Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


மாரிமுத்துராஜ் A.G
Author:

Er A.G. மாரிமுத்து ராஜ்

தென்னிந்தியாவில் உள்ள மிக முக்கியமான ஊர்களில் ஒன்று இராஜபாளையம். தற்போதுள்ள விருதுநகர் மாவட்டத்தில் இணைந்துள்ளது. இந்த ஊர் தான், காலத்தால் முந்திய, பெரும் பரப்பளவுடன் தமிழகமாக இருந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக விளங்கிய திரு குமாரசாமிராஜா அவர்களின் பூர்வீகமாகும்.

மிகச்சிறந்த காந்தியவாதிகளை உருவாக்கிய ஊர்! இங்கு ஒருமுறைமகாத்மா காந்தி அவர்கள் வருகை புரிந்துள்ளார். அவரின் நினைவாக இன்றும் இராஜபாளையத்தில் காந்தி கலை மன்றம் என்றநூலகம் இயங்கி வருகிறது. எங்கள் ஊர் காப்பியக்கால சிறப்புக்களைக் கொண்டது, என்பதற்கு இங்குள்ள “சஞ்சீவி மலை” ஒரு சிறந்த சான்றாகும்.

“இராமாயண” காவியத்தில்,  போர்க்களத்தில் இறந்து கிடந்த  வீரர்களை உயிர்ப்பிப்பதற்காக அனுமான் மூலிகையைத் தேடிச் சென்ற போது, அது சஞ்சீவி மலையில் இருந்ததாக கம்பன் குறிப்பிடுவார். அதுமட்டுமல்லாமல், இயற்கையின் அழகில் கொத்துக் கொத்தாய் பூத்துக்குலுங்கும் அருமையான வனப்பகுதியாக “அய்யனார் கோயில்” என்ற சுற்றுலாத்தலமும் உண்டு.

நூற்பாலைகளுக்குப் பெயர் பெற்ற இராஜபாளைய மண்ணிலே, மிகச் சாதாரணமாக ஒரு குடும்பத்திலே, தினசரி கீரை விற்கும் திருமதி பொன்னுத்தாய்க்கும், கட்டிடத்தொழிலாளியான திரு குருசாமிக்கும் 1968ல் பிறந்த இரண்டாவது மகன் தான் அடியேன்! என்னுடன் பிறந்தவர் அண்ணன் மட்டுமே அவர் பெயர் எ. பழனிச்சாமி, எனக்கும் அவருக்கும் 5 ஆண்டுகள் வித்தியாசம் அவ்வளவுதான்.

எங்கள் குடும்பம் வறுமையிலும் வறுமை நிறைந்தது. எங்கள் தலைமுறைக்கு முன்பு வரை யாருமே எங்கள் பரம்பரையில் பள்ளிக்கூட வாசனை அறியாதவர்கள். என் அண்ணன் தன் படிப்பை எட்டாம் வகுப்புடன் நிறுத்திவிட்டார். அதற்கு மேல் அவரைப் படிக்க வைக்க எங்கள் குடும்பத்தில் வருமானம் போதவில்லை.

நான் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ராஜேந்திரன் நடுநிலைப்பள்ளியில் படித்தேன். அந்தப்பள்ளியில் மொத்த மாணவர்களே 50 பேர்தான் என்று நினைக்கிறேன். நடுநிலைப்பள்ளியில் படிப்பு என்பது ஓட்டை டவுசர், கிழிந்த சட்டை, ஊளைமூக்கு வடிய தலையில் பொடுகு கொப்பளிக்க, கண்றாவியாக போய் வந்ததை என்னால் இன்றும் மறக்க முடியாது.

எப்படியோ, 5ம் வகுப்பை முடித்தாகிவிட்டது. அதற்கு மேலே என்ன செய்வது? என்று எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், எங்க அம்மாவும், அப்பாவும், மாமாவும் எப்படியாவது என்னை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றவைராக்கியத்துடன், ஐந்திலிருந்து ஆறாம்வகுப்பு கொண்டு போக நிறைய கஷ்டப்பட்டார்கள்.

அப்போது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த எங்கள் ஒன்றுவிட்ட மாமா பொன்னுசாமி, வார்டு கவுன்சிலராக இருந்தார். அவர்கிட்ட போய் முறையிட்டாங்களாம் என் குடும்பத்தினர். அவர்தான் என்னை நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

அவரை இன்றைக்கும் என்னால் மறக்கக முடியாது. நல்லா நினைவிருக்கு, அவருடைய மிதிவண்டியில் பின்னாடி உட்கார வைத்து, இராஜபாளையம் நாடார் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்க கூட்டிட்டு போனபோது, நான் பின்னாடி மல்லாக்க விழுந்து சாய்ந்தது.

