– 2017 – January | தன்னம்பிக்கை

Home » 2017 » January (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    விரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்

    தேடிச் சோறு நிதந்தின்று பல

    சின்னஞ் சிறுகதைகள் பேசி- மனம்

    வாடித் துன்பமிகு உழன்று பிறர்

    வாடப் பல செயல்கள் செய்து நரை

    கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்

    கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல

    வேடிக்கை மனிதரைப் போல

    என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து வருபவர்.  பாமாலை சூட்டி பரவசம் அடைந்த நவரசப் புலவர்கள் இம்மண்ணில் ஏராளமானோர் உண்டு. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இவரை நிச்சயம் சொல்ல வேண்டும். பாரதியின் கவிதைக்கு விடுதலை தான் மூச்சு, பாவேந்தர் கவிதைக்கு பகுத்தறிவு தான் மூச்சு, இவரின்  கவிதைக்கு சமூக அக்கறை தான் மூச்சு என்று சொன்னால் அது மிகையாகது.

    அதுமட்டுமின்றி இவர் தமிழ் மொழியில் எடுத்தியம்பாத இலக்கியங்களே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை .60 க்கும் மேலான நூல்களும், 150 க்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளும், எழுதியுள்ளார். இவரின் மேற்பார்வையில் 48 மாணவர்கள் பி. எச்டி பட்டமும், 100 க்கும் மேலான எம்ஃபில் பட்டங்கள் பெற்றுள்ளார்கள். கலைமாமணி, ஆட்சிக்குழு உறுப்பினர்,சிறந்த கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகத்திறமைக் கொண்டிருக்கும் கலைமாமணி முனைவர் தே. ஞானசேகரன் அவர்களின் அனுபவ பகிர்வு இனி நம்மோடு….

    என்னுடைய பெயர் தே.ஞானசேகரன், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள சாந்திபுரம் எனும் குக்கிராமத்தில் 12. 05. 1960 ஆம் ஆண்டு பிறந்தேன். பெற்றோர் சா. தேவராஜ. ஞானம்மாள். என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று பேர். முதலாமவர் தினகரன், விவசாயம் பார்க்கிறார். இரண்டாமவர் மதியழகன், வேளாண் அதிகாரி, முன்றாமவர் முனைவர் செயபாலன் ஊட்டி, அரசு கலைக்கல்லூரியில் விலங்கியல் துறைப் பேராசிரிராகப் பணியாற்றுகிறார். அவரது மனைவி.

    சி. கஸ்தூரிபாய் இல்லத்தரசி, மகன் அறிவழகன் மேலாண்மைத் துறையில் பிஎச்டி பட்டம் பெற்று இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வுக்குத் தன்னைத் தயார் செய்து வருகின்றார். இது தான் என்னுடைய குடும்பமும் பின்னணியும் ஆகும்.

    என்னுடைய தந்தை 1940 களில் எட்டாம் வகுப்பு வரை படித்தவர். அந்தக் காலக்கட்டத்தில் இந்தப் படிப்பிற்கு ஏராளமான அரசாங்கப் பணிகள் வீடு தேடி வந்தது. ஆனால், விவசாயத்தை விரும்பிய அவரால் வேறு எந்த பணிக்கும் செல்ல விரும்பவில்லை. அதே போல் என்னுடைய தாயார் ஆரம்பப் பள்ளி வரை மட்டுமே படித்தவர் ஆனாலும் அவரின் அனுபவம் மிகவும் ஞானம் மிக்கது;

    தொடக்கக் கல்வியை எனது கிராமத்தருகே உள்ள விராலிமலையன்பட்டியிலும், பள்ளிக்கல்வியை 6ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி., வரை வத்தலக்குண்டு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் பி.யூ.சி முதல் இளங்கலைப் பட்டத்தை மதுரை வக்புவாரியக் கல்லூரியிலும், முதுகலைப்பட்டத்தை மதுரை யாதவர் கல்லூரியிலும், எம்ஃபில் மற்றும் பி.எச்.டி., பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் பயின்றேன்.மதுரைப் பல்கலைக்கழகச் சூழல் சமூகவியல் சிந்தனைகளையும், நுணுகிய ஆய்வுப் போக்கையும் கற்றுத்தந்தது என்பது கூடுதல் சிறப்பு.

