Home » Articles » படைப்பாற்றல்

 
படைப்பாற்றல்


ராமசாமி R.K
Author:

“Creativity is oxygen for our souls.

Cutting off our creativity makes us savage.

We need to create what wants to be created.” – Julia Cameron.

மலையின் உச்சியில்  – நீ ஒரு பைன் மரமாக இருக்க முடியாதெனில்

மலையடிவாரத்தில் ஒரு புதர்ச் செடியாக இரு.

ஆனால், ஒரு சிறந்த புதர்ச்செடியாக, சிற்றோடையின் கரையில் இரு.

நீ மரமாக இருக்க முடியாதெனில்  ஒரு சிறு செடியாக இரு.

ஒரு செடியாக இருக்க முடியாதெனில்  பெரு வழியின்

இருமருங்கிலும் மகிழ்வைத் தரும் பசும் புல்லாக இரு.

நீ கஸ்தூரிமானாக இருக்க முடியாதெனில்  ஒரு மீனாக இரு.

ஏரியில் உள்ள, உற்சாகமாகத் துள்ளும் மீனாக இரு.

நீ நெடுஞ்சாலையாக இருக்காவிட்டாலும்

ஒரு ஒற்றையடிப்பாதையாக இரு.

நீ சூரியனாக இருந்து பிரகாசிக்கா விட்டாலும்

நட்சத்திரமாக இருந்து கண் சிமிட்டு.

வெற்றி பெறுவதும், தோல்வியுறுவதும் உன் உருவத்தின் அளவை வைத்து அல்ல.

நீ எதுவாக இருக்கிறாயோ, அதில் சிறந்ததாக இரு.

ஆங்கிலக் கவி. டௌக்ளஸ் மால்லோச்.

ஒவ்வொரு ஓவியமும் பல லட்சங்கள் விலைக்குப் போகிற திறமையுடைய ஒரு புகழ் பெற்ற ஓவியருடைய கலைக்கூடத்தில், பல மாதங்கள் உழைத்து வரையப்பட்ட ஒரு ஓவியம் திருடு போய்விட்டது. அந்த ஓவியருடைய நண்பர்கள் “இப்படி நடந்து விட்டதே,  இது உங்களுக்கு மிகப்பெரிய இழப்பு, என்றார்கள்.

“ஓராண்டு கஷ்டப்பட்டு உழைத்து வரைந்த ஒரு அற்புதமான ஓவியம் திருட்டுப்போய்விட்டது” என்று வருந்தினார்கள். அந்த நண்பர்கள் ஒன்றுகூடி அந்த ஓவியரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக வந்தார்கள். அந்த ஓவியர், ஓவியம் திருட்டுப்போனதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், ஒரு பூங்காவில் நிம்மதியாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். “எப்படி உங்களால் இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது? மிகப் பெரிய இழப்பை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்கள், ஓராண்டு கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பு வீணாகிப்போய் விட்டதே.

அந்த ஓவியம் பல லட்சம் ரூபாய் விலை போயிருக்குமே? உங்களுடைய அதிர்ஷ்டத்தை இழந்து விட்டீர்களே“ என்று வருத்தப் பட்டார்கள்.

ஓவியர் சொன்னார் “நீங்கள் தவறாக கணிக்கிறீர்கள். என்னுடைய ஒரு படம் காணாமல் போனது உண்மை. ஆனால், அந்த படைப்பு மிகப்பெரிய பொக்கிஷம் அல்ல. என்னுடைய உண்மையான பொக்கிஷம் இதோ இங்கே இருக்கிறது என்று தன் தலையில் உள்ள மூளையைச் சுட்டிக்காட்டினார்.

என் மூளைதான் எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம். என்னுடைய அரிய, உயர்ந்த, உன்னதமான அனைத்து படைப்புகளையும் உருவாக்கித் தந்தது இந்த மூளைதான். இங்கிருந்துதான் எல்லாப்படைப்புகளும் உதயமாயின. இதைவிட ஆயிரம் மடங்கு உயர்வான, அற்புதமான மேலான படைப்புகளை என்னால் உருவாக்க முடியும்” என்று தன்னம்பிக்கையோடு சொன்னார்.

ஓவியம் வரைவது அவரிடம் உள்ள படைப்பாற்றல் (Creativity). அது தனித்துவம் கொண்டது. பிறருக்கு இல்லாத அந்த ஆற்றல் தனக்குள் இருப்பதை உணர்ந்து அந்த ஆற்றலை வளர்த்து கொண்டார். அதனால் உலகப்புகழ்பெற்ற, விலை மதிக்க முடியாத பல ஓவியங்களை அவரால் படைக்க முடிந்தது. இதுதான் அவருடைய படைப்பாற்றலின் ரகசியமாகும்.

