Home » Articles » முன்பு எப்போது சொல்லப்படாத ஒரு கதை

 
முன்பு எப்போது சொல்லப்படாத ஒரு கதை


சிதம்பரம் ரவிச்சந்திரன்
Author:

பெண்களுக்கு எப்போதும் கற்றுக்கொடுக்கப்படுவது, வீட்டை விட்டு வெளியே போனால் விழுந்துவிடுவீர்கள் என்பதுதான். உலகத்தில் எந்த ஒரு மூலையிலும் பெண்களின் நிலைமை ஒரே மாதிரிதான். பயமும், வன்முறையும் வாழ்க்கையின் அன்றாட வழக்கங்களாக மாறிவிட்டன எதிர்த்து வலிமையோடு நின்று போராடும் பெண்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.

‘பாதுகாப்பு நிம்மதி’ என்ற எதுவுமே இல்லாத சூழ்நிலையிலும் பெண்கள் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுவாகவே இந்தியாவில் பெண்கள் பலவீனமான நிலையில்தான் இருக்கிறார்கள் என்றாலும், இந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் இருப்பவர்களின் வாழ்வே அதுவாகத்தான் இருக்கிறது. சாதாரணமான கண்களுக்குத் தெரியாமலேயே, இதுநாள் வரை மறைவில் வாழ்ந்து வரும் ஒரு பெண் சமுதாயமும் இந்த நாட்டில் இருக்கிறது. இருட்டின் மறைவில், வறுமையின் கோரப்பிடியால், தளர்ந்து பாலியல் தொழிலாளர்களாக, இந்தியாவில் மும்பை போன்ற நகரங்களில் சிவப்பு விளக்குப்பகுதிகளில் அந்தப் பெண் சமுதாயம் வாழ்ந்து வருகிறது.

இவர்கள் மட்டமானவர்களாக வெறுத்து ஒதுக்குகிறோம். ஆனால், காலம் விழிப்பை இவர்களுக்கும் ஏற்படுத்தி வருகிறது சமீபகாலமாக இவர்களும் தங்கள் உரிமைகளுக்காகப் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிலர் மட்டும் தங்களின் கதைகளை வரலாறாகப் படைத்து சாதாரணமானவர்களில் இருந்து சாதனையாளர்களாக உயர்ந்து நிற்கிறார்கள்.

ஸ்வேதா தன் சொந்தக்கதையை தானே எழுதத் தொடங்கியுள்ளார். மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதியில் செயல்பட்டுவரும் ‘க்ராந்தி’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் ஒரு அங்கமாக இவர் உள்ளார். ஸ்வேதா என்ற இந்த இளம்பெண்தான் மும்பை சிவப்பு விளக்குப் பகுதியான காமாத்திப்புரா என்ற இடத்தில் இருந்து, முதல் தடவையாக வெளிநாடு சென்று படித்ததற்காக கல்வி உதவித்தொகை பெற்றவர்.

வாழ்வு அவ்வளவு சுலபமானதாக இல்லாமல் போகும்போது, ‘வாழ்ந்தே தீரவேண்டும்’ என்ற உத்வேகத்தைக் கொண்டவர் ஸ்வேதா. அவரும் அவரது தாயும் விதிவசமாக காமாத்திப்புராவில் வசிக்கும்படி காலத்தால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். நினைவு தெரியும் வரை சாதாரணமான ஒரு சிறுமியாகவே ஸ்வேதாவும் வாழ்ந்தாள். இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய ராஃபின் சௌராசியா என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட ‘க்ராந்தி’ என்றதன்னார்வு தொண்டு நிறுவனத்தால் ஸ்வேதாவுக்கு மறுவாழ்வுகிடைத்தது. மும்பையில் உள்ள சிவப்பு விளக்குப் பகுதியில் இருக்கும் பெண்களின் மறுவாழ்விற்காக இந்த அமைப்பு பாடுபடுகிறது.

தன்னைச்சுற்றிலும் முட்களே நிறைந்திருந்தாலும், அவற்றை எல்லாம் எதிர்த்து ஒரு மனதோடு போராடி வெற்றி பெற்றபெண்தான் ஸ்வேதா. ஒரு சாமான்யமான  மனிதப்பிறவியான அவர். சகிக்க முடியாத எத்தனையோ இடர்பாடுகளை எல்லாம் எதிர்கொண்டார்; எதிர்த்து நின்றார். கண்ணீரும், கதறல்களும் நிறைந்த அவருடைய வாழ்க்கை மனித மிருகங்களால் நாசமாக்கப்பட்டது என்றாலும், சாம்பலில் இருந்து உயிர் பெற்று எழுந்தவர் அவர் ‘க்ராந்தி’ அமைப்பு இதுபோன்ற இளம்பெண்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணரவே பாடுபடுகிறது.