    நான் இளங்கலை பொருளியல் தான் பயின்றேன். எங்கள் கல்லூரி ஆண்டு விழாவிற்கு  வார்த்தை சித்தன் வலம்புரிஜானும், யாதவர் கல்லூரி முதல்வர் தமிழ்க்குடிமகனும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள்.

    இந்த இதழை மேலும்

    மெய்நிகர்

    ‘மெய்நிகர்’ உன்னும் சொல்லை நாம் ‘பொய்’ என்று கருதிவிட இயலாது. ‘மெய்நிகர்’ என்றால் ‘மெய்’ அல்லது உண்மைக்கு ஒப்பான அல்லது உண்மைக்கு அருகில் உள்ள விஷயம் என்று கருதலாம். உண்மை என்பதும், மெய்நிகர் என்பதும், அருகருகே இருந்தாலும் வேறுவேறு தான். சிறிது நேரம் மெய்நிகராக இருப்பது, சற்று நேரம் கழிந்து மெய் அன்று என்று பொருள் கொள்ளப்படுவதும் உண்டு. உண்மை பல்வேறு சதவிகிதங்களில் பொய்யுடன் கலந்து காணப்படுவதால், அதன் தாக்கம் போல குறிப்பிடலாம் என்றும் தோன்றுகின்றது. இந்தக் கட்டுரையில் தரப்படும் பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் மெய் சிலிர்க்கும் மெய் நிகர் அனுபவங்களாக இருக்கக்கூடும்.

    விசாகபட்டினத்தில் சந்தித்த கமேண்டர் (BREEZ ANTONY) பிரீஸ் ஆண்டனி அவர்கள் ஒரு கன்னரி (GUNNERY) ஆஃபிஸர். கன் (GUN) என்பது துப்பாக்கியின் ஆங்கில ஒலிபெயர்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் தனது நீர்மூழ்கிக் கப்பல் அனுபவங்களை மிகவும் தத்ரூபமாக பகிர்ந்து கொண்டார். நீர்மூழ்கி குறித்த ‘தாஸ் பூட்’ என்னும் ஜெர்மன் மொழியில் எடுக்கப்பட்ட பழைய திரைப்படம் ஒரு மெய்நிகர்ப் படமாகும். மிகுந்த பொருட்செலவில், உண்மையான நீர்மூழ்கியில் இருந்த நட்டு போல்ட்டெல்லாம் எப்படி இருந்ததோ, அதைப்போலவே தத்ரூபமாக  அமைக்கப்பட்டிருந்த மாதிரிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாம்.

    கிட்டத்தட்ட தரைமட்டத்திலிருந்து பன்னிரண்டு அடி உயரம் வரை, அந்த உருளையான  நீர்மூழ்கிக் கப்பலின் உடல் வடிவத்தை தூக்கி மாட்டினார்கள். அங்கிருந்து ஊசலாட விட்டார்கள். அதற்குள்ளே நடிகர்கள் இருப்பார்கள். அதன் பிறகு நீர்மூழ்கி, மேல் உள்ள நாசகாரி கப்பலில் இருந்து போடப்படும்.  ‘அன்டர் வாட்டர்’ சார்ஜ்கள் எனப்படும் நீரின் கீழ் வெடிகுண்டுகள் வெடித்து தாக்குகையில், அச்சமூட்டும் வகையில் ஆடும், அதிரும், குலுங்கும். இதை தத்ரூபமாக மெய்நிகர் அனுபவமாக படம்பிடிக்க வேண்டி, அந்த பன்னிரண்டு அடி உயரத்தில் கிரேன் மாதிரியான கருவிகள் மூலம் மொத்த உருளையையும் குலுக்கினார்களாம். உள்ளே இரயில் வண்டி போல அடுக்குப் படுக்கைகளில் படுத்திருந்தவர்கள், உருண்டு தடுமாறி விழுவது நிஜம் போலவே இருந்ததன் காரணத்தின் படப்படிப்பு குறித்து படித்த பொழுது புரிந்தது.

