

  உங்கள் குழந்தைகளுக்கு எல்லாவற்றிலும் சுதந்திரம் கொடுங்கள். ஆனால், அது உங்கள் மகனையோ அல்லது மகளையோ அல்லது இவர்களால் மற்றவர்களையோ பாதிக்காத வண்ணம் ஒரு கட்டுப்பாடான சுதந்திரமாக இருக்கட்டும். தன்னம்பிக்கை மிக்க இன்றைய இளைஞர்கள் தான் வருங்கால இந்தியாவின் தூண்கள். வாழ்க வளமுடன்!

  வாழ நினைத்தால் வாழலாம்-2

  விடாமுயற்சி..

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே,

  முயற்சி திருவினை ஆக்கும்

  முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

  தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்

  மெய்வருத்த கூலி தரும்

  இவை விடாமுயற்சி பற்றிய முது மொழிகள்

  வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்

  சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்

  எண்ணித்துணிந்தால் இங்கு என்ன நடக்காதது?

  கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது? என்பது

  விடாமுயற்சியை விளக்கும் புது மொழி

  முயற்சி அனைவருக்கும் சொந்தம்- ஆனால் விடாமுயற்சி எப்போதும் வெற்றியாளருக்கு மட்டுமே சொந்தம் என்பதை இந்த சமூகமும், சரித்திரமும் நமக்கு பால பாடமாக பறைசாற்றியே வந்திருக்கிறது.

  விடாமுயற்சி, விரக்தியின் விளிம்பில் நிற்பவனின் கடைசி ஆயுதம்

  விடாமுயற்சி, தோல்விகளோடு போராடும் போராளிகளின் மனசுக்குள் பெய்யும் மழை.

  விடாமுயற்சி, வெற்றி வாசலை நோக்கி ஒரு படி முன்னேறுவது

  விடா முயற்சி, நம் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களின் முகத்திறமையை கிழிக்க உதவும் கத்தி.

  விடாமுயற்சி, தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றும் சாகசம் தெரிந்தவருக்கு உதவும் அஸ்திவாரம்.

  இமயமலை சிகரத்தில் ஏற முயன்று முடியாமல் பின்வாங்கும் போது ஒரு அறிஞன் சொன்னான் இந்த முறை வென்று விட்டாய்.  நான் மீண்டும் வருவேன், ஏனென்றால் உனக்கு இனி வளர்ச்சி கிடையாது. என் திறமைககளுக்கு வளர்ச்சி உண்டு. அவற்றை இன்னும் மேம்படுத்திக்கொண்டு திரும்ப வருவேன், வந்து உன்னை வெல்வேன்.

  இது அவரது விடாமுயற்சிக்குப் போட்ட விதை நெல் அல்லவா?

  வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் முதல், வியந்து போற்றும் விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள் வரை, நாம் காணும் அனைத்தும் நம் முன்னோர்களின் சம காலத்து சக மனிதர்களின் விடாமுயற்ச்சிக்கு கிடைத்த வெகுமானகங்ளே.

  செய்யாத குற்றத்துக்காக சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவன், தன் மீது சுமத்தியிருக்கும் குற்றங்களை மறுத்து, விடுதலையாக எடுத்த அனைத்து முயற்சிகளும் முடங்கிப்போவது கண்டும் மனம் தளரவில்லை.

  ஒருநாள் அவன் மனைவியிடமிருந்து ஒரு கடிதம். கையில் பணம் எதுவும் இல்லை வீட்டின் அருகே இருக்கும் தரிசு  நிலத்தை சரி செய்யவும் வழியில்லாமல், பசியும் பட்டினியும் பாடாய்படுத்துகிறது என்று புலம்பியிருந்தாள்.

  கம்பிகளுக்குப் பின்னால் இருந்தாலும் களைத்துப்போய் விடவில்லை கணவன். தன் முயற்சியினை விடாமுயற்சியாக்கி ஒரு முடிவெடுத்தான். மனைவிக்குப் பதில் கடிதம் போட்டான். பிழைப்புக்கு எங்கேனும் வேலை தேடு. நான் இதுவரை கொள்ளை யடித்துள்ள அனைத்து பணம் மற்றும் நகைகளை, நமது தரிசு நிலத்தில் தான் புதைத்திருக்கிறேன். நிலத்தை எதுவும் செய்யாதே. ஏனென்றால், நான் விடுதலையாகி வரும் போது எங்கு புதைத்தேன் என்று அடையாளம் தெரியாமல் போகும் என்று எழுதினான்.