பொதுவாக பலர், “நான் திருப்தியாக இருக்கிறேன், எதற்கும் ஆசைப்படுவது இல்லை. ஆசைப்பட்டால்தானே அல்லல்பட வேண்டி வரும், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, எது நமக்கு வாய்த்ததோ அதுவே திருப்தி. எதைப்பற்றியும் நான் கவலைப்படவில்லை. அமைதியாக, நிம்மதியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றேன், என்று சொல்வார்கள்.

பொதுவாக அவர்கள் வெளியே இப்படி சொல்லிக் கொண்டிருந்தாலும், அது முற்றிலும் உண்மையல்ல. அவர்கள் மனதினுடைய ஒரு மூலையில் ஏதோ ஒன்றை இழந்துவிட்டதைப் போலவும், செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் விட்டுவிட்டதைப் போலவும் ஒரு தவிப்பு அவர்கள் மனதிலே எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும்.

எதை அவர்கள் இழந்திருப்பார்கள், என்று யோசித்துப் பார்த்தால் ஒன்று புலப்படும். தன்னுடன் பிறந்த ஒரு தனித்திறமையை, இறைவன் கொடுத்த அரிய வரத்தை, அவர்களுடைய தனிப்பட்ட திறமையை அவர்கள் இழந்திருப்பார்கள் அல்லது பயன்படுத்தாமல் விட்டிருப்பார்கள். அதுதான்- அவர்களுக்குள் புதைந்து கிடக்கிற, புதிதாக ஒன்றை உருவாக்கும் திறமையான படைப்பாற்றல் (Creativity).. ஆகும் (படைப்பாற்றல் என்பது ஒவ்வொருவருக்கும் இறைவன் தந்த பரிசு. தனித்தன்மை கொண்டது. சிறப்பம்சம் உடையது. இந்த திறமை ஒரு சில சாதனையாளர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தனித்திறமை உண்டு.

பறவைகளுக்கு கைகள் இல்லா விட்டாலும் கூடு கட்டுகிற ஆற்றல், சிலந்திக்கு தன் வாயில் இருக்கும் உமிழ் நீரால் ஒரு வலையைக் கட்டிக்கொள்கிற ஆற்றல், கரையானுக்கு புற்று கட்டிக் கொள்கிற ஆற்றல், தேனீக்களுக்கு மிக அழகாக கூடு கட்டிக் கொள்கிற ஆற்றல், குயிலுக்கு இனிமையான குரல்வளம், சிறுத்தைக்கு அதன் வேகம், யானைக்கு அதன் பலம் ஆகியவைகள் அமைந்திருப்பது போல, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனி ஆற்றல் உள்ளடங்கி இருக்கிறது.

அப்படிப்பட்ட அந்த படைப்பாற்றலை பயன்படுத்தாமல் நமக்குள்ளே புதைத்து விட்டோமேயானால், நம்முடைய வாழ்க்கையின் முதன்மையான அம்சங்களை, முக்கியமான பகுதியை இழந்து விட்டதற்கு ஒப்பாகும். நம் படைப்பாற்றலை வேண்டுமென்றேமழுங்கச் செய்து விடுகிறோம். முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறோம், என்று பொருளாகும். Julia Cameron, என்றபேராசிரியர்  “The Artist’s Way” என்றதன்னுடைய புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“படைப்பாற்றல் என்பது உயிருக்குத் தேவையான ஆக்ஸிஜன் போன்றது. நம்முடைய படைப்பாற்றலை முனை மழுங்க வைப்பது என்பது நம்மை அடிமையாக்கிக் கொள்கிறமுயற்சியாகும். என்ன புதிதாக தேவையோ அதை உருவாக்குவதே நமது கடமை” என்று சொல்கிறார். நமக்குள் இருக்கும் எந்தப் படைப்பாற்றலை நாம் இழந்திருக்கிறோம் என்று அறிந்தால்தான், நாம் சரியான திசையில் பயணிக்கிறோமா இல்லையா என்றமுடிவுக்கு வரமுடியும்.