ஒருவழியா உயர்நிலைப்படிப்புக்குள் நுழைந்தாச்சு. ஆறாம் வகுப்பு வாத்தியார் இராமசாமி என்னுடைய பயத்தை நன்கு புரிந்து கொண்டு எனக்கு அன்பும், ஆதரவும் காட்டினார். வாழ்வின் கீழ்ப்படிக்கட்டில் இருந்த எனக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டியது அவர் தான் என்றால் அது மிகையல்ல.

முருகன், முனியாண்டி, நான் மூன்று பேரும், எங்க தெருவான முகில்வண்ணம்பிள்ளை தெருவில் இருந்து, கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாடார் உயர்நிலைப்பள்ளிக்கு தினமும் நடந்தே சென்று வருவோம். பள்ளியில் என்னுடன் படித்த என் தோழன் கந்தகுமார் என்மீது அவ்வளவு பிரியமா இருப்பான். அவன் பெரிய இடத்துப்பிள்ளை என்றாலும் என்மீது உயிரா இருப்பான்.

அது என்னவென்று தெரியாது. அவன் அந்தப்பள்ளியை விட்டு எட்டாம் வகுப்புக்கு பாளையங்கோட்டை போயிட்டான். போன மறுநாளே எனக்குக் கடிதம் எழுதினான். அதற்கு நானும் பதில் கடிதம் எழுதினேன். அந்த இணைப்பு இன்றுவரை நீடிப்பது இறைவன் எங்களுக்கு அளித்த வரம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, எங்கள் வீட்டில் ஆங்கிலத்திற்கும், கணிதத்திற்கும் டியூசன் இல்லையே என்று நினைச்சு மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்துவிட்டார்கள். பத்தாவது வகுப்பில் இருந்த தமிழாசிரியர் ஆதிமூலம் அவர்களை என்னால், எந்நாளும் மறக்க முடியாது. என்னுள் தமிழ் ஆர்வத்தை தூண்டிவிட்டவர் அவர்தான். என்னை மேடையேற்றி அழகு பார்த்தவர். அவருக்கு நான் எந்நாளும் நன்றிக்கடன்பட்டவனாக இருப்பேன்.

அந்தா, இந்தா என்று பத்தாவது எழுதி பாஸ் ஆகியாச்சு; இப்போது மேலும் என் குடும்பத்துக்கு நெருக்கடி; இன்னும் இவனை மேலே படிக்க வைக்கனும் என்று எண்ணி, அவர்கள்  சக்திக்கு மீறி என்னைப் படிக்க வைக்க முயற்சி செய்தனர். அப்போ எங்கள் தெருவுல பணக்காரர் எங்க மாமா முறை அய்யனார். அவருக்கு பெரிய மனிதர்களோடு நல்ல தொடர்பு உண்டு. அவர்கிட்ட போய் நின்னாங்க என் குடும்பத்தினர். அவரும் தன் பங்கிற்கு என் வாழ்வில் ஒரு ஒளியை ஏற்றிவிட்டார். என்னை சங்கரகோவில் மேலநீலிதநல்லூரில் உள்ள பசும்பொன் நேதாஜி பாலிடெக்னிக்கில் யாருமே எடுக்காத இண்ஸ்ண்ப் படிப்பில் சேர்ந்து படிக்க உதவி செய்தார். 1984 அப்போதுதான் எங்கு பார்த்தாலும் நிறைய பாலிடெக்னிக் கல்லூரிகள் உருவெடுத்தன. மிக சாதாரணமான ஓலைக்குடிசை தான் வகுப்பறை. ஒரு பெரிய குடோன் மாதிரி இருக்கும் அப்போது நான் தங்கி இருந்த விடுதி.

அங்கே மஞ்சளா சோறு மூன்று வேளையும் ஏனோ, தானோ என்று தருவார்கள். நிறையக் கட்டுப்பாடு. அங்கு என் ஒவ்வொரு ஆண்டு படிப்பிற்கும் என் குடும்பம் செத்து செத்து பிழைத்தது; அது ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. நானும் எந்தவித ஆசா பாசத்திற்கும் இடங்கொடுக்காமல் படிப்பு ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, தமிழ்வழியில் இருந்து ஆங்கில வழிக்கல்விக்கு மாறிய புதிதில், ஏற்பட்ட பயத்துடன் பல ஆசிரியர்களை வைத்து,  தக்கி, முக்கி எப்படியோ இறுதி ஆண்டில் அத்தனையும் கிளியர் செய்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.