    பிரீஸ் (BREEZ) என்கின்றசொல்லுக்கு தென்றல் என்று பொருள். தமிழில் பெண்பாற் பெயராக உள்ள சொல்லில் உங்களுக்கு எப்படி பெயர் வந்தது; என்று கேட்டபொழுது, அழகான ஒரு காரணம் கூறினார். கடுமையாக உழைத்துக் களைத்தவன் வேர்வை பொங்க ஒரு மரத்தடியில் சற்றேகண் அயர்ந்தால், அந்த வேளை வானம் தன் வெயிலை குறைக்கின்றது. காற்று தென்றலாகி அவரின் வேர்வையை உலர்த்துகிறது. அப்பொழுது சிரமபரிகாரம் ஏற்படும். அந்த உணர்வை, நீ, சுற்றியுள்ளோருக்குத் தர வேண்டும் என்பதற்காக எனக்கு பிரீஸ் ஆண்டனி என்று பெயர் வைத்தாக அவருடைய தந்தை கூறினாராம். அற்புதமான நோக்கம். என்ன ஒரு மனப்பாங்கு என்று வியந்து போனேன்.

    பிரீஸ் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் நீர்மூழ்கிக்குள் சென்றால் அவருக்கும் காற்று குறைவாகத்தான் கிடைக்கிறது. அழகான நகமுரன் நீர்மூழ்கிக்குள் காற்றோட்டம் என்பது ஒரு பெரிய ஆடம்பரம். நீர்மூழ்கிகள் சதா கண்காணிக்க வேண்டும் அல்லது கண்காணிக்கப்பட வேண்டும். இரண்டாம் உலகப்போர் மூண்ட சமயம், சூரியன் மங்காத ஆங்கிலேயே சாம்ராஜ்ஜியத்தின் கடற் படையை -அதன் கப்பல்களை, துறைமுகத்தில் முடங்கித் தூங்க வைத்த யூ போட்டுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்களின் சரிதம் உலகறிந்தது.

    இந்த இதழை மேலும்

    புத்தாண்டு சிந்தனைகள்

    2017 புத்தாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2016 ம் ஆண்டு நம் நினைவலைகளிலிருந்து சற்று விலகிச் செல்கிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக இயல்தானே?

    மகிழ்ச்சி, துக்கம், சாதனை, வேதனை, போட்டி, பொறாமை, ஏமாற்றம், ஏக்கம் என எவ்வளவோ சந்தித்திருப்போம். இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக அமையட்டும் என்று எண்ணி புத்தாண்டு சபதங்களை, உறுதிமொழிகளை ஏற்போம். அது நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.

    உலகில் பிறந்த எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் துயரத்தை, சோகத்தை சந்தித்தவர்களாகத் தான் இருப்பார்கள். ஆனால், சிலர் உடனடியாக அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு வந்து விடுகிறார்கள். பலர் அதிலேயே சிலகாலம் தத்தளித்து பிறகு மீண்டு வருகிறார்கள். இன்னும் சிலர் அதிலேயே மூழ்கிவிடுகிறார்கள். மீண்டு வருவதே இல்லை.

    சோகத்திற்கு முக்கியமானது காரணம் இழப்பு. பதவி, புகழ், கௌரவம் போன்றவற்றை இழந்து தவிப்பது ஒருவகை. பணம், பொருள், சொத்து போன்றவற்றைப் பறிகொடுத்து தவிப்பது இரண்டாவது வகை. உறவுகளை நண்பர்களை காலனுக்கு கொடுத்துவிட்டு பரிதவிப்பது மூன்றாவது வகை. இம்மூன்றில் இறப்பு ஏற்படுத்தும் சோகம்தான் உச்சம்.

    ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒருமுடிவு தவிர்க்க முடியாதது. ஓட்டப்பந்தயப் போட்டியில் ஓர் எல்லை இருக்கிறது. அந்த எல்லையைத் தொட்டு விடலாம் என்ற எண்ணத்தில் தான் ஓடுகிறார்கள். எல்லையே இல்லாவிட்டால் யார் ஓடுவார்கள்? எதை நோக்கி ஓடுவார்கள்? வாழ்க்கையும் ஒரு ஓட்டப்பந்தயம் தான்!.

    மண்ணில்  தோன்றிய ஜீவன்கள் அனைத்திற்கும் மறைவு என்பது நிச்சயம் உண்டு. பூத்த பூ, காயாகி, காய் கனியாகி, கனி விதையாகி, விதை விருட்சமாகிறது. ஒன்றின் மரணம் மற்றொன்றின் ஜனனம். இது இயற்கை கற்றுத் தருகிற வாழ்க்கைப்பாடம்.

