Home » Articles » ஸ்ரீலங்கா – சுற்றுலா

 
ஸ்ரீலங்கா – சுற்றுலா


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

காலை எழுந்து தயாரானோம். சுற்றுலா குழுவில் 12பேர் ஏ.சி. அறைவேண்டாம் என்றனர். ஒரு சகோதரிக்கு முழங்கால் வலி என்பதால் குளிப்பதற்கு வெந்நீர் வேண்டும் என்றார். எல்லோருக்கும் ஏற்பாடு செய்தோம்.

தயாரான அறைகளைக் காலி செய்து விட்டு வாகனத்தில் புறப்பட்டோம். ஒரு சகோதரிக்கு வாகனத்தின் ஏ.சி. ஒத்துக்கொள்ளாததால் முதல் நாள் பல முறைவாந்தியால் சிரமப்பட்டார். மற்றவர்களுக்கும் தாமதமானது. எனவே, அன்று பெட்டிகள் வைத்துள்ள காரில் ஏ.சி. இல்லாமல் பயணிக்க ஏற்பாடு செய்தோம்.

வவுனியா என்றநகரில் பிரின்ஸ் ஓட்டலில் காலை டிபன் இடியாப்பம், வடை, ரோஸ்ட் சாப்பிட்டோம். ஒரு தட்டில் வடைகள், இன்னொன்றில் இடியாப்பம், இட்லி ஆகியவைகளைக் கொண்டு வந்து வைக்கிறார்கள். அவர்களும் பரிமாறுகிறார்கள். நாமும் எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ளதை எடுத்துக் கொண்டு சாப்பிட்டதற்கு மட்டும் பில் தருகின்றனர்.

ஓட்டல்களில் S.S. தட்டு அதன் மேல் ஒரு பாலிதீன் தாள் போட்டு வைக்கின்றனர். சில ஓட்டல்களில் இந்தத் தாள் இல்லாமல் தருகின்றனர். டிபன் நன்றாகவே இருந்தது.

யாழ்ப்பாணம் – விடுதலைப் புலிகளின் கோட்டை எனப் பெயர்  பெற்றது.  இந்நகருக்கு பகல் 12 மணிக்குச் சென்றோம். வாகனத்திலிருந்தே நகரை, கடைவீதியைப் பார்த்து, ஒரு சுற்று சுற்றி நல்லூர் கந்தசாமிகோயில் முன்புறம் சென்றோம். கோயில் 3.30 மணிக்குத் தான் திறப்பார்கள் என்றறிந்து மதிய உணவுக்கு ஓட்டலுக்குச் சென்றோம். சூர்யா என்றஓட்டலில் சைவ பஃபே உணவு ரூ. 120 (இலங்கை) தான். ஆனால், மோர் தயிர் இல்லை என்பதால், அக்சதை என்றஓட்டலுக்குச் சென்று ரூ. 130 கொடுத்து அளவு சாப்பாடு, புளித்த மோருடன் சாப்பிட்டதாய் பெயர் செய்தோம்.

4.2.1948ல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னும் சிறைக் கூடமாகவும், இராணுவ முகாமாகவும் இருந்தது. 1990  95 என 5 ஆண்டுகள் இக்கோட்டை விடுதலைப் புலிகள் வசம் வந்தபோது, இடிக்கப்பட்டதாம், அதன் பின் இராணுவ முகாமாக இருந்தது.

இப்போது பழமை வாய்ந்த சுற்றுலா இடமாகப் புனரமைத்து வருகின்றனர். இங்கு கடற்கரையும் உள்ளது. படகில் சிறிது தூரம் சென்றால் பார்க்குமிடம் ஒன்று இருப்பதாய் கூறினார்கள். அங்கு செல்ல இயலவில்லை. கோட்டையைப் பார்த்தபின் கோயிலுக்குச் சென்றோம்…

மாலை 3.30 முதல் 4.30 வரை நல்லூர் கந்தசாமிகோயில் பூசையில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பெரிய பிரகாரம், மூலவர், உற்சவர் என மாறி மாறி தீபாராதனை நடந்தது.

அங்கு தங்குவதை விட கிளிநொச்சிக்குச் சென்றுவிட்டால், மறுநாள் கூடுதல் இடங்களைப் பார்க்க முடியும் என்று கைடு கூறியதால், முழு மன ஒப்புதலின்றி கிளி நொச்சிக்குச் சென்றோம்.

பெட்ரோல் இங்கு ரூ. 57.50 – டீசல் 47.50 தான். மாலை 6.45 மணிக்கு கிளிநொச்சியில் ஒரு புத்த ஆலயம் சென்றோம். அடிக்கின்ற மணி (BELL) வடிவில் கட்டிடம் கட்டியுள்ளனர். அதற்குள் புனிதமானவை இருப்பதாய்க் கூறினார்கள். அருகில் புத்தர் சிலையுள்ள ஆலயம்.