நியூயார்க் நகரத்தில் இருக்கும் பாக் கல்லூரியில் உளவியல் பட்டப்படிப்பிற்காக உதவித் தொகையைப் பெற்று, கல்வி கற்கும் அருமையான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இருளானாலும், பகலானாலும் எந்த நேரத்திலும் விலங்குகளை விடவும் மட்டமான மனித ஜென்மங்கள் தன்னை வேட்டையாட வரும் என்றபயத்துடனும், பீதியோடும் இருந்த ஸ்வேதா இப்போது அமெரிக்காவில் பாக் கல்லூரியில் உளவியல் கற்கும் இந்திய மாணவியாக உயர்ந்து நிற்கிறார். இதற்கெல்லாம் காரணம் அவர் தன் வாழ்க்கையை தானே வழிநடத்திச் சென்றதுதான்.

துக்கம், துயரம், எல்லாம் தலைவிதி என்று ஒரு பக்கம் ஓரமாக உட்கார்ந்து விடாமல் வாழ்க்கையை எல்லோரையும் போல வாழ வேண்டும் என்று மகத்தான மனஉறுதியோடு எழுந்து நின்றார் ஸ்வேதா.

அமெரிக்காவில் படிப்பை முடித்து இந்தியாவிற்கு திரும்பி வந்ததும், தன்னைப்போல இருக்கும் எத்தனையோ பேருக்கு வழிகாட்டப் போவதாகவும் திட்டமிட்டுள்ளார் ஸ்வேதா. வழக்கமாக ஒரு பெண் என்றால் அவளுடைய தோலின் நிறம், அவள் உடுத்திக் கொண்டிருக்கும் உடை,நடை,பேச்சு,பாவனை அவளுடைய வைத்தே எடை போட்டுப்பழக்கப்பட்ட நம் சமூகத்தில் ஒரு விடிவெள்ளியாக ஒளிர்கிறார் ஸ்வேதா.

மலை போல தளராத உறுதியான மனது, அடைந்தே தீருவது என்றபிடிவாதமான உயர்ந்த  இலட்சியம், அதை நோக்கிய கடினமான அர்ப்பணிப்போடு கூடிய பயணம் என்பவைதான் ஸ்வேதாவை இப்போது அமெரிக்காவுக்கு கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போயிருக்கிறது. அருவருப்பாக நினைக்கப்பட்ட பகுதியில் இருந்தவர் இன்று வளமான நம்பிக்கையின் பச்சை விளக்காக திகழ்கிறார்.

ஸ்வேதாவின் மனஉறுதியும், இரத்தம் சிந்திய உழைப்பும் அவருக்கு ஐக்கிய நாடுகளின் விருதைத் தேடிக் கொடுத்துள்ளது. 25வயதுக்கும் குறைவாக உள்ள உலகளவில் சிறப்புமிக்க 25 பெண்களில் ஒருவராக ஸ்வேதா நியூஸ் வீக் இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பட்டியலில்தான், தீவிரவாதத்தின் எல்லாக் கொடுமைகளையும் அனுபவித்து, எதிர்த்துப் போராடி உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் மலாலா யூசப் அலியும் இடம்பெற்றிருக்கிறார்.

இப்போது ஸ்வேதா என்றபெயரைக் கேட்டால் முதலில் தோன்றும் உணர்வு அவரின் மீது அளவில்லாத மதிப்பும், மரியாதையும்தான். இந்த இளம்வயதில் இத்தனை துன்பங்களையும் அனுபவித்தபிறகும் அதையெல்லாம் மீறி, அதற்கெல்லாம் அப்பால் ஒரு சுடராக ஒளிவிடுகிறார் அவர். திரும்பி வந்த பிறகு மும்பையில் தான் வாழ்ந்த அதே சிவப்பு விளக்குப் பகுதியில், ஒரு உளவியல் ஆலோசனை மையத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் ஸ்வேதா. தன்னைப்போன்றசிறுமிகளுக்கு ஒரு ஆதரவாக, வாழ்வின் கலங்கரை விளக்கமாக இருக்க விரும்புகிறார் அவர். ஸ்வேதாவின் தாத்தா,தான் பெற்றமகளையே பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார் ஆனால்.

ஒரு ஆலைத்தொழிலாளியான அவருடைய தாய் அவரை ஒருபோதும், தான் படும் துயரங்களுக்கு ஆளாக்க விரும்பவில்லை. பள்ளிக்குப் படிக்க அனுப்பி வைத்தார்.