    மனிதன் பிறக்கும்போதே அவனுடைய இறப்பும் நிச்சயிக்கப்படுகிறது ஆனால், வாழும்போது பிறந்த தேதி தெரியுமே அன்றி, மறையும் தேதி தெரியாது. வாழ்க்கையின் ரகசியம் அங்குதான் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. அந்தநாள் நம்மைத் தீண்டும்வரை இருப்பவர்களை நேசித்து, எஞ்சி உள்ள வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்.

    சோகத்தை விலக்கு

    கடந்தகாலம் என்பது எல்லோருக்கும் உண்டு. அதில் மகிழ்ச்சியும் இருக்கும், சோகமும் இருக்கும். மகிழ்ச்சியை நினைத்துப் பார்க்க வேண்டும். சோகத்தை மறக்கப்பார்க்க வேண்டும்.

    கால்குலேட்டரை உபயோகிக்கும் போது ஒரு கணக்கு முடிந்த பின்பு அதை அழித்து விட்டு அடுத்த கணக்கு போட்டால்தான் சரியான விடை கிடைக்கும். போட்டு முடித்த கணக்குடன் தொடர்ந்து போட்டுக்கொண்டிருந்தால் தவறான விடைதான் வரும். இது நம் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

    கசப்பான பழைய நினைவுகள் நிம்மதி இழக்கச் செய்யும். அவற்றையே நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாழாக்கிக் கொள்வது மடமை. அத்தகைய சம்பவங்களிலிருந்து அனுபவப்பாடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, சம்பவத்தை மறந்துவிட வேண்டும். முழுமையாக மறக்க முடியாவிட்டாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட வேண்டும். இத்தகைய சோகத்திலிருந்து வரவில்லையென்றால், நாளடைவில் உடம்பு துருப்பிடித்த எந்திரம் போலாகிவிடும். படிப்படியாக திறமையும், ஆற்றலும் அரிக்கப்பட்டு விடும். எவ்வளவு விரைவாக சோகம் என்ற புதை மணலில் இருந்து மீண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக விடுபட்டு மீண்டு வரவேண்டும். மாறாக, சோகம் நீடித்தால் குடும்பம், தொழில், வருமானம் என அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும். நாளடைவில் மனம் அதிலேயே ஒருவகையான சுகம் காணத் தொடங்கி விடும். போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் அன்றாட வாழ்வை எதிர்கொள்வதற்கே அதிக அளவில் சக்தி தேவைப்படுகிறது.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

     நேயர் கேள்வி?

    வரும் புத்தாண்டுக்கு இளைஞர்களாகிய எங்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

    அருள்மொழி, கோவை

    ஒவ்வொரு புத்தாண்டின்போதும் புது சபதங்கள் எடுப்பதும், அதன்படி சில நாட்கள் செயலில் இறங்குவதும் வாடிக்கையானது. அதுபோல இந்த ஆண்டு முடியும் தருவாயில், புத்தாண்டில் புதிதாக என்ன செய்யலாம்? எந்தப் பழக்கங்களைக் கைவிடலாம் போன்ற சிந்தனையில் வாசகர்கள் இருக்கும் நிலையில், இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. நல்ல கேள்வி, சரியான நேரத்தில் கேட்டிருக்கிறீர்கள்.

    டிசம்பர் 31, முடிந்தவுடன் ஒரு ஆண்டு நமது வயதுடன் சேர்ந்துவிடுகிறது. இன்னும் சற்று வயதாகிவிட்டது என்ற கவலை இருக்கிறது என்றாலும், எதிர்காலத்தை நினைத்துப்பார்க்கும் போது இன்றைய நாள், நாம் உயிரோடு இருக்கும் மீதி காலத்தின் மிக இளமையான நாள் என்பது புரியும். கடந்த காலத்தைப் பார்க்கும்போது இன்றுதான் நமது வாழ்நாளின் முதிர்ச்சியான நாள் என்பதும் தெரியும்.