  அடுத்த வாரமே மனைவி நேரில் வந்தாள் 2 நாட்களுக்கு முன் போலீஸ் வந்து டிராக்டரை வைத்து நம் நிலம் முழுவதையும் கிளறிவிட்டுச் சென்றுவிட்டனர். ஆனால், எந்த பணமும் நகையும்  கிடைக்கவில்லை- என்றாள்.

  கணவன் சொன்னான், உண்மையில் அந்நிலத்தில் நகை ஒன்றும் இல்லை. இப்படி ஒரு பொய்யைச் சொன்னால், போலீஸ் வந்து அதைத் தேடி எடுக்க நிலத்தைத் தோண்டுவார்கள் என்று நினைத்து, சும்மா சொன்னேன். நடந்து விட்டது. இனி நீ,நம் நிலத்தில் சில காய்கறிச் செடிகளை நட்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்வைத் தொடங்கு. நான் விரைவில் விடுதலை ஆகி வந்து சேர்கிறேன் என்றான்.

  விடாமுயற்சிக்கு இதை விட சிறந்த உதாரணம் உண்டா? வாழ்வதற்கே வழியின்றி தவிக்கும் போதும், விக்கித்து நிற்காமல் சிந்தித்தால் விடாமுயற்சியே விடையாகத் தெரியும்.

  மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்; மறு நாளை எண்ணாதே, இந்நாளே பொன்னாளாம்; பல்லக்கை தூக்காதே பல்லக்கில் நீ ஏறு. உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு, என்று முன்னேறத் துடிப்பவனுக்கு உற்சாக வார்த்தையை உச்சரித்திருக்கிறான் கவிஞன்.

  வாழ்க்கைப் பயணத்தில் பலரும் படும் சிரமம், அவர்கள் மனது அடிக்கடி முணுமுணுக்கும் வரிகள்.

  கல்லுக்குள் ஈரம் இல்லை நெஞ்சுக்கும் உறக்கம் இல்லை, ஆசைக்கு வெட்கம் இல்லை அனுபவிக்க யோகம் இல்லை, பைத்தியம் தீர வைத்தியம் என்றும் இல்லை நிலவுக்கும் வானம் உண்டு மலருக்கும் வாசம் உண்டு கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென்று என்ன உண்டு ஏன் படைத்தானோ இறைவனும் என்னை என்பது தான்.

  எந்த துன்பம் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் அசாத்திய துணிச்சல் விடாமுயற்சியை கொண்டவனுக்கே வரும்.

  எதிரிகளைப் பார்த்து யாரை நம்பி நான் பொறந்தேன்? போங்கடா போங்க, என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க என்று எதிர்க்க வைக்கும். நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக நினைத்தால் முடிப்பேன் தனியாக நீ யார் நான் யார் போடா போ என்று கர்ஜிக்க வைக்கும்.

  விடாமுயற்சியோடு வெற்றிகோட்டையில் பவனி வரும் மனிதருக்கு கவியரசர் தந்த பாட்டு இது. எத்தனை முறை மரத்திலிருந்து  கீழே விழுந்தாலும்- அதே கூட்டினை எடுக்காது தான் வசிக்க வேறு கூடு கட்டிக்கொள்ளும் விடாமுயற்சியை குருவியிடமிருந்து கற்கலாம்.

  குறைந்த பந்தில் வெல்வதற்குத் தேவையான ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் அதை சாதித்தும் காட்டிய வீரர்களிடமிருந்து கற்கலாம்.

  இப்படி இந்த உலகத்தில் நாம் காண்கின்ற திசைகளிலெல்லாம் யாரேனும் ஒருவர், அல்லது ஏதேனும் ஒன்று நமக்கு விடாமுயற்சி பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது, எனவே இந்த நிமிடமே, உங்கள் வாழ்வின் தேவை என்ன, நோக்கம் என்ன என்ற இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்.

  வழிகளை ஆராயுங்கள். புத்தகங்களின் உதவியைத் தேடுங்கள். ஞானிகளின் அறிவுரைகளைப் பெறுங்கள். அனுபவம் வாய்ந்த வெற்றியாளர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். நிச்சயமாக வெற்றி உங்கள் வாசலில் வந்து நிற்கும்.

  அதுமட்டுமல்ல, ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு, ஒரு ராஜகுமாரன் உண்டு, நல்லுறவும் உண்டு அதில் பரிவும் உண்டு என்று இந்த உலகமும் உங்களைபாடி உற்சாகப் படுத்தும். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில், வையகம் யாவும் உன் புகழ் பேசும், கைவசமாகும் எதிர்காலம் …