Diplamo (டிப்ளமோ) தேர்வு முடிவுகள் வரும்போது நான் வெளியூர் சென்றிருந்தேன். என் சொந்தக்காரர் ஒருவர், நான் பாஸ் ஆன செய்தியை, தெருவில் நின்றுகொண்டிருந்த என் தாயிடம், பொன்னுத்தாயி, உம் மகன் முதல் வகுப்புல பாஸ் பண்ணிட்டானாம் என்று சொல்ல, எல்லோரும் ஆச்சரியப்பட்டார்களாம் என் குடும்பம் சந்தோஷப்பட்ட போது, எனக்காக அவர்கள் பட்ட கஷ்டம் அத்தனையும் அந்த நேரத்தில் பஞ்சு பஞ்சாக பறந்து போனது.  இதுக்கு மேல என்னால எழுத முடியல…

Diplomo (டிப்ளமோ) முடிச்சாச்சு அவ்வளவுதான். இதுக்கு மேல படிக்க வைக்க அவங்க உடம்பில உதிரம் இல்லை. தம்பி, எங்களால முடிஞ்சதை உனக்கு செஞ்சிட்டோம். இனிமே நீதான் பிழைச்சுக்கனும் என்று கூறியபோது, எனக்கு ஒன்னும் புரியவில்லை. ஆனால், குடும்பம் கஷ்டத்திலே இருக்கு நாம் சம்பாதித்து ஆகனும்; என்று மட்டும் உறுதி செய்து ஓராண்டு வேலை தேடி அலைந்தேன்.

ஒருவருமே வேலை கொடுக்கலே. பள்ளியிலே படிச்சப்ப சித்தாள் வேலைக்குப் போனது போல, இப்ப மம்மட்டி ஆள் வேலைக்குப் போனேன். அப்படி வேலை செய்கிற இடத்தில மேஸ்திரி ராமர் என்பவர், ஏம்பா நீ இந்த வேலை செய்யற? நான் ஒரு இன்ஜினியர்கிட்டே கூட்டிட்டுப் போறேன் என்று கூட்டிட்டுப் போனார். அதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.

அப்சரா கன்சல்டன்சி என்றபெயரில் காண்ராக்ட் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார் Er A. பாலசுப்பிரமணியம் என்பவர் அவர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வேலை செய்தேன். ஒரு சில மாதம் சும்மா, அதன் பின்பு சொற்ப சம்பளம்; எனக்கு வேலை கற்றுத்தந்த குருநாதர் அவர். என்னை நன்றாகப் பயிற்றுவித்து தனித்திறன் படைத்தவனாக ஆக்கியதில், அவருக்கு நிறைய பங்கு உண்டு.

இரண்டு ஆண்டுகளுக்குப்பின், சேலத்தில் டாக்டர் நவநீத கிருஷ்ணன் என்பவர் மருத்துவமனை கட்டுவதற்காக என்னை அழைத்தார். இங்குதான் என் தொழில் குறித்த தெளிவு கிடைத்தது. அந்த மருத்துவர் எனக்கு நிறைய கற்றுத்தந்தார். தன் தம்பியைப்போல கவனித்துக் கொண்டார். இன்றும் அவருடன் எனக்கு நல்ல தொடர்பு உண்டு. அதை அடுத்து கோவை மாநகருக்கு என் நண்பன் முருகேசன் அழைத்து வந்து, தான் பணிபுரியும் “சீனிவாசன் அசோசியேட்” நிறுவனத்தில் என்னை சேர்த்துவிட்டான்.

ஒரே ஒரு மஞ்சப்பை, அதில் மூன்று உடைகள். என் சொத்து அவ்வளவுதான். இந்த நிலையிலும் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த நான்கு பேரில் எனக்குத்தான் சம்பளம் 1400 ரூபாய் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

நிறுவனத்தலைவர் உழ்  சீனிவாசன் அவர்களும் என் வாழ்வில் மறக்க முடியாத மனிதர்.  நான் இந்த அளவுக்கு வாழ்வில் வருவதற்கு ஓராண்டுதான் அவருடன் இருந்தேன். இன்னும் சில ஆண்டுகள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பான நிலையை அடைந்திருப்பேன்.