    இன்று இளைஞர்களாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு சில யோசனைகளைத் தருகிறேன், அதை 365 நாட்களும் கடைப்பிடித்தால் அவை உங்களுடையப் பழக்கம் ஆகிவிடும், அதுவே உங்கள் நற்குணமும் ஆகிவிடும், உங்களுடைய வாழ்க்கையும் ஆகிவிடும்.

    1. அதிகாலையில் 5 மணிக்கு எழுங்கள்: குறிப்பிட்ட ஒரு வேலை இல்லை என்றாலும் கூட காலை 5 மணிக்கெல்லாம் எழுங்கள். அன்றைய மிகக்கடினமான ஒரு செயலை காலை 5 முதல் 7 மணிக்குள் செய்து முடியுங்கள். உங்களுக்குப் பிடிக்காத ஒரு பாடத்தைக் கூட ஒரு முறை வாசியுங்கள்; ஒன்றும் புரியவில்லை என்றாலும் வாசித்துப் பாருங்கள். காலை வேளையில் எந்த கவலையுமின்றி தூங்கி வழியும் மாணவர்கள் வீணாய் போவதை யாரும் தடுத்து விட முடியாது. அவன் மிகப்பெரிய செல்வந்தனின் மகனாக இருந்தாலும் சரி!
    1. ஒரு மணி நேரம் செய்தித்தாள் படியுங்கள்; தினமும் காலையில் ஒரு மணி நேரம் செய்தித்தாள் படியுங்கள். அதுவும் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையைக் கண்டிப்பாகப் படியுங்கள். தமிழ்நாடு, இந்தியா, உலகம் என்று அனைத்துலகிலும் நடக்கும் நிகழ்வுகளை வாசியுங்கள். செய்திகளின் அற்புத் தன்மையை மனதார உணர்ந்து சிரியுங்கள், அழுங்கள், கோபப்படுங்கள். எடுத்துக்காட்டாக ஊழல் புரிபவர்கள் மற்றும் மக்களை ஏமாற்றுவர்கள் மீது சினம் கொள்ளுங்கள்.
    1. தினமும் உடற்பயிற்சி: தினமும் ஒரு மணி நேரமாவது ஒடுங்கள் அல்லது சைக்கிள் மிதியுங்கள். டென்னிஸ், ஷட்டில் போன்ற மற்ற விளையாட்டுகள் கூட நல்லது தான். ஆனால் ஒருமணி நேரமாவது தொடர்ந்து விளையாட வேண்டும். 
    1. உடல் நலம்: உடலில் ஏதேனும் நோய் குறை என்றால், உடனே டாக்டரிடம் சென்று ஆய்வு செய்து சிகிச்சை பெறுங்கள். டாக்டர் என்றால், MBBS படித்தவர்கள் அல்லது BDS படித்தவர்கள் மட்டும் தான்  டாக்டர்கள். அவர்களது மருந்து முறை மட்டும் தான் விஞ்ஞானபூர்வமானது. மற்ற மருத்துவ முறைகளில் உண்மை உண்டு என்று இன்னும் நீருபிக்கப்படவில்லை.

    இந்த இதழை மேலும்

    நெஞ்சில் துணிவிருந்தால்! நிலவுக்கும் போய் வரலாம்!!

    பேராசிரியர். முனைவர். சி.சுப்பிரமணியம்

    முன்னாள் துணைவேந்தர், முன்னாள் பதிவாளர்

    தலைவர், மேலாண்மை அறங்காவலர்,

    புரபசனல் கல்வி நிறுவனங்களின் குழுமம், பல்லடம்

    தலைவர், மேலாண்மை அறங்காவலர்,

    ஏ.வி.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தெக்குப்பாளையம், கோவை.

    தலைவர் மேலாண்மை அறங்காவலர், ஆறுமுகம் அகாடமி,அரவக்குறிச்சி

    தலைவர் மேலாண்மை அறங்காவலர்,ஆசான் கலை அறிவியல் கல்லூரி,கரூர்

                      “அறிவாற்றல் அன்புமனம் ஈகைப் பண்பு

                      அளப்பரிய தன்மானம் நேர்மை நெஞ்சம்

                      நெறியோடு வாழுகின்ற வாழ்க்கை யார்க்கும்

                      நெஞ்சத்தால் தீங்கு நினையாத பண்பு

                      வெறியோடு செயல் செய்யும் வேகம் என்றும்

                      வெற்றியையே அணிகின்ற வீரம் அன்பே

                      குறியாக நடைபோடும் வாழ்வு மாறா

                      கொள்கை மனம் குணக்குன்று இவரே சி.எஸ்”

                      – தேசிய நல்லாசிரியர் புலவர். நாகு. ஆறுமுகம்

    கே.  தாங்கள் பிறந்து வளர்ந்தது பற்றி?

    ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் தென்கிழக்கு மூலையில் கடைக்கோடி கிராமமாக இருந்து, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது ஈரோடு மாவட்டத்துக்குள்ளும், தற்போது திருப்பூர் மாவட்டத்துக்குள்ளும் இயங்கி வரும் மாமரத்துப்பட்டி என்னும் சிற்றூர் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். உழுதுண்டு வாழும் விவசாயப் பெருங்குடி மக்கள் பெரும்பாலும் வாழும் கிராமம் மாமரத்துப்பட்டி. அங்கு பாரம்பரியமாக, தீவினை அகற்றி, தானம் விரும்பி, செய்வன திருந்தச் செய்து வேளாண்மை செய்து ,வாழ்ந்து வந்த குடும்பத்தில் திரு. செ. சின்னச்சாமி -திருமதி. செல்லாத்தாள் ஆகியோரின் இளைய மகனாக 4. 5. 1951 ஆம் நாள் பிறந்தேன். தொடக்கக் கல்வியை மாமரத்துப்பட்டி ஓராசிரியர் பள்ளியிலும், நடுநிலைக் கல்வியை அரிக்காரன்வலசு நடுநிலைப்பள்ளியிலும், உயர்நிலை  – மேல்நிலைக்கல்வியை அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன்.

    புகுமுகவகுப்பும், இளம் அறிவியல் (வேதியியல்) பட்ட வகுப்பும் பொள்ளாச்சி ந.க.ம. கல்லூரியில்  முடிந்தேன். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம். ஏ (தமிழ் இலக்கியம்) பயின்றேன். தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பயின்று எம்.ஃபில் பட்டமும், பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பயின்று பி.எச்.டி., பட்டமும் பெற்றேன்.

    கே. ஆசிரியப்பணியைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம் என்ன?

    நான் ஆசிரியப்பணியைத் தேர்ந்தெடுத்ததற்கான முழுமுதற்காரணம் எனக்கு வாய்த்த ஆசிரியப் பெருமக்கள்தான். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எனக்குப் பாடஞ்சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் தலைசிறந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுடன்  இன்னும் நான் தொடர்பில் இருக்கிறேன். எனினும், என்னுடைய நெஞ்சில் தமிழ் உணர்வையும், சமுதாய உணர்வையும் ஊட்டியவர்கள் இருவர். .அவர்கள் யாரெனில் நடமாடும் பல்கலைக்கழகங்களாக இருந்து, இன்றுவரை எனக்கு உந்து சக்தியாக இருக்கின்ற, இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற, என் ஆய்வு நெறியாளர் கவிஞர். சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் தேசிய, மாநில நல்லாசிரியர் விருது பெற்றவரும், தொடக்கப்பள்ளியிலும்,  நடுநிலைப்பள்ளியிலும் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவருமான ஆசிரியர் புலவர். நாகு. ஆறுமுகம் ஆகிய இருவரும் ஆவார்கள்.

    நானும் எங்கள் குடும்பத்தினரும், உறவினர் குடும்பத்தினரும் தொடங்கி 20 ஆண்டுகளாக நடத்தி வருகின்ற ஆறுமுகம் கல்வியகம், நுழைவுரிமை மேல்நிலைப்பள்ளி என்கின்ற அரவக்குறிச்சியிலுள்ள மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு என் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பெயரும், அங்குள்ள நூலகத்திற்கு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பெயரும் சூட்டுமளவுக்கு அவர்கள் என்னை ஈர்த்தவர்கள். அவர்களின் காலடித்தடத்தைப் பின்பற்றியே ஆசிரியப்பணியை நான் தேர்வு செய்தேன்.