நம்முடைய தினசரி வாழ்க்கையில் எவை, எவை தனித்திறமைகளை உள்ளடக்கிய துறைகள் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இயல், இசை, நாடகம் ஓவியம் தீட்டுதல், வாய்ப்பாட்டு, நாட்டியக்கலைகள், இசைக்கருவிகளை இயக்கும் திறமை, கவிதை புனைதல், கதைகள் எழுதுதல், சிலை செதுக்கும் திறமை, அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பங்களை வளர்த்துக் கொள்ளுதல், விமானம் ஓட்டுதல், விண்வெளி ஆராய்ச்சி, சிக்கலான கருவிகளை இயக்குதல் போன்றதுறைகள் எல்லாம், மனிதனின் தனித்திறமைகளாக கருதப்படுகின்றன.

பொதுவாக இந்த நுணுக்கமான தனித்திறமை உத்திகளை உங்கள் வீட்டில் இருந்தே தொடங்கலாம். வீட்டிற்கு வண்ணம் பூசுவது, வரவேற்பறையை அழகுபடுத்துவது, உணவு உண்ணும் அறையை மாற்றி அமைப்பது, அலுவலகத்தின் அமைப்பை மாற்றுவது, நாட்டியம் சொல்லித்தருவது, நாடகத்தை இயக்குவது, சினிமாத்துறையில் இயக்குனராவது, பிரச்சனையைத் தீர்த்து வைப்பது, உங்கள் குழந்தைகளுக்கு அறிவியல் திட்டத்தைத் தருவது, சமைக்கும் கலையிலே புதிய  மாற்றம் தருவது போன்றவைகளும் அடங்கும்.

உங்களுடைய தனித்திறமையில் ஒரு புதிய உத்தியைப் பயன்படுத்தி, புதுமையைப் புகுத்தினால் அது நல்ல பலனைத் தரும். அது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கூட்டும், புகழைத்தரும். செல்வத்தைக் கொடுக்கும். வெற்றிகளைப் பரிசளிக்கும். மக்களுக்கும் அது நல்ல பலனைத் தரும். சமூகம் பலன் பெறும்.

உங்கள் படைப்பாற்றலினுடைய தன்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய தனித்திறமையை மெருகிட்டு பிரகாசப்படுத்திக் கொண்டால், அந்த துறைசார்ந்த அனுபவங்களும், உத்திகளும் புதிய  புதிய வழிகளை உங்களுக்குக் காட்டும்.

உங்களுக்கு எந்தத்துறையில் ஆர்வமோ, அந்தத்துறையில் உங்கள் படைப்பாற்றலை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம். என்னிடம் எந்த தனித்திறமையும் இல்லை, என்று சொல்வது ஒப்புக்கொள்ள முடியாது. உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு முயற்சியைத் தொடங்கி, அதைக் கற்றுத் தேர்ந்து பழகிக் கொள்ளலாம். திறமைசாலிகளிடமிருந்து நீங்கள் பயிற்சிகளின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

ஒருவனிடம் உள்ள தனி ஆற்றல் அவனுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கிறது. இதைப்போன்ற தனித்திறமைகள் உங்களிடமும் புதைந்துள்ளன. அதைக் கண்டுபிடியுங்கள், மெருகேற்றுங்கள். இது வரை அது உபயோகப்படாமல், அடையாளம் காணப்படாமல் உங்கள் மூளைக்குள் புதைந்து இருந்தால், அதை அடையாளம் காணுங்கள். உங்கள் வாழ்வுக்கு வளம் கிடைக்கும். வழியும் கிடைக்கும். சமுதாயத்துக்கும் பலன் கிடைக்கும். தன்னம்பிக்கையோடு தளராமல் முயற்சியுங்கள், முயற்சிக்கேற்றவெற்றி உங்களுக்கு கிடைக்கும்.


Share
 

1 Comment

  1. veeraputhiran says:

    aASAIYAI VIDDUVIDDEN ENTRU SOLVATHUM ORU Aasaithan. Your writing is really good.

Post a Comment


 

 


January 2017

இங்கு இவர் இப்படி
முன்பு எப்போது சொல்லப்படாத ஒரு கதை
படைப்பாற்றல்
ஸ்ரீலங்கா – சுற்றுலா
என் பள்ளி
சோதனைகளை, சோதனை செய்…
பூமிப்பந்து பூத்துக் குலுங்கட்டும்…
உணவு முறைகள்
வாழ நினைத்தால் வாழலாம்
வெற்றி உங்கள் கையில்…37
விரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்
மெய்நிகர்
புத்தாண்டு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
நெஞ்சில் துணிவிருந்தால்! நிலவுக்கும் போய் வரலாம்!!
உள்ளத்தோடு உள்ளம்