அவரை விட்டு வந்தபின் 1994ல் இருந்து சுயமாகத் தொழில் புரிய முற்பட்டேன். அப்போது, Coimbatore Institute of Technology  கல்லூரியில் B.E., Civil Engineering படிப்பில் சேர்ந்தேன். அதையும் மிகவும் சிரமப்பட்டுத்தான் முடித்தேன். இப்போது என் வாழ்க்கையை நடத்த யாரையும் எதிர்பாராத நிலையை அடைந்து விட்டேன். நான் வளர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்து என் பெற்றோர், எனக்கு சொந்தத்தில் இருந்த ராஜராஜேஸ்வரி என்றபெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள்.

திருமணம் செய்து வைத்து, கோவையிலேயே தனிக்குடித்தனம் வைக்க கணபதியில் ஒரு குடிசை வீட்டை தேர்வு செய்து வைத்திருந்தார் என் உறவுக்காரர். இது என்னை வெகுவாக பாதித்தது. இவர்கள் இன்றும் நம்மை எந்த நிலையில் வைத்து பார்க்கின்றார்கள் என்று.

அந்த வேகமும், வெறியும் என் மனதைத் துளைத்து எடுத்தது. இவர்களுக்கு முன்னாள் நாம் முன்னேறி, அவர்கள் போற்றும் படி வாழ வேண்டும் என்று தொடர்ந்து உழைத்தேன். சளைக்காமல் உழைத்தேன். அந்தக் காலகட்டத்தில் என்னுடன் அப்பா இருந்தது எனக்குப் பெருந் துணையாக இருந்தது.

ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது,  ஒவ்வொரு முறையும் உயிர்தெழுவது போல. அதிலே என் வீட்டைக்கட்டி குடிபோன பின்பு எனக்கே என்மீது மதிப்பு, மரியாதை வரத்தொடங்கியது. என் வாழ்க்கைய முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

அதற்கு ஏற்றாற் போல், தன்னம்பிக்கை வாசகர் வட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது; சில நிகழ்ச்சிகளுக்குப் பின் அதில் பொருளாளராகவும், தலைவராகவும் பதவி ஏற்றது. அப்போது ஐயா பன்னீர் செல்வம் அவர்கள், லட்சுமிகாந்தன், ஒட்டக்கூத்தன் முதலானோர் உறுதுணையாக இருந்தது. கோயமுத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசனில் சேர்ந்து, குறிப்பிடத்தக்க நபராக மாறியது; இவை அனைத்தும் சேர்ந்து என்னையும், என் பொருளாதாரத்தையும் உயர்த்தியன. நிறைய நெஞ்சுக்கு நெருக்கமான நல்ல நண்பர்கள் வட்டம் அதிகரித்து சமூகத்தில் நல்ல நிலைக்கு என்னை அவர்கள்தான் அழைத்துச் சென்றார்கள் என்றால் அது மிகையாகாது.

எழுத்து ஆர்வம், எனக்கு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது. சின்ன வயதில் நிறைய புத்தகங்கள் படிப்பேன். இன்றும் என் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை ஒவ்வொரு நாளும் படிப்பேன். எந்த எழுத்தையும் விடுவதில்லை. ஏதாவது நமக்கு வேண்டிய ஒன்று அதிலே இருக்கும் என்று எண்ணம் தோன்ற தேடித் தேடிப்படிப்பேன். நன்றாக ஓவியம் வரைவேன், இசை கேட்பேன், இயல்பாக இருக்க பிடிக்கும். இத்தனை அம்சமும் இந்த சமுகத்தில்  உள்ள பல்வேறு அறிஞர்களிடம் இருந்துதான் நான் கற்றேன். அதை இந்த சமூகத்திற்கு சிறிதளவேனும் திருப்பித்தர வேண்டும் என்று முதல் கவிதை நூலை “தேடிப்பிடித்த தீர்ப்புகள்” என்றதலைப்பில் வெளியிட்டேன். அது வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து…