    கே. கிராமப்புறத்தில் பிறந்து ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி உயர்வு அடைந்திருக்கிறீர்கள். அதுபற்றி…

    வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கு, நாம் கிராமத்தில் பிறந்தோமா அல்லது நகரத்தில் பிறந்தோமா என்பது முக்கியமல்ல. அமெரிக்கக் குடியரசுத்தலைவராக இருந்த திரு. ஆபிரகாம் லிங்கன் அவர்கள் மிகச் சாதாரணமான செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர்தான். எளிய படகோட்டியின் மகனாகப்பிறந்து, தமிழ்வழியில் கல்வி கற்று, பாரதத்திருநாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்தவர் தான் நம் நேசத்துக்குரிய திரு. அப்துல்கலாம் அவர்கள். இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

    நேர்மையும், இடைவிடாத முயற்சியும், நல்லொழுக்கமும், உச்சந்தொட வேண்டுமென்ற உந்துதலும் இருந்தால், வாழ்வில் எண்ணிய எண்ணியாங்கு எய்தலாம். மேற்காணும் தலைமைப்பண்புகளோடு , இறையருளும், தந்தை- தாய் ஆசிகளும், குருவருளும், ஆட்சிப்பொறுப்பிலிருந்த அம்மா அவர்களின் பேராதரவும் எனக்கு கிட்டியமையால் நான் துணைவேந்தராக முடிந்தது.

    கே. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு உங்கள் பணிக்காலத்தில் செய்த சாதனைகள் என்னென்ன?

    • தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், பொய்யான குற்றச்சாட்டின் மூலம் பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு கல்விநிலைப் பணியாளர்கள், மூன்று அலுவல் நிலைப்பணியாளர்களை, மேதகு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் பெற்று மீண்டும் பணியில் அமர்த்தி, அவர்களின் பணிக்காலத்தை ஒழுங்குப்படுத்தி, இழந்த ஊதியத்தை மீண்டும் பெற்றுத்தந்து ஐந்து குடும்பங்களை வாழ வைத்தது.
    • மேற்காணும் ஐவரையும் பணியமர்த்தக்கோரி, ஆதரவுப் போராட்டம் நடத்தி, 89 நாட்கள் வரை ஊதியம் இழந்த அனைத்துப் பணியாளர்களையும் சனிக்கிழமைகளில் கூடுதல் பணியாற்றச் சொல்லி, இழந்த நாட்களை ஈடுகட்ட வைத்து, இழந்த நாட்களுக்கான ஊதியம் அனைத்தையும் வழங்கியது.
    • நான் பணியாற்றியபோது பல்கலைக்கழகத்தில் நிலுவையிலிருந்த 1200 தணிக்கைத் தடைகளை, உள் கணக்குத் தணிக்கைத்துறை மூலம் ஓராண்டில் நீக்கி, 180 தணிக்கைத்தடைகள் மட்டுமே உள்ளதாக மாற்றி, இந்தியாவிலேயே மிகக்குறைந்த தணிக்கைத்தடை உள்ள பல்கலைக்கழகமாக மாற்றியது.
    • பத்தாண்டுகளுக்கு மேல் பதவி உயர்வு பெறாமல் இருந்த 37 பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கியது.
    • 15 ஆண்டுகளாக, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 24 பணியாளர்களை நிரந்தரமாக்கி வாழ்வளித்தது.
    • பத்தாண்டுகளுக்கு மேல், பணிமுன்னடைவு பெறாமல் இருந்த 24 இணைப்பேராசியர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கியது.
    • ஆய்வு உதவியாளர்கள், செல்லடைவுப் பணியாளர்கள், இளநிலை ஆய்வாளர் போன்ற பணிகளில் 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஒப்பளிக்கப்படாத பணியிடங்களில் இருந்து வாழ்வில் ஒளியிழந்து நொந்து போயிருந்த 29 பேரின் பணியிடங்களுக்கு அரசின் ஒப்புதல் பெற்று, அவர்களை விரிவுரையாளர்களாகப் பணிமேம்படுத்த அரசு ஆணை பெற்று, அவர்களுக்கு விரிவுரையாளர் பணி வழங்கியது.
    • எஸ்.சி எஸ்.டி பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பியது.
    • பாராளுமன்ற வடிவில் கட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஒன்றரை லட்சம் நூல்களைக் கொண்ட தஞ்சைப்பல்கலைக்கழக நூலகத்தை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் திறந்துவிட்டு, யார் வேண்டுமானாலும் உறுப்பினராக, புரவலராக ஆகலாம் என ஆக்கி மக்கள் பல்கலைக்கழகமாக மாற்றியது.
    • சுற்றுவட்டாரத்து மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள, பல்கலைக்கழகத்தைத் திறந்துவிட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியதுடன் ஒரு ரூபாய்க்கு மூலிகைத் தேநீர் வழங்கி, தமிழிசையை ஒலிபரப்பி ‘மக்கள் துணைவேந்தர்’ என்ற பெயரைப் பெற்றது.