அந்த நாள் முதல் ஸ்வேதா கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். ஒவ்வொருநாள் மாலை வேளையிலும் அவர் ஒரு டியூஷன்  வகுப்புக்கு சென்று படித்தார்.

‘க்ராந்தி’, ஸ்வேதாவின் கனவை நனவாக்க கை கொடுக்க முன்வந்தது. பல பயணங்களை மேற்கொண்டு தன்னைப் போலவே ஒரு மோசமான சூழ்நிலையில் வாழ்பவர்களை ஸ்வேதா சந்திந்தார். இது அவருக்கு ஏராளமான நம்பிக்கையைத் தந்தது. தான் யார்? என்பதை அவர் மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தார். ஸ்வேதாவுடைய அம்மா தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றசமயங்களில் அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்த மற்றபாலியல் தொழிலாளிப் பெண்கள், ஸ்வேதாவை கண்மணிபோல் பாதுகாத்தார்கள்.  ‘க்ராந்தி’ ஏற்பாடு செய்த தங்குமிடம் அவருக்கு இரண்டாவது வீடானது.  தனது 11 வது வயதிலேயே வன்முறைக்கு இரையான போதும் அவருடைய தன்னம்பிக்கை கொஞ்சமும் தளர்ச்சி அடையவில்லை.

அன்று அவருடைய தோலின் நிறத்தை வைத்து, ‘மாட்டுச்சாணி’ என்றும், அவர் இருந்த இடத்தை  வைத்து ‘சாக்கடை’ என்றும் அழைக்கப்பட்டார். ஆனால், இன்று? ஸ்வேதா ஆயிரக்கணக்கான உலகப் பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்.

வாழ்க்கையை மாற்றியமைக்க, நம் ஒவ்வொருவராலும், உறுதியாக நினைத்தால் முடியும். நாம் காணும் கனவை நிஜமாக்க நம்மிடம் அளவில்லாத ஆற்றல் இருக்கிறது. அடுத்தவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி தீர்ப்பளிக்க நமக்கு குறைவாகவே உரிமை இருக்கிறது; என்கிறார் ஸ்வேதா.

அமெரிக்கா செல்வதற்கு பாஸ்போர்ட்  வாங்குவதற்கு ஸ்வேதாவுக்கு ஏராளமான இடையூறுகளும், தடங்கல்களும் ஏற்பட்டன. அவற்றைஎல்லாம் எதிர்த்து நின்று வென்று நியூயார்க் நகரத்தில் இருக்கும் பாக் கல்லூரியில் உளவியல் பட்டப்படிப்பில் சேலர்ந்துள்ளார். 2014ம் ஆண்டில் ‘வீர சாதனை புரிந்த இளைஞர்களுக்கான விருது’ (UN Youth Courage Award) ஐக்கிய நாடுகளால் ஸ்வேதாவுக்கு வழங்கப்பட்டது. வாழ்வில் அவர் எதிர்கொண்ட சோதனைகளை வீரதீரத்தோடு போராடி வெற்றிகொண்டதற்காக, அவருக்கு இது வழங்கப்பட்டது.

ஸ்வேதாவின் கதை இதோடு முடிந்து விடாது.  பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை அவர் தன் வாழ்வின் சாதனை மூலம் விழித்தெழச் செய்திருக்கிறார். தங்கள் சொந்தப் பெயரை வரலாற்றில் தாங்களாகவே எழுதிக்கொள்ளும் அபூர்வ பெண்மணிகளில் ஒருவர்தான் ஸ்வேதா. இருட்டைப் பழிக்காமல் இனியாவது வெளிச்சத்துக்கு வர லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முடியட்டும்… அதற்கு ஸ்வேதா ஒரு மகத்தான மாதிரியாக இருப்பார்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2017

இங்கு இவர் இப்படி
முன்பு எப்போது சொல்லப்படாத ஒரு கதை
படைப்பாற்றல்
ஸ்ரீலங்கா – சுற்றுலா
என் பள்ளி
சோதனைகளை, சோதனை செய்…
பூமிப்பந்து பூத்துக் குலுங்கட்டும்…
உணவு முறைகள்
வாழ நினைத்தால் வாழலாம்
வெற்றி உங்கள் கையில்…37
விரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்
மெய்நிகர்
புத்தாண்டு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
நெஞ்சில் துணிவிருந்தால்! நிலவுக்கும் போய் வரலாம்!!
உள்ளத்தோடு உள்ளம்