  1. நஞ்சை முறிக்கும் நம்பிக்கை 2. அம்மா 3. நம்பிக்கையா நச்சுனு நாலு வரி 4. மாற்றி யோசிக்கலாம் வாங்க 5. தலைமையின் தனிச்சிறப்பு 6. வாஸ்து 7. வானியலும், வாழ்விட வடிவமைப்பு வசதிகளும் 8. கட்டுமானப் பொறியாளர் வழிகாட்டி 9. சுலபமாக கட்டலாம் சொந்தவீடு 10. மேல்நிலை கீழ்நிலை நீர்த்தொட்டிகள் 11. குழாய் அமைப்பு முறைகள் 12. சர் மோட்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா 13. இன்ஜினியர் வாஸ்து, என்று தொடர்ந்து மேலே குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் பல நூல்களை எழுதி, இந்த சமூகத்திற்கு அர்பணம் செய்தேன். என் முப்பது ஆண்டுகால வாழ்வில் நான் சாதித்த துன்பத்திற்கும், உழைப்பிற்கும் கடந்த பத்து ஆண்டுகளில் பலன் கிடைத்தது.

வானொலி உரை, பட்டிமன்றஉரை மற்றும் பொறுப்புகளில் மிகச்சிறந்த செயல்பாட்டிற்குக் கிடைத்த அங்கீகாரம் என என்னை இந்த சமூகம் தூக்கிப்பிடித்தது. கோவை இல. செ. கவின் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவராகவும், கொசினா விஷன் இதழ் ஆசிரியராகவும், ஆனந்தயோகம் மற்றம் பில்டிங் வாய்ஸ் மாத இதழின் இணை ஆசிரியராகவும் இருப்பதுடன், மிகச்சிறந்த சுயமுன்னேற்றப் பயிற்சியாளராகவும் இருக்கிறேன்.

தன்னம்பிக்கை, பில்டர்ஸ் எக்ஸ்பிரஸ், கலைக்கதிர், பாசமலர், பில்டர்ஸ் வாய்ஸ், பில்டர்ஸ் லைன், தினமலர், கனவு இல்லம் போன்ற பத்திரிக்கை ஊடகங்களில் கட்டுரை ஆசிரியராகவும் இருந்து வருகிறேன்.

வருங்கால நண்பர்களுக்கு, என் வாழ்க்கை கொடுத்த பாடத்தின் அனுபவத்தில் இருந்து நான் சொல்வதெல்லாம்…

பெரிய பின்புலம் கொண்டவன் அல்ல நான். அதை விரும்புபவன் இறைவனும் அல்ல. எப்போதும் ஒற்றை மனிதனாகவே இந்த உலகில் சுற்றிக்கொண்டிருக்கிறேன். கற்பதில் இருந்தே தீர்ப்பைக் கண்டு கொண்டு இயங்குகிறேன். மிகப்பெரிய அளவில் உயர்வை இன்றும் நான் எட்டவில்லை என்றாலும், என்னளவில் ஏதோ ஒரு இடத்தை நான் இப்பூமியில் தக்க வைத்துக்கொண்டுள்ளேன்.

எதிர்கால இளைஞர்களே…

உன் ஊன்றுகோலையே உன் இறுதிக்காலம் வரை நீ நம்பிக்கொண்டு இருக்காதே.

இயல்பாகவே…

இறகு முளைக்கின்றவரைக்கும்தான்

பறவைக்கு கூட்டில் இடம் உண்டு…

இருபத்தொரு நாட்கள் (21) வரைக்கும்தான் முட்டைக்குள் இருக்கும் குஞ்சுக்கு கால அவகாசம் உண்டு. என்பதை  உணர்ந்து, சீக்கிரம் அனல்போல தெறித்து வெளியேறி, முயற்சிக்கு மேல் முயற்சி நீ செய்தாய் என்றால், எப்படிப்பட்ட மலையையும், தூக்கி எறிந்து விடலாம். துணிவுதான் அதற்கு வேண்டும்.

தன்னம்பிக்கையுடன் புறப்படுங்கள்…

தைரியமாக

தலைசிறந்த மாமனிதராகி…

தரணிபுகழ வாழ்ந்திடுங்கள்..

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2017

இங்கு இவர் இப்படி
முன்பு எப்போது சொல்லப்படாத ஒரு கதை
படைப்பாற்றல்
ஸ்ரீலங்கா – சுற்றுலா
என் பள்ளி
சோதனைகளை, சோதனை செய்…
பூமிப்பந்து பூத்துக் குலுங்கட்டும்…
உணவு முறைகள்
வாழ நினைத்தால் வாழலாம்
வெற்றி உங்கள் கையில்…37
விரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்
மெய்நிகர்
புத்தாண்டு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
நெஞ்சில் துணிவிருந்தால்! நிலவுக்கும் போய் வரலாம்!!
உள்ளத்தோடு உள்ளம்