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    பழைய ஆடையை விட்டுவிட்டு, நாம் புத்தாடையை அணிந்து கொள்வதைப் போல, பழைய உடலை விட்டு விட்டு, மனித ஆன்மா, புதிய உடலில் நுழைந்து கொள்வதைப் போல, காலமும் 2016 ஆம் ஆண்டை விட்டுவிட்டு, 2017 ஆம் ஆண்டாக உருமாறி ஒளிர்ந்து வருகிறது.

    இந்த நேரத்தில், நாமும் பழைய எண்ணங்களை விட்டு விட்டு, புதிய எண்ணங்களை உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும். தீதான எண்ணங்களை விட்டு நல்ல எண்ணங்களையும், தேவையற்ற எண்ணங்களை விட்டு, தன்னம்பிக்கை மிக்க எண்ணங்களையும், எண்ணக் கருவிலேயே உயிர்ப்பித்து சுயமுன்னேற்றத்தை எண்ணி எண்ணி அதை வளர்க்க வேண்டும்.

    சென்ற ஆண்டை விட, இந்தாண்டு, நீங்களும், உங்கள் குடும்பமும் பண்புகளில், பணியில், பொறுப்பில் பொருளாதாரத்தில், சமூக மதிப்பில், மாண்புகளில் பன்மடங்கு படியேறி வளர்ந்து நிற்க வேண்டும். அதற்கான தன்முனைப்பு உங்கள் மனதில் இடம் பெற வேண்டும்.

    நான் பலமானவன் என்று மனதார நீங்கள் நம்பினால், உங்களைத் தீண்டும் பாம்பின் விஷம் கூட பலனற்றுப் போகும், என்றார் சுவாமி விவேகானந்தர். அவர் வாக்குப் போல, எண்ணங்களும், தன்னம்பிக்கையும் இரும்பைப் போல இருக்குமாறு பார்த்துக் கொண்டால் போதும். காலம் உங்கள் வளர்ச்சியைப் பார்த்துக் கொள்ளும்.

    அன்னையின் கைகளைப் பற்றிக் கொண்டு நடக்கும் குழந்தையைப் போல, காலத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு நடப்போம். காலம் பேய் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது, நாம் குட்டிச்சாத்தான் வேகத்திலாவது ஓடவேண்டாமா?

    நிலத்தை நம்பினால் உணவைப் பெருக்கலாம், நீரை நம்பினால் கடலைக் கடக்கலாம், காற்றை நம்பினால் வானில் பறக்கலாம், உங்களை நம்பினால் உயர்ந்து வாழலாம்.

    உங்கள் குறிக்கோள் ஈடேற தன்னம்பிக்கை தனது மனப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாண்டு தன்னம்பிக்கை இதழுக்கும் முக்கியக் குறிக்கோள்  இருக்கிறது, அது என்னவென்றால் , உங்கள் வீட்டுக்கு மட்டுமல்லாமல், உங்கள் உறவினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள், அரசு அலுவலகங்கள், தொண்டு நிறுவனங்கள் என்று ஒவ்வொருவர் வீட்டுக்கும் வர வேண்டும், அவர்கள் மனதில் நம்பிக்கை வளர்க்க வேண்டும், என்பது தான். அதற்கு நீங்கள் உதவ வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தது பத்துப் பேருக்காவது, இதைப்பற்றி எடுத்துச்சொல்லி, சந்தாதாரர் ஆக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.

    அன்னதானம் செய்வதைப் போல, ஆறுகுளம் வெட்டி குடி நீரைத் தேக்குவதைப் போல, மரம் நடுவதைப் போல, மக்களுக்கு தன்னம்பிக்கை தருவதும் சேதப் பணியே

    புத்தாண்டு வாழ்த்துக்களுடன்

    ஆசிரியர்