இங்கு தங்குவதற்கு அறைகளும் உள்ளன. கைடு 2 மணிநேரம் தேடி மூன்று வெவ்வேறு ஓட்டல்களில் தங்குவதற்கான அறைகளை ஏற்பாடு செய்து வந்தார். இதனால், பெண்கள் மத்தியில் சலசலப்பு உண்டானது. சமாதானப்படுத்தி, இனி ஒரே இடத்தில் தங்க ஏற்பாடு செய்வதாய்க் கூறினோம்.

சரவணபவன் என்றஓட்டலில் இரவு சாப்பிட்டோம். சுமாராக இருந்தது. கிளிநொச்சியில் இரவு தங்கினோம்.

நான் தங்கியிருந்த லோட்டஸ் காட்டேஜ் உரிமையாளர் ஸ்ரீகாந்தன் அரசு வேளாண் துறையில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். 2009 உள்நாட்டுப் போரின் போது, சென்னை போரூரில் வசித்தாராம். அவரது மகன் ஜதுருகன் 11ம் வகுப்பு மாணவர். தமிழ் பாட வழியில்  படிப்பதாய்க் கூறி நோட்டுக்களைக் காண்பித்தார்.

பள்ளிக்கல்வி இலவசம் என்றார். இப்போது எவ்விதப் பிரச்னையுமில்லை என்றார். விடுதலைப்புலிகள் இருந்தபோது, அவர்களது ஆட்சிதான் நடைபெற்றதாம். வவுனியா அருகிலுள்ள கரந்தை என்றபகுதியில் இருந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்றபகுதிகள் அவர்களிடம் இருந்ததாம். விசா போன்றநடைமுறைகள் அமுலில் இருந்ததாம்.

வரிவசூல், சட்டம்  ஒழுங்கு, தண்டனை என அனைத்துமே விடுதலைப்புலிகளிடம் தான்; குற்றங்கள் கடுமையானது என்றால், தண்டனை நடுரோட்டில் நிற்கவைத்து, மக்கள் பார்க்கும் போது சுட்டுக்கொல்லுவதுதானாம். அந்த மாணவன் கூறியது முன்பு குற்றங்கள் இல்லை. இப்போது அதிகரித்து விட்டது.

சாலையோரம் ஓர் உயரமான கண்காணிப்பு கோபுரம்  கட்டி, கிளிநொச்சி முழுவதையுமே கண்காணித்தனராம். விடுதலைப்புலிகளை அழித்தபின், இதை இடித்துக் கீழே தள்ளியுள்ளனர். அதைப்பார்த்தேன்.

காலை உணவை சக்தி சைவ உணவகத்தில் முடித்து விட்டு பயணத்தைத் துவக்கினோம்.

திரிகோணமலை என்ற ஊருக்கு வவுனியா வழியே வனத்துக்குள் பயணம் தொடர்ந்தது. சில இடங்களில் யானைகள் கடக்கலாம், என்றபோர்டு வைத்துள்ளனர்.

திரிகோண மலைக்கு 10 கி.மீ., முன்பாக கன்னியா வெப்ப நீரூற்று சென்றோம். கட்டணம் ரூ. 50, குழு என்றால் ரூ 30 எல்லோருமே குளித்தோம். தரை மட்டத்தில் தனித்தனியே ஏழு தொட்டிகள் உள்ளன. வாளி உள்ளது.

வெந்நீரை மொண்டு குளித்தோம். சுமார் 4 அடி ஆழம் மட்டுமே உள்ளது. ஏழு ஊற்று நீருமே ஏழு வித வெப்ப நிலையில் உள்ளன. இராவணனுடன் சம்பந்தப்படுத்தி கூறுகின்றனர். சூடாகவே உள்ளது. நீர் அளவு குறைவதே இல்லை. உயர்ந்து சமநிலைக்கு வந்துவிடுகிறது. சுற்றுலாப்பயணிகள் வருவதால், பல பொம்மைக்கடைகளும் உள்ளன.. அங்கிருந்து புறப்பட்டு டிரிங்கோ எனப்படும் திரிகோணமலை நகர் சென்றோம்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2017

இங்கு இவர் இப்படி
முன்பு எப்போது சொல்லப்படாத ஒரு கதை
படைப்பாற்றல்
ஸ்ரீலங்கா – சுற்றுலா
என் பள்ளி
சோதனைகளை, சோதனை செய்…
பூமிப்பந்து பூத்துக் குலுங்கட்டும்…
உணவு முறைகள்
வாழ நினைத்தால் வாழலாம்
வெற்றி உங்கள் கையில்…37
விரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்
மெய்நிகர்
புத்தாண்டு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
நெஞ்சில் துணிவிருந்தால்! நிலவுக்கும் போய் வரலாம்!!
உள்ளத்தோடு உள்ளம்